புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை

திரும்பிப்பார்க்கின்றேன் — 11 -முருகபூபதி
.

இலங்கை மணித்திரு நாடெங்கள் நாடே பாடிய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
Pullavar Mani

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இடியப்பச்சிக்கலைப்போன்றது. 1972 இல் அந்த இடியப்பத்தை பிழிந்தவர் சட்டமேதை கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா. அறுதிப்பெரும்பான்மையுடன் 1970 இல் ஸ்ரீமாவின் தலைமையில் பதவிக்குவந்த கூட்டரசாங்கம் 1972 இல் உருவாக்கிய ஜனநாயக சோஷலிஸ குடியரசு அரசியலமைப்புத்தான் அந்த சிக்கலான இடியப்பம்.
இன்றுவரையில் எத்தனையோ உயிர்களை காவுகொண்டபின்னரும் சிக்கல் தீரவில்லை.

எதிர்காலத்தில் வரக்கூடிய பாரிய நெருக்கடிகள் இழப்புகளை கருத்தில்கொண்டு தீர்க்கதரிசனமான ஒரு முடிவுக்கு வந்தது எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம் இலங்கையில் பல மாநாடுகளையும் இலக்கிய ஆய்வரங்குகளையும் நடத்தியிருக்கிறது. இலங்கையின் தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட பல படைப்பாளிகளும் இச்சங்கத்தில் இணைந்திருந்தமையினால் 1972 இல் உருவான புதிய அரசியல் அமைப்பு எதிர்காலத்தில் தோற்றுவிக்கவுள்ள பாரிய நெருக்கடிகள் தொடர்பாக ஆராய்ந்து தேசிய இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வாக 12 அம்ச திட்டk; தயாரித்து இரண்டு நாள் மாநாட்டை கொழும்பில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது.

இக்காலப்பகுதியில் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராக நான் இணைந்திருந்தபொழுது குறிப்பிட்ட தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு 1975 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியும் அதற்கு மறுநாள் ஜூன் 1 ஆம் திகதியும் நடைபெற்றது.

குறிப்பிட்ட 12 அம்சத்திட்டம் மூவின மக்கள் பல அமைச்சர்கள் பல தலைவர்கள் தமிழ் சிங்கள் முஸ்லிம் படைப்பாளிகள் முன்னிலையில் அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடம் கையளிக்கப்பட்டது. குறிப்பிட்ட திட்டங்களுக்கு அனைத்துக்கட்சிகளினதும் ஆதரவைத்திரட்டிக்கொண்டுவாருங்கள் என்று ஸ்ரீமாவோ சொன்னார்.
ஆனால் அந்த முயற்சியில் அரசியல் கட்சித்தலைவர்களுடன் ஒரு நல்ல உடன்பாட்டிற்கு வரவே முடியவில்லை.

பின்னர் குறிப்பிட்ட 12 அம்சத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு பல முக்கியஸ்தர்களின் மேலதிக ஆலோசனைகளும் இணைத்துக்கொள்ளப்பட்டு மற்றுமொரு மாநாடு கொழும்பு கோட்டையில் இஸ்லாமிய கலாசார நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடந்தது.

அரசிடம் கையளிக்கப்பட்ட புதிய யோசனைகளில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அறிஞர்கள் மார்க்கத்தலைவர்கள் படைப்பாளிகள் தொழிற்சங்கத்தலைவர்கள் உட்பட பலர் கையொப்பம் இட்டிருந்தனர்.இன்றிருப்பதுபோன்ற ஹெலஉருமைய பொதுபலசேனா இராவணபலய போன்ற தீவிர இனவாத சக்திகள் அன்றிருக்கவில்லை. பௌத்த பிக்குகள் அரசியல் பேசினாலும் பாராளுமன்றத்தினுள் பிரவேசித்திருக்கவில்லை.

ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் தமக்கு கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை இழந்தார்கள். தமிழ்மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யத்தவறினார்கள்.ஆனாலும் தேசத்தின் நலன் தமிழ்மக்களின் உரிமைகளை கவனத்தில்கொண்டு அறிஞர்கள் பெருமளவு அங்கம்வகித்த குறிப்பிட்ட மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஒருவர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை.

கிழக்கு மாகாணத்திலிருந்து அவர் கொழும்புக்கு வந்தால் தங்குவது அவரது நீண்ட கால நண்பர் கிழக்கிலங்கை காகித ஆலை கூட்டுத்தாபனத்தின் தலைவர் கே.ஸி. தங்கராசா அவர்களின் இல்லத்தில்தான்.
மேலேகுறிப்பிட்ட அரசிடம்கையளிக்கப்பட்ட தீர்வு யோசனைகளில் தங்கராசாவும் புலவர்மணியும் ஒப்பமிட்டிருந்தனர்.

புலவர்மணியை மாநாநாட்டில் சந்தித்து பேசியிருந்தேன். அவரை பேட்டி காணவேண்டும் எனச்சொன்னதும் அருகே நின்ற பெரியவர் கே.ஸி. தங்கராசா தனது முகவரி தந்து வீடுக்கு அழைத்தார்.

தங்கராசா அவர்கள் கிழக்கிyங்கை காகித ஆலை கூட்டுத்தாபனத்தில் தலைவராக பணியிலிருந்தபொழுது சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர். ஒரு சமயம் நிதி அமைச்சர் கலாநிதி என்.எம்.பெரேராவும் பாராளுமன்றத்தில் அந்தப்பெரியவர் பற்றி விதந்துபேசியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையின் அதிபராகவும் விளங்கியவர். இவரைப்பற்றி மல்லிகை ஜீவா நினைவுகள் நூலிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்.
மெலிந்த நெடிய தோற்றமும் தீட்சண்யமான கண்களும்கொண்ட புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களை தங்கராசா அவர்களின் பம்பலப்பிட்டி இல்லத்தில் ஒரு முற்பகல் வேளையில் சந்தித்தேன்.

இலங்கைமணித்திருநாடெங்கள் நாடே என்ற பாடலை இயற்றியுள்ள புலவர்மணி அன்று எனக்கு அந்தப்பாடலை ராகத்துடன் பாடியும் காண்பித்தார். அருகேயிருந்த தங்கராசா கண்களை மூடியவாறு அவரது குரலை ரசித்தார்.

முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா பிறந்த நாளன்றே தாமும் பிறந்ததாகச்சொன்னார். மண்டுரில் ஆரம்பக்கல்வி. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையுடன் சக மாணவன். அக்காலத்தில் தன்னையும் பண்டிதமணியையும் இரட்டையர்கள் என அழைப்பார்கள் என்று அவர் சொன்னபொழுது அவரது முகத்தில் பெருமிதம் படிந்திருந்தது.
1917 -1921 காலப்பகுதியில் சுவாமி விபுலானந்தருடனும் நட்புறவு பாராட்டியிருக்கிறார்.
இளங்கன்று பயமறியாது என்பார்கள். துணிவு தீவிரம் வேகம் என்பன இளம்பராயத்து குண இயல்புகள்.
1921 இல் இந்தியாவுக்குச்சென்றார். அங்கு மகாத்மா காந்தியின் அகிம்சைப்போராட்ட இயக்கத்துடன் இணைந்தார். ஐந்து ஆண்டுகளில் தாயகம் திரும்பி திருகோணமலை இந்துக்கல்லூரி கத்தோலிக்க ஆசிரிய பயிற்சிக்கல்லூup மட்டக்களப்பு அரசினர் உயர்தரக்கல்லூரி ஆகியனவற்றில் விரிவுரையாளராக பணியாற்றியிருக்கிறார்.

மகாத்மா காந்தி 1928 இல் இலங்கைக்கு வருகைதந்தபொழுது அவரை வரவேற்று புலவர்மணி பாடிய வெண்பா மிகவும் முக்கியமானது என தமது மட்டக்களப்பு தமிழகம் நூலில் பண்டிதர் வீ.சி.கந்தையா அவர்கள் பதிவுசெய்துள்ளார்.
மதுரகவி சித்தாந்தஞானபானு முதலான பட்டங்களை அவர் பெற்றிருந்தாலும் புலவர்மணி என்ற பட்டமே அவரை அடையாளப்படுத்துகிறது. 1950 இல் மட்டக்களப்பு கலைமன்றம் தமக்கு அந்தப்பட்டம் வழங்கி கௌரவித்தது என்றார். அத்துடன் மேலும் சில தகவல்களையும் சொன்னார்.
இலங்கை கலைக்கழகத்தில் அவரை இணைத்துவிட்டவர் அறிஞர் ஏ.எம். ஏ. அஸீஸ். (அஸீஸ் கொழும்பு சாகிராக்கல்லூரியின் அதிபராகவும் செனட்டராகவும் விளங்கியவர்)
இலங்கை வானொலி கல்விச்சேவை அரச கல்வி விதானச்சபை முதலானவற்றிலும் புலவர்மணி ஆலோசகராக பணியாற்றியவர்.
இலங்கை மணித்திரு நாடெங்கள் நாடே என்ற பாடலை தாம் 1926 ஆம் ஆண்டு இயற்றியதாகச்சொன்னார். பகவத்கீதை வெண்பா கர்மயோகம் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இதில் கர்மயோகம் நூலுக்கு சாகித்தியவிருதும் பெற்றவர். கொழும்புத்துறை யோகர்சுவாமிகளுடனும் நட்புறவுகொண்டிருந்தவர்.
இலங்கையின் தேசிய இனங்கள் தத்தமது தனித்துவத்தை பேணிக்காத்து ஒருமைப்பாட்டை வளர்க்கவேண்டும் என்றும் கொள்கை கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மனிதவேறுபாடுகள் முற்றாக தவிர்க்கப்படவேண்டும் என்றார்.

உள்ளதை உள்ளபடி விமர்சிக்கும் பண்பு விமர்சகர்களிடம் வளரவேண்டும். அத்தகைய வளர்ச்சியைத்தான் தன்னால் மதிக்கமுடியும் என்றும் முகத்திற்காக புகழுரையாற்றுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அழுத்தமாகச்சொன்னார்.

அவருடனான நேர்காணல் பின்னர் மல்லிகையில் அவருடைய அட்டைப்படத்துடன் வெளியானது. மல்லிகைக்காக பலரை சந்தித்து அட்டைப்பட அதிதி கட்டுரைகள் பல எழுதியிருக்கின்றேன்.

எனினும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பொதுவாழ்வில் இயங்கவேண்டும் என்ற பாலபாடத்தை நான் புலவர்மணி அவர்களிடம்தான் கற்றேன்.

புலவர்மணியுடனான எனது நேர்காணல் தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவிலும் பதிவுசெய்திருக்கிறார்கள் என்ற தகவல் எனக்கு சமீபத்தில்தான் கிடைத்தது.

புலவர்மணியின் நினைவாக அவரது பெயரில் குருக்கள்மடத்தில் ஒரு பாடசாலை இயங்குகிறது. சுனாமி கடற்கோளில் முற்றாகச்சேதமடைந்த இப்பாடசாலையை யுனிசெப் நிறுவனம் புனரமைத்துக்கொடுத்துள்ளது.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு காணப்படல் வேண்டும் என்ற கனவில் புலவர்மணி வாழ்ந்தார். ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளும் தீவிர இனவாத மற்றும் குறுகிய சிந்தனையுள்ள சக்திகளும் அந்தக்கனவை தொடர்ந்தும் நிர்மூலம் செய்துவருவதுதான் காலத்தின் சோகம்.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.