மனைவி இருக்கிறாவா…? Is your wife at home?

TREES_

முருகபூபதி

இந்தப்பத்தியின் தலைப்பாக உபாதை என்றும் குறிப்பிட நினைத்தேன். ஏன் என்பதை வாசகர்கள் பத்தியின் இறுதியில் தெரிந்துகொள்ளலாம்.

அன்று ஒருநாள் மாலை நான் எனது நூலக அறையில் கணினியில் எழுதிக்கொண்டிருந்தேன். வாசலில் அழைப்பு மணியோசைகேட்டது. யார் என்று பார்க்கும்படி மனைவிக்கு சற்று உரத்தகுரலில் சொன்னேன். மனைவி வீட்டின் பின்புறத்தில் தான் புதிதாக வளர்க்கும் பூஞ்செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

“ கையில் வேலை. நீங்களே போய்ப்பாருங்கள்” என்று அவளும் உரத்த குரலில் சொன்னாள்.

யார்… இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும். எவரும் வருவதாக இருந்தால் முற்கூட்டியே சொல்லியிருப்பார்கள். பத்து நிமிட கார் ஓட்டத்தூரத்திலிருக்கும் இரண்டாவது மகள் அன்று மாலை வருவதாகவும் சொல்லவில்லையே… தற்பொழுது நாம் இருப்பது மெல்பன் நகரிலிருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கிராமமும் அற்ற மாநகரமும் அற்ற சனசந்தடி செறிவற்ற மிகவும் அமைதியான பிரதேசம். மெல்பனிலிருந்து இந்த மாலைவேளையில் எவரும் புறப்பட்டு வந்திருக்கமாட்டார்கள். வந்திருப்பது யாராக இருக்கும்? என்ற யோசனையுடன் எழுந்துசென்று வாசல் கதவைத்திறந்தேன்.
ஒரு அழகிய இளம் யுவதி. முப்பது வயதிற்குள் மட்டிடலாம். புன்முறுவலுடன் மாலை வணக்கம் சொன்னாள். நானும் பதிலுக்குச் சொல்லிவிட்டு உள்ளே அழைத்தேன். ஆனால் அவள் உள்ளே வராமல் வாசல் கதவுக்கு வெளியே நின்றவாறே உரையாடினால். அவளது ஒரு கையில் ஒளிப்படங்கள் பதிவுசெய்யப்பட்ட சிறிய அட்டைகள். அத்துடன் ஒரு ஹேண்ட்பேக்.
எமது உரையாடல் ஆங்கிலத்தில் அமைந்தது. அதனை தமிழ்ப்படுத்தினால் இப்படித்தான் இருக்கும் என நம்புகின்றேன்.

“ சொல்லுங்கள்… என்ன விடயம்?”

“ நான் வேர்ல்ட் விஷன் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகின்றேன். ஒரு ஏழைப்பிள்ளைக்கு உங்களால் உதவமுடியுமா?”

“ ஏற்கனவே நாங்கள் இலங்கையில் போரிலே பெற்றவர்களை இழந்த ஏழைப்பிள்ளைகளுக்கு உதவி வருகின்றோம்.”

“ அப்படியா…? மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இலங்கையரா? இலங்கையில் கொழும்பா?”

“ இல்லை அதற்கு சமீபமாக உள்ள ஒரு மேற்குகரையோர நகரம் நிகம்பு. நீங்கள்..?”

“ இந்தியா. வடக்கு பஞ்சாப்.”

“ நல்லது இந்தியரான நீங்கள் ஆபிரிக்க நாட்டுப்பிள்ளைகளுக்கு உங்கள் அமைப்பின் ஊடாக உதவுகின்றீர்கள். சிறந்த மனிதாபிமான பணிகளை வேர்ல்ட் விஷன் செய்வது அறிவேன். எனது மகனும் ஒரு பிள்ளைக்கு உதவிவருவதாக அறிகின்றேன்.”
“ அப்படியா… நல்லது. மகன் எங்கே இருக்கிறார்?”

“ அவன் தொலைவில் தென்அவுஸ்திரேலியா மாநிலத்தில் இருக்கிறான். தற்பொழுது உடல்நலக்குறைவினால் நான் வேலைக்குச்செல்வதில்லை. அதனால் சற்று பொருளாதார நெருக்கடி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் சேவைக்கு உதவமுடியும். ஏற்கனவே எமது குடும்பம் இலங்கையில் சில பிள்ளைகளுக்கு உதவிவருகிறது. தற்பொழுது உங்களது வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன்.”

“ பரவாயில்லை… நீங்களும் பிள்ளைகளுக்கு உதவுவதாக சொல்கிறீர்கள்… நல்லது. அதுபற்றிய ஏதும் பிரசுரங்கள் இருக்கிறதா.. .பார்க்க விரும்புகின்றேன்.”

“ ஆம்… நிச்சயமாக.. .உள்ளே வாருங்கள். எடுத்துவருகின்றேன்.”

நான் வீட்டினுள்ளே திரும்பிச்சென்று எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் இந்த ஆண்டுக்கான 40 பக்க அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை அடங்கிய பிரசுரத்தை எடுத்து வந்து கொடுத்தேன். அப்பொழுதும் அந்த யுவதி வீட்டினுள்ளே வராமல் வெளியே நின்றவாறு அந்தப்பிரசுரத்தை பார்த்துவிட்டுää “ இதனை நான் எடுத்துக்கொள்ளலாமா?” எனக்கேட்டாள்.

“தாராளமாக” என்றேன்.

சில கணங்களில் அவள் கேட்ட கேள்வி என்னை துணுக்குறச்செய்தது.

“ உங்கள்… மனைவி தற்பொழுது வீட்டில் இருக்கிறாவா?”

“ ஆம்… இருக்கிறாள். பின்புறம் தோட்டத்தில் மரங்களுக்கு தண்ணீர் விடுகிறாள். அழைக்கட்டுமா? “

“ இல்லை… வேண்டாம்…” எனச்சொல்லிவிட்டுää சற்று தயங்கினால். பின்னர் மூன்று செக்கண்டுகளில்ää “ உங்களது குளியலறையை பாவிக்கலாமா?” எனக்கேட்டாள்.

“ ஆம்… வாருங்கள் உள்ளே…”

நன்றி சொல்லிவிட்டு கொண்டுவந்த பேக்கையும் பிரசுரங்களையும் தரையில் வைத்துவிட்டு உள்ளே வந்தாள். அழைத்துச்சென்று குளியலறையை காண்பித்தேன். அதற்கிடையில் மனைவியும் வீட்டின் பின்புறமாக வந்துவிட்டாள். மனைவியைக்கண்டதும் அவளுக்கும் மாலைநேர வணக்கம் சொன்ன அந்த யுவதிதனது உபாதையை போக்கிவிட்டு கைகளை கழுவி சுத்தம் செய்தவாறு வந்து மனைவியுடனும் சிறிது நேரம் உரையாடினாள்.

“ இந்தப்பிரதேசம் மிகவும் அமைதியானது. உங்கள் நாட்டவர்களை மட்டுமல்ல எங்கள் இந்தியர்களையும் இந்தப்பிரதேசத்தில் அரிதாகவே பார்க்க முடிகிறது. உங்களுக்கு போரடிக்கவில்லையா? இந்த இடம் உங்களுக்கு பிடித்தமானதா?” எனக்கேட்டாள்.

நான் குறுக்கிட்டுää “ இல்லை போரடிக்கவில்லை. எவருக்குமே தாய்நாடு விருப்பமானதுதான். ஆனால் ஏதோ விதிவசத்தால் இங்கு நாமெல்லோரும் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம். இனம், மொழி மதங்களுக்கு அப்பால் நாங்கள் மனிதர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்ந்தால் எல்லோருமே நேசத்துக்குரியவர்கள்தான்” என்றேன்.

“ சரியாகச்சொன்னீர்கள்.. .மீண்டும் சந்திப்போம்” எனச்சொல்லிவிட்டு புறப்படத்தயாரானாள்.

“ ஏதும் கோப்பி… தேநீர் அருந்துகிறீர்களா…?” என்று மனைவி அவளை உபசரிக்க முனைந்தாள்.

“ வேண்டாம். நன்றி. உங்கள் குளியலறையை பயன்படுத்துவதற்கு உதவியதே பெரிய உபசரிப்புத்தான். மீண்டும் சந்திப்போம்” அவள் விடைபெற்றாள்.

“ பாவம் அந்தப்பிள்ளை” என்றேன்.

“ ஏன்…?” எனக்கேட்டாள் மனைவி.

