நடேசன்
நைல் மீதான மத்திய அரசர்கள் காலத்துக்கவிதை
புவியில் இருந்து வந்து எகிப்தை எங்களுக்களித்தாயே.
உன்னை வணங்குகிறேன்.
இரண்டு நாட்டையும் ஒன்றிணைத்து தானியக் களஞ்சியங்களை நிறைத்தாயே
வறியவர்கள் வயிற்றை நிரப்பிய நீ வாழ்க.
நைல் நதியில் அதிகாலையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக யன்னலைத் திறந்தபோது உச்சி வானம் வெளிர்நீல நிறமாக மேகக் கூட்டங்கள் அற்று நிர்மலமாக காட்சியளித்தது. அடிவானத்தில் ஈச்ச மரங்கள் மற்றும் அக்காசியா மரங்களுக்கு இடையில் ஆர்ப்பாட்டமில்லாத சூரியஉதயம் மெதுவாக தோன்றியது. நாரைகள், கொக்குகள் முதலான பறவைகள் அதிகாலை மீன் வேட்டைக்காக திட்டுகளாக இருந்த பகுதிகளில் பலே நடனப் பெண்களைப்போல் நகர்ந்து கொண்டிருந்தன. லக்சர் பிரதேசம் பறவைகளைப் பார்ப்பதற்கு ஏற்ற பிரதேசம் என்பார்கள். என்னிடம் பைனாக்குலர் இல்லாத குறையை அந்தப் பறவைகள் உணரவைத்தன.
நாம் பயணித்த உல்லாசப்படகு லக்சரில் இருந்து தெற்கே அஸ்வான் அணைப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்து. உல்லாசப் பிரயாணிகளின் வருகை குறைந்த காலமானதால் வேறு படகுகளைக் கண்ணுக் கெட்டியதூரம் வரை காணவில்லை. இரண்டு மீனவர்களது சிறிய படகுகள் பாய்மரத்தை விரித்தபடி தெற்கே சென்றன.
இப்படியான மீனவர்களது படகுகள் கடந்த 5000 வருடங்களாக நைல் நதியில் எக்காலத்திலும் தென் திசையை நோக்கி வீசும் காற்றினால் மாற்றமின்றி சென்று கொண்டிருக்கின்றன. எமது உல்லாசப்படகு மோட்டர் இணைத்த வள்ளமொன்றால் இழுத்துச் செல்லப்பட்டதால் எம்மால் அந்த சிறிய பாய்மரப் படகுகளை இலகுவாக கடந்து போக முடிந்தது.
தெற்கில் இருந்து வடக்கே போவதென்றால் பாய்மரத்தை இழுத்து மடித்துவிடவேண்டியதுதான். நதியின் நீரோட்டம் இழுத்துக் கொண்டு செல்லும். இதனால் எகிப்தியர்கள் கடலில் படகு செலுத்தும் திறமையடையவில்லை. இதனாலே கிரேக்கர், ரோமர், பிரான்சியர் என எல்லோரும் எகிப்தின்மேல் படை எடுக்க முடிந்தது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள்.
குளித்துவிட்டு காலையாகரத்துக்கு மேல்தளத்துக்குச் சென்று அங்கிருந்து புத்தகமொன்றுடன் மிகுதி நேரக்காலைப் பொழுதைக் கழிப்பது என முடிவு செய்தேன்.
காலை பத்து மணியளவில் எங்கிருந்தோ சிறிய படகு இருட்டில் வந்த அம்புபோல் வந்து எங்கள் பெரிய படகுடன்- சுவரில் நத்தைபோல் ஒட்டிக்கொண்டதை மேல்த்தளத்தில் இருந்து அவதானித்தோம்.
சிறிது உற்றுப் பார்த்தபோது ஒரு வியாபாரி பல வண்ணவண்ணத் துணிகளுடன் எங்களை நோக்கி வந்து அவற்றை வாங்கும்படி தனது படகில் இருந்தவாறு கூவினான். தற்கால எகிப்து பருத்தி உடைகளுக்குப் புகழ்பெற்றது. அந்த வியாபாரியின் துணிகளில் பெரும்பாலானவை படுக்கை விரிப்புகளும் எகிப்திய ஆண்கள் அணியும் கணுக்கால்வரையிலான மேலங்கிகளும் ஆகும். படகில் உள்ள மற்றவர்கள் அந்த வியாபாரியுடன் பேரத்தை தொடங்கினாலும் என்னைப் பொறுத்தவரை அந்தத் துணிகள் தேவையற்றது. மேலும் விலையும் அதிகமாக இருந்தது போலத்தோன்றியது.
துணிகளைக் கண்டதும் கண்களை அகல விரித்தபடி எம்மில் ஒரு கூட்டம் ஆவலுடன் அந்தப் பேரத்தில் பங்குபற்ற விரும்பியது. எங்களுடன் வந்த பெண்களுடன் பிரான்சியப் பெண்களும் அந்தப் பேரத்தில் சேர்ந்து கொண்டார்கள். வியாபாரி கப்பல் மேல்த்தளத்திற்கு துணிகளை எறிவதும் இவர்கள் விலைளைக் கேட்டுவிட்டு வேண்டாம் என மீண்டும் அவனிடம் எறிவதுமாக பிரயோசனமில்லாத பேரம் நடந்தது.
வியாபாரம் அவனுக்கும் ஆகவில்லை. எங்கள் எல்லோருக்கும் வெறுத்தும்விட்டது.
இந்த நிலையில் நண்பன் ரவிந்திரராஜின் இளைய மகன் அனுஸ் – இந்தத் துணிகளை அரை விலையில் வாங்கித்தருகிறேன் எனச் சொல்லிவிட்டு – அந்த வியாபாரியிடம் பத்துத் துணிகள் வாங்குவதாகக் கூறி அவனிடம் விலையைக் கேட்டபோது அவன் அரைவிலையில் தருவதற்கு சம்மதித்தான்.நாம் பயணித்த உல்லாசப்படகில் இருந்த பெண்கள் எல்லோரும் தங்களுக்கு விருப்பமான துணிகளுக்கு அனுசிடம் பணத்தைக் கொடுத்ததும் அந்த வியாபாரி அனுசிடம் எல்லா ஆடைகளையும் கொடுத்தான்.
சகலரதும் பாராட்டும் அனுசுக்கு கிடைத்தது.
பெத்தலகேம் நகரத்தில் கிறிஸ்த்து நாதர் பிறப்பதற்கு கால் நூற்றண்டுகளின் முன்பாக நடந்த சம்பவம் எகிப்திற்கு மிகவும் முக்கியமானது. 17 வயதே நிரம்பிய எகிப்தின் கடைசி மகாராணி கிளியோபட்ராவும் மத்திய வயதான ஜுலியஸ் சீசரும் அலக்சாண்டிறியாவில் இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நைல் நதியில், தெற்கு நோக்கி எங்களைப்போல் உல்லாசப்படகில் இரண்டு மாதங்கள் பயணம் செய்திருக்கிறார்கள். அந்தப் பிரயாணம், எகிப்து என்ற தேசத்தை அடுத்த இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்தள்ளும் என்பதை யார் நினைத்திருப்பார்கள்?
கிளியோபட்ரா என்றதும் எலிசபெத் ட்ரெயிலர்தான் நமக்கு ஞாபகம் வருவது தவிர்க்க முடியாதது. கிளியோபட்ராவின் தந்தை தனக்கு வாரிசாக கியோபட்ராவையும் அவனது தம்பியையும் நியமித்து விட்டுச் சென்றதால் இருவருக்கும் இடையில் பதவிப் போட்டி வந்தது. இதனால் எகிப்திய அரசு நிலை குலைந்தது. ஏற்கனவே கிளியோபட்ராவின் தந்தை அங்கு நல்லாட்சி நடத்தவில்லை. புளுட்(Flute) வாசிப்பவர் என மக்களால் குறிப்பிடப்படுபவர். ரோம இராச்சியத்தின் உதவியால் தனது அரசவையை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.
அக்காலத்தில் எகிப்தின் தலைநகரான அலக்சாண்டிரியாவின் மொத்த ஜனத்தொகையில் அதிகமாக வாழ்ந்த கிரேக்கர்;கள் கிளியோபட்ராவை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்கள். அதற்கு முக்கிய காhரணமாக கிளியோபட்ரா ரோம சாம்ராச்சியத்தின் ஆதரவாளர் என்பதே.
தேச விஸ்த்தரிப்பில் ரோம இராச்சியம் இருந்த காலம் அது. ரோம சாம்ராச்சியத்திற்கு எகிப்தில் நிலையான ஆட்சி தேவை. ரோமர்களுக்கு, எகிப்தில் விளையும் தானியங்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் ரோமராச்சியத்தின் விஸ்தரிப்புக்கு உதவியதுடன் அதன் இராணுவத்தின் உணவு தேவையையும் எகிப்து நிறைவேற்றியது . இதனால் எகிப்தில் அதிகாரப் போட்டியை தவிர்த்து நிலையான ஆட்சியை ஏற்படுத்த ஜுலியஸ் சீசர் அலெக்சாண்ரா வருகை தந்தார். இக்காலத்தில் தம்பிக்கு எதிராக படைகளைச் சேர்த்தபடி அரண்மனைக்கு வெளியே இருந்த கிளியோபட்ரா திருட்டுத்தனமாக உள்ளே கடத்தப்பட்டு கொண்டுவரப்படுகிறார்.
இந்தக் காட்சி கியோபட்ரா படத்தில் அழகாக அமைந்துள்ளது.
கிளியோபட்ராவை சந்தித்தவுடன் அவளது அழகில் அறிவில் அதிர்ச்சியடைந்த ஜுலியஸ் சீசரை – கிளியோபட்ரா உல்லாசப் பயணமாக தனது நாட்டை சுற்றி காட்டுமுகமாகவும், தனது பக்கத்து நியாயங்களை விளக்கும் பொருட்டும் நைல் நதியில் உல்லாசப்படகில் ஜூலியஸ் சீசரை அழைத்து செல்கிறாள். அவ்வாறு சென்ற பயணத்தில் சீசரால் பிரமிட் மன்னர்களின் வெளி – மற்றும் லக்சர் கர்நாட் கோயில்கள் ஓபிலஸ்க் என்ற எகிப்திய மகோன்னதமான சின்னங்களைப் பார்க்கும் சீசர் – வியப்பு அடைகிறான். அக்காலத்தில் ரோமில் இப்படியான கட்டிடங்கள் எதுவும் இருக்கவில்லை. இதற்கும் மேல் கிளியோபட்ரா கல்வி கற்று பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற பெண்ணாக இருப்பதும் சீசருக்கு ஆச்சரியம் கொடுக்கிறது. அக்காலத்தில் ரோமாபுரிப் பெண்கள் கல்வி அறிவற்றவர்களாக இருந்தார்கள்.
இந்த உல்லாசப் பயணத்தில் கியோபட்ரா கர்ப்பமாகிறாள்.
உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் இந்த நைல் நதியில் நடந்து முடிந்திருக்கிறது
மேல் தளத்தில் மதிய வெயில் கூடியதால் அறைக்கு வந்து ஜன்னல் ஊடாக நைல்நதியின் கரைப்பகுதியைப் பார்த்தேன். ஒரு காலத்தில் கரையெங்கும் வளர்ந்து கிடந்த பாப்பரசுச் செடிகள் இப்பொழுது தெரிகிறதா என்று கவனித்தேன். அந்தச் செடிகள் தற்காலத்தில் மிகவும் அரிதாக தென்படுவதாக கூறினார்கள். எமது மூங்கிலை ஒத்த அந்தச்செடிகளின் நீண்ட தண்டுகள் கூராக சீவப்பட்டு ஒன்றாக பரப்பி வைத்து மரச்சுத்தியலால் அடிக்கப்படும் போது அந்தத் தண்டுகளில் இருக்கும்; சாறு வெளியே வந்து வெட்டிய துண்டுகளை ஒன்றாகப்பிணைக்கிறது. வெளியேறும் சாறில் பிசின்தன்மை இருப்பதே அதற்குக்காரணம்.
வெய்யிலில் காயவைத்து எடுக்கும் போது பப்பரசியான பேப்பர் கிடைக்கிறது. இதில் எழுதியபின் சிறிய பாயைப்போல் சுருட்டிவைக்கப்படும். (Scroll) எனப்படும் இந்தப்பாய்களை அக்காலத்தில் எகிப்தில் இருந்து உலகம் முழுக்க அனுப்பிக்கொண்டிருந்தார்கள். மத்திய கிழக்கில் கழிமண் தட்டுகளில் எழுதியபோது எகிப்தியர் பப்பரசியை பாவித்தார்கள். கிரேக்க காலத்தில் பப்பரசு வர்த்தகம் அரசாங்கத்தின் உடைமையாக்கப்பட்டதுடன் ஏற்றுமதியும் தடுக்கப்பட்டது. இதனால்தான் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டு கிரீசிலும் அலக்சாண்டிரியாவிலும் மட்டுமே இருந்து.
பைபிள் சில நூற்றாண்டுகளின் பின்புதான் இலத்தீனில் மொழி பெயர்கப்பட்டது. அத்துடன் பெருமை வாய்ந்த அலெக்சாண்ட்ரியா நூலகத்தில் இப்படியான பப்பரசி சுருள்களே பாதுகாக்கப்பட்டன. இந்த நூலகம் அலக்சாண்டரின் தளபதியான தொலமியால் உருவாக்கப்பட்டு தொலமியின் மகனால் பெருப்பிக்கப்பட்டது. இந்தக்காலத்தில் அலக்சாண்டிரியா துறைமுகத்தில் ஒரு கப்பல் வந்தால் அந்தக் கப்பலில் ஏதாவது பப்பரசி சுருள் உள்ளதா எனத் தேடப்பட்டு அப்படி இருந்தால் அதை மீள்பதிவு செய்து அலக்சாண்டிரிய நூலகத்தில் வைக்கப்பட்ட பின்னரே அந்தக் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும். இந்த நூலகம் பிற்காலத்தில் எரிந்து விட்டது.
நாங்கள் கெய்ரோவில் பப்பரசி தயாரிக்கும் இடத்திற்கும் சென்றோம். அங்கு தயாரிக்கப்பட்ட பப்பரசியில் வரைந்த ஓவியங்கள் விலை உயர்ந்தவை. மேலும் வாழைத்தண்டில் போலியாக பப்பரசி போல் செய்து அப்பாவியாக வரும் உல்லாசப்பிரயாணிகளுக்கு விற்கிறார்கள்.
மத்திய ஆபிரிக்காவிலும் எத்தியோப்பியாவிலும் இருந்து பாய்ந்து மூன்று கிளையாறுகள் ஒன்றாகி கடைசியில் எகிப்தூடாக மத்தியகடலில்; கலக்கும் நைல்நதியைச் சுற்றி 63 வீதமான எகிப்தியர்கள் வாழ்கிறார்கள்
நைல் நதியின் மத்தியில் உள்ள தீவுகளில் வரலாற்றுக்கு முன்னதாக மக்கள் குடியேற்றம் இருந்தது. இதனாலே தண்ணீரில் இருந்து உயிர் வந்தது என்பது கருத்தாக்கமாக உருவாகியது. அதைவிட நைல் நதியில் உள்ள முதலைகள் தவளைகள் பிற்காலத்தில் வணக்கத்துக்குரியன என எகிப்தியரால் பார்க்கப்பட்டது
சூரியக்கடவுள் தினமும் படகில் நைல் நதியில் பயணம் செய்வது போன்ற கர்ண பரம்பரைக்கதைகளும் உள்ளன. மத்தியகாலத்தில் இருந்தே கவிதைகளும் இலக்கியங்களும் நைல் நதிமீது பாடப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய பீட பூமியான பிரதேசத்தில் பருவக்காற்றின் விளைவாக பெய்யும் மழையால் நைல்நதி கரைபுரண்டு சென்னிறமாக ஓடும். கரை புரண்டு ஓடிய இடங்களில் கொண்டு வரப்படும் ஆற்றின் வண்டல் சேறு தாவரங்களுக்குத் தேவையான கனிப்பொருட்களைக் கொண்டுள்ளது. இதனால் மற்றைய நாட்டு விவசாயிகள்போல் வருடா வருடம் பயிர்களுக்கு உரம் – தனியாகப் போடத் தேவையில்லை. இதைப்பார்த்த வரலாற்றாசிரியர் – ஹெடொரஸ் எகிப்திய விவசாயிகளுக்கு விவசாயம் மிக இலகுவானது – நைல் நதி கரைபுரண்டு ஓடியபின் பின் விதைப்பதும் விளைந்த பின் அறுப்பதும் மிக இலகுவான விவசாயம் எனக்குறிப்பிட்டார். உண்மை அதுவல்ல. நைல் நதி கரைபுரண்டு ஓடும் நாட்களில் குடிசைகள் அழிந்துவிடும். விவசாய நிலங்களின் எல்லைகள் நீரில் கரைந்து விடுவதால் மீண்டும் நிலங்கள் மறு அளவை செய்யப்பட்டு எல்லைகள் குறிக்கப்படும்.
எத்தியோப்பியாவில் மழை பொய்த்த நாட்களில் பஞ்சம் பட்டினி ஏற்படும்.
நைல் நதிப்பெருக்கத்தை குறிப்பெடுத்து அதன் மூலம் அதன் பெருகும் காலம் வற்றும் காலத்தை எகிப்தியர்கள் துல்லியமாக கணித்தார்கள். இதை மேலும் விரிவாக்கி மாதங்கள் நாட்களாக வருடத்தை கணக்கெடுத்தார்கள். உலகத்திலே முதல் நில அளவையாளர்கள் எகிப்தியர்களே. இவர்களுக்கு வருடம்தோறும் நிலத்தை அளந்து குறிக்கும் தேவையிருந்தது.
அரசர்கள் நைல் நதியின் கரைகளில் கிணறு போன்று உருவாக்கி அதில் வரும் நீர் மட்டத்தை கணிப்பார்கள். இதை நைலோமீட்டர் என்பார்கள். இந்த நைலோமீட்டரின் நீர்மட்ட அளவை வைத்து எவ்வளவு விவசாயிகள் வரி செலுத்துவது என்பது அரச அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும்.
சூடானில் இருந்து எகிப்திற்கு வரும் வழியில் கற்பாறைகளினால் இயற்கையான பல அணைகள் அமைந்து உள்ளன. இப்படியான ஒன்று அஸ்வானில் இருந்தது. தற்போது அந்த இடத்தில் அஸ்வான் அணை அமைந்து நைல் நதியின் நீர் பெருக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது நைல் நதி கரைபுரண்டு ஓடுவதில்லை என்பதால் எகிப்தியர்கள் உரம் போட்டுத்தான் பயிர் வளர்க்கவேண்டும்
இந்தப்படகுப்பயணத்தில் அடுத்ததாக எமது உல்லாசப்படகு தரிக்குமிடம் ரோமர்களால் நிர்மாணிக்கப்பட்ட எட்பு என்ற கோயில் அமைந்த இடமாகும்.
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்