எகிப்தில் சில நாட்கள் 10: மண்மூடி மறைத்த புனிதத்தலம்

IMG_4836

நடேசன்

ஒவ்வொரு மதக் குழுவினருக்கும் தேவையானது தெய்வங்கள். அந்தத் தெய்வங்களின் மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளை உறுதியாக்குவதற்கு அவற்றைச் சுற்றி கர்ணபரம்பரையான கதைகள் பின்னப்படுகின்றன. இதற்கப்பால் பாமரமனிதர்களுக்கு அரூபமான(Abstract) சிந்தனை புரியாது என்பதால் மிகப் புனிதமானது என கருதப்படும் ஒரு வழிபாட்டுத்தலம் தேவையாகிறது. ஆற்றுப்படுகைகளில் மனித புறக்கலாச்சாரம் பிறந்து வளர்வது போல் அகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் நிலைபெறுவதற்கு இப்படியான விடயங்கள் தேவையாகிறது. முக்கியமாக மரணம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாத எதிரியாக இருக்கும்போது, மருத்துவம் விருத்தியடையாத ஆதிகாலத்தில் உயிர்ப்பாதுகாப்பு காப்புறுதி மதங்களின் பெயராலேயே பெறமுடியும் என்ற கருத்தியல் நிலவியது

இந்துக்களுக்கு காசி ,கத்தோலிக்கருக்கு வத்திக்கான் , யூதர்க்கு ஜெருசலேம் , இஸ்லாமியருக்கு மக்கா என்று புனித வழிபாட்டுத்தலங்கள் இருப்பதுபோல், எகிப்தியர்களுக்கு புனிதமானது கர்நாக் கோயில். அப்படி புனிதமான எல்லாவற்றிற்கும் ,முப்பாட்டன் போன்ற இடத்தில் நாம் நின்றோம்.

ஒரு விதத்தில் சிறுவன் ஒருவன் சில்லறைக் காசுடன் பட்சணக்கடைக்குள் நின்று எதை வாங்குவது என திணறுவதுபோல் நானும் எதைப் பார்ப்பது என்று யோசித்தேன். உண்மையில் என்னைப் போன்ற சாமானியர்களால் கர்நாக் கோயிலை பார்த்து முற்றாக புரிந்து கொள்ளுவது இயலாத காரியம்தான். கிட்டத்தட்ட ஒரு சதுர கிலோ மீட்டரில் பரந்து இருக்கும் இந்தக் கோயில் ஆயிரத்து ஐநூறு வருடங்களாக மத்திய காலத்து மன்னர்கள் தொடக்கம் கிரேக்க வம்சத்தில் வந்த தொலமி மன்னர்கள்வரை தொடர்ச்சியாக கட்டப்பட்டது. பல கோயில்கள் ஒன்றோடு ஒன்றாக அமைக்கப்பட்டது மட்டுமல்லாமல், சில பகுதிகள் அழிக்கப்பட்டு மீண்டும் உருமாற்றமான புதிய கட்டிடங்களையும் கொண்டுள்ளது. அதன் பின்பு ஆயிரம் வருடங்களுக்கு மேல் அவற்றை மண் மூடியிருந்தது. அகழ்வு செய்து வெளியே எடுத்து தற்பொழுது மீண்டும் பல மீள் உருவாக்கம் நடந்து கொண்டிருக்கிறது. முழுவதையும் ஒருநாளில் நடந்து பார்க்க முடியாதவாறு உல்லாசப்பிரயாணிகளுக்கு தடை செய்யப் பட்டிருந்தது. யானையைப் பார்த்த குருடர்கள்போல் சில பகுதிகளை மட்டுமே பார்க்க முடிந்தது.

வரலாற்றுக் காலத்தில் கார்நாக் கோயிலின் தலைமை மதகுருமார் பெரிய மடாதிபதியாகிறார்கள். மடாதிபதிகளில் சிலர் எகிப்தின் தென்பகுதியில் தங்களை அரசர்களாக பிரகடனப்படுத்தி அரசாண்டிருக்கிறார்கள். பல அரசர்கள் தங்களது பிள்ளைகளை சகோதரர்களை இந்தக் கோயிலில் மடாதிபதியாக்கி இருக்கிறார்கள். நூபியாவில் இருந்து வந்த அரசனான பை (Piye) தனது சகோதரியை கோயிலுக்கு பொறுப்பாக்கி இருந்தான். இந்தப் பதவியானது கடவுளுக்கு சேவை செய்வதோடு கோயில் சொத்துக்கள், நிலங்கள் அதில் இருந்து வரும் விளைபொருளுக்கு பொறுப்பாளர்களாக்கியது. விவசாயப் பொருட்களை பண்டமாற்று செய்த சமூகத்தில் இந்தப் பதவி மூலம் செல்வம் மட்டுமல்ல அதிகாரமும் செல்வாக்கும் உருவாகிறது.

இவ்வாறு மதகுருமாரால் உருவாக்கப்பட்ட வம்சம் (அரசவம்சம்- 21) எகிப்திய வரலாற்றில் கிட்டத்தட்ட 65 வருடங்கள்(1080-945 BC ) தீப்ஸ்சை தலை நகராக கொண்டு ஆண்டுவந்துள்ளது. இவர்கள் காலத்தில் எகிப்து நலிவடைந்தமையால் அங்கிருந்த மன்னர்களின் சமாதிகளுக்கும் பாதுகாப்பு குறைந்தது. இதனால் தீப்ஸ் பிரதேசத்தில் மம்மிகள் இருந்த சமாதிகள் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டதால் பல சமாதிகளில் இருந்து மம்மிகள் அகற்றப்பட்டு அவைகள் அனைத்தும் ஒரு பெரிய சமாதியில் சேர்க்கப்பட்டன.

இந்தக்காலத்தில் வட எகிப்தில் ரனிஸ்(Tanis ) என்னும் நகரத்தில் இருந்தும் வேறுசிலர் ஆட்சி செய்தார்கள். இவர்களில் சியாமம் (Siamum 978-959BC தனது மகளை பாலஸ்தீனத்தை ஆண்ட டேவிட்டின் மகனாகிய சொலமனுக்கு மணம் செய்து வைத்ததாக பைபிள் கூறுகிறது. இதன்மூலம் எகிப்திய பெண்கள் முதல் தடவையாக வெளிநாட்டில் திருமணம்செய்த தகவலை தெரிந்துகொள்ளமுடிகிறது.

எகிப்தில் பெண்வழி முறையான அரசவம்சமே பலகாலமாக இருந்தது. அதாவது எகிப்திய இராஜவம்சத்தில் வந்த பெண்ணைத் திருமணம் செய்வதன் மூலம் அரசராகும் வழக்கம் தோன்றுகிறது. மிகப் பிரபலமான அரசனான துட்டன்காமன் தனது சகோதரியை (ஒரே தந்தை இரண்டு தாய்) மணம் முடித்தது வரலாறு. இப்படியாக நடைமுறை இருந்ததால் எகிப்திய இராஜவம்சப் பெண்கள் வெளிநாட்டில் மணம் முடிப்பதில்லை இதனால்தான் சொலமன் திருமணம் செய்தது மிகவும் புதுமையானது என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. அதேவேளையில் இக்காலம் எகிப்து இரண்டாக பிரிந்து இரண்டு அரசர்களால் ஆளப்பட்டது..

எகிப்திய மதகுருமார் தங்களது கடமையை தொழிலாக செய்கிறார்கள். தகப்பன் இறந்த பின்பு அந்தப் பதவி மகனுக்கு கிடைக்கிறது. இவர்கள் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாகவோ ,இறைநம்பிக்கை உடையவர்களாக இருக்கத் தேவையில்லை. மேலும் இவர்களைப் பொறுத்தவரை எகிப்தில் இவர்களே கல்வியறிவு பெற்றவர்கள். இதனால் மந்திரம் , மாயஜாலம் மற்றும் மருத்துவத்தை இவர்களே படித்து அறிந்தவர்களாக இருந்தார்கள். இதனால் வேற்று நாட்டவர்கள் எகிப்தை ஆண்டகாலத்திலும் இவர்கள் முக்கியத்துவம் பேணப்பட்டது. எகிப்தை கிரேக்கர்கள் ஆண்ட பிற்காலத்திலும் இவர்களே படித்தவர்களாக இருந்ததால் அரச உத்தியோகத்தில் பெரும்பகுதியை இவர்களே வகிக்க வேண்டி இருந்தது. இதனாலே அலக்சாண்டர் , தொலமி போன்றவர்கள் தொடர்ச்சியாக கோயில்களைக் கட்டியும் கோயில்களுக்கு பொருட்களைக் கொடுத்தும் ஏற்கனவே இருந்தவற்றை பராமரித்தும் வந்தார்கள்.

எகிப்தியரின் முக்கிய மூன்று தெய்வங்களான ஆமுன் ,முட், கோன்சு ஆகியவற்றுக்கான கோயில்கள் இங்கேயுள்ளன. ஆமூன்-ரேயின் கோயிலுக்குள் மட்டுமே எம்மால் செல்ல முடிந்தது. ஏனையவை உல்லாசப்பிரயாணிகளுக்கு மூடப்பட்டிருந்தன.

IMG_4824

நாங்கள் உள்ளே சென்ற பாதையின் இருபுறமும் ஆமூன் தெய்வத்தை பிரதிபலிக்கும் இரண்டு கொம்புகள் கொண்ட ஆட்டுக்கடா முகத்துடன் ஸ்பின்ஸ்கள் வரிசையாக வாசலில் இருந்தன. இந்த ஸ்பின்ஸ்கள் அக்காலத்தில் மூன்று மைல் தூரத்தில் உள்ள லக்சர் கோயில் வரையும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து இருக்கும் பைலோன் எனப்படும இராட்சத நுழைவாயில் உள்ளது. ஸ்பின்ஸ்கள் மற்றும் நுழைவாயிலை அமைத்தவர்கள் 24-25 ஆவது இராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள். எகிப்திய வரலாற்றில் இவர்களை கறுத்த அரசர்கள் (Black Pharaohs) எனச் சொல்வதுண்டு. இவர்கள் தற்போது சூடான் அமைந்துள்ள பகுதியில் இருந்து வந்தவர்கள். இவர்களை நூபியர்கள் என எகிப்தியர் கூறுவார்கள்.அஸ்வான் அணைக்கு தெற்கான பிரதேசம் அக்காலத்து நூபியா எனப்படும் என்றும் மற்றும் சில குறிப்புகளில் எத்தியோப்பிரென கூறுவதும் உண்டு. பைபிளில் இந்த பிரதேசத்தை குஸ்(KUSH) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூபிய வம்சத்தில் வந்த ரகரக் (taharaqa 690-664BC ) எகிப்தை ஆண்டபோது இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக (Assyrians)அசிரியர்களுடன் யுதேயா போரிட்டபோது எகிப்திய படைகள் தோற்கும் தருணத்தில் இருந்தன. அப்பொழுது இரவில் கடவுளின் தூதர்கள் வந்து அசிரியர்களை கொன்று குவித்ததாக பைபிள் கூறுகிறது. அதேவேளையில் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடற்ரஸ்(Herodotus) பாலைவனத்து எலிகள் இரவில் வந்து வில்லினது தோல் நாணையும் தோலால் அமைந்த போர்க்கவசத்தையும் கடித்து நாசமாக்கியதால் அசிரியர்கள் ரகரக்கின் படைகளிடம் தோற்றதாக கூறுகிறார். இரண்டு வருடங்களின் பின்பு அசிரியர் எகிப்தில் வந்து நூபியர்களை தோற்கடித்து தீப்பஸ்சை கொள்ளையடித்து நாசமாக்கியதோடு பெரும்பாலான அரசவம்சத்தினரை கொலை செய்தனர்.

நூபியர்களுக்கு முன்பாக லிபியாவை சேர்ந்தவர்கள் எகிப்தை கிட்டத்தட்ட இருநூறுவருடங்கள் ஆண்டார்கள். இவர்கள் 22 ஆம் இராஜவம்சத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கட்டிய பெரிய மண்டபம் அழிந்து போனாலும் எஞ்சியிருந்த மிகப்பெரிய தூண் இன்னமும் கார்னக் கோயிலில் நிற்கிறது. இவர்கள் லிபிய வம்சத்தில் வந்தாலும் எகிப்தில் பல தலைமுறையாக வசித்தவர்கள். இவர்களில் பலர் இராணுவத்தில் இருந்தனர். இப்படிப்பட்டவர்களில் வந்த ஷெஷொங் (Sheshong ) எகிப்தை ஒன்றாக்கி அரசாண்டபோது யுதேயா ,சிரியா போன்ற அரசுகளின் மேல் படை எடுத்தான்.
யூத குல அரசர்களில் டேவின் சொலமன் இருவரும் முக்கியமானவர்கள் என்பது பைபிளை வாசித்தவர்களுக்குத் தெரியும். இவர்கள் ஜேக்கப்பின் பிள்ளைகள் வழிவந்த பன்னிரண்டு வம்சங்களை உள்ளடக்கிய பிரதேசத்தை ஆண்டார்கள். சொலமனின்( முஸ்லீம்கள் சுலைமான் என்பார்கள்) காலத்தில் ஜெருசலேமில் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் ஒன்றே யூதர்களது தனிப்பெரும் கோயிலாக கருதப்பட்டது. இதுதான் யாவேயின்(Yahweh) ஒரே இல்லமாக கருதப்படும்.

ஆரம்பத்தில் யாவேவை மட்டும் வழிபட்ட சொலமன் பல தேசங்களின் இளவரசிகளை மணந்ததால் பிற்காலத்தில் பல்தெய்வ வணக்கத்திற்கு துணை போனதாக பைபிளில் சொல்லப்படுகிறது. இதனால் யாவே , சொலமன் காலத்தின் பின்பு யூத அரசை இரண்டாக பிரிக்க வைத்தாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பன்னிரண்டு வம்சத்தினரின் சண்டையே பிரிவுக்கு காரணம் என்பது வரலாற்று ஆசிரியர்களின் முடிவு.

சொலமன் மன்னன் இறந்ததும் சொலமனின் மகனாகிய ரிஹோபோம் (Rehoboam) எதிராக ஜெருபம் (jeroboam) என்பவனின் தலைமையில் கலகம் செய்வதாகவும் பின்பு பலஸ்தினம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. தென்பகுதி யுதேயா எனவும் வடபகுதி இஸ்ரேல் எனவும் பிரிக்கப்பட்டு ஜெருபம் (jeroboam) இஸ்ரேலை ஆள்வதாகவும் சொலமனின் மகன் ரிஹோபோகம் (Rehoboam) யுதேயாவை ஆண்டதாகவும் பைபிளில் சொல்லப்படுகிறது.

ஜெரூபம் எகிப்தில் ஷெஷோங்கின் மாளிகையில் வளர்ந்து பிற்காலத்தில் வடபகுதியான இஸ்ரேலை ஆண்டதாகவும் மேலும் ஜெருபத்திற்கு அதரவாகத்தான் ஷெஷோங்கின் படையெடுப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஷெஷொங் படை யூதேயா அரசின்மீது படை எடுத்த போது ஜெருசலேம் கோயிலில் உள்ள விலை உயர்ந்த பொருட்களுடன் அரசமாளிகையில் உள்ளவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றிய பைபிளின் குறிப்பில், யூதேயா அரசனாக இருந்த ரிஹோபோகம் (Rehoboam) ஷெஷொங்கின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்ப ஏராளமான செல்வத்தை கொடுத்து யூதேயா அரசைக் காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது. இதைவிட முக்கியமான விடயம் ஷெஷாங் பல விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்ற போது மோஸசின் பத்துக்கட்டளைகள் அடங்கிய பெட்டியை விட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் கர்நாக் கோயிலில் ஷெஷோங்கின் படையெடுப்பின் விவரங்களைக் குறிப்பிட்டு 150 நகரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் யூதேய அரசனும் அதில் கைப்பற்றப்பட்டதாக குறிப்பு உள்ளது.

இரண்டாவது நுழைவாசல் இராட்சத தூண்கள் கொண்ட பகுதியில் ஹைப்போஸ்ரையில் ஹால் (hypostyle hall) உள்ளது. இது மகா இராம்சியாலும் அவரது தந்தை சேத்தி-11 யாலும் கட்டப்பட்டது

மிக உயரமான மகா இராம்சியின் சிலை கார்னக் கோயிலில் அமைந்துள்ளது அந்த சிலையில் இராம்சியின் மகள் காலுக்கு கீழ் சிலையாக நிற்பது மிகவும் வித்தியாசமானது. எகிப்திய வரலாற்றில் பல இராம்சிகள் இருந்தாலும் மகா இராம்சி என்றால் இராம்சி- 11ஐ குறிக்கும்.

IMG_4807
இராம்சியை பற்றிய குறிப்பை இந்தத்தொடரில் பிற்பகுதியில் சொல்வேன். ஆனாலும் இந்த சிலையில் மகளும் இருப்பது புதிய அனுபவமாக இருந்தது. எவ்வளவு பெரிய மன்னராக இருந்தாலும் குழந்தைப்பாசம் அதிலும் தந்தை மகள் பாசம் என்பது எவ்வளவு ஆழமானது என்பதைக் குறியீடாக அந்த சிலை சுட்டிக்காட்டுகிறது என நினைத்தேன்.
IMG_4811

கார்நாக் கோயிலின் உள்ளே எகிப்தை ஆண்ட முக்கியமான பெண் ஹாற்ஷெப்சுற் அரசியால் (1473 -1458 BC). எழுப்பப்பட்ட ஓப்லிஸ்க் 97 அடி உயரத்திலும் அதற்கு சிறிது தூரத்தில் அவரது தந்தையால் ரற்மோசிஸ்1 எழுப்பிய 75 அடி உயரமான சிறிய ஓப்லிஸ்க் உள்ளது.
‘இந்த ஓப்லிஸ்க் சின்னம் ஆண்டவன் ஆமுனுக்காக கொடுக்கப்பட்டது. மேலும் இதன் முனைகள் எலக்றத்தால் (Electrum- தங்கமும் வெள்ளியும் கலந்த கலவை) எப்பொழுதும் பிரகாசிக்கும் என்பதை இதைப் பார்ப்பவர்கள் அறிய வேண்டும் என பண்டைய எகிப்திய மொழியில் எழுதப்பட்டதாக அறிந்தேன். ஒப்லிக்ஸ் சின்னத்தின் ஒரு பாகம் உடைந்து அதன் அருகே நிலத்தில் துண்டாகக் கிடந்தது.
நமது கர்ப்பகிருகம் போன்ற இருளடைந்த அறையிலே ஆமுன்-இராவின் பீடம் மட்டும் பார்க்க முடிந்தது.

தெய்வங்கள் மதகுருமார் தீர்த்தமாடுவதற்காக தடாகமும் இருந்தது. அதைச் சுற்றி பலர் அமர்வதற்கு ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாம் சென்ற இரவு நேரத்தில் வண்ண விளக்குகளுடன் கார்நாக் கோயிலைப் பற்றிய ஒலி ஒளி விளக்கம் நடந்தது.அதனால் பல விடயங்களை புரிந்து கொள்ள முடிந்தது

ரோம இராச்சியம் கிறீஸ்துவத்தை அரசமதமாக ஏற்றுக்கொண்ட பின்பு கொன்சன்ரைன் (constantius 11) காலத்தில் மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை மூடிவிட உத்தரவிட்டகாரணத்தால், எகிப்தின் பல கோயில்கள் கைவிடப்பட்டன. இவ்வாறு பராமுகமாக்கப்பட்ட இக்கோயில்கள் மீது மண் படிந்து மறைந்தன.

இந்தக் கோயிலை பார்த்த பின்னர், மதகுருமார்களும் அவர்களது வாழ்க்கைமுறையும் நமது பிராமணர்களை ஒத்து இருப்பதையும் இந்தக் கோயில் அமைப்பு அடிப்படையில் இந்துக் கோயில்களை போன்றதுதான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“எகிப்தில் சில நாட்கள் 10: மண்மூடி மறைத்த புனிதத்தலம்” மீது ஒரு மறுமொழி

  1. அரிய தகவல்கள். பழைய ஏற்பாட்டின் பல சரித்திரங்களைச் சொன்னது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: