அசோகனின் வைத்தியசாலை 26

nightmares

ஜோனின் பிரியாவிடை வைத்தியசாலையில் நடந்த சில மாதங்களின் பின் அவனது வீட்டுக்கு ஒரு காலை நேரத்தில் அவனது உடல் நலத்தை விசாரிப்போம் என நினைத்து சுந்தரம்பிள்ளை சாருலதாவுடன் சென்றான்.

ஈரலிப்பாக இருந்த காலைப்பொழுது பனிபுகாரின் போர்வையில் இருந்து வெளியேவரத் தாயின் வயிற்றி இருந்து வரத்துடிக்கும் குதிரைக் குட்டிபோல் திமிறியது. கண்ணுக்கெட்டியவரை டன்னினேங் மலையடிவாரத்தில் உள்ள அந்தப் புறநகரின் புறச்சூழலில் எதுவித மாற்றமும் தெரியவில்லை.மலைச்சாரலில் உயர்ந்து வளர்ந்த யூகலிகப்ரஸ் மரங்கள் பச்சைப் பசேலன கண்களையும், அந்த மரங்களில் இருந்து வந்த மணம் காற்றில் கலந்து கற்பூரவெள்ளி வாசனையையாக வந்து சுவாசப்பையை நிறைத்தது. வாகனத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையால் அமைக்கப்பட்ட வீதியால் காரில் சென்றபோது கண்ணுக்கு தெரியும் காட்சி இராட்சத ஓவியமாக விரிந்தது. அந்தப் புறநகரின் மூன்று பக்கத்தில் உள்ள மலைகளை வெள்ளி நிறமுகில்கள் ஆரத்தழுவி நாளையென எதுவும் இல்லை என்பதுபோல் சரசமாடின. அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் அரசிளங்குமாரியின் தோழிகள் போல் இந்தக் காதல் விளையாட்டுக்குப் பாதுகாப்புப் போர்வையாக மறைத்தன. அவைகளது சரசத்தை ஆதவன் கூட கலைக்க விரும்பாது மெதுவாக தனது ஒளிக்கரங்களை மெல்பேனின் கிழக்குப் பகுதியில் தவழவிட்டான். அந்த ஒளிக்கற்றைகள் பொற்கரங்களாக மரங்களின் இடைவெளியில் மெதுவாக நுளைந்து வெளிவந்தன. இயற்கையின் இந்த உல்லாச சல்லாபத்தால் பொழிந்த மழையில் அந்த மலை சார்ந்த காட்டுப் பிரதேசம் அடர்ந்து வளர்ந்து இருந்ததுடன் பல நீரோடைகள் கிளைபரப்பி அடிவாரத்தை நோக்கி ஓடி சிறிய சலசத்துக் கொண்டு ஓடையாக பாய்ந்து கொண்டிருந்தன.
இந்தப்பகுதி தேசிய வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு சிறிய பகுதி மட்டும் மக்கள் குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றப்பகுதிகளில் அமைந்துள்ள வழித்தடங்கள் மலையேறுபவர்கள், காடு வழிநடப்பவர்கள் தேவையைக் கருதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மெல்பேனின் பலபகுதியில் இருந்து மக்கள் இந்தப் பிரதேசத்திற்கு வந்து இயற்கை எழிலை அனுபவிப்பார்கள்.

தான் வாழும் இடத்தை இயற்கை வளம் கொழிக்கும் இடமாக அழகுணர்வுடன் தெரிந்து எடுத்து வாழ நினைத்தவன் ஜோன். அப்படிப்பட்ட அவனது வாழ்வு மட்டும் நிலத்தில் இருந்து குறுகிய காலத்தில் புடுங்கப்பட்டு அழிக்கப்படும் இளம்செடியாக இருப்பது எவ்வளவு கொடுமை என நினைத்தபடி அவனது வீட்டுக்கு சென்றனர் சுந்தரம்பிள்ளையும் சாருலதாவும்.

வீட்டெதிரே காரை நிறுத்திவிட்டு இறங்கியவர்கள் எதிரே மிஷேல் வாசலில் சிரித்தபடி அந்தக் குளிர்காலை நேரத்தில் கொக்கோ கோலா பருகியபடி நின்றிருந்தாள்.

பார்வைக்கு சிறிது பருத்து இருந்தது போல் தெரிந்தது. அவளது கன்னப்பகுதி உப்பியிருந்தது. தடிப்பான உதடுகளுக்கு உதட்டுச் சாயம் மெல்லிய இளம் சிவப்பு நிறத்தில் தீட்டியிருந்தாள். அவள் சிரிப்பில் சந்தோசத்தைக் காட்டுகிறாளா இல்லை உள்ளத்தில் உள்ள கவலைக்குத் திரை போடுகிறாளா என்பதும் புதிராக இருந்தது. சிலர் கவலையுடன் இருக்கும் போது உணவைக் கவனிக்காததால் மெலிந்து உருக்குலைந்து விடுவார்கள். அதே நேரத்தில் சிலர் அதுவும் பெண்கள் முக்கியமாக கவலையை மறப்பதற்காக உணவைத் தேடுவார்கள். சொக்கிலேட் போன்ற இனிப்பான உணவுகள் ஒருவித போதையைக் கொடுப்பதால் மேலும் மேலும் உண்பதற்கான விருப்பத்தை உருவாக்கும். இந்த வகையான தன்மை இளம் பெண்களை மேற்கு நாடுகளில் தாக்குகிறது. இப்படியாக எடை கூடி விட்டால் பின்பு அதைக் குறைக்க என சைகோலஜிஸ்ட், வைத்தியர்கள், உணவு தயாரிப்பவர்கள் என அவர்கள் நாடுவதால் இந்த எடைகுறைப்பு பெரிய வியாபாரமாகிவிட்டது.

மிஷேலை நலம் விசாரித்த போது தனது வேலையை விட்டு ஜோனுடன் முழு நேரமும் இருப்பதாகக் கூறினாள் .

ஜோன் மீது கொடிய நோய் தாக்கிய போதிலும் ஏதோ ஒருவிதத்தில் அதிஸ்டசாலியாக இருந்திருக்கிறான். மனைவி முழு நேரத் தாதியாக மாறி அவனைப் பராமரிப்பது எவ்வளவு சிறந்தவிடயம் என்பதை வியந்தபடி வீட்டினுள்ளே சென்ற போது பழைய நினைவுகள் நினைவில் வந்தது அலைமோதியது சுந்தரம்பிள்ளைக்கு. சில வருடங்கள் முன்பாக அவர்களது திருமணத்தின் முன்பு நடந்த விருந்தில் உடைகளை கழட்டும் நடனமும், அதற்கு விருந்தினராக சாமுடன் அழைக்கப்பட்ட விடயமும் ஞாபகத்துக்கு வநதாலும் அதை அன்று சாருலதாவிடம் சொல்லாமல் மறைத்ததால் இன்றும் அதைக் கூறமுடியாமல் அந்த நினைவுகளின் உதைப்பை ,மனத்தில் தனியாக அனுபவித்தான். சில நினைவுகள் நிறைமாதக் குழந்தை போல் கால்களை உதைத்துக்கொண்டு வெளிவர துடிக்கும்போது, அதை அடக்குவது கடினமாகிவிடும். எப்படியும் பிரசவம் மாதிரி ஏதோ ஒருகாலத்தில் வெளி வந்துவிடும். வேறு சில நினைவுகள் கிணற்றில் விழுந்த கல்லாக, காலங்களின் தொடர்ச்சியால், பாசியால் மூடப்பட்டு மறைந்து கிடந்துவிடும்.

ஹோலில் இருந்த தொலைக்காட்சியில் ஜோன் தனது அபிமான உதைபந்தாட்ட கழகமான எசண்டன் கழகத்துடன் ஜீலோங் அணி விளையாடும் உதைபந்தாட்டத்தின் பதிவு செய்த பழய விளையாட்டை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே சென்றதும் சாருலதாவையும் சுந்தரம்பிள்ளையும் ஜோன் அடையாளம் கண்டு சிரித்தான் . அவனது முகச்சிரிப்பை பார்த்து விட்டு சுந்தரம்பிள்ளை அவனது கையை நோக்கிய போது அவனது கையில் வைத்திருந்த தொலைக்காட்சியின் ரிமோட் மெதுவாக நடுங்கியது. நாற்காலியில் இருந்து எழுந்திருக்காத போதும் அவனது முழு உடலின் உருக்குலைவு தெரிந்தது. முப்பது வயதில் இளமையின் பூரிப்பில் ஒளிராமல் எரிந்து உயிர்விடும் மெழுகுவர்த்தியாக தெரிந்தான். அவனைப் பார்க்க மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது

‘என்னைப் பார்க்க வந்தது சந்தோசம், சிவா, சாருலதா. வைத்தியசாலையில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?

‘நாங்கள் நன்றாக இருக்கிறோம். உன்பாடு எப்படி’

‘சில மருந்துகள் எடுக்கிறேன். பெரிதாக முன்னேற்றம் இல்லை.’ என சிறு வசனங்களாக பொறுக்கி எடுத்துப் பேசினான்

ஜோனோடு பேசும் போது சமயல் அறையில் மிஷேலுடன் இருந்த இளைஞன் ஹோலுக்கு வந்ததும் அந்த இளைஞனை ஜோனின் நண்பன் என அறிமுகப்படுத்தினாள் மிஷேல்.
மிஷேல் மருந்துகள் சம்பந்தமாக சாருலதா பேசினாள்

சிறிது நேரத்தில் ஜோனின் நண்பனான அந்த இளைஞனும் மிஷேலும், ஜோனை அவனது அறைக்குக் கூட்டிக் கொண்டு சென்றார்கள்.

‘இது மிஷேலின் புதிய நண்பன் என நான் நினைக்கிறேன்’ என சாருலதா மெதுவாக சுந்தரம்பிள்ளையிடம் கூறியபடி அவர்கள் வீட்டில் இருந்து வெளிவந்தாள்
—-

ஹோலிங்வுட், சுந்தரம்பிள்ளையுடன் இருந்த காலத்தில் பொன்னி ஒழுங்காக வீட்டில் இருந்தது. பொன்னி, கொலின்வுட்டுடன் நட்புறவு கொண்டுவிட்டதால் இருவரும் ஒன்றாக விளையாடுவதும் இரவில் படுப்பதாக நாய்-பூனை உறவு எனத் தெரியாமல் இரண்டு நட்பான நாய்களாக தெரிந்தது. அந்த ஒரு கிழமையில் எப்படி அவைகளுக்கிடையே பலமான உறவு உருவாகியது என்பது அதிசயமாக இருந்தது.

மாமிசம் உண்ணும் விலங்குகள் தங்களது இடங்களை வகுத்துக்கொண்டு மற்றய மிருகங்களை அந்த வெளியில் உட்புகுவதைத் தடுக்கும் இயற்கையான குணமுடையவை. மனிதர்கள் வளர்ப்பினால் இந்த குணத்தை நாய் பூனைகளில் இருந்து இல்லாமல் செய்ய முடியாத போதிலும் பயிற்சியாலும் ஒன்றாக சிறுவயதில் இருந்து வளர்ப்பதாலும் அவை நட்புடன் வளர்கின்றன. இதற்குச் சிலகாலம் செல்லும். ஆனால் இங்கு அந்த நட்புறவு மிக இலகுவாக ஏற்பட்டுவிட்டதற்கு கொலிங்வுட்டின் சாதுரியம் காரணமாக இருக்கும்.

அந்த நட்புறவு அதிக நாள் தொடரவில்லை. ஒரு கிழமையாகியதும் வைத்தியசாலையில் நிலவரம் சீராகி பூனை வாட் திறக்கப்பட்டது. இதனால் கொலிங்வுட்டை அங்கே மீண்டும் அங்கு கொண்டு செல்ல வேண்டியதாகி விட்டது

கொலிவுட் வைத்தியசாலைக்கு எடுத்து வந்த ஒரு மாதகாலத்தில் அந்தக் கவலையான விடயம் நடந்தது.

பாடசாலை முடிந்து வந்த வந்த சகன் ‘அப்பா பாடசாலையின் முன்பு சிறிய நாய் அடி பட்டதாகவும் அதை எமேஜன்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள் என்று எனது நண்பர்கள் கூறினார்கள்’ எனக் கவலையோடு சொன்னான்.

அவனது முகத்தின் கலக்கத்தையும் கவலையையும் பார்த்தபோது சுந்தரம்பிள்ளைக்கு சோகம் பற்றிக்கொண்டது.

உடனே வீட்டின் பின்வளவில் தேடியபோது பொன்னியைக் காணவில்லை. அடிபட்ட நாய் பொன்னியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எல்லோரும் குடும்பமாக சமீபத்தில் உள்ள எமேஜென்சி வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள ரிசப்சனில் தங்கள் நாயைத் தேடி வந்ததாகவும் மேலும் மிருக வைத்தியர் என்றதும் உள்ளே அழைத்து சென்றார்கள். மயக்கநிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பொன்னி இருந்தது. தலையில் அடிபட்டதால் மூளையில் பலமான காயம். அத்துடன் வலிப்பு இருந்ததால் அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

பொன்னி உயிர் பிழைத்தாலும் நடமாடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளது என பொன்னியைப் பார்த்த அங்குள்ள வைத்தியர் கூறியதால் கனத்த மனத்துடன் கருணைக்கொலைக்கான கையெழுத்தை சுந்தரம்பிள்ளை ரிசப்சனில் இருந்த பெண் நீட்டிய கடுதாசியில் வைத்தான். மற்றவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கருணைக் கொலை செய்யும் வழக்கத்திற்கு மாறாக இன்று தனது கையெழுத்தை பொன்னியின் கருணைக்கொலைக்கான அனுமதிப்பத்திரத்தில் வைத்து மற்றவர்களுக்கு கொடுத்தான் சுந்தரம்பிள்ளை.

மயக்கத்தில் இருக்கும் பொன்னியின் நாளத்துக்குள் ஏற்கனவே சேலையின் திரவம் சென்று கொண்டிருந்தது. அந்த வைத்தியர், பீனோபாபிரோன் அல்லது பச்சைக்கனவு என செல்லப்பேருடன் அழைக்கப்படும் அந்த பச்சை மருந்தை அந்த சேலையின் குழாயின் உள்ளே செலுத்தியபோது பொன்னியின் சுவாசம் நின்று ஒரு சில கணத்தில் இதயத்துடிப்பு அடங்கியது. அதன் பின்னால் கண்கள் குத்திட்டு மூளையின் இறப்பை உறுதிப்படுத்தியது. மயக்கமாக இருக்கும் போது கருணைக் கொலை செய்வது சிறிது இலகுவானது.

மனிதன் நித்திரையிலும் மயக்கத்திலும் இருக்கும்போது தனது ஆத்மா உடலைவிட்டு வெளியே செல்வதான கருத்தாக்கம் கனவுகளால் உருவானது. நித்திரை கொள்ளும் போதும் மயக்கமாகும் போதும் தற்காலிகமாக உயிராவி வெளியேறிவிட்டது என்ற கருத்தாக்கத்தால் மயக்கமாக இருக்கும் மிருகங்களை கருணைக் கொலை செய்வது செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கட்கும், மிருக வைத்தியர்களுக்கும் இலகுவாக இருப்பது ஆச்சரியமில்லை. இதே முறையைத்தான் அமரிக்காவில் மனிதனைத் தண்டனை என்ற பேரில் கொலை செய்வதற்கும். ஆரம்பத்தில் மயக்கமருந்து செலுத்திய பின்பு உடல் தசைகளை ரிலாக்ஸ் பண்ணும் மருந்து கொடுக்கப்படுகிறது. அதன் பின்பு கடைசியாக சுவாச மற்றும் இதயத்துடிப்பிற்கான மூளையின் பகுதிகளை நிறுத்தும் மருந்தும் செலுத்தப்படுகிறது.

இறப்புக்கு முன்பாக அதை உணர்ந்து கொள்ளும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மிருகங்களால், பறவைகளால் அதை உணர்ந்து கொள்ள முடியாது. காட்டில் மேயும் மானால் அம்புடன் காத்திருக்கும் வேடனை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. நீரில் மிதக்கும் மீனால் அருகில் தொங்கும் தூண்டலினால் மரணம் வருவதை உணரமுடியாது. அதே போல் வளர்ப்பு மிருகங்களையும் கருணைக் கொலை செய்வதற்கு மிருக வைத்தியரிடம் கொண்டு வரும் போது அவைகளுக்கு தங்களுக்கு வரவிருக்கும் மரணத்தை புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் மனிதர்கள் மரணத்தைப் புரிந்து கொண்டு அச்சமடைவதுடன் அதைத் தடுக்க நினைப்பார்கள். மரணத்தை நினைத்து பயந்து மனிதன் அதை புரிந்து கொள்ள முயல்வதே மனித நாகரீக வரலாற்றில் சமயங்களின் தோற்றத்திற்கு காரணமாகிறது. ஆங்காங்கு தோன்றிய ஞானிகள் இறப்பை புறக்கணிக்க முயற்சித்து உபதேசித்த போது ஒரு சிலர் மட்டும் இறப்பை மட்டுமல்லாது மனித வாழ்கையையும் அதன் உறவுகளையும் அதனால் ஏற்படும் உணர்வுகளையும் புறக்கணிக்கிறார்கள்.இவர்கள் மனித கலாச்சாரத்தின் விளிப்பு நிலை மாந்தர்களாக மட்டு்ம் இருந்திருக்கிறார்கள். இறப்புக்கு பயப்படாமல் இருந்தால் மனிதகுலம் டைனோசர்கள் போல் அழிந்து விட்டிருக்கும். இதனால்த்தான் சாதாரண மனிதன் இறப்பை புறக்கணிக்க முடியாமல் அதை வாழ்வின் முக்கிய சடங்காகாக்கிறான். உலகத்தின் சகல பிரதேசத்திலும் வாழும் மக்கள் இறப்பை பிரபலப்படுத்தி அதை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக முக்கியத்துவப்படுத்துகிறார்கள் . இதனை எண்ணும் போது இறப்பை உதாசீனப்படுத்த எண்ணியவர்கள் ஆரம்பத்திலே தோற்கடிக்கப்பட்டதையே கலாச்சாரங்களின் வரலாறு சொல்கிறது.

காயமே இது பொய்யடடா அது காற்றடைத்த பையடா என இருநூறு வருடத்தின் முன்பு கூறிய சித்தர்களும் இறப்பு இல்லா வீடே இல்லை என மகனது உயிரைக் காப்பாற்ற தன்னைத்தேடி வந்த பெண்ணைப் பார்த்து புத்தர் கூறியதும் பண்டைய எகிப்தியர்களில் இருந்து இன்று வாழும் மக்கள்வரை , வாழ்க்கை நிலையாது என தெரிந்து கொண்டாலும் இறப்பைப் புறக்கணிக்க முடியவில்லை.

முன்பு ஒரு நாள் பொன்னியை கருணைக் கொலைக்கு வைத்தியசாலைக்கு காரில் கொண்டு சென்ற போது பொன்னி எந்த அச்சமுமற்றுப் பக்கத்துச் சீட்டில் இருந்தபடி தனது நீளமான சிவந்த நாக்கால் தொடர்ச்சியாக சுந்தரம்பிள்ளையின் இடது கையை நக்கியபடி காரில் வந்ததது. இடைக்கிடை தனது கருமையான ஈரமான மூக்கை அந்தக் கையில் வைத்து அழுத்தும். அன்று அதனது முகத்தில் கோடைகாலத்தில் பிக்னிக்கு குடும்பத்துடன் செல்லும் சிறுவனின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி தெரிந்தது. இந்த மகிழ்ச்சியான நிலை சுந்தரம்பிள்ளையைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. மரணத்தைப் புரிந்து கொள்ளாத பொன்னிக்கு அதை வளர்த்தவனாகிய தானே அந்த மரணத்தை பொன்னிக்கு கொடுக்க விருப்பது என்பதே அந்தச் சங்கடத்திற்குக் காரணம். நண்பன் கலோஸைக் கொண்டு கருணைக்கொலையைச் செய்தால் என்ன என யோசித்தாலும் அப்படிக் கோழைத்தனமாக தனது பொறுப்பில் இருந்து நழுவ விட முடியாது என்பதால் பொன்னிக்குத் தனது கையாலே மயக்க ஊசியையும் மரணத்துக்கான ஊசியையும் போடவேண்டும் என நினைத்தான். நல்ல வேளையாக கொலிங்வுட்டால் பொன்னியின் உயிர் அன்று காப்பாற்றப்பட்டு சில கிழமையின் பின்பாக வேறு ஒருவரின் கையால் இறந்தது.

உயிர்ப்பயம் என்பதை அறியாது வீதியெங்கும் தனக்கு சொந்தமானது என்று நினைத்தபடி ஓடிய பொன்னி போல் இல்லாமல் கொலிங்வுட்டுக்கு மனிதர்கள் போல் இறப்பை பற்றிய சிந்தனையும் மரணத்தில் மேல் பயமும் வந்து பற்றிக்கொண்டுவிட்டது. அதைவிட மரணத்தை இப்படித்தான் அடையவேண்டும் என்ற மன எண்ணமும் வந்து விட்டது. இந்த மாதிரியான எண்ணங்கள் மனிதர்களைத் தவிர எந்த உயிரினத்திற்கும் இல்லாத உணர்வுகள், ஆனால் எப்படி ஹொலிங்வுட்டுக்கு மட்டும் சிந்திக்க முடிந்தது?

இந்த வைத்தியசாலையில் தொடர்ந்து மனிதர்களுடன் வாழ்வதால் பேசும் திறமையை பெற்றது போல் மரணத்திற்கு அஞ்சும் நிலையையும் பெற்றதா? கொலிங்வுட்டின் மூளையின் சில பாகங்கள் இதற்கு ஏற்ப மாற்றமடைந்தனவா? இப்படியாக நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவாக என தெரிந்து கொள்ள மனிதர்களின் மனநிலை சம்பந்தமான விடயங்களையும் மிருகங்களின் நடத்தைகள் பற்றிய புத்தகங்களையும் சுந்தரம்பிள்ளை படிக்கத் தொடங்கினான்.

சிறுநீரகம் உடலின் கழிவுப்பொருட்களை வெளியேற்றும் உறுப்பு. இந்த உறுப்பு மாமிசத்தை உண்ணும் பிராணிகளில் சீக்கிரமாக பழுதடைந்ததால் அங்கு கழிவுப்பொருட்கள் தேங்கி அவை வாந்தியை உருவாக்கும். அத்துடன் உடலின் தசைகளின் செயலாக்கத்திற்கு உதவும் கனிப்பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்தி களைப்பை உருவாக்கும். இந்த மாதிரியான குணங்குறிகள் தெரிந்ததால் கொலிங்வுட் கூட்டில் அடைக்கப்பட்டுச் சேலையின் திரவத்தால் இரத்தத்தில் உள்ள இந்த அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, மீண்டும் புது இரத்தம் பெற்றது போன்ற நிலையை அடைந்த போது மீண்டும் வெளியே நடமாடத்தொடங்கியது.

நடமாடத் தொடங்கினாலும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் கொலிங்வுட்டைப் பாதித்தது. அதனால், முன்போல பல இடங்களுக்குத் நடமாடித் திரிவதில்லை. முக்கியமாக மற்ற மிருகங்கள் இருக்கும் இடங்களைத் தவிர்த்தது. பகலில் கணக்காளர் ஜோனின் அருகிலும் இரவில் வைத்தியசாலையின் மேற்தளத்தில் இருக்கும் வைத்தியசாலையைச் சுத்தம் செய்வர்கள் வீட்டிலும் இருந்தது. அதிக அளவு நேரத்தை தூங்குவதில் கழித்தது. மதிய வேளையில் மட்டும் சுந்தரம்பிள்ளையிடம் வந்து மடியில் இருந்து பேசுவது வழக்கமாகி விட்டது. பழைய எகத்தாளமான பேச்சு, அலட்சியமான பார்வை என்பன இல்லாமல்போய்விட்டது. சுந்தரம்பிள்ளைக்கும் கொலிங்வுட்டுக்கும் இடையில் குரு- சிஷ்யன் போன்ற உறவு ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் நடந்தது. இந்த பேச்சுகள் மற்றவர்களுக்குக் கேட்காவிட்டாலும் இந்த இருவருக்கும் இடையில் ஏற்றபட்ட உறவு புதுமையாக மற்றவர்களுக்குத் தெரிந்தது. வெளியே மதிய உணவுக்குப் போவதைத் தவிர்த்து கொலிங்வுட்டோடு அந்த நேரத்தை கழிப்பது என சுந்தரம்பிள்ளை முடிவு செய்திருந்தான்..

முதியவர்கள் இளமைக்கால நினைவுகளை இரைமீட்டுப் பார்ப்பது போல் கொலிங்வுட், சுந்தரம்பிள்ளையிடம் வைத்தியசாலைக்கு வரமுன்பு நடந்த விடயங்களைப் பேசியது.
கொலிங்வுட்டுக்கு மரணபயத்தை உருவாக்க கூடிய ஒரு நிகழ்ச்சி வைத்தியசாலையில் நடந்தது. புதிதாக சேர்ந்த ஜேன் வைத்தியசாலையில் அனாதரவாக வந்து சேர்ந்த ஒரு

ஆறுமாதமான ஜெர்மன் செப்பேட் கலப்பு நாயை கருத்தடைக்காக ஆபரேசன் செய்து கொண்டிருந்த போது அந்த நாய் தனது சுவாசத்தை நிறுத்தி விட்டது. ஆனால் ஜேனோடு வேலை செய்த நேர்சான மார்வின் அதைக் கவனித்த போது ஏற்கனவே சில நிமிடங்கள் கடந்து விட்டது . காலோசும் மற்றவர்களுமாக ஓடி வந்து முதல் உதவி கொடுத்து உடலை விட்டு வெளியே சென்ற உயிரைக் மீண்டும் பிடித்துக்கொண்டு வந்தபோது அந்த நாய் பிழைத்துக்கொண்டது. ஆபரேசன் முடிந்து மயக்கத்திலிருந்து எழும்பியது வைத்தியசாலையில் உள்ள நாயானபடியால் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டது. அடுத்த நாள்காலை நாய்ப் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் அவதானித்தபோது அந்த இரும்புக் கூட்டில் தலையை மோதிக் கொண்டு நின்றது. இதை மேவிஸ் கூறியதும் சுந்தரம்பிள்ளை அங்கு போய் பார்த்தான். அப்போது அந்த நாய்க்கு கண் தெரியவில்லை என சுந்தரம்பிள்ளைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருட்டில் வைத்துக் கண்ணைப் பரிசோதித்த போது கண்களில் எந்த குறையும் தெரியவில்லை.. இந்த நேரத்தில் அங்கு வந்த ஆர்தர் இந்த நாயின் மூளையின் பார்வைப் பகுதி செயலிழந்துவிட்டது. மூளைக்கு ஒட்சிசன் இல்லாமல் போகும்போது முதலாவதாக விசுவல் கோட்டெக்ஸ் என்ற மூளைப்பகுதி செயலிழக்கிறது. இந்த நாயை கருணைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

இந்த விடயங்கள் நடப்பதை ஹொலிங்வுட் பார்த்துக்கொண்டிருந்தது. தனக்கு இப்படியான நிலை விரைவில் வரவிருப்பதாக நினைத்து அச்சத்தில் நகர மறுத்து தனது செயல்பாட்டை குறைத்து கொள்ளுகிறது. முதிர்ந்த காலத்தில் படிப்படியாக தன்னிலையை இழக்கும் வயதான மனிதர்களின் இயல்பை அப்படியே ஹொலிங்வுட்டும் பிரதிபலிப்பதாக சுந்தரம்பிள்ளை நினைத்தான்.

மனிதர்களுக்கு அவர்களை சுற்றி இறப்பு தொடர்சியாக நடக்கிறது. உறவினர்கள்,சுற்றார்கள் மரணமடைகிறார்கள். இறப்புகளை இளவயதில் பொருட்படுத்தாத போதிலும் ஒருவன் தனது இறுதிக்காலத்தில் தனது வயதை ஒத்தவர்கள் ஒவ்வொருராக மரணமடையும் போது அந்த மரணங்களை எண்ணியபடி வாழ்கிறான். இறப்பின் சிந்தனை அவனை நிலை குலைய வைக்கிறது. தனது இறப்புக்கும் திகதி குறிக்கப்பட்டதாக எண்ணி மனவேதனையை அடைகிறான். அந்த வேதனையில் ஏற்படும் மனஅழுத்தம் அவனுடைய உடலையும் இயங்காமல் பண்ணுவதால் மேலும் பலவீனம் அடைகிறான். மருத்துவரீதியல் பார்க்கும்போது தசைகள் எலும்புகள் வலுவையும் பரிமாணத்தையும் இழக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: