மேற்குலகம் கடத்திய கலைச்செல்வங்கள்: எகிப்தில் சில நாட்கள் -08

IMG_4803

Luxor Obelisk

நடேசன்

கெய்ரோவில் இருந்த லக்சருக்கு செல்வதற்கு மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றோம்.

விமானப் பிரயாண நேரம் ஒரு மணித்தியாலத்திற்கு சற்று அதிகமாக இருந்தாலும் விமான நிலய பாதுகாப்புக்காரணங்களால் காலை வேளையில் சென்று மதியத்துக்கு மேல் லக்சர்(Luxor) செல்வதாக இருந்தது. இந்த லக்சரில் இருந்து தான் ஐந்து நாட்கள் எமது சுற்றுலாப் பிரயாணம் தொடர்கிறது.

நைல் நதியில் படகுப் பிரயாணம் பல ஹொலிவுட் படங்களிலும் நாவல்களிலும் வருகிறது. அதனாலும் இந்தப்படகுப் பயணம் பிரபலமாகியுள்ளது. முக்கியாக அகதா கிறிஸ்டியின் நைல் நதியில் மரணம் நாவல் படமாகியது (Death on the Nile) இந்தப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே நினைவிலிருந்தாலும் அதில்வரும் நைல் நதிப்பயணம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

உலகில் முக்கிய நதிகளில் தெற்கேயிருந்து வடக்கு ஓடுவது நைல் நதி மட்டுமே.
IMG_4775
ஆதிகாலத்தில் இருந்தே நைல் நதிப்பயணம் எகிப்தியர்களுக்கு இலகுவானது. நைல் நதியில் தெற்கு நோக்கி, அதாவது சூடான் பக்கமாக செல்லும் போது காற்று தெற்கு நோக்கி வீசுவதால் பாய்மரத்தை விரித்தால் படகு போய்க் கொண்டேயிருக்கும்.அதே போல் வடக்கு நோக்கி நைல்நதியில் செல்லும்போது , பாயை இறக்கிவிட்டால் அந்த நீரோட்டத்தில் அலக்சாண்ரியாவுக்கு வந்து மத்திய தரைக்கடலை அடைந்து விடலாம். இவ்விதமாக காற்றுக்கு இசைவாக கப்பலோட்டம் இருந்ததால் எகிப்தியர்கள் பெரிய கப்பல்களையோ தேர்ச்சிபெற்ற மாலுமிகளையோ உருவாக்கவில்லை என்பது வரலாற்றாசிரியர்களின கருத்து. எகிப்தை ஆயிரம் வருடங்கள் ஆண்டவர்களான கிரேக்கர்,ரோமர் முதலானோர் பலமான கப்பல்ப் படையை கொண்டவர்களாகவும் சிறந்த கப்பலோட்டிகளாகவும் விளங்கியிருக்கிறார்கள்.

இப்பொழுது லக்சர் என அழைக்கப்படும் இந்த நகரம் கிரேக்கர் காலத்தில் தீபஸ்(Thebes) என அழைக்கப்பட்டது. இந்த நகரம் எகிப்தின் தலைநகரமாக மத்திய அரசர் (2040-1750 BC) காலப்பகுதியில் தொடங்கி புதிய அரசர்கள் (1550-1070 BC) காலத்தில் புனித நகரமாகியது.

“தீப்ஸ் நகரத்தின் நுாறு வாசல்களால் இருநுாறு குதிரை இரதத்தில் வீரர்கள் வருவார்கள் என்று இலியட் இதிகாசத்தில் கூறுகிறது.

புனித நகரமானதும் அங்கு மக்கள் வழிபடும் தெய்வம் அமுன் (AMUN) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அமுன் ஆரம்பத்தில் உலகத்தை உருவாக்கிய கடவுளில் ஒருவர். பிற்காலத்தில் அமுன் மேலதிக பெயரான இரா என்ற பெயருடன் அமுன் – இரா என்ற பெயரில் இரட்டைத் தெய்வமாகிறார்.
இரா என்பது பண்டைய எகிப்திய மொழியில் சூரியனை குறிப்பது. எகிப்திய அரசர்கள் சூரியவம்சத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பல அரசர்கள் இராம்சேக்கள் ஆகினார்கள்.