“அவளுக்கு வந்த உபாதையை போக்குவதற்கு சிரமப்பட்டிருக்கவேண்டும். தெருவிலே ஆட்களின் நடமாட்டமே இல்லை. எங்கள் வீட்டுக்கு வந்தாவது தனது சிரமபரிகாரத்தை முடித்துக்கொள்ள நினைத்திருக்கிறாள். எனினும் முன்னெச்சரிக்கையாக “ உங்கள் மனைவி வீட்டில் இருக்கிறாவா..?” என்று கேட்டுக்கொண்டாள்.”

நான் அப்படிச்சொன்னதும் மனைவி “அவள் புத்திசாலிப்பெண். பிழைத்துக்கொள்வாள். நாட்டில் நடக்கும் பாலியல் வல்லுறவு தாக்குதல் சம்பவங்களை அறிந்திருப்பாள்தானே..?” என்றாள்.

சிறுநீர் உபாதை எத்தகையது என்பது என்னைப்போன்ற நிரிழிவு நோய் இருப்பவர்களுக்குத்தெரியும். எழுத்தாளர் – நண்பர் டானியல் ஒரு சமயம் எனக்குச்சொன்னார்ää ‘தம்பி நான் தூரப்பயணங்கள் வெளியூர் பயணங்களை முடிந்தவரையில் தவிர்த்துக்கொள்வதற்கு எனக்குள்ள நீரிழிவு வியாதியும் ஒரு காரணம்.’

ஆம் உண்மைதான். வெளியூர்ப்பயணங்களில் எங்காவது இரவில் தங்கநேர்ந்தால்ää அந்த இடத்தில் அல்லது இல்லத்தில் எங்கே மலகூடம் இருக்கிறது என்பதை கேட்டுத்தெரிந்துவைத்துக்கொள்வேன். இரவில் இருட்டில் தட்டுத்தடுமாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தமிழக இலக்கியவாதி தமிழச்சி சுமதி தங்கபாண்டியனின் பாம்படம் என்ற கட்டுரைத்தொகுதியை சமீபத்தில் படித்தேன். அதில் புறவழிச்சாலை என்னும் கட்டுரையில் பெருந்தெருக்களின் அருகே வளர்ந்திருந்த மரங்களை அழித்திருக்கும் கொடுமை பற்றி உருக்கமாகக்குறிப்பிட்டிருக்கிறார்.

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கொளுத்தும் வெய்யிலில் தலையில் முக்காடுபோட்டுக்கொண்டு இளநீர் விற்கும் ஒரு பெண்ணைப்பற்றி பதிவுசெய்கிறார்.

வெய்யிலில் தாகம் எடுத்தாலும் தான் விற்கும் இளநீரைக்கூட குடிக்காமல் எச்சிலை விழுங்கியவாறு தனது உபாதையை கட்டுப்படுத்தும் அந்தப்பெண்ணின் வார்த்தைகளை இங்கே பாருங்கள்:-

“ இங்கன இருந்த மரமெல்லாம் வெட்டி ரோடு போட்டப்ப நானும் காண்ட்ராக்ட்ல வேலை செஞ்சேன். அப்பவும் சரி இப்பவும் சரி… ஒதுங்குறத்துக்கு எங்க போறதுங்கிறதுதான் பொம்பிளைகளுக்குப் பெரும்பாடு. மரத்துக்குப்பின்னாடி இன்னொருத்தி காவலுக்கிருந்தா படக்குன்னு ஒதுங்கிட்டு வந்துடலாம். இதனாலயே இத்தனை இளநி இருந்தும்ää நா தாகத்துக்கு ஒண்ணும் குடிக்கிறதில்லை. எச்சியை முழுங்கிட்டே இறங்கு வெயில் வரைக்கும் தாக்குப்பிடிச்சுடுவேன். அந்த முணு நாட்களில் இன்னும் சித்ரவதை. சமயத்துல தூக்கு மாட்டிச்செத்துடலாமான்னு இருக்கும். அட அதுக்கும் ஒரு மரமில்லாம நாதியத்துப்போச்சு”

நடுவீதியில் உபாதைகள் வந்தால் ஒதுங்க ஏதாவது ஒரு இடம்வேண்டும். அந்த உபாதைகளை எழுத்தில் சொல்வதாயின் வார்த்தைகளும் வேண்டும்.
—-0—-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: