எகிப்தில் சில நாட்கள்12:மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள்

19-Peak-at-the-Valley-of-the-Kings-300x217

நடேசன்

அந்த நாள் காலை பிரகாசமாக விடிந்தது என்பதை எனது அறையில் நிறைந்திருந்த வெளிச்சம் எனக்குத் தெரிவித்தது.மெதுவாக கண்களை கைகளால் அழுத்தியபடி விழித்தபோது எனதருகே படுத்திருந்த சியாமளாவைக் காணவில்லை. நைல் நதியில் நின்ற எமது கப்பலின் மேல்தளத்தில் சென்று சூரிய உதயம் பார்ப்பதற்காக எனது நண்பர் ரவீந்திரராஜின் குடும்பத்தினரும் எனது மனைவியும் சென்று விட்டார்கள் என்பது சிறிது நேரத்தில் எனது அறிவுக்கு எட்டியது. முதல் நாள் லக்ஸர் மற்றும் கார்னக் கோவிலையும் சுற்றி நடந்ததனால் உடல் களைப்பும் – இரவில் மெதுவாக வீசி போர்வையாக உடல் தழுவிய நைல்நதியின் குளிர்காற்றும் அதிகநேரம் என்னை நித்திரைக்கு அழைத்துச் சென்றிருந்தது ஆச்சரியமில்லை.

அவசரமாக எழுந்து காலை உணவை உண்பதற்காக மேற்தளத்திற்கு சென்ற போது காலை மணி எட்டரையாகிவிட்டது. ஒன்பது மணியளவில் பிரசித்தி பெற்ற மன்னர்களின் பள்ளத்தாக்கு(Valley of the kings) என்று சொல்லப்படும் பிரதேசத்திற்குப் போக நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். அதன் பின்பாக மாலையில் எகிப்தின் முக்கிய ராணியாகிய கர்சிபுட் (Queen Hatshepsut) கட்டிய கோயிலுக்கு செல்வது அன்றைய நிகழ்ச்சியாக இருந்தது.

காலையுணவின் போது எமது மேசையருகே இருந்து உணவருந்திய அமெரிக்க தம்பதிகளுக்கு காலை வணக்கம் சொன்னபோது – அவர்கள் தாங்கள் லக்சர் நகரத்தில் வான்வெளியில் ஏற்கனவே காற்றடைத்த பலூனில் ஒரு மணிநேரத்துக்கு மேல் பறந்து மன்னர்களின் பள்ளத்தாக்கு நைல்நதி மற்றும் கர்னாக் கோயிலை பார்த்ததாக சொன்னார்கள்.

வானத்தில் மிதந்து பார்த்துவிட்டு எங்களுடன் தரையிலும் நடந்து பார்க்க வருகிறார்கள் என்பதை அறிந்தபோது கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. ‘நாமும் போயிருக்கலாமே’? என்றபோது ‘உங்களுக்கு என்ன விசரா’ என்றாள் எனது மனைவி.

அப்படி பலூனில் பறந்து செல்வதற்கு ஏற்கனவே அமெரிக்காவில் அவர்கள் பதிவு செய்திருக்கவேண்டும். நாங்கள்தான் எகிப்துக்கு வருவதற்கே எப்படி பயந்தோம்?

நாங்கள் காலை சென்ற அந்த மன்னர்களின் பள்ளத்தாக்கு லக்சர் நகரத்தில் நைல் நதியின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது பெயருக்கு ஏற்றபடி சுற்றிவர அதிக உயரமற்ற மலைகளால் சூழப்பட்ட பிரதேசம். இந்தப் பிரதேசத்திற்கு உள்செல்ல ஒரு பாதையே இருந்தது. அதன்வழியேதான் உல்லாசப்பிரயாணிகள் வண்டிகளில் வந்து இறங்கினார்கள்.

இங்குள்ள மலைகள் நான் பார்த்த எந்த மலைகளையும் விட விசித்திரமானது. இவற்றின் மீது புற்களோ வேறு எந்த பச்சைத் தாவரங்களுமோ முளைத்திராத மென்சிவப்பான சுண்ணாம்பு பாறைகளைக்கொண்டது அந்த மலைகள். இந்தப் பாறைகளை உட்புறமாக குடைந்து பின்னர் உட்புறங்களை செதுக்கி அழகான சமாதிகளை அமைத்திருக்கிறார்கள் என்று சொன்ன எமது வழிகாட்டி மேலும் கூறிய ஒரு தகவல் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

‘பத்து வருடங்களுக்கு ஒரு முறை இங்கு மழை பெய்தால் அதிசயம்’ என்றார் அவர்.
இப்படியான பிரதேசத்தில் – எகிப்தில் நைல்நதியும் ஓடாவிடில் சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

புதிய இராஜவம்சத்து அரசரான தத்மோஸஸ்(Tuthmosis) இங்கு முதலாவதாக சமாதியை உருவாக்கிய மன்னன். இதற்கு முக்கிய காரணம் பழைய வம்சத்தினராலும் மத்திய வம்சத்தினராலும் அமைக்கப்பட்ட பிரமிட்டுகளில் கொள்ளைகள் தொடர்ந்து நடந்தன. அரசர்களது ஆபரணங்கள் – பாவித்த பொருட்களான உடை ,மற்றும் தளவாடங்களை அவர்களது உடலோடு சேர்த்து வைப்பதன் காரணம் – அவர்கள் அவற்றோடு வானுலகு செல்ல முடியும் என்ற எகிப்தியரின் நம்பிக்கைதான்.

எகிப்தில் அரசர்கள் சிறப்பாக அரசாண்டபோது பிரமிட்டுகள் அரசர்களால் பாதுகாக்கப்பட்டன. ஆனால் எகிப்திய அரசு நலிவடைந்த காலத்தில் மம்மிகளோடு சேர்த்து வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பது தொடர்ச்சியாக நடந்தது.

பிரமிட்டுகளின் வாசல் எப்பொழுதும் வடக்கு பக்கமாக வைக்கப்பட்டு வானில் நிரந்தரமாக தெரியும் துருவ நட்சத்திரத்தை (North Star) நோக்கி இருக்கும். இதற்குக் காரணம் இறந்த அரசர்கள் இலகுவாக வானுலகை நோக்கி செல்ல முடியும் என்ற ஐதீகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக சமாதிகளில் திருட்டு நடப்பதைத் தடுக்க வழக்கத்திற்கு மாற்றாக தெற்குப் பக்கத்தில வாசல் வைத்து மத்தியகால அரசர் ஒருவர் தனது பிரமிட்டடைக் கட்டியிருந்தார்.
இதனால் பிற்காலத்தில் பிரபலமான இங்கிலாந்தை சேர்ந்த எகிப்தியலாளரான பிலிண்டெர்ஸ் பெட்ரீ (Flinders Petrie) அந்த சமாதியை கண்டு பிடிப்பதற்காக மண் மூடியிருந்த அந்த பிரமிட்டை பத்து வருடங்கள் தோண்டவேண்டியிருந்தது. இறுதியில் பிரமிட்டின் உச்சியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது அந்த சமாதியில் உள்ள பல ஆபரணங்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. மம்மியிருந்த கல்லான அந்த பிரேதப் பெட்டியில் நீர் சென்றிருந்ததால் மம்மி உக்கி அழிந்துவிட்டது. இதன்மூலம் புரிந்து கொண்ட விடயம் பெரும்பாலான திருடர்கள் அந்த பிரமிட்டை கட்டும் வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களே.

மத்திய அரசர்கள் காலத்தின் பின்பு எகிப்தின் வடபகுதியை வெளிநாட்டினர் ஆண்டனர். இவர்கள் குதிரைகள் கொண்ட இரதங்களில் வந்ததால் இவர்களால் எகிப்திய அரசர்களை வெல்ல முடிந்தது. குதிரைகளோ இரதங்களோ எகிப்தில் அக்காலம் வரையும் இருக்கவில்லை. இவர்கள் பலஸ்தீனத்தில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்களால் தீப்பஸ் அமைந்திருக்கும் எகிப்தின் தென்பகுதியை வெல்ல முடியவில்லை என்பது அறியப்பட்டது. இவர்களிடம் எழுதும் மொழியோ கலை வடிவமோ அல்லது வரலாற்றை பதிவு செய்யும் வழக்கமோ இருக்கவில்லை என ஊகிக்கப் படுகிறது.
இதற்கு மாறாக தங்களின் வெற்றிகளையும் கீர்த்திகளையும் மற்றும் சந்தோசமான விடயங்களையும் பதிவுகளாக்கிய எகிப்தியர்கள் தங்களுக்கு எதிரான விடயங்களையோ அல்லது தோல்விகளையோ பதிவு செய்யும் வழக்கம் இல்லாததால் இந்த ஹெக்ஷோஸ்(Hyksos) எனப்படும் வெளிநாட்டவர்கள்; காலத்து விடயங்கள் சம்பந்தமாக எகிப்திய நாட்டில் எந்த பதிவுகளும் இல்லை. இவர்களை பிற்காலத்தில் தீப்ஸ் இளவரசர்கள் எதிர்த்து போரிட்டு இவர்களை எகிப்தை விட்டு வெளியேற்றி எகிப்தை ஒருநாடாக்கி ஆட்சியை நிறுவினார்கள்.
ஆமோஸ்( Ahmose-1551-1524) இவர்களை வெளியேற்றியதும் எகிப்து ஒன்றாகி புதிய இராஜ வம்சம் உருவாகிறது. இந்தக் காலத்தில் இருந்து மீண்டும் மகோன்னதமான காலம் எகிப்தில் உருவாகிறது. இதில் ஆமோஸின் மகளைத் திருமணம் செய்த படைத் தளபதி தற்மோசஸ் வடக்கில் மொசப்பத்தேமியவிற்கும் தெற்கே நூபியாவிற்கும் படையெடுத்து மீண்டும் எகிப்தின் கீர்த்தியை நிலை நாட்டி அரசனாகிறான்.

மன்னன் தற்மோசஸ் – ஆரம்பத்தில் மன்னர்கள் பள்ளத்தாக்கில் சுண்ணாம்புக் கற்பாறைகளை குடைந்து தனக்கு ஒரு சமாதியை உருவாக்கியபோது அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த கட்டிடக்கலைஞர் – இனனி(Ineni) ‘இந்த இடத்தை தானே தெரிவு செய்ததாகவும் இந்த இடத்தில் நடைபெறும் வேலையை தான் மட்டுமே பார்வையிட்டதாகவும் இதனால் ஏற்படும் கீர்த்தி தனக்கு மட்டுமே உரியது’ எனவும் பதிவு செய்துள்ளான்.

இந்த மலைப்பகுதி பல இயற்கையான வசதிகளைக் கொண்டுள்ளது. உயரமான மலைப்பகுதி இயற்கையான பிரமிட்டின் தோற்றத்தை தருவதுடன் மக்கள் எவரும் வசிக்காத ஈரலிப்பற்ற சுண்ணாம்புப் பாறைப் பிரதேசம். சுண்ணாம்புப் பாறைகள் குடைவதற்கும் மெருகூட்டுவதற்கும் இலகுவானவை. சில சமாதிகள் நூறு அடி ஆழத்தில் பல அறைகள் மற்றும் தூண்களைக் கொண்ட மாளிகைபோல் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான பெரிய வேலையை எப்படி இரகசியமாக செய்திருக்க முடியும்?
இந்த வினாவிற்கு ஆரம்பகாலத்தில் தற்மோஸசால் வெளிநாட்டுப் படையெடுப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட கைதிகள் – மலையை குடைந்து சமாதி வேலைகளை முடித்திருப்பார்கள். அதன்பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எகிப்தியலாளர்கள் நம்புகிறார்கள்.

இப்படியாக பாதுகாக்கப்பட்ட சமாதிகள் எல்லாம் பிற்காலத்தில் திருடப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தூத்தன்காமனின் சமாதி மட்டுமே திருடர்களின் கைவரிசையில் இருந்து தப்பிய ஒரே சமாதியாகும்.
மக்கள் அற்ற பாதுகாக்கக் கூடிய இந்த மலைப்பிரதேசத்தில் கல்லை குடைந்து முதலாவது சமாதியை உருவாக்கியவர்கள் புதிய அரசவம்சத்து அரசர்கள். அதன்பின்பாக (1550-1069) கிட்டத்தட்ட ஐநூறு வருடங்களாக அரசர்களின் உடல்கள் இங்கே உருவாக்கப்பட்ட சமாதிகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இருபதுக்கு மேற்பட்டவர்களின் சமாதிகள் உல்லாசப்பயணிகளுக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

நாம் சென்ற போது பல சமாதிகள் மூடப்பட்டும் சில மட்டுமே பார்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு காலத்திலும் இரண்டு அல்லது மூன்று சமாதிகளே உல்லாசப்பயணிகளுக்காக திறந்து விடப்படும். மனிதர்களின் சுவாசத்தில் இருந்து வரும் கரியமில வாயுவும் ஈரலிப்பும் சேர்ந்து அமிலமாக மாறி சுண்ணாம்பு பாறைகளை தாக்கக்கூடியது என்பதே இதற்குக்காரணம். இதனைக்கருத்தில்கொண்டு – வருங்கால சந்ததியினருக்கும் இந்த வரலாற்று சான்றுகளை பார்க்கும் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு சமாதிக்கும் தனிக்கட்டணம் வசூலிப்பதால் இரண்டு சமாதிகளுக்கும் போகக் கூடியதாக இருந்தது . அதில் முக்கியமானது தூத்தன்காமனின் சமாதி. இதில் மட்டுமே மம்மியுள்ளது ராம்சி -11 யின் சமாதி; வெறுமையாக இருந்து. நாங்கள் சென்று பார்த்த இரண்டும் மலைக் குன்றுகளின் உயரத்தில் கற்பாறைகளைக் குடைந்து பல அறைகளாக அமைக்கப்பட்டுள்ளது. படிகளில் ஏறிய பின்புதான் வாசலை அடைந்து பின்பு கீழ்நோக்கி செல்லக்கூடியதாக இந்த சமாதியின் பாதைகள் அமைந்துள்ளன. சமாதியின் பாதை முன்னறையை அடையும். இந்த முன்னறையின் அடுத்த பகுதி மம்மி வைத்திருக்கும் உள்ளறையாகும் .

பல சமாதிகள் பல அறைகளையும் துண்களையும் கொண்டவை. மலையின் உயரத்தில் இருப்பதால் மழைத்தண்ணீர் செல்வது குறைவானது அத்துடன் அவற்றின் வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கும்.

பல அறைகளைக் கொண்ட இந்த சமாதி ஆரம்பப் பாதையில் பல சித்திரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டு வர்ணத்தில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. எகிப்திய தெய்வங்கள் அரசர்களோடு எப்படியான சுமுக உறவுகளில் இருந்தார்கள் என்பதையும் – எகிப்திய தெய்வங்கள் மற்றும் கர்ணபரம்பரைக் கதைகள் என்பன சித்திரமாக எழுதப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். சமாதிக்குள் இருந்த கல்லாலான பிரேதப் பெட்டிகள் அதன் உள்ளே இருந்த மம்மிகள் ஆபரணங்கள் மற்றும் அரசனது பொருட்கள் யாவும் தற்பொழுது பாதுகாப்பாக எகிப்திய தொல்பொருள் காட்சிச்சாலையிலும் இலண்டன் பாரீஸ் மற்றும் நியுயோர்க் தொல்பொருள்காட்சிச்சாலைகளிலும் பாதுகாப்பாக உள்ளன.

சில சமாதிகளின் கூரையில் ஆகாயமும் நட்சத்திரங்களும் வரையப்பட்டுள்ளன. மரணத்தின்பின் அரசன் மேலுலகம் போவதற்கான வழிமுறைகள் எகிப்திய குறியீட்டு மொழியில் எழுதப்பட்டிருக்கும். எகிப்திய ஐதீகத்தில் பன்னிரண்டு வாசல்கள் ஊடாக செல்லும் சூரியக்கடவுளுடன் அரசர்கள் செல்லும்போது அந்த வாசல் திறப்பதற்கான இலக்கங்கள் உண்டு. மேலும் மன்னர்கள் சூரியகடவுளின் துணையோடு சோலர் படகில் வானத்தில் செல்வதாகவும் நம்பிக்கைகள் உண்டு. இப்படியான நம்பிக்கைள் சித்திர வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

பிற்காலத்தில் சமாதிகளில் வேலை செய்வதற்கு கல்தச்சர்கள்- சிற்பிகள்- ஓவியர்கள் முதலான திறமையுள்ள கலைஞர்கள் ஒன்றாக கூடி ஒரு கிராமத்தில் வசித்தார்கள். மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து 2-3 கிலோ மீட்டர் தொலைவில் அந்தக்கிராமம் இருந்திருக்கிறது. இந்தக் கிராமம் தற்மோசிஸ் காலத்தில் உருவாகியது. பிற்காலத்தில் பதிய எகிப்திய தலைநகரம் வடக்கே நைல் நதிப்பகுதியில் உருவாகியபோது, மன்னர்களின் சமாதிகளும் தீப்பஸ் நகரத்தில் இல்லாதொழிந்ததால் அந்தக் கலைஞர்கள் வாழ்ந்த கிராமமும் அழிந்து போனது.

முற்காலத்திலும் மத்திய காலத்திலும் அரசர்களுக்கு மட்டுமே பிரமிட் கட்டினார்கள். ஆனால் புதிய இராசவம்சத்தின் காலத்தில் எகிப்தில் அரசர்களுக்கு மட்டுமல்ல இராணிகள் மற்றும் முக்கிய பிரதானிகள் மத்திரிகளது சமாதிகளும் தீப்பஸ் மற்றும் பல எகிப்திய நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.
(தொடரும்)

%d bloggers like this: