அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் தமிழ்ச்சிறுகதைகள் தொடர்பான அனுபவப்பகிர்வு நிகழ்வு மெல்பனில் வேர்மண் சவுத் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் டொக்டர் நடேசன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி – படைப்பாளி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள், ஆவூரான் சந்திரனின் நான் இப்படி அழுததில்லை, பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசாவின் வழக்குத்தவணைக்கு வரமாட்டேன், கே.எஸ்.சுதாகரனின் காட்சிப்பிழை, நடேசன் எழுதிய பிரேதத்தை அலங்கரிப்பவள் என்ற சிறுகதை ஆகியன வாசிக்கப்பட்டு அவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சங்கத்தின் செயலாளர் லெ.முருகபூபதி, படைப்பு இலக்கியங்கள் தொடர்பான வாசிப்பு அனுபவங்களை சந்திப்புகளில் கலந்துரையாடுவதன் மூலம் அவற்றை மேலும் செம்மைப்படுத்தமுடியும் எனத் தெரிவித்து நிகழ்ச்சியின் நோக்கத்தை வெளியிட்டார்..
தலைமையேற்ற நடேசன், சமீபத்தில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றுள்ள அலிஸ் மன்றோவைப்பற்றிய சிறு அறிமுகத்தை வழங்கியதுடன், அலிஸ்மன்றோ சிறுகதைகள் மாத்திரமே படைத்து அந்தத்துறையில் சாதனைகள் படைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
முருகபூபதி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள் என்ற பல வருடங்களுக்கு முன்னர் மல்லிகையில் வெளியான சிறுகதையை வாசித்து தனது வாசிப்பு அனுபவங்களை சொன்னார். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சிறுகதை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஆவூரன் சந்திரனின் நான் இப்படி அழுததில்லை என்ற சிறுகதையை அபர்ணா சுதன் வாசித்தார். இச்சிறுகதை தொடர்பாகவும் கலந்துகொண்டவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
பாடும் மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் வழக்குத்தவணைக்கு வரமாட்டேன் என்ற சிறுகதையை அவரே வாசித்தார். கே. எஸ். சுதாகரன் காட்சிப்பிழை என்ற தமது சிறுகதையை அவரே வாசித்தார். நடேசன் எழுதிய பிரேதத்தை அலங்கரிப்பவள் சிறுகதையை பேராசிரியர் ஆசி. கந்தராஜா வாசித்தார்.
ஒவ்வொரு கதையும் வாசிக்கப்பட்டதும் நீண்ட நேரம் கதைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு விவாதிக்கப்பட்டது. உரையாடல்கள் மிகவும் புரிந்துணர்வுடன் நிகழ்த்தப்பெற்றமை இச்சந்திப்பில் ஆரோக்கியமானது.
சிறுகதையின் வடிவம் – உருவம் – உள்ளடக்கம் – பாத்திரவார்ப்பு – களம் – கதை எழுதப்பட்ட முறையில் அழகியல் – நடைச்சித்திரம் – பத்தி எழுத்துக்கள் – புனைவிலக்கிய கட்டுரைகள் முதலானவற்றிலிருந்து சிறுதையின் வடிவம் எவ்வாறு வேறுபடுகிறது என்பன தொடர்பாகவும் பயனுள்ள கருத்துக்கள் இச்சந்திப்பில் பரிமாறப்பட்டன.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேர்ந்த ரஸனையை வளர்க்கும் நோக்கத்துடன் நடைபெற்ற அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் மருத்துவம், கல்வி, படைப்பிலக்கியம், வானொலி ஊடகம், இதழியல், இணையம், வலைப்பூக்கள் முதலானவற்றில் தொடர்புடைய பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தகுந்தது.