கலைஞர் உடப்பூர் சோமஸ்கந்தர்

Late_Udappoor_Somaskanthar
முருகபூபதி
.

வடமேல்மாகாணத்தில் தமிழுக்கு உயிரும் உணர்வுமூட்டிய கலைஞர் உடப்பூர் சோமஸ்கந்தர்

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் இந்து சமுத்திரத்தாயை அணைத்தவாறு ஒரு தமிழ்க்கிராமம். யாழ்ப்பாணம் செல்லும் சிலாபம் – புத்தளம் பாதையில் பத்துலுஓயா என்ற இடத்திலிருந்து இடதுபுறம் செல்லும் பாதையில் பயணித்தால் கடலை நோக்கிச்செல்லலாம். அந்தக்கடலின் கரையில் எழில்கொஞ்சும் கிராமம் உடப்பு.
அங்கு பூர்வகுடிமக்களாக வாழ்பவர்கள் இந்து தமிழர்கள். அவர்களின் கலாசாரம் தனித்துவமானது. 1960 களில் முதல் முதலாக நான் அங்கு சென்றபொழுது அந்தக்கிராமத்தில் தமிழர்களைத்தவிர வேறு இனத்தவர்கள் இருக்கவில்லை. அந்த மக்கள் தமிழகத்தில் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வந்து குடியேறி கடல் தொழிலையே சீவனோபாயமாகக்கொண்டு வாழ்ந்து வந்தனர்.
திரளபதை அம்மன் கருமாரியம்மன் கந்தசாமி முத்துமாரியம்மன்ஐயனார் பிள்ளையார். காளி, ஐயப்பன் முதலான தெய்வங்களுக்கு கோயில்களை நிருமாணித்து வணங்கியும் அதேசமயம் இராக்குருசி காட்டுமாரியம்மன் முதலான சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட்டுவந்தனர்.

இஸ்லாமியர் வழிபடும் மசூதியும் கத்தோலிக்கரால் 1848 இல் நிருமாணிக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயமும் இங்கே இருக்கின்றன. உற்சவ காலங்களில் சிங்கள வர்த்தகர்கள் இங்கு சிறுவர்த்தகங்களுக்கு வந்தாலும் உற்சவம் முடிவுற்றதும் மூட்டையை கட்டிக்கொண்டு தம்மூர் திரும்பிவிடுவார்கள்.
திரௌபதை அம்மன் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் இலங்கை பூராவும் பிரசித்தமானது. அதனை உடப்பூர் மக்கள் தீமதிப்பு என்று சொல்லமாட்டார்கள். பூ மிதிப்பு உற்சவம் என்றே அழைப்பார்கள். நாம் தீமிதிப்பு எனச்சொன்னாலும் அம்மக்கள் உடனே திருத்தம் செய்து“ இல்லை….இல்லை பூமிதிப்பு எனச்சொல்லுங்கள். தீ சுடும் ஆனால் எங்கள் திரௌபதை அம்மன் முன்றலில் நெருப்புக்கோளங்களாக தகதகக்கும் பூக்கள் பக்தர்களை பரவசப்படுத்தும்” என்பார்கள்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட அந்நிய நாட்டவர்களும் தென்னிலங்கை சிங்கள மக்களும் அரசியல் தலைவர்களும் குறிப்பிட்ட விழாவை கண்டுகளிக்க உடப்பூருக்கு திரளுவார்கள்.
நீர்கொழும்பில் நான் ஆரம்பக்கல்வியை கற்ற விவேகானந்தா வித்தியாலயத்திற்கு உடப்பூரிலிருந்து தமிழும் கணிதமும் குடியியலும் கற்பிக்க வந்த சோமஸ்கந்தர் அவர்கள்தான் எனக்கு உடப்பூரை அறிமுகப்படுத்தினார்.
அப்பொழுது பத்துவயதிருக்கும். அவர் எமக்கு தமிழ்கற்பிப்பது பெரும்பாலும் பாடசாலை விளையாட்டுத்திடலில் நிற்கும் ஏதாவது ஒரு மரத்தடி நிழலில்தான். அவர் சிறந்த கதை சொல்லி.

மகாபாரதம் இராமாயணம் முதலான இதிகாசக்கதைகள் அவர் சொல்லித்தான் எமக்குத்தெரியும். ஒரு நாள் மகாபாரதத்தில் திரௌபதையின் சபதக்காட்சியை அவர் அபிநயத்துடன் சொல்லித்தந்தபொழுது தமது உடப்பூரின் மகிமைபற்றியும் சொன்னார். அங்கு வருடாந்தம் நடக்கும் பூமிதிப்பு விழாவையும் குறிப்பிட்டார்.
அந்த ஊரைப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் மனத்தில் எழுந்தது. எங்கள் விருப்பத்தைச்சொன்னோம்.

அவர் திங்கள் முதல் வெள்ளிவரையில் பாடசாலை அமைந்த கடற்கரை வீதியில் இருக்கும் அவரது சகோதரி வீட்டிலிருந்து கடமைக்கு வருவார். வெள்ளி மாலை உடப்பூருக்கு சென்றுவிடுவார். அங்கு இரண்டுநாள் விடுமுறையை செலவிட்டுவிட்டு மீண்டும் ஞாயிறு மாலை நீர்கொழும்பு திரும்பி திங்களன்று வழமைபோன்று கடமைக்கு வருவார்.

வீட்டிலே சொல்லி பஸ் பயணச்செலவுக்கு இரண்டு ரூபா வாங்கிவருமாறும் அத்துடன் மாற்று உடைகள் எடுத்துக்கொள்ளுமாறும் சொன்னார். ஆறு மாணவர்கள் அவருடன் உடப்பூருக்கு சுற்றுலா செல்ல பெயர்கொடுத்துவிட்டு ஒரு வெள்ளிக்கிழமை அவருடன் சிலாபம் செல்வதற்குபஸ்நிலையம் வந்தோம்.
நாம் எதிர்பாராதவிதமாக ஒரு வாகனச்சாரதி சிலாபம் செல்வதற்குபயணிகளை அழைத்துக்கொண்டிருந்தார். சோமஸ்கந்தர் மாஸ்டர் அந்தச்சாரதியுடன் உரையாடி குறைந்த கட்டணத்துடன் அதில் எம்மை அழைத்துச்nசன்றார்.
வாகனத்தில் பாடிக்களித்து ஆனந்தமாகச்சென்றோம். ஊடப்பூரை நெருங்கும்பொழுது அவ்வூரின் மேலதிக மகிமைகளையும் சொன்னார். அந்த வெள்ளிக்கிழமை இரவு நாம் அங்கே சென்றடைந்தபொழுது ஒரு வித்தியாசமான குடும்ப வைபவம் ஒன்றை கண்டு களித்தோம்.

அங்கே ஒரு குழந்தைக்கு அன்று காதுகுத்து கலியாணம். இரவு நிகழ்ச்சியில் சோமஸ்கந்தர் தமது மதுரக்குரலினால் பல பாடல்களை பாடினார். நாம் தாளம்போட்டோம்.மறுநாள் அந்த அழகிய கடலோரக்கிராமத்தின் எழில்கொஞ்சும் காட்சிகளை கண்டு களித்தோம்.அங்குதான் முதல் தடவையாக ஊற்றுக்கிணறுகளைக் கண்டேன். அயலில் உப்புக்கரிக்கும் கடல். ஆனால் அதற்கு அருகாமையில் மக்களினால் தோண்டப்பட்ட சிறிய ஊற்றுக்கிணறுகள். ஊர்ப்பெண்களின் ஒரு இடுப்பிலே குழந்தை. மற்ற இடுப்பிலே ஒரு குடம். தலையிலே இரண்டு குடங்கள்.குழந்தையை தரையில் இறக்கிவைத்துவிட்டு நீண்ட கைப்பிடியுள்ள அகப்பையினால் ஊற்றுக்கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி அள்ளி குடங்களில் நிரப்புவார்கள். பின்னர் ஒரு இடுப்பில் குழந்தை. மற்ற இடுப்பில் ஒரு குடம் தலையிலேஒன்றின்மேல் ஒன்றாக இரண்டு குடங்கள்.
உடன் வந்த பெண்கள் குடங்களை தலையில் ஏற்ற பரஸ்பரம் உதவிக்கொள்வார்கள்.தலையிலும் இடுப்புகளிலும் மூன்று குடங்களையும் குழந்தையையும் சுமந்தவாறு கையிலே அந்த நீண்ட அகப்பையையும் ஏந்திக்கொண்டு அந்தப்பெண்கள் ஒயிலாக நடந்து வந்த காட்சிகள் வாழ்வில் மறக்க முடியாதவை.

உடப்பூரிலிருந்து ஞாயிறன்று திரும்பி வரும் வழியில் தெதுரு ஓயாவில் நீராடினோம். சோமஸ்கந்தரின் சகோதரி வழிப்பயணத்தில் உண்பதற்கு புளிச்சாதமும் ஒரு சரையில் சீனியும் தந்தனுப்பினார்.
புளிப்பும் இனிப்பும் நல்ல கம்பினேஷன். புளியோதரையை சீனியுடன் அன்றுதான் முதல் தடவை சுவைத்தேன். இதனை வாசிப்பவர்களுக்கு அந்த சுவை அனுபவம் இருக்கிறதா? குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்படாத காலத்தில் தமிழர்கள் கண்டுபிடித்த புளியோதரையை பல நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம். அந்த உணவு கெட்டுவிடாது என்று ஒரு திரைப்படத்தில் விவேக் சொல்லுவார்.

தெதுரு ஓயாவில் பாய்ந்து நாம் குளித்துக்கொண்டிருந்தபொழுது சோமஸ்கந்தர் மாஸ்டர் நதியின் கரையில் நின்றவாறு எங்களையே அவதானித்துக்கொண்டிருந்தார்.
அவர் எம்முடன் குளிக்கவராமல் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. நாமெல்லோரும் கரைக்கு வந்து தலைகளை துவட்டியபோதுதான் அவர் நதியில் இறங்கி நீந்தினார்.

அவர் கரைக்கு வந்ததும்“ ஏன்…மாஸ்டர் நீங்கள் எம்முடன் இணைந்து குளிக்க வரவில்லை” எனக்கேட்டேன்.

“ தெதுரு ஓயாவில் சில சமயங்களில் முதலைகளின் நடமாட்டம் இருக்கும். உங்களையும் அவதானித்துக்கொண்டு முதலைகள் வருகின்றனவா…?” என்றும் பார்த்துக்கொண்டு முன்னெச்சரிக்கையாக கரையில் நின்றேன்.” என்றார்.

ஒரு தந்தைக்குரிய பரிவை அன்று நான் அவரிடத்தில் கண்டேன்.
எனது பத்துவயதில் உடப்பு தமிழ்க்கிராமத்தை எனக்கு அறிமுகப்படுத்திய உடப்பூர் சோமஸ்கந்தர் வடமேல் மாகாணத்தில் புத்தளம் முதல்நீர்கொழும்பு வரையிலான பிரதேசங்களில் தமிழில் கலை இலக்கிய விழிப்புணர்வை 1960களிலேயே உருவாக்கத் தொடங்கியவர்.
பின்னாளில் இவர் வில்லிசைக் கலைஞராகப் புகழ்பெற்ற போதிலும்கலைத்துறையில் ஆரம்பத்தில் நடிப்பு நாடகம் எழுதுதல் நாடகக்கலைஞர்களுக்கு ஒப்பனை செய்வித்தல் (ஒப்பனையும் ஒருகலைதான்) முதலானவற்றிலேயே ஈடுபட்டார்.

நல்லகுரல்வளமும் கற்பனையாற்றலும் மிக்கவரான சோமஸ்கந்தர்ஆசிரியபயிற்சிக் கலாசாலையிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறியதும் – நீர்கொழும்பு மண் அவரை வரவேற்றது.
வந்தவர்களை வாழவைத்த அம்மண்ணில் விவேகானந்தா வித்தியாலயம் (இன்றையவிஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) சோமாஸ்கந்தரையும்ஆசிரியப் பணிக்கு அழைத்துக் கொண்டது.
இப்பாடசாலையின் அப்போதைய தலைமை ஆசிரியர் பண்டிதர்க.மயில்வாகனன். சித்தங்கேணியைச்சேர்ந்தவர். இவரும் பழந்தமிழ் இலக்கிய பரிச்சயமிக்க எழுத்தாளரே. அதேசமயம் நீர்கொழும்பு முன்னக்கரையைச் சேர்ந்த நிக்கலஸ்அல்பிரட் என்ற ஆசிரியரும் இங்கேபணிபுரிய வருகின்றார். இவரும் ஒரு நாடகக்கலைஞர்.
இந்தக் கூட்டணியினால்–பாடசாலை- வட்டாரகலைப்போட்டிகளில்தொடர்ந்தும்பரிசில்களை தட்டிக் கொண்டது.
சோமஸ்கந்தரும் நிக்கலஸ் மாஸ்டரும் நீண்டநெடுங்காலநண்பர்கள். இவர்கள்இருவரையும் ஊரில் இரட்டையர்கள் எனவும் அழைப்பர்.
சோமஸ்கந்தர் – கடற்கரைவீதியில் தங்கியிருந்த சகோதரி வீட்டில்எப்பொழுதும் பாட்டுச்சத்தம்கேட்கும். அதுவானொலியிலிருந்து அல்ல. சோமாஸ்கந்தரின் மதுரமான குரலிலிருந்துதான்.

அக்காலத்தில்தமிழ்நாட்டிலிருந்து–திரைப்படங்கள்வெளியாகும்போது–திரைப்படபாட்டுப் புத்தகங்களும் வந்துவிடும். சென்மேரிஸ்தேவாலயத்திற்கு முன்பாகசந்திரவிலாஸ்என்றுஒருதேநீர்கடைஇந்தியவர்த்தகரால்நடத்தப்பட்டது.இங்கேசோமஸ்கந்தரும்ஒருவாடிக்கையாளர்.திராவிடஇயக்கபிரசுரங்களும்இங்கேகிடைத்ததனால் -சோமஸ்கந்தரை அக்கடை கௌரவமான மனிதராக வரவேற்றுஅவர் கேட்பதை கொடுக்கும்.சினிமாப்பாடல்மெட்டுக்களை வைத்து சோமஸ்கந்தர் புதிதாகபாடல்கள்இயற்றுவார்.அதனைப்பாடுவதற்குமாணவர்களையும்பழக்குவார்.மாணவர்சங்கக்கூட்டங்களில் பெற்றோர் தின விழாக்களில் அரங்கேற்றுவார்.
கண்டிப்பானவர். கோபம் வந்தால் அடிக்கவும் செய்வார். தோளில்கைபோட்டுஅணைக்கவும் செய்வார். இதனால் – மாணவர்களிடையே இவர்ஒரு‘ஹீரோ’.மாணவர்களின் பெற்றோர்களின் அத்தியந்த நண்பர். மாணவர்களின்குடும்பங்களில் நிகழும் சுகதுக்க வைபவங்களில் கலந்து கொள்வார்.
1961 – 1962 காலப்பகுதியில் சோமஸ்கந்தர் எழுதிய‘செழியன்துறவு’என்றவரலாற்று நாடகம் அந்த வட்டாரத்தில் பிரபல்யம் பெற்றது. வட்டாரகலைவிழாப்போட்டியில்முதல்பரிசையும் வென்றது. இதில்என்னவேடிக்கையென்றால்நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே மாணவிகள்தான். பாண்டியன்செழியனாக எனது அக்கா செல்வியும் சேரனாக சுப்புலஷ்மி என்ற மாணவியும் சேரன் மகளாக எங்கள் பெரியம்மா மகள் மனோன்மணியும்நடித்தனர். அமைச்சராக தளபதியாக அரண்மனைச் சேவகர்களாக படைவீரர்களாக நடித்தவர்கள் அனைவரும் மாணவிகள் தான்.
அரண்மனை சிம்மாசனம் சிறைச்சாலை போர்க்களம் என்று அட்டகாசமானசெட்டுகளுடன் கனல் பறக்கும் வசனங்களுடன் சிறந்த நடிப்பாற்றலுடன்அரங்கு கண்டது இந்த ‘செழியன்துறவு’.
செழியன் பேசும் வசனங்களை–நாடகத்தைப் பார்த்தபலமாணவர்கள்தொடர்ந்துபேசிக்கொண்டிருந்தனர். அந்தளவுக்கு நாடகம் மாணவர்களைப் பெரிதும்ஈர்த்தது.
இதே நாடகம்மகுடம்காத்தமங்கை -வெற்றித் திருமகள்முதலானபெயர்களிலும்பல தடவைகள் மேடையேறின.
நாடகத்தை எழுதியவரும்நாடகத்தை இயக்கியவரும்சோமஸ்கந்தர்தான். இந்தநாடகத்தின் வெற்றிக்காக ஊண்உறக்கம்பாராது இவர்உழைத்தபோதுபக்கபலமாகநின்றவர்கள் பண்டிதர் மயில்வாகனனும் நிக்கலஸ் மாஸ்டரும்தான்.

இந்தக் கூட்டணியே முதல் முதலாகஇப்பாடசாலையில்மாணவர்களை புலமைப்பரிசில்பரீட்சையில்சித்தியடையச்செய்தது.இலவசமாகடியூசன்வகுப்புக்களைநடத்திபயிற்சி வழங்கினார். குறிப்பிட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்துகொண்டு எனது பெற்றோரின் சம்மதம் பெறுவதற்கு ஒருநாள் இரவு அவர் வரும்பொழுது நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தேன். இத்தகைய அபூர்வமான ஆசிரியர்களை இக்காலத்தில் காண்பது அரிது. பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இவர்களின்கால்களைப்பணிந்துஆசிர்வாதம்பெற்ற பின்பே புதிய கல்லூரிக்குச் சென்றார்கள். அந்தமாணவர்களில் நானும் ஒருவன்.
யாழ்ப்பாணத்தில்ஸ்ரான்லிகல்லூரியில் (தற்போதையகனகரத்தினம்மத்தியகல்லூரி) அனுமதிக்கப்பட்டு அங்கு கல்விபயின்ற காலத்தில் யாழ். நகரமண்டபத்தில்நாடகம்ஒன்றை மேடையேற்றவந்த சோமஸ்கந்தர் – எமதுகல்லூரிக்கும்ஒருநாடகம்எழுதிக்கொடுத்துச்சென்றார்.

அக்காலத்தில்பிரபல்யமாகவிளங்கியபட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின்“எங்கள்திராவிடப் பொன்னாடே” என்ற பாடலின் மெட்டை வைத்து “எங்கள்ஈழத்திருநாடே”என்றபாடலை இயற்றினார்.
ஈழமாதாவை–ஒருபெரியஇலங்கை வரைபடத்தின் முன்னே நிறுத்திவைத்து – இலங்கையின் தொழில்வளம், இயற்கைவளம் ,அரசியல் தலைவர்கள் பற்றியெல்லாம் சித்திரித்துமிகச் சிறந்தஇசையும் – பாட்டும்நடிப்பும்கலந்தபுதுமையானநிகழ்ச்சியைமாணவர்களைக் கொண்டு தயாரித்தளித்தார்.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துபறிக்கும்பெண்கள்வயல்வெளிகளில் நாற்றுநடும் பெண்கள் மன்னாரில் முத்துக்குளிக்கும் தொழிலாளர்கள் என்று தேசத்தின் உழைப்பாளர்களை மேடையில் சித்திரித்தார்.இந்தப் பாடலும் நீண்டகாலம் மாணவர்களிடையே ஒலித்துக்கொண்டிருந்தது. விவேகானந்தாவித்தியாலயம் – பெயரும்புகழும் பெறுவதற்கு மிகுந்தஅர்ப்பணிப்புடன்செயல்பட்டவர் சோமஸ்கந்தர்.
பின்னாளில் மலையகத்தில் ராகலையில் பணிபுரியச் சென்றார்.சிறந்தமேடைப் பேச்சாளரான இவரை அரசியல்வாதிகளும்விட்டு வைக்கவில்லையென்பது கவலையானசெய்தி.மக்களைக்கவரும் வண்ணம்பேசத் தெரிந்தவரைஅந்நாளில்பிரபல்யமாக விளங்கிய ஒருஅமைச்சர் தான்சார்ந்தகட்சியின்தேர்தல்பிரசாரத்தில்இவரைப்பயன்படுத்தினார்.
இவரது வாழ்விலும் – உயர்விலும் தாழ்விலும் எப்போதும் பங்கு கொண்டநிக்கலஸ்மாஸ்டர் மிகவும் சுவாரஸ்யமான பேர்வழி. நகைச்சுவையுடன் பேசுவார்.
சோமாஸ்கந்தர்அரசியல்மேடைகளில்ஏறியதைப்பார்த்துவிட்டு“தேர்தல்முடியவும் பெட்டியைத் தூக்கத் தயாராகுங்கள்”–என்று சிநேகபூர்வமாக எச்சரித்தார்.
இறுதியில்அதுவேநடந்தது.சோமஸ்கந்தர்அரசியல்ரீதியாகப்பழிவாங்கப்பட்டுஇடமாற்றப்பட்டார். புத்தளத்துக்கு சமீபமாகஒருதீவில்உள்ளசாதாரணபாடசாலைக்கு அவர் செல்லநேர்ந்தது. அத்தீவுக்கு படகில்தான்செல்லவேண்டும்.சோமாஸ்கந்தர் தமது ஊரான உடப்பிலிருந்து பயணித்தார்.
எனினும் சோர்ந்து போகாமல் – ஊரில்பலசமூகசமயகலைப்பணிகளில்ஈடுபட்டார். உள்ளார்ந்தஆற்றல் மிக்ககலைஞன் எங்கே வாழநேர்ந்தாலும் அழிந்துவிடமாட்டான்என்பதற்கு சோமஸ்கந்தரும் ஒரு உதாரணம்.
இவரால் நீர்கொழும்பு தமிழ் மக்கள் மட்டுமல்ல உடப்பூர் மக்களும் பெருமைபெற்றனர்.
கருத்தோவியன் ,சொல்லிசைச்செல்வன், வில்லிசைவேந்தன் ,அருட்கலைத்திலகம் கலாபூஷணம் முதலானபட்டங்கள் இவரை அலங்கரித்தாலும் “உடப்பூரான்”என்றதும் நினைவுக்கு வரும் இவரது பெயர்.
2001 ஏப்ரல்மாதமல்லிகை சோமஸ்கந்தரின்படத்தை அட்டையில் தாங்கியது. இவரதுசீடர்களில்ஒருவரான உடப்பூர் வீரசொக்கன் அந்த இதழில் விரிவானகட்டுரையே எழுதியிருக்கிறார்.

23.12.1997இல்எனக்கு இவர்எழுதிய கடிதம் பின்பு‘கடிதங்கள்’நூலிலும்இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் மலேசியாவிலும் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியவருக்கு அவுஸ்திரேலியாவுக்கும் வர விருப்பம்இருந்தது.

மூன்றாம்தர சினிமாப்படங்களைதருவிக்கும் – காலம் பூராவுமே காற்றோடு பேசி‘தமிழ்முழக்கம்’செய்துகொண்டிருக்கும் தமிழக பேச்சாளர்களை இறக்குமதி செய்யும் இந்நாட்டு புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள்“ஈழம்” குறித்து உரத்துப்பேசுவார்கள். – ஆனால் ஈழத்து கலைஞர்களை ஈழத்து படைப்பாளிகளைக்கண்டு கொள்வதில்லை. இந்தக் கசப்பான அனுபவம் தொடர்ந்தும் மனதை அரிக்கும் வேளையில் சோமஸ்கந்தரின் கடிதமும்வேண்டுகோளுடன்வந்தது. இங்குள்ளசூழ்நிலையை அவருக்கு விளக்கிஎழுதியபதில் அவருக்குகிடைத்ததோ தெரியவில்லை.
அவரும் இருதயநோயாளியாகி சத்திரசிகிச்சைக்குத்தயாரானவேளையில்எதிர்பாராதவிதமாக – நானும் மாரடைப்பால் படுக்கையைத் தஞ்சமடைந்தேன்.
நான் எழுந்தவேளையில் – அவர் விடைபெற்றார்.
பலசோதனைகளை – வேதனைகளைக் கடந்து வந்த கலைஞன் சோமஸ்கந்தர்என்பதுஅவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கே தெரியும்.

“வடமேல்மாகாணத்தில்ஒளிக்கீற்று”என்று உடப்பூர் வீரசொக்கன் சொல்வது அர்த்தம் மிக்க வரிகள்.

இயற்கையை நேசித்த மனிதகுலமே இயற்கையையும் அழித்திருக்கிறது. டியூப்வெல் என்ற புதிய நாகரீகம் தோன்றியதும் நன்னீர் ஊற்றுக்கள் மடிந்துவிட்டன. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் உடப்பூருக்குச்சென்றேன்.
வன்னியில் கடற்றொழில் நிமித்தம் இடம்பெயர்ந்து வாழ்ந்த உடப்பூர்தமிழ்க் குடும்பம் ஒன்றில் தமது தாயையும் தந்தையையும் போரில் இழந்துவிட்டு நிர்க்கதியான நிலைமையில் உடப்பூருக்கு பேத்தியாரிடம் வந்து சேர்ந்த மூன்று பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்காக 2010 இல் அங்கு சென்றேன்.அந்தப்பிள்ளைகளை எமது கல்வி நிதியபராமரிப்பில் இணைத்துவிட்டு ஊற்றுக்கிணறுகளை தேடிச்சென்றேன். ஆனால் அவை தென்படவில்லை.உடப்பூர் சோமஸ்கந்தர் போன்று அந்த ஊற்றுக்கிணறுகளும் நினைவில்தான் தங்கிவிட்டன.
letchumananm@gmail.com

“கலைஞர் உடப்பூர் சோமஸ்கந்தர்” அதற்கு 3 மறுமொழிகள்

  1. தகவல் நிறைந்த உங்கள் கட்டுரைக்கு நன்றி. 80பதுகளின் கடைசியில் சின்னமணி வில்லிசை கோலோச்சிய காலத்தில், உடப்பூர் சோமாஸ்கந்தனின் வில்லிசையையும் எமதூர் (வேலணை ) கோவில்களில் கேட்ட ஞாபகம் நினைவில் வருகிறது.

  2. சோமஸ்கந்தர் இராகலையில் கற்பித்தபோது நானும் அவரோடு இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உப அதிபராக கடமை செய்தேன். அங்கு இருக்கும்போதுதான் முதன் முதலாக வில்லுப்ப்பாட்டினை அரங்கேற்றம் செய்தார் . இராகலை கதிர்வேலாயுத சுவாமி கோவில் திருவிழாதான் அவரது முதலாவது வில்லுப்பாட்டு அரங்கேற்றம்.அவரோடு ப நானும் விடுமுறையில் உடப்பூர் சென்றேன். மறக்க முடியாத அனுபவம். நல்ல மனித நேயம் மிக்க மனிதர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: