பத்து மில்லியன் டாலர் சொத்துக்கு உரிமையாளராகிய பின், இலண்டனில் ஒரு மிருக வைத்தியசாலையில் நியமனம் பெற்றுக்கொண்டு செல்லும்போது ‘எப்பொழுதாவது இங்கிலாந்துக்கு வந்தால் என்னைப் பார்’ எனச் சொல்லி விட்டுத் ஷரன் தனது இண்டனில் வதியும் சிறிய தாயாரின் விலாசம் கொண்ட காகிதத்தை மெல்பேன் விமான நிலயத்தில் வைத்து சுந்தரம்பிள்ளையிடம் கொடுத்தாள்.
எங்கோ கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரம் கிலோமீட்டரில் உள்ளவர்களைத் தாக்கும் சுனாமி போல் இவள் செய்த காரியம் வேறு எந்த சராசரி பெண்ணாலும் செய்து முடித்திருக்கமுடியாது. அப்படி செய்து முடித்திருந்தாலும் இப்படி வெளிநாடு போக முடியாது. இவள் குற்றத்தின் தண்டனையில் இருந்து தப்பியதற்கு சிட்னி ஹோட்டலில் அவளோடு தான் தங்கியதுதான் காரணம் என்பது இன்னமும் சுந்தரம்பிள்ளையால் நம்ப முடியவில்லை.
அன்று நடந்த விடயங்கள் தற்செயலானவையா? இல்லை இவளால் திட்டமிடப்பட்டதா? அல்லது சந்தரப்பத்திற்கு ஏற்றபடி சமயோசிதமாக நடந்து கொண்டு தன்னைப் பாதுகாத்தாளா?
பலமுறை கேட்டாலும் விடைதெரியாத விடுகதையாக அவள் இருந்தாள்
ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை அவிழ்க்க முடியாத புதிராக மட்டும் அல்லாது தான் அவளுடன் சேர்ந்து பிணைந்து விடப்பட்டதாக சுந்தரம்பிள்ளை நம்பினான். அவளில் விருப்பம் இல்லை என விலகிவிட முடியாது. அதேவேளையில் விரும்பியும் உண்மையான நட்புடன் இருக்க முடியாத தன்மை இவளுடன் தொடர்ந்து வருகிறது. வைத்தியசாலையில் மற்ற எவரும் ஷரனுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாத நிலையில் தான் ஒருவனாக அவள் நாட்டை விட்டுச் செல்லும் வரையும் அவளுக்கு உதவியாக இருந்தது மனிதாபிமானமான நட்பா இல்லை காமம் கலந்த உணர்வின் வெளிப்படுத்தலா என அகத்தில் அடிக்கடி வினாவிக்கொண்டு விடையற்றவனாக சுந்தரம்பிள்ளை இருந்தான்
அவள் விமானத்தளத்தின் கஸ்டம் பகுதியில் சென்று ஒரு கையில் பெட்டியும் மறுகையில் கையில் மாக்கசை பிடித்தபடியும் செல்லும் அவளது உருவம் விமானநிலயத்தின் கதவுகளுக்கு அப்பால் மறையும்வரை அங்கு நின்றான். உருவம் மறைந்தபின் அந்தக் காட்சி, நிழலாக அழுத்தமாக அவனது நெஞ்சில் செதுக்கப்பட்டது. உடனே விமான நிலயத்தை விட்டு போக விரும்பினாலும் முடியவில்லை. சில நிமிடத்தில் அருகே உள்ள கபேயில் இருந்து காப்பியை அருந்தியபடி கடந்த சில மாதங்களில் நடந்த விடயங்களை அசை போட்டபோது அவை சினிமாவில் அல்லது ஒரு சீரியலில் வருவது போன்ற சம்பவங்களாக அவை இருந்தது.
சிட்னியில் இருந்து வந்தபின் வைத்தியசாலைக்கு வராமல் தனது இராஜினாமாக் கடிதத்தை அனுப்பியிருந்தாள் என்ற விடயம் வைத்தியசாலையில் பேசப்பட்டது. அது சம்பந்தமாக ஷரனைத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என நினைத்தாலும்,அது நடக்கவில்லை. சுந்தரம்பிள்ளையின் தயக்கத்துக்குப் பல காரணங்கள் அவற்றில் முக்கியமானது கணவன் மனைவி சண்டையில் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அவளுடன் உடலுறவு கொண்டு இன்னும் விடயத்தை சிக்கலாக்கியது. ஷரனுக்கு கிறிஸ்ரியன் அடித்த விடயத்தைச் சொல்லி அவளுக்கு உதவிய விடயத்தை சாருலதாவுக்கு சொல்லியபடியால் மேற் கொண்டு விடயங்கள் சிக்கலாகுவது தவிர்க்கப்பட்டது. சாருலதாவுக்கு தன் கணவன் இரவில் அடிபட்ட பெண்ணுடன் தங்கியிருந்த விடயம் தெரிந்தாலும் வித்தியாசமாக கேட்கவோ,சந்தேகப்பட்டு நினைக்கவோ இல்லை என்பது அவளது நடத்தையில் தெரிந்தது. அதேவேளையில் சுந்தரம்பிள்ளைக்கு ஷரனோடு இருந்த அந்த இரவு பல நாட்களாக மனத்திரையில் அடிக்கடி சினிமாவாக ஓடியது.
இரண்டு கிழமையில் ஒரு நாள் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்தத் தொலைபேசியில் பேசியவர் மெல்பேனில் ஒரு பெரிய லோயர்களின் கம்பனியின் பெயரைச் சொல்லி அங்கு வேலைசெய்வதாகவும்,தனது பெயர் நிக் லோசன் என அறிமுகப்படுத்தி விட்டு தான டொக்டர் ஷரன் பேட்டின் வழக்கறிஞர் எனக்கூறினார்.
ஷரனுக்கு மணவிலக்கு ஏற்பாடு செய்யும் வழக்கறிஞராக இருக்கவேண்டும். சிட்னியில் அவளை ஒரு கொடிய மிருகத்தை அடிப்பதிலும் பார்க்கக் குருரமாக அடித்தவனுடன் தொடர்ந்து ஒன்றாக குடும்பம் நடத்த விரும்பாமல் மணப்பிரிவிற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதில் சிட்னியில் அடித்ததற்கு சாட்சி சொல்ல அழைக்கக் கூடும் என நினைத்த சுந்தரம்பிள்ளைக்கு அந்த வழக்கறிஞரின் அடுத்த வசனம் உடலை வியர்க்கப் பண்ணியது. கற்பனைக்கப்பாற்பட்ட அதிர்ச்சியைக் கொடுத்து உயிரை உடலில் இருந்து வெளியே இழுத்து மயக்க நிலைக்கு அழைத்து செல்வதுபோல் இருந்தது.
‘ஷரன் தனது கணவனைக் கொன்றதாக கூறும் வழக்கில் ஆஜராகும் பரிஸ்டருக்கு நான் உதவி செய்கிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை அந்த வழக்கை மெல்பேன் நீதிமன்றத்தில் எடுக்கிறார்கள். உங்களைச் சாட்சிக்கு வரும்படி அழைக்க விரும்புகிறோம்.’
வார்த்தைகள் வெளி வரமறுத்ததால் சிறிது நேர மவுனத்தின் பின்பு சுதாரித்துக் கொண்டான்.
‘மன்னிக்கவும்’
‘பரவாயில்லை. இப்பொழுதுதான் கேள்விப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்’
‘உண்மைதான்’
‘எல்லா பத்திரிகை, தொலைக்காட்சியிலும் வந்தது. உங்களுக்குத் தெரியும் என்பதால்
நேரடியாக விடயத்திற்கு வந்தேன்’
‘எனக்கு இந்தக் கொலையை பற்றி எதுவும் தெரியாதே. என்னால் என்ன சொல்லமுடியும்?’
‘சிட்னியில் ஹோட்டலில் அடித்தது சம்பந்தமாக மட்டும்தான் உங்களிடம் கேட்கப்படும்.’.
‘நான் வந்து அதைக் கூறமுடியும்’
‘வெள்ளிக்கிழமை பத்துமணிக்கு வழக்கு மெல்பேன் நீதிமன்றத்தில் தொடங்குகிறது. அதைபற்றிப் பேசுவதற்கு ஒன்பது மணியளவில் உங்களைச் சந்திக்க விரும்புகிறோம்.’
அவரது தகவலின்படி சிட்னியில் இருந்துவந்த சில நாட்களில் தகப்பனின் வேட்டைத் துப்பக்கியால் கிறிஸ்ரியனை சுட்டுவிட்டு பொலிசில் சரணடைகிறாள். அந்த வழக்கில் சிட்னி ஹோட்டலில் எடுத்த படங்கள் முக்கிய சாட்சியாகின்றன.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்குப் போகவில்லை என்பதால் நடந்த விடயங்கள் சுந்தரம்பிள்ளைக்குத் தெரியாமல் போய்விட்டது. இப்படியான விடயங்களை மணிக்கு நான்கு தடவை சொல்லும் வானொலி, தொலைக்காட்சி,பத்திரிகையில் இருந்தும் எப்படி தவறவிட்டிருக்க முடியும் என எண்ணியபடி வைத்தியசாலக்குத் தொலைபேசி எடுத்த போது எல்லோரும் பிசியாக இருப்பதால் நேரே டொக்டர் ஆதருக்கு தொடர்பு கிடைத்தது.
‘சிவா மிகவும் பாரதூரமான விடயம் ஒன்று மூன்று நாட்களுக்கு முன்பு நடந்து விட்டது. ஷரன் துப்பாக்கியால் கணவனைக் கொலை செய்து விட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.தற்பொழுது பொலிஸ் ரிமாண்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது’ என மிக மனவருத்தத்துடன கூறினார்.
அந்த வழக்கில் சாட்சியாக அழைக்கப்பட்டதையும் அத்துடன் சிட்னி ஹோட்டலில் நடந்ததையும் சுந்தரம்பிள்ளை சொன்னான்.
‘அப்பொழுது பொலிசுக்குப் போய் இருந்தால் இந்த கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்’
‘பலமுறை வற்புறுத்தியும் ஷரன் கேட்கவில்லை. காயங்களுக்கு டாக்டரை பார்க்கும்படி கேட்டபோது மறுத்துவிட்டாள். அந்த விடயத்தை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்பதால் நான் அதைப் பற்றி எவரிடமும் கூறவில்லை. அன்று இரவு முழுவதும் அவனைக் கொலை செய்வேன் எனப் பல முறை கூறினாள். அது அவன் மிருகத்தனமாக அடித்ததில் ஏற்பட்ட வலியால் சொல்லும் வார்த்தைகள் என நினைத்தேன்.’
‘வைத்தியசாலைக்கு ஏற்கனவே இராஜினாமா கடிதத்தை அனுப்பியதால் எங்களுக்கும் எதுவும் தொடர்பு இருக்கவில்லை,அதிலும் தனிப்பட்ட காரணம் என கடிதத்தில் எழுதி இருந்ததால் எதையும் அனுமானிக்கவும் முடியவில்லை.’
‘நான் கேள்விப்பட்டது மற்றும் புரிந்து கொண்டதன்படியும் கடந்த மூன்று வருடங்கள் அவளது திருமண வாழ்க்கை சீராக அமையவில்லை என்பது தெரிந்தது. அவளிடமிருந்து விவாகரத்துக்கான நடவடிக்கையைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முடிவை நான் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை’ எனக்கூறிவிட்டு சுந்தரம்பிள்ளை தொலைபேசியை வைத்தான்.
—
இந்தக் காலத்தில் கொலிங்வுட் உணவு அருந்த மறுத்து வாந்தி எடுத்ததால் மீண்டும் தீவிர வைத்தியப் பிரிவில் சேர்க்கப்பட்டது. இரத்தப் பரிசோதனையில் சிறுநீரகம் முற்றாகப் பழுதாகி விட்டது என்பதைக் இரத்த பரிசோதனை அறிக்கை காட்டியது. பட்டினியாக இருப்பதிலும் பார்க்கப் மரண பயம் பெரிதாக அலைக்கழித்தது. ஒவ்வொரு முறையும் சுந்தரம்பிள்ளை தீவிர சிகிச்சைப் பிரிவின் பக்கம் போன போது நடுங்கியபடி இருந்தது.
‘எனது இறப்பை எப்பொழுது செய்யப் போகிறாய்? நான் ஒவ்வொரு கணமும் இறப்பதைப்போல் கனவு காணுகிறேன். அதில் பெரிய நாய்களெல்லாம் வந்து என்னைக் குதறுவதாகவும்,
எனது குடல் வெளியே வந்து இழுபடுவதாகவும் தெரிகிறது. ஒரு கருப்பு டொபமான் நாய் எனது கனவில் அடிக்கடி வருகிறது. அது என்னைப் பார்த்தபடி குலைத்துக் கொண்டிருக்கிறது. அதனது கருமையான கண்கள் இருளைத் துளைத்தபடி என்னை ஊடுருவி செல்கிறது. காதுகள் என்னைப் பார்க்கும் போது நேராக விறைத்தபடி நிற்கின்றன. அதனது உதடுகள் விலகும்போது கோரைப்பற்கள் சொல்லமுடியாத அளவு விகாரமாக இருக்கிறது’ என நடுங்கியது.
‘கொலிங்வுட் நீ அதிக நேரம் தூக்கத்தில் கழிப்பதால் மனிதரைப்போல் கனவுகள் காணுகிறாய். உனது வாழ்நாளில் இந்த வைத்தியசாலையில் பார்த்த விடயங்கள் இப்பொழுது ஆழ் மனத்தில் வந்து போகிறது. இவையெல்லாம் தொலைக்காட்சியில் வரும் விம்பங்கள் போன்றவையே. இவைகள் உண்மையல்ல. உன்னைக் கருணைக் கொலை செய்வதைப் பற்றி எல்லோரிடமும் நான் கலந்து ஆலோசிக்க வேண்டும். நீ இந்த வைத்தியசாலையில் வளர்ந்ததால் எல்லோருக்கும் உன்னைப் பற்றிய கரிசனம் உள்ளது. மற்றவர்கள் உனக்கு விடை கொடுப்பதற்கு இரண்டு நாள் அவகாசம் கொடுக்க விரும்புகிறேன்.
‘டிராமாக்குயின் கணவனைக் கொலை செய்து விட்டாளா? . அவளுக்கு என்ன நடக்கும்?
‘மரணத்திற்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருக்கும் நிலையில் உனக்கு இப்படியான ஊர்வம்பு தேவையாக இருக்கிறது. மனிதரில் இருந்து ஒரே ஒரு வித்தியாசம்,பயத்தில் நீ கடவுளை நோக்கி பிரார்த்திக்கவில்லை. அந்த கடவுள் என்ற கருத்தாக்கம் இந்த வைத்தியசாலையில் இல்லாததால் உனக்குப் புரியவில்லை. அதாவது கடவுளை அறியாத ஆதிகால மனிதர்களின் நிலையில் இருக்கிறாய். உனக்குக் கறுப்பு டோபமானில் ஏற்பட்ட மனப்பிராந்தியை இலகுவாக மனிதர்கள் கடவுளாக்கி வடிவம் கொடுத்திருப்பார்கள். நீ பேசுவது போல எழுதவும் முடிந்திருந்தால் டோபமானை கடவுளாக்காது விட்டாலும் காலனாக்கி விட்டிருப்பாய். அது சரி எல்லா நாய்களையும் விட்டு விட்டு டோபமானில் உனது கனவு ஏன் வந்தது?’
‘இந்த வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னால் குட்டியாக இருந்த காலத்தில் நான் இருந்த வீட்டில் கறுத்த டோபமான் இருந்தது. என்னால் அந்த வீட்டின் பின்வளவிற்கு போய்வர முடியாது. வீட்டின் முன்பகுதியில்தான் எனது காலத்தை கடத்த வேண்டி இருந்தது. வீட்டின் வெளிவாசலில்தான் எனது சீவியம் நடந்தது. இந்த நிலையைச் சகிக்கமல் சில மாதங்களில் நான் அந்த வீட்டை விட்டு வெளியேறியதால் தெருவில் கண்டெடுத்த சிலரால் இங்கு கொண்டுவரப்பட்டேன்’
‘உனது சிறு பருவத்துப் பயம் ஆழ்மனத்தில் பதிந்து இப்பொழுது கனவில் வருகிறது. பதினைந்து வருடங்கள் டொபமான் வாழ்ந்த சரித்திரம் இல்லை. நீ பார்த்த அந்த டோபமான் ஏற்கனவே இறந்திருக்கலாம்’ எனச் சொல்லிவிட்டு சுந்தரம்பிள்ளை கொலிங்வுட்டை கையில் எடுத்துக் கொண்டு வைத்தியசாலையின் கொரிடோர் வழியாகச் சென்றபோது ஆதர் எதிரே வந்தார்.
‘எப்படி இப்ப கொலிங்வுட் பாடு’எனக் கேட்டபடி தோலை இழுத்து உடலின் நீர்த்தன்மையை பரிசோதித்தார்.
‘ம் பரவாயில்லை’. பசி எப்படி ? உணவு ஏதாவது —–’ கவலையுடன் ஆதர்
‘இரண்டு நாட்களாக சாப்பாடு இல்லை. சேலையின் ஏற்றுவதால் உயிர் வாழ்கிறது. இதற்கு மேல் சாப்பிடாத கொலிங்வுட்டை வைத்திருப்பது காருண்ணியமானதாக எனக்குப் படவில்லை. நான் கருணைக்கொலை செய்வதற்கு உத்தேசித்துள்ளேன். மற்றவர்களிடம் அது பற்றிப் பேச நினைக்கிறேன்’
‘வைத்தியசாலையில் செல்லப்பிராணியாக விளையாடித் திரிந்த கொலிங்வுட் துன்பப்படக்கூடாது. என்னைப் பொறுத்தவரை அது சரிதான்’ என சொல்லிவிட்டு ஆதர் தன்னுடைய அறைக்குச் சென்றார்.
கொலிங்வுட் அப்பொழுது கண்ணை மூடியபடி தனக்குக் கேட்கவில்லை என்பது போல் பாவனையில் இருந்தது.
சுந்தரம்பிள்ளை தேநீர் அறைக்கு கொண்டுக் சென்றார். அங்கு எவரும் இருக்கவில்லை.
நீ அந்த டிராமா குயினது விடயத்தைச் சொல்லவில்லை?
‘உனது கேள்வி அமரிக்காவில் கொலைத்தண்டனையில் இறக்க இருப்பவர்களினது கடைசி ஆசை போன்று இருக்கிறது. இறப்பை மூன்று விதமாக மனிதர்கள் எதிர் கொள்ளவார்கள் என படித்திருக்கிறேன். மரணத்திற்கு முன் வாழ்கையின் சகல சுகங்களையும் அனுபவித்து விட்டு போக நினைப்பார்கள். அழகிய பெண்கள் ,மதுவகைகள்,நறுமணம்மணந்தரும் ரோஜாக்கள்,
காதுக்கு இனியகானங்கள் என புலன்களின் தேவைகளை சுகிக்க வேண்டுமென நினைத்து,
அதன் அடிப்படையில் இறக்கவிருப்பவனது கடைசி ஆசையை நிறைவேற்றுவது என்ற கருத்தாக்கம் வந்தது. இந்த ஆசை நிறைவேறாவிட்டால் ஆவியாக அலைவார்கள் என் உபகதைகளை சிருஷ்டித்தார்கள். இது ஆதிமனிதனிலிருந்த,தற்போது நவீன விஞ்ஞான காலம்வரை மாறாமல் இருக்கிறது. இதற்கப்பால் முதிர்ந்த வயதில் ஆசைகளைக் குறைத்து மெதுவாக அடங்கி உயிர்விடுவது ,துள்ளிக் குதித்து பாய்ந்து கரைபுரண்டு ஓடும் நதி ஒன்றாகி, சலனமின்றிக் கடல் எது, நதி எது என அடையாளம் தெரியாமல் அமைதியாக ஒன்றாவது போன்றது. இதைத்தான் காடு செல்லுதல் துறவறம் பூணுதல்,உணவை ஒறுத்து உபவாசம் மேற்கொள்ளல். வடக்கிருத்தல் என கிழக்கத்தய ஞானிகளும் துறவிகளும் வலியுறுத்தினார்கள். இதற்கு அப்பால் மூன்றாவதாக தாங்கள் வாழும்போது செய்த அறங்கள்,
செயல்பாடுகள் என்பன தாங்கள் விட்டுச் சென்றவை தங்களது எச்சங்களாக வாழுகிறது என்ற நினப்பில் அரசர்களும் அறிஞர்களும் இறந்தார்கள்.மொசப்பத்தேமிய இதிகாசத்தில் கிலாகமெஸ் என்ற மன்னன் உயிர்காக்கும் செடி பறிபோனபின்பு தனது கோட்டை உறுதியான சுவர்கள் காலத்தை வெல்லும் என்று ஆறுதலடைந்தானாம். உன்னைப் பொறுத்தவரை உனது ஆசை இலகுவான முதல் வகையில் சேர்ந்தது போலத் தெரிகிறது. அதை நிறைவேற்றுவது எனது கடமை. ஷரனுக்கு மெல்பேன் நீதிமன்றத்தில் வழக்கு நாளைக்கு நடக்கிறது. அதில் நான் அவளது சார்பாக வழக்கில் சாட்சி சொல்கிறேன்.அதனால்தான் நாளை மறுதினம் உனது கருணைக்கொலைக்கு திகதி வைத்திருக்கிறேன்.’
‘அதென்ன உனக்கு அவளில் அவ்வளவு ஈடுபாடு? அது எப்போது வந்தது?“
‘மற்ற செல்லப்பிராணிகள் போலவா உன்னோடு பழகிறேன்.? உனது அறிவும் உனது அகங்காரமும் எனக்கு ஆரம்பத்திலே பிடித்துவிட்டது. அதனால் உன்னோடு இவ்வளவு ஈடுபாடாக இருக்கிறேன். அது போலத்தான் அவளது அழகும் அறிவும். அத்துடன் கர்வத்துடன் தன்னை மட்டுமே முக்கியமானவளாக நினைப்பதும் அளவு கடந்து நேசிப்பதும் அதற்காக எதையும் செய்வதும் போன்ற அவளது செயல்கள் அவளை மற்றவர்களில் இருந்து பிரித்துக் காட்டுகிறது. அது அவளின் சிறப்பாக நினைப்பதால் அவளில் எனக்கு ஒரு ஈடுபாடு என வைத்துக்கொள்.’
அப்பொழுது போலினும் பூனைப் பகுதியில் வேலை பார்க்கும் மோரினும் வந்தார்கள்.
போலின் முகத்தில் சந்தோசம் தெரிந்தது.
‘என்ன இவ்வளவு புன்னகை உன் முகத்தில் ?’
‘விடயம் தெரியாதோ. போலினுக்குப் புதிய போய்பிரண்ட் உடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது’ என்றார் மோரின்.
‘காட்டு’ என போலினது விரல்களை பிடித்த போது அந்தப் பழைய மோதிர அடையாளம் முற்றாக மறைந்து விட்டது. இப்பொழுது அந்த விரலை அழகிய வைர மோதிரம் அலங்கரித்தது.
‘இந்த மோதிரத்திற்கு சொந்தக்கார அதிஸ்டசாலியான மனிதன் யார்?
‘பிரான்சிஸ். கம்பியுட்டர் புரோகிராமர்’ என்றாள்.
‘எனக்கு பிரான்சிசை நினைத்துப் பொறாமையாக இருந்தாலும் உன்னை நினைக்கச் சந்தோசமாக இருக்கிறது’ என்றபோது சுந்தரம்பிள்ளையின் தலையில் செல்லமாக அடித்தாள்.
‘மோரின், போலின், சனிக்கிழமை கொலிங்வுட் கருணைக் கொலை செய்யப்படுகிறது. உங்களது முத்தங்களையும், கட்டியணைப்புகளையும் கொடுப்பதற்கு அவகாசம் நாற்பத்தெட்டு மணிநேரங்கள் மட்டும்தான். அதற்கு மேல் தாங்காது’ என்றபோது கண்ணீருடன் கொலிங்வுட்டை தன்கையில் வாங்கி அதன் தலையில் உதட்டை பதித்து முத்தம் கொடுத்தபடி ‘எனது அன்புக்குரிய முதியவரே’ என மார்போடு அணைத்தாள்.
‘போலின் நான் நாளைக்கு ஷரனது வழக்கு விடயமாக மெல்பேன் நீதிமன்றத்தில் இருப்பேன். நாளை கொலிங்வுட்டை கவனிப்பதுடன் இந்தக் கருணைக்கொலை விடயத்தை எல்லோருக்கும் அறிவித்துவிடு. விளம்பரப்பலகையில் ஒரு அறிவித்தலைப் போட்டு கடைசி மரியாதையை உயிரோடு இருக்கும்போது தெரிவிக்கச் சொல்லு. சாதாரண பூனை போல் அல்ல. கொலிங்வுட்டால் எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.’
‘ஷரனது வழக்கைப் பற்றி என்ன அறிந்தாய்? என மோரின்.
‘அந்த ஹோட்டலில் நடந்த விடயத்தை தவிர எனக்கு எதுவும் தெரியாது. அவளது வழக்கறிஞர் என்னைச் சாட்சியாக வரும்படி சொன்னது மட்டும்தான் இப்பொழுது தெரிந்த விடயம்’என அந்த விடயத்துக்கு சுந்தரம்பிள்ளையால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மோரின் ஊர்வம்புகள் பேசுவதில் கெட்டிக்காரி. வாய் கொடுத்தால் பலவிடயங்களைத் தெரிந்து கொள்வதில் சாமர்த்தியசாலி. இதுவரையும் சிவா நல்ல மனிதர். நல்ல வைத்தியர் என அவள் வைத்திருந்த அபிப்பிராயத்தைக் கெடுக்க விருப்பமில்லை.
—
வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த அன்று சுந்தரம்பிள்ளை மெல்பேன் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள கபேக்கு ஏற்கனவே கூறியபடி சென்றபோது அங்கு நான்கு பேர் ஒன்றாக ஒரு மேசையில் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஷரனது பெண் பரிஸ்ரர்.; அவருக்கு உதவியாக நிக் லோசன் இருந்தார். இவர்களை விட மேலும் இரண்டு பெண்கள் மத்திய வயதினர். அவர்களை நிக் லோசன் அறிமுகப்படுத்திய போது ஒருவர் அவுஸ்திரேலியாவின் திருமணமான பெண்கள் குடும்பங்களில் கணவர்களால் அடித்து துன்புறத்தப்படுதலிலும், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதிலும் ஆராய்ச்சி செய்து டொக்டர் பட்டம் பெற்று, இங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேரமாக வேலை செய்பவர். மற்றப் பெண்மணி மனோவியாதி நிபுணர். இவர் விக்டோரிய சிறைகளில் வைக்கப்பட்ட பெண்கள் எதற்காக இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பதில் ஆராய்ச்சி செய்து டொக்டர் பட்டம் பெற்றவர். தற்போது சிறையில் உள்ளவர்கள் விடயமாக விக்ரோரிய அரசாங்கத்திற்கு ஆலோசனையாளர். இப்படியான மிகவும் பெரும்புள்ளிகள் ஷரனுக்கு சார்பாக வேலை செய்கிறார்கள். அந்தக் கபேயில் எப்படி ஷரனை விடுதலை செய்வது என்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுந்தரம்பிள்ளை, பெரிய சுறாக்கள் நடுவே சிறிய மீனாகத் தான் இருப்பதாக உணர்ந்தான். அவர்களது திட்டமிடப்பட்ட சட்டவாதம் – குடும்பத்தில் கணவனால் தொடர்ச்சியாக ஷரன்மீது நடந்த வன்முறையால் அவள் மனம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பாதுகாப்புக்காக பாவிக்க நினைத்த துப்பாக்கி அவர்களுக்கு இடையில் நடந்த கைகலப்பில் வெடித்து விட்டது. சம்பவத்திற்கு நேரடியான சாட்சியம் எதுவும் இல்லை. வழக்கின் முடிவு சந்தர்ப்ப சாட்சியங்களில் மட்டுமே தங்கியுள்ளது. தொடர்ந்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வன்முறைக்கு உ்டபட்டிருப்பதாதால் நடந்த கைமோசக் கொலையாக இதை எடுத்துக் கொள்வதோடு இப்படியாகப் பாதிக்கப்படும் பெண்களின் நிலையில் ஷரனுக்கு வேறு பாதுகாப்பு இருக்கவில்லை என்பதாக இருந்தது.
பேசிக்கொண்டிருந்தபோது மத்திய வயதான பெண் கவலை தோய்ந்த முகத்துடன் அங்கு வந்தார். அவரை எல்லோருக்கும் நிக் லோசன்,ஷரனின் தாயார் நிக்கோலா பேட் என அறிமுகப்படுத்தினார். ஷரனிலும் பார்க்கச் சிறிது உயரம் குறைந்து, பருமனாக இருந்தார்.
பரிஸ்டர் தனது விளக்கத்தைத் தொடர்ந்தார்.
‘ஏற்கனவே அடித்துத் துன்புறுத்தியதாக பொலிசில் கொடுத்த புகாரும் எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இன்றைக்கு நாங்கள் கொடுக்கும் ஆவணங்களைப் பார்ப்பதற்கு மட்டும் நேரம் நீதிபதிக்குச் சரியாக இருக்கும். விசாரணைகளை மேற்கொள்ள நேரம் இருக்காது’
பரிஸ்டர் பேசி முடிந்ததும் நிக் லோசன் ‘நீங்கள் அந்த ஹோட்டேலில் ஷரனை எடுத்த படங்கள் எங்களுக்கு இந்த வாதத்திற்கு பலமான சாட்சியமாகிறது.’ எனச் சொன்னபோது எல்லோரும் சுந்தரம்பிள்ளையை நோக்கித் திரும்பினார்கள். அதுவரையும் சுந்தரம்பிள்ளையின் இருப்பு அங்கு முக்கியமாகக் கருதப்படவில்லை.
இந்தப் படங்களை எடுத்ததற்கு ஷரனே காரணம் .அவள் என்னை வற்புறுத்தி எடுக்க பண்ணினாள் என அத்தனை பேருக்கும் உடனே சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்ல முடியாவில்லை.
இப்படி ஒரு வழக்கை அன்று அவள் எதிர்பார்த்து சாட்சியங்களைத் தயார் செய்தாளா? அவள் விரித்த வலையில் கிறிஸ்ரியன் மட்டுமல்ல நானும் விழுந்தேனா?
கேள்விகள்… ஆனால் பதில் இல்லாத கேள்விகள்.
மீண்டும் பரிஸ்டர் ‘சிட்னியில் நடந்த விடயத்தை டொக்டரிடம் இருந்து ஒரு அறிக்கையாக எழுதினால் அதை நீதிபதிக்குக் கொடுக்கலாம். இதன் மூலம் டொக்டரை குறுக்கு விசாரணைக்கு வரவழைப்பது அவசியமற்றதாக்கலாம். மேலும் எங்கள் அதிஸ்டத்திற்கு பெண் நீதிபதியொருவர் வழக்கை எடுப்பதாக இருக்கிறது.’
உடனடியாக நிக் லோசன் தனது மடிக்கணணியை எடுத்துக் கொண்டு தூரத்தில் இருந்த மேசையை நோக்கிச் சென்றபோது அவரைச் சுந்தரம்பிள்ளை பின் தொடர்ந்தார்.
‘ஒரு மணித்தியாலத்தியாலம்தான் நமக்கு இருக்கிறது. எனவே வேகமாக இதை எழுதி முடிக்க வேண்டும். நீங்கள் நடந்த விடயத்தைக் கூறுங்கள்’ என்றார்.
சுந்தரம்பிள்ளை ஐந்து மணியில் இருந்து இரவு பத்து மணிவரையும் நடந்த விடயங்களை ஆதியோடந்தமாகக் கூறியபோது உடனுக்குடன் அதைத் தனது மடிக்கணணியில் பதிவு செய்தார். ஒரு விதத்தில் சுந்தரம்பிள்ளைக்கும் அது சரியாக இருந்தது. எழுதிய விடயத்தைச் சொல்லும்போது இலகுவாக இருக்கும். அதைவிடச் சினிமாவில் வந்த நீதிமன்றக் காட்சிகள் குறுக்கு விசாரணையை, கொலைக்களமாக நினைக்கவைத்தது.
கணணியில் டைப் அடித்து முடித்து விட்டு அதைப் படித்துப் பார்க்கும்படி நிக் லோசன் கூறினார்.
பத்து மணிக்குச் சரியாக நீதிமன்றம் தொடங்கியது. பெண் நீதிபதி உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தார். எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
சில நிமிடத்தின் பின்பு ஷரன் இரண்டு பெண்காவலர்களால் உள்ளே கொண்டுவரப்பட்டாள். சிறிது மெலிந்திருந்தாலும் முகத்தில் கடந்த காலங்களில் இருந்ததிலும் பார்க்கப் பிரகாசமாக இருந்தது. முகத்தில் எந்த ஒரு மேக்கப்பும் இன்றி இருக்கும் போது சில வருடங்கள் குறைந்தது போல் தோன்றினாள். கண்ணில் மட்டும் கர்வமான எள்ளல் வழமைபோல் தெரிந்தது.
குற்றவாளி என ஒத்துக் கொண்டதும் தன்னைத் தாக்க வந்தவேளை, தற்பாதுகாப்பிற்காக அந்தத் துப்பாக்கியை எடுத்தபோது அதைத் தன்னிடமிருந்து கிறிஸ்ரியன் பறிக்க முயன்றபோது வெடித்த ஒரே குண்டு தலையில் பாய்ந்து விட்டது என ஷரனால் கூறப்பட்டது.
கிறிஸ்ரியன் கருப்பு பெல்ட் கராட்டி வீரர் என்பதால் அவரது கைகள் ஒவ்வொன்றும் ஆயுதம் ஒன்றிற்கு சமமானது என பரிஸ்டரால் நீதிமன்றத்திற்கு நினைவுறுத்தப்பட்டது.
ஷரனது பரிஸ்டரால் பல பத்திரங்களுடன் சிட்னி ஹோட்டலில் சுந்தரம்பிள்ளையால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அன்று வழக்கு மீண்டும் ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
—–
காலை பத்து மணியளவில் ஐம்பது பேர் வேலை செய்யும் வைத்தியசாலை வழக்கத்திற்கு மாறாக அமைதியாகிவிட்டது. இப்படியான அமைதி இந்த வைத்தியசாலையில் இருப்பது வழக்கமானதல்ல. மனிதர்களும் அவர்களது செல்லப்பிராணிகளும் வேறு திசைகளில் நடமாடும் போது செல்லப்பிராணிகள் குரைத்தோ சீறியோ தங்களது இருப்பை வெளிப்படுத்தும். அவற்றைத் தவிர்த்து வைத்தியர்கள், நேர்சுகள் என்போர் அங்கும் இங்கும் அமைதியைத் தொலைத்து விட்டு அலையும் இடமான வைத்தியசாலையின் கொரிடோர், இன்று நடப்பவர்களின் காலடியோசையை தெளிவாக கேட்கும் மயானத்தின் அமைதியை தன்வயப்படுத்தியதாக இருந்தது.
சுந்தரம்பிள்ளைக்கு இது புதுமையாகவிருந்தது. காரணம் புரியவில்லை.
நாய்களின் கூடுகளில் வாட் ரவுண்டை முடித்துவிட்டு பூனைப்பகுதியில் கொலிங்வுட்டின் இறுதி அத்தியாயத்தை ஏற்கனவே தீர்மானித்தபடி முடித்து வைப்போமெனச் சென்ற போது அங்கு வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் கொலிங்வுட்டைச் சுற்றி கூடி நின்றனர். கொலிங்வுட் அங்கிருந்த பெரிய மேசையில் வெள்ளைத்துணியில் படுத்திருந்தது. தலை கீழே தொங்கிக் கொண்டிருந்ததால் கொலிங்வுட்டின் மூக்கு, மேசைத் துணியை தொட்டுக் கொண்டிருந்தது. மிருதுவான சாம்பல் நிறமான உரோமங்கள் மென்மையற்கு இன்று முட்கள் போல் கண்ணுக்குத் தெரிந்தன. சிறுநீரக வியாதியால் இரத்தத்தில் உள்ள உப்புச் சக்தி வெளியேறி விடுவதால் தசைநார்களின் இயக்கத்துக்கு உப்பின் பற்றாக்குறை ஏற்பட்டு தசைகளின் வலிமை குறைந்து விடுகிறது. கழுத்தை நிமிர்த்தி வைப்பதற்குக் கழுத்துத் தசைகள் ஒத்துழைக்க மறுத்துவிடுவதால் பலமற்று விடுகிறது. உடலின் நீர்த்தன்மை இழப்பதால் தோலின் மிருவான தன்மை குறைந்து விடுகிறது.
மொத்த வைத்தியசாலையே ஒன்றாக வந்து இறுதியாக விடை கொடுத்து அனுப்பக் காத்து நிற்பது கொலிங்வுட்டைப் பொறுத்த வரையில் பதவியில் இருக்கும் போது இறந்த அமரிக்க ஜனாதிபதிக்குக் கொடுக்கும் ராஜாங்க மரியாதை போன்றது. ஏற்கனவே ஒரு செப்புத்தட்டு செய்யப்பட்டு அதில் கொலிங்வுட்டின் பெயரும் பிறந்த திகதி ஒரு குத்து மதிப்பாக எழுதப்பட்டிருந்தது. அந்தத் தட்டும் மேசையில் வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி கொலிங்வுட்டுக்குப் பதினைந்து வயதாகிறது.
எல்லோரும் கருணைக்கொலையை செய்வதற்கு சுந்தரம்பிள்ளையை எதிர்பார்த்துக் கொண்டு நின்றனர்.
சுந்தரம்பிள்ளையின் மனநிலை வேறு ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்க்க வைத்தது. அவுஸ்திரேலியாவில் கடைசியாகத் தூக்குத்தண்டனைக் கைதியின் கழுத்தில் சுருக்கு மாட்டிய பென்றிஜ் சிறை ஊழியரின் நிலையைப் போன்ற நிலைக்குத் தான் தள்ளப்பட்டதாக நினைக்க வைத்தது. அவுஸ்திரேலியாவில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை 1967 ம் ஆண்டுதான் நடந்தது. தப்பி ஓடும் போது சிறைக்காவலர் ஒருவரைக் கொலை செய்ததற்காக தூக்குக் கயிற்றில் தொங்கி இறக்கும் மரணதண்டனை டொனால்ட் றயனுக்கு விதிக்கப்பட்டது. அந்த தூக்குத் தண்டனை நடந்த பென்றிஜ் சிறைச்சாலைக்கு குடும்பத்துடன் ஒரு நாள் உல்லாசப்பயணம் சென்ற போது அங்கு அந்த தூக்குகயிற்றின் நீளம் கூடினால் கழுத்தெலும்பு உடனே உடையாது. மரணம் மெதுவாகவாகத்தான் நடைபெறும். அதேபோல் நீளம் குறைந்தால் கழுத்தெலும்பு உடைவதற்குப் பதிலாக சுவாசக்குளாய் நசிந்து மூச்சுத் திணறி அதன் மூலம் இறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். மூச்சு திணறும்போது மலம் சலம் வெளியேறி அசுத்தமாகும் என அந்தப்பகுதியில் நின்ற ஒரு இளைஞன் தெரிவித்தான்.
தனது மரணத்தை விரைவாக முடித்துவிடு என ஹொலிங்வுட்டும் கேட்டிருந்ததால் அந்தத் தூக்குக் கயிற்றின் நீளம் பற்றிய விளக்கம் மனத்தில் நிழலாடியது. இங்கேயும் ஒரு கொலைகாரராக பச்சைத்திரவத்தை இரத்தக் குளாயில் ஏற்றும்போது கொலிங்வுட்டின் இரத்த நாளத்தின் விட்டத்திற்கு ஏற்ப ஊசியின் நீளம் உள்விட்டம் இருக்கவேண்டும். வயது கூடி முதுமை அடைந்ததால் இரத்த ஓட்டம் வேகம் குறைந்துவிடுவதால் ஏற்றிய திரவம் மூளைக்கு செல்ல சிறிது நேரம் எடுக்கும். அந்த இடைவெளியில் சிறிதளவு திரவத்தால் வலிப்பு வந்தால் மலம் சலம் வெளியேறிவிடும்;. ஒரே நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தும் அளவு பச்சைத்திரவம் உள்ளே செல்லவேண்டும். வேலையைச் செய்யும் போது அதை முடிந்தவரை சரியாகச் செய்யவேண்டும் என்பதால் சுந்தரம்பிள்ளை அந்த ஊசியொடு அருகில் சென்றபோது இதுவரையில் மயக்கத்தில் இருந்தது போல் படுத்திருந்த கொலிங்வுட்டை மோறின் கையில் எடுத்தாள்..
சுந்தரம்பிள்ளை கொலிங்வுட்டின் முகக்தருகே சென்று கேட்டான்.
கொலிங்வுட், உனது கடைசி ஆசை என்ன?
சுந்தரம்பிள்ளையைக் கூடி இருந்தவர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.
‘டிராமா குயினுக்கும் உனக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா?
‘இருந்தது. அது வைத்தியர் போன்ற தொடர்பு’
‘எனக்குப் புரிந்து விட்டது. ஒழுங்காக என்னைக் கருணைக்கொலை செய்’
ஏற்கனவே முன்காலில் மயிர்கள் வழிக்கப்பட்டு சேலையின் குழாய் பொருத்தி இருந்ததால் ஆரம்பத்தில் நினைத்தது போல் நேரடியாக ஊசியை ஏற்றவேண்டி இருக்கவில்லை. இலகுவாக அந்த குழாயூடாக பச்சைத்திரவம் சென்றதும். கோலிங்வுட் கண நேரத்தில் மோறினின் கையில் சடலமாகியது.
—
ஷரனது வழக்கு மேலும் சிலதினங்கள் நடந்த போதும் சுந்தரம்பிள்ளை நீதிமன்றத்திற்கு செல்லவேண்டி இருக்கவில்லை. எழுதிய அறிக்கை மட்டும் போதுமானதாக இருந்தது என நிக் லோசன் கூறி இருந்தார். அதன் பின்பு ஷரனைப் பற்றிய விடயங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலாக மட்டும் தெரிந்து கொண்டார். அவள் விடுதலையாகி ஆறுமாதத்தில் தொலைபேசியில் வீட்டுக்கு அழைத்து சுந்தரம்பிள்ளைக்கு நன்றி சொல்லி விட்டு இங்கிலாந்து போவதாகவும் விமான நிலயத்திற்கு வரமுடியுமா எனவும் கேட்டாள்.
அதே குரல். அதே ஏற்ற இறக்கம். காந்தமாக இருந்தது. மறுக்க முடியவில்லை.
—
ஒருவிதத்தில் இந்த வைத்தியசாலையில் வேலை தொடங்கிய ஆரம்பகாலத்தில் ஆரம்பத்தில் ரிமதி பாத்தோலியசை வில்லனாக அடையாளம் காணமுடிந்தது.அப்பொழுது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டம் போன்று இருந்தது. இப்போது நடந்த கதையில் ஷரனது பாத்திரம் என்ன? தனது பாத்திரம் என்ன என்ற சுந்தரம்பிள்ளை கேள்வியுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது ஏதோ ஒரு விமானம் மேலெழும் இரைச்சல் கேட்டது.
ஆரம்பம் முதல் முடிவு வரை விறு விருப்புக்கு குறைவில்லாமல் மிக அற்புதமாக நிறைவடைந்தது கதை. ஒவ்வொரு அதியயாயதிற்க்க்காகவும் காத்திருந்து படித்தது மனதிற்கு பிடித்து இருந்தது, பாராட்ட தக்கது.
இன்னும் ஒரு விறு விருப்பான கதையை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகன்….
உங்கள் கருத்திற்கு நன்றி.
2009 ஜுலை மாதம் எழுதத்தொடங்கிய நாவல் அசோகனின் வைத்தியசாலை. தொழில், பயணம், இரண்டு மரணம், இரு பிள்ளைகளின் திருமணம், மற்றும் சிறு அளவில் சமூகசேவை இப்படி பல பகுதிகளுடாக 350 பக்க நாவலை எழுதிமுடித்தது கர்ப்பத்தை இறக்கி வைத்தது போல் இருக்கிறது. இந்த நாவலை முழுவதும் பார்த்து உதவி தனது கருத்தை எழுதிய நண்பர் கருணாகரனுக்கும் முதல் பாகத்தில் எழுத்துகளை சரி பார்த்து அபிப்பிராயம் கூறிய நண்பர் முருகபூபதிக்கும் நன்றி. கடைசி காலத்தில் எப்படா முடிப்பம் என்ற மனநிலை வந்துவிட்டது. முழுநேர எழுத்தாளர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஆனாலும் மிகவிரைவில் எழுத முயற்சிப்பேன்