temple-of-philae
நடேசன்
இரவு உல்லாசப்படகில் பயணம் செய்யும் எங்களுக்கு இசை மற்றும் நடனவிருந்து என்பன எமது பயணமுகவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்ததும் – இரவு
உணவிற்குப்பின் அதற்காக ஆவலுடன் காத்திருந்தோம். என் மனத்துள் எகிப்தியப் பெண் ஒருத்தியின் பெலிடான்ஸ் நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் பாதம்வரை மறைத்த எகிப்திய பெண் தொப்புளை எப்படி காட்டப்போகிறாள் என்ற நினைவுடன் எகிப்திய வெண்ணிறப் பெண்ணா இல்லை, நூபிய பிரதேசத்து சொக்கிளேட் வர்ணப்பெண்ணா என்ற
கேள்வியும் நித்தம் படகில் மோதும் நைல் அலைபோல் நினைவில் வந்து மோதியது.
சற்று ஏமாற்றம் தரும்வகையில் எகிப்திய பாரம்பரிய இசைக் கருவிகள் அந்த
நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டன. வீணை மற்றும் பல புல்லாங்குழல்களைச் சேர்த்து உருவாக்கிய இசைக்கருவிகள் அழகான இசையை உருவாக்கி, இரண்டு மணிநேரம் மனம் குளிர அளித்தார்கள்.
அதன்பின் அரபிய இசைக்கு ஆடுவதற்கு எங்களையும் நடனத்துக்கு அழைத்தனர்.
பெலிடான்ஸ் இல்லையென்ற ஏமாற்றத்தை அந்த இனிமையான சங்கீதம் மறக்கடித்தது.
பண்டைக்கால எகிப்தியர் தாய்மை, நடனம், காதல் மற்றும் சங்கீதத்திற்கும் ஹத்தோர் (Hathor) என்ற பெண் தெய்வத்தையே வணங்கினர்.
எமது நடனம் முடிந்ததும் ‘நாங்கள்தான் பெலிடான்ஸ் ஆடவேண்டிவரும்” என்று அந்த நடு நிசியில் அறுவையான நகச்சுவையை உதிர்த்தான் எனது நண்பன் ரவீந்திராஜ்.
கிறீஸ்துநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவரது போதனைகளை பின்பற்றுவது அக்காலத்தில் அவரது சீடர்களுக்கும் மற்றவர்களுக்கும் இலகுவாக இருக்கவில்லை, பல் தெய்வ (Pagan) ) வழிபாடு கொண்ட ரோம சாம்ராச்சியம் தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கிறீத்தவ மதத்தவர்களை தேசவிரோத சக்திகளாக இனங்கண்டு துன்புறுத்தியது. அக்கால கிறீத்தவ மதத்தினர் தங்களது கிறீத்துவ மதவழிபாடுகளை தலைமறைவு அரசியல் இயக்கம்போல் இரகசியமாக நடத்தவேண்டியதாக இருந்தது.
நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நிலைமை மாறியது. யேசுநாதர் பிறந்த பின்பு சரியாக 312 வருடத்தின் பின்னர் ரோம இராச்சியத்தின் உத்தியோக மதமாக கிறீஸ்துவ மதத்தை ரோமனிய சக்கரவர்த்தி கொன்ரான்ரின் பிரகடனம் செய்தார். இதற்கும் அப்பால் 391 இல் தியோடேரசியஸ் ( Theodosius) காலத்தில் அதற்கும் மேலே சென்று மற்ற மதங்களை அரச விரோத மதங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
ரோமன் ஆட்சியில் இருந்த எகிப்தின் வணக்கத் தலங்கள் எல்லாம் கைவிடப்பட்டு மண்மூடி மறைந்தது மட்டுமல்ல. சில அழிக்கவும்பட்டன.
அக்காலத்தில் அலக்சாண்ரியாவில் கொப்ரிக் கிறித்துவ மதம் மிகவும் செல்வாக்காக வளர்ந்தது. பல எகிப்திய வழிபாட்டுத்தலங்கள் கிறீஸ்துவ தேவாலயங்களாகவும், மதகுருமார் தங்கும் இடங்களாகவும் மாறின. இந்த நிலை அரேபியாவில் இருந்து – ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் எகிப்துக்கு வரும்வரையில் நீடித்தது.
இப்பொழுது நாம் நைல் நதிவழியாக செல்லவிருக்கும் இந்தக் எட்பு (Edfu) கோயில் கோயில் கிரேக்கர்களான தொலமிகளின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டிருந்தது.
பல நுற்றாண்டுகளாக மண் மூடியிருந்த கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டு – பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்சிய அகழ்வாய்வாளர்களால் வெளிக்கொணரப்பட்டது. இந்த கோயில் எகிப்தின் தென்பகுதியில் உல்லாசப்பிரயாணிகள் செல்லும் முக்கிய இடமாக மாறிவிட்டது.
எட்பு (Edfu)) கோயில் நைலின் மேற்குக்கரையில் அமைந்திருக்கிறது. எட்பு நகரம் பண்டைக்காலத்தில் தென் எகிப்தில் தீப்பஸ்க்கு அடுத்த முக்கியமான ஒரு நகரம். கவர்னர்களும் மற்றும் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளும் இங்கு இங்கிருந்தார்கள். எட்பு நகரம் சரியாக அஸ்வானுக்கும் தீப்பஸ்கும் இடையில் உள்ள மத்திய புள்ளியில் அமைத்திருக்கிறது.
ஏன் இந்த கோயில் முக்கியமானது?
பல நாடுகளின் வரலாறு ஐதீகமான கதைகளில் ஏற்பட்ட நம்பிக்கைகளில்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நாட்டை உருவாக்குவதற்கு மட்டுமல்ல, தொடர்ச்சியாக மக்களை அரசோடு இணைத்து வைத்திருப்பதற்கும் இவை உதவுகிறது. சீதையை இராவணனன் கடத்தியதால் சீதையை மீட்பதற்காக இராமன் இலங்கைமீது போரிட்டது போன்றதுதான் எகிப்திய ஐதீகக் கதையும்.வரலாற்றுக்கு முன்பாக எகிப்தை ஆண்ட ஓசிரஸ்(Osiris) தெய்வத்தை தம்பியான சேத்(Set)
அரசுப் போட்டியில் விளைவாக கபடமாக பிரேத பெட்டியில் வைத்து நைல் நதியில் எறிந்ததும் அதன் பின்பு துண்டுகளாக வெட்டி மீண்டும் நைல் நதியில் எறிந்தபோது ஒசிரஸின் மனைவியான ஐசிஸ்(Isis) அந்த உடலை மீட்டு உயிர் கொடுத்து ஒசிரஸ் மூலம் குழந்தையை பெறுகிறாள்;. அந்தக் குழந்தையான ஹோரஸ்(Horus) ஆரம்ப காலத்தில் பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில் இளைஞனாகி மாமனாகிய சேத்தை பழிவாங்குவதுமே எகிப்தின் முக்கிய வரலாற்று ஐதிகம்.
கலைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள், கோயில்கள் என்று பலவிடயங்கள் இந்த ஐதீகக் கதையை சுற்றி உருவாக்கப்பட்டிருக்கிறது.
எகிப்தின் ஐதீகக்கதைகளில் முக்கியமான கழுகு முகம் ஹோறஸ் – தனது மாமனாகிய சேத்துடன் போர் புரிந்து வெற்றி கொண்ட இடமாக எட்பு கணிக்கப்படுகிறது.
இந்தப் போரின் வரலாறு கோவில் சுவரில் அழகாக பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பழைய அரசர்கள் காலத்தில் கோயில் கட்டப்படிருந்தாலும் அந்தக் கட்டிடங்கள் சிதைந்து விட்டன. தற்போது உள்ள கட்டிடம் கிரேக்க வம்சத்தில் வந்த தொலமி அரசர்கள் முற்காலத்து எகிப்திய அரசர்களைப்போல் ஆலயங்கள் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.
கோயிலின் வாசலில் கழுகு முகம் கொண்ட இரண்டு ஹோறஸ் தெய்வங்கள் கருப்பு கருங்கல்லில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பானது மற்றைய எகிப்திய கோயிலில் இருந்து
வேறுபடுகிறது. கோயிலின் உட்பகுதிச் சுவர்களில் – – எகிப்திய தெய்வமான ஹோரஸ் – கிரேக்க தொலமிகளின் எதிரிகளை அழிப்பதற்கு எவ்வாறு உதவியது முதலான எகிப்திய வரலாறு மற்றும் ஐதீகம் என்பன – சாதாரணமானவர்களுக்கும் புரியும் முறையில் கோயில் சுவரில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
எட்பு கோயிலைத் தொடர்ந்து தெற்கு அஸ்வான் அணைப்பகுதியை நோக்கி
பிரயாணம் செய்தோம். நாங்கள் சென்ற அஸ்வான் பகுதி ஆதிகாலத்தில் எகிப்தின் தென் எல்லை. அதற்கு தெற்கே இருப்பவர்கள் கருப்பு நிறமானவர்கள். அவர்கள் இருக்கும் பிரதேசம் நூபியா. நூபியர்கள் பலகாலமாக அரசொன்றை உருவாக்காமல் குலக்கூட்டங்களாக வாழ்ந்தார்கள். இவர்களது பிரதேசத்தில் தங்கம், யானைத்தந்தம், புலித்தோல் போன்றவை இருப்பதால் எகிப்திய மன்னர்கள் இவர்கள்மேல் படை எடுத்ததும் இவர்களது நிலங்களையும் சேர்த்து ஆட்சி செய்ததும் வரலாறு. இவர்கள் சிறந்த வில்லாளிகளாக இருந்ததால் எகிப்திய இராணுவத்தில்; படைவீரர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் சில காலத்தில் முழு எகிப்தையும் ஆட்சி செய்தார்கள்.
நைல் நதியோரத்தில் உள்ள இன்னுமொரு முக்கிய கோயில், பில்லே கோயில் (Philae): எகிப்தின் தென்பகுதியில் உள்ளது. இந்த கோயில் ஹோறஸின் தாயாகிய ஐசிஸ் பெயரில் கட்டப்பட்டிருக்கிறது.
பழைய அரசர் காலத்தில் நைல் நதியில் மத்தியில் உருவாகிய
பில்லே(Philae) தீவுத்திடலில் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டு – பிற்காலத்தில் கிரேக்க தொலமி அரசர்களால் மீளமைக்கப்பட்டதுடன் ஆகஸ்டஸ் சீசரின் காலத்தில் இதில் புதுப்பித்தல் வேலைகள் நடந்திருக்கின்றன.
ஐசிஸ் தெய்வம் உயிர் கொடுக்கும் தாய்த் தெய்வமாக எகிப்தியர் கிரேக்கரின் பின்னர் ரோமர்களால் பார்க்கப்பட்டது. கடைசியாக அதிக காலம் இருந்த எகிப்திய வணக்கத்தலம் இதுவாகும்: முக்கியமாக நூபியர்கள் வணங்குவதற்காக பல ரோம அரசர்களால் விசேட சலுகையாக அனுமதிக்கப்பட்டிருந்தது.
AD 550 ஆண்டுகளுக்குப்பின் கிறிஸ்தவ தேவாலயமாக பாவிக்கப்பட்டது.
1898 – 1902 இல் முதலாவது அஸ்வான் அணை பிரித்தானியரால் கட்டப்பட்டபோது உருவாகிய பாரிய நீர்தேக்கத்தில் இந்தத் தீவில் பாதி நீரில் மறைந்தது.பின்பு இரண்டாவது அணை 1960-1971 இல் சோவியத்தின் உதவியால் கட்டப்படும்போது முற்றாக நீரில் மறைந்து போக இருந்ததால் யுனெஸ்கோவின் உதவியுடன்; ஒவ்வொரு பில்லே ஆலயத்தின் ஒவ்வொரு கல்லும் அகற்றப்பட்டு அகில்லா (Agilika) ) என்ற மற்றைய தீவுத்திடலில் மீண்டும் அமைக்கப்பட்டது.
இந்தக் கோயிலுக்கு சிறிய யந்திரப் படகில் சென்றோம். வாசலில் மற்றைய
கோயில்கள் போல் இரண்டு இராட்சத சுவர்களைக்கொண்ட வாயில்கள். ஆரம்ப வாசலில் இருந்து நீளமான வெளிப்பிரகாரம் இருபக்கமும் பாரிய தூண்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தது.
இரண்டாவது நுழைவாசல் உட்பிரகாரத்தில் – அங்கிருந்து கட்டிடத்தின் உச்சிக்கு செல்லும் படிகள் அமைந்திருக்கிறது.
ஐசிஸின் பிரதான கோயிலுக்குப் பக்கத்தில் எகிப்தின் மற்றைய தெய்வமான ஹத்தாருக்கும் இங்கு சிறிய கோவில் உண்டு. இங்கு பல சித்திரங்கள் காணப்படுகின்றன. அதில் குரங்கு ஒன்று புல்லாங்குழல் இசைக்கிறது.
ஹத்தார், பசுவின் கொம்புடன் சூரியவட்டம் மற்றும் பாம்பைத் தலையில் தாங்கிவரும் தாய்த்தெய்வம். இது காதல், சங்கீதம், நடனம் மற்றும் பசுக்களுக்கும் பொறுப்பான தெய்வமாகும். ஹத்தார் பிற்காலத்தில் கிரேக்கர்களுக்கு காதல் தெய்வமான அபோடைற் (Aphrodite) மற்றும் ரோமர்களது வீனஸ்(Venus) ஆக கருதப்பட்டது.
கோயிலுக்கு வெளிப்புறத்தில் கிணறு போன்ற நைலோ மீட்டர் கண்டோம். எவ்வளவு உயரத்திற்கு நைல் நதி பெருகுவதைக் கணிப்பது மூலம் விவசாயிகளிடம், ரோம அரசர்களால் உணவு வரியாக அறவிடப்படும்.
அடுத்து நாங்கள் சென்ற இடம் அஸ்வான் பகுதியாகும். நைல் நதியில் கட்டப்பட்ட இரண்டு அணைகள் இங்கு உள்ளன. ஆரம்பத்தில் பிரித்தானியார்களாலும் பின்பு எகிப்தின் சுதந்திரத்தின் பின்பாக சோவியத்தாலும் ஏழு கிலோ மீட்டர் தெற்கில் கட்டப்பட்டது.
இந்த இரண்டு அணைகளால் நைல் நதியால் ஜுலை மாதத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு முற்றாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏராளமான மின்சாரம்
உருவாக்கப்படுகிறது.
லேக் நாசர் என்ற பெரிய நீர்த்தேக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விட நைல்நதியின் மத்தியில் பல அழகிய தீவுகள் உள்ளன. இந்தப் பிரதேசத்தில் இரண்டு மணிநேரம் மட்டும்தான் நாங்கள் தங்கினோம். ஆனால் மாதக்கணக்கில் தங்கி இயற்கை அழகை இரசிக்கவேண்டிய இடம் இது.
அஸ்வான் நகரில் நைல் நதியில் சிறியதும் பெரியதுமான பல தீவுத்திடல்கள் உண்டு. அவற்றில் உள்ள முக்கியமான ஒரு தீவு எலிபன்ரைன் ((Elephantine).
இந்தத்தீவைப்பற்றியும் மிகவும் சுவையான கதையுண்டு.
கிமு 589 இல் பாபிலோனியாவை ஆண்ட பேரரசன் நெபுக்கடநிசர்(Nebuchadnezzar) யுதேயாவின்மேல் படை எடுத்து தனது அதிகாரத்தில் மன்னனாக ஷெடிகியாவை (King Zedekiah) நியமித்தான்.
ஆனால் ஷெடிகியா எதிர்ப் புரட்சி செய்தபோது கிமு 587இல் மீண்டும் நெபுக்கடநிசர் – பபிலோனியாவில் இருந்து வந்து, யுதேயாவை நிர்மூலமாக்கி யாவோவின் புனிதக் கோயிலை கொளுத்திய யூதமக்களில் கட்டிடவேலை தச்சவேலை என தொழில் தெரிந்த மத்திய வகுப்பினரை பபிலோனுக்கு சிறை எடுத்துச் சென்றான் . இதை யூதர்களின் எக்ஸோடஸ் என்பார்கள்.
இக்காலத்தில் யூதேயர்களுக்கு நட்பு நாடாக எகிப்து இருந்ததால் தோற்றுப்போன யூத இராணுவத்தினர் குடும்பமாக எகிப்துக்கு சென்று இந்த எலிபன்ரைன் தீவில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள ஏழை மக்கள் யூதேயாவில் விடப்பட்டனர். எலிபன்ரைன் தீவில் யூதர்கள் வாழ்ந்ததும் அங்கு யுதக்கோயில்கள் கட்டப்பட்டதற்குமான ஆதாரங்கள் மற்றும் பைபிள் குறிப்பும் உண்டு. பிற்காலத்தில் அந்த யூதமக்கள் எலிபன்ரைன் தீவை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
சமீபத்தில் ஓரு பேராசிரியர் கூறியது என்னைச் சிந்திக்க வைத்தது.
“பபிலோனின் படையெடுப்பில் சிதறிய யூதமக்களில் எலிபன்ரைன் தீவில் இருந்து வெளியேறி பிற்காலத்தில் ஐரோப்பாவுக்கு சென்று குடியேறி பின்பு வட அமெரிக்காவிலும் தற்கால இஸ்ரேலிலும் வசிப்பவர்கள்.பபிலோனியாவுக்கு கடத்திச் செல்லப்பட்டவர்கள் பிற்காலத்தில் மற்றைய
மொசப்பத்தேமியருடன் கலந்து ஒருங்கிணைந்து விட்டார்கள் என்றதுடன். தனித்து யூதேயாவில் விடப்பட்ட ஏழை யூதமக்கள் பிற்காலத்தில் இஸ்லாம் மதம் மாறி தற்பொழுது வாழும் பலஸ்தீனர்களாகிவிட்டனர்.”
மேலே சொல்லப்பட்ட அவரது கருத்து உண்மையானால் தற்கால பாலஸ்தீன -இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா?
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்