அமுன்-இரா , முட் என்ற பெண் தெய்வத்துடன் இணைந்து கொன்சு என்ற மகனைப் பெற்று இந்த தீபஸ் நகரத்தின் முக்கிய மூன்று கடவுளாகிறார்கள்.இந்த சமய நம்பிக்கையின் அடிப்படையில் லக்சர் கோயில் கட்டப்படுகிறது

விமான நிலையத்தில் எமது பொதிகளை ஏற்றுவதில் மீண்டும் அகமட் உதவினார். பேசும் மொழி எமக்கு புரியாமல் அவரில் நாம் தங்கி இருக்கிறோம் என்ற உணர்வு வந்தபோது, காலத்தால் செய்த உதவி ஞாலத்தைவிடப் பெரியது என்ற திருவள்ளுவரின் கூற்றே நினைவுக்கு வந்தது. புதிய இடத்தில் சிறிய உதவிகளும் பெரிதாக தெரிகிறது. அவுஸ்திரேலியாவில் இருந்து சென்ற எட்டுப் பயணிகளது பொதிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு அகமட் உதவினார்.
துபாயில் நான் வாங்கிய விஸ்கியுடன் இலவசமாக பெற்றுக்கொண்ட பெட்டியையும் ஏற்றிவிட்டு, புத்தகம் மற்றும் கெமரா மட்டும் இருந்த கைப்பொதியை மட்டுமே வைத்திருந்தேன்.

விமான நிலையத்தில் எங்களைப்போல் லக்சர் போக காத்திருந்தவர்களில் சிலர் மட்டுமே வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகள்;. பெரும்பாலனவர்கள் உள்ளுர்வாசிகள். இங்கேயும் எகிப்தின் உல்லாசப்பயணத் துறையின் நலிவு பார்க்கக் கூடியதாக இருந்தது.

விமானம் ஏறுவதற்கு முன்னர் சுங்கப் பரிசோதனைக்காக கையில் உள்ள கைப்பொதிகளை எக்ஸ்ரே இயந்திரத்தினுள்ளே அனுப்பும்போது எனது பொதிகள் போய்விட்டது என்பதால் நானும் பரிசோதனை வாசலைக் கடந்து வந்து அடுத்த பக்கதில் நின்றேன். எல்லோரது கைப்பொதிகளும் சுமுகமாக வந்து கொண்டிருந்தன. அந்த எக்ஸ்ரே இயந்திரத்தில் பொருட்களை கவனித்த ஒரு சுங்கப் பரிசோதகர் திடீரென்று என்னைப் பார்த்தார்.

அவர் அங்கு பல வருடங்களாக அந்தப்பிரிவில் பொருட்களை பரிசோதிக்கும் பணியிலிருப்பவராக இருக்கவேண்டும். அந்த முகத்தில் படிந்திருந்த அனுபவம் சகாரா பாலைவனத்து மணல் மடிப்புகளாக எனக்குத் தோன்றியது. அவரது கண்களில் தோன்றிய மின்னல், அவுஸ்திரேலியாவில் வீதிகளில் திடீரென பின்னால் தோன்றும் பொலிசின் வாகன அபாய அறிவிப்புபோல் தெரிந்தது.
எக்ஸ்ரே இயந்திரத்தின் திரையை பார்த்தேன்

எனது நண்பன் இரவீந்திரராஜாவின் சூட்கேஸ் தெரிந்தது.

‘மச்சான் என்னைக் காப்பாற்று’ என அந்தப் பெட்டி என் அடிமனத்தோடு பேசியது.

துபாயில் இரண்டு சிவாஸ்ரிகல் போத்தல்கள் வாங்கியபோது கிடைத்த பெட்டியும். அந்தப் பெட்டியில் இருந்த இரண்டு லீட்டர் கொண்ட இரண்டு சிவாஸ்ரிகல்களும் தெரிந்தன.

நூறு மில்லி லீட்டர் மட்டுமே திரவப்பொருளாக கையில் எடுத்துக் கொண்டு விமானத்தில் செல்லலாம் என்ற சர்வதேச சட்டத்தை சிவாஸ்ரிகல் அன்று முறியடித்துவிட்டது.

எனது சட்டைப்பொக்கற்றில் கையை விட்டபோது ஐம்பது எகிப்திய பவுண்ட்ஸ் நோட்டு வந்தது. அவுஸ்திரேலிய பாணியில் ‘ஹாய் மேற்’ என்றுசொல்லிவிட்டு கையை குலுக்கியபோது எனது கையில் இருந்த அந்த நோட்டு அவரது கைக்கு மாறியது. மெதுவான சிரிப்புடன் அந்த மனிதர் பொத்தானை அழுத்தியதும் அந்தப் பெட்டி வெளியே வந்து சேர்ந்தது. எனது நண்பன் இரவீந்திரராஜாவுக்கு மின்னல் வேகத்தில் நடந்த அந்தக்காட்சி தெரியாத விடயம்.

கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் அற்கஹோல் கடத்தியதற்கு உதவிய அந்த மனிதனும் இலஞ்சம் கொடுத்ததற்கு நானும் கெய்ரோவில் கம்பியெண்ண வேண்டி வந்திருக்கலாம். மரியட் ஹோட்லில் தங்கியிருந்து விட்டு கெய்ரோ சிறைக்கு இடம்மாற்றம் பெறுதல் என்பது அனுபவிக்காதவரையில் நினைத்துப் பார்க்க சுவாரஸ்யம்தான்.

‘நூறு மில்லி லீட்டர் மட்டும் கையில் கொண்டுவர அனுமதித்தபோது எப்படி இரண்டாயிரம் லீட்டர் விஸ்கியை கொண்டு வருகிறாய்’ என்று நண்பனிடம் கேட்டேன்.

‘ அந்தப்பெட்டிக்குள் விஸ்கி இருக்கென்று தெரிந்திருந்தால் ஏனைய பொதிகளுடன் நான் பிளேனில்போட்டிருப்பேனே…“

‘எனக்கு நீ ஐம்பது பவுண்ஸ் தரவேண்டும். உனது விஸ்கிக்காக நான் கொடுத்த இலஞ்சம்.’

‘அதுதான் நீங்கள் அந்த மனிதரோடு கைகுலுக்கிய இரகசியமா?’ எனக்கேட்டு எல்லோரும் சிரித்தனர்

லக்சர் சிறிய விமான நிலையம். அங்கு ஏற்கனவே எமக்கு வழிகாட்டியாக முகமட் என்ற லக்சோர் இளைஞன் எங்களுக்காக காத்திருந்து அழைத்துச் சென்றான். உல்லாசப் படகு லக்சர் துறைமுகத்தில் எங்களுக்காக காத்திருந்தது. அது சிறிய கப்பல் போன்றது. பத்து அறைகள் கொண்டது. ஒவ்வொரு அறையிலும் இரண்டு கட்டில்கள். குளியலறையுடன் சகலவசதிகளும் இருந்தன.
அந்த உல்லாசப்படகில் எங்களது பயண சூட்கேசுகளை வைத்து விட்டு திரும்பியபோது அமெரிக்க தம்பதிகள் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். எங்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் வழிகாட்டி. மேலும் மூன்று பிரான்ஸ் குடும்பங்கள் எமது படகுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பிரான்சிய மொழிபேசும் வழிகாட்டி ஒருவர் ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தார்.

நாங்கள் பார்க்கச்செல்லும் லக்சர் கோயில், நைல் நதியில் கிழக்கு பகுதியிலும் இறந்தவர்களை மம்மியாக்கி வைத்திருக்கும் அரசர்களின் சமவெளி மேற்குப்பகுதியிலும் உள்ளது. கார்நக் என்ற மிகப்புனிதமானதாக அக்காலத்தில் கருதப்பட்ட ஒரு கோயில் சிறிது தூரத்தில உள்ளது. மேம்பிசை போல் லக்சரும் திறந்தவெளி தொல்பொருள்காட்சியகம்.

லக்சர் கோயில் என்பது தனியான ஒரு கோயில் அல்ல. பல அரசர்களால் கட்டப்பட்ட பல கோயில்களின் ஒன்றுபட்ட ஸ்தலமாகும். பலகாலம் மண்ணால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு கிராமத்தை உருவாக்கி அங்கு ஒரு இஸ்லாமிய பள்ளிவாசலும் கட்டி இருந்தார்கள். 19 ஆம் நுற்றாண்டில் கோயில் மீட்கப்பட்டபோது கிராமத்தில் வசித்தவர்கள் வேறு இடத்திற்கு குடியேற்றப்பட்டனர். பள்ளிவாசல் இன்றும் அதே இடத்தில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு செல்லும் வழியில் எமது ஆங்கில வழிகாட்டி முகம்மட் பிரான்சை சேர்ந்த அந்த மூன்று குடும்பத்தினரிடமும்; நகைச்சுவையாக பிரான்சிய மொழியில் பேசினான்.அந்த மொழி புரியாவிட்டாலும் அதில் குறைகூறும் தன்மை தொனித்ததை உணரமுடிந்தது. லக்சர் கோயிலை நெருங்கியபோதுதான் எனக்கு அதன் அர்த்தம் புரிந்தது.

நவீன எகிப்தியலை தொடக்கி வைத்தது நெப்போலியனின் எகிப்திய படையெடுப்பு என முன்பு பார்த்தோம். முன்னர் பல எகிப்தியக் கலைச்செல்வங்கள் பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பரிஸ் மியூசியத்தில் எகிப்தியபிரிவு ஒன்று உருவக்கப்பட்டது. அப்பொழுது யேன்-பிரான்சிஸ் ஷம்போலியன் (Jean-François Champollion) என்பவர் எகிப்தின் ஆராய்ச்சியாளராக இயங்கி, எகிப்திய குறியீட்டு மொழியை புரிந்து கொண்டு உலகத்திற்கு அதனை வெளிப்படுத்தினார். பின்பு எகிப்த்தின் பல இடங்களுக்கும் அவர் பயணம் செய்தார். இவரால் பல விடயங்கள் வெளிஉலகுக்கு தெரியவந்ததால் எகிப்த்தின் மூலவராக அவர் கணிக்கப்படுகிறார்.

லக்சர் கோயிலின் முகப்பில் ஒபிலிக்ஸ் (Obelisks) எனபடும் ஒரு தூண் தெரிந்தது. இப்படியான தூண்கள்எப்பொழுதும் இரட்டைப்படையாக அமைந்திருக்கும். இவை 1000 தொன் எடையுள்ள கருங்கல்லில் செப்பனிடப்பட்டவை. இவற்றிற்கு எகிப்திய வரலாற்றில் தனியிடம் உள்ளது.
இந்தத் தூண்கள் அக்காலத்தில் வணக்கத்திற்குரிய புனிதமான சின்னங்கள். இரா என்ற சூரியனோடு சம்பந்தப்பட்டது. நுனியில் உள்ள பிரமிட்வடிவம் வெள்ளியும் பொன்னும் கலந்து பூசப்பட்டிருக்கும். எகிப்தின் முக்கிய அரசர்கள் இத்தகைய தூண்கள் பலவற்றை பல இடங்களில் வைத்திருக்கிறார்கள். அதிக தூண்கள் இருக்கும் இடம் கெலியபோலிஸ் என கிரேக்க மொழியில் சொல்லப்படும் சூரிய நகர்(Suncity).

இந்தத் தூண்கள் அஸ்வான் பகுதியில் பெரிய கற்சுரங்கங்களில் அகழப்படுகின்றன பின்னர் அவை லக்சர், கெலியபோலி்ஸ், அலெக்சாண்டிரியா போன்ற இடங்களுக்கு கொண்டு செல்வது சாதாரணமான விடயம் அல்ல.மிக கடின வேலையாகும்.

வடக்கு நோக்கி ஓடும் நைல்நதியில், மிதவைகள் மூலம்தான் இந்தத்தூண்கள் கொண்டு செல்லப்படவேண்டியிருந்தது.

இரண்டு ஜம்போ ஜெற் விமானத்தின் எடைகொண்ட 60-100 அடி நீள அகலமான இந்தத் தூண்களை எழுப்புவதானது, பிரமிட்டை நிர்மாணிப்பதிலும் பார்க்க கடினமானது என எகிப்திய ஆய்வாளர்களால் சொல்லப்படுவதால் அதுபற்றி சிறிது விபரமாகப் பார்ப்போம்.

அஸ்வான் கிரனைட்டு என சொல்லப்படும் பெரிய கற்களில் டொலரைட் என்ற வைரமான கற்களால் அடித்துச் செதுக்கி உருவாக்கப்படும் இந்தப்பாரிய துண்கள் பெரிய மரக்குற்றிகளில் வைத்து உருட்டப்பட்டு நைல்நதிக்கரைக்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர் நைல் நதியில் மிதவைகளில் வைத்து படகுகள் மூலம் இழுத்து செல்லப்பட்டன. அவ்வாறு எடுத்துச்செல்லப்பட்ட தூண்களை தரையில் நிமிர்த்தி வைப்பதென்பது இயந்திரங்கள் அற்ற அக்காலத்தில் பெரியசாதனைதான். புவியீர்ப்பு விசையில் தங்கியே இந்தத்தூண்கள் தரையில் நிற்கின்றன. இந்தத்துண்களை சாய்தளங்களை கட்டியே அக்கால மனிதர்கள் இவற்றை நிறுத்தியிருக்கிறார்கள் எனக்கருதப்படுகிறது. மிகவும் கவனமாக செய்யவேண்டிய பாரியநிர்மாணப்பணி என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

பண்டைக்கால எகிப்திய வரலாற்றில் மிகவும் முக்கிய அரசனாக கருதப்படும் இராம்சி 11, இரண்டு தூண்களை லக்சர் கோவில்களில் ஸ்தாபித்தார். அதில் இரண்டாவது தூணை நிறுத்தியபோது, அந்தவேலையில் ஈடுபட்டவர்கள் நிதானமாகவும், கவனமாகவும் செய்வதற்காக தனது மகனை அந்தத் தூணின் கூரிய முனையில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அதேபோன்று எகிப்திய வரலாற்றில் பெண்ணரசியான ஹற்ஷிப்புட் (Hatshepsut) இரண்டு தூண்களை ஏழே மாதத்தில் உருவாக்கி அவை இரண்டையும் ஒன்றாகக் கொண்டுவந்து கார்ணக்கோயிலில் நிறுத்திய சாதனை சித்திரவடிவில் பதியப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் இந்தத் தூண்களைப் பார்த்த ஐரோப்பியர், இவற்றை தங்களது நாடுகளுக்கு கொண்டு செல்ல முனைந்தனர். பதினைந்து தூண்களை ரோமர்கள் கொண்டு சென்றனர். அதில் இரண்டு அகஸ்ரஸ் சீசரின் காலத்தில் கொண்டு செல்லப்பட்டது. ரோமரால் கொண்டு செல்லப்பட்டவை, தொலைந்து பிற்காலத்தில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

அலக்சாண்ரியாவில் இருந்த ஒபிலிக்கை பிரான்சிற்கு பரிசாக எகிப்தியர்கள் கொடுத்தனர். பிரான்சிய எகிப்தியலாளர் ஸாம்பலியன் அதில் வெடிப்பு இருப்பதை பார்த்து அதைவிட்டு விட்டு இராம்சியால் எழுப்பப்பட்ட லக்சரில் உள்ள இரண்டு ஒபிலிக்கில் ஒன்றை எடுத்த்துக் கொண்டு சென்றனர். அது பாரிசில் தற்போது உள்ளது.

அலக்சாண்ரியாவில் இருந்து பிரித்தானியர் ஓபிலிக்கை இலண்டனுக்கு கொண்டு சென்றனர். அது மிகவும் சுவாரசியமான கதையாகும். பிரித்தானியர் அலக்சாண்ரியாவில் உள்ளதை மரத்தில் செய்த பெட்டிக்குள் வைத்து கப்பலில் முலம் கடலுக்குள் இழுத்து சென்றபோது புயல் அடித்ததனால் ஆறு மாலுமிகள் அந்தவிபத்தில் இறந்தனர். புயலினால் தூணும் பெட்டியை விட்டு கடலில் மூழ்கி தொலைந்துவிட்டது. அதனை வேறு ஒரு கப்பலில் வந்தவர்கள் கண்டெடுத்து உரிமை கோரியபோது, அவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிய பிரித்தானியர் அதை தேம்ஸ் நதிக்கரையில் நிறுத்தியுள்ளார்கள்.

கடைசியாக, அமெரிக்கர்கள் நியூயோர்க் சென்ரல் பார்க்கில் ஒரு தூணை நிறுத்துவதற்காக கப்பலில் எடுத்துச்சென்ற போது, அதை அலக்சாண்ரியா துறைமுகத்திற்கு கொண்டு செல்லுவதற்கு பல தடைகள் வந்தன. தடைகளை மீறி கப்பலில் கொண்டு சென்றபோது நியூயோர்க் துறைமுகத்தின் இறங்கு துறையில் இறக்குவதற்கு நிருவாகம் மறுத்தபடியால், மற்றுமொரு மார்க்கமாக வேறு திசையில் அதை கொண்டு செல்ல 112 நாட்கள் எடுத்தன என்ற செய்தியும் உண்டு.

இந்தத்தூண்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட காலகட்டத்தில், எகிப்தின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்திருந்தது. மேற்கு நாடுகள் இதைப்பயன்படுத்தி தங்கள் நாட்டுக்கு அந்த புராதன சின்னங்களை கவர்ந்து கொண்டு சென்றன. எகிப்தின் இந்த அருங்கலைச்சின்னங்கள் -கலைச்செல்வங்கள் தற்பொழுது நியூயோர்க், பரிஸ், இலண்டன் மியூசியங்களிலே காணப்படுகின்றன.

எனது முன்னைய பயணங்களின் போது இந்த மூன்று மியுசியங்களுக்கும் நான் போயிருந்தாலும், எகிப்தின் வரலாறு தெரியாததால் இந்தச்சின்னங்களை கூர்ந்து பார்க்கவில்லை. பார்த்தவை மனதில் பதியவும் இல்லை.

லக்சர் கோயிலைப் பார்க்கும்போது ஆச்சரியமும் பிரமிப்பும் என்னை ஆட்கொண்டன. வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத உணர்வுகளே, அக்கால எகிப்தின் வரலாற்றை அறிய வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கியது.

எகிப்தின் புராதன கலைச்செல்வங்களை பார்த்து அவற்றின் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளும்பொழுது, அதற்கு முன்னர் படித்து அறிந்த ஏனைய நாடுகளின் வரலாறுகளும் அவற்றின் ஊடாக பார்த்த கட்டிடங்களும்; மிகவும் சாதாரணமானவை என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது.
(தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: