மகனின் பிறந்தநாள் :மனைவியின் துணிச்சல்.

எக்சோடஸ் 4
Jaffna_Town_-_Hospital_Road1
நடேசன்

இரண்டு நாட்கள் ஹோட்டலில் இருந்துவிட்டு கோடம்பாக்கத்தில் ஆர்காடு ரோட்டில் அமைந்த பழைய கட்டிடத்தில் மேலே உள்ள சிறிய அறையை மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டேன்.

அந்த அறையில் யன்னலையும் கதவையும் விட பெரிய இரும்புக்கட்டில்; – சந்தமிட்டபடி சுழலும் ஒரு பழைய கறள் பிடித்த காற்றாடி மற்றும் அதோடு ஓட்டிய ஒரு லைட் மட்டுமே எனக்குத் துணையாக இருந்தன. தனிமை அந்த அறையில் கோடை வெப்பத்தை விட மோசமாக வாட்டியது. அந்தப் பெரிய சென்னைப்பட்டணத்தில் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன். குடும்பம் சுற்றம் நண்பர்களது அருமையை உணர்வதற்கு அந்தக் காலம் தேவையாக இருந்தது.

தேவையில்லாமல் இலங்கையை விட்டு வெளிக்கிட்டுவிட்டேனோ என்ற சிந்தனை தொடர்ச்சியாக – கடல் அலை பாறையில் மோதுவது போல் மோதிக்கொண்டிருந்தது. இலங்கையில் சிறிதளவு இருந்த சிகரட்; புகைக்கும் பழக்கம் ஊதிய பலூனாக பெரிதாகியது. ஆர்காடு ரோட்டில் அருகே இருந்த லெண்டிங் லைபிரரியில் இருந்த சுஜாதா ராஜேந்திரகுமார் மற்றும் புஷ்பா தங்கத்துரை போன்றவர்களது புத்தகங்கள் உற்ற துணையாக உதவி செய்தன.

ஒருநாள் இரவு – எனது மனைவி இலங்கையில் வேலை செய்யும் குருநகரில் உள்ள ஹோலி குறோஸ் வைத்தியசாலையில் குண்டுகள் விழுவதாகவும் அங்குள்ளவர்கள் உயிர்தப்ப சிதறி ஓடுவதாகவும் கனவு கண்டு எழுந்து அழுதேன். கனவுகள் கண்ணீர் என்பது எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் மிகவும் அருமையாக இருந்தது . மத்தியதர குடும்பத்தில் மூத்த பிள்ளையாக பிறந்தது ஒருவித அதிஷ்டமே.

மனதில் நினைத்தவுடன்; இந்தக்காலம் போன்று பேசுவதற்கு தொலைபேசியில்லை. வேறு வழியுமில்லை. கனவுகள் நடக்காது என்பதில் நம்பிக்கை வைத்து அன்று நடுஇரவில் எழுந்து ஒரு வில்ஸ் சிகரட்டை புகைத்தபோது ஜுலை 83 நினைவுக்கு வந்தது.

மதவாச்சியில் வேலை செய்த நான், கொழும்பில் ஜுலை 21ம் திகதி அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மிருகவைத்தியர்களுடன் கிராமியதொழில்துறை அமைச்சர் தொண்டமானின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கு பற்றினேன். அக்காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் அனுராதபுரத்தில் நடந்தபோது ஐக்கியதேசியகட்சி ஆட்சியில் இருந்ததால் – மதவாச்சி மைத்திரிபால சேனநாயக்கவின் தொகுதியானதால் புறக்கணிக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் மட்டும் புறக்கணிப்பதாக குறை கூறினாலும் உண்மையில் எந்த அரசாங்கமும் எதிர்கட்சி ஆதரவாளர்களையும் அவர்களது தொகுதியையும் கண்டுகொள்வதில்லை. சிங்களவர்கள் இதற்கு அரசியல் சாயம் பூசும்போது தமிழர்கள் நித்தமும் அரசாங்கங்களுக்கு எதிராக இருப்பதால் இனச்சாயம் பூசுவதுதான் உண்மை.

எனது காலத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மதவாச்சி – பதவிய ஆகிய இரண்டு இடத்திலும் பால் சேகரிக்கும் நிலையமும் புதிதாக மதவாச்சியில மிருக வைத்தியசாலையும்; எனது முயற்சியால் திறக்கப்பட்டன. அனுராதபுர மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் மைத்திரிபால சேனநாயக்கா கலந்து கொள்வதில்லை.

மிருகவைத்திய கால்நடை விடயங்களில் நான் ஒரு மதவாச்சி மக்கள் பிரதிநிதி என அக்கால மாவட்ட அமைச்சர் சந்திரபண்டார ஒரு நாள் எனது கையை பிடித்தபடி சொன்னார் ஒருவிதத்தில் இருபத்தைந்து வயதான என்னை மதித்து அவர் பேசியது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்ததுடன் – எக்காலத்திலும் அரசியல்வாதிகளுடன் நேரடியாக பேசக்கூடிய தைரியத்தை அளித்தது அந்த கூட்டங்களே.

கொழும்பில் இப்படியான கூட்டமொன்றில் கலந்துகொண்டபின்னர் – வெள்ளிக்கிழமை நின்று வார இறுதி நாட்களில் கொழும்பில் தங்கியிருக்க விரும்பினார்கள். என்னோடு வந்த மற்றைய அனுராதபுர மாவட்ட வைத்தியர்கள். என்னையும் தங்களுடன் நிற்கும்படி வலியுறுத்தினார்கள். உண்மையில் அனுராதபுரம் போன்ற இடத்தில் இருந்து கொழும்பு சென்றால் நகரவாழ்வை அனுபவிக்க விரும்புவது இயற்கை.

எனக்கு, எனது மகனது முதலாவது பிறந்த நாள் ஜுலை 25ஆம் திகதி வருவதால் யாழ்ப்பாணம் செல்லவேண்டும் என்று 21ம் திகதி மாலையே வெளிக்கிட்டபோது – சக மிருகவைத்தியர் களுஆராய்ச்சியின் அனுராதபுர வீட்டின் ஒரு சாவியை பெற்றுக்கொண்டேன். ‘இரவு நடுச்சாமத்தில் அனுராதபுரத்தில் தங்கியிருந்து பின்னர் யாழ்ப்பாணம் செல்லவிரும்புகிறேன். எனவே உனது வீட்டில் படுக்கிறேன்” என்றபோது அவனும் தந்தான்.
நான் நேரடியாக கொழும்பில் அல்லது கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதில்லை என்ற விடயத்தை பாதுகாப்பு நடவடிக்கையாக பலகாலமாக கடைப்பிடித்து வருகிறேன். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் – இராணுவத்தால் பரிசோதிக்கப்படுவதும் விசாரிப்பதும் அக்காலத்தில் நடக்கும் வழமையான விடயங்கள்.

நான் கொழும்பில் அல்லது கண்டியில் இருந்து அனுராதபுரம் அல்லது மதவாச்சி செல்லும்போது அந்த மார்க்கத்தில் பெரும்பாலும் சிங்களமக்களே பிரயாணம் செய்வார்கள். மேலும் அங்கிருந்து வவுனியாவிற்கு செல்லும்போது வாகனங்கள் நிறுத்தப்படுவதோ சோதிக்கப்படுவதோ இல்லை. பயணநேரம் கொஞ்சம்கூட எடுத்தாலும் இது வசதியானது.

மீசையில்லாமல் ஆங்கிலப்பத்திரிகையோடு பிரயாணம் செய்யும்போது பலரும் சிங்களவராக நினைத்து பேசியபடி வருவார்கள். அதிகம் பேசாமல் ஓரிரு வார்த்தைகளில் பத்திரிகையில் என்னைப் புதைத்துக் கொள்வேன். மீசையற்ற முகம், நல்லெண்ணை வைக்காத தலை, சிங்கள மொழியில் கொஞ்சம் பரிச்சயம் என்பன எனது பாதுகாப்பு கவசங்கள் என எனக்கு ஒரு நினைப்பு அக்காலத்தில் இருந்தது.

81ஆம் ஆண்டு என நினைக்கிறேன் – அனுராதபுரத்தில் இருந்து வேனில் கண்டி செல்லும்போது மாத்தளையருகில் வரும்போது மாலை 6 மணி சிங்கள செய்தியில் இரண்டு பொலிசார் கொலை செய்யப்பட்டதாக சொன்னபோது அந்த வேனில் இருந்த சில சிங்கள இளைஞர்கள் எழுந்து கோபத்தில் தமிழர்களை கொல்லவேண்டும்’ என சுற்றி சுற்றி பார்த்தார்கள் நான் சாரதிக்கு பின்புறமாக இருந்தேன். இதைக்கேட்டதும் சன் பத்திரிகையை தூக்கியபடி “ஏக்கத்தமாய்” என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிக்கொண்டு எழும்பினேன். அவர்களும் “ஏக்கனே மாத்தயா” என்றார்கள். அந்தச் செய்தி முடிந்ததும் அந்த இiளைஞர்களது கோபம் திறந்த சம்பேயின் போத்தலின் சத்தமாக அடங்கிது. நானும் தொடர்ச்சியாக சன் பத்திரிகையை படித்தபடி பிரயாணத்தை கண்டிவரை தொடர்ந்தேன்.

அன்று இரவு அனுராதபுரத்தில் படுத்திருந்துவிட்டு – மறுநாள் அருகில் இருந்த களுவாராச்சியின் உறவினர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானதால் அவர்களுடன் காலையுணவை அருந்திவிட்டு மதவாச்சி சென்று – எனது வைத்தியசாலையில் சில விடயங்களை முடித்து விட்டு எனது அலுவலக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு; யாழ்ப்பாணம் புறப்பட்டேன். அங்கு சென்றடைவதற்கு இரவு எட்டுமணியாகிவிட்டது. வீட்டில் இரண்டு நாளில் பிறந்த தினம் கொண்டாட இருந்த மகனுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தபோது

வைத்தியசாலையில் இருந்து வந்த மனைவி ‘யாழ்ப்பாணம் ரவுணில் கேக்கிற்காக ஓடர் கொடுத்திருக்கு’என்றாள்.

மறுநாள் காலை எழுந்ததும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வேலை செய்யும் அவளை அங்கு விட்டு விட்டு கேக்கை எடுப்பது எனது வேலையாகியது.

அந்த இரவு என்னை பொறுத்தவரை சந்தோசமாக இருந்தது கிழமைக்கு ஒரு முறை மனைவியையும் குழந்தையையும் பார்க்கும் அரசாங்க உத்தியோகத்தனது வாரவிடுறைகள் வேறு எப்படி இருக்கும்?

எந்த ஒரு கவலையும் இல்லாது எதிர்காலம் நிகழ்காலம் என்று எதைப்பற்றிய சிந்தனையும் அற்றவாழ்க்கை. இரண்டு வருமானம். யாழ்ப்பாணம் வந்தால் ஓடுவதற்கு மாமாவின் கார் வசதியான வீடு. அப்படியே கொக்குவிலில் எங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு – அதற்குப்பின்னர் ஆனைக்கோட்டைக்கு நண்பனுடன் சென்று கள்ளு அடித்துவிட்டு வரும்போது அந்த இரண்டு நாட்களும் எப்படிப் போகும் எனத் தெரியாமல் வாழ்ந்தகாலம் வசந்தகாலம்தான்.

சனிக்கிழமை மனைவியை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக எழுந்து காலை எட்டு மணியளவில் யாழ்ப்பாணம் ரவுணுக்கு புறப்பட்டேன். எனது மோட்டார்சைக்கிளில் யாழ்ப்பாணம் பிரதானவீதியால் சென்று ஆஸ்பத்திரி வீதியை அடையும் வரை எல்லாமே வழமைபோல் இருந்தது. வைத்தியசாலைக்கு முன்பாக சென்றபோது அனுராதபுரத்தில் எனது மேலதிகாரியான டொக்டர் பத்மநாதன்- அவரது வீட்டின் முன்பாக நின்றவாறு எனக்கு கையை காட்டினார். நான் அவருக்கு கையை அசைத்தபடி வைத்தியசாலை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். எனது மனைவி வைத்தியசாலையுள்ளே நூழைந்து விட்டாள்.

சுற்று வட்டாரத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது. வைத்தியசாலைக்கு முன்பாக இரண்டு பக்கமாகச் செல்லும் வீதியின் நடுவே வாடகைக்கார்கள் மினி பஸ் வண்டிகள் என குறைந்தது அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு நிறுத்தியிருப்பார்கள். அதாவது வேம்படி வீதியில் இருந்து காங்கேசன்துறை வீதிவரையும் உள்ள இந்த இடம் வாகனங்கள் நிறுத்தும் பிரதேசமாகவிருந்தது. ஆனால் அன்று எந்த வாகனமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லை கண்ணுக்கெட்டியவரை வெளியாக இருந்தது. மேலும் கண்ணாடித் துண்டுகள் சிதறி எனக்குப் பக்கத்தில் நிலமெங்கும் கிடந்தது. ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த என்னை யாரோ பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள் . மேலே பார்த்தபோது என்னுடன் படித்த டொக்டர் ஜெயச்சந்திரன் நண்பர்களுடன் டொக்டர்கள் விடுதி பல்கனியில் நின்றபடி ‘உள்ளுக்கு வாடா. இல்லையேல் உடனே வீடு செல்’என்றான்.
அவனது வார்த்தைகள் கேட்டாலும் அர்த்தம் புரியாமல் சிரித்தபடி நின்றபோது–

‘மீண்டும் ஆமிட்ட அடிவாங்கப் போகிறாய் உடனே போ’ – என்றான்

சுற்றிவர எவரும் இல்லை ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என நினைத்துக்கொண்டு எனது மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு டொக்டர் பத்மநாதன் வீடு சென்றேன்.

‘உனக்கு விடயம் சொல்லத்தான் மறித்தேன். இரவு பெடியங்கள் சில ஆமிக்காரரைக்கொன்று விட்டார்கள் என்ற ஆத்திரத்தில் ஆமி வந்து இங்குள்ள பல கார்களை அடித்து நொருக்கியது பிள்ளையார் விலாஸக்குச் சொந்தமான வேனும் நொருக்கப்பட்டது. மீண்டும் வருவார்கள் என்பதால் வீதிகள் எங்கும் வெறிச்சோடிக்கிடக்கிறது. இன்று எந்தக் கடையும் திறக்கமாட்டார்கள்.’ என்றார் பத்மநாதன்.

மகனுடைய பிறந்தநாள் கேக்கை மறந்து விட்டு குறுக்குவழியால் சுண்டிக்குழி சென்று விடயத்தை மாமா மாமியிடம் சொன்னேன்.

இப்பொழுது மனைவி மாலையில் வேலை முடித்து எப்படி வீட்டுக்கு வருவாள் என்ற கவலை மனதில் படிந்து கொண்டது. வைத்தியசாலையில் இருக்கும்வரையும் பாதகமில்லை. வரும் வழியில் ஏதாவது நடக்காமல் இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தோம்.

மாலையில் எனது மனைவி வந்ததுமல்லாமல் அந்த கேக்கையும் கொண்டு வந்தாள்.

‘எப்படி வந்தாய்?” எனக்கேட்டேன்.

‘நடந்துதான்.’ என்றாள்.

பல விதத்தில் பெண்கள் ஆண்களைவிட தைரியசாலிகள் என புரிந்து கொண்டேன். இராணுவத்திற்குப் பயந்து நான் கேக்கை விட்டுவிட்டு வந்தாலும் – தனது மகனுக்காக கேக்கை எடுத்துக்கொண்டு குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததன் காரணம் தாய்மையா? அல்லது பெண்களுக்குரிய அசாத்திய துணிவா?

அல்லது யதார்த்த நிலைமையை புரிந்துகொள்ளாத அறியாமையா?

எனது மகனின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு குடும்பங்களுடன் நடந்தது.

24ஆம் திகதி இரவு கொழும்பில் நடந்த எந்தச் சம்பவங்களும் தெரியாமல் – நான் திங்கட்கிழமை காலை வழமைபோல் எழுந்து – அரசாங்க மோட்டார் சைக்கிளில் மதவாச்சி சென்றேன். வழி எங்கும் எதுவித தடைகளும் இருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கந்தசாமி என்ற பிரமுகர் – பருத்தித்துறைத் தமிழர் அந்தப்பிரதேசத்தில் இருந்ததால் அங்கு பாரதூரமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

எனது மகனின் பிறந்தநாள் இல்லாமல் இருந்திருந்தால் – நான் நிச்சயமாக கொழும்பில்தான் நின்றிருப்பேன். வானுலத்தில் இருந்துதான் இந்த சுய வரலாறு எழுதியிருக்க வேண்டியிருக்கும்.

சென்னை….

அடுத்தநாள் என்னிடம் இருந்த ஒரே ஒரு விலாசத்தில் இருந்தவர்களிடம் சென்று உதவி கேட்பது என நினைத்தேன். எனது மனைவியின் சகோதரன் தந்த முகவரியில் உள்ளவர்கள் ஏற்கனவே எனக்கும் தெரிந்தவர்கள். என்னோடு இந்துக்கல்லூரியில் படித்து, பேராதனை பல்கலைக்கழகம் சென்று என்ஜினியராக தற்பொழுது அமெரிக்காவில் வசிக்கும் செல்வகுமாரின் தந்தையான காசி விஸ்வநாதன் மாஸ்டரின் வீடு அமைந்தகரையில் இருந்தது. ஓட்டோவில் மாஸ்டரின் வீட்டைத் தேடிப் பிடித்துக் கொண்டு சென்றபோது அங்கு என்னுடன் இந்துக்கல்லூரியில் படித்த சாவகச்சேரியை சேர்ந்த பரந்தாமன் இருந்தார்.

(தொடரும்)

%d bloggers like this: