மேல்பேன் நகரத்தின் மத்திய பகுதியான கிங்ஸ் வீதியில் நடு இரவு கடந்து நைட்கிளப்புகளில் சந்தடி குறைந்து விட்டது. அதிக சன நடமாட்டமில்லை. கிட்டத்தட்ட மூன்று மணியாக இருக்கும். அந்த நேரத்தில் பாதையில் மிகவும் வெளிச்சமான பகுதியில் ஒரு முதியவர் குனிந்து எதையோ கவனமாக தேடிக்கொண்டிருந்தார்.
அந்த வழியால் பொலிஸ் கார் வந்தது.இந்த முதியவரைக் கண்டதும் காரை நிறுத்தி விட்டு இறங்கிய இரண்டு பொலிஸ்காரர் ‘எதைத் தேடுகிறீர்கள்’ என மிகவும் அக்கறையாக விசாரித்தார்கள்.
முதியவர் குனி;ந்த தலை நிமிராமல் ‘எனது பேர்சை தொலைத்துவிட்டேன்’ என்றபடி தொடர்ந்து தேடினார்.
இரண்டு பொலிஸ்காரர்கள் ,அந்த வெளிச்சமான இடத்தை அரை மணிநேரம் தேடி களைத்து போனார்கள்.
ஒரு பொலிகாரர், ‘பெரியவரே அந்த பேர்சில் அதிக பணம் வைத்திருந்தீர்களா?’
‘இருநூறு டாலர். எனது பென்சன் பணம் அதில் இருந்தது ‘
‘ஐயா இந்த இடத்தில் ஒன்றும் இல்லை. நீங்கள் வேறு எங்காவது போட்டிருந்திருக்காலாம் அல்லவா?
‘உண்மைதான். நான் பேர்சைப் போட்டது , அதோ அந்த இருளான பகுதியில்’
‘அப்படியானால் ஏன் இங்கு தேடினீர்கள்’ என ஆச்சரியப்பட்டனர்
‘இங்கேதான் வெளிச்சம் இருக்கிறது. என்னால் தேடமுடிகிறது’
நம் இப்படித்தான் இருளான இடத்தில் தொலைத்த விடயத்தை வேறு வெளிச்மான இடத்தில் தீவிரமாகத் தேடுகிறோம்.
கிடைக்கவில்லை என கவலைப்படுகிறோம்.
மற்றவர்களை குறை கூறுகிறோம்
கிருஸ்ணமூர்த்தி தனது புத்தகத்தில் மிகவும் மென்மையாக எமது புறங்கையில் கையில் தட்டி அவரது இடைக்காட்டு ஊர் மொழியியில் தொலைத்த இடத்தில் தேடுங்கள் என்கிறார்.
மறுவளம் என்பது அவரது பாசையில் சரியான இடம்.
…………
நூல் அறிமுகம் என்பது இளம் பெண் ஒருத்தியை நெருங்கிய நண்பனிடம் அறிமுகப்படுத்துவது போன்ற விடயம்.
மிகவும் மென்மையாக மேன்மையாக செய்யப்பட வேண்டிய விடயம்
எவ்வளவு மென்மையாக இருக்கவேண்டும் என்று கேட்டால் நான் சொல்லுவேன்.
வண்ணாத்திப்பூச்சியொன்று செம்பருத்தி மலரின் மீது இருந்துவிட்டு எப்படி மகரந்தத்தை கால்களால் எடுத்துக் கொண்டு, எந்தவித காயத்தையும் அந்த மலருக்கு ஏற்படுத்தாமல் பறந்து செல்வதைப் பார்திருக்கிறீர்களா?
அப்படி இருக்கவேண்டும்.
மேன்மைகளை தொட்டுக் காட்டவேண்டும்
அது போன்ற புத்தக அறிமுகத்தை எழுத்தில் நண்பர் செய்திருக்கிறார். அதை தொட்டுக் காட்ட விரும்புகிறேன்
புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தை நானும் வாசித்தேன்
கிருஸ்ணமூர்த்தி எழுதிய அந்தப் புத்தகத்தின் அறிமுகத்தில் ஒரு முக்கிய இடம் என நான் கருதுவது அவரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த இடம் முப்பது வருட ஈழப் போராட்டத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது
‘ஓரு நாள் மொட்டைமாடியில் படுத்தோம். கடுமையான வெயில் தாங்கமுடியாமல் பத்மனாபாவும் எங்களுடன் வந்து படுத்தார் . நான் ,பத்மநாபா, குன்சி மற்றும் பதினைந்து பேர் அங்கு படுத்ததோம்.
இரவு சிறுநீர்கழிப்பதற்கு நான் எழுந்தபோது எமக்கு பாதுகாப்பாக நின்றவர்களைப் பார்த்தபோது சிரிப்பும் சிந்தனையும் ஏற்பட்டது .பியால்,கமல்,தர்மபால என மூன்று சிங்களத் தோழர்கள் ஏ கே 47 துப்பாக்கிகளுடன் நின்றனர்.ஈழத்துக்கு போராடும் போராளிகளுக்காக காவலாக சிங்களவர் இருந்தனர்
எனது உன்னையே மயல் கொண்டாய் என்ற புத்தகத்திற்கு கிருஸ்ணமூர்த்தி எழுதிய அறிமுகம் எனக்கு தெரியாது . இதுவரையும் எங்கும் பிரசுரிக்கப்படவில்லை. இந்த புத்தகத்தை பலர் நிறை கண்டார்கள். சிலர் குறை கண்டார்கள்.
நான் எழுதும் போது எதை முக்கிய பகுதியாக எண்ணியிருந்தேனோ அதை அடையாளம் கண்டு எழுதியது கிருஸ்ணமூர்த்திதான்
1) ‘இந்த நாவலில் இரண்டு வேற்றினத்தவர்கள் ஓன்று ஜுலியா வெள்ளைக்காரப் பெண் மற்றது குண்டல்ராவ் இந்தியாவின் ஆத்திர மாநிலத்தை சேரந்தவர்
இப்படி வேறு இனத்தவர்களை எமக்கு கதை பொருளாக்குவது மிகக்கடினம் அவர்களது கலாசாரத்தை புரிந்து கொள்ளவேணடும்’
2) ‘இலங்கையில் சண்டை ஏதோ இவர்கள் காசில் நடக்கிறது போலவும் அரசியலில் அக்கறை இல்லாதவர்கள் துரோகிகள் என வசைபாடுவதும் இவனுக்கு ஒத்துவரவில்லை. சிட்னி வாழ் தமிழ் மக்களிடமிருந்து அன்னியமாக வாழ்ந்தான். இவனது சொந்தப் பிரச்சனை இலங்கையின் அரசியல் பிரச்சனைபோல சிக்கலாக இருந்தது.
3) மனோநோயாளர் மட்டுமல்ல மன நல மருத்துவருக்கும் எமது சமுகத்தில் நல்லபெயர் கிடையாது.
4) மனோநோயாளர் தாய் தந்தையர்களால் பராமரிக்கப்படாவிட்டால் பிச்சைக்காரர்களாகத்தான் எம்மூரில் வாழ்வார்கள். மனநோயாளர்கள் மீது கல்லெறிந்து விளையாடும் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள்’
இதைவிட எமது அரசியலில், சமூகத்தில் காட்டமாக விமர்சனத்தை வைத்துக் கொள்வது எப்படி?
ஆனால் நான் வைத்த விமர்சனம் வேறு எவராலும் எடுத்துக் காட்டப்படவில்லை.
…….
இலக்கியத்தை வாசிப்பது என்று வரும்போது அது கடினமாகிறது. காரணம் வாசிப்பு என்பது சில ஆயிரம் ஆண்டுகளாகத்தான் நடக்கிறது . வாயால் பேசுவதோ ,கண்ணால் பார்ப்பதோ காலம் காலமாக செய்து வருவது. மேலும் காதால் கேட்பது, கண்ணால் பார்ப்பது எமது உயிர் வாழ்வுக்கும், பாதுகாப்பிற்கும் அத்தியாவசியமானது. வாசிப்பு அப்படி அத்தியாவசியமானது அல்ல.
வாசிப்பு இரண்டு விதமானது
ஒவ்வொரு நாள் வாசிப்பு மற்றயது இலக்கியத்தை வாசிப்பது
ஓவ்வொரு நாளும் பத்திரிகை , ஈமெயில் என்பவற்றை வாசிப்பது சாரத்தை புரிந்து கொள்ள மட்டுமே இதிலும் பத்திரிகையில் செய்தியோ அல்லது பாடப்புத்தகத்தை வாசிப்பதோ இலகுவானது. காரணம் அவற்றில் சுருக்கப்பட்ட விடயம்தான் நமக்கு தேவைப்படுகிறது.
நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பெரிய புத்தகத்தில் முக்கிய விடயங்களைக் குறிப்பாக்கிவிடுவதால் அவை சில பக்கங்களில் வந்துவிடும்.
நன்கு நினைவிருக்கிறது ,ஆயிரம் பக்கத்துக்குமேல் உள்ள விலங்கியல் புத்தகம் அதில் சுறாவைப் பற்றி படித்துவிட்டு தவளையை நோக்கி செல்லும்போது, சுறா நீரில் மூழ்கிவிடும். அதேபோல் எலியை நோக்கி செல்லும்போது, தவளை நமது தலையில் இருந்து பாய்ந்துவிடும். இதைத் தவிர்க்க ஒரேவழி குறிப்பு எடுப்பதுதான்.
இலக்கியம் என்பது நமக்கு உணர்வு ரீதியாகவும் அதே நேரத்தில் அழகுணர்வு செறிந்திருப்பது. நாவல், சிறுகதை, நாடகம், கவிதை என்பனவற்றை சுருக்க முடியாது. ஒவ்வொரு வசனம் மட்டுமல்ல அந்த வசனங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் மறைபொருளாக இருப்பதும் முக்கியமாகிறது என்பதால் புத்தகத்தில் இணைந்து வாசிக்கவேண்டும் இதை ஆங்கிலத்தில் Artful reading என்பார்கள்
கலைத்துவமான வாசிப்பு எங்களது சந்தோசத்திற்காக வாசிப்பது அதாவது கார் ஓடுவதற்கு ரோட்டின் வரைபடத்தை வாசிப்பது போல் இல்லை .பரிச்சைக்கு சித்தியடைவதற்காக பாடப்புத்தகத்தை வாசிப்பது போன்றதும் அல்ல
…..
மொழில் சொல்லப்படும் அழகான வார்த்தை நமது மனத்தில் காட்சியை உருவாக்கும்.ஒரு பாடலில் வரும் ‘மூங்கில் இலைமீது தூங்கும் பனி நீரே’ என வயலில் ஏற்றம் இறைப்பவன் பாடும்போது // அதைக் காதால் கேட்ட கம்பனுக்கு அடுத்தவரி என்னவாகும் என// நெடுநேரம் கற்பனை செய்து தலை சுற்றியது. இறுதியில் மறுநாள் அதே இடத்திற்கு சென்று ஏற்றக்காரர் வரும்வரை காத்திருந்தார். “மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே” என்று முடித்தபோது கம்பர் ஆனந்தப்பட்டார்.
இந்த கவிதை வார்த்தைகள் நேரடியாக எங்களை காலை நேரத்தில் மூங்கில் பற்றைகளை நோக்கி அழைத்துப்போவது போல் இல்லையா. ?’
நமது திருகோணமலைக் கவிஞர் பிரமிள் வார்த்தைகள் ‘சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டு சென்றது’
காற்றில் பறக்கும் இறகொன்று மனக்கண்ணில் வரவில்லையா?
மேலே கூறியது வார்த்தைகள் , நேரடியாக கற்பனையில் காட்சியை உருவாக்குவது.
அதோ போல வார்த்தைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி எம்மை பல இடத்திற்கு கைப்பிடித்து ஒரு சிறுவனை, தாய் வழிகாட்டிக் கொண்டு செல்வது போல் இருக்கும். அதை ஆங்கிலத்தில் (subtext) என்பார்கள்
வேறு உதாரணம் போகாமல் எனது உனையே மயல் கொண்டு நாவலில்
குண்டல்ராவ் சொல்கிறான் ‘நான் அவுஸ்திரேலியாவுக்கு படிக்க வந்தபோது பண்ணை வேலைக்காரர் விருந்து வைத்தார்கள்.’
‘உன்னில் அவ்வளவு அன்பா’ என சந்திரன்
‘இல்லை நான் வெளிநாட்டுக்கு போவதையிட்டு சந்தோசத்தில்’
இந்த வசனங்களுக்கு பின்னால் பண்ணைத் தொழிலாளார்கள் குண்டல்ராவின் அதிகாரத்தின் கீழ் எங்வளவு துன்பப்பட்டிருந்தால் தாங்கள் சிறிய உழைப்பில் பெறும் பணத்தில் விருந்து வைத்திருப்பார்கள்? என்பது வசனங்களின் இடையில் எழுதப்படாத விடயம்.
……..
மறுவளம் என்பது மிகவும் சிறிதான புத்தகம். சிறிய கட்டுரைகளையும் ஆக்கங்களையும் கொண்டது. பல கட்டுரைகளை நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன் ஆனால் மேலோட்டமாக வாசித்தால் இரு மணித்தியாலத்தில் வாசித்துவிடலாம் ஆனால் ஒவ்வொரு கட்டுரையையும் படித்து விட்டு ஐந்து நிமிட இடைவெளியின் பின்பு அடுத்த கட்டுரைக்கு போனால் கட்டுரைக்கு பின்னால் எழுதப்படாத பல விடயங்கள் உங்களுக்கு புரியும்.
(27-10-2013 மேடையில் பேசியது)
மறுமொழியொன்றை இடுங்கள்