நம்பிக்கை

வாழ்வை எழுதுதல்
SIva
முருகபூபதி

சக மனிதர்களிடத்தில் ஒருவருக்கு நம்பிக்கை குறையும்பொழுது அவர் புதிய நம்பிக்கையைத்தேடிச்செல்வது இயல்பு. நானறிந்தமட்டில் இவ்வாறு நம்பிக்கை இழந்த பல பெண்கள் பெண்ணிலைவாதிகளாகவும் – விரக்தியின் விளிம்புக்குச்சென்று மன அழுத்த நோயாளிகளாகவும் – மதம் மாறியவர்களாகவும் பொதுநலப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இதுவிடயத்தில் ஆண்கள் சற்றுவித்தியாசமானவர்கள். ஒரு பஸ் இல்லையென்றால் மற்றுமொரு பஸ்ஸில் தொற்றி ஏறி பயணத்தை தொடருவார்கள். ஒரு நட்பை இழந்தால் – புதிய சிநேகிதம் தேடிக்கொள்வார்கள்.
வாழ்வை எழுதுதல் தொடரின் இந்த அங்கத்தை எழுதுவதற்குத் தொடங்கும் முன்னர் என்ன தலைப்பிடலாம் என்று பலவாறு யோசித்தேன். எதிர்பாராதது – இப்படியும் நடக்கிறதா? ஏன் அப்படி? என்றெல்லாம் தலைப்புகள் வைப்பதற்கு சிந்தித்தேன்.
குடும்பம் – தொழில் – இலக்கியம் மற்றும் பொதுப்பணிகளில் எவருக்கும் எதிர்பாராத சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கலாம். அவ்வாறு நடந்த ஒரு சம்பவம்தான் இந்த அங்கம் எழுதுவதற்கும் அடிப்படை.
நான் சம்பந்தப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்களை உறுப்பினர்களுக்கு தபாலில் அனுப்பிவிட்டு – 24 ஆவது ஆண்டறிக்கையை தயார் செய்தேன். இம்முறை அறிக்கை 50 பக்கங்கள் வந்துவிட்டன.
உதவி பெற்ற பல மாணவர்கள் பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்திசெய்து வேலைவாய்ப்புகளை பெற்றிருந்ததனாலும் அறிக்கையில் குறிப்பிட்ட தகவல்களை பதிவுசெய்யநேர்ந்தமையால் இந்தப் பக்க அதிகரிப்பு நேர்ந்துவிட்டது.
zz

வழக்கமாக அறிக்கை அச்சிடும் என்ற Office Works நிறுவனத்திற்குச்சென்றேன். அந்த நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் கணினியில் ஆராய்ந்து எமது ஊருக்கு சமீபமான மற்றுமொரு Office Works நிறுவனத்திற்குச்சென்று பிரதிகளை அச்சிடுவதற்கு மூலப்பிரதியையும் அது எவ்வாறு பைண்ட் செய்யப்படவேண்டும் என்பதற்கு ஆதாரமாக கடந்த ஆண்டின் (2012) ஆண்டறிக்கையையும் அறிக்கையின் முகப்பு – பின்புற அட்டைக்கு பிறிதொரு வண்ணத்தில் காகிதமும் தெரிவுசெய்துகொடுத்துவிட்டு வீடு திரும்பியிருந்தேன்.
இரண்டு நாட்களில் அச்சிடும் வேலை முடியும் என்று சொன்ன அச்சகத்தினர் – எனது கைத்தொலைபேசி எண்களையும் பெற்றுக்கொண்டு அனுப்பிவிட்டனர். இரண்டு நாட்களின் பின்னர் ஒரு காலைப்பொழுதில் ‘ பிரதிகள் தயார்’ என்று அழைப்பு வந்தது. பஸ் ஏறி – ரயில் ஏறி மீண்டும் பஸ் ஏறி குறிப்பிட்ட பொதுநலப்பணிக்காக பயணித்தேன். அதனால் சில மணிநேரங்கள் குளிர்காற்றிலும் ( இந்தப்பதிவு கடந்த குளிர்காலத்தில் எழுதப்பட்டது) அவஸ்தைப்பட்டேன்.

குறிப்பிட்ட Office Works சென்றால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் புதிய ஆண்டறிக்கையை அச்சிடாமல் – முன்னுதாரணத்திற்கு வழங்கியிருந்த பழைய அறிக்கையையே மீண்டும் – நான் தெரிவுசெய்துகொடுத்த புதிய வண்ணக்காகிதத்தை அறிக்கையின் அட்டையாக்கி அச்சிட்டிருந்தனர். பணமும் செலுத்தி பற்றுச்சீட்டும் பெற்றதன் பின்னரே தவறைக்கண்டுபிடித்தேன்.
நான் சொன்னது ஒன்று. நடந்திருப்பதோ வேறு ஒன்று.
குறிப்பிட்ட அச்சுப்பணியை செய்திருந்த பெண் ஊழியர் அன்றையதினம் பணிக்கு வந்திருக்கவில்லை. தங்களது தவறை ஒப்புக்கொண்ட அச்சகத்தினர் – மீண்டும் சரியாக அனைத்து பிரதிகளையும் அச்சிட்டுத்தருவதாகச்சொன்னார்கள்.

மீண்டும் இதற்காக தொலைவிலிருந்து வந்து அலையமுடியாது – எனக்கு இரண்டு மணிநேரங்களில் தரவேண்டும் – அதுவரையில் இங்கேயே நிற்கிறேன் எனச்சொன்னேன்.

என்னை விருந்தினர் அறையில் அமரச்செய்து – தேநீரும் தந்து உபசரித்துவிட்டு மீண்டும் ஆண்டறிக்கையை அச்சிடும் பணியை ஆரம்பித்தார்கள்.

பாவி போகும் இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் என்று ஊரில் சிலர் சொல்வதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. ஏன் இப்படியெல்லாம் எனது வாழ்வில் வீண் அலைச்சல்கள் வருகின்றன? என்ன பாவம் செய்தேன்? என்று என்னை நானே சுயவிமர்சனம் செய்துகொண்டேன்.
அந்த பிரம்மாண்டமான Office Works இன் ஏனைய பகுதிகளை சுற்றிப்பார்த்து பொழுதைப்போக்கினேன். நவீன மேசைகள் – கணினிகள் – காகிதாதிகள் – அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் சாதாரண அழி இரப்பர் முதல் போட்டோகொபி இயந்திரங்கள் – படங்கள் பிரிண்ட் செய்யும் கணினிகள் உட்பட எண்ணிறைந்த உபகரணங்கள் – கருவிகள் அங்கே விற்பனைக்கு இருக்கின்றன. அனைத்தையும் வேடிக்கை பார்த்து பொழுதை போக்கினேன்.
இரண்டு மணிநேரத்தின் பின்னர் அச்சகப்பிரிவுக்கு வந்து பார்த்தேன் எனது ஓடர் முடிந்திருக்கவில்லை. அருகே ஒரு ஆசனத்தில் அமர்ந்தேன்.
குறிப்பிட்ட பிரிவில் ஏற்கனவே என்னைப்போன்று தமது அச்சிடும் ஓடர்களை கொடுத்திருந்த சில வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றார்கள்.
அதில் நடுத்தரவயது பெண்ணொருவர் – அடிக்கடி என்னைப்பார்த்து புன்முறுவல் சிந்தினார். இலங்கையர்தான் என்ற தோற்றம். நானும் பதிலுக்கு முகத்தில் புன்னகையை வரச்செய்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டேன்.
அந்தப்பெண் – வரிசையிலிருந்து விலகி என்னருகே வந்து – ஆங்கிலத்தில் ஸ்ரீலங்காவா? எனக்கேட்டார்.
ஆம் என்றேன்.

சிங்களம் பேச முடியுமா ? என்றார். அதற்கும் நான் ஆம் என்றேன்.

“ உங்களை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறது. முதலில் உடனடியாக எங்கே என்பது தெரியாவிட்டாலும் தற்பொழுது அருகிலிருந்து பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது.” என்றார்.

“ எங்கே பார்த்தீர்கள்?”

“ இங்கு வெளியாகும் சிங்கள இதழ்களில் உங்கள் படமும் உங்கள் எழுத்துக்களும் பார்த்திருக்கின்றேன். நீங்கள்தானே முருகபூபதி ? ‘ என்றார்.
இதற்கும் நான் ஆம் என்று தலையாட்டினேன்.

“ உங்களிடம் தமிழ்மொழி கற்ற ஒரு பௌத்த பிக்குவைப்பற்றி எழுதியிருந்தீர்கள். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அந்தக்கட்டுரை வெளியாகியிருந்தது உங்கள் படத்துடன். அது நல்ல கட்டுரை. உங்களதும் மற்றும் ஒருவரதும் சிங்கள மொழிபெயர்ப்பு புத்தகங்களின் வெளியீட்டுச்செய்திகளையும் அந்த சிங்கள இதழ்களில் படித்திருக்கிறேன். மற்றவர் நடேசன்தானே? அவரது சமணலவெவ (வண்ணாத்திக்குளம்) தொடர்கதையை பஹண என்ற இதழில் படித்துவருகின்றேன்.” என்றார் அந்த முன்பின்தெரியாத சிங்களப்பெண்.

பின்னர் தனது பெயரையும் சொல்லிவிட்டு – தனது அப்பா ஒரு காலத்தில் கிழக்கு இலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத்தில் அதன் தலைவர் கே. சி. தங்கராசா என்பவரின் கீழே பணியாற்றியவர். அந்தப்பெரியவர் மிகவும் நல்ல மனிதர் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அவருடன் பேசிப்பழகி எங்கள் அப்பாவும் நன்றாக தமிழ் பேசக்கற்றுக்கொண்டார். எனக்கும் கொஞ்சங் கொஞ்சங் தமிழ் தெரியும்” என்று சொல்லி சிரித்தார்.

பின்னர் அந்தப்பெண் சொன்ன தகவல்கள்தான் எனக்கு வியப்பைத்தந்தன.
கொழும்பில் மாநகர சபையின் நிருவாகத்தின் கீழ் இருந்த ஒரு அநாதைகள் இல்லத்தில் தாதியாக பணியாற்றியவர். பௌத்த மதம். சிவபெருமானில் ஆழ்ந்த நம்பிக்கை. ஈஸ்வர தெய்யோதான் அவரது வாழ்வின் வழிகாட்டி. அவுஸ்திரேலியாவுக்கு வந்து தொழில் – வீடு தேடுவதில் பல சிரமங்களை சந்தித்தவர். அடிக்கடி ஈஸ்வரதெய்யோவை கனவில் காண்பவர். டண்டினொங் என்ற இடத்தில் கணவர் மற்றும் ஒரு மகளுடன் வாடகை வீட்டில் வாழ்ந்தவர். டண்டினொங்கிற்கு
சமீபமாகவிருக்கும் கரம்டவுண்ஸ் என்ற இடத்தில் அமைந்த சிவா – விஷ்ணு கோயிலுக்கு அடிக்கடி சென்று . ஈஸ்வர தெய்யோவை வழிபட்டவர். தனக்கும் கணவருக்கும் நல்ல தொழில் கிடைக்கவேண்டும் – வசிப்பதற்கு ஒரு வீடுவாங்கவேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தவர். ஈஸ்வர தெய்யோவின் கருணையினால் குறிப்பிட்ட சிவா- விஷ்ணு கோயில் அருகிலேயே தமது வசதிக்குத்தகுந்த விலையில் நல்ல வீடும் தொழிலும் கிடைத்துவிட்டது. எல்லாவற்றுக்கும் அந்த ஈஸ்வர தெய்யோதான் காரணம்.
அவர் தனது ஈஸ்வர தெய்யோ நம்பிக்கையை சொன்னபொழுது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரும் சிந்தினார்.

“ எதிர்பாராத விதமாக உங்களை நான் இன்று சந்தித்ததற்கும் அந்த ஈஸ்வர தெய்யோதான் காரணம்.” எனச்சொன்னபோது அவரது முகத்தில் தோன்றிய பரவசம் என்னை வியப்படையச்செய்தது.

“உங்களது அமைப்பின் ஆண்டறிக்கை மட்டுமல்ல எனது மகளுடைய கல்வி சார்ந்த ஒப்படை (Assignment) அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம்கூட தெய்வ மகிமைதான். அந்தத்தாமதம் நன்மையை செய்திருக்கிறது. சிங்கள இதழ்களில் உங்களது இன நல்லிணக்கம் தொடர்பான கட்டுரைகளை படித்துவிட்டு – எப்படி உங்களை சந்திப்பேன் என்று பலநாட்கள் யோசித்தேன். பாருங்கள் இன்று எதிர்பாராதவிதமாக உங்களை இங்கு சந்திக்கின்றேன். உங்களுடைய மதக்கசெவனெலி (Shadows Of Memories) மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வேண்டும்.” எனச்சொல்லிவிட்டு – என்ன விலை? எனக்கு ஒரு பிரதி தரமுடியுமா? தபாலில் அனுப்புங்கள்.” என்றார்.

“ அதன் விலை ஏழு வெள்ளிகள் ஐம்பது சதம். உங்கள் முகவரி தாருங்கள் அனுப்பிவைக்கின்றேன்.” எனச்சொன்னதும் உடனே பத்துவெள்ளிகள் பச்சைநிற டொலர் நோட்டை நீட்டினார்.

மிகுதிப்பணத்தை நான் கொடுத்ததும் – “ வேண்டாம் தபாற்செலவுக்கு வைத்திருங்கள். எனச்சொல்லிவிட்டு – எமது கல்வி நிதியத்தின் ஆண்டறிக்கை பிரதியும் கேட்டார். தாமும் அந்த நற்பணிக்கு உதவ விருப்பம். கல்விக்குச்செய்யும் உதவியும் நான் வணங்கும் ஈஸ்வர தெய்யோவின் கருணைதான்.” என்றார்.

விடைபெறும் பொழுது “ மீண்டும் சந்திப்போம். இன்றைய நாளை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன். உங்களுக்காகவும் உங்களது அமைப்பின் பராமரிப்பிலிருக்கும் பிள்ளைகளுக்காகவும் நான் தினமும் ஈஸ்வர தெய்யோவிடம் பிரார்த்திப்பேன்.” என்று கண்கள் மின்னச்சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

தேசிய ஒருமைப்பாடு – இன நல்லிணக்கம் பற்றியெல்லாம் நான் பேசியும் எழுதியும் வந்தவேளைகளில் குறுகிய இனவாதம் பேசிவரும் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றேன்.

எனினும் அதற்காக என்றைக்கும் அலட்டிக்கொண்டதில்லை.
சுந்தரராமசாமி தனது ஜே.ஜே சில குறிப்புகள் நாவலில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

தனக்கு ஏற்படக்கூடிய பெரும் பாதிப்பைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஒருவன் எதிர்நிலையிலிருந்து பேச முற்படும்போது அவன் பேச்சை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

அந்தச்சந்திப்புக்கு முன்னர் எனக்கு அறிமுகமேயற்ற அந்தப்பெண்ணுக்கு ஈஸ்வர தெய்யோவின் மீது நம்பிக்கை. எனக்கோ அந்தத்தருணத்தில் சுந்தரராமசாமியின் அந்தக்கருத்தில் நம்பிக்கை.

வீடு திரும்பியவுடன் அந்தப்பெண்ணுக்கு எனது மொழிபெயர்ப்பு நூலை தபாலில் அனுப்பிவைத்தேன். நூல் கிடைத்தமை பற்றி மகிழ்ச்சியுடன் தொலைபேசியில் சொன்னார்.

எனது சகோதரிகள் வட்டத்தில் தற்பொழுது அந்தப்பெண்ணும் இணைந்துள்ளார்.

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: