எங்கள் நாட்டின் தேர்தல்

சொல்லவேண்டிய கதைகள்

download

முருகபூபதி

தேர்தல் என்றவுடன் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றித்தான் ஏதோ சொல்லப்போகின்றேன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றவுடனேயே எனது தாயகம் எனக்கு இரவல்தாய் நாடாகிவிட்டது. அதனால் இலங்கையில் நடக்கும் தேர்தல்கள் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையில்லை.
ஆனால் அங்கு வாழ்ந்த காலத்தில் தேர்தல்களும் பார்த்து வாக்கும் அளித்து இடதுசாரிகளுக்காக மேடையேறிப்பேசியும் ஒய்ந்து ஓடிவந்துவிட்டாலும்;, தாயகம்மீதான பற்றுதல் எள்ளளவும் குறையவில்லை.
அங்குவந்தால் நிற்பதற்கு ஒரு மாதகாலம்தான் விசா. மேலும் தரித்து நிற்பதாயின் தினமொன்றுக்கு குறைந்தது 75 ரூபாயாதல் வாடகை செலுத்தவேண்டும். அதனால்தான் இலங்கை எனக்கு வாடகை செலுத்தும் இரவல் தாய்நாடாகிவிட்டது. எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்று புகலிட நாடுகளில் வதிவிட உரிமை பெற்ற அனைத்து இலங்கையர் நிலையும் இதுதான்.

இலங்கையில் பலவருடங்களாக தாமதித்துக்கொண்டிருந்த வடமாகாண சபைத்தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே அதாவது செப்டெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தேர்தல் நடந்து முடிந்து லிபரல் கட்சியின் ரோனி அப்பட் 28 ஆவது பிரதமராக தெரிவாகிவிட்டார்.

இந்த நாட்டில் தேர்தல் வருவதுபற்றியோ வெற்றி தோல்விகள் பற்றியோ பொதுமக்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதனால்தான் இங்கு ஜனநாயகம் வாழ்கிறது, மதிக்கப்படுகிறது என நினைக்கின்றேன்.
அவுஸ்திரேலிய பிரஜைகள் வாக்களிக்கத் தவறினால் அதற்காக தண்டப்பணம் செலுத்த நேரிடும். தேர்தல் சமயத்தில் வெளிநாடுகளில் இருந்தால் அங்குள்ள அவுஸ்திரேலிய தூதரகம் சென்று வாக்களிக்கவேண்டும். சுகவீனமுற்று வாக்களிக்கத்தவறினால் மருத்துவ சான்றிதழ் அனுப்பவேண்டும். அல்லது முன்னதாகவே தபால் மூலம் வாக்களித்துவிடவேண்டும்.

எவரும் ‘கள்ளவோட்’ போட முடியாது.

இலங்கையில் 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மத்தியில் நடந்த வேட்பாளர் தெரிவின்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பீட்டர் கெனமனின் வாக்கினை அவர் தேர்தல் சாவடிக்கு வருமுன்னரே யாரோ வந்து போட்டுவிட்டுப்போய்விட்ட தகவலையும் இங்கு சொல்லிவிடுகின்றேன்.

சிங்கப்பூரில் நடந்த தனது மூத்த சகோதரியின் மரணச்சடங்கிற்கு சென்ற எனது மனைவிக்கு நினைவூட்டி, அவரை அங்குள்ள தூதரகத்தில் வாக்களிக்கச்சொன்னேன்.

அவுஸ்திரேலியாவில் நான் தற்பொழுது வாழும் புதிய பிரதேசம் மோர்வல் என்ற இடத்தில் எங்கே வாக்களிப்பு நிலையங்கள் இருக்கின்றன என்ற விபரத்தை கணினியில் கண்டுபிடித்தேன். தேர்தலுக்கு முதல் நாள் கண்ணில் லேசர் சிகிச்சை நடந்தமையினால், வரைபடத்தில் வீதிகளை கண்டுபிடிப்பதில் சிரமப்பட்டேன்.

தெருவுக்குச்சென்று யாராவது கண்ணில் தென்படுபவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம் என்றால், எங்கள் தெருவில் ஆட்களின் நடமாட்டமே இல்லை. பெயர் தெரியாத பட்சிகள்தான் பறந்துகொண்டிருந்தன.

அடுத்த தெருவில் ஒரு பெரிய கட்டிடமும் மைதானமும் கண்களில் தென்பட்டன. பெரும்பாலும் அது ஒரு பாடசாலையாக இருக்கலாம் என நம்பிக்கொண்டு அங்கே வாக்குச்சாவடி இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றேன். எனது கணிப்பு பொய்த்தது. டெனிஸ், உதைபந்தாட்டம் நடக்கும் இடத்துக்கு வந்துள்ளேன். சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.
பட்சிகள்தான் தென்படுகின்றன. அவை கொடுத்துவைத்தவை அவற்றுக்கு பிரஜா உரிமையும் இல்லை வாக்களிப்பும் இல்லை. வாழ்விடமும் இல்லை. என்னே சுதந்திரம்.

மைதானம் அருகே ஒரு கார் மாத்திரம் நின்றது. அருகே சென்றேன். உள்ளே ஒரு இளைஞன் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். என்னைக்கண்டதும் காரின் கண்ணாடியை தாழ்த்தியவாறு தொலைபேசியில் பேசியதையும் நிறுத்தினான்.

“ தேர்தலுக்கு வாக்களிக்க வேண்டும். இடம் தெரியவில்லை.” என்றேன்.

தானும் இடத்தை தேடிக்கொண்டு வந்ததாகச்சொன்னான். யாரோ நண்பனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு இடத்தை தெரிந்துகொண்டிருப்பதாகவும் சொன்னான். பிறகு என்னை தனது காரில் ஏறச்சொன்னான்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவனது முகத்தில் கருணையிருந்தமையால் தயக்கமின்றி ஏறி அமர்ந்தேன்.
ஐந்து நிமிடத்தில் என்னை வாக்குச்சாவடி அமைந்துள்ள ஒரு பாடசலைக்கு அழைத்துவந்துவிட்டு அவனும் என்னுடன் வரிசையில் நின்றான். அவனுக்கும் தேர்தலில் யார் வென்றாலும் மகிழ்ச்சியில்லை. எவர் தோற்றாலும் கவலை இல்லை.
தேர்தலில் வாக்களிக்கத்தவறினால் சுமார் $150 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ( இலங்கை நாணயத்தில் சுமார் பதினெட்டாயிரம் ரூபா) தண்டப்பணம் செலுத்த நேரிடும் என்ற கவலைதான் இருந்தது.
அந்த வரிசையில் நிற்கும்பொழுது இறைச்சி வாட்டும் மணம் வந்தது. திரும்பிப்பார்க்கின்றேன். இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சிறிய கடைவிரித்து பாணுக்குள் வைத்துக்கொடுக்கும் ஹொட்டோக் வாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கோப்பி, தேநீர் குளிர்பாணமும் விற்பனைக்கு இருந்தன. வரிசையில் நின்ற சிலர் பணம்கொடுத்து வாங்கி உண்டவாறு உரையாடினார்கள்.

தேர்தலில் போட்டியிடும் பிரதான தொழிற்கட்சி, லிபரல்கட்சி மற்றும் இதர கட்சிகளின் வேட்பாளர்களின் படங்கள் அச்சிடப்பட்ட பிரசுரங்களை அந்தந்தக்கட்சிகளின் ஆதரவாளர்கள் விநியோகித்துக்கொண்டு நிற்கிறார்கள். தமது கட்சி பதவிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதுபற்றிய அவர்களது சுருக்கமான தேர்தல் விஞ்ஞாபனம் அந்தப்பிரசுரங்களில் அச்சாகியிருந்தன.
எல்லோருடை முகங்களிலும் புன்னகை. எதிர் எதிர் அணியினராகவிருந்தாலும் பரஸ்பரம் சுகம் விசாரிக்கின்றனர். பருவகாலம் பற்றி உரையாடுகின்றனர். எவரும் அரசியலும் பேசவில்லை, தமது கட்சிக்காரருக்குத்தான் வாக்களியுங்கள் என்று கோரவும் இல்லை.
வாக்களித்துவிட்டு வெளியே வந்தால், வந்ததற்கு நன்றியும் சொன்னார்கள். எந்தவொரு வாக்குச்சாவடியிலும் பொலிசார் கண்களில் தென்படவேயில்லை. தெருக்களிலும் பொலிசாரின் நடமாட்டம் இல்லை.
கடந்த 25 வருடகாலத்தில் இந்தப்பெரிய கண்டத்தில் பல பாராளுமன்ற மற்றும் மாநிலத்தேர்தல்களை பார்த்துவிட்டேன். வழக்கம்போலவே அமைதியாக ஒவ்வொரு தேர்தலும் நடந்து முடிகிறது. தேர்தல் நடந்த நாளன்று இரவு தொலைக்காட்சியில் முடிவுகளைப்பார்த்துவிட்டு மக்கள் நித்திரைக்குப்போகிறார்கள். பலர் அதனையும் பார்ப்பதில்லை.
தேர்தலுக்காக யாரும் உயிரை விட்டதும் இல்லை. இரத்தம் சிந்தியதும் இல்லை. எந்தவொரு தீவைப்புச்சம்பவமோ தாக்குதல் சம்பவமோ நடைபெறவும் இல்லை.

முன்னாள் பிரதமர் கெவின் ரட் தேர்தல் முடிவு தெரிந்ததும் வாக்காளர்களிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு, கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்தும் தாம் விலகுவதாகச்சொல்லி சிரித்த முகத்துடன் விடைபெற்றார்.
தேர்தலில் வெற்றிபெற்ற ரொனி அப்பர்ட், நாட்டை தொடர்ந்தும் அபிவிருத்திப்பாதையில் அழைத்துச்செல்வதாகச்சொன்னார்.
அவர்களின் உரைகளை தொலக்காட்சியில் பார்த்துவிட்டு நானும் உறங்கச்சென்றேன். மறுநாளும் வழக்கம்போல் விடிந்தது.
பட்சிகள் எனது வீட்டு முற்றத்தில் எதனையோ கொத்தி கொரித்துக்கொண்டிருந்தன.
இனி இந்தக்கதையை எமது இலங்கையின் தேர்தல்களுடன் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள். இலங்கைத்தேர்தல்கள் பற்றி எனக்குச்சொல்ல அருகதையே இல்லைத்தானே. எனது தாயகமே… எனது இரவல் தாய்நாடே… உன்னை நினைத்து என்னால் மனதுக்குள் அழத்தான் முடிகிறது.

நன்றி : ஜீவநதி (யாழ்ப்பாணம்) அக்டோபர் 2013

“எங்கள் நாட்டின் தேர்தல்” மீது ஒரு மறுமொழி

  1. என்னிடம் ஒரு பழக்கம் (சிலரது பார்வையில் வேலையில்லாதவன்) கையில் கிடைக்கும் நல்ல தரமான பத்திரிகைகளையோ, சஞ்சிகைகளையோ உடனடியாக வாசித்து விடுவேன். யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்படும் காவற்கோபுரம் (வெளியீடு 15.12.2010) பத்திரிகையில் பக்கம் 3-5 வரையில் நான் வாசித்த தேர்தல் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் (அதாவது பைபிளை அப்படியே பின்பற்றும் உண்மைக் கிறிஸ்தவர்கள்) என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவர்கள் அரசியலில் நடுநிலைமை வகிக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் “உம்முடைய இராச்சியம் வருவதாக” என வேண்டுதல் செய்கிறார்கள்.

    பிலிப்: மோகன், உனக்கு ஓட்டுப் போட உரிமை இருந்தால் நீ யாருக்கு ஓட்டுப் போடுவாய்?
    மோகன்: யாருக்கும் போட மாட்டேன்.
    பிலிப்: ஏன்?
    மோகன்: நான் ஏற்கெனவே ஓட்டு போட்டுவிட்டேன்.
    பிலிப்: அதெப்படி, உனக்குத்தான் ஓட்டுப் போடுவதற்கு இன்னும் வயசு ஆகவில்லையே?
    மோகன்: நான் ஏற்கெனவே ஒரு நல்ல அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அதற்கு ஓட்டு போட இத்தனை வயசு ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.
    பிலிப்: அது என்ன அரசாங்கம்?
    மோகன்: அந்த அரசாங்கத்தில் இயேசு ஆட்சி செய்கிறார். அவர்தான் சிறந்த தலைவர். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறாயா?
    பிலிப்: அதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள எனக்கு இஷ்டமில்லை.
    மோகன்: சரி, என்றைக்காவது அதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால் நீ தாராளமாக என்னிடம் கேட்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: