காத்தவராயன் (சிறுகதை)

Auction
முருகபூபதி

கோடைகாலம் வந்துவிட்டால் வியர்த்துக்கொட்டுகிறது. எப்பொழுதும் வீட்டுக்குள் குளிர்சாதனம் இயங்கிக்கொண்டிருக்கும். காரில் ஏறினால் ஸ்டியரிங்கில் கைவைக்கமுடியாது. அவ்வளவு சூடு. வீட்டின் யன்னல்களை திறந்தால் கோடைவெப்பம் உள்ளே வந்துவிடும். ஒருநாளைக்கு இரண்டு தடவையாதல் உடலை தண்ணீரில் நனையவைத்து குளிர்மைப்படுத்தவேண்டும்.
குடும்பத்தை கடற்கரை, பூங்கா வெளியூர் அழைத்துப்போனால் செலவும் அதிகம்.

ஒவ்வொரு கோடைகாலமும் இந்தக் கவலைகளுடன் கழிவதனால் வீட்டை விற்றுவிட்டு நீச்சல்தடாகம் அமைந்த வீடு ஒன்றை பல மாதங்களாகத்தேடிக்கொண்டிருந்தான் ரமேஷ்காந்த்.
மனைவியும் அவனும் பல மாதங்களாக இணையத்திலும் சல்லடைபோட்டுப்பார்த்து, வீடுகள் விற்பனை செய்யும் ரியல்எஸ்டேட் அலுவலகங்களுக்கும் அலைந்து ஒருவாறு அந்த வீட்டை தெரிவுசெய்துகொண்டார்கள். வீடு புதிதாக வாங்குவதானால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கக்கூடாது. கணவனும் மனைவியும் தொழில்பார்க்கும் இடங்கள் தூரத்தில் அமைந்துவிடக்கூடாது.
பூர்வீக அவுஸ்திரேலிய வெள்ளை இன மக்கள் ஒரு வீட்டில் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் வசிப்பது அபூர்வம்.
ரமேஷ்காந்த்தின் மூத்தமகன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம். மகள் பதினொராம் வகுப்பு. மகன் கார் ஓடக்கற்றுக்கொண்டு அனுமதிப்பத்திரமும் எடுத்துவிட்டான். வீட்டில் இரண்டு கார்கள் நிற்கின்றன. ரமேஷ்காந்த்தும் மனைவியும் மகனும் அவற்றை மாறி மாறி பாவித்துக்கொள்கிறார்கள். மகளை காலையில் வெளியே செல்லும் யாராவது ஒருவர் அவளது பாடசாலையில் இறக்கிவிட்டுவிடுவார்கள். மகளுக்கும் பத்தாம்வகுப்பிலேயே கார் கனவு வந்துவிட்டது. பல்கலைக்கழகம் பிரவேசித்தால் கார் வாங்கித்தருவதாக மூத்தவனுக்கு அளித்த வாக்குறுதியை அப்பா நிறைவேற்றியதனால் தானும் பல்கலைக்கழகம் பிரவேசிக்கும்போது கார் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மகள் சிந்துஜா படிப்பில் கூடுதல் கவனம் எடுக்கிறாள்.
ரமேஷ்காந்த்தும் மனைவி ரஞ்சிதமும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் இடத்தில் கேர்ள்ஃபிரண்ட், போய் ஃபிரண்ட் தேடிக்கொள்ளாமல் நல்லபிள்ளைகளாக வளரவேண்டும் என்பதையே தினசரி பிரார்த்தனையாக்கிக்கொண்டனர்.

புதியவீட்டுக்கு குடிவந்தபின்னர் நெருங்கிய குடும்ப நண்பர்களை முறைவைத்து அழைத்து விருந்து வழங்கி உபசரிக்கவிரும்பினார்கள். ஒரேநாளில் எல்லோரையும் அழைத்து சிரமப்பட தம்பதியர் விரும்பவில்லை.

கோடைகால விடுமுறையும் அவர்களுக்கு வசதியாகிவிட்டது. சில குடும்ப நண்பர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். சிலர் தாய்நாடு இலங்கைக்கு பயணித்தார்கள். மேலும் சிலர் உள்நாட்டிலேயே சிட்னி, கன்பரா, பிரிஸ்பேர்ன், என்று புறப்பட்டுவிட்டார்கள்.

வீட்டுக்கு விருந்துக்கு ஆட்களை அழைக்கும்போதும் முன்னெச்சரிக்கை தேவை. சீட்டுப்பிடித்து முரண்பட்டு பகைத்துக்கொண்டவர்கள், வெறும் ஈகோவால் முகங்களில் விழிப்பதை தவிர்த்துக்கொள்பவர்கள், விருந்துகளில் குழப்பம் விளைவிப்பவர்கள்…. இத்தியாதி ரகங்களில்; பலர் இருப்பதனால், யார் யார், யாருடன் சிநேகம், யார் யார், யாருடன் கோபம் என்பதையெல்லாம் நன்கு தெரிந்துவைத்துக்கொண்டுதான் வீட்டுக்கு அழைக்கவேண்டும். இல்லையேல் வந்த இடத்தில் முகங்களை ‘உம்’ மென்றுவைத்திருப்பார்கள். சங்கடமாக இருக்கும்.
திருமணங்களுக்கான வண்ணவண்ண அழைப்பிதழ்கள் அனுப்பும்போதே, வருவதை முற்கூட்டியே ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அதில் சிறு வரி அச்சிடப்படுவதன் சூட்சுமம் இங்கு பலருக்கும் தெரிந்ததுதான்.

வருவது நிச்சயமானது என்பது ஊர்ஜிதமானதும் வருபவர்களின் நட்புவட்டாரம், குணாதிசயம் அறிந்து அதற்கு ஏற்றவாறு விருந்து மேசைகளுக்கு இலக்கம் இடப்படும். புகலிடத்தில் இந்த நாகரீகத்தை நன்கு தெரிந்திருந்தமையால் புதிய வீடு வாங்கியதும் குடும்ப நண்பர்களை அழைப்பதில் ரமேஷ்காந்த் தம்பதியர் முன்னெச்சரிக்கையாகவே இருந்தனர்.

ஒரு சனிக்கிழமைநாள் ஐயரை அழைத்து கிரகப்பிரவேச பூசையை செய்தார்கள். ரமேஷ்காந்த் ஐயரை தனது காரில் அழைத்துவந்து அந்தச்சடங்கு முடிந்ததும் அவர் பணியிலிருக்கும் கோயிலில் இறக்கிவிட்டான். அந்த ஐயரும் ஓமம் வளர்த்து தீபாராதனை காட்டி நீற்றுப்பூசனிக்காயை தொங்கவிட்டபொழுதும்… குளியலறை, மலகூடம் தவிர்த்து, ஏனைய அறைகளுக்கு மந்திரித்த நீரை தெளித்தவேளையும் மாத்திரமே தெரியாத புரியாத மந்திரங்கள் ஓதினார்.
காரில் வரும்பொழுதும் திரும்பும்பொழுதும் தனக்குத்தெரிந்த அரசியல்தான பேசினார். அவரும் தொழில் முறைவிஸாவில் வந்துவிட்டு இலங்கையில் பயங்கரவாதம் தொடர்வதாகச்சொல்லியே நிரந்தர குடியுரிமையும் பெற்று குடும்பத்தை அழைத்தவர்தான். அவர் இலங்கை அரசியலுடன், அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பற்றியெல்லாம் பேசினார்.

கிடைத்தால் அவருக்கும் நன்மைதான் என்று ரமேஷ்காந்த் தனக்குள் நினைத்துக்கொண்டான். வந்தவர்கள் உழைத்து சம்பாதித்து வீடுகள் வாங்கினால் புதுமனை புகுவிழாவுக்கு அவரையும் அழைக்கலாம் என்ற நம்பிக்கை அவரது பேச்சில் தொனித்தது.

“ இம்முறை தம்பி அரசாங்கம் தப்பாது. இந்தியா நிச்சயம் சப்போர்ட் பண்ணும் தம்பி. போர்க்குற்ற விசாரணை நிச்சயம் நடக்கும்… தம்பி இருந்துபாருங்கோ…” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். குடும்பம் வந்துவிட்ட தைரியம் அவரது பேச்சிலிருந்தது.

“தமிழ்நாடு எங்கட தொப்புள் கொடி தம்பி. பாருங்கோ.. .கெதியா சீமான், வைகோ, நெடுமாறன்… எல்லோரும் களத்தில் மீண்டும் இறங்குவாங்கள். என்ன கவலையெண்டால் எத்தனை கொழுந்துகள் தீக்குளிக்கப்போகுதோ என்பதுதான்.”

ஐயர் அத்துடன் நிறுத்தியிருந்தால் ரமேஷ்காந்த் வியப்புற்றிருக்கமாட்டான். அவர் அதற்கும்மேல் ஒரு படி சென்று, “ சீதை தீக்குளிச்சவள் தம்பி… தான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க தீக்குளிச்சவள். அதுபோல எங்கட போராட்டமும் சரியானது என்பதை நிரூபிக்கவும் தீக்குளிக்கிறாங்கள்.” என்றார்.

தீக்குளிச்ச சீதையை திரும்பவும் இராமன் காட்டுக்கு அனுப்பிய வால்மீகி இராமாயணக்கதையை ஐயர் மறந்துவிட்டதும் ரமேஷ்காந்துக்கு வியப்பானதுதான்.
…………………………..

ஐயரின் வருகைக்கு அடுத்த சனிக்கிழமையும் கோடை சற்று உக்கிரம்தான். விருந்தினர்களுக்காக கூடுதலாகவே பியர் போத்தல்கள் வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தான்.
முதிய உணவு, ரமேஷ்காந்த் குடும்பத்துடன் இருபது பேருக்குத் தயாரிக்கவேண்டும். வரவிருப்பது மூன்று குடும்பங்கள். மதியபோசனவிருந்தை சோறு, கறியுடன் தயாரிக்காமல் பாபர்கியூ மூலம் சமாளிக்கவே ரஞ்சிதம் விரும்பினாள்.

“ வெய்யில் காலமப்பா… அதிகாலையே எழுந்து சமைச்சாலும் பழுதாகிப்போகும். கறிகளை முதல் நாள் சமைச்சுவைத்தாலும் ஃபிறிட்ஜில் வைக்க இடமில்லை. பியர்போத்தலா அடுக்கிப்போட்டீங்க…” என்று ரஞ்சிதம கவலைப்பட்டதனால், பாபர்கியூவுக்குத் தேவையான இறைச்சிவகைகள், சலாட் வகைகள், தக்காளி, சோயா சோஸ் வகைகளையும் உருளைக்கிழங்கு, சோளம் சிப்ஸ் பக்கட்டுகளையும் வாங்கிவந்துவிட்டார்கள்.

பிள்ளைகளுக்கும் புதிய வீட்டில் நடக்கவிருக்கும் முதலாவது பாபர்கியூ விருந்து என்பதானல் உற்சாகமிகுதியால் வீட்டின் பின்புறத்தை துப்புரவாக்கினார்கள். நீச்சல் தடாகத்தில் மிதந்த சருகுகளை அகற்றினார்கள். வீட்டுக்கு வரவிருக்கும் தமது வயது சிநேகிதி, சிநேகிதர்களுடன் அந்தத் தடாகத்தில் நீந்தி கும்மாளம் கொட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் அந்த சனிக்கிழமைக்காக காத்திருந்தார்கள்.

சனிக்கிழமையானதும் காலையிலேயே இரண்டு கோல்கள் வந்துவிட்டன. ரஞ்சிதத்தின் சிநேகிதிகள் பிரபாவும், சந்திராவும் தாங்களும், தங்கள் பங்கிற்கு மீன் கட்லட்டும் ரோல்ஸ்ஸ_ம் சலாட்டும் கொண்டுவருவதாகச்சொன்னார்கள்.
…………………….
சனிக்கிழமை.

சூரியபகவான் குறைவின்றி வெப்பத்தை பொழிந்தார். ரமேஷ்காந்த்தின் வீட்டு முற்றத்தில் மூன்று கார்கள் தரிப்பதற்கு போதிய இடம் இருக்கிறது. விருந்தினர்கள் வந்ததும் வீடு கலகலப்பாகியது.

ரமேஷ்காந்த்தின் மகள் சிந்துஜா…. தனது தோழிகளுடன் நீச்சல் தடாகத்துக்கு வந்தாள்.

மகன் ஆகாஷ் நண்பர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு அருகாமையிலிருந்த மைதானத்தில் கிரிக்கட் விளையாடத்தயாரானான்.
“ தம்பி… கையோட கொஞ்சம் சிப்சும் கூல்ட்ரிங்ஸ்ஸ_ம் எடுத்துக்கொண்டு போ…” என்று மகனிடம் சொன்னாள் தாய்.
வீட்டின் பின்புறத்தில் மீண்டும் கலகலப்பு தொடங்கியது. முதல் நாள் கூட்டுவகை சேர்த்து பதப்படுத்திவைத்திருந்த இறைச்சியை பாபர்கியூ தட்டில் வாட்டும் வேலையை செல்வரத்தினம் அங்கிள் தொடங்கினார். அதில் தான் அனுபவம் உள்ளவர் எனச்சொல்லிக்கொண்டதனால் ரமேஷ்காந்த் அவரிடமே அந்தப்பொறுப்பை விட்டுவிட்டான்.

“ குளிர் குளிர் என்றோம்… இப்ப வெய்யில் என்கிறோம்…” எனச்சொல்லியவாறு ரமேஷ்காந்த் பெண்கள் தவிர்ந்த அனைவருக்கும் பெரிய கண்ணாடி தம்ளர்களில் பியரை வார்த்துக்கொடுத்தான்.

வீட்டினுள்ளே…. வைன் அருந்தும் பழக்கமுள்ள பெண்களுக்கு ரஞ்சிதம் அதற்குரிய கண்ணாடிக்கிண்ணங்களில் வைனை ஊற்றிக்கொடுத்தாள்.

சிலர் தோடம்பழச்சாறு, அப்பிள் ஜூஸ் அருந்தினர்.
வெளியே இலங்கை அரசியல் வெய்யிலிலும், இறைச்சி தகனத்திலும் நன்றாக வாட்டப்பட்டன.

“ ஐஸே… உவங்கள் திமிர் புடிச்சவங்கள். அடங்கமாட்டாங்கள். ஆனால் அடக்கவேணும். எல்லாத்துக்கும் இந்தியாதான் காரணம். இந்த முறை அமெரிக்காவின்ர தீர்மானத்தை திருத்தம் சமரசம் இல்லாமல் ஜெனீவாவில் ஆதரிக்காட்டி… பாரும் ஐஸே… பிறகு அடுத்த எலக்ஷன்ல பி.ஜே.பி. தான் வரும். ஜெயலலிதா இந்தியப்பிரதமராக வந்தாலும் ஆச்சரியமில்லை. ரமேஷ் எனக்கொரு பியர்…” என்றார் செல்வரத்தினம்.

“ நவநீதம்பிள்ளை சொன்ன பேச்சைக்கேட்டாங்களோ… பான்கீமுனை சமாளிச்சமாதிரி அந்தப்பொம்பிளையையும் ஏமாற்றிப்போட்டாங்கள்.” என்றான் ரமேஷ்காந்த்தின் மற்றுமொரு நண்பன் சத்தியசீலன்.

“ சீலன் என்ன விசர்க்கதை கதைக்கிறீர்…. அமெரிக்காவின்ர றொபர்ட் பிளேக்கிற்கு தண்ணிகாட்டுனவுங்களுக்கு நவநீதம்பிள்ளை தூசு ஐஸே… பாருமேன் அந்த சுப்பிரமணியசாமி அமெரிக்காவுக்குப்போய் நாடகம் ஆடத்தான் போறார்….” என்றான் மற்றுமொரு சிநேகிதன் குணரத்தினம்.

“ அதுவரையும் சீமான்ட ஆட்கள் தமிழ்நாட்டில கையை பிசைஞ்சுகொண்டிருக்க மாட்டினம் ஐஸே…” என்று சொன்ன செல்வரத்தினம், “அது சரி ஐஸே… அது யார் றொபர்ட்பிளேக்… எனக்கெண்டால் புதுப்பெயராக இருக்குது.” என்று தனது ஐயப்பாட்டையும் கேட்டார்.

“அது அங்கிள்…. அமெரிக்காவின்ற செயலாளர் ஒருத்தர்.” என்றான் குணரத்தினம்.

“ என்ன கோதாரியோ… .எத்தனைபேர் பேசிப்போட்டினம்… எல்லாம் இப்போது ஜியோ பொலிட்டிக்ஸ் ஆகிட்டுது… வந்த அரசாங்கம் எல்லாம் தமிழரை ஏமாத்திப்போட்டுது.” – சீலன்.

“ அதனாலதானே… நாங்கள் எல்லாம் இங்க வந்தனாங்கள். அவங்கள் ஏமாத்தாட்டி வந்திருப்போமா…?- குணரத்தினம்.

“ அங்கிள்… நான் அகதியாக வரயில்லை… ஸ்கில் மைக்கிரேஷன்லதான் என்ர குடும்பம் வந்தது” என்று சொன்ன சீலனுக்கு இரண்டு கிளாஸ் பியர் உள்ளே சென்றதுமே கண்கள் சிவந்துவிட்டன.

ரஞ்சிதம் அவர்களுக்கு சிநேகிதி கொண்டுவந்திருந்த கட்லட்டை பகிர்ந்துகொண்டே கேட்டாள், “ என்ன அங்கிள்… நீங்கதான் இன்றைக்கு நளபாகமோ…. ரெடியா….”

“ கொஞ்சம் பொறுபிள்ளை…. இறைச்சி நல்லா வேகவேணும்….” என்றார் செல்வரத்தினம்.

“ இவையள் இங்க நல்லா வேகினம் அங்கிள்”

“ கவலை வேண்டாம். நோ… வொரீஸ்… கையில் பியரும் வாயில் அரசியலும் இருக்கு…. வேகமாட்டோம்.” என்றான் சீலன்.

அங்கு சில கணங்கள் மௌனம். எல்லோரும் செல்வரத்தினம் பக்குவமாக பாபர்கியூ இறைச்சியை வாட்டுவதை ரசித்தனர்.

“அங்கிளின்ர வேலை மணிதான். தெரியுமே அங்கிள்தான் வீட்டில் கிச்சின் டிபார்ட்மென்ட்…” என்றான் ரமேஷ்காந்த்.

“ அப்போ அங்கிள்தான் அன்ரிக்கு காலையில் பெட்கோப்பி கொடுப்பாரோ…?” என்று குணரத்தினம் சொன்னதும் அங்கு பெரிய சிரிப்பொலி எழுந்தது.

திருமதி சந்திரா குணரத்தினம், “ நாங்கள் வீட்டில் முறைவைத்துத்தான் வேலை செய்யிறது. ஒரு வீக்கெண்ட் நான் வீட்டை சுத்தம் செய்தால் அடுத்தவீக்கெண்ட் அவர். நீங்க சொல்றமாதிரி அவர் ஒன்றும் பெட்கோப்பி போடுறதில்லை. காலையிலே எழுந்ததும் வோர்க் போய்விடுவார். ஆளுக்கு கொலஸ்ரோல் இருக்குது.”

“இனி அரசியலை விட்டுப்போட்டு சமையல், சாப்பாடு, நோய்நொடி எண்டு பேச்சு திசைமாறப்போகுது. அதனால் நாங்கள் விட்ட இடத்திலிருந்து அரசியல் பேசுவோம். லேடீஸ் பிளீஸ்… நீங்கள் அந்த ஸ்விமிங் ஃபூல் பக்கம் போங்கோ… சாப்பாடு ரெடியானதும் கூப்பிடுறோம்….” என்றார் செல்வரத்தினம். மனைவி தனக்கிருக்கும் ஏனைய நோய்நொடிகளையும் அவிட்டு விட்டுவிடுவா என்ற பயம் அவருக்கு வந்துவிட்டது.
பெண்கள் அந்த வீட்டின் பின்புறத்தைப்பார்க்கச்சென்றனர். பூமரக்கன்றுகளையும் ரோஜாச்செடிகளையும் ரசித்தனர். “வீடு பராமரிக்கிறது, மரங்களுக்கு தண்ணிவிடுறது எல்லாம் பெரியவேலைதான்.. .என்ன ரஞ்சி…” என்று அனுபவம்சார்ந்து சொன்னாள் சந்திரா.

கராஜில் செல்வரத்தினம் இறைச்சியை பல வடிவங்களில் வேகவைத்துக்கொண்டிருந்தார். சீலன் பாணுக்கு மாஜரின் தடவினான்.

“சும்மா சொல்லக்கூடாது அங்கிளின் பாபர்கியூவில் ஒரு அழகியல் இருக்குது” என்று ரமேஷ்காந்த் சொன்னதும், அவனை அவர்கள் விநோதமாகப்பார்த்தனர்.

இரண்டுபேர் ஏக குரலில், ” என்ன ரமேஷ் எங்களுக்குத்தெரியாத புரியாத சொல் எல்லாம் சொல்லுறீர்….?” என்றனர்.

“அழகாகச்செய்யிற வேலையை அழகியல் என்பார்கள். இன்னும் சொல்லப்போனால்.. .கலைநேர்த்தியோடு செய்தல்… அங்கிள் என்ன அழகாக பதமாக இறைச்சியை வாட்டுறார் பாருங்கோ…. இறைச்சி கருகிவிடாமல் அளவான சூட்டோடு வேகவைக்கிறார்.”

“ அங்கே கருணாநிதி செய்யிற மாதிரி…. என்று சொல்லும். மனமோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவார். சென்னையில் டெசோ… என்பார். உண்ணாவிரதம் தொடங்குவார். முடிப்பார். அவரும் அங்கிள்போல் அழகியல்வாதி… எண்டு சொல்லும்.” என்றான் சீலன்.

“ கிழிஞ்சுது போ… கடைசியில் என்னையும் அந்தக்கிழவனோட சேர்த்துப்போட்டியல். அந்த ஆள் வீட்டுக்குள்ள நடக்கிற குடும்பச்சண்டையையே சமாளிக்க முடியாமல் அந்தரிக்குது. எங்கட பிரச்சினைக்கா தீர்வு தேடித்தரப்போகுது. எனக்கெண்டால் நாளைய தமிழ்த்தலைவன் பிரபாகரனுக்குப்பிறகு எங்கட செந்தமிழ்ச்செல்வன் சீமான்தான். அவர் வேலுத்தம்பி எண்டும் ஒரு படம் எடுத்தவர் தெரியுமே… என்னிட்ட டிவிடி இருக்குது.” என்றார்

செல்வரத்தினம். அவர் நான்கு கிளாஸ் பியர் குடித்துவிட்டார். மனைவியையும் வந்த பெண்களையும் அவர் அங்கிருந்து அகற்றியதற்கும் காரணம் ரமேஷ்காந்துக்கு புரிந்தது. அவன், அவர் தவிர்ந்து மற்றவர்களுக்கு கண்களினால் சமிக்ஞைசெய்தான்.

“ ஒரு விடயத்தை விட்டுப்போட்டம்… ரமேஷ் சொன்ன அழகியல். எங்கே ஐஸே இந்த தமிழ்ச்சொல் எல்லாம் பொறுக்கிறீர். எனக்கு இப்போ… பல தமிழ்ச்சொற்கள் மறந்துபோச்சுது.” என்றான் சீலன்.

“ உமக்கு சொற்கள்தான் மறந்திட்டுது… எனக்கு தமிழில் எழுதவே முடியுதில்லை. இந்த இலட்சணத்தில் பிள்ளையை தமிழ் வகுப்புக்கு அனுப்பிறன் ஐஸே…” என்றான் குணரத்தினம்.

“ சித்திரமும் கைப்பழக்கம்… செந்தமிழும் நாப்பழக்கம்… .பயிற்சி வேணும் ஐஸே… பயிற்சி வேணும்….” என்றார் செல்வரத்தினம்.

“ நெட்டில் பல விஷயங்களை தமிழில் பார்க்கிறன். அதனால் பல புதிய சொற்கள் தெரியுது” என்று ரமேஷ்காந்த் சொன்னபோது வானம் இருட்டிக்கொண்டு வந்தது. குளிர் காற்றும் பலமாக வீசியது.

“ இதுதான் எங்கட அவுஸ்திரேலியா வெதர். நம்ப முடியாது…” என்றான் சீலன். சுpல நிமிடங்களில் மழைத் தூரல். நல்லவேளையாக பாபர்கியூ கராஜில் நடந்தது. அதனால் செல்வரத்தினம் நனையாமல் இறைச்சியை வாட்டிக்கொண்டிருந்தார். வெளிப்புறமாக நின்று பியர் அருந்திக்கொண்டிருந்தவர்கள் விரைந்து வீட்டுக்குள் ஓடினர். வீட்டின் பின்புறம் நின்ற பெண்களும் ஓடிவந்துவிட்டனர். பெண்பிள்ளைகள் மழையை வரவேற்று குதூகலமாக நீச்சல்தடாகத்தில் கும்மாளம் அடித்தனர்.
மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச்சென்ற ஆண் பிள்ளைகளை நினைத்து ரஞ்சிதம் கவலைப்பட்டாள். ஒரு குடையை எடுத்து கணவனிடம் கொடுத்து, “ போய்… பெடியளை கூட்டிவாருங்கள்,” என்றாள்.

திடிரென்று… கொட்டிய மழை திடீரென்று நின்றுவிட்டது.

“ பார்த்தியளே… எங்கட ஊர் வெதரை….” என்று செல்வரத்தினத்தின் மனைவி உரத்துச்சொல்லி சிரித்தாள்.
மைதானத்தில் ரமேஷ்காந்த்தின் மகன் ஆகாஷ் பவுண்டரி அடித்துக்கொண்டிருந்தான்.

தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த மகள் சிந்துஜா, மழைக்குப்பயந்து வீட்டுக்குள் ஓடியவர்கள் இப்போது வெளியே வருவதைக்காட்டி “ இந்த மழைக்கு இப்படிப்பயந்தா… சுநாமி வந்தா என்ன செய்வாங்க…?” என்று கேட்டுச்சிரித்தாள். சிநேகிதிகள் அவளது சிரிப்பில் கரைந்தார்கள்.

கராஜூக்குள் நின்ற செல்வரத்தினம் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்.

“ என்ன… அங்கிள் பெரிய சிரிப்பு…” எனக்கேட்டான் சீலன்.

“ உந்த சின்ன மழைக்குப்பயந்து ஓடுற நீங்களா தமிழ் ஈழம் காணப்போறீங்க… எண்டு நினைச்சு சிரிச்சன். எங்கட மாவீரர்கள் மழை, வெய்யில் பார்க்காமல் காடு, மேடு, கடல் எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு போராடினாங்கள். வீரமரணம் அடைஞ்சாங்கள். நீங்கள் என்னடாவென்றால் உந்த மழைக்குப்பயந்து ஓடுறியளே… அதுதான் சிரிப்பு வந்தது.” என்றார் செல்வரத்தினம்.

“ ஓமோம் நீங்கள் சொல்லுவீங்கதானே… கராஜூக்குள் நின்றுதானே இறைச்சி வாட்டுறீங்க… நனையமாட்டீங்க…” என்றான் சீலன்.
……………..
வந்த விருந்தினர்கள் பாபர்கியு விருந்து முடிந்து விடைபெற்றனர். இரவு, ரமேஷ்காந்தும் ரஞ்சிதமும் விருந்தினர்கள் கொடுத்துச்சென்ற அன்பளிப்பு பொதிகளை திறந்து பார்த்து ரசித்தனர்.

சிந்துஜா வேளைக்கே படுத்துவிட்டாள். நீண்ட நேரம் தடாகத்திலிருந்த சோர்வும், நீச்சல் களைப்பும் அவளை நித்திராதேவியிடம் அழைத்துவிட்டது. ஆகாஷ் கணினியின் முன்னமர்ந்து அன்று வந்துசென்ற சிநேகிதன் ஒருவனுடன் ஷட்டிங்கில் இருந்தான்.

ரமேஷ்காந்த்திற்கு கிளிநொச்சியிலிருக்கும் அக்காவுடன் பேசி பல நாட்களாகிவிட்டது நினைவுக்கு வந்தது. புதிய வீடு வாங்கிய தகவலை மாத்திரம்தான் ஏற்கனவே அக்காவுக்கு சொல்லியிருந்தான். இரவு பதினொரு மணியளவில் அக்காவின் கைத்தொலைபேசிக்கு தொடர்புகொண்டான். மறுமுனையில் இரைச்சல். சனங்களின் இனம்புரியாத குரல்கள்.

“ அக்கா எங்க… வெளியிலா நிக்கிறீங்க….?”

“ தம்பியே… .ஓம்… தம்பி… பேசுவது விளங்குதில்லை.”

“ அக்கா என்ன சத்தம்…? நான் பேசுவது கேட்கவில்லையா…”

“ கொஞ்சம் பொறுதம்பி… கொஞ்சம் வெளியில வாரன்… சரி…. இப்பசொல்லு….”

“ அங்கே என்னக்கா நடக்குது….? சத்தமாக்கிடக்கு…”

“ தம்பி இன்றைக்கு இங்கே காத்தவராயன் கூத்து. அதுதான் சனம். நாளைக்கு பேசுறியே… கூத்து தொடங்கப்போகுது… நல்ல கூத்து.”

ரமேஷ்காந்த் உதட்டைப்பிதுக்கினான்.
—–000—-

(யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியச்சந்திப்பில் வெளியிடப்பட்ட குவர்னிக்கா மலரில் வெளியானது)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: