நடேசன் (எனது முதலாவது பயண எழுத்து – பத்துவருடம் முன்பாக)
2004 மார்கழி 23ம் திகதி மாலை சூரியன் பலநாடுகளில் தப்பிமறைய அடைக்கலம் கேட்ட இலங்கை தமிழ் அகதிகள் போல்,தென்னை மரங்களின் ஒலைகளுக்கு இடையிலும், பின் வாழைகளின் மறைவிலும், இறுதியில், நெற்கதிர்களில் கூட அடைக்கலம் கிடையாது போய் வெறுப்பில் மேற்குத் திசையில் சங்கமித்துவிட்டான். பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும் – என்கிறார் பாரதியார். பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பார்க்கும் போது பரவசமாக இருந்தது. பக்கத்தில் இருந்த மனைவியிடம்’தேன்னிலவுக்கு வந்திருக்க வேண்டிய இடம் இது’ என்றேன்.
‘உங்கள் பிறந்தநாளுக்கு வந்திருக்கிறோம்’ என்றாள்.
ஜலன்ட் ஒவ் பிளட் என்ற நுாலில் கேரளத்தின் பாக்வாட்டரில் படகு வீட்டில் பிரயாணம் போகும்போது கண்ட காட்சிகளை அனிதா பிரதாப் அழகாக விவரித்திருந்தார். கேரள உல்லாசப் பயணத்துறையை தொடர்பு கொண்டு ஒருபடகு வீட்டை அஸ்திரேலியாவிலிருந்தே வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். பிற்பகலில் ஆலப்புழையில் இரு படகோட்டிகளும் ஒருசமையல்காரர் சகிதம் “கெட்டிவள்ளம்” என்ற படகு வீட்டில் புறப்பட்டோம்.
ஓடாது நின்ற ஆற்றில், நீர்த்தாவரங்கள் பச்சைக் கம்பளமாக நீர்பரப்பை மறைத்திருந்தது. படகின் முன்னும் பின்னும் நெடிய கம்புகளை போட்டு வலித்தபோது படகு நீர்தாவரங்களை ஒதுக்கிக்கொண்டு முன்னே சென்றது. ஆற்றின் கரையில் இருபக்கமும் ஓட்டுவீடுகள், வீடுகளின் பின் பகுதியில் ஓடும் ஆற்றுக்கு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் படிக்கட்டுகள் உளள்து. படிக்கட்டுகளில் பாத்திரம் கழுவும் பெண்கள், ஆற்றில் மூழ்கிக் குளிக்கும் சிறுவர்கள், துாண்டில் போட்டுக் கொண்டு சுருட்டை இழுக்கும் முதியவர்கள், கரையோரத்தில் இருந்து சீட்டு விளையாடும் ஆண்கள் என கரைநெடுக கிராமத்தின் தொழிற்பாடுகள் தெரிந்து. தென்னை, பலா, மா, வாழை எனப் பழமரங்களும் ஆற்றின் இருகரைகளிலும் பச்சை மதில் போல் வளர்ந்திருந்தன. இடைக்கிடை செம்பருத்திப்பூக்கள் பொட்டுவைத்தது போன்று அழகூட்டின. கண்ணுக்கு இனிமையான இக்காட்சியை ரசிக்கும் போது ஜேசுதாசின் பாடல் தென்னைமர உச்சிகளில் கட்டப்பட்ட லவுட்ஸ் ஸ்பீக்கர்களில் இருந்து வந்து காதுவழியே அமுதகானமாக இறங்கியது.
சூரியன் மறையும் வரை ஓடிய படகு, ஓர் கிராமத்துக்கு அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. கேரளத்துக்கே உரிய சுவையுடன் சோறும் மீனும் மரக்கறியுடன் பரிமாறப்பட்டது. பக்கத்து ஊர்கோயிலில் இருந்து பகவத்கீதை பாட்டுருவில் வந்தது. இடைக்கிடை வானத்தில் நட்சத்திர பூக்களாக விரிந்து வெடித்த வாணங்கள் இன்னும் இரண்டு நாளில் நத்தார் பண்டிகை எனக்கட்டியம் கூறின. ஆற்றுநீரைத் தழுவி வீசிய காற்று இலகுவாகப் எம்மை படுக்கைக்கு அழைத்தது.
காலையில் கிராமத்து சேவல் கூவி, துயில் எழும்பி பார்த்தால் யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் மீன்விற்பது போல வள்ளத்தில் வியாபாரிகள், மீன், பாத்திரங்கள், மற்றும் காய்கறிகளை கூவி விற்றார்கள். ஒவ்வொரு படித்துறையிலும் பெண்கள் பேரம் பேசி சாமான் வேண்டிக் கொண்டார்கள். மதியத்துக்கு மீண்டும் ஆலப்புழை வந்த சேர்ந்தோம். இப்படியான கிராமத்து வாழ்க்கை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இந்த இடத்திற்கு மீண்டும் ஒருமுறை வரவேண்டும் என உறுதி செய்துகொண்டோம்.
தென் கேரளத்தில் கடல்பகுதியை அண்டிய நிலப்பகுதியை 44 ஆறுகள், 26 பெரும் குளங்கள், மற்றும் கால்வாய் ஏற்ற வலைப்பின்னலாக அமைந்துள்ளது இந்த பாக்வாட்டர், இதனது மொத்தநீளம் 1500 கிலோமீற்றர் ஆகும். முன்பு இந்த நீர் பகுதியால் சரக்குகள் போக்குவரத்து நடக்கும். முக்கியமாக கொச்சி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு இறக்குமதி சரக்குகள் இந்த பாக்வாட்டரை பயன்படுத்தும். இந்த சரக்குகளை ஏற்ற கெட்டிவள்ளம¥ பயன்படும். இவை மரத்தாலும் தென்னைத்தும்பினாலும் ஆனவை. லொறிகளின் பாவனையின் பின் இந்த கெட்டிவள்ளங்கள் உல்லாசப் பயணிகளுக்கு படகு வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது, அக்காலத்தில் ஊர்காவற்றுறை, அலுப்பாந்திக்கு இந்த கெட்டிவள்ளங்கள் ஓடுகள் கொண்டு வந்துவிட்டு பின் யாழ்ப்பாண புகையிலையை கேரளத்துக்கு கொண்டுவரும். யாழ்ப்பாண புகையிலை இன்னமும் கேரளத்தில் பலர் நினைவு கூர்வார்கள்.
Great to read !