அசோகனின் வைத்தியசாலை 17

GS
காலோஸ் மீதான அந்தப் புகார் ஜிவ் என்ற பூனையின் உரிமையாளரான விக்டர் வில்லியத்தால் வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நூறு பேர் வாயால் குறை கூறும் போது ஏற்படும் தாக்கத்திலும் பார்க்க எழுத்தில் அளிக்கப்படும் மனுவுக்கு அதிக தாக்கம் உண்டு. விக்டர் வில்லியம் எழுத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு நிர்வாகம் எப்படியும் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது.

பூனைகள் ஒன்பது தரம் உயிர் தப்பும் என்ற ஆங்கில கூற்றுக்கு ஏற்ப ஜிவ் ஒரு விதமாக உயிர் மீண்டது. வைத்தியசாலையில் வைத்து அளிக்கப்பட்ட தீவிர சிகீச்சையால் குணமாகி வீடு சேர்ந்தாலும் விக்டருக்கு ஏற்பட்ட கோபம் தீரவில்லை. காலோசின் கையால் உடலில் அடி விழுந்தால் கூட பொறுத்திருக்க முடியும். புவ்ரா என்ற ஹோமோசெக்சுவல் ஆண்களை இழிவாக பேசும் அந்தச் சொல், நெஞ்சில் நெருப்பால் சுட்டது போல் இருந்தது. சாதாரணமான ஆணுக்கு அவனது ஆண்மையை பழிக்கும் போது ஈகோவில் ஏற்படும் தாக்கம் மற்றயவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹோமோசெக்சுவல்காரரை இப்படியான சொற்களால் தாக்குவது வழமையானது. விக்டர் அந்தச் சொல்லால் ஏற்பட்ட அவமானத்திற்கு எதிர் நடவடிக்கையை நீதிமன்றத்தில் எடுக்க நினைத்து தனது ஒரு பால் நிலையை இழிவு செய்ததாக வழக்கொன்று போடுவதற்கு ஆரம்பத்தில் தீர்மானித்தார் விக்டர் வில்லியம். அதற்காக வழக்கறிஞரான நண்பன் ஒருவனைத் தொடர்பு கொண்ட போது வைத்தியசாலையில் இந்த விடயத்தை பார்த்தவர்கள் உனக்கு ஆதரவாக சொல்லமாட்டார்கள். உனக்குச் சாதகமான சாட்சிகள் இல்லாத போது வழக்கு வெல்லாது. வெல்ல முடியாத விடயத்தை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் போவதில் பிரயோசனம் இல்லை எனக் கூறி சமாதனப்படுத்தியதால் சிறிது விக்டர் குளிர்வடைந்து கடிதத்தில் தனது புகாரை எழுதி நிர்வாகத்திடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ரொன் ஜொஸ் இதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி கொடுத்தார். காலோஸ் மீதான இந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்பதில் செயலாளரான ரொன் ஜோய் விடாப்பிடியாக நின்றார். இம்முறை எவராலும் தடுக்க முடியவில்லை. மனிதர் இதைச் சாதித்து விட்டுத்தான் இளைப்பாறுவது என்று தனிபட்ட சவாலாக எடுத்துவிட்டார்.

கடந்த முறை பத்து வருடத்துக்கு மேலாகத் தலைமை வைத்தியராக இருந்த ஒருவரை விசாரணைக்கு எடுக்க நிருவாக சபை மறுத்துவிட்டது. இந்தக் கடிதத்தை விசாரணைக்கு எடுக்காது விட்டால் தனது வேலையை விட்டு விலகுவதாக அந்தக் கூட்டத்தில் கூறிய போது இருபது வருடமாக இருந்த வைத்திய சாலை செயலாளரை இழக்க விரும்பாமல் அரைமனத்துடன் நிருவாக சபையினர் காலோஸ்சிடம் விளக்கம் கேட்க சம்மதம் தெரிவித்தார்கள்.

வழமை போல் மாலை இரண்டு மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் அரை மணித்தியாலத்தில் வெளியே வந்த ரொன் ஜோய் வைத்திய சாலையின் தேநீர் கூடத்தில் இருந்த காலோஸ்சிடம் ‘உம்மை வரும்படி அழைக்கிறார்கள்’என்ற போது அதை சட்டை செய்யாமல் எதிரே இருந்த கதிரையை காட்டி அதில் இருக்கும்படி காலோஸ் ரொன்னைக் கேட்டது அவருக்கு வியப்பாக இருந்தது.

இவன் என்னை ஆழம் பார்கிறானா? இம்முறையும் திருமதி கில்பேட் திருமதி ஒச்சாட் போன்றோரின் துணையுடன் தப்பிவிடலாம் என்று இலகுவாக எடுக்கிறானா?

இருவரும் ஒருவர் முகத்தை பார்த்து மனநிலைகளை புரிந்து கொள்ள முயற்சித்தார்கள். பரஸ்பரம் கண்கள் ஊடாக எண்ணங்கள் தெரிகிறதா என யோசித்தனர். இருவரது முகத்திலும் பரஸ்பரமான வெறுப்பு மட்டும் தெரிந்தது. மனங்களில் வெறுப்பு ராட்சத மரமாக வேர் விட்டு கிளைவிட்டு இருப்பதை எப்படி மறைக்க முடியும்? அப்படியான மறைப்பு முயற்சியில் ஈடுபட இருவரும் தயாராக இல்லை. வார்த்தைகளைப் பரிமாறினால் காலோஸ்சிடம் வார்த்தைகள் வேகமாக வரும் என்பது ஏற்கனவே ரொன் ஜொய்சுக்கு தெரிந்த விடயம். நேரடியாக முரண்பட்டால் தோற்பது தானாகத்தான் இருக்கும் என்பதால் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று நினைத்தபடி அமர்ந்தார்.

‘தயவு செய்து உங்களது பேனையைத் தரமுடியுமா? என்று காலோஸ் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கையை நீட்டி கேட்டபோது ரொன் ஜொய்ஸின் கழுத்துப்பட்டை கட்டிய அவரது கழுத்தில் சிறிது வியர்த்தது. வெறுப்பு மறைந்து மனத்தில் குழப்பம் ஏற்பட்டது.

ஏதோ திட்டம் வைத்திருக்கிறான் என நினைத்தபோது இதயத்தின் துடிப்பு அதிகரித்து இரத்த அழுத்தம் கூடுவதாக உணர்ந்தார். தேவை இல்லாத பலப்பரீட்சையில் இறங்கி விட்டேனோ?
இனிமேல் பினவாங்க முடியாது. இரண்டில் ஒன்றை பாத்திரவேண்டும் என தனக்கு தைரியத்தை தானே மனத்துக்குள் சொல்லிக் கொண்டார் குழப்பத்தை முகத்தில் காட்டாது சிறு பிள்ளை போன்ற அப்பாவியாக சிரித்தபடி பேனையை கொடுத்தபோது ‘அழகான பேனை’ எனக் கூறிய படி பொக்கட்டில் இருந்து எடுத்த கடிதத்தில் அந்த பேனாவால் கையெழுத்துப் போட்டு அதை ரொன் ஜோய்சிடம் நீட்டிய போது ‘இது என்ன?’ எனக் கேட்டபடி வாங்கிக் கொண்டார்.

‘இது எனது தலைமை வைத்தியர் பதவியில் இருந்த விலகும் கடிதம். இந்த கடிதத்தை நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டபின் எனது நிலையை விளக்க விரும்புகிறேன்’’

‘காலோஸ் ரிலாக்ஸ். நீர் வந்து விளக்கிவிட்டால் பிரச்சனை முடிந்து விடும். இதற்காக ஏன் பதவியை விலகவேண்டும்? தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல்.
இவன் விலகினால் புதிய ஒருவரைத் தேட வேண்டிய வேலை தனது தலையில் வந்து முடியும். அதைச் செய்வது மிகவும் கடினமானது. மேலும் காலோஸை அவமானப்படுத்தி நிற்க வைத்து, அவன் தன் நிலையை விளக்குவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் போட்ட சிறிய வியூகத்தில் இருந்து காலோஸ் இலகுவாக தப்பி செல்வதும் அவருக்கு பிடிக்கவில்லை.

பதவியில் ஆசைப்பட்ட ஒருவனை அவமானப்படுத்த முடியும். பதவி வேண்டாம் என காலோஸ் தூக்கி எறிந்த போது ரொன் ஜொய்சின் அவமானப்படுத்தும் ஆசை நிராசையாகி விட்டது.

‘நான் வந்து விளக்கம் சொல்ல விரும்புகிறேன். எனது தேநீரை குடித்து விட்டு இன்னும் கால் மணிநேரத்தில் வந்து சந்திக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு எனது இராஜினாமா கடிதத்தை நீங்கள் நிர்வாக குழுவில் தாக்கல் செய்யவேண்டும் இரண்டும் வேறான விடயங்கள்’ என உறுதியாகக் கூறினான் காலோஸ்.

வேறு வழியில்லாததால் அந்தக் கடிதத்துடன் எழுந்து போனபோதே இந்த இரவுண்டிலும் காலோஸ் வென்றதும் தான் தோற்றுப் போனதும் புரிந்தாலும் குறைந்த பட்சமாக தலைமை வைத்தியர் பதவியில் இருந்து காலோஸ் விலகியதை ஒரு ஆறுதல் பரிசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவரது உள்மனம் சொல்லியது.

உள்ளே சென்றதும் நிர்வாகக் குழுவிடம் விடயத்தை சொல்லும் போது வார்த்தைகளில் உற்சாகம் இருக்கவில்லை.வெறுமையான மன உணர்வே இருந்தது.
ஆனால் திருமதி ஒச்சட் ‘பத்து வருடம் பொறுப்பாக இருந்து இந்த வைத்தியசாலையை நடத்திய ஒரு டொக்டரின் மேல் ஒருவர் ஏதோ ஒரு குற்றசாட்டு எழுதிவிட்டதும் அவரிடம் உடனே விசாரிக்க முடிவு செய்தது சரியானது அல்ல. மேலும் இப்பொழுது திரு ரொன் ஜொய்சின் அவசரத்தால் வைத்தியசாலை ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டது’ என நேரடியாக குற்றம் சாட்டியதும் திருமதி கிளிபேட் அதை ஆமோதித்தார். மற்றைய அங்கத்தவர்களும் மவுனத்தால் ஆமோதித்தது போல இருந்தது. திரு லோட்டன் மிஸ்டர் ‘ஜொய் நீர் அவசரப்பட்டுவிட்டீர். ஆனால் ஏற்கனவே நடந்ததை மாற்ற முடியாது. மேலும் என்ன செய்வது என்பதை சிந்திப்போம் என்றார்.

செயலாளர் ரொன் ஜோய் திருடன் முதலாவது தடவையாக திருட முயன்று கையும் களவுமாக பிடிபட்டது போன்று அவமானத்தில் தலையைக் குனிந்து கொண்டார். இந்த விவகாரம், இப்படி முடியும் ஒரு சாத்தியத்தை எதிர்பார்க்காதது தனது தப்பு என்பதும் அவருக்குப் புரிந்துவிட்டது. இளைப்பாறவிருந்த சில மாதத்தில் தேவையில்லாமல் இந்த விடயத்தில் காலை விட்டது தவறு. அப்படிச் செய்ய முயலும் போது பின் விளைவுகளை யோசிக்காதது தனது பிழை என்ற சுய கழிவிரக்கம் அவரைப் பீடித்துக் கொண்டது. தனிப்பட்ட முறையில் காலோஸ் மீது கொண்ட காழ்ப்புணர்வு எனது சிந்தனையை மழுங்கப்பண்ணி இருக்கிறது. கடந்த இருபது வருடத்தில் செய்த சேவை எல்லாம் இறுதியில் அவமானத்தில் முடிந்தது என மனத்தை உறுத்தியது. புண்பட்டு சீழ் வடியும் கர்வத்துடன் அவரும் செயற்குழு அங்கத்தவர்களோடு சேர்ந்து காலோசுக்காக காத்திருந்தார். அந்த கால் மணிநேரம் பல ஆண்டுகள் காத்திருந்தது போல் அவருக்கு மனச்சேர்வைத் தந்தது. அந்த இடத்தில் இருந்து திடீரென மறைந்து விடவேண்டும் என உள்மனது கூறியது. அது சாத்தியம் இல்லை என ஆறுதலாக நினைத்துக் கொண்டு இருந்தார்

ஓட்டப்பந்தயத்தில் இறுதிப்புள்ளியை முதலாவதாக அடைந்த சிறுவன் பூரணமான வெற்றி சிரிப்புடன் கைகளை ஆட்டியபடி பெற்றோரை நோக்கி வருவதுபோல் காலோஸ் உள்ளே நுளைந்த போது செயலாளருக்கு வெறுப்பு முகத்தில் முகத்தில் வடிந்தது. நிர்வாகக்குழு அங்கத்தினருக்கு காலோசின் அந்தநிலை வியப்பைக் கொடுத்தது. உள்ளே நுளைந்ததும் ப வடிவில் இருந்த அந்த மேசையின் இடது பக்கத்தியில் நடுப்பகுதியில் திருமதி கில்பேட்டுக்கு பக்கத்தில் கதிரையை இழுத்து இருந்து கொண்டு அவருக்கு குட் மோனிங் சொன்ன விதம் செயலாளருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

திரு லோட்டன் ‘மன்னிக்க வேண்டும் காலோஸ். இந்த கடிதத்தைப் பற்றிய அபிராயத்தை கேட்க நாங்கள் நினைத்தோம். ஆனால் நீங்கள் பதவி விலகுவதாக எழுதி கடிதம் கொடுத்தி;ருக்கிறீர்கள். இதன் அர்த்தம் புரியவில்லை. இந்த இராஜினாமாக் கடிதத்தை நாங்கள் ஏற்கவில்லை.’

உட்கார்ந்திருந்த நாற்காலியை முன்னால் இழுத்துவிட்டு சிரித்தபடி பரந்த தோள்களை அசைத்துவிட்டு சகலரையும் ஒரு சில கணங்கள் கண்களால் காலோஸ் பார்த்துவிட்டு மீண்டும் திரு லோட்டனை நோக்கி ‘நான் பதவியில் இருந்து விலகுவது இந்த விடயத்தால் மட்டுமல்ல. தற்பொழுது சிலர் என்னை இந்தப் பதவியில் இருந்து விலத்துவதற்குப் பல வழியில் முயல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் வைத்தியசாலையில் மற்றவர்கள் என்னில் நம்பிக்கை வைத்து ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் நான் இந்த பொறுப்பில் தொடர்ந்து இருக்கமுடியும். நான் பத்து வருடங்களாக இந்தப் பதவியை என்னால் முடிந்தவரை சரிவரச் செய்திருக்கிறேன். இதைச் செயலாளர் ரொன் ஜொஸ் கூட ஒப்புக் கொள்ளுவார். வேறு ஒருவர் வந்து இந்த வேலையைச் செய்தால் நான் அதற்கு ஒத்துழைப்புக் கொடுப்பேன். அதில் எவரும் எந்தச் சந்தேகமும் படத் தேவையில்லை. இந்த வைத்தியசாலையையும் அதனது நோக்கமும் உன்னதமானவை என்பதால் இதை நடத்தும் உங்களுக்கு என்னால் எதுவித சிரமமும் வராமல் பார்த்துக்கொள்வேன். இப்பொழுது என் மேல் வைக்கப்பட்ட புகாருக்கு வருகிறேன். மாலை ஐந்தே முக்கால் மணி போல் வந்த அந்தப் பூனைக்கு நான் மருந்து கொடுத்து விட்டுத்தான் சென்றேன். ஆனால் எனது தெரிந்தவர் ஒருவரை ஏயர்போட்டில் பார்க்கும் அவசரத்தில் மருத்துவக் குறிப்பு எழுத மறந்து விட்டேன். காலை அந்தப் பூனையை பார்த்ததும் ரிமதி பாத்தோலியஸ்; என்னிடம் வந்து பேசி இருக்கவேண்டும். அதற்குமாறாக என்னில் குற்றம்சாட்டி அந்த உரிமையாளருக்கு ஆத்திரத்தை கூட்டியததால் அந்த மனிதர் எனது விளக்கத்தை கேட்காமல் எனது சேட்டை பிடித்தார். என்னை அடிக்க கையோங்கிய போது நான் என்னைப் பாதுகாக்க முயற்சித்தேன். மேலும் அவசரத்தில் எனது வாயால் புவ்ரா என்ற வார்த்தை வந்தது உண்மை. ஆனால் எனது சேட்டை பிடித்து தாக்க முயற்சித்த பின்புதான் நான் அந்த வார்த்தையைப் பேசினேன்.’

‘அப்படியானால் இதை ஏன் ரொன் ஜொஸ்சிடம் கூறவில்லை? என கேட்டார் லோட்டன்.

‘என்னிடம் இந்தப் புகார் கடிதம் வந்ததாக ரொன் சொல்லி இருந்தால் நான் பதில் கூறலாம். ரோன் நான் குற்றவாளி என முடிவு எடுத்து இந்த புகாரை உங்களிடம் கொண்டு வந்த பின்பு நான் எதுவும் செய்யமுடியாது.’

‘இப்பொழுது என்னால் உமது நிலையை புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த நேரத்திலும் உமது ராஜினாமா கடிதத்தை நீங்கள் மீள்பரிசீலனை செய்தால் நல்லது. இரண்டு கிழமை உங்களுக்கு அவகாசம் தருகிறோம்’ எனக் கூறிய போது ‘நன்றி’ எனக் கூறிவிட்டு காலோஸ் வெளியேறிய போது, ரொன் ஜொய் தலை நிமிர்ந்து பார்கவில்லை. மானம் மரியாதை என்பனவற்றை இழந்து தான் ஒரு சடலமாக இருப்பதாக உணர்ந்தார்.இம்முறையும் காலோஸ் தான் வகுத்த வியூகத்தை உடைத்து வெளியேறியது மட்டுமல்ல தன்னை அந்த பொறியில் சிக்கவைத்து விட்டதாக அவரது மனம் நினைத்தது.

——
சுந்தரம்பிள்ளை ஹெலன் என்ற அந்த பெண்ணுக்கு வாக்களித்தபடி மெல்பேண் குதிரைப் பந்தயத்திற்கு அடுத்த நாளான புதன்கிழமை அந்த ஆபரேசனை செய்ய காத்திருந்தான். முன்பாக உருக்குத்தகடு வைத்து பொருத்திய ஜெர்மன் செப்பேட்டின் நினைவு இடைக்கிடை வந்து மனத்தில் மரம் கொத்தி போல் துளையை போட்டுக்கொண்டே இருக்கும். பல விதத்தில் வைத்தியராக விட்ட தவறுகள் மனத்தளர்ச்சியை கொடுத்த போதும் எதிர்காலத்தில் அந்தத் தவறைப் பாடமாக எடுத்துக் கொள்ள உதவி இருக்கிறது.

சுந்தரம்பிள்ளை தொடர்சியாக அறிந்து கொண்ட உண்மை இந்த வைத்திய துறையில் தவறுகளை மூடி மறைக்க முடியாது. கொலை செய்து விட்டு கடலில் போட்ட சடலம் அடுத்த சில நாட்களில் மீண்டும் அலையால் கரையில் ஒதுங்குவது போன்று தவறுகள் வெளிப்படும். தவறுகள் ஏற்பட்டால் அதை நேர்மையாக எதிர் கொள்ளுவது நேர்மையானது மட்டுமல்ல சிக்கலற்றது என்பது தெளிவாகப் புரிந்து கொண்ட பாடம்.

சுந்தரம்பிள்ளை காலையில் வேலைக்கு வந்ததும் நாய் கூடுகள் இருக்கும் பகுதிக்கு சென்று ரோசி என்ற அந்த ஜெர்மன் செப்பேட் நாயை சென்று பாரத்தான். அது மூன்று கால்களில் நின்றாலும் தனக்கு எதுவும் நடக்கவில்லை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பது போல் நின்றது. வாலை மட்டும் அசைத்தபடி “தேவையில்லாமல் என்னை இந்தக் கூட்டில் போட்டு அடைத்திருக்கிறீர்கள். என்னை சுற்றி நிற்கிற நாய்கள் பைத்தியம் பிடித்தவை போல் இரவு முழுக்க குலைத்துக்கொண்டிருந்தன. இவைகளுக்கு வாய் வலிக்கவில்லையா? கால் உடைந்த எனக்கு வலியை மறந்து ஒரு கண்ணுக்கும் நித்திரை கொள்ள விடவில்லை. அதிலும் எதிரில் நிற்கும் இந்த பொமரேனியன் என்னைப் பார்த்து ஏதோ பேயை பார்த்து குலைப்பது போல் இரவு முழுவதும் தொடர்சியாக குலைத்தது. உண்மையில் என்னைப் பார்த்துத்தான் குலைத்ததா இல்லை நாளை தான் இழக்கப்போகும் ஆண்மையை நினைத்ததால் ஏற்பட்ட சோகத்தால் குலைத்ததா என எனக்குப் புரியவில்லை. இரவு எனக்குத் கிடைத்த சாப்பாட்டை எந்த நாயும் சாப்பிடாது. அப்படியாக வயிற்றை குமட்டும் மணம். ஆனாலும் பசிக்கிறது. என்ன செய்வது என சாப்பிட்டதால் இப்பொழுது வயிறு சரியில்லை. கட புட என வாய்வு வயிற்றுள் ஏதோ எலி ஓடுவதுபோல் சத்தமாக இருக்கிறது. நான் வீட்டுச் சாப்பாடுதான் வழமையாக சாப்பிடுவது. இங்கு எல்லாம் மாறி நடக்கிறது. இப்பொழுது காலை ஒன்பது மணியாகிவிட்டது. காலை ஆகாரம் தரவில்லை. வாயில்லாத எங்களை இப்படி பட்டினி போடுவது இந்த நாட்டில் குற்றமானது. போததற்கு நாக்கை நனைக்க எனக்குப் பச்சைத் தண்ணீர கூடத் தரவில்லை. இது என்ன கொடுமையாக இருக்கிறது” என புலம்வது போல் வாயை அசைத்தது.

சுந்தரம்பிள்ளை திறந்து வைத்த கதவு வழியால் நாய்கள் அடைத்து வைத்த கூட்டுப்பகுதி இருந்த இடத்துக்குள் மக்சி தனது சந்தன கலரான அடர்ந்த வாலை ஆட்டியபடி வந்து சுந்தரம்பிள்ளையின் கால்களை மூக்கால் உராய்ந்து கொண்டு நின்றது. அதன் தலையைத் தடவிய படி ‘மக்ஸி என்ன ஏதாவது சாப்பாடு மிகுந்திருக்குமா என்றா இங்கு வந்தாய்? எல்லா நாய்களும் நக்கி வழித்து விட்டன. உன்பாடு ஏமாற்றம். அது போதாமல் எல்லாக் கூட்டையும் ஒரு பருக்கையில்லாமல் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி இருக்கிறார்கள்.’

‘நான் சாப்பட்டுக்கு வரவில்லை. எனக்கு வயிறு நிரம்பி இருக்கிறது எனக்கூறி மக்ஸி ஏப்பம் விட்டது.’

‘அப்படியானால் ஏன் உள்ளுக்கு வந்தாய்?

‘நீ என்ன செய்ய போகிறாய் எனப் பார்க்லாம் என்றுதான்…“

‘அதென்ன உனக்கு என் மேல் கரிசனை?“

நீ மட்டும்தான் என்னையும் கொலிங்வுட்டையும் புரிந்து கொள்ளபவன் என்பதால் எங்கள் மன வெளிப்பாட்டை உன்னிடம் வாய்விட்டு சொல்ல முடிகிறது. இந்த சுயநலத்தால் உம்மில் எமக்கு கரிசனை.

‘அப்படியா? மக்ஸி டார்லிங்’

‘உனது நண்பன் இப்பொழுது மேலதிகாரியில்லை. உனக்கு சப்போட் இல்லாததால் உனக்கு எதிராக சிலர் சதி செய்கிறார்கள். செய்யும் வேலையை கவனமாக செய்யாவிட்டாலும் கூட செய்த வேலையை திறமையாக எழுதுவது முக்கியம் தெரியுமா?’ உனக்கு எழுதத் தேவையான அளவு ஆங்கிலம் தெரியும் தானே?

‘என்ன நக்கல் போல இருக்கு?’

‘உண்மையான கரிசனை.’

‘மக்ஸி இதெல்லாம் எனக்குத் தெரியும். நீ சொல்லத்தேவையில்லை. என்னை பார்த்துக் கொள்ள என்னால் முடியும். உன்னிடம் இருந்து அறிவுரை பெறும் நிலையில் இல்லை. உன் வேலையைப் பார்த்துக்கொள். எனப் பொரிந்தான்.

‘கொஞ்சம் பொறுமையாகக் கேள். விடயம் புரியும்’

நீ கவலைப்படாதே. எதற்கும் குறையச் சாப்பிட்டு விட்டு அதிகம் நடப்பது உனக்கு நல்லது.’

‘இதைத்தான் எல்லோரும் சொல்லுவீர்கள். அதுவும் எனக்குத் தெரியும்’ எனத் திரும்ப முயற்சித்த போது ‘மக்ஸி திருட்டு முண்டம். உன்னை இந்தப்பகுதியின் உள்ளே வரவேண்டாம் என சட்டம் போட்டது தெரியாதா’ என மல்வின் காலை ஓங்கி அடிப்பது போல் பாவனை செய்த போது ‘போடா குண்டா’ எனக்கூறிவிட்டு மக்ஸி வெளியே சென்றது.

சுந்தரம்பிள்ளை மக்ஸி கூறியதை அலட்சியம் செய்வது போல் வெளிக்காட்டினாலும் மனத்தில் ஒரு கிலேசத்தை உருவாக்கியது. காலோஸ் இராஜினாமா செய்த இடத்திற்கு இன்னும் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. காலோஸ் ஒரு மேலதிகாரியாக நடக்காமல் உற்ற நண்பனாக நடத்துவதும் அவனது வீட்டு விசேடங்களுக்கு அழைப்பது மூலம் நெருங்கிய நட்புணர்வு இருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அந்த உணர்வு வேலைத்தலத்தில் ஒரு பாதுகாப்பாக இருந்தது உண்மை என்பதும் இப்பொழுது அந்த நிலைமை இல்லை என்பதும் ஏற்கனவே புரிந்திருந்தது.

வழக்கமாக செய்ய வேண்டியிருந்த கருத்தடை ஆபரேசன்கள் நாய் பூனைகளுக்கு செய்வதன் மூலம் சுந்தரம்பிள்ளைக்கு அன்றய காலை நேரம் கழிந்தது. மதிய உணவுக்கு மதுச்சாலைக்கு வரும்படி காலோஸ் அழைத்தபோது இன்று நான் வர முடியாது என மறுக்கையில், வழக்கமாக இலேசில் விட்டுப் போகாத காலோஸ் அன்று அன்ருவோடு மட்டும் சென்றது ஆச்சரியத்தை கொடுத்தது. தலைமை மருத்துவர் வேலையிலிருந்து இராஜனாமா செய்த நாளிலிருந்து சுய கழிவிரக்கத்துடன் மற்றவர்களுடன் பேச்சை குறைத்துக் கொண்டது மட்டுமல்ல. நான் பலருக்கு உதவி செய்தேன். தனக்கு ஒருவரும் உதவவில்லை என்ற ரீதியாகக் காலோஸ் பேசிக்கொண்டது சுந்தரம்பிள்ளைக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சாமும் அன்ரூவும் அதற்கு வேறு விளக்கம் கொடுத்தார்கள். மரியாவுடன் காதல் செய்யவே காலோசுக்கு நேரம் போதவில்லை. இந்த நிலையில் தலைமை வைத்தியர் வேலை இல்லாமல் போனது சந்தோசத்தையும் நேரத்தையும் கொடுத்திருக்கும் என்றார்கள். மற்றவர்கள் ஓருவரும் எதுவும் இதைப் பற்றி பேசவில்லை. காலோஸ்சை பிடிக்காதவர்களும் யார் புதிதாக தலைமை வைத்தியராக வரப்போகிறர்கள் என்று ஆவலாக காத்திருந்தார்கள். அதேவேளையில் காலோஸ்சை மீண்டும் பதவி ஏற்கும்படி நிர்வாக குழு வற்புறுத்தலாம் என நினைத்தார்கள். நிர்வாக குழுவில் சகலருக்கும் காலோஸ் மேல் மரியாதை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

மதியத்துக்கு மேல் ரோசிக்கு மயக்க மருந்துக்கு முன்பு கொடுக்கும் வலி போக்கும் மருந்தைக் கொடுத்து விட்டு சுந்தரம்பிள்ளை ஆபரேசன் அறைக்கு அழைத்து வருகையில் ரோசி மெதுவாக மூன்று கால்களால் நடந்து வரும் போது தலையை தடவியபடி அழைத்து வந்தான். பின்பு ஆபரேசனுக்கு தேவையான உபகரணங்களை தயாராக வைத்துவிட்டு எலும்பில் துளை போடுவதற்கான மிசினுக்கு தேவையான காஸ் சிலிண்டரைக் கொண்டு வந்தான். சிலிண்டரில் இருந்து வரும் காற்றுத்தான் எலும்பைத் துளைபோடும் டிரில்யை இயக்குவது. மயக்க வாய்வுகளை பாவிக்கும் இடத்தில் மின்சாரத்தால் இயங்கும் டிரில்லை பாவித்தால் ஏதாவது வெடி விபத்து ஏற்பட சாத்தியம் உண்டு என்பதால் காற்றால் இயங்கும் டிரில் மட்டும் பாவிக்கப்படும்.

‘சாம் தேவையான அளவு அந்த சிலிண்டரில் ஏர் இருக்கிறதா?

‘அப்படித்தான் நினைக்கிறேன். உபரியாக வேறு ஒரு ஏர் நிரம்பிய சிலின்டர் உள்ளது’.

ரோசி இப்பொழுது நிலத்தில் நாலுகால்களையும் நீட்டியபடி படுத்து விட்டது. அதனது கண்கள் கஞ்சா அடித்த மனிதன் போல் கண்கள் உட்சொருகின. கொடுத்த மருந்துகள் வேலை செய்யத் தொடங்கிவிட்டது என உறுதிப்பட்டதும் ரோசியை மேசையில் தூக்கி வைத்து மேற்கொண்டு மயக்க மருந்தை இரத்தக் குளாயில் ஏற்றி முற்றாக மயக்கம் அடைந்தவுடன் தொண்டைக்குள் குளாயை செலுத்தி அந்த குளாயை மயக்க மருந்து வாயுவாக உள்ள மெசினோடு பொருத்தியதும் ஆபரேசனுக்கு தயாரான நிலையை ரோசி அடைந்தது. ஆரம்பத்தில் சுவாசம் அதிகமாக இருந்தது. அதை அவதானித்த மயக்க வாயுவை சிறிது சாம் கூட்டிய போது சுவாசம் மீண்டும் சாதரணமான நிலைக்கு வந்தது. உடைந்த காலில் இருந்து மயிரை சவரம் செய்து அந்தப் பகுதியை பல தடவை நுண்ணியிர் கொல்லி திரவத்தால் சுத்தப்படுத்தி விட்டு ஒப்பரேசன்; மேசையில் கிடத்தி விட்டதும் எனது வேலை முடிந்தது, இனி உன்பாடு என்பது போல் சாம் சுந்தரம்பிள்ளையை பார்த்தான்.

கைளைப் பலமுறை உராய்ந்து கழுவிவிட்டு சுத்தமாக பச்சை கவுனுடன் கண்களைத் தவிர்த்து முகத்தை முழுவதும் மறைத்து மாஸ்க் போட்டு ஆபிரேசனுக்கு தயாராக சுந்தரம்பிள்ளை இருந்தான்.

சுந்தரம்பிள்ளைக்கு இந்த ஒப்பரேசன் ஒலிம்பிக் எடை தூக்கும் பந்தயத்தில் வெற்றியை அடைவதற்காக கடைசியாக தூக்க வேண்டிய எடையை பார்க்கும் அந்த எடை தூக்குபவரது மனநிலை போன்று இருந்தது. முன்பு செய்த தவறான இடத்தில் கால் பொருந்திய அந்த ஜெர்மன் செப்பேட், வைத்தியசாலையின் நீண்ட கொறிடோரில் காலைத் திருப்பியபடி நடப்பதாக நினைவு நிழல் போல் தொடர்ந்து வந்தது. நல்ல சேர்ஜனாக விரும்பும் ஒவ்வொருவர் மனத்தில் எப்பொழுதும் தோல்விகள் வடுக்காளாக தங்கி விடுகின்றன. பல வெற்றியளித்த ஆபரேசன்கள், சந்தித்த மனிதர்கள் ,அவர்களது செல்லப்பிராணிகள் காற்றோடு கலந்து போய்விடுகிறது.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காலோஸ் சொன்னது அந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வந்தது. தவறுகள் விடாமல் தேர்ச்சியடைந்த எந்த வைத்தியரையும் நான் பார்ததில்லை. அந்த தவறுகளும், அந்த தவற்றினால் உருவாகும் மன அழுத்தமும் தான் அடுத்த தவறில் இருந்து உன்னைக் காப்பாற்றுவது. மேலும் இந்த வைத்தியத்துறையின் தவறுகள் மறைக்க முடியாதவை.

ரோசியின் தொடைப்பகுதியை வெட்டி முறிந்த இரு எலும்புத்துண்டுகளையும் தசைகளில் இருந்த தனிமைப்படுத்தியாக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகி விட்டது. இப்பொழுது அந்த எலும்புக்கு இசைவான உருக்குத் தகட்டைப் போட்டு உருக்கு ஸ்குறு ஆணியால் இறுக்கி எலும்பை உறுதிப்படுத்தவேண்டும். உடைவின் இரண்டு பகுதிகளிலும் தலா இரண்டு என நான்கு ஆணிகளைப் போட்டாகி விட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் மூன்று ஆணிபோட்டால்தான் நல்லது என நினைத்துக்கொண்டு டிரில்லை எடுத்தபோது காற்று வரவில்லை. சிலிண்டரில் இருந்து காற்று முடிந்துவிட்டது. டிரில்லை ரோசியின் போர்த்திய உடலில் வைத்து விட்டு இரண்டு கையையும் விரித்து இப்பொழுது என்ன செய்வது என்ற தொனியில் சாமை சுந்தரம்பிள்ளை பார்த்தான்;.

எலும்பை பிடித்து உதவி செய்து கொண்டிருந்த சாம் பரபரப்பாக வெளியே சென்று புதிய ஒரு சிலிண்டரைக் கொண்டுவந்தான். இப்பொழுது அந்தச் சிலிண்டரை மயக்க மருந்து மிசினில் பொருத்துவதற்கு, அந்தச் சிலிண்டரைத் திறப்பதற்கான சாவி வேண்டும். சாவியைத் தேடி போது சாவி இருக்கும் இடத்தில் இல்லை. சாம் மற்றவர்களிடம் விசாரித்த போது சாவியை கடைசியாக பாவித்தது ரீவன் என சொல்லப்பட்டது. எல்லோரும் தங்களுக்கு தெரியாது எனக் கையை விரித்துவிட்டார்கள்.

ரீவன் மாலை ஐந்து மணிக்குத்தான் வேலைக்கு வருவதானதால் அவனால் எதுவித உதவியும் கிடையாது. ரீவனுக்கு அடுத்து சீனியரான நேர்சாக முக்கியமான வேலை வந்தால் சாமிடம் தான் உதவி கேட்பது வழக்கம். இதனால் சாமுக்கு மனத்தில் இது அவமானமாகவும் இருந்தது. தலையறுந்த கோழி மாதிரி அங்கும் இங்கும் ஓடி, சாவியைத் தேடிய சாமைக் கண்டு பலர் அனுதாபத்துடன் உதவி செய்ய வந்தாலும் அந்தச் சிலின்டரைத் திறக்க முடியவில்லை. வைத்தியசாலை முழுவதும் இந்த விடயம் பரவியதால் பலர் தங்களது வேலைகளை விட்டு வந்து நிலமையை வேடிக்கை பார்த்தும் சில அனுதாப வார்த்தைகளை உதிர்த்தும் சாமையும் சுந்தரம்பிள்ளையையும் கொல்லாமல் கொன்றார்கள். அனுதாபப் பார்வைகள் வார்த்தைகளை விட பல மடங்கு கூரானவை. இரத்தம் வழியாமல் கர்வத்தையும் மனத்துணிவையும் குத்திக் கிழித்து கந்தலாக்க கூடியவை என்பதை அன்று உணரமுடிந்தது. எதுவும் செய்யமுடியாமல் அரைவாசியில் நிறுத்தப்பட்ட அந்த ரோசியின் ஆபிரேசனைப் பார்த்தபடி மற்றவர்களின் அனுதாபங்களை ஏற்றுக் கொண்டு மரணவீட்டுக்கு வந்தவர்கள், இறந்தவரின் பிள்ளைகளுக்கு அனுதாபம் தெரிவிப்பதும், அதை பெற்றுக்கொள்ளுவது போன்ற மனநிலையில் சுந்தரம்பிள்ளை அந்த இடத்திலே நின்றான். கணக்காளர் ஜோன் கூட வந்து தனது பங்கிற்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் இதமாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு சென்றார்.

மதிய உணவு அருந்திவிட்டு தாமதமாக காலோஸ் வந்ததும் வழக்கான எக்காளமான சிரிப்புடன் ‘இது என்ன நாடகம் நடக்கிறது?. இவ்வளவு பேரின் உதவி எலும்பை நேராக பொருத்த தேவைப்படுகிறாதா?’ என்றதும் சுந்தரம்பிள்ளைக்கு இதயத்தில் ஊசியாக குத்தியது. என்றாலும். பொறுமையைக் காத்தபடி விடயத்தை விளக்கிய போது ‘ நாலு ஸ்குருவில் எலும்பு குணமாகியதை நான் பார்திருக்கிறேன். எலும்பு முறிவுக்கு இரண்டு பக்கம் தலா இரண்டு ஸ்குறு போட்டாகிவிட்டது. இப்படியே காத்திருந்தால் எலும்பில் தொற்று வந்துவிடும். உடனே ஒப்பரேசனை முடித்துவிடு’

‘இந்த நாய் மிகவும் துடியாட்டமானது; இதற்கு நாலு ஸ்குறு தாங்காது. எப்படியும் இந்த எலும்பு இணையாது.’

‘எலும்பு இணையாது விட்டாலும் மீண்டும் ஆபரேசன் செய்யலாம் எலும்பில் தொற்று நோய் வந்தால் எக்காலத்திலும் எலும்பு இணையாது’

அப்பொழுது சுந்தரம்பிள்ளை காலோசின் ஆலோசனையில் உள்ள உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஓப்பரேசனை நிறுத்தி முக்கால் மணி நேரமாகிவிட்டது. பலர் தியேட்டருக்குள் வந்தும் பேசியும் போனதால் அவர்களது வாய்களில் இருந்து தொற்று கிருமிகள் வர சாத்தியம் உண்டு. புதிய சிலிண்டரை திறக்கும் சாத்தியக் கூறு ரீவன் வரும்வரையில் இல்லை. புதிதாக ஒன்று கடையில் வாங்கி வர நேரமாகும் என்பதால் காலோசின் யோசனையைக் கேட்பதைத் தவிர இப்பொழுது வேறு வழியில்லை. ஆபரேசனை முடித்து தசை, தோல் என்பவற்றை தைத்து விட்டு உடனே எக்ஸ்ரே எடுத்த போது எலும்பு பொருந்தியது போல் இருந்தாலும் மனத்தில் நிம்மதியில்லை. நடந்த விடயத்தை உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டியது தனது பொறுப்பு என்பதால் ‘சாம் தயவு செய்து ஹெலனின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து டயல் பண்ணு. நான் பேசுகிறேன்.’

அடுத்த முனையில் தொலைபேசியில் ஹெலன் கிடைத்தவுடன் சாமிடம் இருந்து பெற்றுக் கொண்டு நடந்த விசயத்தை விளக்கி விட்டு ரோசிக்கு இரண்டு கிழமையில் நாங்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்போம் ஆபரேசன் சரியாகாது விட்டால் திரும்ப ஆபரேசன் செய்வோம். அதனது செலவை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நாளை நீங்கள் வந்து ரோசியைக் கூட்டிக்கொண்டு செல்லலாம் . மிக முக்கியமான விடயம் ரோசியைத் துள்ளாது பாத்துக்கொள்ள வேண்டும்.
அரைமணி நேரத்தால் ரோசி கண்களைத் திறந்தது.

‘சாம் வா நாங்கள் ரோசியைக் கொண்டு போய்க் கூட்டில் விடுவோம்;’

‘என்னை மன்னிக்கவேண்டும் சிவா .நான் அந்தச் சாவியை இருக்கிறதா என பார்த்திருக்கவேண்டும்’

அதுக்கு என்ன செய்வது? இப்படி ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

‘என்னத்தைச் சொன்னாலும் என் மனத்தில் சமாதானம் ஏற்படாது’

சாம் சுந்தரம்பிள்ளையுடன் ரோசியை மீண்டும் நாய்களின் கூட்டுப்பகுதிக்கு ரொலியில் தள்ளிக் கொண்டு சென்றான்.

Advertisements

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s