நடேசன்
தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் கப்பலின் மேல்தட்டில் என்னுடன் மேலும் சிலர் இருந்தார்கள் . அவர்கள் கொண்டுவந்த மூட்டை முடிச்சுக்கள் அவர்களை மலையகத்தில் இருந்து வந்தவர்களாக அடையாளம் காட்டியது.
கண்ணுக்கு எட்டியதாகவிருந்த மன்னார் கடற்கரையை முற்றாக மறையும் வரையும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தேன். கலங்கிய கண்களும் கனத்த இதயமும் கொண்டவனாக மனதை அசைபோட்டேன்.
நாட்டை விட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பணம் முதலான காரணங்களால் பிரியும்போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் இரண்டு வயதே நிரம்பாத மகனையும் விட்டு எதற்கு பரதேசம் போகிறோம் என்பது தெரியாமல் எனது பயணம் தொடங்குகிறது. குருட்டுப் பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப் பயணம்.
கண்ணுக்கு எட்டியவரையும் கடலாகத் தெரிந்தது பாக்கு நீரிணை.
எவருக்கும் நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது இலகுவான விடயமல்ல. சுற்றம் நண்பர்கள் என்ற புறக்காரணிகளோடு அனைத்திலும் வெறுப்பை ஏற்படுத்தவேண்டும் ஆனால் அது எனக்கு சாத்தியம அல்ல, நாம் இருக்கும் நாட்டை வெறுப்பது. அதிலும் அரசாங்க வேலை. மனைவிக்கு வீட்டுக்கு பக்கத்தில் வேலை. பிள்ளைகளைப் பார்க்க மாமா,மாமி என சகல வசதிகளோடு இருந்த எனக்கு இந்தியப்பயணம் எனக்கே புரியாத புதிராக இருந்தது. எனக்கே புரியாதபோது எனது அம்மா சகோதரங்களுக்கோ மனைவி மாமா மாமிக்கோ எப்படிப் புரியும்?
மதவாச்சியில் 83 இனக்கலவரத்தின்போது வேலை செய்துவிட்டு அதன்பின் மூன்றுமாதங்களை ஏதும் செய்யாமல் செலவிட்டேன். 1983 நவம்பர் மாதத்தில் இராகலையில் அரசாங்க மிருக வைத்தியராக வேலைக்குச் சேர்ந்தேன். இராகலை சென்றதும் புது அனுபவமாக இருந்தது. வரட்சியான யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு குளிர்பிரதேசம் மாற்றமாக இருந்தது. ஆனால் நான் அதற்குத் தயாராகச் செல்லாதபடியால் முதல் இரண்டு நாட்கள் குளிரில் நித்திரை கொள்ள முடியவில்லை. பின்பு நுவரெலியாவில் எனது நண்பனது குவாட்டசில் சென்று தங்கினேன். அதன்பின் குளிருக்கான பெட்சீட், கம்பளி உடைகளோடு இராகலை வந்து சேர்ந்தேன்.
இறாகலையில் எனக்குப் பிடித்தவிடயம் 83 ஜுலைக்கலவரத்தில் எதுவித பாதிப்பும் தமிழர் கடைகளுக்கு ஏற்படவில்லை. இதற்குக் காரணம் அந்தப்பகுதி பாராளுமன்ற அங்கத்தவரும் நுவரெலிய மாவட்ட அமைச்சருமான ரேணுகா ஹேரத் கலவரம் நடந்த மூன்று நாட்களும்; இரவு பகலாக கணவனுடன் ஜீப்பில் சென்று தீயசக்திகள், கடைகளுக்கு தீவைப்பதை தடுத்தார். இவ்வளவுக்கும் ரேணுகா ஹேரத்திற்கு முப்பது வயதுதான் இருக்கும். அதே வேளையில் சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நுவரெலியாவில் அமைச்சர் இராஜதுரையின் மகள் டொக்டராக வேலை பார்த்தார். அவரை ஹெலிகப்டரில் ஏற்றிக்கொண்டு அப்போதைய பெருந்தோட்ட அமைச்சர் காமினி திசநாயக்க சென்றதன் பின்னர் நுவரேலிய கடைவீதிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதற்குக் கூட இனவாதம் காரணமில்லை.
அக்காலத்து அமைச்சர் தொண்டமானுக்கும் காமினி திசநாயக்காவுக்கும் இருந்த தொழிற்சங்க போட்டியே காரணம். இருவரும் இரண்டு தொழிற்சங்கங்களுக்கு தலைமை வகித்ததால் வந்தவினையாகும். இப்படி இலங்கையில் பல விடயங்களுக்கு அரசியலவாதிகளே காரணம். மூவின மக்களைப் பொறுத்தவரையில் அமைதியான வாழ்வையே விரும்பினார்கள்.
84ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறாகலை சூரியகாந்தித்தோட்டத்தில் நடந்த சம்பவம் எனது பயணத்திற்கு உடனடிக் காரணமாக இருந்தது.
எனது மிருகவைத்திய அலுவலகம் சூரியகாந்தித் தோட்டத்தில் இருந்தாலும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு சற்று விலகியே அமைந்திருந்தது. எனது தங்குமிடம் அந்த கட்டிடத்தின் ஒரு அறையேயாகும். மலையகத்து காலை நேரம் மிகவும் இரம்மியமானது. ஈரமுகில்களால் போரத்தப்பட்டு இரவில் நனைந்த தேயிலைச்செடிகள் கண்ணுக்கெட்டிய தூரம் பரந்திருக்கும். இடைக்கிடையே தொழிலாளர் குடியிருப்புகள், மற்றைய உத்தியோகத்தவர்களது இல்லங்கள் பச்சைவண்ண கம்பளத்தில் புள்ளிகள்போடும். தூரத்து மலைகளில் படிந்திருந்த சோம்பேறியான முகில்கள் மெதுவாக கலைவதும் கண்களுக்கு இதமானவை. தேயிலைத் தொழிற்சாலையில வறுக்கப்படும் தேயிலைத் துளிர்களில் இருந்து பரவும் நறுமணம் காற்றோடு கலந்து வரும் அந்த காலை வேளையை சிறிது நேரம் இரசித்துவிட்டுத்தான் எனது வேலையைத் தொடங்குவேன்.
காலைப்பொழுது புலரும்வேளையில் எழுந்து பார்த்தால் தொழிலாளர்களது குடியிருப்புகளின் கூரையிலிருந்து எழும் புகை தெரியும். ஆனால் நான் அன்று பார்த்தது அவர்களின் அன்றாட சமையலின்போது வரும் புகையல்ல.
பல காம்பராக்களில் கூரைகளைக் காணவில்லை. விடயத்தை ஆராய ஆவலாக இருந்ததால் எனது உதவியாளரான இரத்தினத்தை எதிர்பார்த்திருந்தேன். இரத்தினம் அந்தத் தோட்டத்தில் வசிப்பது எனக்குத் தெரியும்..
இரத்தினம் சிறுதி நேரத்தில் கலவரமான முகத்துடன் வந்தான்.
‘இரவு நடந்தது தெரியுமா?’ எனக்கேட்டான்.
‘இல்லையே’
‘நடு இரவில் சிங்களவர்கள் கிராமத்தில் இருந்து வந்து நெருப்பு வைத்துவிட்டார்கள். தொழிலாளர்கள் எல்லாம் குடும்பத்துடன் தேயிலை செடிகளுக்கு மறைவிலும் மலைப்பாறை இடையிலும பதுங்கி இருந்து விட்டு இப்பதான் வருகிறார்கள்.’
‘என்ன நடந்தது?’
‘சின்னத்துரையை ஒரு தொழிலாளி குத்தியதால், குத்து வாங்கிய சின்னத்துரை சிங்கள கிராமத்தவர்களிடம் போய் சொல்லியதால் இந்த காம்பரா எரிப்பு நடந்தது.’
மேலும் அவனைத் துருவியபோது, தோட்டத்தில் நிர்வாகியாக சுப்பிரிண்டனும் அவருக்கு உதவியாக ஒருவரும் இருப்பார்கள். உதவியாக இருப்பவரை சின்னத்துரை என அழைப்பார்கள். சின்னத்துரை தொழிலாளியின் மனைவியை பாலியல் சேட்டை செய்ததால் தொழிலாளியால் குத்தப்பட்டான்.
தமிழ்த் தொழிலாளிகள் இரவில் மனைவி குழந்தைகளுடன் சென்று மலைகளிலும் புதர்களிலும் ஒளித்தனர். இந்தத் தோட்டத்தின் மத்தியில் அமைந்தது இறாகலை மிருக வைத்திய சாலை. தொழிலாளிகள் தேயிலைக் கொழுந்துகள் கிள்ளுவதோடு மாடுகள் வளர்த்தும் பால் கறந்து விற்றும் ஜீவனத்தை நடத்தியவர்கள். இவர்கள் எல்லோரும் பால் உற்பத்தியளர் கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தவர்கள். கிராம பால் கூட்டுறவுசங்கத்திற்கு நான் தலைவரானதால் இவர்களோடு எனக்கு தொடர்பு உள்ளது. இப்படியான தொடர்புகள் இருந்ததால் இரத்தினத்தோடு சென்று தொழிலாளிகளிடம் பேசினேன். அவர்களது துன்பங்களை விசாரித்த போது அவர்களது பயங்களை உணர்ந்தேன்.
இலங்கையில் சிறிய தகராறு இனக்கலவரமாகியது. சூரியகாந்தி தோட்டத்தை சுற்றிய கிராமங்களில் வசிப்பவர்கள் சிங்கள மக்கள். தமிழ்த்தொழிலாளி சின்னத்துரை என்ற சிங்களவரை குத்திது என சின்னத்துரை கிராம மக்களிடம் சென்று சொன்னதால் தமிழன் சிங்களவனை குத்தியதாக தகவல் பரவி இனப்பகையாகியது.
‘பறதெமலோ பலயாங்’ என்றபடி அன்று தோட்டத்து காம்பராக்களை சிங்கள கிராமவாசிகள் எரித்தனர்.
நான் தமிழ்த்தொழிலாளர்களிடம் சென்று பேசியதால்; கொட்டியா என சிலரால் அழைக்கப்பட்டேன்
இந்த கொட்டியா (புலி) என்ற சொல் பெரும்பாலானவர்களால் தமிழர்களுக்கு எதிராக பாவிக்கப்பட்டது. நான் அதைப்பற்றி ஆரம்பத்தில் பொருட்படுத்தவில்லை. ஆனால் பின்பு என்னை நுவரெலிய பொலிஸ் நிலயத்திற்கு அழைத்து விசாரிக்க இருப்பதாக என்னோடு வேலை செய்த சிங்கள இனத்தவர் ஒருவர் மூலம் தகவல் தெரிந்தது
சித்திரை வருடப்பிறப்பிற்கு யாழ்ப்பாணம் செல்ல நினைத்திருந்தபடியால் அப்படியே கொழும்பு சென்று இந்திய விசா எடுத்தேன்
சூரியகாந்தி தோட்டத்தில் நடந்த கலவரம் மட்டுமா என்னை வெளியேறத்தூண்டியது?
நிச்சயமாக என்னை பொலிஸ் விசாரித்தாலும் பிரச்சினை வந்திராது.
வருடப்பிறப்புக்கு வீடு செல்ல முயன்ற போது, எனது மேலதிகாரி இந்தப்பகுதியில் பல மிருகவைத்தியர்கள் லீவில் நிற்பதால் லீவுதரமறுத்தார். உடனே, கண்டியில் உள்ள மேலதிகாரியிடம் பேசி லீவெடுப்பேன் என்று நான் சொன்னது அவருக்கு ஆத்திரமூட்டியது.
இந்தக் காரணங்கள் மட்டுமல்ல.
நிச்சயமாக இதற்கும் மேலான காரணங்கள் இருக்கவேண்டும்.
இந்தியாவில் தமிழ் இளைஞர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் பயிற்சியளிக்கப்படுகிறது என்ற தககவல் பல பத்திரிகைகளில் வந்திருந்தது.
இலங்கையின் தென்பகுதியில் வேலை செய்து கொண்டு எதிர்கால சரித்திரத்தில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ என்ற பயம் வந்தது
இவ்வளவுக்கும் நான் அரசியலில் பெரிதளவில் ஈடுபட்டவன் அல்ல. யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் படித்து முதல்முறையிலேயே பல்கலைக்கழகம் பிரவேசித்தபின் எனது வாழ்க்கை ஒழுங்காக நகர்ந்தது.
இலங்கையில் இன ரீதியான பிளவை ஏற்படுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஏராளமான சிங்கள, இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு இருந்தார்கள்.இன மதம் என்பவை எங்களுக்கு நாங்களாக போட்ட கவசங்கள் என்பது புரிந்தவன். ஆனால் அக்காலப்பகுதியில் எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல்சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில்; ஹோலிபண்டிகையை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வது போல் அரசியல் வாடை என்னைத் தழுவியது
நான் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாலாம் உலக தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நடந்தது, அப்போது நடந்த நிகழ்வுகள் என் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது.
பதினொருவர் இறந்த நாளுக்கு முதல் இரவு (2-01-1974)மூவர் இறந்தனர். இவர்களின் இறப்புக்கு நான் சாட்சியாகினேன். இரவு 8 மணியளவில் மீன்களைப் போல் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியால் வந்து கொண்டிருந்தது. வீதிக்கு மேலாக செல்லும் மின்வயரில் ஊர்தி முட்டியவுடன் மின்சாரவயர் அறுந்தது, அந்த இடத்திலே மூவர் இறந்தார்கள். வயர் அறுந்த போது மின் வெளிச்சம் அணைந்தாலும் நான் நின்ற இடத்துக்கு அருகில் தரையில் போட்ட மீன் போல் ஒருவர் துடித்து இறந்ததை என்னால் பார்க்க முடிந்தது. எங்கள் ஊரில் வலையில் சிக்கி மீன்துடிப்பதைப்போல் இருந்து அவரது மரணம். ஏற்கனவே இறந்தவர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் கண்முன்னே நான் பார்த்த முதலாவது இறப்பு என்ற செயல் கோரமாக நிகழ்ந்தது.
அதிர்ச்சியுடன் வீடு சென்றேன்.
அடுத்தநாள் மகாநாட்டின் கடைசிநாள். ஞானம் மாஸ்ரரிடம் பௌதிகம் பாடம் படித்துவிட்டு நாங்கள் ஐந்து பேராக மாலைநேரம் மகாநாடு நடக்கும் இடத்துக்குச் செல்ல எண்ணினோம். ஞானம் மாஸ்டர் மகாநாட்டு குழுவில் ஒருவராக இருந்ததால் வகுப்பு சீக்கிரம் முடிவடைந்தது.
சைக்கிளை மணிக்கூட்டு கோபுரத்தருகே வசிக்கும் எனது நண்பன் இரத்தினகாந்தனின் வீட்டில் விட்டுவிட்டு அவனுடன் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கிச் சென்றோம். மக்கள் கூட்டம் எங்கும் நிறைந்து வழிந்தது, வடமாகாணத்தில் வசிப்பவர்கள் எல்லோரும் அங்கு வந்துவிட்டார்களா என நினைத்தேன்.
முனியப்பர் கோயில், புல்லுக்குளம் போன்ற பகுதிகள் எமக்குத் தண்ணிபட்ட பாடமானதால் விரைவாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்தோம். மண்டபத்தின் முன்னிலையில் மேடைபோடப்பட்டிருந்தது, நாங்கள் அந்த மேடையின் பின்னால் நின்றோம்.
மேடையில் பலர் பேசினார்கள். ஆனால் அமிர்தலிங்கம் பேசும்போது மக்கள் ஆர்ப்பரித்தார்கள். அமிர்தலிங்கம் பேசி முடித்தவுடன் ஒருவர் மேடையில் ஏறினார். அவரை ஜனார்த்தனன் என மக்கள் கூறினார்கள்.
இரா. ஜனார்த்தனன் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசா கொடுக்கவில்லை என்ற விடயம் எமக்கு முன்பு தெரிந்திருந்தது.
எங்களுக்குப் பக்கத்தில் இருந்த ஒருசிலர் இவர் வள்ளத்தில் வந்தார் எனக் கூறினார்கள்.
பேராசிரியர் நைனார் முகம்மது பேசிக் கொண்டிருக்கும்பொழுது மக்கள் ஜனார்த்தனன் பேசுகிறார் என ஆர்ப்பரித்தார்கள். அப்போது கண்ணாடிகள் நொருங்கும் சத்தம் கேட்டது. அத்துடன் கண்ணீர் புகை குண்டுகளும் எம்மத்தியில் விழுந்தன. சுடுகிறாங்கள், சுடுகிறாங்கள், நிலத்தில் படுங்கள் என பலர் சத்தமிட்டார்கள்.
நான் படுத்ததால் எனக்கு மேல் குறைந்தது பத்துப்பேராவது படுத்திருப்பார்கள்.
திடீரென்று லைட்டுகள் அணைந்தன.எங்கும் கூக்குரலும் அலறலும் எதிரொலித்தது, இருட்டில் நடப்பது தெளிவாகத் தெரியவில்லை. எனக்கு மேல் படுத்தவர்கள் எழும்பிய பின்பு நானும் எழும்பி கண்ணீர்ப் புகையில் எரியும் கண்களை கசக்கியபடி பார்த்தேன். மண்டபத்தின் முன்பகுதியில் நான் நின்ற இரும்பு கேட்டால் அமைக்கப்பட்ட பகுதியில் எவரும் இல்லை. கேட்டை கடந்து செல்ல முயற்சிக்கும் போது கேட்டின் மேல் இருவர் சடலங்களாக தொங்குவது தெரிந்தது, இது என்றோ ஒருநாள் பார்த்த ஆங்கில சண்டைப்படத்தை நினைவுக்கு வந்தது.
மின்சாரவயர் ஒன்று பக்கத்தில் கிடந்தது,
கேட்டிலும் மின்சாரம் பாயலாம் என்று நினைத்து கேட்டின் மேல் பாய்ந்து யாழ்ப்பாணம் தபால் நிலையம் நோக்கி ஓடினேன்.
என்னுடன் வந்த நண்பர்கள் எங்கு சென்றார்களோ எனக்குத் தெரியாது. தபால் நிலையத்தில் ஒரு தாயும் சிறுமியும் என்னுடைய கையைப் பிடித்தபடி சேர்ந்து கொண்டார்கள். அவர்களையும் இழுத்துக் கொண்டு கொட்டடிப் பக்கமாக ஓடினேன். கொட்டடியில் திறந்து இருந்த ஒரு வீட்டினுள் அவர்களை இருந்துவிட்டுப் போகும்படி கூறிவிட்டு, தட்டாத் தெரு சந்தியை நோக்கி ஓட்டமாக வந்து வீட்டை அடைந்தேன்.
இரவு கண்ணீர்புகை ஓட்டம் என்பனவற்றால் சாப்பிட முடியவில்லை. பாலை மட்டும் குடித்துவிட்டு படுத்தேன்.
அடுத்தநாள் காலை சைக்கிளை எடுக்க மீண்டும் சென்றபோது எம்மில் சிலரோடு முதல்நாள் இரவுச்சம்பவம் தொடர்பாக உரையாடினேன்.
வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் செருப்புகள் மலைபோல் குவிந்திருந்தது, பலருடன் பேசியதில் கிடைத்த விபரமாவது: பேராசிரியர் நைனார் முகம்மதுவை மேடையில் பார்த்தவுடன், அவரை இரா. ஜனார்த்தனன் என நினைத்து எஸ்.பி சந்திரசேகராவின் கட்டளையின்படி பொலிசார் மேடையை நோக்கி வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் பொலிசார் மீது செருப்புகளை வீசினர். இதைத் தொடர்ந்து பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை மக்களுக்கு எறிந்ததோடு, துப்பாக்கியால் மேல்நோக்கியும் சுட்டார்கள். துப்பாக்கிவேட்டு மின்சார வயரை தாக்கியதால் வயர் அறுந்து மின்சாரம் தாக்கி சிலர் இறந்தார்கள்.
இந்தத்தகவல்கள் முற்றாகச் சரியா எனக் கூறமுடியாது. ஆனால் அரசாங்கமோ, தமிழ் தலைவர்களோ வேறுவிதமாக சொல்லவில்லை. விசாரணை வைக்கவில்லை.
சிவகுமாரன் எஸ்.பி சந்திரசேகராவை குண்டெறிந்து கொல்ல முனைந்ததற்கும் இந்தத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடுதான் காரணமாகும்.
——-
இந்தியாவில் இராமேஸ்வரக்கரையை அன்று மாலை கப்பல் தொட்டதும், அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. கையில் ஐநூறு அமெரிக்கன் டொலர் இருந்தது. இந்தியப் பணம் எதுவும் இருக்கவில்லை.
வெளியே வந்த என்னை பலர் சூழ்ந்து கொண்டு, ‘என்ன சார் இலங்கையில் இருந்து கொண்டு வந்ந்தீர்கள்?’ எனக்கேட்டனர்.
உயிர்ப்பயத்தையும கவலைகளையும் கொண்டுவந்திருக்கிறேன் எனவா சொல்லமுடியும்?
அக்காலத்தில் சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் இந்தியாவில் கிடைக்காததால் உனக்கு உபயோகமாக இருக்கும் என மன்னாரில் மாமி அவற்றை வாங்கித் தந்திருந்தார். அவற்றை அவர்களிடம் விற்றபோது மூன்னூறு இந்திய ரூபாய்கள் கையில் கிடைத்தது
(தொடரும்
“எக்சோடஸ்1984” மீது ஒரு மறுமொழி
GREAT EXPERIENCE…YOU ARE A GREAT WRITER..PLEASE CONTINUE THIS! GOD BLESS!