மூத்த பத்திரிகையாளர் கோபுவுடன் சில மணிநேரங்கள்

பயணியின் பார்வையில் 20

Murugapoopathy

முருகபூபதி

கிழக்குமாகாணத்தில் மழை, வெள்ளம் எனத்தெரிந்துகொண்டே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு எனது பயணத்தை தொடர்ந்தேன்.

திருகோணமலையில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஸ்தாபகர் கணேஷ். ஏற்கனவே எமது கல்வி நிதியம், வவுனியாவில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளை (மாணவர்களை) விடுவித்து அவர்களை க.பொ.த. உயர்தர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு வகைசெய்தபோது அந்தப்பணியை நிறைவுசெய்வதற்கு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் வவுனியா கிளையே ஒத்துழைப்பு வழங்கியது.
திருகோணமலை, மட்டக்களப்பில் பல மாணவர்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் பல மாணவர்களுக்கும் மேற்குறித்த தன்னார்வ அமைப்பின் ஊடாகவே எமது நிதியம் உதவிவருகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் காணாமல் போனதையடுத்து அங்கு பணியிலிருந்த துணைவேந்தர்கள், மற்றும் மாணவர் நலன்பேண் அலுவலர்கள் குறிப்பிட்ட உதவிபெறும் மாணவர்களின் கண்காணிப்பாளர்களாக பணியாற்றிவந்தார்கள்.

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் நிதியம் ஊடாகவே எமது கல்வி நிதியம் நிதிக்கொடுப்பனவுகளை அனுப்பி மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கச்செய்தது.
எனினும் எதிர்பாராதவிதமாக தமக்கு ஒரு நிர்வாகச்சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன் பேணும் அலுவலர்களிடமிருந்து தகவல் கிடைத்தது.

துணைவேந்தர் நிதியம் கல்வி அமைச்சின் கண்காணிப்பிலிருப்பதனால் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவிகளை அதில் இணைப்பதில் நிருவாகச்சிக்கல் இருப்பதாக சுற்றறிக்கை வந்திருப்பதனால் தொடர்ந்தும் துணைவேந்தர் நிதியம் ஊடாக மாணவர்களுக்கு உதவ முடியாது என்ற தகவல் கிடைத்ததும் நாம் மாற்று வழியைத்தேடினோம்.

எக்காரணம்கொண்டும் மாணவர்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாகவும் தெளிவாகவும் இருந்தோம்.

பயணங்களின்பொழுது நாம் ரயிலை தவறவிட்டால் பேருந்தில் ஏறிச்செல்வோம். அதனையும் தவறவிட்டால் வாடகைக்காவது ஒரு வாகனத்தை நாம் தேர்வுசெய்யமாட்டோமா?
இப்படித்தான் பொது வாழ்க்கையும். ஒரு கதவு மூடப்பட்டால் வேறு ஒரு கதவு திறந்தே இருக்கும். இது வாழ்க்கை
எமக்குச்சொன்ன எளிய தத்துவம்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களின் தேவைகளை கவனிக்க திருகோணமலை நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு முன்வந்தது.
கடந்த சில வருடங்களாக இந்த அமைப்பின் ஊடாகவே அம்பாறை மாவட்டம் தவிர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி வருகின்றோம்.

கிழக்கில் மழைவெள்ளத்தினால் எந்தப்பாதை மூடப்பட்டிருக்கிறது என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே பயணத்தை தொடர்ந்தேன். ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் இந்த இயற்கையின் சீற்றத்தால் மாற்றம் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

திருகோணமலைக்கு செல்லும்போது விடிந்துவிட்டது. கன்னியா வெண்ணீர் கிணறுகளில் நீராடினால் பயணக்களைப்புத்தீரும். உடலில் புத்துணர்ச்சி பிறக்கும். அங்கு சென்றேன்.

இலங்கையில் இன்று மலிவாகக்கிடைக்கும் சிலை புத்தருடையது. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். திருகோணமலையில் நடுநாயகமாக அமைந்துள்ள பெரிய புத்தர் சிலை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்ற நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகும் அவர் அங்கே மௌனமாக நிஷ்டையில்தான் இருக்கிறார்.

அரசும் வேண்டாம் அதிகாரமும் வேண்டாம் குடும்ப உறவும் வேண்டாம் என்று முற்றும் துறந்த துறவியாகச்சென்றவரின் சிலைக்கு ஆயுதப்படையினர் பாதுகாப்பு வேலியும் அமைத்து காவல் இருக்கின்றனர்.
கன்னியா வெண்ணீர் கிணறுகள் இராவணன் காலத்து ஐதீகக்கதைகளை சொல்கின்றன. ஆனால் அங்கு இராவணன் சிலை இல்லை. இராவணன் வழிபட்டதற்கான அத்தாட்சி தரும் சிவன் சிலையும் இல்லை. ஆனால் ஒரு சிறிய சிவன் கோயில் இருக்கிறது.

இராவணனுக்குப்பின்னர் தோன்றிய புத்தர்பெருமான் அங்கே எழுந்தருளியிருக்கிறார். இலங்கை எங்கும் எழுந்தருளியிருக்கிறார். இலங்கைவேந்தன் சிலை எங்குமே இல்லை. ஆனால் இராமபிரான் ஏதாவது கோயிலில் சிதாப்பிராட்டி அனுமான் சகிதம் இருக்கிறார்.

இலங்கையை முன்னொருகாலத்தில் ஆட்சி செய்தான் என்று கர்ணபரம்பரைக்கதைகள் ஊடாக சொல்லப்படும் இராவணனுக்கு இலங்கையில் சிலைகள் இல்லை. ஆனால் லங்காதகனம் புரிந்த ஆஞ்சநேயர் எனச்சொல்லப்படும் அனுமானுக்கு நுவரேலியாவிலும் கொழும்பு தெஹிவளையிலும் மற்றும் பல்வேறிடங்களிலும் பெரிய கோயில்களும் சிலைகளும் இருக்கின்றன.

இலங்கையுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காலத்துக்குக்காலம் இந்தியாவிலிருந்து ஏராளமான தூதுவர்கள் வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த தூதுவர் ஆஞ்சநேயர்தான்.

அவர், சிறைவைக்கப்பட்ட சீதைக்காக தூது வந்தார். அவருடைய வாலில் இராவணனின் படையினர் தீவைத்தனர். அவர் அந்தத்தீயினாலேயே லங்கா தகனம் செய்தார்.

வன்னிபெருநிலப்பரப்பு (2009 இல்) தகனத்திற்கும் தூதுவர்கள்தான் பின்னணியிலிருந்தார்கள். அவர்களுக்கும் ஆஞ்சநேயர் முன்னோடிதான்.

கன்னியா வெண்ணீர் கிணறுகளில் நிராடச்சென்றபொழுது உடன்வந்த திருகோணமலை இளைஞர் ஒருவர் அங்கு ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து கவலைதெரிவித்தார். “மதம் ஆன்மீகத்தை வளர்ப்பதற்குப்பதிலாக குரோதங்களையே வளர்க்கிறது. இலங்கையும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் அதற்கு சிறந்த உதாரணங்கள். இவற்றைக்கடந்துதானே நாம் வாழவேண்டியவர்களாக இருக்கிறோம். கடப்போம். காலம் எதற்கும் பதில் செல்லும்.” என்று அவருக்கு ஆறுதல் சொன்னேன்.

நிலாவெளியில் அமைந்துள்ள தன்னார்வ அமைப்பின் பணிமனையில் மாணவர் ஒன்றுகூடலும் தைப்பொங்கல் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அமைப்பின் பிரதிநிதிகள் திருமதி ராதிகா, திரு. ரவீந்திரகுமார் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஓழுங்கு செய்திருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

அரச பாடசாலைகளுக்குச்சென்று கல்வி கற்றபோதிலும் மாலைநேரங்களில் தனியார் நடத்தும் வகுப்புகளுக்கும் செல்லும் நிலையிலேயே மாணவர்சமுதாயம் வாழ்கிறது. இந்த நிலைமை இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளிலும் தொடருகிறது.

உலகில் ரியூஷன் வகுப்புகளுக்குச்செல்லாத மாணவர்கள் எவருமே இல்லை என்பது பொதுவிதியாகியிருக்கிறது. திருகோணமலை மாவட்டத்திலும் எமது கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச்சென்று பயிலும் அதேவேளையில் தனியார் நடத்தும் வகுப்புகளுக்கும் சென்று வருகின்றனர்.

சில ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் கற்பித்து சம்பளம் பெற்றுக்கொண்டே, தம்மிடம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாலைவேளைகளில் வீட்டில் பாடம் நடத்தி உழைக்கின்றனர். உரியநேரத்தில் மாணவர்கள் இயலாமையினால் பணம்கொடுக்க முடியாமல் தவிக்கும்போது…. “ரியூஷன் ஃபீஸைக்கொண்டுவா…..அதன் பிறகு படிக்க வரலாம் என்று களைத்துவிடும்” ஆசிரியப்பெருந்தகைகள் எமது சமுதாயத்தில் வாழ்கிறார்கள் என்ற கொடுமையான செய்திகளும் இந்த ஒன்று கூடல்களில் கிடைத்தன.

“ நிதியத்தின் நிதியுதவி ரியூஷன் ஃபீஸ் செலுத்துவதற்கும் போதாது” என்று சில தாய்மார்கள் சொன்னபோது திகைத்துப்போனேன்.

ஒரு தாயார் கண்கலங்கியநிலையில் தமது குடும்பத்தின் ஏழ்மை பற்றிச்சொன்னார். இப்படி எத்தனையோ ஆயிரக்கணக்கான விதவைத்தாய்மார்கள் எங்கள் தேசத்தில் தவிக்கின்றார்கள். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் ஒவ்வொருவரும் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஓரு குடும்பத்தில் ஒரு பிள்ளையின் படிப்புச்செலவையாவது பொறுப்பேற்றால் அந்தக்குடும்பத்தில் விளக்கேற்றிவைக்க முடியும்.

திருகோணமலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மட்டக்களப்புக்கு புறப்பட்டபோது மாலை நான்கு மணியாகிவிட்டது. கிண்ணியா பாதையில் சென்றால் விரைவில் மட்டக்களப்பை அடைந்துவிடலாம் என்று அங்கே சிலர் சொன்னார்கள்.
நாமும் அதனை நம்பிக்கொண்டு புறப்பட்டோம். சுமார் 60 மைல்கள் கடந்து வந்தபின்னர், ஓரிடத்தில் பொலிஸார் எமது வாகனத்தை தடுத்தனர். வெள்ளம் இருப்பதனால் பயணத்தை தொடரமுடியாது எனச்சொன்னார்கள். மீண்டும் திரும்பி பொலன்னறுவை – ஹபரணை மார்க்கமாக மட்டக்களப்பை வந்தடையும்பொழுது இரவு பதினொரு மணியும் கடந்துவிட்டது.

வீரகேசரி, ஈழநாடு பத்திரிகையில் முன்னர் பணியாற்றியவரும் மூத்த பத்திரிகையாளருமான ‘கோபு’ என ஈழத்து இதழியல் துறையில் அழைக்கப்படும் எஸ். எம். கோபாலரத்தினம் எனது வரவுக்காக உறங்காமல் காத்திருந்தார். அவர் தற்போது மட்டக்களப்பில் மகள் குடும்பத்தினருடன் இருக்கிறார். அவரது பேரன் அருள் சங்கீத், இருக்கிறம் இணையஇதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார்.

கோபுவை எனக்கு 1975 இல் யாழ்ப்பாணத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா அறிமுகப்படுத்திய காலப்பகுதியில் அவர் ஈழநாடு பத்திரிகையில் பணியிலிருந்தார்.

கோபு பற்றி குறிப்பிடும்பொழுது, எனக்கு தமிழகத்தின் ஜெயகாந்தன், ம.பொ.சிவஞானம், விந்தன் ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் ஒப்புநோக்காளர்களாக தமது தொழில் வாழ்க்கையை தொடங்கியவர்கள். பின்னாளில் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்தவர்களானார்கள்.

தற்போது இலங்கையில் தினக்குரல் நாளேட்டின் பிரதம ஆசிரியராக பணியாற்றும் நண்பர் தனபாலசிங்கமும் நானும் 1977 இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாகவே இணைந்து பின்னர் பத்திரிகையாளர்களானோம்.

கோபுவும் 1953 இல் வீரகேசரி பத்திரிகையில் ஒரு ஒப்புநோக்காளராகவே பணியில் அமர்ந்தார். பின்னர், ஆசிரியபீடத்தில் இணைந்து ஒரேசமயத்தில் அலுவலக நிருபராகவும் துணைஆசிரியராகவும் பணியாற்றி பத்திரிகையாளனாக உருவானார்.

அப்பொழுது அவர் பெற்ற மாதச்சம்பளம் 72 ரூபாதான். 1960 இல் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது அந்த வேலையை இழந்து யாழ்ப்பாணம் சென்று ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார்.
கோபு வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர்.

1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப்(?) படை வடக்கு, கிழக்கு மாகணங்களில் நிலைகொண்டது. இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.

தனது சிறை அனுபவங்களை ஜூனியர் விகடனில் தொடராக எழுதினார். ஈழமண்ணில் ஒரு இந்தியச்சிறை என்ற தலைப்பில் அவர் எழுதிய குறிப்பிட்ட தொடர் பிரான்ஸில் குகநாதன் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடு வார இதழிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

பின்னர் தனி நூலாக வெளியானது. ஏற்கனவே அவர் இதழ்களில் பதிவுசெய்த ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பாக ‘ அந்த ஒரு உயிர்தானா உயிர்’ என்ற நூலையும், பத்திரிகைப்பணியில் அரை நூற்றாண்டு, முடிவில்லாப்பயணத்தில் முடியாத வரலாறு ஆகிய நூல்களையும் வரவாக்கியுள்ளார்.

போர்க்காலத்தில் இயக்கங்கள் மற்றும் இலங்கை இந்திய படைகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்திருப்பார்கள்? என்பதை கோபலரத்தினத்தின் குறிப்பிட்ட நூல்கள் ஆழமாகப்பதிவு செய்துள்ளன.

“இதுவரையில்….இலங்கையில் ஊடகவியலாளர்களின் வாழ்வையும் பணிகளையும் அவர்கள் எதிர்நோக்கிய இன்னல்களையும் சித்திரிக்கும் நாவல் எதுவும் வெளியாகவில்லையே…. உங்களால் எழுதமுடியும்…..எழுதுங்களேன்…” என்று அவரைச்சந்தித்தவேளையில் சொன்னேன்.

“ நான் ஒரு இலக்கியப்பிரதியாளன் அல்ல. அனுபவங்களை பதிவு செய்யும் ஊடகவியலாளன். உங்களைப்போன்ற பத்திரிகையாளர்களாகவே செயற்பட்டு அதேசமயம் இலக்கியப்படைப்பாளிகளாகவும் இயங்குபவர்கள்தான் எழுதவேண்டும்.” என்றார்.
மட்டக்களப்பில் தமது மகள் குடும்பத்தினருடன் இளைப்பாறிவரும் கோபலரத்தினம் அவர்களுடன் நீண்டபொழுதுகளைச் செலவிட்டேன். ஒரு மூத்தபத்திரிகையாளருடன் உரையாடிய அந்த இரண்டு நாட்களில் அறிந்துகொண்ட தகவல்கள் பெறுமதியானவை.

“ உங்கள் பெயரைச்சொல்ல உங்கள் நூல்களை மட்டுமல்ல ஒரு பேரனையும் (ஊடகவியலாளர் அருள்.சங்கீத்) வழங்கியிருக்கிறீர்கள்” எனச்சொல்லிக்கொண்டு அவரிடமிருந்து விடைபெற்று, செங்கலடியில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்துசேர்ந்தேன்.

(பயணங்கள் தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: