இலங்கை அரசு தனது உப தூதராலயத்தை மெல்பேனில் சமீபத்தில் திறந்துவைத்தபோது அதற்கு அழைக்கப்ட்டேன்.கட்டிட வாசலில் ஐந்து பேர் விடுதலைப்புலிகளின் கொடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இருவர் வெள்ளை நிறத்தவர்கள். சர்வதேச சோசலிற்றை சேர்ந்தவர்கள் நினைத்தேன்
பல மாமனிதர்கள், நாட்டுப் பற்றாளர்கள் என இறந்த இடத்தில் இப்பொழுது இலங்கை அரசுக்கு எதிராக புலிக்கொடி துாக்க அவுஸ்திரேலியர் வரவேண்டிய நிலை வந்து விட்டதே. ஐயகோ, என நினைத்தாலும் எனக்கு அப்பொழுது நடிகர் மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்த விருப்பதாக ஒரு குறும் செய்தி வந்தது. சரி தம்பிமார் இலகுவான விடயத்தை செய்கிறார்கள். போராடுபவர்களை போட்டோ எடுத்துவிட்டு உள்ளே சென்றேன்.
இலங்கையின் உப தூதரகம் மெல்பேனில் மிகவும் சிறந்த இடத்தில் அமர்ந்திருந்து.
அந்த இடத்தில் இருந்து பார்கும் போது மேல்பேனின் கடற்கரை சார்ந்த பனராமிக் காட்சி தெரியும.
நான்கு சமய மதகுருமார்களது ஆராதனையுடன் அமைச்சர்பேராசிரியர் பீரிசால் துாதுவரலயம் திறந்து வைக்கப்பட்டது. பல தமிழர்கள் இந்த நிகழ்சிக்கு வந்திருந்தார்ள். ஒருவிதத்தில் எனக்கு சந்தோசம். அவுஸ்திரேலயாவில் பலவருடங்கள் தமிழ்பேசும், எழுதும் இலங்கையனாக நான் மட்டுமே இருந்தேன்.மற்றவர்கள் எல்லாம் தமிழ் எழுதப், பேசத் தெரியாத போது கூட தமிழ் ஈழத்தின் குடிமக்கள், அவுஸ்திரேலியாவுக்கும் ஈழத்திற்கும் வரிசெலுத்தி வாழ்ந்த இரட்டை குடியுரிமை கொண்டவர்கள். இப்பொழுது நிலமை பரவாயில்லை என நினைக்க தோன்றுகிறது.
இந்த தூதராலயம் பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை இலங்கை பென்சனிரில் இருந்து மாணவர்கள் என்று எல்லோருக்கும உதவியாக இருக்கும். இதில் இன மத பாகுபாடு இல்லை.
இதுவரையிலும் உபதூதர் வேலையை மெல்பேனில் கவுரவத் தொழிலாக செய்து கொண்டிருந்தவர்களில் நண்பர் பந்து திசநாயக்கா மிகவும் குறிப்பிடதக்கவர். பலரது வீடுதேடி சென்று பென்சன் பத்திரங்களை கையொப்பமிடுவார். அவர் மீண்டும் இலங்கையரசால் கவுரவிக்கப்பட்டு தொடர்ச்சியாக இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் நல்லவிடயம்.
இந்த துாதராலயத்துக்கு அருகில் இலங்கை விமான அலுவலகம் திறக்கப்பட்டது.வெகுவிரைவில் கொழும்பில் இருந்து நேரடியாக மெல்பேனுக்கு விமான போக்குவரத்து நடைபெறும் என்று கூறினார்கள்.
இந்த வைபவங்களைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மகாநாடு நடந்தபோது அதில் பேசிய பேராசிரியர் பீரிஸ் வெளிநாட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களது பிரசாரத்தின் தாக்கத்தை மற்றவர்களது கேள்விக்கு பதில் அளித்தபோது நான் சொன்னேன் “இலங்கையில் 30 வருடப் போர் அரசியல் காரணத்தால் உருவாக்கியது. இங்கே விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவத்தை என் போன்றவர்கள் வெறுத்தபோதிலும் அடிப்படைகாரணம் அரசியல். இத்துடன் போர் முடிந்து நாலுவருடத்தில் புதிய அரசியல் வடிவம் ஒன்றும் இலங்கையில் உருவாக்கபடிவில்லை. 13ம் சரத்தில் என் போன்றவர்கள் உடன்படாத போதிலும் புதிதாக மாற்று வடிவத்தை கொண்டுவராமல், உள்ளதை எடுக்க முனையும் நீங்கள் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறீர்கள். இந்த வெற்றிடத்தை விடுதலைப்புலி ஆதரவு சக்திகள் மட்டுமல்ல, மற்றய வெளிநாடுகளும் பயன்படுத்துகின்றன என்பது எனது கருத்து. இதற்கு உங்கள் பதில் என்ன?”
பேராசிரியரின் பதில் நான் நினைத்தது மாதிரியே வந்தது.
“அரசியல் தீர்வை சந்திரிகா குமாரதுங்கா கொண்டு வந்த போதும் அமூல் நடத்தப்படவில்லை. காரணம் எல்லா மட்டத்திலும தீர்வு ஏற்றுக்கொளள்ப்படாவிடில். அது நடைமுறைப்படுத்துவது கடினம். அதற்கு எல்லாரும் சேர்ந்தே பாராளமன்றத்தில் சர்வ கட்சி ஒரங்கிணைந்தே உருவாக்கவேண்டும்.”
இலங்கையில் அரசியல் தீர்வை சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்கள் மட்டத்தில் வைக்கப்பட வேண்டும். அதில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்டசத்திலே மட்டுமே அரசியல்வாதிகள் விருந்துக்கு வருவார்கள்.
அதுவரையில் என்ன செய்வது?