வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்க வேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமைகள் சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கை. அதற்கேற்க ஷரனது வாழ்க்கையில் விரும்பத்தக்க ஒரு மாற்றம் வந்ததது. அவளது குடும்பம் சார்ந்த சகலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அது இருந்தது. பல காலமாக தாய் வீட்டில் கணவன் கிறிஸ்ரியனை பிரிந்து இருந்த போதும் அவள் தனது விவாகரத்தை கோட்டுக்குப் எடுத்து போகவில்லை. கோட்டுக்குச் சென்று வழக்குப் பேசி தனக்குச் சொந்தமாக வரக்கூடிய பல மில்லியன் டாலர்களை இழப்பதற்கு தயாரில்லை. அவசரத்திலும், ஆத்திரத்திலும் சாதாரண பெண்களைப்போல் உணர்வு வயப்பட்டாலும் சிறிது நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவளது மூளையின் சிந்திக்கும் மூளையின் முன் பகுதிகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவளை அமைதியாக்கும். ‘கமோன் ஷரன், நீ மற்றவர்கள்போல் அல்ல. இதற்காகவா உனது இளமைக் காலத்தை வயதான ஒருவனோடு வீணடித்தாய். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் உன்னை கீழே தள்ளி வீழ்த்திவிடும். கணவனைப் பிரிந்த மற்றய பெண்களைப்போல் அரசாங்கத்தின் பிச்சைப் பணத்திலும் மற்றவர்களின் அனுதாபத்திலும் வாழ்நாளை கடத்துவதற்கு பிறந்தவள் அல்ல. உனது அழகும், அறிவும் உன்னை ஒரு மகாராணி போல் வாழ்வதற்கு வழிகாட்டும்’ எனச் சொல்லி அவளிடம் சிந்தனையை தூண்டிவிடும். தன்னில் உள்ள நம்பிக்கை உசுப்பி விடப்படுவதால் விவாகரத்து என்ற விடயத்தை முற்றாக தள்ளிப் போட்டிருந்தாள்
அவுஸ்திரேலியாவில் விவாகரத்து என வரும்போது சட்டம் பெண்கள் சார்ந்து அவர்களுக்கு அதிக சொத்தையும் பணத்தையும் தருவதாக ஆண்களால் குறை கூறப்பட்டாலும் கிறிஸ்ரியனிடம் இருக்கும் சொத்துகள் தந்தை வழியாக அவனுக்கு பாரம்பரியமாக வந்தவை. ஷரனோடு இருந்த காலத்தில் சம்பாதித்தவை அல்ல என்பது மட்டுமல்ல, இவர்கள் திருமணமாக இருந்த நாட்கள் குறைவானவை என்பதால் பெரும்பகுதியான பணம் அவனிடமே இருந்துவிடும் என்பது ஷரனுக்கு தெரியும்.
சொத்து விடயமாக இப்படியான மன ஓட்டம் ஷரனிடம் இருப்பதை கிறிஸ்ரியன் புரிந்து கொண்டதால் மீண்டும் தன்னுடன் வந்து வாழும்படி வற்புறுத்தினான். இருவருக்கும் தெரிந்த நண்பர்கள் மூலம் தூதுவிட்டான். ஆரம்பத்தில் ஷரன் மறுத்தாலும், பின்பு சிந்தித்து பார்த்த போது மகனுக்காகவாவது கடைசித் தடவையாக ஒன்றாக வாழ்ந்து பார்ப்போம். தொடர்ச்சியாக மறுத்தால் கிறிஸ்ரியன் விவாகரத்துக் கேட்டு கோட்டுக்கு போவான். இதுவரையிலும் தனது தவறு என்பதால் பொறுத்துக் கொண்டு இருக்கிறான். இதைவிட சில காரணங்கள் ஷரனது மனமாற்றத்தற்கு காரணமாக இருந்ததை மறுக்க முடியாது.
வேறு எந்த ஆணும் தனியாக அவள் இருந்த காலத்தில் அவளது வாழ்க்கையில் நண்பனாகவேனும் தற்காலிகமாக வராதது அவளுக்கு நீண்ட உறங்காத இரவுகளைத் தந்தது. தனிமை கொடுமையானது. அதிலும் சிறுவயதிலே காதல் இன்பங்களை அனுபவித்த அவளுக்கு ஆண் துணை இல்லாமல் இருப்பது கொடிய வேதனையைத் தந்தது. சாதாரண இருபத்து எட்டு வயதான பெண்ணாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் மேல்பேனின் நைட் கிளப்புகளில் ஆண் துணை தேடி அலைய முடியாது. மூன்று வயது மகனுக்கு தாயாகவும் முழுநேர வைத்தியராகவும் இருக்க வேண்டிய பொறுப்பும் அவளால் உதறித் தள்ள முடியாத சுமையாக இருந்தது. கிறிஸ்ரியனுக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போம் என நினைத்தபடி அவனது அழைப்பை ஏற்றுக்கொண்டது ஒரு விதத்தில் அவளுக்கு அமைதியை தந்தது. கிறிஸ்ரியன் மகனோடும் அதிக நேரத்தை செலவிட்டாள். இந்தக்காலத்திலே சிட்னியில் நடக்கவிருந்த தொழிலோடு சம்பந்தமான மகாநாட்டுக்கு செல்ல விடுமுறை கேட்டு வைத்தியசாலைக்கு விண்ணப்பித்தது மட்டுமல்ல அவளால் வேலையிலும் அதிக கவனத்தை செலுத்த முடிந்தது. இந்தக்கால கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து நண்பர்கள் போல் நடந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் மனத்தளவில் ஆக்கிரமிப்பு நடக்காத நட்புரீதியான ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்தியதால் ஷரனது வேலைகள் எதுவும் கிறிஸ்ரியனால் பாதிப்படையவில்லை. சந்தோசமாக வாழ்க்கை நடத்தினார்கள் என சொல்ல முடியாது என்றாலும் கணவன் மனைவியின் தாம்பத்தியம் அமைதியாக இருந்தது. ஷரனுக்கு தான்தான் தாம்பத்திய போரில் வென்றவள் என்ற நினைப்பு இருந்தது. இதனால் கிறிஸ்ரியனுடன் உடலுறவில் பாரபட்சமில்லாமல் அள்ளி வழங்கினாள். ஆண் உடலுறவில் துய்ந்து அமைதி கொள்ளும் போது மனைவியின் மற்றக் குறைகளை மறந்து விடுகிறான் என்பது அவளுக்கு தெரிந்திருந்தது. இந்தக் காலத்தில் மாக்கஸ் மிகவும் சந்தோசமாக இருந்தான். அவனுக்காக கிறிஸ்ரியன் நீண்ட விடுமுறை எடுத்து அவனுக்கு விருப்பமான பல இடங்களுக்கு கூட்டி சென்றான். தவறான பாதையில் சென்ற தனது வாழ்க்கைப் பயணம் மீண்டும் சரியான பாதையில் செல்வதாக இருவரும் எண்ணியதால் அது மனநிம்மதியை கொடுத்தது.
—
அவுஸ்திரேலியாவில் ஒரு வருடம் தொடர்ந்து வேலை செய்தால் நாலு கிழமைகள் விடுமுறை கொடுப்பார்கள் அப்பொழுது விடுமுறையை சம்பாதித்து கொள்வதாக கூறுவார்கள். அது வருடந்த விடுமுறை என சொல்லப்படும். வேலையில் சேர்ந்த விதம், பின்பு அந்த வேலையில் இருந்து ரிமதி பாத்தோலியசால் நீக்கப்பட்டது, பின்பு அதைத் தக்க வைத்துக் கொள்ள போராடியது என்பதோடு மெல்பேனில் சொந்தமாக வீடு வேண்டியபின் ஒரு உண்மையான ஆவுஸ்திரேலிய குடியேற்றவாசியாகியது என்பன ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலித் தொடராக நடந்தாலும் ஒரு தனிப்பட்ட ஒலிம்பிக் சாதனையாக தெரிந்தது. சாதாரணமான வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறுபவர்கள் எல்லாம் இப்படி பல தடைகளை கடக்க வேண்டுமென்றாலும் சுந்தரம்பிள்ளைக்கு தான் ஓடும் கார்ச் சக்கரத்தில் ஒட்டுப்பட்ட சுவிங்கம் போன்ற உணர்வு இக்காலத்தில் இருந்தது. சிறிது ஆசுவாசமாக குடும்பத்தை எங்காவது அழைத்து செல்ல முடியாது இருந்தது. இதனால் சில வருடங்கள் தனது வருட விடுமுறையை எடுக்காது தொடர்ந்து வேலை செய்தபோது ஒரு இடத்தில் இருந்து திரும்பி கடந்த காலத்தை அசைபோட பசுமாட்டுக்கு மரநிழல்போல விடுமுறை தேவையாக இருந்தது.
வாழ்க்கையில் எவரும் தனித்து நின்று சாதிப்பதில்லை. சுற்றி இருக்கும் பலரது அர்ப்பணிப்புகள் மீது தான் சாதனைகள்,வெற்றிகள் எங்கும் உருவாக்கப்படுகின்றன. சாம்ராச்சியங்கள் முதல் தனிமனிதரின் சிறு வெற்றிகள் சாதனைகள் என எதைச் சொன்னாலும் தனியாக நின்று ஒருவரால் சமூகத்தில் செய்யவில்லை. நண்பர்களான காலோஸ் போன்றவர்களது உதவியால் வேலையை திரும்பப் பெற்றதும் வீட்டை வேண்டுவதற்கு உதவிய ரியல் எஸ்ரேட் ஏஜன்ட் போன்றவர்கள் நன்றியுடன் அந்த விடுமுறைகால நினைவில் வந்து போனார்கள். சாருலதா நங்கூரம் போல் சுந்தரம்பிள்ளை தளும்பிய நாட்களில் வாழ்கையை ஓட துணை செய்தது போன்ற நினைவுகளை மனத்தில் நினைத்து அசைபோட அந்த விடுமுறை இடைவெளியை தந்தது.
விடுமுறையில் சுந்தரம்பிள்ளை நின்ற போது வீட்டில் பல விடயங்களை செய்ய வேண்டி இருந்தது. இந்தக் காலத்தில் வீட்டில் வளர்த்த பொன்னியின் பிரச்சனை மேலும் அதிகமாகியது. நாய்களுக்கு கொடுக்கப்படும் விசேட ரெயினிங் பொன்னிக்கு எதிர்பார்த்தது போல் பயனளித்தாக இருக்கவில்லை. வீட்டைச் சுற்றி உள்ள வேலி ஐந்து அடி உயரமானது. வேலியின் மேலும் அத்துடன் கேட்மீதும் இன்னும் ஒரு அடி உயரத்தில் தடுப்பு வேலியை வைத்து உயரத்தை கூட்டிய போது வீடு கிட்ட தட்ட அதிபாதுகாப்பான சிறைச்சாலை போல் தோற்றமளித்தது.. சிறைச்சாலையில் இருப்பது போன்ற தோற்றத்தையும் மன நிலையையும் பொன்னி என்ற இந்த பத்து கிலோ நாய் வீட்டில் உள்ளவர்களுக்கு உருவாக்கிவிட்டது.
அவுஸ்திரேலியாவின் வட பகுதியான குயின்ஸலண்ட் போன்ற இடங்களுக்கு கோடைகாலத்தில் மழை பெய்யும். ஆனால் விக்டோரியா மற்றும் நியு சவுத் வேல்ஸ் மாநிலங்களில் குளிர் காலத்தில் மழை பெய்யும். மெல்பேனின் மழைகாலம் தென்துருவ குளிர் காற்றையும் தோழமையோடு அழைத்து வீட்டின் வெளிப்பகுதிகளில் விளையாடும். குளிரும் மழையும் சேர்ந்து நடமாடும் இந்த நாட்களில் நகரத்தவர் சோம்பேறியாகி விடுவார்கள். வீட்டுத்தோட்ட வேலைகள், வெளிவேலைகள் நின்று விடும். பெரும்பாலான மெல்பேன் மக்கள் வீட்டுக் கண்ணாடி ஜன்னலால் எட்டிப் பார்பதுடன் நின்றுவிடுவார்கள். நாய்களுடன் வெளியே நடப்பது குறைவதால் அவைகளில் கொழுப்பு உடலில் சேகரிக்கப்பட்டு நிறை கூறிவிடும். அக்காலத்தில் நடக்கும் அவுஸ்திரேலிய உதைப்பந்தாட்டம் ஒரு சிலரை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்தாலும் மற்றவர்கள் தொலைக்காட்சியில் தங்கள் கண்களை ஒட்டி வைத்துக் கொள்வார்கள். குளிர்பிரதேசங்களான விக்டோரியாவில் வாழ்பவர்கள் வாழ்வின் ஓட்டத்தை குறைத்துக் கொண்டு வீடுகளின் உள்ளே குளிர்கால நெடும்பயணத்தை செய்யும் நத்தைகள் போல் வாழ்வார்கள். இதற்கு சுந்தரம்பிள்ளை குடும்பமும் விதிவிலக்கல்ல. வேலை நேரங்களைத் தவிர மற்றைய நேரங்களில் வீட்டினுள் கதகதவென இருக்கும் ஹீட்டர்களின் வெப்பத்தை அனுபவித்தபடி உள்ளே தஞ்சமாகினார்கள்.
விடுமுறை நாளில் சுந்தரம்பிள்ளை சமையலில் ஈடுபடுவதால் மற்றவற்றை மறந்து விடுவது வழக்கம். சமயலை ஒரு கலையாகவும், பொழுது போக்காகவும் எடுத்து அதில் தன்னை மறந்து விட்ட சுந்தரம்பிள்ளை அன்று சமையலை முடிந்த பின்பு வீட்டின் பின்பகுதியில் பொன்னியைத் தேடிய போது அங்கு அதைக் காணவில்லை. ஆயிரம் டாலர் பெறுமதியான மேலதிக காவலரணை துச்சமாக நினைத்து வெளியேறிவிட்டது. ஞயிற்றுக்கிழமை பாடசாலை விடுமுறையாதலால் எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். ஓடிய நாயை எங்கே தேடுவது என்று புரியவில்லை. வார நாட்களில் பாடசாலைக்குப் போயிருக்கலாம் என நினைக்கலாம். இன்று எவரும் அங்கிருக்கமாட்டார்கள் என்பதை விட பாடசாலை மணி ஒலிக்காத போது அங்கு நிச்சயமாக போகாது என்பதால் சுந்தரம்பிள்ளையும் காரை எடுத்துக்கொண்டு சகனுடன் பல இடங்களுக்குச் சுற்றினார்கள். சுற்று வட்டாரத்தில் உள்ள தெருக்கள், பூங்காக்கள் எனத் தேடி விட்டு வெறுங்கையோடு மீண்டும் வீடு வந்தான். சகனது ஆலோசனையின்படி எப்போதோ எடுத்த பொன்னியின் படத்துடன் காணவில்லை என எழுதி அவற்றில் பல பிரதிகளை சுற்றி இருந்த கடைகளிலும், மின்சாரக்கம்பங்களிலும் ஒட்டி விட்டு திரும்பி வீட்டுக்கு வந்தனர். பொன்னியைக் காணாததால் மனத்தில் ஏற்றபட்ட கிலேசம் இந்த முயற்சியின் பின்னால் சிறிது தணிந்து இருந்தது. விடுமுறை நாளானதால் சுற்றியுள்ள மிருக வைத்திய சாலைகளிலோ அல்லது நகரசபையினர் அடைத்து வைக்கும் இடங்களிலோ தேட முடியாது. வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற உணர்வில் வீட்டில் தொலைக்காட்சி முன்னால் இருந்த போது கதவு தட்டப்பட்டது. திறந்த போது இரண்டு வீடுகளுக்கு அப்பால் இருக்கு டோரத்தி வாசலில் நின்றார்.
‘உங்களது நாயை நான் அடுத்த தெருவில் கண்டேன்.’
சுந்தரம்பிள்ளையின் குடும்பம் அங்கு சென்று அவர்களது வீட்டின் கதவை தட்டிய போது ஒரு வயதான பெண் வந்தார். அவரை தொடர்ந்து பொன்னி வந்தது.
‘இது எங்கள் நாய்’
‘தெருவில் எங்களது காரில் அடிபட இருந்தது. நாங்கள் காரை நிறுத்தியதும் எங்கள் காரில் ஏறிவிட்டது நாளை திங்கள் கிழமையானதால் நகரசபையில் செய்தியை கொடுக்க இருந்தோம்.
‘இந்த பொன்னி வீட்டை விட்டு ஓடுவதே அதனது வேலையாகிவிட்டது. பலமுறை நடந்து விட்டது. என்றான் சகன்.
‘உங்களுக்கு நன்றிகள்.’அந்தப் பெண்ணுடன் அமைதியாக பேசி விடைபெற்றாலும் சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் இனிமேல் எதுவும் செய்து பிரயோசனம் இல்லை. பொன்னியென்று பெயர் வைத்ததும் பொருத்தமாகி விட்டது. பொன்னி ஆற்றைப் போல் தனது கடலில் தனது முடிவு வரும்வரைக்கும் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. பொன்னி காரில் அடிபட்டு கண்காணாத இடத்தில் துன்பப்பட்டு இறப்பதற்கு முன்பு நானே கருணைக்கொலை செய்து விட்டால் உத்தமம். ஆனால் இப்பொழுது இதைச் செய்ய வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இப்பொழுது சொல்லத் தேவையில்லை என நினைத்துக் கொண்டான்.
அன்று இரவு முழுவதும் பொன்னி வீட்டின் உள்ளே நின்றது.
‘இனிமேல் நாங்கள் பொன்னியை வைத்திருக்க முடியாது. எங்காவது காரில் அடிபட்டு தெருவில் இறப்பதற்கான சாத்தியம் உள்ளது. நான் திரும்பவும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்போகிறேன்.
‘அங்கு கருணைக்கொலை செய்வார்கள்.’ என்றாள் சாருலதா
‘அது பரவாயில்லை. அமைதியாக மரணம் சம்பவிக்கும். அடிபட்டு தெருவிலும் பாதி வாகன சக்கரத்தில் மிகுதியாக பாதையிலுமாக அலங்கோலமாக இறப்பதிலும் பார்க்க இது மேலானது.’
‘அதுக்கு அப்படி விதியென்றால் நாங்கள் என்ன செய்வது. எங்களது ஊர்களில் எல்லாம் இப்படி கருணைக்கொலை செய்வில்லைத்தானே. நாய்கள் இயற்கையாக இறக்கும் வரையும் உயிர் வாழ்ந்தன.’
‘நாங்கள் மட்டும் விதியை நம்பி மருந்து செய்யாது இருக்கிறோமா? எத்தனை விதமான மருந்து வகைகளை எடுத்துக்கொண்டு உனது அம்மா உயிர் வாழுகிறார். எங்களின் உயிரை நீடிப்பதற்கு முனையும் போது விதியை பற்றி நாங்கள் யோசிப்பது இல்லை. நீங்கள் சொல்லும் விதி நூறு வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் வாழும் மனிதரை சராசரியாக இருவது வருடங்களுக்கு முன்பாக கொண்டு சென்றது. இப்பொழுது சராசரரியாகஆண்கள் எழுபத்தைந்து வருடங்களும் பெண்கள் எண்பது வருடம் சீவிகிறார்கள். இதே போல்தான் நமது ஊரிலும் விதி மாற்றி எழுதப்படுகிறது. அக்காலத்தில் அறுபது வயது வாழ்வது சாதனையாக கொண்டாடப்பட்டது. இப்பொழுது நம்மவர்களே எழுபத்தைந்து வயதில் இரண்டாம் தீருமணம் முடிக்கிறார்கள்.’
‘இதற்கு மேல் நான் பேசி நீங்கள் கேட்கப் போவது இல்லை நீங்கள்தான் நாய் ஒன்று வேணும் என வீட்டுக்கு கொண்டு வந்தது. இப்பொழுது அற்ப ஆயுளில் அதை கொலை செய்ய முயற்சிப்பதும்’ என நறுக்கென வார்த்தைகளால் கொட்டி விட்டு அந்த இடத்தை விட்டு சாருலதா நகர்ந்தாள்.
அடுத்த நாள் திங்கள்கிழமை வேலைக்குச் சென்ற போது பொன்னியைக் கூப்பிட்டதுவும் காரின் உள்ளே வந்து முன்பக்க சீட்டில் இருந்து கொண்டு சுந்தரம்பிள்ளையின் கைகளை நக்கிக் கொண்டது.
இந்த நாய்க்குத் தன்னை கொலை செய்வதற்காக கொண்டு போகிறார்கள் என்பது தெரியாது. தனது நன்றியையும், அன்பையும் நக்கி காட்டுகிறது. இந்தப் பூமியில் மனிதன் இயற்கையையும் மற்ற உயிரினங்களினது பராமரிப்பையும் தனது அறிவின் வளர்ச்சியால் குத்தகைக்கு எடுத்துள்ளபோது அந்தக் கடமையை அவன் எவ்வளவு சரியாக செய்கிறான்? இயற்கையில் வனங்களை அழித்து வனவிலங்குகளை கொன்று தள்ளியிருக்கிறான். கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதனால் ஏற்பட்ட அழிவு மிகவும் பாரதுரமானது. திருத்தப்பட முடியாதாக இருப்பதை உணரந்துள்ளானா? அவன் செய்யும் முடிவுகள் இதுவரையும் சரியானவையா? மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகள் மனத்தில் எழுந்தன.
இப்படியாக மனிதகுலத்தைப் பற்றியும் தன்னைப்பற்றியும் சுயவிசாரணையுடன் வேலைக்குச் சென்ற போது வைத்தியசாலையில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
சில நாட்களின் முன்பு வித்தியாசமான பூனைக் காய்ச்சல் பல பூனைகளுக்கு ஒரேகாலத்தில் வந்ததால் அவைகளின் தொண்டையில் இருந்து எடுத்த சாம்பிள்கள்கள் பிரத்தியேகமான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த முடிவுகளின்படி ஒரு புதுவகையான வைரஸ், பூனைகளை தாக்கியுள்ளது என முடிவாகியதால் வைத்திசாலையில் பூனைகளுக்கு வைத்திய வசதிகள் ஒரு கிழமை நிறுத்தப்பட்டது. பூனைப்பகுதிகளும், அங்குள்ள கூண்டுகளும் விசேட இரசாயனத்தால் சுத்திகரிக்கப்பட்டு சிலநாட்கள் வெறுமையாக வைக்கப்பட்டன.
வைத்தியசாலையில் வதியும் கொலிங்வுட் நாய்களின் பகுதியில் கடந்த இரு நாட்களாக அடைக்ப்பட்டடிருந்தது. அங்கிருந்த நாய்கள் கொலிங்வுட்டை பார்த்து இரவு பகலாக உறுமின.
பொன்னியைக் கருணைக் கொலை செய்வதற்கு முன்பாக சிலமணி நேரம் நாய்க்கூட்டில் விடப்போன சுந்தரம்பிள்ளை கொலிங்வுட்டை பார்த்து ‘என்ன உனக்கு வந்தது’?
‘இந்த விசர் நாய்களுக்கு மத்தியில் இருக்கிறேன் நீயும் போதாதற்கு ஒரு குட்டி நாயைக் கொண்டு இங்கெ கொண்டு வந்திருக்கிறாய்’ என அலுத்துக்கொண்டது.
நேர் எதிராக இருந்த கூண்டில் அடைக்கப்பட்ட பொன்னி குலைக்கவில்லை. தலையைத் திருப்பி கொலிவுட்டை சினேகமாக பார்த்தது.
‘ ஏது இந்த நாய்? கொலிங்வுட் விடவில்லை
‘இது எனது நாய். தொடர்சியாக வேலி பாய்ந்து வீட்டை வீட்டு ஓடுகிறது. இதைத் தடுக்க சகல முயற்சிகளிலும் தோல்வி கண்டுவிட்டேன். இன்று கருணைக் கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டேன.;
‘நான் நினைக்கிறேன் நீ அவசரப்படுகிறாய்’ என தனது வழக்கமான பாணியில் கூறியது.
தனது முடிவில் சந்தோசம் அற்று, அதே வேளையில் வேறு வழி இல்லாமல் தள்ளப்பட்டதாக நினைத்துக்கொண்டிருந்த சுந்தரம்பிள்ளைக்கு இது எரிச்சலைக் கொடுத்தது.
‘இப்ப யார் உனது நினைப்பை கேட்டது. நீயே பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறாய். இந்த வைத்தியசாலையை கட்டி மேய்ப்பது போல நினைப்புடன் இருந்தாயே. உன்னிலையே கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த பூனைக்காய்ச்சலில் இருந்து எப்படி உயிர் தப்பினாய்? அது சரி எவ்வளவுகாலம் இந்த சிறைவாசம்?
‘ஐந்து நாட்களுக்கு
‘உன்னைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. முழு வைத்தியசாலையின் பூராயங்களை துருவிக்கொண்டு திரிந்த உனக்கு இது கஸ்டமாக இருக்குமே?
‘என் விதி உனக்கு நக்கலாக இருக்கிறது.’
‘என் வீட்டுக்கு வருகிறாயா?’
‘மகிழ்சியுடன் வருகிறேன். என்னேடு பொன்னியும் இருக்கட்டும். அந்த காலத்தில் வேலி பாயாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.’
பொன்னிக்கு மரணதண்டனை ஐந்து நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது.
—
சுந்தரம்பிள்ளை தியேட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும் ஷரன் வந்து அவசரமாக ‘இந்த நாய்க்கு அவசரமாக தொண்டைக்குள் ஏதாவது சிக்கி இருக்கிறதா என பார்க்க முடியுமா?’
அவளது வெண்ணிற மேல் அங்கி மேல் மார்போடு அணைக்கப்பட்டு சிறிய சிவப்பு நிற பொமரேனியன் நாய் இருந்தது. கொஞ்சலுடன் சிரிப்பு கலந்தபடி அவளது குரல் இருந்தது.
நிச்சயமாக இக்கால கட்டத்தில் சந்தோசமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
‘நாங்கள் மிகவும் பிசியாக இருக்கிறோம். அவசரமானது என்றால் மட்டும் செய்யமுடியும்.; . என்ன விடயம்?’ சாம் கேட்டது ஷரனுக்கு பிடிக்கவில்லை.
அவனை அலட்சியமாக ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து விட்டுச் சுந்தரம்பிள்ளையிடம் ‘ஏதாவது எலும்பு சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறேன். தொடர்ச்சியாக இருமியபடி இருக்கிறது’ எனச் சொல்லக் கொண்டு அந்த தியேடட்ரில் இருந்த பூனைக் கூடொன்றினுள் அந்தச்சிறிய நாயை வைத்தாள்.
‘தொற்று நோய் இருக்கலாமல்லவா’ எனச் சுந்தரம்பிள்ளை சொல்லிக் கொண்டிருந்த போது வெளியேறி விட்டாள்.
அவளது பின்னசைவுகளை பார்த்துக் கொண்டிருந்த சாம் ‘இவள் ஒரு விடயத்திற்கு மட்டும்தான் இலாயக்கு. நல்ல வேளை ஷரன் ஒருத்தியை மட்டும்தான் இந்த வைத்தியசாலை, ஏன் உலகமே தாங்கும். அப்பப்பா ஒரு நாள் கூட இவளோடு என்னால் சீவிக்க முடியாது. எப்படி கிறிஸ்ரியனால் சமாளிக்க முடிகிறது?’
‘கமோன் சாம் நீ ஆரம்பத்தில் இருந்தே ஷரனிடம் மதிப்பு வைத்தது இல்லை. அவளது நல்ல பகுதியை பார்த்தது கிடையாது. நான் நினைக்கிறேன் அவளது சிறுவயதில் வளர்க்கப்பட்ட விதத்தால் கொஞ்சம் இப்படி இருக்கிறாள்.’
‘அவளது நல்ல பகுதிகளை இரசித்துதான் சொல்கிறேன்’
‘உனக்கும் காலோசுக்கும் வேறுபாடில்லை சாம்’
‘ஆண்களை தனது தேவைக்கு பாவிக்க வேண்டுமானால் தேனொழுக பேசுவாள். தனது காலால், கைகளால் உராய்ந்தோ இல்லை கன்னத்தில் முத்தமிட்டோ அவர்களுக்கு உசுப்பேற்றுவாள். தனது வேலை முடிந்ததும் அப்படியே கழற்றி விட்டு போய் விடுவது இவையெல்லாம் அவளது நல்ல பகுதிகள் என நான் பார்த்திருக்கிறேன்’என ஏளனம் கலந்து கூறினான்.
‘இதை நீ பெரிதாக பார்க்கிறாய். சாம், இந்த மாதிரியாக எல்லா பெண்களும் ஏதோ ஒரு அளவு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்களைப் போன்ற ஆண்களும் காரணம். பெண்களை அவர்களின் மார்பின் அளவாலும் பின்னசைவையும் வைத்து மதிப்பிடும்போது அவர்களும் அதை உபயோகிப்பதில் தவறு இல்லைத்தானே?’
‘கமோன் சிவா, அவர்கள் உபயோகிப்பதை தவறு என நான் சொல்லவில்லை. அப்படியான பெண்களின் உபாசகன். அவர்கள் காலடிகளில் தவம் கிடக்கும் பக்தன் நான். ஆனால் இவள் தனக்கு தேவையான போது உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறிகிறாள். சில நேரத்தில் தன் அழகை, பாவனைப் பொருளாக்கிவிட்டு மற்றய நேரத்தில் புனித பொருளாக்கிறாள். இன்னும் தெளிவாக சொன்னைால் சில நேரத்தில் வாசித்துவிட்டு துாக்கிப்போடும் அன்றய பத்திரிகையாகிவிட்டு மறுநாள் வணக்கத்துக்குரிய வேதப்புத்தகமாகிறாள். தனக்கு தேவையாகினால் மார்லின் மன்றோ போலவும் தேவையற்ற போது மதர் திரேசாவாகவும் போடும் இரட்டை வேடம்தான் எனக்கு கண்ணில் காட்ட ஏலாது’
‘நீ மிகவும் கடுமையாக அவளை விமர்சிக்கிறாய்’
‘நான் ஒரு சம்பவத்தை கூறுகிறேன். நீ விடுமுறையில் இருந்த காலத்தில் நடந்தது. காலேசின் இத்தாலிய நண்பன் சேர்ஜியோவை உனக்குத் தெரியும்தானே’
‘நமது வைத்தியசாலைக்கு வந்து சிறிய ரிப்பேர் வேலை செய்பவரைப் பற்றித்தானே சொல்கிறாய்.?’
‘ஆமாம் அந்த சேர்ஜியோவுக்கு அறுபத்தைந்து வயது இருக்கும் இல்லையா?
‘ஆமாம்’
ஒரு நாள் மிகவும் இறுக்கமான துணியில் பாண்ட் போட்டுக்கு கொண்டு காரில் ஷரன் வந்து இறங்கிய போது அந்த கார் நிறுத்தும் இடங்களை வர்ணமடித்துக் கொண்டிருந்த சேர்ஜியோ வர்ணமடிப்பதை நிறுத்தி விட்டு ‘இன்று டின்னருக்கு நான் தயார்’ என ஒரு நகைச்சுவையாக கூறியிருக்கிறார். அப்பொழுது சிரித்து விட்டு பின்பு டாக்டர் ஆதரிடம் சேர்ஜியோவைப் பற்றி முறையிட்டிருக்கிறாள். இதனால் டாக்டர் ஆதர் சேர்ஜியோவை கண்டிக்க அந்த மனுசன் இப்பொழுது வேலைக்கு வருவதில்லை’
‘நான் சேர்ஜியோவை தவறு என்பேன்’
‘அப்படியானால் என் முதுகில் தடவியபடி சில மாதங்களுக்கு முன்பு ஷரன் உன் மனைவி அலுத்துவிட்டவில்லையா என கூறிவிட்டு வீக்கெண்ட் என்ன செய்கிறாய் என்று கேட்டாளே’
‘நீ அதிஸ்டசாலி’ என சிரித்துவிட்டு சுந்தரம்பிள்ளை அந்த பொமரேனியனை பெட்டிக்குள் வெளியே எடுத்து அதன் தொண்டையை மெதுவாக அழுத்திய போது அந்த நாய் மெதுவாக இருமியது. தேமாமீட்டரை எடுத்து குதத்தினுள் வைத்து பார்த்த போது நாற்பது பாகை சென்ரிகிரேட்டில் வெப்பம் இருந்தது.
‘சாம் இந்த நாய்க்கு சுவாச தொற்று நோய் உள்ளது. சரியாக சோதிக்காமல் எம்மிடம் ஷரன் தள்ளியிருக்கிறாள். போய் மூன்றாவது வைத்திய ஆலோசனை அறையில் உள்ள தேமாமீட்டரரை எடுத்துக்கொண்டு வா’
சாம் எடுத்துவந்த அந்த தேமாமீட்டரும் நாற்பது பாகை சென்டிகிரேட்டைக் காட்டியது.
நாய்க்குத் தொண்டைக்குள் எதுவும் அடைக்கவில்லை. சுவாசக்குழலில் தொற்று நோய் வந்துள்ளது என்பது உறுதியாகியது.
அந்த வழியால் மீண்டும் வந்த ஷரன் ‘ஏய் போய்ஸ், எனது நாயை மயக்கமருந்து கொடுத்து பரிசோதித்தீர்களா’?
‘அதற்கு மயக்கமருந்து தேவையில்லை. தேமாமீட்டர் தேவை’
‘என்ன சொல்கிறீர்கள்?’
‘நாற்பது டிகிரியில் வெப்பம் காட்டுகிறது. சுவாசத் தொற்று நோய் வந்துள்ளது.
‘நான் செக் பண்ணினேன். அந்த மூன்றாவது அறையில் உள்ள தேமாமீட்டரில் ஏதோ தவறு உள்ளது.
‘இதோ அந்த தேமாமீட்டர். அதால்தான் நாங்கள் வெப்பத்தை அளந்தோம்’
அந்த அழகிய முகம் சிவந்து சுருங்கியது, காற்றுப் போன பலுனைப் போல் ஆனால்
சில கணத்தில் மத்தாப்பு போன்ற அழகிய சிரிப்பால் அந்த ஆபரேசன் தியேட்ரை நிறைத்துவிட்டு ‘ஓகே போய்ஸ் இந்த முறை நீங்கள் வென்றுவிட்டீர்கள். எனது தவறை ஏற்றுக் கொள்கிறேன்’ பொதுவாக சொல்லி விட்டு சுந்தரம்பிள்ளையின் கைகளில் கிள்ளிவிட்டு சென்றாள்.
‘சிவா எந்தப் பெண்ணிடமும் நான் பயந்ததில்லை. ஆனால் ஷரனை கண்டால் நான் விலகிப் போவதன் காரணம் எந்த நேரத்தில் எப்படி மாறுவாள் என கணிக்கமுடியாது. மேல்பேனில் நாலு பருவகாலமும் ஒரே நாளில் வருவது போன்று அவளது குணங்கள் மாறக்கூடியது. அவளுக்கு உன்னில் ஒரு மென்மையான இடம் உள்ளது. கவனமாக நடந்து கொள். எப்பவாவது ஒரு நாள் உன்னை மாட்டுவதற்கு திட்டம் வைத்திருப்பாள். அவள் மீது எந்த காலத்திலும் இரக்கமோ, மோகமோ ஏற்படுத்திக் கொள்ளாதே. உன்னைப் பொறுத்தவரை அவளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.’
‘இந்த விடயத்தில் தங்களை நான் குருவாக ஏற்றுக்கொண்டு வருடங்களாகி விட்டது. உங்கள் உபதேசங்களை முழு மனத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். ஷரனை பொறுத்தவரையில் கணவனோடு சந்தோசமாக சேர்ந்து இருக்கிறாள் போல் தெரிகிறது. நமக்கெல்லாம் வலை வீசமாட்டாள் என நினைக்கிறேன். ஆனாலும் என்னால் முடிந்தவரை சகவைத்தியர் என்ற உறவுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்’என சிறிது நகைச்சுவை கலந்த குரலில் பதில் சொன்னான் சுந்தரம்பிள்ளை.
‘நான் சொல்லிய விடயங்கள் நகைச்சுவையில்லை என்பதை நீ உணரும் காலம் வரக்கூடாது என நான் அல்லாவை பிரார்த்திக்கிறேன்’ என சிறிது கோபத்துடன் தனது கடவுளின் பெயரை முதல் முறையாக பாவித்து பதில் கூறினான்.