நடேசன்
ஜோவான் என்ற பெண் ஆணாக வேடமிட்டு மத்தியகாலத்தில் (1100AD) கத்தோலிக்க பாப்பரசராக இரண்டு வருடங்கள் பதவி வகித்தார். அவர் குதிரையில் செல்லும் போது பிரசவம் நடந்து பெண்ணென்ற விடயம் பகிரங்கமானது. ஜோவான் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டார்;. பெண்களைப் பொறுத்தவரை தற்காலத்தில் நிலைமை எவ்வளவு மாற்றம் நடந்துள்ளது என்பது நாடுகளுக்கு நாடுகள் வேறுபடுகிறது. பல நாடுகளில் பெண்கள் நிலைமை மத்திய காலத்திலே உள்ளது.
பண்டைக்கால சீனாவின் வரலாற்றில் டாங் அரசவம்சத்தில் (Tang Dynasty) சக்கரவர்த்தினியாகி அரசாண்ட வூ செற்றியன்(Wu Zetian ) என்ற பெண்ணைத் தவிர மற்றைய நாடுகளின் வரலாற்றில் பெண்கள் அரசாட்சி செய்தது மிகவும் அரிதாகவே கணப்படுகிறது. அப்படித் தெரிந்தாலும் முக்கியத்துவமானதாக காணப்படவில்லை. ஐரோப்பியர்களின் வரலாற்றுத் தொட்டில்களான கிரேக்க ரோம அரசுகளில் பெண்கள் பெயர்கள் பொருட்படுத்துமளவு பேசப்படுவது கிடையாது.
அப்படி நிகழ்ந்தால் எதிர்மறையாக உருவகிக்கப்படும். எகிப்திய அரசி கிளியோபாட்ரா இதன் உதாரணம். பதினெட்டு வயதான கிளியோபட்ரா மத்திய வயதான ஜூலியஸ் சீசரை மயக்கியதாகவும் பின்பு மார்க் அந்தனியை மயக்கியதாகவும் வரலாறு எழுதப்படுகிறது.
நாம் அறிந்த வரலாறு அரச வம்சங்களின் வரலாறு. அந்த அரச வரலாறு ஆண் அரசர்களால்தான் கட்டியமைக்கப்படுகிறது என்பதும் நாம் அறிந்து கொண்ட விடயம். இந்த வரலாற்று உண்மைக்கு மாறாக இரண்டாயிரம் வருடங்கள் முன்பாகவே உலகத்தின் எந்த நாட்டின் வரலாற்றிலும் இல்லாத அளவு எகிப்தில் பெண்கள் முக்கியத்துவமடைந்திருக்கிறர்கள்.
எகிப்தின் முக்கிய ஐதீகத்தில் வரும் ஒசிரஸ் என்ற ஆண் தெய்வம்(Osiris) ) வரலாற்றுக்கு முன்பானகாலத்தில் விவசாயத்தை மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்துவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றபோது எகிப்தை ஆண்ட மனைவியான பெண் தெய்வம் ஐசிஸ். எகிப்திய அரசியல் நடைமுறையில் அரசனின் புதல்வன் மட்டுமல்ல அரசனின் மகளை திருமணம் செய்தவரும் எகிப்தை அரசாள முடியும் என்ற விதிமுறை இருந்ததால் பெண்களுக்கான முக்கியத்துவம் வரலாற்றில் 3000 வருடங்களாகவே இருந்தது.
எகிப்திய பெண்களில் ஹசிபுட் (Hatshepsut) அக்நாட்டனின் மனைவி நெபிரிட்டி(Nefertiti) மகா இராமோஸ் மனைவி நெபிரட்றி(Nefertari) அதன்பின் எகிப்தின் கடைசி அரசி கிளியோபட்ரா உட்பட சுமார் அரை டசின் முக்கியமான பெண்கள் எகிப்திய வரலாற்றில் பேசப்படுகிறார்கள்.
எகிப்தை ஆண்ட பிரபலமான ராணி ஹசிபுட் – புதிய வம்சத்தை ஸ்தாபித்த தற்மோசின் -1 மகள் – தனது பன்னிரண்டு வயதில் ஒன்றுவிட்ட சகோதரனான தற்மோசிஸ்-11 திருமணம் செய்து இருபது வருடங்கள் ராணியாக பதவி வகித்தாள்.
