அசோகனின் வைத்தியசாலை-23

pregnant-woman

சுந்தரம்பிள்ளையால் ரோசியை மறக்க முடியவில்லை. வைத்தியசாலை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஆர்தரால் நீ செய்த ஆபரேசனில் தவறு எதுவும் இல்லை என சொல்லப்பட்டது மட்டுமல்ல. அங்கு நடந்த விடயங்களுக்காக நிருவாகக்குழு சார்பாக அவர் மன்னிப்பு கேட்டாலும் மனச்சாட்சி அமைதியடைய மறுத்தது. வாயிலாப்பிராணி ஒன்றிற்கு சரியான விடயம் ஒன்றை செய்யவில்லை என்ற எண்ணம் தொடர்ச்சியாக மனத்தை அரித்தது. ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துச் செய்யும் போது, அந்தத் தொழிலுக்கு வாங்கும் வேதனத்தை விட, வைத்தியத்திற்கும் என வந்த பிராணி மீது ஒரு மனத்தில் ஒப்பந்தம் எழுதப்படுவதாகவும், இந்த ஓப்பந்தத்திற்கு சாட்சிகள் அற்ற போதும் அவற்றிற்கு முடிந்தவரை உண்மையாகவும் திறமையாகவும் செயல்படவேண்டும் என்ற விடயம் மீறப்பட்டது என்பதாக நினைக்க வைத்தது. ரிமதி பாத்தோலியசின் அதிகாரம் வைத்தியசாலையில் நடக்கும்வரை விசாரித்து மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதால் உரிமையாளரான ஹெலனுடன் பேச விரும்பவில்லை. தற்பொழுது வைத்தியசாலையில் நிலமை சீரடைந்து விட்டது. திரும்ப ஆபரேசனை செய்யும் போது கையை மீறினால் உதவிக்கு காலோசையோ ஆதரையோ அழைக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் ரோசியின் உரிமையாளராகிய ஹெலனை போனில் அழைத்து ரோசியை பற்றி விசாரித்தபோது ‘டொக்டர் இன்னும் காலை நிலத்தில் பதித்து நடக்கவில்லை. சந்தோசமாக இருக்கிறாள். வெளிக்காயம் ஆறிவிட்டது.’

வெளியே தோல் காயம் குணமாகிவிட்டது. ஆனால் உள்ளே புது எலும்பு உருவாகி விட்டதா என்ற விடயம் எக்ரேயில் மடடும்தான் தீர்மானிக்க முடியும். அதுவும் வைத்தியர்களால் மட்டும்தான் தெரிந்து கொள்ள முடியும் எனும் போது இது ஒரு விசேட சுமையாக வைத்தியர்களின் பொறுப்பை அதிகரிக்கிறது. வாயால் தனது வலியை கூறமுடியாத மிருகத்தின் வலியை புரிந்து வைத்தியம் செய்வது சாதாரணவிடயம் அல்ல. வைத்திய அறிவுடன் புரிந்துணர்வும் தேவையாகிறது.

‘வீட்டுக்குள் தானே வைத்திருக்கிறீர்கள்.’

‘எனது படுக்கையில்தான் படுக்கிறது.’

‘நல்லது நான். ரோசியின் காலை ஒரு எக்ஸ்ரே எடுக்க விரும்புகிறேன்.’

‘அதற்கென்ன நான் நாளை கொண்டு வருகிறேன்’

‘காலையில் எந்த உணவும் கண்டிப்பாக கொடுக்காமல் வெறும் வயிற்றில் கொண்டு வாருங்கள்.’

‘காலை உணவு இல்லாமல் ரோசி இருக்காதே’

‘இன்று ஒரு நாள்தானே. மயக்க மருந்து கொடுக்கும் போது வயிற்றில் உணவு இருந்தால் வாந்தி வந்து பிரச்சனையாகிவிடும்’

ஹெலன் மறுநாள் காலை ரோசியை கூட்டி வந்தாள். அவளை வைத்தியசாலையின் வரவேற்பு அறையில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு ரோசியை மட்டும் தனியே வைத்திசாலையின் நீண்ட கொரிடோர் ஊடாக அதனது கழுத்துப் பட்டியில் பொருத்திய சங்கிலியைப் பிடித்தபடி கூட்டி சென்றான் சுந்தரம்பிள்ளை. ரோசி மெதுவாக மூன்று காலினால் நடந்தபடி பின் தொடர்ந்தது. ரோசியைத் திரும்பிப் பார்த்தபோது ஜெர்மன் செப்பேட்டுகளுக்குரிய உறுதியான பார்வையும் மார்பை முன்னே தள்ளியபடி உயரமான முன்கால்களும் எப்பொழுதும் பாய்வதற்குத் தயாராக உறுதியாக நிலத்தில் நாணேற்றிய வில்லைப்போல் பதித்த ஒரு பின்னங்காலுடன் நடக்கும் கம்பீரத்தில் துளியும் குறையாமல் போரில் காயமடைந்த போர் வீரனைப் போல் பின் தொடர்கிறது என வியந்தபடி எக்ஸ்ரே அறையை நோக்கி நடந்தான்.

ரோசியின் மனத்தில் ஓடிய எண்ணங்கள் எப்படி இருக்கும்?

‘இந்த முறை என்ன நடக்கப் போகிறதோ? போனதடவை அந்த கூட்டுக்குள் அடைத்து வைத்தது பெரிய சித்திரவதையாக இருந்தது. மெத்தையில் படுத்து பழகிய எனக்கு இது சரி வராது. காலை உணவும் சாப்பிடாததால் வயிறும் காலியாக இருக்கிறது என நினைத்துக் கொண்டு திரும்பிய போது வைத்தியசாலை சுவரில் கல்லறை வாசகம் போல பல பட்டயங்களாக ஒட்டப்பட்டு இருந்தது. அதில் ஒன்றில் மேரி எட்வேட் தனது ரோசியை உயிராக நேசிக்கிறாள். பிறப்பு 5- 6-1980 .இறப்பு 10-12-1984

‘அடப்பாவிகள் இந்த ரோசியும் எனது வயதில் இறந்துள்ளது. என்ன பிரச்சனையாக இருக்கும்? ஏதாவது விபத்தாகத்தான் இருக்கும். ஆனாலும் வைத்தியசாலை கொரிடோர் எங்கும் கல்லறை வாசகங்களையும் பெயர்களையும் எழுதி வைத்தியசாலை சுவரை மயானத்தை போன்று ஆக்கி இருக்கிறார்கள். எங்களைப் போல் வைத்தியத்துக்கு வருபவர்களுக்கு எழுத்தறிவு இல்லாவிட்டாலும் எங்களை கொண்டு வருபவர்களுக்கு புரியும்தானே. மனிதர்களுக்கு மற்ற பிராணிகள் பற்றிய புரிந்துணர்வு இல்லை. தங்கள் உணர்வுகளை மட்டும் காட்டவேண்டும், அவற்றை எழுதவேண்டும் என்ற சுயநலம் மட்டும்தான் உள்ளது என்பதைக் காட்டுவதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?. இப்படி தங்களது வைத்தியசாலை சுவர்களில் இவர்களால் எழுதமுடியுமா? படுபாவிகளே?’ என நினைத்த போது மயக்க வாயுவை சுவாசித்தது போல் ரோசிக்கு தலை கிறுகிறுத்தது.

எது வித மயக்க மருந்தும் கொடுக்காமல் எக்ஸ்ரே மேசையில் சாம் பின்பகுதியிலும் சுந்தரம்பிள்ளை முன் பகுதியிலுமாக ஒரே நேரத்தில் தூக்கி படுக்கவைத்த போது மட்டும் ரோசி வலியில் மெதுவாக முனகியது.

‘கமோன் இதை பொறுத்துக் கொள்’ என சாம் தலையை தடவியபோது அவனது தடவலில் அந்த நோ பறந்துவிட்டது. இவன் பெண்களைத் தடவுவதில் விண்ணனாக இருக்கவேண்டும் என நினைத்த போது அந்த கிளிக் சத்தம் எக்ஸ்ரே எடுத்தாகி விட்டதை ரோசிக்கு உணர்த்தியது.

சாம் எக்ஸ்ரேயை புரோசஸ் பண்ணும் இருட்டு அறையில் இருந்து இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்த போது அவனது கையில் இருந்த எக்ஸ்ரேயை வாங்கிய சுந்தரம்பிள்ளைக்கு நெஞ்சாங் கூட்டில் இருந்த இதயம் சத்தமில்லாமல் வயிற்றிற்கு இறங்கித் துடித்தது. எக்ஸ்ரேயில் பார்த்த காட்சி பொய்யாகாதா என சில விநாடிகள் மனத்தில்நினைக்க வைத்தது. சாம் இருட்டறையிலே இருந்த மஞ்சள் விளக்கின் ஒளியில் ஏற்கனவே பார்த்து
உண்மையை புரிந்து கொண்டுவிட்டதால் எதுவும் பேசவில்லை.

அந்த கால் எலும்புகள் சரியாக பொருந்தவில்லை என்பது தெரிந்தது. ஆறு கிழமைகள் எலும்பு ஒன்றாகுவதற்கு தேவை இந்த ஆறு கிழமையில் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இன்னும் மூன்று கிழமைக்கு விட்டு பார்ப்பது நல்லது என சாம் சொன்ன போது சுந்தரம்பிள்ளைக்கு திருப்தியில்லை. ‘எதற்கும் காலோசிடம் போய் வருகிறேன்’ என வெளியே வந்தான்.

காலோசிடம் இரண்டாவது கருத்தைக் கேட்ட போது அவனும் இந்த எலும்புகள் ஒன்றாகும் சாத்தியம் இல்லை என்றான். இந்த எக்ஸ்ரேயை எடுத்துக் கொண்டு ஹெலனிடம் சென்று ‘இந்த ஆப்பரேசனை மீண்டும் செய்ய விரும்புகிறேன். இந்த எலும்புகள் ஒன்றாக பொருந்தும் அறிகுறிகள் இன்னும் பெரிய அளவில் நடக்கவில்லை. இதற்கு நாங்கள் புதிய எலும்புகளை வேறு இடத்தில் இருந்து எடுத்து இந்த இடத்தில் வைத்து எலும்புகளை மீண்டும் வளர வைக்கவேண்டும். இதற்காக நீங்கள் எந்த பணமும் செலுத்த தேவையில்லை.’

‘அடுத்த ஒபரேசனை ரோசி தாங்குமா?’என்றாள் அவளது முகத்தில் கலவரத்துடன்
அவள் சமீபத்தில் கணவனை இழந்து இன்னும் ஆறுதல் அடையவில்லை என்பதை எதுவித முகஅலங்காரம் இல்லாத ஒலிவ் நிறமான முகமும், கருவளையங்கள் சுற்றிப் படர்ந்திருந்து மதியத்து நேரத்தpy; எரியும் மின்சாரக்குமிழ் போல் இருந்த கண்களும் மவுனமான மொழியில் அவளது சோகத்தை பெரும் காப்பியமாக்கின.காலம் காலமாக உள்ளத்து உணர்வுகளை துல்லியமாக வெளிகாட்ட பெண்களால்தான் முடிகிறது.?

அதைப் பற்றி நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. ரோசி மிகவும் இளமையான ஆரோக்கியமான நாய். நாங்கள் இன்றே ஆபிரேசன் செய்யப்போகிறேம். ஆபரேசன் முடிந்ததும் நான் உங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்.’

ஹெலனிடம் பயப்பட வேண்டாம் என சொன்னாலும் சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் ஒரு பயம் ஏற்பட்டது. இது ஒவ்வொரு செல்லப்பிராணியையும் ஆபரேசனுக்கு மயக்குவதற்கு முன்பாக ஏற்படும் பயம். மனிதனின் உயிர் மீதான பயம் அவனது தற்பாதுகாப்பிற்கு உதவுவது போல் வைத்தியர்களது பயமும் முன்னெச்சரிகையாக பல நடவடிக்கையை எடுப்பதற்கு உதவுகிறது. மனிதர்களை மயக்குவதற்கு முன் பல பரிசோதனைகள் செய்வார்கள் அதே போல் மயக்க மருந்து கொடுத்து அதை செய்பவதற்கு தனியாக ஒரு வைத்தியர், அனஸ்தரிஸ்ட் ஆக இருப்பார். அப்படியான வசதிகள் மிருக வைத்தியத்தில் இல்லாததால் இங்கு ஒபரேசன் செய்பவரே சகலதற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

காலோசை இந்த முறை உதவிக்கு அழைத்த போது ‘ஓகே மிஸ்டர் இந்த ஒபரேசனை செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்.?

‘உனக்கு என்ன வேண்டும்?’

‘ உமது செலவில் மதிய போசணமும் அதற்கு பின்பாக டெசேட் போல் ஸ்ரிப் ஷோவும் பார்க்கவேண்டும். சம்மதமா?’

சிரித்தபடி ‘அது இலகுவானது. காலோஸ் உனது ஆசைகள் நேரடியானவை. சிக்கலற்றவை. நான் நிறைவேற்றுகிறேன். சமீபத்தில் படித்த விடலை பையனின் கதைதான் உன்னைப் பற்றி நினைக்கும் போது நினைவுக்கு வருகிறது ;’

‘அது என்ன மிஸ்டர்?’

‘சிலவருடத்ததுக்கு முன்பு சிட்னி வைத்தியசாலை ஒன்றில் பதினைந்து வயதுப் பையன் இரத்த புற்று நோயால் விரைவில் இறக்க இருநதான். அவனிடம் அவனைப் பார்த்த டொக்ரர்கள் உனக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள் .

அவன் நான் இன்னமும் பெண்ணுடன் உறவு கொள்ளவில்லை அதுதான் தேவை என்றான். வைத்தியசாலை வைத்தியர்கள் பெற்றோருக்கு தெரியாமல் விபசாரியை அவனுக்கு ஒழுங்கு படுத்தி கொடுத்தனர்’

‘நானும் அவனைப்போல்தான் கேட்டிருப்பேன்.’ என பலமாக சிரித்தான்

காலோசின் ஆசைகள் மிகவும் சிறியவை. பணத்திற்கு அதிக மதிப்பு கொடுக்காத மனிதன். காலோசின் வைத்திய அனுபவத்தை வேறு ஒருவர் பெற்றிருந்தால் சொந்தமாக தொழில் நடத்தியிருப்பார்கள். அல்லது வேறு யாரோவது ஒருவரோடு இணைந்து தொழில் புரிய சென்றிருந்தால் அதிக பணம் பெற்றிருக்க முடியும். ஆனால் காலோஸோ ஒரு முறைதான் இந்த உலகில் வாழ்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் சந்தோசமாக கழிப்பதுதான் காலோசின் இலட்சியம். நாளைக்கு என்பது தேவையில்லை. அத்துடன் நட்புக்காக எதையும் செய்யும் தன்மையும் கொண்டிருந்தான்.

சாம்மினது உதவியுடன் ரோசியை மயக்கிய பின்பு வந்த காலோஸ் ‘நீங்கள் இரண்டு பேரும் இந்த நாய்க்கு செய்த வேலையால் இந்த வைத்தியசாலையே தலை கீழாக மாறிவிட்டது. ஒரு விதத்தில் ரஸ்சியாவில் நடந்த புரட்சி போன்றது. பாவம் ரிமதி பாத்தோலியஸ் ஜார் மன்னன் மாதிரி துலைந்து போனான்.’ சாமை பார்த்து கைகொட்டியபடி சிரித்தான்

‘எங்களால் உமக்கு திரும்ப தலைமை வைத்தியர் பதவி கிடைத்ததற்கு எங்களுக்கு நீர் நன்றி சொல்லவேண்டும்’ என்றான் சாம் விட்டுக்கொடுக்காமல்

‘பதவி எனக்கு பெண் உறுப்பின் மயிர் போன்றது. விலத்தி விட்டு அப்படியே போய்க் கொண்டிருப்பேன் மற்றவர்கள் போல் அதில் எனது கவனத்தை செலுத்தமாட்டேன்.

‘பாஸ்ரட் எப்பொழுதும் அந்த நினைவுதான்’

‘கருவில் உருவாகி வந்த பாதையை மறக்கமாட்டேன்’ என்ற படி அந்த ஆபிரேசனை தானே செய்வதற்கு தாயாராகியதால் சுந்தரம்பிள்ளை அனஸ்தரிஸ்ட் ஆக ரோசியின் மயக்க மருந்தையும் அதன்படி நிலைகளையும் கவனிக்கும் வைத்தியராகினார்.

எலும்புகள் பொருந்துவது என்பது இயற்கையான செயல்பாடு. இதை தோட்டக்காரர் சிறு ரோஜா செடியை பதியம் வைத்து நடுவது போன்ற செயல் என அறுவை சிகிச்சை புத்தகம் கூறுகிறது. புதியம் வைக்கும் தோட்டக்காரன் சூரிய ஒளிபடும் இடத்தில் நல்ல பசளையைப் போட்டு நட்டுவிட்டு அதற்கு தண்ணீர் ஊற்றிட்டால் செடி வளர்வது இயற்கையின் செயற்பாடு. அதே போல் முறிந்த எலும்பு அதனோடு ஒட்டியுள்ள தசைநார்களின் இழுவையினால் ஒன்றில் இருந்து ஒன்று விலகி இருக்கும். அந்த விலகிய முனைகளை மீண்டும் அதே இடத்தில் வைத்து இரண்டு துண்டுகளை ஆடாமல் அசையாமல் பொருத்துவதே வைத்தியரின் வேலை. இதற்காக உடல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தாத ஸ்ரெயின்லெஸ் ஸ்ரில் மற்றும் ரைற்ரேனியம் ஸ்குறு உபயோகிக்கப்படுகிறது. முறிந்த எலும்புக்கு மேல் ஸ்ரில் பிளேட்டை வைத்து ஸ்குரூ ஆணியால் பொருத்தி விடுதல்தான் முக்கியதாகும். இந்த எலும்புகள் அசைவுகள் அதிர்வுகள் இல்லாது இருந்தால் ஆறு கிழமையில் எலும்புகள் பொருந்திவிடும். ரோசியைப் பொறுத்தவரையில் பொருத்திய ஸ்குரூக்களின் பலம் ரோசியை போன்ற முப்பத்தைந்து கிலோ நிறையுள்ள ஜெர்மன் செப்பேட்டுக்கு போதாததால் அங்கே அசைவுகள் ஏற்பட்டதால் எலும்புகள் பொருந்துதல் நடக்கத் தொடங்கவில்லை. இந்த விடயத்தில் மனிதர்களைப்போல் மிருகங்களினது நடத்தைகளை வைத்தியரால் கட்டுப்படுத்த முடியாது. பாயாதே துள்ளாதே என கட்டுப்பாடுகளை விதிக்க முடியாத நிலையில் ஆப்ரேசன் செய்யும் போது இவைகளையும் கணக்கில் எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் மனிதர்களுக்கு வைத்தியம் செய்வது இலகுவாகி விடுகிறது. மனிதர்களிடம் படுக்கையில் இளைப்பாறுங்கள் எனச் சொல்லி விடலாம்.

இம்முறை எலும்பின் முறிவுக்கு இரண்டு பக்கத்திற்கு இரண்டுக்கு பதிலாக தலா நான்கு ஸ்குரூக்கள் பொருத்திவிட்டு அத்துடன் ரோசியின் இடுப்பு எலும்பில் இருந்து சில எலும்புக் துகள்களை அறுவடை செய்து அதனது கால் எலும்பு முறிந்த இடத்தில் வைக்கப்பட்டது. இந்த போன் கிறாவ்ரிங் மூலம் புதிய எலும்புகள் வளர்சியை துரிதப்படுத்த முடியும்.

இரண்டு பேர் செய்ததால் ஆபரேசன் வெகுவிரைவில் முடிந்து விட்டது. காலோசுக்கு சொல்லயபடி உணவருந்த சுந்ரம்பிள்ளை அழைத்து சென்ற போது சாமும் அதன்பின் வந்த ஜோனும் சேர்ந்து கொண்டார்கள். மெல்பேன் நகரத்தில் உள்ள கிங்ஸ் வீதிக்கு செல்வது என்பது முடிவாகியது. அங்குதான் காலோஸ் விரும்பிய ஸ்ரிப் கிளப்பும் உள்ளது. வைத்தியசாலையிலிருந்து பத்து நிமிடத்தில் காரில் செல்லமுடியும். ஒரு மணித்தியால உணவு இடைவெளியில் இவற்றை செய்யவேண்டும். ஏற்கனவே இப்படியான கிளப்புக்கு போவது சர்ச்சைக்குரிய விடயமாக்கப்பட்டதால் இந்த விடயம் மனேஜரான ஆதருக்கு தெரியப்படுத்தப்பட்டது. உங்களது உணவு இடைவெளியில் நீங்கள் என்ன செய்வது என்பது உங்கள் உரிமை. அதில் நான் தலையிடமாட்டேன். இரத்த கொதிப்புக்கு மருந்து எடுப்பதால் நான் உங்களோடு வருவதற்கு தயாரில்லை என நகைச்சுவையாக சொன்னார்.

இந்த கிளப்புகளுக்கு மதிய இடைவெளியில் வந்து உணவும் அருந்தி விட்டு செல்வதால் சுற்றியுள்ள வாகனத் தரிப்பிடங்கள் எல்லாம் நிரம்பிவிடும். கிளப்பின் உள்ளேயும் கூட்டம் நிரம்பிவிடும்.நால்வரும் சிறிது நேர முயற்சியின் பின்பாக கிடைத்த காலியான இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவசரமாக உள்ளே சென்ற போது காவலாளியாக வாசலில் நின்றவர் நால்வரையும் ஏற இறங்கப் பார்த்து விட்டு ‘நீங்கள் மூவரும் உள்ளே போகலாம் ஆனால் இவர் போக முடியாது’ என ஜோனைப் பார்த்துச் சொன்னான்.

சாம் ‘ஏன் அப்படி’ என்ற போது ‘இவர் ரண்ணிங் அடிடாஸ் காலணி அணிந்திருக்கிறார். இப்படியான பாத அணியுடன் இந்த ஜென்ரில்மன் கிளப்புக்கு உள்ளே போகக் கூடாது என்பது சட்டமாகும்’

அப்பொழுதுதான் ஜோனின் காலைப்பார்த்த போது நாய்ப்கூடுகளில் தண்ணீரை ஊத்தி கழுவுவதற்காக காலில் அடிடாஸ் அணிந்திருந்தான்.

‘மன்னிக்க வேண்டும் நண்பர்களே நீங்கள் போங்கள் நான் அப்படியே காலாற யாரா நதி கரையோரமாக நடந்து விட்டு அரைமணிநேரத்தில் இந்த இடத்தில் உங்களைச் சந்திக்கிறேன். எமக்கு அதிக நேரம் இல்லை.’

‘ஜோன் பார்த்தால் எல்லோரும் ஒன்றாக பார்போம் இல்லையென்றால் எல்லோரும் திரும்பிப்போவோம்’ என காலோஸ் கூறினான்.

அவசரமாக உணவை வயிற்றுக்குள் திணித்து விட்டு இந்த இடத்திற்கு வாசல் வரையும் வந்தவர்கள் காலணியை காரணம் காட்டி திருப்பி அனுப்பப்பட்டது எல்லோருக்கும் ஏமாற்றம். அதில் தன்னால்தான் இது நடந்தது என்பதால் ஜோன் பலமுறை மற்றவர்களை செல்லும்படி வற்புறுத்திய போதும் எல்லோரும் மீண்டும் காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.

காருக்கு சமீபமாக உள்ள மற்றைய கார்களில் தவறான இடத்தில் நிறுத்தியதற்காக தண்டனை ரிக்கட் வைத்துக்கொண்டிருந்தார் ஒரு மெல்பேன் மாநகரசபை உத்தியோகத்தர். அப்பொழுது தான் தனது காரும் அவசரத்தில் நிறுத்தக் கூடாத இடத்தில் நிற்பது சுந்தரம்பிள்ளைக்கு தெரிந்தது. டிக்கட் வைக்க வந்து கொண்டிருந்தவர் நால்வரும் காரில் ஏறியதால் மற்ற காருக்கு சென்றுவிட்டார்..

‘நல்ல வேளையாக எனக்கு ஜோனினது அடிடாஸ் சப்பாத்தால் அறுபது டாலர்கள் மிச்சமாகியது என்றான் சுந்தரம்பிள்ளை.

காமம் கண்ணை மறைக்கும் என்பது அன்று உண்மையாகியது.

வைத்தியசாலை வாசலில் நால்வரும் காரில் வந்து இறங்கி முன்வாசலால் செல்லாமல் சிறிய ஒழுங்கையில் திரும்பி நடந்து, பின்கதவால் உள்ளே வந்தபோது அங்கு ஆதரை காணமுடிந்தது. அவரது முகத்தில் சோகம் தெரிந்தது. வழக்கத்தில் எப்பொழுதும் சிரித்தபடி நகைச்சுவையாக பேசுபவரில் மாற்றம் கடந்த ஒருமணிநேரத்தில் ஏற்பட்டிருக்கிறதே?
சுந்தரம்பிள்ளையின் மனத்தில் ஆதரை காணும் போது தன்னையறியாத மதிப்பு ஏற்படுவதால் உணவோடு மது அருந்தி விட்டு ஸ்ரிப்ஷோவுக்கு போக எத்தனித்தது ஒரு குற்ற உணர்வாக மனத்தை உறுத்தியது. இப்படியான உணர்வுகள் காலோசுக்கோ, சாமுக்கு ஏற்படுவதில்லைப்போலும். கலாச்சார மூட்டைகளை தோளில் சுமந்து நாங்கள் இடம் பெயர்கிறோம் என நண்பன் ஒருவன் சொன்னது நினைவுக்கு வந்தது

ஆதர் நேரடியாக எல்லோரையும் பார்த்து சிரித்துவிட்டு ‘காலோஸ், ஜீன் தற்கொலை செய்து விட்டார்.’

‘எப்போது நடந்தது?’

‘ நேற்று நடந்தது’

‘என்ன திடீரென நடந்தது?’

‘நான் நினைக்கிறேன் அவரது பூனைகளை நாங்கள் கருணைக்கொலை செய்தது அவரால் ஏற்க முடியவில்லை.’

எல்லோருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்தபடி மவுனமாக தேநீர் அறைக்கு ஒன்றாகச் சென்றார்கள்.

‘எப்படித் தற்கொலை ? மீண்டும் காலோஸ்

‘அதிகமான தூக்க மாத்திரைகளை வைனுடன் கலந்து குடித்திருக்கிறார் என வைத்தியசாலையில் இருந்து சொன்னார்கள்’

‘நீங்கள் வைத்தியசாலைக்குப் போனீர்களா?’

‘எனது பெயர் ஜீனின் டயரியில் எழுதப்பட்டு இருந்ததால் பொலிசார் எனக்கு அறிவித்தார்கள்.’

‘நல்ல வேளை ஆர்தர் நீங்கள் இந்த இடத்தில் இருப்பது. நான் இருந்தால் இதை எப்படி செய்திருப்பனோ என நினைக்க முடியவில்லை.’

‘நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஜீனின் வைத்தியக் குறிப்புகள் ஏற்கனவே பல தடவை மனதத்துவ வைத்தியரிடம் ஆலோசனை பெற்றதாக காட்டுகிறது. ஜீனுக்கு பழைய சாமன்களை சேர்த்து வைத்தல். பலவருடங்களாக பாவித்த பொருட்களை வெளியே எறியாதது போன்று சில மனோவியாதிக்கான குணக்குறிகள் இருப்பதாக அந்த ரீப்போட்டில் கூறப்படுகிறது. ஜீனினது வீட்டுக்கு சென்றவர்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. மதிய உணவு வெளியில் இருந்து ஜீனுக்கு வரவழைக்கப்படுகிறது. வாசல் கதவு பூட்டி இருந்தால் பொலிசுக்கு தெரிவித்ததும் பொலிஸ் சென்று பார்த்தும் அவர்களால் தாங்கள் பார்த்த காட்சியை நம்ப முடியவில்லை.

ஜீனின் வீடு மெல்பேனின் மத்திய நகரத்தின் வடபிரதேசத்தில் பெரிய வைத்தியசாலைக்கு சமீபத்தில் இருக்கிறது. மேல்பேன் நகராக்கத்தின் ஆரம்ப காலத்தில் இந்த பிரதேசம் நகரின் பிரதான பகுதியில் வாழ்பவர்களின் வாழ்வுத் தேவையை நிறைவேற்ற சிறிய தொழில் கூடங்கள் வைத்தியசாலைகள் அமைக்கப்பட்ட பிரதேசம். ஆரம்பகாலத்தில் சிறிய தொழில்சாலைகள் முக்கியமாக கார் சம்பந்தமான மெக்கானிக் மற்றும் வெல்டிங் தொழிற்சாலைகள் இருந்தன. அவற்றிற்கு ஓரமாக தொழிலாளர்களை உத்தேசித்து பல வீடுகள் நிரையாக கட்டப்பட்டு உள்ளது. தற்பொழுது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு புதிய மாடிக்கட்டிடங்கள தோன்றியுள்ளன. மேல்பேனின் பிரதான வைத்தியசாலைகளும் பல்கலைக்கழகங்களும் உள்ள பிரதேசமானதால் நிலத்தின் விலை உச்சத்திற்குப் போய் விட்டது. இந்த இடங்களில் ஐம்பதுகளில் கட்டப்பட்ட வீடுகள் காலத்தின் சுழற்சியை எதிர்த்துக் கொண்டு இன்னமும் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. நகரத்தின் பழைய தோற்றத்தைப் பாதுகாப்பதற்காகவும் சில கட்டிடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அப்படியான பழைய காலத்து வீடு ஒன்றுதான் ஜீன் குடியிருந்தது. மூன்று படுக்கை அறைகளும் சமயலறையும் வரவேற்பு கூடமும் உள்ளது. முன்னறையயை படுக்கையறையாக பாவித்ததால் சமயலறையில் இருந்து வெளியே ஜீனின் தள்ளுவண்டியுடன் வருவதற்கு ஒரு மீட்டர்க்கு குறைவான அகலம் கொண்ட கொரிடோர் பாதை சுத்தமாக இருந்தது. மற்றைய வீட்டில் பகுதிகள் எல்லாம் வேறு சாமான்களால் நிரப்பப்பட்டு இருந்தது. படுக்கை அறையைக்கு பக்கத்து அறைகளில் ஒன்றை பழைய கதிரைகள், பாத்திரங்கள் என ஆழளுயரத்திற்கு நிரப்பப்பட்டள்ளது. அந்த அறைகளில் உள்ள தூசி பல வருடங்களாக படிந்ததால் மிகவும் தடிப்பாக இருந்தது. வெள்ளெலிகள் சந்தோசமாக அந்த இடத்திற்கு உரிமை கொண்டாடி ஓடி விளையாடின. ஹாலுக்கு எதிரான அறையில் அறுபதாம் வருடத்தில் இருந்து பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் ஐந்தடி உயரம்வரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பத்திரிகைக் குவியல்களுக்கு இடையில் பல்வேறுபட்ட மதுப்போத்தில்கள் கிடந்தன. வைன், பியர் என சில போத்தில்கள் திறக்கப்படாமலும் பாதி அருந்தியபடியும் கிடந்தன. பல பியர் வைன் வகைகள் தற்காலத்தில் பாவனையில் இல்லாதவை. மூலையில் போடப்பட்டிருந்த இரு காட்போட் பெட்டிகள் பல மருந்து குப்பிகள்களால் நிரப்பப்பட்டு இருந்தது. அவற்றின் லேபல்களில் இருந்த திகதிகளை படித்த போது அறுபது எழுபதாம் ஆண்டுகளில் இருந்து டாக்டர்களால் கொடுக்கப்பட்ட மருந்துகள் எனத் தெரிந்தது. வரவேற்பு ஹாலில் இரண்டு பெரிய சோபாக்களுடன் ஒரு வட்டமான மேசையும் இருந்தது. அந்த மேசை மீது புத்தகங்களும் பழங்காலத்து கிராமபோன் இசைத்தட்டுகளும் குவிக்கப்பட்டது. சோபாமீது துவைத்ததும் அழுக்கானதுமான உடைகள் கிடந்தது. அங்கு நவீனமானது சோனி தொலைக்காட்சி ஒன்று மட்டுமே. பழைய கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் அந்த வரவேற்பு கூடத்தின் சுவரை அலங்கரித்தன. சில படங்கள் பூனைகளின் போடடோக்கள். மற்றவைகள் ஜீனின் இளமைகாலத்து போட்டோக்கள். அவற்றில் ஒரு படத்தில் மட்டும் ஜீன் ஒரு இரணுவ உடையணிந்த ஒருவருடன் காணப்பட்டார். கணவனாக அல்லது காதலானாக இருந்த போது எடுத்திருக்க வேண்டும். சமயலறை மற்ற இடங்களோடு ஓப்பீட்டளவில சுத்தமாக இருந்தது. சமயலறையில் சமீபத்தில் சமைத்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பட்டர், தேன், ஜாம் என்பன திறக்கப்படாமல் குளிர்சாதனப்பெட்டியுள் இருந்தன. சமையல் பாத்திரங்கள் ஒழுங்காக சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஹொலிவூட் நடிகை மாலின் மன்றோவின் காற்றில் கவுன் பறக்க குனிந்தபடி இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம் கொண்ட 1960 ஆண்டு கலண்டர் குளிர்சாதனப் பெட்டியின் கதவின் மேல்பாகத்தை அலங்கரித்தது.

வாசலருகே உள்ளளே சென்றதும் இடதுபக்கத்தில் இருந்த படுக்கையறையில் உள்ளே இடது பக்கத்தில் ஜன்னல் ஓரமாக உயரமான நீள்முட்டை வடிவத்தில் மரத்தினால் சட்டமிட்ட நிலைக் கண்ணாடியும் அதன் மேலாக மெல்லிய வெள்ளை சட்டின் துணி தொங்கியது. அந்த கண்ணாடி மேசையின் மீதும் அதன் இரண்டு லாச்சிகளிலும் ஏராளமான விதம் விதமான மேக்கப் சாதனங்கள் அடைந்து கிடந்தது. கண்ணாடிக்கு எதிராக இருந்த இருவர் படுக்க கூடிய படுக்கைக்கு பக்கமாக தலையோரப்பகுதியில் உள்ள சிறிய மர அலுமாரியில் பல வித மாத்திரைகள் பல வர்ணத்தில் இருந்தது. இரத்த அழுத்தம் ஆத்திரையிற்ஸ் மலசிக்கல் மன அழுத்தம் இப்படி சகல உடல் உறுப்புகளிலும் நோய் ஏற்பட்டதால் சிறிய ஒரு மருந்தகம் அந்த அலுமாரியுள்ளே இருந்தது.

அவுஸ்திரேலியாவின் மருத்துவசேவை உலகத்திலே மிக சிறந்தது. வைத்தியர் வைத்தியசாலை எல்லாம் இனாமாக கிடைப்பவை. மருந்துகளும் அரசாங்கத்தால் விலை குறைப்பு செய்யப்பட்டு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். ஓய்வூதியம் பெறுபவர்களாக இருந்தால் மருந்தின் விலைகள் இனாமாக கிடைப்பதற்கு சமானமானது.

ஜீனின் கட்டிலின் அடுத்த பக்கத்தில் சுவரோரமாக உடைகளை வைக்கும் மர அலுமாரிகள் இரண்டு உள்ளது. அந்த அலுமாரியின் உள்ளே உடுப்புகள் தொங்கியும் கீழ் லாச்சியில் உள்ளாடைகள் அடைத்தும் வைக்கப்பட்டுள்ளது. இந்த உடைகளில் பல ஐம்பது வருடத்திற்கு முன்பான டிசையின் கொண்டவை. இவற்றில் சில கைகளில் சுருக்கம் வைத்தவை.அதே வேளையில் நவீன மோஸ்த்தர்களில் அமைந்தவை இடைக்கிடை காணப்பட்டது. உள்ளாடைகளிலும் அந்த காலத்து மோஸ்தர் தெரிந்தன. ஐப்பது வருடத்துக்கான உடைகளின் மோஸ்தர் வரலாறு அங்கு காணப்பட்டது.

ஜீனின் வீட்டில் கடந்த ஐம்பது வருடத்தில் தனக்கு விருப்பமான பொருள்கள் எதையும் வெளியே எறியவில்லை. எல்லாம் சேகரிக்கப்பட்டு உள்ளது.இது ஒரு மனேவியாதியாக பீடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

‘இதை பொலிசார் எனக்கு சொல்லிய போது எனக்கு திடுகிடவைத்தது. ஐம்பது வருடங்களாக பத்திரிகைகள் உள்ளாடைகள் ஏன் பாவிக்காத மருந்துகளை வெளியே எறிய விரும்பாத ஜீனால் எப்படி தான் வளர்த்த பூனைகளை நாங்கள் கருணைக்கொலை செய்ததை தாங்க முடியம்? ஜீனின் வாழ்கையில் இது பெரும் அதிர்ச்சியாக இருந்து, அவரது தற்கொலைக்கு தூண்டுகோலாக இருந்திருகிறது’ என்றார் ஆதர்

‘நீங்கள் கவலைப்படத்தான் முடியும். ஆனால் வேறு ஒன்றும் செய்யமுடியாது’

‘நான் வருகிற ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் நடக்கும் மரண பூசையில் கலந்து கொள்கிறேன். காலோஸ் உங்களால் வரமுடியுமா?

நாங்கள் எல்லோரும் சென்று வைத்தியசாலையின் சார்பில் மலர்வளயத்தை வைப்போம். இதை விட நாம் ஜீனுக்கு எதை செய்ய முடியும்? என கார்லோஸ் சொல்லியதும் அவரவர் தங்கள் வேலைக்குச் சென்றார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் காலோஸ், ஆதர் போன்றவர்கள் வேலை செய்யவில்லை. சுந்தரம்பிள்ளையும் மற்றும் இரண்டு புதிதாக வந்த வைத்தியர்களும் வேலை செய்து கொண்டிருந்தபோது வெளியால் கொரிடோரில் அதிகமான சத்தம் கேட்டது. வழக்கமான நாட்களாக இருந்தால் பொறுப்பானவர்கள் அதைப் பார்த்ததுக் கொள்வார்கள் என இருந்திருக்க முடியும். அப்படி இருந்தும் பதினைந்து நிமிடங்கள் வழமையான தனது வைத்திய ஆலோசனைகளை செய்து கொண்டிருந்துபோது கடைசியாக நாயை தடுப்பு மருந்துக்காக உள்ளே கொண்டு வந்த பெண்மணி ‘என்றாலும் இந்தளவு சத்தம போடுவது ஏற்க முடியாது. அந்த வரவேற்று அறையில் உள்ள பெண் பாவம் அவள் என்ன செய்வது. அரைமணிநேரமாக இந்த பெண் குரலை கூட்டிக்கொண்டு போகிறாள். அடங்குவதாக தெரியவில்லை’ என்றாள்.

‘எனக்கு ஒன்றும் தெரியது’ என கூறிவிட்டு தடைமருந்தை அந்த நாய்குட்டிக்கு போட்டு அனுப்பிவிட்டு வெளியே சென்ற போது ஒரு உடல் பருமனான முப்பத்தைந்து வயதான பெண் ஒரு அழகான பெண்குழந்தையை கையில் பிடித்தபடி வரவேற்பு அறையின் மையத்தில் நின்றாள்.சிலும்பி இருந்த தலைமயிர் அவள் தலையை வாரவோ அல்லது மேக்கப்பை போடுவதற்கு நேரத்தை செலவு செய்யாமல் குழந்தை பெறுவதிலே கண்ணாக இருந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு இரண்டு வயது பெண் குழந்தை மருண்டபடி தாயின் கைகளை பிடித்தபடி நின்றது. அதைவிட ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை ஒன்று சிறிது துாரத்தில் தள்ளு வண்டியில் படுத்தபடி தனது கையை சூப்பிக்கொண்டிருந்தது. உப்பிப் பருத்திருந்த அந்தப் பெண்ணின் வயிறு அங்கு குறைந்த பட்சம் ஒரு குழந்தையாவது இருக்க வேண்டும் என்பதை காட்டியது. ஒரு குழந்தையின் முலை பால் தேவைக்காக பெண் உடலில் ஏறிய கொழுப்பு இறங்க முன்பு அடுத்த குழந்தையை கருவுற்றிருப்பதால் கொழுப்புக்கு மேல் கொழுப்பாக படிந்த அவளது தேகம் மினுமினுத்தது. தொட்டால் கைகளில் வெண்ணைக்கட்டிபோல் வழுக்கிவிடுவாள் என்று நினைக்க கூடியதாக இருந்தது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்தில் குழந்தைகள் பெறுபவர்களுக்கு விசேடமான போனஸ் கொடுத்து வருகிறது. அதற்கான பலன் என வியந்தபடி வரவேற்பு இடத்தில் இருந்த லீனியிடம் விசாரித்தபோது ‘சிவா இந்தப் பெண்ணின் ஒரு ரொட்வீலரும் அதனது இரண்டு குட்டிகளுக்கும் பாவோ வைரஸ் நோய் வந்ததால் இங்கு கொண்டுவரப்பட்டது. ஐந்து நாட்கள் வைத்தியம் செய்ததால் அதனது செலவு ஆயிரம் டாலருக்கு மேலாகிவிட்டது. அதை தன்னால் கட்டமுடியாது. தான் தனியாக வாழும் சிங்கிள் மதர் என சொல்லி ஆர்பாட்டம் பண்ணுகிறார். நான் வைத்தியர்கள் போட்ட செலவுக் கணக்கை குறைக்க முடியாது. அரைமணித்தியாலமாக ஆரப்பாட்டம் செய்யும் இந்தப் பெண்ணால் எனக்கு தலைவலி வந்து விட்டது.’ எனத் தலையில் கைவைத்தாள்.

எப்பொழுதும் அமைதியாக பேசும் லீனி இதைச் சொன்ன போது சுந்தரம்பிள்ளைக்கு லீனியில் அனுதாபம் வந்தது

‘நான் போய் பேசிப் பார்க்கிறேன்.’

‘இன்றைக்கு வேலை செய்பவர்களில் சீனியர் நீதான் சிவா’

அந்தப் பெண்ணை இரண்டாவது பரிசோதனை அறையின் உள்ளே வரும்படி அழைத்த போது எதுவும் பேசாமல் மெதுவாக கழந்தைகளுடன் வந்தாள். அரைமணித்தியாலம் கூக்குரல் இட்டதால் அவளும் களைப்படைந்திருக்க வேண்டும். அத்துடன் உரக்க குரல் கொடுத்து சண்டைபிடிப்பவர்கள் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். அப்படியான சந்தர்ப்பம் வரும் போது அமைதியடைந்து விடுகிறார்கள்.

நடமாடும் குழந்தை காப்பகமாக உள்ளே வந்த பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு சுந்தரம்பிள்ளை விடயத்தை கேட்டான்.

‘நான் புரோட்மடோவில் இருந்து வருகிறேன். சீபா பத்து குட்டிகள் போட்டது. எல்லாமாக எட்டு குட்டிகளை மற்றவர்கள் கொண்டு போய்விட்டார்கள். இந்த இரண்டுக்கும் சீபாவுக்கும் வயிற்றால் இரத்தமாக போகத் தொடங்கியதால் நான் இங்கு ஐந்து நாட்களுக்கு முன் கொண்டுவந்தேன். இப்பொழுது ஆயிரம் டாலருக்கு மேல் கேட்கிறார்கள். எனக்கு இந்த இரண்டு குழந்தையை விட இன்னும் இரண்டு மூத்த குழந்தைகள் வீட்டில் உள்ளன. என்னால் ஆயிரம் டாலரை செலவிடமுடியாது.

‘உங்கள் நிலமை புரிகிறது. ரோட்வீலருக்கு நீங்கள் தடை ஊசி போட்டிருக்கவேண்டும். ரொட்வீலரும் டோபமானும் விசேடமாக இந்த நோய்க்கு ஆளாகும் தன்மையைக் கொண்டவை. குறைந்த பட்சம் குட்டிகளுக்கு தடை ஊசி போட்டிருக்கலாம். இந்த நோயால் பெரும்பாலான நாய்குட்டிகள் இறந்து விடுவது வழக்கம். மிகவும் கடுமையான வைத்தியத்தில் தான் உங்களது குட்டிகள் உயிர் பிழைத்துள்ளன. நான் இதை சொல்லுவதற்கு காரணம் நான் உங்கள் சீபாவையும் குட்டிகளையும் இரண்டு நாட்கள் பொறுப்பாகப் பார்த்தேன். நாங்கள் செல்லப்பிராணிகளுக்கு வைத்தியம் செய்யும் போதும் நோய் தீர்க்க மருந்துகளை பாவிக்கும்போதும் உங்களிடம் பணம் அதற்கு இருக்குமா இல்லையா என நினைத்து வைத்தியம் செய்யமுடியாதுதானே. அவற்றின் உடல்நலத்தை கருதி வைத்தியம் செய்யவேண்டும் எனத்தானே நீங்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறீரகள்?’

‘ஆனால் எனக்கு இவற்றிற்கு உணவு வழங்குவதற்கே போதும் போதுமாகிறது. இந்தப் பணத்தை கொடுக்கும் சக்தியில்லை.’

‘நான் ஒன்று சொல்லட்டுமா? நீங்கள் இவ்வளவு பெரிய நாயை வளர்க்கும்போது குறைந்த பட்சம் கருப்பத்தடை ஆபரசேன் செய்திருக்க வேண்டும். இப்படி பத்து குட்டிகளை பராமரிக்கும் பிரச்சனை வந்திராது.’

‘நீங்கள் சொன்னது உண்மைதான். நான் கூட அதை செய்திருந்தால் இது நடந்திராது’ என தனது உப்பிய வயிற்றை இடது கையால் தடவியபடி சிரித்தாள். அழகிய தடித்து குவிந்த உதடுகளை பிரித்து வரிசையான மேல் பல்லுகள் மட்டும் தெரிய நடிகை அஞ்ஞலீனா ஜொலி மாதிரி. அந்த சிரிப்பு உண்மையாக மனதுக்கு இதமாக, ஒரு தேவதையாக அவளைக் காட்டியது. இந்தச் சிரிப்பே ஆயிம்டாலர் பெறுமதியானது என எண்ணிய சுந்தரம்பிள்ளை மேலும் இந்தச் சிரிப்புத்தான் இவளுக்கு எதிரியாகிறது.வேலையற்ற சோம்பேறி யாரோ சிரிப்பில் மயங்கி இந்தப் பெண்ணை இடைவெளியற்று குழந்தை பெறும் இயந்திரமாக்கி இருக்கவேண்டும் என முடிவு செய்தான்.

‘இன்று கொடுக்க முடிந்த பணத்தை கொடுத்து உங்கள் சீபாவை கொண்டு செல்லுங்கள். நாளை வந்து எங்கள் வைத்தியசாலை நிர்வாகியோடு பேசி உங்களுக்குத் தள்ளுபடி கேளுங்கள்.’

‘இதை நீங்கள் வந்த வரவேற்பு அறையில் உள்ள பெண்ணிடம் கூறுங்கள்.’

அதை லீனியிடம் சொன்னபோது ‘உனக்கு நன்றி. இல்லையெனில் இன்று முழுவதையும் தலையிடியில் மிகுதி நேரத்தை களித்திருப்பேன் சிவா’

அவுஸ்திரேலியாவில் கணவன் பிரிந்து சென்ற பின் பல பெண்கள் பொருளாதாரத்தின் கீழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் பண உதவி பெற்றாலும் மன உணர்வு மற்றும் பொருளாதார நீதியில் சமூகத்தின் விளிம்புகளில் வாழ்கிறார்கள். தன்நம்பிக்கை குறைந்து இவர்கள் வாழ்வதோடு இவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது.

Advertisements

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.