வைத்தியசாலையில் சுந்தரம்பிள்ளைக்கு ஓய்வு நாளானதால் மெல்பேனின் வடபகுதியில் வசிக்கும் நண்பனிடம் சென்றுவிட்டு திரும்பி வரும்போது வைத்தியசாலையுள்ளே சென்றான். எப்பொழுதும் வேலை செய்யும் நாளிலும் பார்க்க வேலை செய்யாத நாளில் சென்று , நண்பர்கள் வேலை செய்வதைப் பார்ப்பது திருப்தியைத் தரக்கூடியது. மனிதர்களுக்கு வேலை செய்வது உடலோடு அல்லது மூளையோடு மட்டும் சம்பந்தபட்டது அல்ல. வேலை தொழிலாக மாறி ஆன்மாவோடு சேர்ந்து விடுகிறது. வேதனம் இரண்டாம் பட்சமாகிறது. வேலை இல்லாமல் இருப்பதை நாகரீகமான மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியாது. மனித வேலையை உடலுழைப்பு என்ற சிறிய வரைவிலக்ணம் கொடுத்து இலகுவாக வரைவு செய்ய முயற்சித்த பொதுஉடமைவாதிகள் தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள்.
அதேவேளையில் வேலையின் பொறுப்பு என்ற சுமை மனிதனின் தலையில் ஏற்றி விடப்படுகிறது. இந்தக் சுமை நிறைமாதப் பெண்ணின் வயிற்றுப் பாரம் போன்றது. இதனால்தான் வேலை முடிந்தபின் பிரசவம் முடிந்தது போன்ற திருப்தி மனத்திலும் உடலிலும் ஏற்படுகிறது.
சுந்தரம்பிள்ளை வேலை இல்லாமல் இருந்த அந்த சுதந்திரமான விடுமுறை நாளில் நண்பர்கள் வேலை செய்வதைப் பார்ப்பது அவனுக்கு திருப்தியை கொடுத்தது. சிலரது முகங்களில் வேலையின் அழுத்தம் தெரியும். சிலர் சிரித்தபடியே வேலை செய்வார்கள். ஒரு சிலருக்கு வேலையின் அழுத்தத்தோடு வீட்டில் உள்ள பிரச்சனை மேலதிகமாகத் அவர்கள் முகங்களில் தெரிவதுடன் வேலையில் தவறுகளை இழைத்து விடுவார்கள். சில தவறுகள் பிற்காலத்தில் நினைத்து இரைமீட்டி பார்க்கும் போது நகைச்சுவையாக இருக்கும்.
ஷாலற் என்ற பெண் வைத்தியர் பற்றிய சில கதைகள் அவர் வைத்தியசாலையை விட்டு போன பின்பும் ஆவி போல் வைத்தியவாலையில் உலாவிக் கொண்டிருக்கும். தேநீர் இடைவேளைகள், மற்றும் மதிய உணவு இடைவேளைகளில் அவை உணவுடன் கலந்து கலந்து பரிமாறப்படும். இதில் வேடிக்கையான ஒன்று பூனை சம்மந்தப்பட்டது. ஒரு நாள் பிரேத அறையில் ஒரு பூனையின் சடலம் எரிப்பதற்காக காத்திருந்தது. அந்தப் பகுதிக்கு பொறுப்பான மேவிஸ் , அதை எடுத்து வழக்கம் போல் செங்கல் மேடையில் போட்டு எரிக்க முற்பட்ட போது அந்த பூனையின் குதவாசலில் உயிரோடு இருந்த போது உடல் வெப்பத்தை கணிப்பதற்காக செருகப்பட்ட தேமாமீட்டர் இன்னமும் அங்குகிருந்தது. இதை பார்த்தும் இவ்வளவு பொறுப்புணர்வு அற்று இந்தப் பூனையை கடைசியாக வைத்தியம் பார்த்த வைத்தியர் யார் என துருவி துப்பறிந்து பார்த்தபோது வைத்தியர் சாலற் என அறிந்ததும் அதை தேனீர் அறையில் சோகத்தோடு இருந்த சாலட்டிடம் சொன்ன போது அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பி தோளை அலட்சியமாக அசைத்துவிட்டு ‘ மேவிஸ் நேற்று இரவு என்னை படுக்கை அறையில் நிர்வாணமாக பார்த்த பின் கூட எனது காதலன் என்னை விட்டு விலகி தனது புதுக்காதலியுடன் போய்விட்டான் என சோகத்தில் இருக்கிறேன். இந்த நேரத்தில் இறந்து போன பூனையின் குதவாசலில் எதை வைத்தேன் என எனக்கு சிந்திக்க நேரமில்லை’ என்றாள்.
அவளது அலட்சியத்தால் ஆத்திரமடைந்த மேவிஸ் ‘அவனிடமும் எதையாவது இப்படித்தான் மறந்திருப்பாய். அவன் அதை தாங்க முடியாது விலகி சென்றுவிட்டான்’ என சொல்லியபடி சென்றார்.
நல்லவேளை ஷாலட் இப்பொழுது இந்த வைத்தியசாலையில் வேலை செய்யவில்லை.
இதைப் போல மேலும் ஒரு ஆண் வைத்தியர் அடிக்கடி நினைவு கூரப்படுவார். அவரது செயலில் முக்கியமானது ஒரு நாள் ஆபிரேசன் செய்யும்போது தற்செயலாகத் தட்டுப்பட்டு கீழே விழுந்த ஆபிரேசனுக்கான உபகரணத்தை மீண்டும் எடுத்து பாவித்தார். இதனால் அந்த நாயில் அவர் செய்த ஆபரேசன் புரையோடி புண் வந்தது. ஆபிரேசன் செய்த போது கூட இருந்து உதவிய நேர்ஸ் புரையேறிய காரணத்தை வெளியே சொல்லியதால் அந்த மிருக வைத்தியரை மிருக வைத்தியசபை விசாரணை செய்து தற்காலிகமாக அவரது வைத்திய லைசன்ஸ் நிறுத்தப்பட்டது. இக்காலத்தில் கணவன் – மனைவி பிளவால் விவாகரத்து நெருக்கடியில் அவர் மனமுடைந்திருந்தார்.
சுந்தரம்பிள்ளையின் காலத்தில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்த அண்டனியின் கதை புது மாதிரியானது. அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலையில் வேலை செய்யும் பாட்டாளி ஆண்களினது வாய்களில் தூசண வார்த்தைகள் சாதாரண வார்த்தைகளுடன் அதிக அளவில் கலந்துவரும். வெத்திலை பாக்கு சுண்ணாம்பு போல் கலந்து சிவப்பு துப்பல் போல் வெளிவரும். சாதாரண வார்த்தையும் தூசணவார்த்தையும் தங்க ஆபரணத்தில் செப்பு சேர்க்கப்பட்டது போன்றில்லாமல் இரண்டும் சம அளவில் இருக்கும். இதைச் சிலகாலம் ஒரு பெயின்ட் பக்டரியில் வேலை செய்த போது சுந்தரம்பிள்ளை அனுபவித்திருந்தான். இந்த வைத்தியசாலையில் முக்கியமாக வைத்தியர்களினது வாயில் அப்படி வருவது குறைவு. புதிதாகச் சேர்ந்த அண்டனி அதில் வித்தியாசமாக இருந்தான். நீலக்கண்களும் பிளட்டின் கலரான தலைமயிரும் கொண்டு ஸ்கண்டிநேவியர்கள் போன்ற தோற்றமுள்ள அண்டனி மெல்பேனில் வசதி படைத்தவர்கள் உள்ள கிழக்குப் பக்கத்தில் பிறந்து வளர்ந்தவன். எப்படி இப்படியான ஆங்கிலம் வந்தது என காலோசிடம் கேட்டபோது பெற்றோர்கள் இருவரும் இராஜதந்திகரிளாக ஐரோப்பாவில் வாழ்ந்த போது அண்டனி மெல்பேனில் பாட்டா, பாட்டியுடன் தங்கிப் படித்தான். அப்போது நண்பர்களின் சேர்க்கையால் இப்படிப் பேச்சு வந்தது என்றான் காலோஸ்.
அண்டனிக்கு தூசணமான வார்தைகள் ஆத்திரத்தில் மடடும் வருவதில்லை. சந்தோசம், துக்கம், சோர்வு என எல்லா மன நிலைகளிலும் வரும். வஞ்சகமில்லாமல் அன்னியோன்னியமாக தூசணவார்த்தைகளினால் மனம் திறந்து உரையாடும் போது கேட்பதற்கும் நல்லாகத்தான் இருக்கும். மேலும் அந்த துஷணவார்த்தைகளை கரடு முரடாக இல்லாமல், சீவி செதுக்கி கூராக்கி சிற்பி போல் வித்தியாசமாக உச்சரிப்பான். கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அப்படியான வார்த்தைகள் ஒரு நாள் அண்டனியின் வேலைக்கு உலை வைத்தது. ஒரு நாயைக் கொண்டு வந்த முதிய பெண் ஒருவரிடம் மருந்து கொடுக்கும் முறையை பல முறை கூறியபோதும் அவருக்குப் புரியவில்லை. தூசணவார்த்தையுடன் செகிடு போல் இருக்கிறது என மெதுவாக பக்கத்தில் நின்ற நேர்சுக்கு கூறினாலும் அந்த வார்த்தையைக் கேட்ட பெண் அதிர்ச்சியடைந்து நிர்வாகத்தில் முறைப்பாடு செய்ததால் அண்டனியின் வேலை போனது. அண்டனியின் வார்த்தைப் பிரயோகங்கள் மாறும் வரையும்; நிரந்தரமாக வேலையில் இருப்பது கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் சுந்தரம்பிள்ளை, காலோஸ் போன்றவர்களுக்கு அவன் மேல் அனுதாப உணர்வு இருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் அதிகம் வாழும் குடியிருப்புகள் உள்ள வட அவுஸ்திரேலிய பகுதியில் மிருக வைத்தியராக வேலை கிடைத்துப் போன போது அண்டனி இனி பிழைத்துக் கொள்வான் என ஆறுதல் அடைந்தார்கள். ஆதிவாசிகள் தூசண வார்தைகளையிட்டு கவலைப்பட்டாலும் வைத்தியர்கள் அங்கு செல்வது குறைவனதால் எப்படியும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம்.
வைத்தியசாலைக்கு உள்ளே சென்றதும் சுந்தரம்பிள்ளை முதலில் கண்ட காட்சி கொலிங்வூட். குறுக்காக அடித்துவிட்ட சாம்பல் நிறப் பந்து மாதிரி கொரிடோரில் ஓடியது.
‘என்ன கொலிங்வூட் குறுக்கால போகிறாய்?’
‘டீராமா குயினை பார்க்க வந்தாயா? இல்லை உனது பிளட்டோனிக் காதலி போலினை கண்ணில் தொட்டு பொட்டு வைக்க வந்தாயா?’
‘உனக்கு நல்ல விடயங்களைப் பேசத் தெரியாது’
ஒரு விதத்தில் கொலிங்வூட் சொன்னதில் உண்மையிருந்தது. இந்த இரண்டு பெண்களும் ஏதோ விதத்தில் சுந்தரம்பிள்ளையின் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த இருவரும் இன்று ஒன்றாக வேலை செய்கிறார்கள் என்பது சுந்தரம்பிள்ளைக்குத் தெரிந்திருந்தது.
‘நான் சொன்னதில் பொய்யில்லைதானே? உண்மையைச் சொல்லு’ என மீண்டும் கொலிங்வூட்
‘உனக்குப் பதில் தரவேண்டியது இல்லை’ என நகர முயன்ற போது இரண்டு பெண்களும் எதிரில் ஒன்றாக வந்தார்கள். இருவரில் யார் முகத்தைப் பார்ப்பது என்பது சுந்தரம்பிள்ளைக்குக் கடினமாக இருந்தது.
‘என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது சிவாவுக்கு’ எனக் கூறி கழுத்தில் ஷரன் கையை வைத்ததும் போலின் விலகி நின்று கண்ணைச் சிமிட்டினாள்.
‘பார்க்காவிட்டாலும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்’நகைச்சுவையாக சொன்னபோது அந்த கொரிடோரில் ஒருவர் பூனையுடன் வந்தார்.விலத்தி வழி விட்ட போது இரண்டு பெண்களும் தங்கள் பங்குக்கு முதுகில் தட்டி விட்டு வேலைக்கு போய்விட்டார்கள்
இரண்டு பெண்களினதும் கேளிக்கையான சீண்டலால் பாதிக்கப்பட்டாலும் தன்னைத் சுதாரித்துக்கொண்டு நேரடியாக நாய்கள் பகுதிக்கு சென்றான் சுந்தரம்பிள்ளை.
நேற்று சுந்தரம்பிள்ளை செய்த ஆபிரேசனில் ஒரு ஜெர்மன் செப்பேட் நாயின் மண்ணீரல் அகற்றப்பட்டது அதில் ஏராளமான இரத்தம் செலவாகி இருந்தது. இதனால் வேறு நாயின் இரத்தம் ஆபரேசன் செய்த நாய்க்கு ஏற்ற வேண்டி இருந்தது.
பல தப்பியோடிய நாய்கள் இந்த வைத்தியசாலைக்கு மெல்பேன் நகரத்தின் நாலாபக்கங்களிலும் இருந்து கொண்டு வரப்பட்டு அவற்றில் புதிய சொந்தக்காரர்களை சுவீகரிக்க முடியாத நாய்கள் கருணைக்கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவற்றில் இருந்து இரத்தத்தை எடுத்து சேமித்து வைக்கப்படும். இந்த நாய்களில் மனிதர்கள் போல் பல வகையான குறுப்புகள் இருந்தாலும் முதல் முறையாக இரத்தத்தை ஏற்றுக்கொள்வதால் எந்த எதிர் விளைவுகளும் ஏற்படாது.
ஆபிரேசன் செய்யப்பட்ட ஜெர்மன் செப்பேட் நாயைப் பார்க்கச் சென்ற போது அந்த நாய் ஆச்சரியப்படத்தக்க வகையில் எழுந்து நின்று உணவு உண்டு கொண்டு நின்றது. அந்த நாய்க்கு உணவு கொடுத்துக் கொண்டு ஜோன் நின்றான். குனிந்து உணவு கொடுத்தவனது கால்கள் வழக்கத்திலும் மாறாக அதிகம் பிரிந்து நிலத்தில் பாவியபடி இருந்தது. இடுப்புவலி உள்ளவர்கள் கால்களை பிரித்து தங்களை பாலனஸ் செய்வது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.
சுந்தரம்பிள்ளை வந்த சந்தடியைக் கேட்டு திரும்பிய ஜோன் ‘என்ன வீடுமுறை நாளில் வீட்டில் இருக்க முடியவில்லையா?’
‘அதை விடு. இரவு மிஷேலால் அதிக தொந்தரவா? ஏன் இப்படி காலை விரித்துக்கொண்டு நிற்கிறாய்?
ஜோனிடம் சிரிப்பு மெதுவாக உதடு பிரிந்து பதிலாக வந்தது.
அந்தச் சிரிப்பில் வழமையான ஜோனைக் தெரியவில்லை. வழமையாகச் சிரிக்கும் போது பல்லுடன் அவனது சிவந்த முரசுகள் தெரியும். அத்துடன் சிறிது சத்தமும் சேர்ந்தே வரும்.
‘உங்களுக்குத் தெரியாதா?’
‘என்ன தெரியாது?
‘எனக்கு எம். எஸ்’
‘அது என்ன எம் எஸ்?’
‘மல்ரிப்பிள் கிளிரோசிஸ்’
அதைக் கேட்டதும் சுந்தரம்பிள்ளையின் சப்த நாடிகளும் அடங்கிவிட்டன. இந்தக் கொடிய வியாதி முப்பது வயதான ஜோனுக்கு எப்படி வந்தது? முட்டாள்தனமாக அவனுடன் மிசேலை இழுத்து நகைச்சுவையாக பேசியது எவ்வளவு அநாகரிகமானது? ஆறுதல் வார்த்தைகளோ அனுதாப வார்த்தைகளோ அவனுக்குப் பிரயோசனம் தராது. எனவே அவற்றைச் சொல்லி அவனது உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை. ஜோன் யதார்த்தவாதி. தனது எஞ்சிய காலத்தில் நன்றாக இருக்கும் காலத்தை வேலையில் கழிப்பதற்காக வந்து வேலை செய்கிறான்.
‘எப்ப நடந்தது?’
‘நீங்கள் வருட விடுமுறையில் நின்ற போது’
‘எனக்கு ஒருவரும் சொல்லவில்லை.
‘எல்லோருக்கும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டதால் பேசமுடியாமல் இருந்திருக்கும்’
அதிர்ச்சி என்பது ஒரு புறம். மற்றது தனிப்பட்ட விடயம் என நினைத்து இருக்கலாம். ஜோனுக்கு திருமணம் நடந்து சில வருடங்கள்தான் ஆகியுள்ளது. இளமையின் விளிம்பில் இன்பங்களை அனுபவிக்க நினைக்கும் வயதில் இப்படியான நிலை இவனுக்கு ஏற்பட்டிருக்க கூடாது. இங்கே இவனுக்கு ஏற்பட்ட வியாதிக்கு காரணமாக எதை நம்புவது ? இவனது விதி என இலகுவாகச் சொல்வதா? சாதாரண மனிதரின் மனத்தில் தோன்றும் பதில் இலகுவாக விடையைத் தேடும். ஆனால் வைத்தியம் அறிந்த சுந்தரம்பிள்ளையால் அப்படி இலகுவான சமாதானம் தேடமுடியவில்லை.
மல்ரிப்பிள் கிளிரோஸ் பற்றிய மருத்துவ விபரம் மனத்தில் ஓடியது. நண்பனது நிலையையிட்டு அனுதாபத்துடன் இந்த கொலைக்கார நோய் எப்படி ஜோனுக்கு வந்தது என்பது புதிராக இருந்தது.
மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் தொடர்ச்சியாக பல அவயவங்களின் தொழில்கள் பாதிக்கப்படும். அதிலும் இளைய வயதில் உள்ளவர்களுக்கே இந்த நோய்வரும். பலன்ஸ் பண்ணி நிற்பது, வேலைகளைச் செய்வது, அதை விட பேச்சு என்பன தொடர்ச்சியாக பாதிப்படையும். தற்போதய மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது. சில வேளைகளில் சில மருந்துகள் நோயின் தாக்கத்தின் வேகத்தை குறைக்கலாம். இதைவிட இந்த நோயால் ஏற்படும் மன அழுத்தம் மிகவும் பாதிப்பானது.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக செயல்படும் சக்தியை இழந்து மற்றவர்களின் பரமரிப்பில் தங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் போது என்ன நடக்கப் போகிறது என்பது அடுத்த கேள்வியாக எழுகிறது.
மிஷேல் எப்படி ஜோனை பராமரிக்கப்போகிறாள்? சில வருடங்கள் மட்டுமே பிணைத்த அவர்களது கல்யாண பந்தம் எவ்வளவு பலமானது? இவனைத் ஒதுக்கித் தள்ளிவிட்டு வேறு துணையைத் தேடிப் போவாளா? பலகாலமாக கரடு முரடான மோட்டார் சைக்கிள் குழுவில் அங்கத்துவமாக இருந்தவள் என்பதால் எப்படி இருப்பளோ. இப்பொழுதும் ஜோனிடம் சிலவேளையில் வேடிக்கையாக முரட்டுத் தன்மையாக நடந்திருப்பதை சுந்தரம்பிள்ளை பார்த்திருக்கிறான்.
இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில் வைத்தியசாலையில் ஜோனுக்குப் பிரியாவிடை வைத்திருந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் சோகத்துடன் இருந்தார்கள். ஆனால் ஜோன் மட்டும் சிவந்த முரசு தெரிய சிரித்துக் கொண்டு பழைய ஜோனாக சக்கர நாற்காலியில் வலம் வந்தான். நோய் அவனை அசுர வேகத்தில் சுனாமி போல் தாக்கி அவனைச் சக்கர நாற்காலிக்குத் தள்ளிவிட்டது. அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு ஜோன் வந்துவிட்டான்.
இப்படி மாறாத உயிர்க்கொல்லி நோய் ஒன்று தாக்கும்போது அதிர்ச்சி, ஆத்திரம், மனஅழுத்தம், பின்பு புரிந்துணர்வாக வாழ்த்தல் என்ற படிமுறைகளை மனிதமனம் கடந்து செல்கிறது என்பார்கள். அதில் கடைசியாக புரிந்துணர்வு நிலைக்கு துரிதமாக ஜோன் வந்தது சுந்தரம்பிள்ளையின் மனத்திற்கு ஆறுதல் அளித்தது.
—–
மனக்கவலை தரும் விடயங்கள் தனித்தனியாக வருவதில்லை. அவை இரட்டையாக அல்லது மூன்றாக வருவதைச் சுந்தரம்பிள்ளை தனது அனுபவத்தில் கண்டிருக்கிறார்ன். அந்தக் கவலையான விடயமும் விடுமுறையில் இருக்கும் போது நடந்தது. கொலிங்வுட்டுக்கு சிறுநீரகத்தில் நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது தீவிர வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சாமிடம் இருந்து தொலைபேசி வந்ததும் உடனே வைத்தியசாலைக்கு வந்தான்.
குழாயின் வழியே சேலையின் ஏற்றப்பட்டு அதோடு இணைக்கப்பட்ட மெசின் பீப் பீப் செய்து கொண்டிருந்தது. ‘என்ன கொலிங்வுட் நல்லாகத்தனே இருந்தாய். நான் லீவு போடுகிறேன் என்றதும் உனக்கு, ஜோனுக்கு எல்லாம் பெரிய நோயாக வந்து விட்டது. உங்களுக்கெல்லாம் காய்ச்சல், தடிமல் என சிறு நோய்கள் வராதா? என்ன நடந்து?’
‘எல்லாம் காலோசால் வந்தது. அந்த மனிதனைக் கொரிடோரில் கடந்து போகும் போது எனக்கு வாந்தி வந்தது. அந்த மனிதர் அதைப் பார்த்து விட்டு அப்படியே என்னை பிடித்து வைத்து இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியபின் பின் எல்லோரும் எனக்குச் சிறீரகம் போய்விட்டது எனச் சொல்லி, இப்படி ஒரு கூட்டில் அடைத்து விட்டு இந்த மிசினைக் கொழுவி விட்டார்கள். அதை விட எல்லோரும் வந்து நான் மரணமடைய சிலகாலம் இருப்பதாக என்மேல் பரிதாபமாக நலம் விசாரிக்கிறார்கள். என்னைச் சமீபமாக இதுவரை நெருங்காதவர்கள் எல்லாம் ஆரத்தழுவி தழுவி முத்தம் கொடுக்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் வாசனைத்திரவியங்கள் எனக்குத் தும்மலைத் தருகின்றன. பலரது லிப்ஸ்ரிக் என்னில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நான் நாக்கால் துடைத்துச் சுத்தப் படுத்த வேண்டியது ஒரு சுமையாக இருக்கிறது. முன்போல் வளைந்து நெளிந்து சுத்தப்படுத்த உடம்பு இப்பொழுது இடம் கொடுக்கவில்லை. இந்தமாதிரியான கவனிப்புகள் நோயை விட மோசமாக இருக்கிறதால் என்னால் தாங்க முடியவில்லை. எனக்குப் பிடித்காதது மற்றவர்கள் என்னில் காட்டும் பரிதாப உணர்வு’
‘உன்பாடு அதிஸ்டம்தான். உன் மேல் பெண்களின் முத்தமழை பொழிகிறது என்று சொல்லு’
‘நக்கலா? என்னுடைய நிலமையை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.’
‘நக்கல் இல்லை. உண்மையில் உனக்கு இப்பொழுது பதினைந்து வயது. இது மனிதர்களில் எண்பத்தைந்து வயதுக்கு சமமானது. இந்த வயதான முதியவரை எத்தினை பெண்கள் முத்தமிடுவார்கள். விதையில்லாமல் போனாலும் பெண்களிடம் செல்வாக்கு உனக்கிருக்கிறது.’
‘உனது பிளட்டோனிக் காதலி போலின்தான் அடிக்கடி உதட்டால் முத்தமிட்டது.’
‘பார்த்தாதையா எனக்கு இல்லாத அதிஸ்டம் உனக்கு கிடைத்திருக்கிறது. அதையிட்டு மகிழ்ச்சியடைவதையிட்டு ஏன் கவலைப்படுகிறாய்?’
‘எனது இரத்தப் பரிசோதனை அறிக்கையை பார்த்தாயா? என்ன நினைக்கிறாய்?
‘உனக்கு மட்டுமல்ல எல்லா பூனைகளுக்கும் இந்தச் சிறுநீரக பாதிப்பு வருவதற்கு காரணம் அதிக புரதம் உள்ள சாப்பாட்டைத் தின்பதால் அதிக அளவு யூரியா உருவாக்கப்பட்டு சிறுநீரகத்திற்கு அதிக வேலை வாழ்நாள் முழுவதும் கொடுக்கப்படுகிறது. தற்போதய நிலையில் உடன் மரணம் இல்லை என்பதால் பயப்படவேண்யது இல்லை. இது குளிர்காலமானதால் நீ இன்னும் உயிர் வாழ்வாய்’
‘எத்தனை மாதம் கணக்குப் போடுகிறாய்?’
‘என்ன மனிதர்கள் மாதிரி மரணத்தை வெல்ல முயற்சிக்கிறாயா?
மரணத்துக்கான காலத்தை எதிர்பார்ப்பதும் அதைப் புரிந்து கொள்ள முயல்வதும் மரணத்திற்காக பயப்படுவதும் மனித இயல்வு. ஆனால் மிருகங்கள், மனிதனில் இருந்து இந்த மூன்றால் வேறுபடுகின்றன. மரணம் என்பது எதிர்பாராதது. ஆனால், எங்கோ காத்திருக்கும் என்பது மனிதர்களுக்கு ஆதிகாலத்திலே புரிந்திருக்கிறது. எப்பொழுது சம்பவிக்கும் என்று புரியாத போதும் வாழ்வுக்கு மரணமே இறுதிப்புள்ளி என்பதால் அதைத் தள்ளி வைப்பதற்காக ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் மருந்து வகைகளை தான் வாழும் சூழலில் தேடிக் கொண்டு இருக்கிறான். இதன் தொடர்ச்சியே இக்காலத்தில் முன்னேறிய வைத்தியம். ஒரு நூறு வருடத்தில் மனிதனின் வாழ்வை இருபது வருடத்துக்கு மேல் தள்ளி வைத்துள்ளது.
இந்த மரணத்துக்கான பயம் மனித நாகரீகத்தை மேம்படுத்த முக்கிய காரணமாக இருந்தது. மரணம் அடைவதற்கு முன்பு வசதியாகவும் வாழ்க்கையின் இன்ப உணர்வுகளையெல்லாம் அடைந்து விடவேண்டும் என்ற வேகம் செவிப்புலனுக்கும் கண் பார்வைக்காகவும் கலைகளையும் வாழ்வின் வசதிக்காக வீடுகள் பொதுக் கட்டிடங்கள் என எல்லாவற்றையும் கட்டினான். நாவின் ருசிக்காக உணவுகள் என உருவாக்கியதும் ஆதிமனிதன் ஓரு இலட்சம் வருடங்களின் முன்பு தொடங்கிய முயற்சிகளின் நீட்சியே, தற்போது நாம் பார்க்கும் நாகரீகம்.
மனிதர்கள் ஆதியில் இருந்து தனது மரணத்தைப் புரிந்து கொள்ளுவதனால் மரணம் ஒரு சடங்காக மாறி அது கலாச்சாரத்தின் ஒரு கூறாக மனித நாகரீகத்தின் தொடர் கதையாகியுள்ளது. ஆதிகால மனிதனில் இருந்து இக்கால மனிதன் வரை மரணத்தைப் புறக்கணிக்கவோ ,வெல்லவோ முடியவில்லை. சமயங்கள் மனிதனின் இருப்பையும் அவனது அகத்தையும் ஒறுத்து மரணத்தை புறக்கணிக்க முனைந்தன. அதற்கு மாறாக மரணத்தை வெல்ல மக்கள் சமயத்தை துணைக்கு அழைக்கிறர்கள். கௌதம புத்தர் தன்னிடம் மகனை இழந்து வந்த பெண்ணிடம் மரணம் நடக்காத வீடு ஒன்றில் இருந்து கடுகைக் கொண்டு வரும்படி கூறியதின் மூலம் இறப்பு நிதர்சனமானது என்று சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் மரணத்தைத் தடுக்க அந்த சாக்கிய புத்தரிடம் மன்றாடும் மனிதர்கள் ஏராளம். கோயில்களுக்கு செல்பவர்களும் மரணத்தை வெல்ல சாமியார்களைத் தேடுபவர்களும்தான் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தும் அதிகமாகிறார்கள்.
‘எவ்வளவு காலம் உயிர் வாழ்வேன்’ மீண்டும்
‘இரண்டில் இருந்து ஆறுமாதம். அது உனது அதிஸ்டத்தைப் பொறுத்தது’
‘அவ்வளவுதானா?’
‘என்ன அவ்வளவுதானே’
‘என்ன அப்படி கேட்கிறாய்? மனிதர்களின் வாழ்வோடு ஒப்பிடும் போது உனது ஆறுமாத வாழ்வு மூன்று வருடத்திற்குச் சமமானது தெரியுமா?’
‘உனது கணக்குத் திறமையை என்னிடம் காட்டாதே. நான் உயிர் வாழும் காலத்தைப் பற்றி பேசும் போது நீ உனது பேசும் திறமையைக் காட்டுகிறாய்.’
‘கொலிங்வுட் நான் வழக்கமாக நோயாளிகளோடு பேசுவதில்லை. அவற்றின் உரிமையாளர்களோடு பேசும் போது அவர்களுக்கு ஆறுதலாக பேசுவது இப்படித்தான். எந்த உயிருக்கும் முதுமை கடினமானது. உடலில் பலம் குறைந்து போவதோடு நோய்களையும் சுமந்து கொண்டு மனிதர்கள் நலிவடையும் போது சமூகத்தால், உறவினர்களால் சுமையாக கருதப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்படியாக உடல் வலியோடு மனத்தில் வலியையும் சுமந்து கொண்டுதான் ஒவ்வொரு முதியவர்களும் நடமாடுகிறார்கள். அவர்கள் உடல் கூனடைவது இப்படியான மனச்சுவை காரணமாக இருக்கலாம் என நான் சந்தேகிப்பது உண்டு. அவர்களோடு ஒப்பிடும்போது உனக்கு மிகவும் சிறப்பான கவனிப்புடன் வைத்தியவசதியும் கிடைக்கிறது. அழகிய பெண்களின் முத்தங்கள் அரவணைப்புகள் எல்லாம் கிடைக்கிறது. அதற்கு மேல் நீ உணவு அருந்தாமல் மூன்று நாட்கள் இருக்கும்படி நேர்ந்தால் நானே உன்னை கருணைக்கொலை செய்து விடுகிறேன்.’
‘கொஞ்சம் ஆறுதலாக இருக்கு. அப்படியானால் நீ மட்டுமே கருணைக்கொலை செய்ய வேண்டும் என எழுதிவிடு. நான் மற்றவர்கள் கையால் இறக்க விரும்பவில்லை.
‘அது ஏன் என்கையால் இறப்பதில் ஒரு சந்தோசம்?
‘என்னைப்புரிந்து கொண்ட ஒரே வைத்தியர நீதானே?
‘நீ பயந்து விட்டாய். உனக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. பழைய நிலைக்கு நீ மாறவேண்டும். இல்லாவிடில் நீ மேலும் நோயாளியாகி விடுவாய்.’
‘நான் கேட்ட விடயத்துக்கு பதில் சொல்லு’
‘அப்படியே செய்கிறேன். நீ எனது நண்பனாகி விட்டாய். உனக்காக இதைச் செய்ய மாட்டேனா? கொலிங்வுட்’
‘அது சரி. மேலும் ஒரு விடயம் சொல்ல வேண்டும்.’
‘அந்த சிவப்புத் தலைக்காரியும் உனது எதிரி ஸ்ரிவனும் காதலிக்கிறார்கள்’
‘அது எப்படி உனக்கு தெரியும்?’
‘அந்தப் பெண் என்னை இரவு பரிசோதித்துக்கொண்டு இருக்கும் போது ஸ்ரிவனின் கரங்கள் அவளது அந்தரங்களை பரிசோதித்தது. அவர்களுக்கு நான் பார்க்கிறேன் என்ற விவஸ்தை இல்லாமல் சரசமாடினார்கள். வைத்தியசாலையை என்ன என்று நினைத்தார்கள்?
‘கொலிங்வுட் உணர்ச்சி வசப்படாதே. இருவரும் திருமணமாகதவர்கள். கொஞ்சம் சந்தோசமாக இருக்க நினைத்தால் உனக்கு என்ன வந்தது?. நல்ல சினிமாவைப் பார்க்கிறாய் என நினைத்து விடு.’
‘அவர்கள் வெளியாலே எந்த மாதிரி நடந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. . வைத்தியசாலையை சரசமாடுவதற்கு பாவிக்க கூடாது. வேலை பார்க்கும் இடம் புனிதமானது. காலோசைப்பற்றி நான் ஏதாவது சொல்லியிருக்கிறனா? அந்த மனுசன் ஸ்திரிலோலனாக இருந்தாலும் வைத்தியசாலைக்கு வெளியே தனது சரச சல்லாப விளையாட்டுகளை வைத்திருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.
‘கொலிங்வுட் உன்னிடம் இந்த மாதிரியான கருத்துகள் இருப்பது எனக்குத் தெரியாது. இது எப்படி உன்னுடைய மனத்தில் பதிந்தது?
‘இதென்ன பெரிய விடயம்? நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. சிறு குட்டியாக இந்த வைத்தியசாலையில் வளரும்போது இவைதான் சரியான உணர்வுகள் என என்னுடைய அறிவில் பதிந்தது. அந்தப் பதிவுகள் இந்தப் பதினைந்து வருட காலத்தில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. நீங்கள் அதைத்தான் மனச்சாட்சி என்கிறீர்கள். மனச்சாட்சி என்பதும் உங்களது புறச்சூழலில் இருந்து நீங்கள் புரிந்து கொண்டதை உங்கள் அடுத்த பரம்பரைக்கு கடத்துகிறீர்கள். புதிய சூழ்நிலைக்கு மாறியதும உங்கள் மனச்சாட்சி மாறுகிறதே. நானும் இந்த வைத்தியசாவையில் புரிந்த விடயங்களை எனது அளவுகோலாகப் பாவித்து இங்கே நடக்கும் விடயங்களைப் பார்க்கிறேன். இங்கே வளர்ந்தபோது இந்த வைத்தியசாலை சுமுகமாக நடக்கவேண்டும் என்பது எனது நோக்கமாகிறது.
‘உன்னோடு பேசுவது அறிஞரோடு தத்துவ விசாரத்தில் ஈடுபடுவது போல் இருக்கிறது. அதற்கு விசேட நேரம் ஒதுக்க வேண்டும் ஆனால் எனக்கு அதற்கு நேரமில்லை. இங்கு வேலை செய்வதற்காக மட்டுமே வேதனம் வாங்குகிறேன்’ எனச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சுந்தரம்பிள்ளை அந்த இடத்தை விட்டு விலகினான்.
மறுமொழியொன்றை இடுங்கள்