




நடேசன்
அவுஸ்திரேலியாவில் பெரிய நகரங்களான சிட்னி ,மெல்பேனில் எம்மைப் போல் புதிதாக குடியேறி வசிப்பவர்கள் மிக குறைவாகத்தான் உள்நாட்டில் உள்ள சிறு நகரங்களுக்கு செல்வார்கள். அவர்கள் விடுமுறை எடுக்கும் போது தங்களது பிறந்த நாடுகளுக்கோ, ஆசிய நாடுகளுக்கோ ,அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு போவது வழக்கமாகி விடுகிறது. அவுஸ்திரேலியர்கள் கரவன்களில் சிறிய நகரங்கள், கடற்கரைகள் என காம்பிங் செல்வார்கள்.இவர்களால் உள்நாட்டில் பெரிய அளவில் உல்லாசப்பிரயாணத் தொழில் விருத்தியாகும்.இதனால் பலர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதைவிட வெளிநாட்டவர்கள் ஏராளமானவர்கள் வருவார்கள். இப்பொழுது அவர்கள் வருகை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் அவுஸ்த்திரேலிய டாலரின் உயர் மதிப்பேயாகும்.
தற்போதய சூழ்நிலையில் அவுஸ்திரேலிய டாலருடன் பல நாடுகள் செல்லும் போது கை நிறைய காசு கிடைக்கும். முக்கியமாக இந்தோனிசியா போய் 100 டாலரை மாற்றினால் அரைக் கிலோ இந்தோனிசிய பணம் கிடைக்கும். எண்ணுவதற்கு பல நிமிடங்கள் செல்லும். டாலரின் மதிப்பு கூடியதால் அவுஸ்திரேலியாவில் உள்நாட்டுக்குள் நடைபெறும் உல்லாசப் பயணங்கள் குறைந்து விட்டது. பல ஹொட்டோல்கள், மற்றும் பிரயாண முகவர்களின் வருமானம் குறைந்து விட்டது. இவைகளால் இறுதியில் வேலையற்றவர்களின் எண்ணிக்கையை கூட்டுகிறது. யப்பானியர்கள் ஒரு காலத்தில் விமானம் விமானமாக குயின்ஸ்லாண்டில் வந்து இறங்கினார்கள். இவர்களது வருகையின் நிமித்தம் ஐந்தாவது பெரிய நகரமாக கோலட் கோஸ்ட் (Gold coast) நகரம் உருவாகியது. இப்பொழுது அவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது.
உல்லாசப் பிரயாணத்துறை மட்டுமல்ல உற்பத்தி துறையும்(Manufacturing) நலிவு கண்டுள்ளது. கனிப்பொருள் வளத்தால் சுரங்க தொழில்துறை வளமடைவதால் இந்த நாட்டின் செல்வம் கூடுகிறது. அந்த தொழிலில் வேலை செய்பவர்கள் ஊதியம் கூடியதால் மற்ற தொழில்துறைகளை நலிவுக்கு இட்டு செல்கிறது.
இரண்டு நாள் விடுமுறையை கழிப்பதற்கு நான் இந்த முறை இச்சுக்கா சென்றபோது மேற்சொன்ன பொருளாதார மந்த நிலையை பார்க்கக்கூடியதாக இருந்தது. பதினைந்தாயிரம் மக்களை கொண்ட இந்த நகரம் மரே நதியில் உள்ளது. நதி வழிப் போக்குவரத்துக் காலத்தில் மிகவும் முக்கிமாக இருந்த இந்த நகரம் இரயில் வீதி போக்குவரத்தால் இப்பொழுது நலிந்து விட்டது. விக்டோரிய மாநிலத்தையும் நியுசவுத் மாநிலத்தையும் பிரிக்கும் மரே நதி இங்கு ஓடுகிறது. நதியில் அக்காலத்தில் விவசாயப் பொருட்களை ஏற்றிய நீராவி வள்ளங்கள் சென்றது. பிற்காலத்தில் உல்லாசப்பயணிகளை ஏற்றிய பெரிய படகுகள் மற்றும் வீடுகள் போன்ற வசதிகள் அமைந்த படகுகள் நதிகளில் பயணம் செல்வதால் உல்லாசப்பிரயாண நகரமாக்கியது. இதை விட ஆற்றில் வேகப்படகுச் சவாரி ஆற்றில் சறுக்குதல் என நதியில் பல செயல்ப்பாடுகள் இருந்தன. இம்முறை சென்ற போது நதியில்அதிக நீர் இல்லை. அத்துடன் பெரிய அளவு உல்லாசப்பிரயாணிகளைக் காணவில்லை. பல ஹொட்டேல்கள் வெறுமையாக இருந்தன.
எனக்கு பிடித்த காட்சி பல பறவைகள் நதிக்கரையில் இரை பிடித்தன. அத்துடன் நதிக்கரையின் மாலை நேரம் வித்தியாசமான சுழலைத் தந்தது. உயர்ந்த மரங்களில் கிளிச்சாதியை சேர்ந்த கிறீம் நிறமான கொக்கற்றுக்கள் (corella Cockatoo) ஆயிரக்கணக்கில் மாலைநேரத்தில் சத்தமிட்டபடி பறந்து சென்ற காட்சி இனிமையாக இருந்தது. இந்த நதியை இரு புறத்திலும் யுக்கலிப்ரஸ் வகையில் ஒரு வகையான நதி ரெட் கம் (River Red Gum) மரங்கள் உள்ளன. இவை வலிமையானதாகவும் வள்ளங்கள் செய்வதற்கும் ஏற்றவை.இந்த நதி ரெட்கம் வலிமையானது மட்டுல்ல தண்ணீர் குறைந்தகாலத்தில் தனது பாதி மரக் கொம்புகளை இறக்க பண்ணிவிடும். தானாக தன்னைசிறிதாக்கி கொண்டு வாழும்.
இது அற்புதமான நிகழ்சியல்லவா?
ஆற்றில் மிதக்கும் நீராவியால் இயங்கும் படகை உணவு விடுதியாக்கி இருக்கிறார்கள். இந்த படகில் பயணித்தபடி ரெட் கம் வனத்தை பார்பது மனமகிழ்வை அளிக்கும்.
அவுஸ்திரேலியாவின் உயர்ந்த மலைப்பிரதேசமான அல்ப்ஸ் மலைப்பகுதியில் 2375கிலோமீட்டர் பாயும் இந்த மரே நதி நீளமானதாலும் பெரிய நதிகள் போல்அதிக தண்ணிர் உள்ளதல்ல.ஆனாலும் அவுஸ்திரேலியாவில் முக்கிய விவசாய பிரதேசத்தைஉருவாக்கிறது. அடிக்கடி தண்ணி அற்றுப் போகிறது. சமிபத்தில் நைல் நதியை பார்த்து விட்டு மரே நதியை பார்த்த போது வறுமையாக இருந்தது. நைல், கங்கை, ரைகிரிஸ் என நாகரீகம் பிறந்து வளராத நதியாகிலும் இந்த நதி ஏராளமான மீன்கள் பறவைகள் ஆமை போன்ற பல உயிரினங்களுக்கு வாழ்வாதரமாகிறது.டால்லிங் நதியுடன் சேர்ந்து பாரிய விவசாய பிரதேசத்தை உருவாக்குகிறது இந்த மரே நதி
மறுமொழியொன்றை இடுங்கள்