தற்மோசிஸ் -11 மணம் முடித்து இருபது வருடங்களில் இறந்த பின்பு கணவனின் இரண்டாவது மனைவியின் மகனாகிய தற்மோசிஸ் 111 என்ற ஏழு வயதுச் சிறுவனுடன் இணையரசியாகவும் (Coregent)அதன் பின் அரசியாகவும் எகிப்தை ஆளுகிறார். இவரது வாழ்க்கையை ஊன்றிப் படிக்கும்போது ஒரு நாவலைப் படிப்பது போல் சுவையானது. அதேவேளையில் இக்கால பெண்கள் சமூகத்தில் எதிர் கொள்ளும் விவகாரங்களை 3500 வருடங்களின் முன்பும் பெண்கள் எதிர் கொண்டிருப்பது என் மனத்தில் இந்தப்பெண்ணரசியின் வரலாற்றை கொஞ்சம் விபரமாக சொல்ல வேண்டும் என எண்ண வைக்கிறது.
எகிப்திய அரசர்கள் ஆட்சியில் அமர்ந்தது மூன்று விடயங்களை முக்கியப்படுத்துகிறது.
1: அரசவையில் அமர்ந்த மறுநாளே தங்களுக்கு பிரமிட்டோ அல்லது சமாதியோ கட்டுவதற்கு தீர்மானித்து கட்டிடக்கலைஞர் ஒருவரைத் தேடுவார்கள்.
2: சுற்றி உள்ள நாட்டின் மேல் படை எடுத்து செல்வங்களைக் கொண்டு வருவதுடன் அதில் ஒரு பகுதியை கோயில்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள.;
3 எகிப்திய தெய்வங்களுக்கு கோயில் கட்டுவார்கள்
இந்த மூன்று விடயங்களிலும் ஹசிபுட் எப்படி நடந்து கொண்டார் என்ற வரலாற்றை சிறிது புரட்டிப் பார்ப்போம்.
எகிப்தில் மிகவும் மகோன்னதமான கோவில் ( monastery Temple) ) டயர் எல் பாகிரி(Dier el Bahri) என்ற இடத்தில் இவரால் கட்டப்பட்டுள்ளது. இது மன்னர்களின் பள்ளத்தாக்கின் அருகிலே உள்ளது. இந்த கோவிலின் அமைப்பு மட்டுமல்ல விசேடமானது. இவரது ஆட்சியில் நடந்த முக்கிய சம்பவங்கள் இந்தக் கோயில் சுவர்களில் பொறிக்கப்பட்டு வரலாற்றுப் பெட்டகமாக உள்ளது.
மதியத்திற்குப் பின்னர் இந்தக் கோயிலுக்கு போனபோது சூரிய ஒளியில் குளித்தபடி கட்டிடம் வித்தியாசமாக இருந்தது. உள்ளே சென்று சுவரில் பொறிக்கப்பட்ட விடயங்கள் கண்ணுக்கு தெரிந்தாலும் வரலாறு தெரியாதபோது அவை கோடுகளாகத்தான் தெரிந்தது.
3500 வருடங்களுக்கு முன்பு நடந்த வரலாற்றை ஓரளவு தெரிந்து கொண்டு பார்த்தபோது சுருட்டிவைக்கப்பட்ட மர்மக் கம்பளமாக கண்ணைக் கவர்ந்தபடி விரிந்தது. சுவரில் பொறிக்கப்பட்ட சித்திரங்கள் என்னைப்போன்ற சாதாரணமானவர்களுக்கு மட்டுமல்ல ஆரம்ப எகிப்தியலாளர்களுக்குமே தலையை சுற்ற வைத்தது.
1829இல் இந்த கோயிலுக்கு வந்த பிரான்சிய எகிப்தியலாளர் சம்போலியன் (Champollion) எகிப்தியலின் தந்தை போன்றவர். இவர் இந்தக் கோயிலுக்கு வந்தபோது இரண்டு அரசர்கள் ஒரே உடையில் இருப்பதாக சுவர்களில் சித்திரம் வரையப்பட்டிருந்தது அவருக்கு புதிராக இருந்தது.
அதில் ஒரு அரசர் தற்மோசஸ்111. அத்துடன் பல இடங்களில் குறியீட்டு மொழியில் மாட்சிமை தங்கிய மகாராணி எனவும் வேறு இடத்தில் மாட்சிமை தங்கிய மகாராஜா எனவும் ஒரே ஆளைக் குறித்து எழுதப்பட்டிருந்தது.
இந்தப் புதிர் பிற்காலத்து எகிப்தியலாளர்களால் அறிவிக்கப்பட்டது. ஆண் அரசர்போல் தோற்றமளித்த ஹசிபுட்டின் பெயர் பல இடங்களில் செதுக்கி அழிக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களில் தற்மோசிஸ் 1 அல்லது தற்மோஸ்11 போன்றவர்களின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
ஹசிபுட் என்ற பெண்ணரசியின் பெயர் வரலாற்றில் வருவதை எகிப்திய சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இதை செய்வதற்கு ஹசிபுட் இறந்து 20 வருடங்கள் காத்திருந்திருக்கிறார்கள்.
இவரது காலத்தில் நாலு ஓப்லஸ்க் (Obelisks) தூண்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு கர்னாக் கோயிலில் அமைக்கப்பட்டன. இப்பொழுது எகிப்தில் உயரமான ஓப்லஸ்க் கர்னாக் கோயிலில் இன்னமும் இருக்கிறது. மற்ற மூன்றும் ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் அப்புறப்படுத்தி ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிற்காலத்தில் ஹசிபுட்டின் தடயங்களை அப்புறப்படுத்தும்போது ஓப்லஸ்க் அகற்றுவதற்கு முடியாமல் இதை மறைத்து சுவர் எழுப்பியிருக்கிறார்கள்.
ஹசிபுட் ஏழு மாதத்தில் அகழ்ந்து கொண்டு வந்து இரு ஓப்லஸ்க்கை கர்னாக்கோயிலில் அமைத்திருக்கிறர். இந்த இரண்டு ஓப்லஸ்;களை பெரிய மிதவையில் வைத்து நைல் நதியின் அஸ்வான் பிரதேசத்தில் இருந்து தீப்பஸ்க்கு 27 படகுகளால் இழுத்துக்கொண்டு வரும் காட்சியானது இந்தக் கோயிலின் சுவரில் எழுதப்பட்டிருக்கிறது.
ஹசிபுட் தனது ஆட்சிக் காலத்தில் பண்ட் (Punt) எனப்படும் தற்போதைய எரித்திரியாவுக்கு வியாபர நல்லுறவுக்காக பல கப்பல்களை அனுப்பி அங்கிருந்து ஆபிரிக்க மிருகங்கள் தாவரங்கள் முதலானவற்றை எகிப்திற்கு கொண்டு வந்தார்.
வியாபாரக் குழுவாக சென்ற எகிப்தியர்களை அந்த நாட்டு அரசி தனது மகளுடன் வரவேற்பதும் – மரங்களையும் மிருகங்களை கொண்டுவரும் காட்சியும் மற்றும் ஆபிரிக்கா குடிசைகள் என்பனவும் சுவரில் வரையப்பட்டுள்ளன. ஒட்டகசிவிங்கி போன்ற மிருகங்கள் தீப்பஸ_க்கு கொண்டுவரப்பட்டு – உலகத்தின் முதலாவது மிருகக்காட்சி சாலை அங்கு அமைக்கப்படுகிறது. பல ஆபிரிக்க தாவரங்களின் வேர்கள் கூடைகளில் வைத்து அவற்றின் வேர்கள் காய்ந்துவிடாமல பாதுகாப்பாகக் கொண்டு வரப்படுகிறது. அத்துடன் தந்தங்கள் – புலித்தோல் – சாப்பிராணி தரும் மரங்கள் என்பனவும் கொண்டுவரப்படும் காட்சி அதில் வரையப்பட்டுள்ளது.
பாலைவனப் பிரதேசமான எகிப்தில் கிடைக்காத தாவரங்கள் – விலங்குகள் சகாரா பாலைவனத்தின் தெற்கேயுள்ளது. உலகத்தில் முதல் விலங்கியல் பூங்கா மற்றும் தாவரவியல் பூங்கா என்பன ஹசிபுட்டினால் 3500 வருடங்கள் முன்பு உருவாக்கப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் இருபது வருடம் மன்னனின் மனைவி- மகாராணியாகவும் பின்னர் நான்கு வருடங்கள் தற்மோசின் இரண்டாவது மனைவியின் மகன் சிறுவனாக இருந்தபோது அவனுடன் இணைந்து அரசியாகவும் பதவியிலிருந்துவிட்டு பிற்காலத்தல் எகிப்திய அரசியாகவும் பொறுப்பேற்று நடத்தினார். அக்காலத்தில் மன்னருக்கான கிரீடத்துடன் மட்டுமல்ல எகிப்திய மன்னர்கள் தாடையில் வைக்கும் பொய்த்தாடியுடனும் அரசாண்டதாக அந்த சித்திரங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் ஆய்வாளர் சாம்பொலினுக்கு தலையை சுற்றியது.
ஆண்கள் மட்டுமே அரசாளும் எகிப்தில் – எகிப்திய அரசர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். இதை எப்படி ஹசிபுட் சமாளித்தார் என்பது எகிப்தியலாளர் பலரது கேள்வியாக இருந்தது. இந்தக் கோயிலில் அதற்கான பதில் இருக்கிறது.
எகிப்தியர்களின் முதன்மைக் கடவுளான ஆமூன் தந்தையான தற்மோசஸ்போல் வேடமிட்டு ஹசிபுட்டினது தாயிடம் சென்று உடலுறவு கொண்டதில்தான் ஹசிபுட் கருவாகி பிறந்தாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது அதில் தெய்வீகப்பிறப்பு உள்ளதாக அங்கு எழுதப்பட்டிருக்கிறது . இங்கும் விவிலியத்திற்கு முன்னோடியாக தெய்வீகப் பிறப்பின் கருத்தாக்கம் எகிப்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஆரம்பத்தில் அரசனின் மனைவியாக இருந்தபோது அமைக்கப்பட்ட ஒரு சமாதி பிற்காலத்தில் கைவிடப்படுகிறது. மற்றைய சமாதி துட்டன்காமனின் சமாதியை கண்டுபிடித்த ஹவாட் காட்டரல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இரண்டு கல்லிலான பிரேதப் பெட்டிகள் இருந்தன. ஒன்று ஹசிபுட் மற்றது தந்தையான தற்மோசிஸ்1. கணவனான தற்மோசிஸ்11 பற்றிய குறிப்புகள் எங்கும் அதிகமில்லை. மேலும் பன்னிரண்டு வயதில் திருமணம் செய்து முப்பத்திரண்டு வயதில் விதவையாகிய ஹசிபுட்டின் இருபது வருட திருமணவாழ்க்கை குறிப்பிடத்தக்கது அல்ல என எகிப்தியலாளர்கள் கருதுகிறார்கள். எகிப்திய அரசிகள் மறுதிருமணம செய்வது வழக்கமில்லை.
முப்பத்திரண்டு வயதான ஹசிபுட் வாழ்க்கையில் ஒரு காதலர் இருந்ததாக கருதப்படுகிறது. அவரது பெயர் சேன்மெற் (ளுநநெnஅரவ) என்றும் அதற்கான ஆதாரங்களையும் வைக்கிறார்கள்.
சேன்மெற் (Senenmut) காலம் முழுவதும் திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர் . இவர் அரச திறைசேரிக்கு பொறுப்பாகவும் – ஹசிபுட்டின் மகளுக்கு கல்வி போதிப்பவராகவும் மற்றும் பல பதவிகளை வகித்தவர். ஹசிபுட் தனக்கு சொந்தமான அழகிய பிரேதப்பெட்டியை இவருக்கு கொடுத்துள்ளார். ஆனால் இந்தப் பெட்டி சுக்குநூறாக பிற்காலத்தில் நொறுக்கப்பட்டுள்ளது. இதைவிட தீப்பஸ் குகையில் ஆபாசப்படம் (Graffiti) ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளது. ஒரு பெண் உடலில் உடையில்லாமல் தலையில் கழுகைக் கொண்ட எகிப்திய கிரீடத்தை அணிந்து கொண்டிருக்கிறாள். அவளுடன் ஓவசியர் தொப்பியை அணிந்த ஆண் உறவு கொள்வதாக அந்தப்படம் வரையப்பட்டுள்ளது. இந்தப்படம் ஹசிபுட்- சேன்மற்றைக் குறிப்பதாக கருதப்படுகிறது. அக்காலத்தில் மக்களிடம் பேசப்பட்ட செய்தியை தங்களுக்கு தெரிந்ததாக காட்டிக் கொள்வதற்காக கல்தச்சர்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என எகிப்தியலாளர்கள் கருதுகிறார்கள்.
ஹசிபுட் இறந்த பின்பு அரசுக்கட்டில் ஏறிய பெறாமகன் தற்மோசிஸ்111 ஆட்சிக்காலத்தின் ஹசிபுட்டின் தடயங்கள் எகிப்திய வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டது. ஒரு பெண்ணரசி எகிப்தை ஆண்ட வரலாறு பிற்காலத்தில் எகிப்திய ஆராய்ச்சியாளர்களால் மற்றைய தரவுகளில் இருந்து மீள உருவாக்கப்பட்டது.
அக்கால தீப்பஸ் எனப்படும் இக்கால லக்சரில் இருந்து தெற்கு நோக்கிய பயணத்தை நைல் நதியில் நாங்கள் மாலைவேளையில் தொடர்ந்தோம். எப்பொழுதும் காற்று தெற்கு நோக்கி வீசுவதால் பாயை விரித்தபடிதான் அக்காலத்தில் படகுகள் செல்லும். ஆனால் இக்காலத்தில் மோட்டர் பூட்டிய படகொன்று அஸ்வான் அணையை நோக்கி எம்மை அழைத்துச் சென்றது. இதனால் காற்றின் ஓசையில் நைல் நதியின் சலசலப்பும் கலந்திருந்தது. அதனை லயித்தபடி பயணம் செய்தோம்.
(தொடரும்)