தமிழ் தலைமையும் அரசியல் தீர்வுகளும்.

Speech at Scarborough Civic centre, Toronto,Canada on 20/07/2013

 

நடேசன்

கிறிஸ்துவிற்கு முன்பான 5ஆம் நூற்றாண்டில் பாரசீக சாம்ராச்சியத்தை ஆண்ட
மன்னன் ஆதர்ஸ், தனது அரச சபையில் விருந்தினர்களுடன் குடித்து விருந்துண்டு மகிழ்ந்த
போது தனது பட்டத்து இராணியான வஸ்தியை விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்தான்.
விருந்தினர் மத்தியில் தோன்ற மறுத்த பட்டத்து இராணியை பதவியில் இருந்து
நீக்கிவிட்டு புதிதாக ஒரு இராணியை தேர்ந்தெடுக்க அழகிப் போட்டியை வைத்தான்.
அந்த நாட்டில் மொடிசியஸ் என்ற யூத அரசகாவலனால் வளர்க்கப்பட்ட எஸ்தர்
என்ற யுதப்பெண் அரசனைக் கவர்கிறாள். அரசனை மணம்முடித்து பட்டத்து இராணியாகும்;
எஸ்தர் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்பதை அரசனிடம் மறைத்து விடுகிறாள்.

இது நடந்த சில நாட்களில் ஆதர்ஸ் மன்னனை இண்டு விதூஷகர்கள் விஷம் வைத்து
கொலை செய்ய முனைந்த போது அந்த சதியை மொடிசியஸ் கண்டு பிடித்ததால் அரசன்
உயிர் தப்புகிறான். மன்னனால் மொடிசியஸ் மெச்சப்படுகிறான்.

மொடிசியஸ் சமய வழக்கத்துக்கு ஏற்ப காலில் விழுந்து வணங்க மறுத்தபோது பாரசீக  முதலமைச்சர் கனன் ஆத்திரமுற்று மொடிசியஸ்யை மட்டுமல்லாமல் ஏனைய யூதர்களையும் கொலை செய்ய திட்டமிட்டு அதற்கான அரச சம்மதத்தையும் பெற்றுக் கொள்கிறான்.

இதை அறிந்து கொண்ட மொடிசியஸ்,  இதைப்பற்றி அரசனிடம் பேசி நடக்கவிருக்கும் கொலைகளை தவிர்க்கும்படி எஸ்தரிடம் கேட்டுக்கொண்டான்
.
அரசன் அழைக்காமல் அரசபைக்குச் செல்வது சட்ட விரோதம் எனத் தயங்கிய  எஸ்தர், பின்னர் எல்லா யுதர்களையும் மூன்று நாள் உண்ணா நோன்புக்கு அழைத்துவிட்டு,  அதன் பின்பு நடக்கும் விருந்திற்கு அரசனை அழைக்கிறாள். அத்துடன் முதலமைச்சர் கனனையும் விருந்தோம்பலுக்கு அழைத்தாள்.

அன்றிரவு இந்த விடயங்களால் எரிச்சலடைந்த முதலமைச்சர் கனன் மொடிசியஸ்சுக்கு  விசேட தூக்குமரத்தை தயாரிக்கிறான்.

அன்று இரவு அரசனுக்கு வாசிக்கப்பட்ட அரசவைக் கோப்பில் பழைய சதியில் உயிர்  தப்ப உதவியமொடிசியஸ்க்கு எதுவித பதவியோ , பரிசோ அளிக்கவில்லை என்பதை அரசன் அறிந்து
கொள்கிறான். இதன் பின்பாக மொடிசியஸ்யை தூக்குமரத்தில் ஏற்றுவதற்கு முதலமைச்சர்  கனன் வந்து
அரசனிடம் அனுமதி கேட்கிறான்.

அப்பொழுது மன்னன்  ‘அரசனுக்கு  உதவியவனை எப்படி கவனிக்க வேண்டும்?’ என திருப்பி வினவுகிறான்.

மன்னன் தன்னைப் பற்றித்தான் கேட்கிறான் என நினைத்து ‘உங்களுக்கு உதவியவனை நன்றாக கவனிக்கவேண்டும் ‘என்கிறான்

எஸ்தரின் விருந்திற்கு அரசனுடன் முதலமைச்சர்  கனன் செல்கிறான். அப்பொழுது எஸ்தர் தான் ஒரு
யுதப் பெண் எனவும் தன்னை சேர்ந்தவர்களை கொலைசெய்யும்படி கனன்
உத்தரவிட்டிருப்பதாக அரசனிடம் கூறுகிறாள். இதைக் கேட்டதும் மன்னன் அந்த அறையை
விட்டு வெளியேறுகிறான். இதைக் கண்ட முதலமைச்சர் கனன் எஸ்தரின் காலில் விழுந்து உயிருக்கு
மன்றாடுகிறான்.

மீண்டும் அறைக்கு திரும்பி வந்த அரசன் அந்தக்காட்சியைக் கண்டதும், எஸ்தரை முதலமைச்சர் கனன்
துன்புறுத்துவதாக எண்ணி கனனால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த தூக்குமரத்தில் ஏற்றி
விட்டு, மொடிசியஸ்சை முதலமைச்சராக்குகிறான்.

தனது சம்மதத்தை ஏற்கனவே கொடுத்து நடக்கவிருந்த யுதர்களின் கொலையை நிறுத்த
முடியாது ஆனால் உங்களைத் தாக்க வருபவர்களை எதிர்த்து இனத்தை காக்கலாம்
என அரசன் எஸ்தரிடம் உறுதியளித்தான். யுதர்கள் தங்களது எதிரிகளை தாக்கி ஒழித்த அன்றைய
நாள் யுத இனத்தின் விடுமுறை நாளாக இன்னமும் கொண்டாடப்படுகிறது. எஸ்தர் என்ற
இளம் பெண்ணின் சாதுரியத்தால் இன ஒழிப்புத்தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டதுடன்
மட்டுமல்ல அவர்களது எதிரிகள் ஒழிக்கப்பட்டது இங்கே முக்கிய வரலாறாகிறது.

நாம் படித்த வரலாறுகளில் அரசர்கள், இளவரசர்கள் தங்களது ஆளும்; உரிமையை மீளப்
பெற போராடுவதும் அதில் வெல்வதும் தோற்பதும் இயல்பு. சில நேரங்களில் அதற்காக
உயிர் விடுவதும் அல்லது தோற்றபின் வேறு இடத்தில் இராச்சியம் உருவாக்கியதாகவும்
சரித்திரம் உண்டு.

ஹோமரில் இலியெட்டில் தோற்ற ரோய் நாட்டவர்களின் அரசவம்சம்தான்
கிறிஸ்துவிற்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் ரோம சாம்ராச்சியத்தை உருவாகியதாக
சரித்திரம் சொல்கிறது.

அரச வம்சங்களின் சரித்திரம் என்பது வித்தியாசமானது. அது இனத்தின்
சரித்திரமல்ல. நமக்கு எல்லாம் தெரிந்த யாழ்ப்பாண அரசவம்சத்தின்
சரித்திரம் இனத்தின் சரித்திரமல்ல. தென் இந்தியாவில் தெலுங்கு நாயக்க
வம்சத்தினாரால் மதுரையிலும் அதன் பின்பு யாழ்ப்பாணத்திலும் ஏன் கண்டியிலும்
உருவாகியது.

இனங்கள் ,  பலமடைந்து அரசோச்சும் காலத்தில் அந்த இனம் எதிர் கொள்ளும்
பிரச்சினைகளை இலகுவாக கையாளமுடியும். இந்த சமூகத்தில் உள்ள கட்டுமானம்
தலைமைத்தும், இந்த சவாலை இலகுவாக ஏற்றுக் கொள்ளும். இதற்கு ஜப்பானில் சமீபத்திய
சுனாமி உதாரணம். இந்த சம்பவம் வேறு ஒரு நாட்டில் நடந்திருந்தால் விளைவுகள் வேறு
மாதிரியாக இருந்திருக்கும்.

தாழ்நிலையில் பாதிப்படைந்த சமூகம் நல்ல தலைமைக்கு ஏங்குகிறது. இங்கே எந்த
கட்டுமானமும் இல்லை. சமுகத்தின் சில தலைவர்களில் தங்கி இருக்கிறது.
இப்படியான சமூகம் எப்படி அக்காலத்தின் சவாலை சமாளித்து எதிர்கொள்ளுகிறது
என்பதை அறிந்துகொள்வது எமக்கு முக்கியமாகிறது.
இப்படியாக தனி ஒரு சமூகத்தின் நீண்ட பயணவரலாறு எழுத்தில் இருப்பது யுத இனத்தின் வரலாறே.
இதையே நாங்கள் சுவிஷேசத்தின் பழைய ஏற்பாடு எனக் கூறுகிறோம்.

நான் கிறித்தவனோ அல்லது வரலாறு படித்தவனோ அல்ல. ஆனால் பல விடயங்களை எனக்கு புரிந்து
கொள்ள உதவியது இந்த பழைய ஏற்பாடு. யூத மக்கள் நூறு வருடங்களுக்கு மேல் எகிப்தில்
அடிமையாக இருந்தார்கள் அதன் பின் பபிலோன் அசிரியா போன்ற இடங்களிலும் அடிமையாக வாழ்ந்தார்கள்.
இதே வேளையில் இவர்கள் டேவிட் மற்றும் சொலமன் என்ற மன்னர்களது காலங்களில் அமோகமாக
வாழ்ந்தார்கள்.

என்னைப் பொறுத்த வரை தாழ்ந்த நிலையில் மற்றவர்களால்
துன்பப்பட்டகாலத்தில் யூத இனத்தை வழி நடத்திய மோசஸ், ஜோசப் டானியல், எஸ்தர் போன்றவர்களே போற்றுதலுக்கு உரியவர்கள்.

இது எல்லா இனத்திற்கும் பொருந்தும். எந்த சமூகமும் தொடர்ந்து வாழ்ந்ததும் இல்லை
அதேபோல் தாழ்ந்ததும் இல்லை.

எமது சிங்கள சகோதர இனம் 2500 வருடத்தில் 54 தடவைகள் தென் இந்தியாவில்
இருந்து வந்த படை எடுப்புகளை சந்தித்தது. 500 வருடங்கள் மேற்கு நாடுகளின்
காலனித்துவத்தில் இருந்தது.

நமது காலத்திலும் சமீபகாலத்திலும் நாம் பார்த்த காந்தி, மார்ட்டின் லூதர்
கிங் மற்றும் மண்டேலா போன்றவர்கள் தங்களது சமூகத்தின் இழந்த உரிமையை பாரிய
அழிவின்றி மீட்டவர்கள். இவர்கள் நடவடிக்கைகள் செயல் திட்டங்கள் அதிக
காலங்களை எடுத்தாலும் தமது மக்களுக்கு தங்களது நடவடிக்கையால் உயிர் உடமை
போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்திய சுதந்திர
போராட்டத்தில் ஆயுதம் எடுத்திருந்தால் இலகுவாகவும் விரைவாகவும் சுதந்திரம்
கிடைத்திருக்கும் என சொல்பவர்களை இன்னமும் சந்திக்கிறேன். மாவோ நடத்திய
ஆயுதப் போரட்டம் எத்தனை மில்லியன் சீன மக்களை பலி கொண்டதென்பதை
சமீபத்தில் படித்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

வன்முறை தோற்றாலும் வென்றாலும் யாருக்காக நடத்தப்பட்டதோ அவர்களைப்
மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. மேலும் வன்முறையின் செயல் வடிவத்தில் பதிய
தலைவர்கள் உருவாக்கப்படுதில்லை. இப்படியான உதாரணங்கள் மத்தியில் எமது
இனத்தலைமையை பார்க்கும் போது பலவிடயங்கள் தெரியவரும். இங்கு பலர் என்னிலும்
நேரடியான அனுபவசாலியாக இருப்பதால் சமீபகால தமிழ் அரசியல் நடவடிக்கைகள்
சம்பந்தமாக அதிகமாக உள்ளே செல்லாமல் சில கேள்விகளை வைத்து அதற்கான
விடைகளைப் பார்ப்போம்.

எமது இனத்தலைவர்கள் எதற்காக தமிழ் மக்கள் சார்பாக முதலாது போராட்டம்
செய்தார்கள் எனப்பார்ப்போம் எனக்குப் புரிந்தவரை தமிழ்மொழியை வட- கிழக்கிலும்
தமிழை இணைமொழியாக தெற்கிலும் பாவிப்பதற்கான உரிமையை கேட்டார்கள்.
இது உன்னதமான நோக்கம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் இதை எப்படிச் செய்தார்கள்?

இலங்கையில் வாழும் சிறுபான்மையான 26 சதவீதமானவர்கள் ஒற்றுமையாகாமல் இதை
எப்படி சாதிப்பது?

இக்காலகட்டத்தில் இந்த நோக்கத்திற்காக மலையக மக்களும் இஸ்லாமிய மக்களும்
ஒன்றிணைக்கப்பட்டார்களா?

சிங்கள மொழியின் தாக்கம் அவர்களைத்தானே அதிகமாக பாதிக்கிறது. அப்படி
பாதிக்கப்பட்ட அவர்கள் ஏன் எம்முடன் ஒன்றிணையவில்லை?

இப்படியான மொழிப்பிரச்சினையின் சிக்கலை நீக்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்த
கட்சி ஏன் தமிழரசுக் கட்சி என்ற நாமகரணம் பெற்றது?

எமது கோரிக்கையின் நியாயத்தை 74 வீதமான பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்கிறார்களா?

சிங்கள மக்களில் 6-10 வீதமானவர்களே ஆங்கிலத்தில் ஆற்றல் பெற்றவர்கள்;.
மேலும் ஒரு சதவிதமானவர்கள் கூட தமிழ் மொழி புரியாதவர்கள். இந்த நிலையில் ஒரு
ஜனநாயக நாட்டில் எமது கருத்தை கோரிக்கையை மற்றவர்களுக்கு புரிய வைத்தல் என்ற
அடிப்படை விடயத்தில் இவர்களது முயற்சியென்ன?

எமக்கெல்லாம் தெரிந்த 58இல் சிங்கள சிறி போராட்டம், தமிழ்நாட்டு இந்தி
எதிர்ப்பு போராட்டத்தை நகல் எடுத்து இலங்கையில் திராவிட முன்னேற்றக்கழக
பாணியில் செய்த விடயங்கள். தீராத இனவிரோதத்தை உருவாக்கியதுடன் நமது நாட்டில்
இன உறவுகளை மிகவும் பின்தள்ளியது.

மொழி வாரியான தரப்படுத்தல் 72லும் மாவட்டரீதியான தரப்படுத்தல் 75ல் ஆரம்பமாகியது.

அக்காலத்தில் இரண்டையும் பொதுவாக எதிர்த்தோம். இதன் எதிரொலியாக வட-
கிழக்கு பிரதேசம் தமிழ்மக்களின் பரம்பரை பிரதேசம் என நாட்டில் பிரிவினை
கோரிக்கையை வைத்தோம்.

அதாவது சிக்கலான பல விடயங்களை பிரிவினை என்ற கோசத்தின் மூலம் மிக இலகுவாக
எதிர் கொண்டோம்.எல்லாவற்றிறகும் சர்வரோக நிவாரணியாக மக்களை நம்பவைத்தோம்.

மொழிவாரியான தரப்படுத்தல் ஏற்க முடியாத போதும் மாவட்டரீதியான தரப்படுத்தல்
பின்தங்கிய தமிழ் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்கு வரப்பிரசாதமானது. அதாவது
யாழ்ப்பாணம் தவிர்ந்த எல்லா தமிழ்மாவட்டங்களும் பின்தங்கியவையே.
இதைப் பற்றிய ஆழமான சிந்தனை எம்மிடம் இருக்கவில்லை.

இதை விட முக்கியமானது எமது பிரிவினையை இந்தப் பிரதேசஙகளில் வாழ்ந்த மற்ற
இனங்கள் ஏற்றுக் கொண்டதா? அதைப்பற்றி கவலை கொண்டோமா?

இதன் பின்பு நடந்த ஆயுதப்போராட்டத்தை கடந்து தற்போதைய அரசியலைப் பார்க்க
வேண்டியிருக்கிறது. காரணம் மிகப் பெரிய மாற்றங்கள் வடக்கு- கிழக்கு மக்கள் பரம்பலில்
நடந்துள்ளன. ஜனநாயக உரிமைகளை பெறுவதற்கு இந்த மக்கள் பரம்பல் முக்கியமானது.

மாரியில் பாவித்த கிணற்றுக் கயிறை நீர் அள்ளுவதற்கு கோடையில் பாவிக்கமுடியாது.

வடக்கு கிழக்கு தமிழரில் ஐந்து இலட்சம் மக்கள் மேற்கு நாடுகளுக்கு
சென்றுவிட்டார்கள். ஒரு இலட்சத்திற்கு மேல் இந்தியாவில் வாழ்கிறார்கள்.
வட – கிழக்கில் வாழும் தமிழரிலும் பார்க்க எண்ணிக்கையில் கூடிய அதிக
தமிழர்கள் வெளி மாகாணங்களில் வாழ்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திலும் பார்க்க கொழும்பில் அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 9.4 வீதமானது வடமாகாணம். ஆனால் 4 வீதத்திற்கு
இடைப்பட்ட மக்களே இந்த நிலப்பரப்பில் வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் பழைய கோரிக்கைகள் கோசங்கள் தீர்வுகள் தற்போதைய நிலைக்கு
ஒத்து வராது. சிறுவனாக இருந்தபோது போட்ட அதே உடுப்பைத்தான் போடுவேன் என
அடம்பிடிப்பது சிறுபிள்ளைத்தனம்.

எல்லோரது வாயிலும் பேசப்படும் இந்த 13 ஆம் திருத்தம் வடமாகாணத்தை சுற்றி
வேலி போடாது. அது நடைமுறை சாத்தியமானது அல்ல.

தமிழருக்கு பொருளாதாரம் வேலைவாய்ப்பு முதலீடு என்பன வடகிழக்குக்கு வெளியேதான்
உள்ளது. இதனால்த்தான் மக்கள் தொடர்ச்சியாக கொழும்புக்கும் வெளிநாட்டிற்கும்
வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். எமது கோரிக்கைகள் தீர்வுகள் இலங்கையில்
எங்கும் சம உரிமை சம வேலைவாய்ப்புடன் வாழ்வதை நோக்கமாக இருக்கவேண்டும்.
அத்துடன் மற்றைய இனங்களுடன் கலாச்சாரம் மொழி என்பவற்றில் தனித்துவத்தை
பேணியபடி இலங்கை அரசியலில் அதிகாரப்பகிர்வு என்ற இலக்கை நோக்கிய பயணத்தை
கொண்டிருக்கவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: