பயணியின் பார்வையில் — 16

Nadesan's Photos 261Nadesan's Photos 262
எழுவைதீவு படகுத்துறையும் உருத்திரபுரம் மாமரமும்

முருகபூபதி

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் இருந்தார்கள். யாழ்ப்பாணம் செல்லும் வழியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்வது என்பது எனது பயணஒழுங்கு.
1960 களில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் ( தற்போது கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) புலமைப்பரிசில் பெற்று படிக்கச்சென்ற காலத்தில் அப்பா ஒரு கம்பனியில் விநியோக பிரதிநிதியாக பணியாற்றினார். அந்தக்கம்பனிக்குச்சொந்தமான வேனில் என்னையும் எனது உறவினர்களின் மகன்மாரையும் குடும்ப நண்பர் ஒருவரின் மகனையும் அழைத்துச்செல்லுவார். ஒருவர் என்னுடன் ஸ்ரான்லி கல்லூரிக்குத்தெரிவானவர். அவரது அண்ணன் யாழ். இந்துக்கல்லூரியில் பயின்றார். மற்றவர் பரமேஸ்வராவில் கற்றுக்கொண்டிருந்தவர்.

எனது வாழ்நாளில் நான் முதல் முதலில் பனைமரத்தைப்பார்த்தது அப்பொழுதுதான். கிளிநொச்சியை கடந்து சென்றாலும் அங்கே இறங்கி ஊரைப் பார்த்ததில்லை. ஆனால் பின்னாட்களில் கிளிநொச்சி பல செய்திகளை எனக்கு சொல்லியிருக்கிறது.
முக்கியமாக கிளிநொச்சி உருத்திரபுரம் கோகிலாம்பாள் சம்பந்தப்பட்ட அந்த பிரிசித்திபெற்ற கொலைவழக்கு, பொலிகண்டி செல்வி கமலம் இராமச்சந்திரன் கொலைவழக்கின் சந்தேக நபர் மறைந்திருந்த கிளிநொச்சி கரடிப்போக்கு, செல்லையா குமாரசூரியர் தேர்தலில் நின்று தோற்ற இடம். அதுபற்றி எனது இலக்கிய நண்பர் ஒருவர் கிளியனூர் வாக்கு என்ற சிறுகதை எழுதினார். ஆனால் அதனை எந்தவொரு இதழும் வெளியிடவில்லை.

அந்தக்கதையில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களை நானும் அறிவேன். அது ஒரு உண்மைக்கதை. அதனால் அதனை எவரும் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள்.
விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலுக்கும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து கிளிநொச்சியை விட்டு பின்வாங்கியபோது தகர்த்துவிட்டுச்சென்ற பெரிய நீர்தாங்கி அங்கு அடையாளமாக காட்சியளிக்கிறது.
பாவம் தண்ணீருக்குத்தான் எத்தனை சோதனை? தண்ணீரில் அரசியல் நடத்துபவர்கள் மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதில்லை.

போர் முடிவுற்றபின்னர் 2010 ஜனவரியில் யாழ்ப்பாணம் சென்றவேளையிலும் கிளிநொச்சியில் இறங்கி அந்த ஊரைச் சுற்றிப்பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இலக்கிய நண்பர் கருணாகரன் போருக்குப்பின்னர் இடம்பெயர்ந்து சுண்ணாகத்தில் வசித்தபோது சந்தித்து நெருக்கமானார். அவர், பின்னர் கிளிநொச்சிக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வந்ததும் ஒரு நாள் தொலைபேசி ஊடாக கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பயிலும் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து உரையாடினார்.

உதவும் அன்பர்கள் எவரும் தெரிவுசெய்யப்படாத சூழ்நிலையில் அந்த மாணவர்களுக்கு எமது கல்வி நிதியம் குறிப்பிட்ட பாடசாலை அபிவிருத்திச்சங்கம் ஊடாக உதவ முன்வந்தது. பாடசாலை அதிபர் திரு. பங்கயற்செல்வன் அந்த மாணவர்களின் கல்வி கண்காணிப்பாளராக இயங்குவதற்கு முன்வந்தார்.

இம்முறை பயணத்தில் கிளிநொச்சியை சுற்றிப்பார்க்கவேண்டும் என்று புறப்படும் முன்பே நிகழ்ச்சி நிரலை கருணாகரனுக்கு சொல்லியிருந்தேன்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மாணவர் நிதிக்கொடுப்பனவை வழங்கி தகவல் அமர்வும் நடத்தியபின்னர், உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் பயிலும் எமது நிதியத்தின் உதவிபெறும் மாணவி ஜெஸிந்தாவை பார்க்கச்சென்றேன்.
இவர் வன்னிப்போரில் தனது வலது காலை இழந்த சிறுமி. போரில் ஒரு காலை இழந்த மகளுடன் அகதிமுகாமிலிருந்துவிட்டு அந்தக்குடும்பம் எழுவைதீவுக்கு இடம்பெயர்ந்து உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்தது.
2010 ஜனவரி எழுவை தீவு பயணம் குறித்து முன்னைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டு அங்கு கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்கள் தொடர்பாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவதாக சொல்லியிருந்தேன் அல்லவா?

நண்பர் நடேசன், எழுவைதீவில் வைத்தியசாலை அமைப்பதற்காக , என்னையும் லண்டனிலிருந்து வந்திருந்த சமூகசெயற்பாட்டாளர் சூரியசேகரம் என்ற அன்பரையும் அழைத்திருந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும்பொழுது “ எங்கே உறங்குவோம்…எங்கே சாப்பிடுவோம்… என்பது தெரியாது…அதனால் முன்னேற்பாடுடன் செல்லவேண்டும்” என்றார் நடேசன்.
அன்று யாழ். பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிய அன்றைய தினசரிகள் கைவசம் இருந்தன. உறங்குவதற்கு பாய்கள் தயார் என்றேன். உணவுக்கு பாண் வாங்கிச்சென்றோம்.
கடல் பயணம். படகில் ஆனந்தமாகச்சென்றோம். சிலருடன் நடேசன் உரையாடி தனது எழுவைதீவு ஊரைப்பற்றிச்சொல்லி தனது தாயார் அங்கே ஒரு காலத்தில் உப-தபால் அலுவலகம் நடத்தியதை நினைவுபடுத்தினார்.

அவர்களில் ஒரு சிலர் நடேசனின் பூர்வீகம் தெரிந்து அடையாளம் கண்டுகொண்டனர். கரையொதுங்கும்போது மாலை ஐந்து மணியாகிவிட்டது. ஒழுங்கைகளுக்கூடாகச்சென்று டிஸ்பென்ஸரிக்காக வழங்கவிருந்த காணியை பார்த்தோம். ஊர் அன்பர்கள் அவரது வருகை அறிந்து சந்திக்க வந்தனர்.

நடேசனுக்குத்தெரிந்த ஒரு அன்பரின் இல்லத்தில் இரவு தங்குவதற்கு தீர்மானித்தோம். அந்தக்கிராமத்தில் மாலை ஆறுமணிக்குத்தான் மின்சாரவெளிச்சம் கிடைக்கும். இரவு பத்துமணிக்கு அணைந்துவிடும்.

ஒரு பெரிய ஜெனரேட்டரை இயக்கி அந்தக்கிராமத்துக்கு மின்சாரம் பெற்றுக்கொள்கிறார்கள்.
கைவசம் பாண் இருக்கிறது. கறிக்கு என்ன செய்வது? ஒரே ஒரு பெட்டிக்கடை ஒரு வீட்டோடு இருந்தது. அங்கே சென்று வெங்காயம், தக்காளி, முட்டை கேட்டேன்.
அந்தக்கடையிலிருந்த பெண்மணி என்னை விநோதமாகப்பார்த்தாள். சிரித்தாள். தயங்கினாள்.

“ என்ன யோசிக்கிறீர்கள்..?”என்றேன்.

“ வெங்காயம் தரலாம். தக்காளியும் தரலாம். ஆனால் முட்டை தரமுடியாது” என்றார்.

“ ஏன்…முட்டை இல்லையா..?”

“ இருக்கிறது. ஆனால் தரமுடியாது. ஆறுமணிக்குப்பிறகு முட்டை கொடுக்கமாட்டோம்” என்றாள்.

“இதென்ன கொடுமை?” என்றேன்.

“கொடுமை இல்லை. சம்பிரதாயம்…. நம்பிக்கை…” என்று சொல்லி நாணத்துடன் சிரித்தாள்.

“ பரவாயில்லை…வெங்காயம் நூறுகிராம், தக்காளி நூறு கிராம் தாருங்கள். ஒரு வேளை சாப்பாட்டிற்காக கேட்கிறேன்.” என்றேன்.

கேட்டவை கிடைத்தன. நடேசனின் அம்மா பணியாற்றிய அந்த உப-தபாலக இல்லத்தில் யாரோ குடியிருந்தார்கள். அந்த இல்லமும் நடேசனுடைய பூர்வீக இல்லம்தான். சற்று சோபை இழந்திருந்தாலும் ஒரு காலத்தில் அழகாக இருந்திருக்கவேண்டும் என்பதற்கு பல அடையாளங்கள் இருந்தன. சீமெந்தினால் உருவாக்கப்பட்ட இரண்டு சிறிய யானைச் சிலைகள் அநாதரவாக நிலத்தில் கிடந்தன. முன்பு வாசலை அவை அலங்கரித்திருக்கவேண்டும்.
அந்த வீட்டில் நடேசனுக்குத்தெரிந்த உறவினரின் மகள் இருந்தாள். அவள்தான் அந்த உப-தபாலகத்தை கவனிக்கிறாள்.

“ தங்கச்சி… எங்களுக்கு ஒரு தக்காளிக்குழம்பு வைத்துத் தரமுடியுமா?” என்று கேட்டுவிட்டு பெட்டிக்கடையில் வாங்கிவந்தவற்றை நீட்டினேன்.
அந்த யுவதி யோசித்தவாறு சிரித்தாள்.

“உப்பு, மிளகாய்த்தூள் எல்லாம் உங்கள் உபயம். குழம்புக்கறியை செய்துவையுங்கள் பிறகு வந்துபெற்றுக்கொள்கிறேன். மாலை ஏழுமணியாகிவிட்டது… எவருக்கும் சமைத்த கறி கொடுப்பதில்லை என்று மாத்திரம் சொல்லிவிடாதீர்கள்.” என்றேன்.

நடேசனும் சூரியசேகரமும் மௌனமாக சிரித்துக்கொண்டு நின்றார்கள்.
நாம் அன்று இரவு தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரும் நடேசனுக்கு நன்கு தெரிந்த முதியவர்தான். அவரது மனைவி யாழ்ப்பாணம் சென்றிருந்தமையால் அவரால் எம்மை இரவுச்சாப்பாட்டிற்காக உபசரிக்க முடியவில்லை. அவரது பிள்ளைகள் வெளிநாடொன்றில் நிரந்தர வதிவிட உரிமையுடன் வாழ்கிறார்கள். பிள்ளைகள் பெற்றவர்களை அங்கு அழைத்து அவர்களுக்கும் குடியுரிமை பெற்றுக்கொடுத்திருந்தனர்.

ஆனால் அந்த முதிய தம்பதியினர் குளிர்தாங்கமுடியாமல் நாடு திரும்பி மிக்க மகிழ்ச்சியோடு அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். அங்கு பசுமாடு, ஆடுகள், கோழிகள் அவரால் பிள்ளைகள் போன்று பராமரிக்கப்படுகின்றன. பனை, தென்னை உட்பட மரக்கறித்தோட்டமும் இருக்கிறது.
அந்த முதியவர் ஒரு சிறிய வானொலிப்பெட்டியில் லண்டன் பி.பி.ஸி. தமிழோசையும் இரவு வேளையில் கேட்கிறார். சுமார் 150 குடும்பங்கள் வசித்த எழுவைதீவில் அமைக்கப்படவிருந்த டிஸ்பென்சரி தொடர்பானபூர்வாங்க ஆலோசனைகளுக்காக அந்த ஊரின் அன்பர்கள் சிலர் இரவானதும் வந்தனர்.

வரும் வழியில் நான் அவர்களிடம் கேட்டிருந்த பனங்கள்ளு ஒரு போத்தலும் எடுத்துவந்தனர். கற்பதருவின் அமுத பானத்தை அருந்தி நீண்ட காலம். அன்ரன் பாலசிங்கம் கூட லண்டனில் நடந்த ஒரு மாவீரர் நாள் உரையில் பனங்கள்ளின் மகிமையை சொல்லியிருக்கிறார்.
நடேசன் கள் அருந்தவில்லை என்பது எனக்கு ஆச்சரியம். சிலருக்கு சில பானங்கள் ஒத்துவராதுதான்.

பேச்சுவாக்கில் எமது மாணவர் கல்வி நிதியம் பற்றி வந்திருந்தவர்களிடம் குறிப்பிட்டேன்.
அங்கிருந்த ஒருவர், எழுவைதீவுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள போரில் கால் இழந்த சிறுமி பற்றிச்சொன்னார். அவளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யமுடியுமா? எனக்கேட்டேன்.
தகவல் அனுப்பி அந்தப்பிள்ளையையும் பெற்றவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்வதாகச்சொன்னார்கள்.

மறுநாள் காலை ஏழுமணிக்கு ஒரு படகு எழுவைதீவிலிருந்து புறப்படும் என்றும் அச்சமயம் அதன் இறங்குதுறைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பஸ்ஸில் அந்த கால் இழந்த மாணவி கற்கும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வருவார்கள் எனவும் தகவல் சொல்லப்பட்டது. நாமும் உரியநேரத்தில் படகில் ஏறி அக்கரை சென்றோம். பஸ் வந்தது. அதிலிருந்து இறங்கிய அதிபர் ஆசிரியர்களை சந்தித்து உரையாடினோம். கால் இழந்த மாணவி உடல்நலக்குறைவினால் மருத்துவசிகிச்சைக்காக ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவளது தந்தை அங்கு வந்து சொன்னதுடன் மாணவியின் படங்களையும் காண்பித்தார். யாரோ அன்பர்கள் வழங்கிய சக்கர நாற்காலியில் அந்த மாணவி அமர்ந்திருந்த படம் மனதை உருக்கியது.

இப்படி எத்தனை பிள்ளைகள்…? பெருமூச்சுவிட்டேன். அதிபரிடம் அந்த மாணவி அவரது பாடசாலையில்தான் படிக்கிறாள் என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு அவளது தந்தையிடம் மூன்று மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவை அந்த இடத்திலேயே வழங்கினேன். அவர் கண்கள் பனிக்க பெற்றுக்கொண்டார்.

“ அவள் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஒரு பிள்ளைதான். நன்றாக படிக்கவையுங்கள். நாம் பார்த்துக்கொள்கிறோம்” என்றேன்.

இந்த சந்திப்பு அந்த படகுத்துறையில் முடியும்வரையில் அந்த பெயர்தெரியாத பஸ் சாரதியும் நடத்துனரும் எமக்காக பஸ்ஸை எடுக்காமல் தாமதித்துக்கொண்டிருந்தனர். அதில்தான் நாம் யாழ்ப்பாணம் செல்லவேண்டும்.

அதேசமயம் அந்த படகோட்டியும் அதிபர் ஆசிரியர்களை எழுவைதீவுக்கு அழைத்துச்செல்வதற்காக காத்துநின்றார்.

மனிதாபிமானம் மிக்க அந்த மனிதர்களை மனதுக்குள் வாழ்த்தினேன். போரிலே பாதிக்கப்பட்ட கால் இழந்த மாணவி ஒருவருக்கு படகுத்துறையில் வைத்தாவது உதவமுடிந்தது மனதுக்கு நிறைவானது.

“ பொறுப்பெடுத்துவிட்டீர்கள்… இனி எப்படி தொடர்ந்து உதவப்போகிறீர்கள்..?” என்று கேட்டார் சூரியசேகரம்.

“அவுஸ்திரேலியா திரும்பிய மறுகணம் உதவும் அன்பரைத்தேடுவேன்.” என்றேன்.
எதிர்பார்த்தவாறு இரக்கமுள்ள தம்பதியர் கிடைத்தார்கள். அவர்கள் ஏற்கனவே கோப்பாய் பிரதேசத்தில் எமது நிதியம் ஊடாக ஒரு மாணவிக்கு உதவிக்கொண்டிருப்பவர்கள். இந்த மாணவியையும் பொறுப்பேற்றார்கள்.

மாணவி ஜெஸிந்தாவுக்கு எமது கல்வி நிதியத்தின் யாழ். மாவட்ட கண்காணிப்பு அமைப்பான சிறுவருக்கான அபிவிருத்தி நிலையம் ஊடாக நிதி உதவி தொடர்ந்து அனுப்பப்பட்டது. மீள் குடியேற்றம் தொடங்கியதும் அந்த மாணவியின் குடும்பம் கிளிநொச்சி உருத்திரபுரத்திற்கு இடம்பெயர்ந்தது.நிதியுதவியும் தொடர்ந்தது.

2011 ஜனவரியில் கொழும்பில் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தகவல் அமர்வுக்காக யாழ்ப்பாணம் வந்தபொழுது இந்த மாணவி யாழ்.போதனா மருத்துவமனையில் கால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து,ஈழத்தின் பிரபல ஓவியர் ரமணி அவர்களுடன் சென்று பார்த்தேன். அவரிடம் மோட்டார்சைக்கிள் இருந்தது. எனது அவசர பயணத்திற்கு அது உதவியது.

அப்பொழுது விபத்தில், போரில் அவயவங்களை இழப்பவர்கள் எதிர்நோக்கும் உபாதைகளின் கொடுமையை அறிந்தேன். கத்திரிக்கப்பட்ட முடி வளர்வதுபோன்று வெட்டப்பட்ட நகம் மீண்டும் வளர்வது போன்று போரில் துண்டிக்கப்பட்ட காலின் எலும்புகளும் வளரும். அதற்கு சிகிச்சை அளிக்காது விட்டால் செயற்;கைக்கால் பொருத்தி நடப்பது சிரமம். அதற்காக அடிக்கடி கிளினிக் சென்று பரிசோதிக்கவேண்டும். அத்தகைய சிகிச்சை ஒன்றுக்காகவே அந்த மாணவி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவளை பரிவோடு அணைத்துக்கொண்டேன். அவளது கண்கள் மின்னின. எனது வருகையை அவளோ அவளுடனிருந்த அவளது தாயாரோ எதிர்பார்த்திருக்கவில்லை.
அவுஸ்திரேலியா திரும்பியதும் அவளுக்குரிய சிகிச்சைகள் பற்றி இங்கு அவளுக்கு உதவ முன்வந்த அந்த தம்பதியருக்குச்சொன்னேன்.

ஒரு நாள் அவர்கள் திடீரென்று என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இலங்கையில் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாகவும் அந்த மாணவியை கிளிநொச்சியில் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்கள். யாழ். மாவட்ட தொடர்பாளர் திரு. பாலதயானந்தன் ஊடாக அவர்களது சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன்.

அந்தத்தம்பதியர் கிளிநொச்சிக்கு சென்றபோது ஒரு இன்ப அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. அந்த மாணவி இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பூப்பெய்தியிருந்தாள்.
தகவல் அறிந்து மாணவியை வாழ்த்திவிட்டு உடனடியாக யாழ்ப்பாணம் திரும்பி தங்களுடைய உறவினர்களையும் அழைத்துக்கொண்டு மீண்டும் வந்து அந்த மாணவிக்கு பூப்புனித நீராட்டு சடங்கு வைபவத்தை தங்கள் செலவில் சிறப்பாக நடத்தி அன்பளிப்புகளும் கொடுத்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்ததும் எனக்கு தகவல் சொன்னார்கள்.

பூப்புனித நீராட்டு சடங்குகள் அவசியமா? என்று வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் கட்டுரை எழுதி விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளை தங்கள் பிள்ளைகளுக்கு 21 வயது பிறந்துவிட்டால் அதனைக் கொண்டாட்டமாக ஊரைக்கூட்டி பெரிய விருந்துபசாரங்களை படோடாபமாக நடத்துகிறார்கள்.

ஜெர்மனியில் ஒரு தமிழ்த்தம்பதியினர் 21 பவுணில் தங்கக்கத்தி செய்து 21 வயது மகளிடம் கொடுத்து கேக் வெட்டினார்கள்.

இங்கிலாந்தில் தமிழ்த்தம்பதியர்,பூப்பெய்திய தமது மகளை ஒரு ஹெலிகொப்டரில் அழைத்துவந்து ஒரு பிரமாண்டமான மண்டபத்தில் சடங்கு நடத்தினர்.
இந்தப்பின்னணிகளுடன், கிளிநொச்சியில் போரில் பாதிக்கப்பட்ட அந்தக்குழந்தை வயதுக்கு வந்ததும் அவளது கல்வி வளர்ச்சிக்கு உதவும் அன்பர்களினால் சாமத்தியச்சடங்கு நடந்தது எந்தவிதத்திலும் குறைந்ததல்ல என்பதை சடங்குகள் பற்றி ஆராயும் புத்திஜீவிகளுக்கு சொல்லவிரும்புகின்றேன். எங்கள் தேசத்தின் எளிய வறுமைப்பட்ட மக்களின் சாதாரண மகிழ்ச்சித்தருணங்களை மதிப்போம்.

ஜெஸிந்தா என்ற அந்த மாணவிக்கு இப்படி பல இன்ப அதிர்ச்சிகள் தொடர்கின்றன. அன்று கருணாகரனின் வழிகாட்டலுடன் அவளைப்பார்க்க உருத்திரபுரம் மகா வித்தியாலயம் சென்றேன். எனது எதிர்பாராத வருகை அவளை ஆச்சரியப்படுத்தியது.

“ சேர்…நாளை மறுதினம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு நிதிக்கொடுப்பனவு தகவல் அமர்வுக்கு அம்மாவுடன் வரத்தான் இருக்கிறேன். உங்களை இங்கு நான் எதிர்பார்க்கவில்லை”என்று அவள் முகம் மலரச்சொல்லிக்கொண்டிருந்தபோது அந்தப்பாடசாலையின் அதிபர் திருமதி மீனலோஜனி இதயதாஸ் எதிர்ப்பட்டார்.

“ இங்கே இன்னும் ஒரு மாணவி போரில் கால் இழந்த நிலையில் படிக்கிறாள். கஷ்டப்பட்ட குடும்பம்.” என்றார்.

“ பார்க்கலாமா?” எனக்கேட்டேன்.

அழைத்து அறிமுகப்படுத்தினார். அவளது பெயர் சுகந்தினி. அவளுக்கும் வலது கால் இல்லை. அவளுக்கு செயற்கைக்கால் பொருத்துவதனால் ஏற்படக்கூடிய உபாதைகளையும் அதிபர் சொன்னார்.

பாடசாலை வகுப்பறைகளில் பாடம் நடந்துகொண்டிருந்தமையாலும் அதிபரும் அவசரமாக வெளியே செல்லவிருந்தமையாலும் ஒரு மாமர நிழலில் அந்த மாணவிக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. இம்மாணவி ஊன்றுகோலின் தயவில் நடக்கிறார். ஒரு பெண் தினமும் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் இம்மாணவியை வீட்டிலிருந்து பாடசாலைக்கு அழைத்துவந்து பாடசாலை விட்டதும் ஏற்றிச்செல்கிறார்.
சுகந்தினி நன்றி சொன்னாள்.

“ இந்த நன்றி எனக்கல்ல. ஜெஸிந்தாவுக்குத்தான். அவளைப்பார்க்கவந்த இடத்தில் அல்லவா உம்மையும் சந்திக்கின்றேன்.” என்றேன்.

எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை.
எழுவைதீவில் அந்தப் படகுத்துறையும் உருத்திரபுரத்தில் அந்த மாமரமும் அந்த மாணவிகளுடன்நினைவில் ஆழமாகப்பதிந்துவிட்டன.

(பயணங்கள் தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: