உண்மைகள் சுடும்.

lmபயணியின் பார்வையில் 21
முருகபூபதி

துப்பாக்கி,பீரங்கி, எறிகணை ஆகியனமட்டுமல்ல வெய்யிலும் நெருப்பும் சுடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதேவேளை எம்மத்தியில் வெளிப்படும் உண்மைகளும் சுடும் என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதனால் உண்மைகளை ஏற்கமுடியாமலும் சகிக்கமுடியாமலும் வாழத்தலைப்படுகின்றோம்.

ஜெயகாந்தன் உண்மை சுடும் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். இந்த பயணியின் பார்வையில் தொடரில் நான் சந்தித்த மனிதர்களையும் பெற்ற அனுபவங்களையும் ஏற்கனவே அறிந்திருந்த தகவல்களையும் எமது இலங்கைத் தேச மக்களுக்கு இனி என்ன தேவை என்பதையும் ஒரு படைப்பாளியின் பார்வையிலும் பத்திரிகையாளனின் தேர்விலுமே பதிவுசெய்தேன்.

அறிந்த உண்மைகளையே சொல்லிவருகின்றேன். உண்மைகள் சுட்டுப்பொசுக்குவது மற்றவர்களை மட்டுமல்ல. என்னையும்தான். அந்த வெக்கையிலிருந்தும் வேதனையிலிருந்தும்தான் பதிவு செய்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் செங்கலடியில் அமைந்துள்ள ஒரு தேவாலய சமூகமண்டபத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தேன். அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்தனர். எமது கிழக்கு மாகாண தொடர்பாளர் த.கணேசும் வருகைதந்தார்.

நிதியம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து மேற்கொண்ட பணிகளை ஆவணப்படுத்தியுள்ள பெரிய அல்பம் ஒன்றும் எப்பொழுதும் என்னுடனேயே பயணிக்கும். அதனை அம்மாணவர்கள் அனைவரும் பார்வையிட்டு வியந்தனர். அதில் அவர்களது ஒளிப்படங்களும் குறிப்புகளும் செய்தியறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. தங்களது படங்களை பார்த்துச்சிலிர்த்து புன்னகை சிந்தினர். அந்தச்சிலிர்ப்புக்கும் காரணம் இருக்கிறது. தங்களது படங்கள் இவ்வாறு தகவல்களுடன் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
“யாவும் உண்மைகள்…..பதிவுசெய்துள்ளோம். வருங்காலத்தில் புதிய பரிபாலனசபை உறுப்பினர்கள் நிதியத்தில் பணியாற்றவருவார்கள். அவர்களுக்கும் இந்த ஆவணப்பதிவு பயனுள்ளதாக அமையும்” என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.

ஏற்கனவே இந்தத்தொடரில் குறிப்பிட்டதுபோன்று பல்கலைக்கழகத்திலோ அல்லது உயர்தர வகுப்பிலோ பயிலும் மாணவர்கள் தமக்கு கிடைக்கும் தவணைவிடுமுறை காலங்களில் எந்தவேலையும் இன்றி வீட்டில் இருக்கிறார்கள். அல்லது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர்சுற்றிவருகிறார்கள். வெளிநாடுகளில் இருப்பதுபோன்று விடுமுறைக்காலங்களில் அல்லது வார விடுமுறைநாட்களில் பகுதிநேர வேலை செய்து உழைத்து சம்பாதிக்கும் நடைமுறைகள் இலங்கையில் இல்லை.

“ஏன்….இல்லை?”எனக்கேட்டால்,“ படித்துவிட்டு பட்டம்பெற்றுவிட்டு இருப்பவர்களுக்கே இங்கே வேலை இல்லை. படித்துக்கொண்டிருக்கும் எமக்கா தரப்போகிறார்கள்?” என்று திருப்பிக்கேட்டார்கள். இலங்கை அரசும் கல்வி அமைச்சும் இதுதொடர்பாக ஆராயவேண்டும்.
வெளிநாடுகளுக்கு வருகைதரும் இலங்கை அதிபரும் அமைச்சர்களும் இந்நாடுகளில் நடைமுறையில் உள்ள அரசியல், கல்வி, சமூகம் சார்ந்த உண்மைகளை தெரிந்துகொள்ளவேண்டும். முடிந்தவரையில் இலங்கையில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
அன்று என் முன்னால் அமர்ந்திருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களிடம் முன்வைத்தவேண்டுகோளையே சமர்ப்பித்தேன்.

“வாராந்த விடுமுறை நாட்களில் அல்லது தவணை விடுமுறைக்காலங்களில் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு பிள்ளைக்காவது இலவசமாக பாடம்சொல்லிக்கொடுங்கள். ஏழைப்பிள்ளைகள் தனியார் நடத்தும் டியூஷன் வகுப்புக்குரிய கட்டணம் செலுத்தமுடியாமல் அவதியுறுகின்றனர். அத்தகைய பிள்ளைகளை தெரிவுசெய்து முடிந்தவரையில் நேரம் ஒதுக்கி பாடம்சொல்லிக்கொடுங்கள்.”

“ ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்” என்பார்கள் என்றவுடன் “ எங்களுக்குப்பிள்ளைகள் இல்லை சேர்” என்று ஒரு குரல் சன்னமாக எழுந்தது. நான் உட்பட அனைவரும் சிரித்தோம்.

பின்னர்,“ சேர் உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.”என்று ஏகமனதாகச்சொன்னார்கள். அவர்களுக்கான தகவல் அமர்வையும் நடத்தி நிதிக்கொடுப்பனவுகளையும் வழங்கினோம்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப்பணியாற்றும் இலக்கிய விமர்சகரும் எனது நீண்டகால நண்பருமான பேராசிரியர் செ.யோகராசாவிடமிருந்து அழைப்பு வந்தது. கல்முனைக்குப்புறப்படும் முன்னர் பல்கலைக்கழகத்திற்கும் வந்து செல்லுமாறு அவர் அழைத்தார்.

செங்கலடியில் மாணவர்களிடமிருந்து விடைபெற்று பல்கலைக்கழகம் வந்து அங்கு அவரையும் விரிவுரையாளர்கள் சித்திரலேகா மௌனகுரு, அம்மன்கிளி முருகதாஸ் ஆகியோரையும் சந்தித்து உரையாடினேன். அங்கு இலக்கியம்தான் பேசுபொருளாக இருந்தது. இம்மூவரையும் இறுதியாக 2011 இல் கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலேயே சந்தித்திருந்தேன். இவர்கள் ஈழத்து இலக்கியப்பரப்பில் மிகுந்த கவனிப்புக்குள்ளான விமர்சகர்கள். கல்வி நிதியத்தின் பணிகளையும் ஏற்கனவே நன்கு அறிந்திருந்தவர்கள்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு துணைவேந்தர் நிதியம் ஊடாக உதவ முடியாதிருக்கும் நிருவாகச்சிக்கல்கள் குறித்தும் அவர்களிடம் விளக்கினேன். நிதிக்கொடுப்பனவிற்கும் நாம் வெளியே மண்டபம் தேடவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும் சொன்னேன். உரிய இடங்களுக்கும் பீடங்களுக்கும் இந்த உண்மைகள் தெரியவேண்டும்.

கிழக்கு பல்கலைக்கழக சந்திப்பை முடித்துக்கொண்டு கல்முனைக்குப்பயணமானேன். அங்கே பெரியநீலாவணை விஷ்ணுமகா வித்தியாலயத்தில் பயிலும் சில மாணவர்களை சந்திக்கவேண்டியிருந்தது. இந்த வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம்.
அவரது இல்லத்திற்கு செல்லும்பொழுது மாலை ஆறு மணியாகிவிட்டது. மறுநாள் அந்தப்பாடசாலையில் பொங்கல்விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
மாணவர்களை சந்திக்கும் அதேவேளையில் அந்த விழாவிலும் கலந்துகொள்ளுமாறு அதிபர் அழைப்புவிடுத்தார். ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் அங்கு நடந்த மாணவர் ஒன்று கூடல் நிதிக்கொடுப்பனவு நிகழ்வுகளுக்கு நண்பர் நடேசனும் உடன் வந்திருக்கிறார்.

2010 டிசம்பரில் மீண்டும் அங்குள்ள மாணவர்களை சந்திக்கச்சென்றவேளையில், பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஸ்ரீதரசிங்,யாத்ராஇதழின் ஆசிரியரும் நாம் நடத்திய மாநாட்டின் அமைப்புச்செயலாளருமான அஷ்ரப் சிஹாப்தீன், கிழக்கிலிருந்து வெளியாகும் செங்கதிர் இதழின் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் வந்திருக்கிறார்கள் அஷ்ரப்சிஹாப்தீன் குறிப்பிட்ட சந்திப்பு பற்றி பின்னர் இருக்கிறம் இதழ்,தினக்குரல் வார இதழ் ஆகியனவற்றில் விரிவாகப்பதிவுசெய்துள்ளார்.

முதல்நாள் இரவு அதிபரின் இல்லத்தில் தங்கியிருந்து மறுநாள் பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்டேன். இங்கு பயிலும் எமது நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் சிலர் உயர்தர வகுப்பில் விஞ்ஞானம் கற்பதற்காக வேறு பாடசாலைகளுக்கு இடம்மாறிச்சென்றுள்ள தகவலை அறியமுடிந்தது.எனினும் தொடர்ந்து நிதியத்தின் உதவி அவர்களுக்கு கிடைத்துவருகிறது.
பாடசாலை பொங்கல் விழாவில் கல்வி அதிகாரிகள் ஊர்ப்பிரமுகர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்துகொண்டனர். எழுத்தாளர் மு. சடாட்சரனும் வருகைதந்து உரையாடினார்.
கிழக்கு மாகாணப்பயணத்தை முடித்துக்கொண்டு
ஊருக்குத்திரும்பினேன். நான் பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றி நீண்டகாலமாக ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. அதனால் ஊரின் உண்மைகளையும் தெளிவுபடுத்திவிட்டு இந்த பயணியின் பார்வையில் முதலாவது அங்கத்தை நிறைவுசெய்கின்றேன்.
ஏற்கனவே வெளியான எனது நினைவுக்கோலங்கள் கதைக்கோவையின் முன்னுரையில் ஓரளவு சொல்லியிருக்கின்றேன்.
நீண்டநெடுங்காலமாக நீர்கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள். கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தபோதிலும், சின்னரோமாபுரி என்று வர்ணிக்கப்பட்டபோதிலும், இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் இந்த ஊரை பூர்வீகமாகக்கொண்டவர்கள்.
அனைத்து இனத்தவர்களுக்கும் பாடசாலைகள் இருப்பதுபோன்று அனைத்து மதத்தவர்களுக்கும் வழிபாட்டிடங்கள் இருக்கின்றன.
கொழும்பின் வடமேற்கே இந்துசமுத்திரத்தின் கரையை தழுவியிருக்கும் இந்த ஊரை வந்தோரைவாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்றே வந்தவர்களும் வாழ்ந்தவர்களும் அழைக்கின்றார்கள். இந்து தமிழ்மக்கள் செறிந்து வாழும் கடற்கரைவீதியில் மூன்று பெரிய கோயில்கள் இருக்கினறன. தவிர மேலும் நான்கு கோயில்கள் ஊரின் புறநகர்ப்பகுதிகளில் அமைந்துள்ளன.

இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே நீர்கொழும்பில் நகரபிதாவாக (மேயர்) தெரிவானவர் எஸ்.கே. விஜயரத்தினம் என்ற பெரியவர். இவர் வடக்கே காரைநகரிலிருந்து வந்து நீர்கொழும்பில் பதில் நீதிவானாகவும் கடமையாற்றியவர். அவரைத்தொடர்ந்து அவரது சகோதரர் எஸ்.கே. சண்முகம் அவரது மகன் ஜெயம் விஜயரத்தினம் ஆகியோர் மாநகரசபைக்குத்தெரிவானார்கள். இன்றும் யாராவது ஒரு தமிழர் அந்த இடத்தை பிரிதிநிதித்துவம் செய்துவருகிறார்கள்.

நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில் அமரர் விஜயரத்தினம் அவர்கள் தலைவராக இருந்த காலப்பகுதியில் (1954 இல்) உதயமானதுதான் விவேகானந்தாவித்தியாலயம். 32 இந்து தமிழ் மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப்பாடசாலையின் முதலாவது மாணவன் இந்தப்பத்தியை எழுதிவருபவன் என்பதும் உண்மை.

பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் வரையில் கொழும்பு விவேகானந்தா சபையின் நேரடி கண்காணிப்பிலும் பெற்றோர் ஆசிரியர்களின் உதவியிலும் வளர்ந்து காலப்போக்கில் கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு இந்து தமிழ்க்கல்லூரியாக ஒரு கலங்கரைவிளக்கமாக எழுந்திருப்பதுதான் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி.

திருமுருக கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், உட்பட காருக்குறிச்சி அருணாசலம், நாச்சிமார்கோயிலடி கணேசன், பஞ்சமூர்த்தி – காணமூர்த்தி கலைஞர்கள் மட்டுமன்றி தமிழக படைப்பாளிகள்,ஈழத்து முன்னணி படைப்பாளிகள் அறிஞர்கள் கால் பதித்து நடமாடிய நகரம்.
அங்கே இன்றும் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் வாழ்கிறது.
அப்படியாயின் அங்கே சிங்களவர்களாக மாறியவர்கள் யார்? அந்த ஊருக்கு வந்த சில சிங்கள கத்தோலிக்க மதகுருமாரே அதற்குப்பிரதானமான காரணம். அவர்கள் தேவாலயங்களில் சிங்களத்தில் பூசை நடத்தினார்கள். சிங்களம் கற்றால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்று பரப்புரை செய்தார்கள். அதனால் சிங்களம் பேசும் கத்தோலிக்க சமுதாயம் காலப்போக்கில் உருவானது.
மணல்சேனை, ஏத்துக்கால், நஞ்சுண்டான்கரை, கொச்சிக்கடை,தோப்பு, முன்னக்கரை, மாங்குழி,பலகத்துரை, பெரியமுல்லை, காமாச்சோடை,குட்டித்தீவு முதலான பெயர்களுடன் இன்றும் அங்கே பலபிரதேசங்கள் இருக்கின்றன. இங்கெல்லாம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். கடற்கரை வீதியை குட்டி யாழ்ப்பாணம் என்றும் சொல்லலாம்.

நீர்கொழும்பு சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்களமொழியினால் கபளீகரம் செய்யப்பட்ட பிரதேசம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள், எழுதிக்கொண்டிருப்பவர்களை நீர்கொழும்பு வருக… வருக….என்று அழைக்கிறது.
நீர்கொழும்பு தொடர்பாக பல ஐதீகக்கதைகளும் இருக்கின்றன. இராவணனின் மகன் இந்திரஜித்தன் நிகும்பலை யாகம் நடத்தியது இங்குதான் என்பதற்கு அடையாளமாக மழைவெள்ளம் வந்தால் குளமாகிவிடும் மைதானங்களும் இருக்கின்றன. சில குளங்கள் தூர்ந்துபோய் அங்கே பஸ்நிலையங்களும் கட்டிடங்களும் வந்து விட்டன.

தமிழர்களாகிய நாம் அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஆங்கிலமும் சில ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பியமொழிகளும் கற்றால்தான் அரசாங்க உத்தியோகமோ அல்லது வேலைவாய்ப்போ கிடைக்கும். அதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆங்கிலேயர்களாகவும் வெள்ளை இன ஐரேப்பியர்களாகவும் மாறிவிட்டார்களா?

தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் ஏன் தமிழில் எழுதுவதற்கும்கூடத் தெரியாமல் தமிழ் உணர்வோடும் தமிழ் அடையாளத்தோடும் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ தமிழர்களை எனக்குத்தெரியும்.

நீர்கொழும்பில் சிங்கள கத்தோலிக்க மத குருமார்களினால் பல கத்தோலிக்க குடும்பத்துப்பிள்ளைகள் சிங்களம் கற்கத்தூண்டப்பட்டார்கள். அதனால் அவர்களின் பாடசலைமொழி மட்டுமல்ல வீட்டுமொழியும் சிங்களமாகியது.

அவுஸ்திரேலியா,அமெரிக்கா, இங்கிலாந்து , நியூசிலாந்து முதலான நாடுகளில் எமது பிள்ளைகளுக்கு பாடசாலைமொழியாகவும் வீட்டுமொழியாகவும் ஆங்கிலம் வந்ததுபோன்று, ஐரோப்பிய நாடுகளிலும் ஐரோப்பிய மொழிகள் பாடசாலைமொழியாகவும் வீட்டுமொழியாகவும் மாறியதுபோன்று நீர்கொழும்பில் பல கத்தோலிக்கர் குடும்பங்களில், சிங்களம் பாடசாலை மற்றும் வீட்டுமொழியாகிவிட்டது.

ஆனால் நீர்கொழும்பில் பூர்வீகத்தமிழர்கள் குறிப்பாக இந்துக்கள் இன்றும் தமிழர்களாகவே வாழ்ந்து தங்கள் அடையாளத்தைப் பேணுகின்றனர்.
அவர்களை எவரும் ஆக்கிரமிக்கவில்லை. நம்பினால் நம்புங்கள். இதுதான் உண்மை. நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துமத்திய கல்லூரியிலும் சில மாணவர்களுக்கு எமது கல்வி நிதியம் உதவுகிறது. அதிபர் திரு. கணேசலிங்கம் அவர்களின் முன்னிலையில் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. இந்தக்கல்லூரி அடுத்த ஆண்டு 60 ஆண்டுகளை பூர்த்திசெய்யவிருக்கிறது. ஆறுதசாப்தகாலமாக இக்கல்லூரி இங்கு வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்காகத்தான் இயங்குகிறது. இந்தத்தமிழர்களில் பலருக்கு என்னைப்போன்று சிங்களம் பேச முடியும். அதற்காக அவர்களை சிங்களவர் என்று தப்புக்கணக்குப்போடவேண்டாம்.
நீர்கொழும்பைப்பற்றி மேலும் அறியவிரும்புபவர்கள்,
http://www.negombotamilweb.blogspot.com
என்னும் வலைத்தளத்தை பார்வையிடலாம்.
தேனாலி படத்தில் கமல்ஹாசன் பேசிய இலங்கைத்தமிழைப்பார்த்துவிட்டு, அதன் விழாவொன்றில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,“ அதனை சிங்களத்தமிழ்” என்ற குறிப்பிட்டார்.
அவரது அறியாமையை உடனே போக்கினார் அறிவிப்பாளர் பி.எச். அப்துல்ஹமீட்.

உண்மைகளுக்கு சுடும் இயல்பு இருப்பதுபோன்று அறியாமையைபோக்கும் குணமும் இருக்கிறது.ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் எல்லோருமே ஆங்கிலேயர்கள் இல்லை என்பதும் உண்மைதானே?
வாசகர்களுக்கு நன்றி.

(பயணியின் பார்வை, இனி இரண்டாவது அங்கத்தில் தொடரும்)

“உண்மைகள் சுடும்.” மீது ஒரு மறுமொழி

  1. எல்லாத் தானங்களிலும் சிறந்தது கல்வித்தானம் என்பர்.அத்தகைய கல்வியை வசதியற்ற மாணவர்களுக்கு,சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற பகுதி என்னை மிகவும் கவர்ந்தது.இந்த எண்ணங்கள் கல்வி கற்ற எல்லா மனிதர்கள் உள்ளங்களிலும் குடி புக வேண்டும் என ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: