அசோகனின் வைத்தியசாலை 11

ear
டாக்டர் காலோஸ் சேரத்தை தலைமை வைத்தியர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்காக பலர் முழு மனதாக விரும்பினார்கள். பத்து வருடமாக தலைமை வைத்தியரை திட்டமிட்டு வேலை செய்து அவர் மீது குற்றசாட்டுகளை வைத்துத்தான் வெளியேற்ற முடியும். பலருக்கு அந்த சதிச் செயலில் ஈடுபடுவது விருப்பமில்லை. விரும்பியவர்கள் அதை பகிரங்கமாக வெளிக் காட்ட விரும்பவில்லை. இது புதியதல்லவே? இந்த பொதுவான மனித சுபாவம் வைத்தியசாலையில் வேலை செய்பவர்களிடம் இருந்தது ஆச்சரியமானதல்ல.

இந்த நிலையில் யாராவது ஒருவர் இதற்கான செயல்களை முன்னெடுத்து செல்லவேண்டும்.அவர் திறமையானவாராகவும் இருக்கவேண்டும். குருஷேத்திரத்தில் தளபதியாக பீஷ்மர் நியமிக்கப்பட்டார். அதேபோல இங்கு தளபதி பொறுப்பு வைத்தியசாலையியில் நேர்சாக பல வருடங்களாக வேலை செய்யும் ரீவன் ஸ்ரெயின் மேல் சுமத்தப்பட்டது. ரீவன், டாக்டர் காலோசை வெறுக்கும் ஒருவன். அத்தோடு இப்படியான வேலையை விரும்பி செய்பவன். அவனுக்கு தொழில் சங்க பிரதிநிதியாக அந்த வைத்தியசாலையில் வேலை செய்வது வசதியாகி இருந்தது. பலரை சந்தித்து காலோஸ் சேரத்தின் தவறுகளை சொல்லி அவரை இந்த வேலையில் இருந்து விலக்குது இந்த வைத்திய சாலையின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானது எனவும் அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் காலோஸ் மீது இல்லை என அழகாக பேசி இந்த கழுத்தறுப்பு வேலையை முன்னெடுத்தான். மற்றவர்களை போல் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒருவராக ரீவன் தன்னை காட்டிக் கொள்வதில்லை. சிறுவயதில் வைத்தியசாலையில் சேர்ந்து வேலை செய்வதுடன் ஒருவிதமான ஆத்மார்த்த உறவுடன் வேலை செய்யும் ரீவனை தனிப்பட்ட ரீதியில் வெறுப்பவர்கள் கூட வேலையில் குறை சொல்ல துணியமாட்டார்கள். இந்த வைத்தியசாலையில் அவன் வைத்துள்ள விசுவாசமே அவனுக்கு காலோஸ் மேல் அளவு கடந்த வெறுப்பை உருவாக்கியது.

ரீவன் பதினேளு வயதிலே இந்த இடத்தில் வேலைக்கு சேர்ந்து இப்பொழுது பதினெடடு வருடமாக இந்த வைத்தியசாலையில் வேலை செய்கிறான்.. வைத்தியசாலையில் அதிக காலம் வேலை செய்யும் ரீவன் ஒரு யூத இனத்தை சேர்ந்தவன். அவனுக்கு ஆபரேசன் உபகரணங்கள் மற்றும் எக்ரே மெசினுகளை பற்றி சங்கதிகள் தலை கீழாக தெரியும். எந்த உபகரணம் வேலை செய்யாத போது எல்லோருக்கும் ரீவனது தேவை ஏற்படும். முக்கியமாக இளம் பெண் வைத்தியர்களுக்கு ஆரம்ப காலத்தில் உபகரணங்களால் சங்கடங்கள் ஏற்படும் போது அவனது உதவி தேவைப்படும்.

ரீவன் தொழில்நுட்ப அறிவுடன் அனுபவத்தாலும் பல வைத்திய விடயங்களை அறிந்து வைத்திருப்பதால் லைசென்ஸ் பெறாத மிருக வைத்தியரைப் போல தொழில்ப்பட்டான். இந்த விடயங்களால் காலோஸ்சுக்கும் சாமுக்கும் ரீவனைக் கண்ணிலே காட்டமுடியாமல் இருந்தது. இதை விட சாம் ஒரு இஸ்லாமியன். காலோஸ் ஒரு தீவிர கத்தோலிக்க மதத்தையும் போப்பையும் ஆதரிப்பவன். இப்படி இவர்கள் வெறுப்பில் மத வேறுபாடும் இருக்கலாம் என சுந்தரம்பிள்ளையால் ஊகிக்க முடிந்தது.

மத வேறுபாடுகள் பெரிதாக தலைகாட்டாத இடம் இந்த வைத்தியசாலை. ஆனாலும் இந்த விடயங்கள் கண்களுக்கு தெரியாத போதும் காற்றுப்போல் மத வெறுப்புகள் இருப்பதை பேச்சுகளில் உணர முடிந்தது.

ஒரு நாள் காலோஸ் சுந்தரம்பிள்ளையிடம் ‘நான் மிருக வைத்தியராக வந்திருக்காவிட்டால் கத்தோலிக்க மத குருவாக வந்திருப்பேன’ என்றான்.

அதைக்கேட்டக் கொண்டிருந்த அண்ரு ‘நல்ல வேளை கத்தோலிக்க மதம் தப்பியது’ என்றான்.

‘இப்பொழுது மட்டும் நல்ல நிலையிலா இருக்கிறது. நேற்றுக் கூட அவுஸ்திரேலிய ஆதிவாசிக் குழந்தைகளை பல வருடங்களுக்கு முன் செமினறிகளில் வைத்து கல்வி புகட்டும் போது அவர்கள் மீது பாலுறவு வன்செயல் புரிந்ததாக செய்தி வந்துள்ளதே’ என சுந்தரம்பிள்ளை கூறிய போது அந்த இடத்தில் காலோஸ் இருக்கவில்லை.

மீண்டும் சுந்தரம்பிள்ளை ‘சாமானிய மனிதர்களில் இருந்து மதகுருவாக வந்தவர்கள் காமத்தில் மட்டுமல்ல மற்றய குணங்களிலும் சாதாரணமானவர் போல் தான் நடப்பார்கள். ஆனால் சமுகம் அவர்களிடம் சமூக கோட்பாட்டின் கடிவாளத்தை அவர்களிடம் கொடுத்து நீங்கள் கண்ணியமானவர்களாக நடக்க வேண்டும் என எதிர்பார்கிறது. இந்த எதிர்பார்பு வெறும் கற்பனையால் ஆனது என காலம் காலமாக சகல மத பீடங்கள் நீருபித்த வண்ணம் இருக்கின்றன. என்றான்

‘சிவா நீ மதங்களை வெறுப்பவனா? என்றான் அண்ரு.

‘மதங்கள் மனிதர்களின் மனச்சாட்சியாலும் கனவுகள் மற்றும் இறப்பின் பயத்தால் உருவாகிய ஆன்மீக சிந்தனையின் விளைவாக உருவாகினவை. இந்த சிந்தனை ஒரு பரிணாம வளர்சியாகிறது. மதங்கள் இந்த ஆன்மீக வளர்சியில் தொற்றிய நோய்க்கிருமி போல் சீவிக்கின்றன. அதைக்கூட மனிதர்கள் சக்கரைவியாதி இரத்த அழுத்தம் போன்ற நோய்களுடன் வாழ்வது போல் சகித்துக்கொள்ளமுடியும். இதில் விருப்போ வெறுப்போ எனக்கு இல்லை. ஆனால் மதத்தின் பேரால் காலம்காலமாக நடக்கும் கொடுமைகள் சகிக்கமுடியாதவை.’

‘உண்மையயான வார்த்தைகள். ஆனால் இதைக் கேட்க காலோஸ் இந்த இடத்தில் இல்லை என்பதுதான எனது கவலை என்றான்.’

சுந்தரம்பிள்ளைக்கு ரீவனை சந்தித்த போது விரும்பவோ வெறுப்பதற்கோ மனம் வரவில்லை.காரணம் அது சுந்தரம்பிள்ளையின் இயல்பில்லை. அத்துடன் முதலாவதாக சந்தித்ததும் ~ நீங்கள் தான் புது வைத்தியார? உங்கள் வரவு நல்வரவாகுக எனக் கூறி இறுக்கமாக கையை குலுக்கினான். மெலிந்த தோற்றம் , கலைந்த தலை ,கூர்மூக்கு கொண்டு இடது காதில் காதில் பெரிய வெள்ளி வளையமும் அணிந்து இருந்தான். இடுங்கிய கண்கள், ஒட்டிய கன்னங்கள் ஆனால் தீர்க்கமான பார்வையுடன் அவனை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தியது.பெரும்பாலான நேரத்தில் கையில் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருந்தான்.
ரீவன் பெரும்பாலும் இரவு வேளைகளில் வேலை செய்வதால் அவனை கிழமைக்கு சில தடவைகள் மட்டுமே சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. காலோஸ் சம்பந்தமான விடயத்தில் ரீவன் சுந்தரம்பிள்ளையை அணுகவில்லை.
—-

மாதத்தில் முதலாவது செவ்வாய்கிழமை காலை நேரத்தில் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் மத்திய வங்கி கூட்டம்கூடி நாட்டின் பணப்புளக்கம், வட்டி வீதம் சம்பந்தமான கொள்கைளை மறு பரிசீலனை செய்யும். அந்த கூட்டம் முடிவதற்கு நண்பகல் இரண்டு மணியாகும். நாட்டில் உள்ள சகல தொலைக்காட்சி வானெலி பத்திரிகைகள் அந்த கூட்டத்தின் முடிவுகளை மக்களுக்கு வெளிப்படுத்துவார்கள். இந்த கூட்ட குறிப்புகளில் இருந்து நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் மாதாமாதம் ஏற்படும் மாற்றங்கள் நாட்டில், வழங்கப்படும் வட்டிவிகிதம், மற்றும் நுகர் பொருட்களின் விலையேற்றம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள முடியும். அதை வைத்து சாதாரணமக்கள் வாழ்க்கைத் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. சராசரி அவுஸ்திரேலியன் இந்த செவ்வாய்க்கிழமையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்கிறானே இல்லையோ இந்த நாள் அவனது தலைவிதியை நிர்ணயிக்கும் நாளாகும்.

மாதத்தின் இரண்டாவது செவ்வாய்கிழமை இன்னெரு கூட்டம் ஒன்று மெல்பேனில் இந்த வைத்திய சாலையின் மீட்டிங் அறையில் நண்பகல் இரண்டு மணிக்கு தொடங்கும். மத்திய வங்கி கூட்டம் போல் முக்கியத்துவம் இல்லாத போதும் இந்த வைத்தியசாலையில் வேலை செய்யும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வைத்திய சாலையின் நிர்வாக குழு இரண்டு மணி நேரம் கூடி எடுக்கும் முடிவுகள் முக்கியமானது.

மேல்பேனின் கிழக்கு புறநகர்களில் வாழும் வசதி படைத்தவர்களில் அறுபத்தைந்து வயதுக்கு மேல் வேலைகளில் இருந்து ஓய்வு எடுத்தவர்கள் இந்த நிர்வாக குழுவில் அங்கத்தினராக இருக்கிறார்கள். இவர்களில் பலர் முதுமையால் நடக்க முடியாத போதும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். பெண்கள் பெரும்பாலானவர்கள் உயர்ந்த தோற்றம் அளிக்க உயர்ந்த குதியோடு கூடிய பாத அணியுடன் சிறிதளவு கூனியபடி முழங்காலுக்கு கீழே வரையும் மறைக்க மேற்சட்டை அணிந்திருப்பார்கள். கடும் சிவப்பான உதட்டுசாயமும் மூக்கு கண்ணாடியும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். அவர்களின் சராசரி வயது எழுபத்தைந்து இருக்கும். சுருக்கமாக சொன்னால் அகதா கிரிஸ்டியின் கதைகளில் வரும் மிஸ் மாப்பிள் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு தகுதியை பெற்றிருப்பார்கள். பெரிய தொகையை இந்த வைத்தியசாலைக்கு அளித்தவர்களாக இருப்பார்கள்.

இந்த செவ்வாய்கிழமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வைத்தியசாலையின் வழக்கமான நிர்வாகம் சம்பந்தமான விடயங்களோடு தலைமை வைத்தியரைப் பற்றிய புகார் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது என்ற விடயம் அங்கு வேலை செய்வோர் எல்லோரிடமும் செய்தியாக பரவியிருந்தது. எப்படி இப்படியான விடயங்கள் வெளித் தெரிகின்றன என்பது புதிரானது.

புகார் செய்தவர்களே இந்த பரப்புரைகளையும் செய்திருக்க வேண்டும் என நினைப்பதற்கு காரணம் உண்டு. ஒருவனை தண்டிப்பதற்கு முன்பு அவனை துர்நடத்தையை வெளிப்படுத்தி அவன் மற்றவர்கள் மத்தியில் தண்டனைக்கு உரியவன் என்ற கருத்தை உருவாக்கிய பின்புதான் தண்டனை வழங்கவேண்டும் என்பது மிகப் புராதனமான கருத்தியல். ஏதோ காரணத்தால் அவன் தண்டனையில் இருந்து நிரபராதி என தப்பித்தாலும் கூட இந்த பிரசாரம் அவனுக்கு பாதிப்பை அளித்துவிடும். இந்தப் பாதிப்பால் தன்னம்பிக்கை, சுற்றத்தின நம்பிக்கையை இழந்து விடுகிறான். இந்த நம்பிக்கையில் காலோஸ்சுக்கு எதிரான புகார் விடயத்தையும் புகார் கொடுத்தவர்கள் வெளியில் கசிய விட்டிருப்பார்கள்.

அந்த செவ்வாய்கிழமை காலை பத்து மணியளவில் வழக்கம் போல் இரண்டாவது ஆலோசனை அறையில் ஒரு லபிரடோர் நாயை பரிசோதித்துக் கொண்டு சுந்தரம்பிள்ளை இருக்கும் போது திடீர் என பின்பக்க கதவால் கொலிங்வூட் உள்ளே வந்தது.

லாபடோரின் கழுத்தில் வேறு ஒரு நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்தை கழுவுவதற்கு மட்டுமே தேவையாக சிறிதளவு மயக்கமருந்து கொடுத்து விட்டு, காயத்தை கழுவிக் கொண்டிருந்த போது அந்த நாய் அசையாமல் கண்களை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. ஆனால் அரை மயக்கத்தில் இருந்த லாபிரடோர் கொலிங்வுட்டைக் கண்டதும் உடனே தலையை உயர்த்தி குரைத்தது. ஆனால் மயக்க மருந்தால் கால்களை நிமிர்த்தி எழும்ப முடியவில்லை.

எல்லோரிடமும் நட்புடன் வாலையாட்டியபடி வளைய வரும் இந்த லபிரடோர் நாய்களுக்கு ஏன்தான் பூனைகளை தங்கள் ஜன்ம விரோதிகளாக நினைக்கின்றன?.

‘கொலிம்வூட் வெளியே போ’ என்று துரத்திய போது கொலிங்வூட் வந்து சுந்தரம்பிள்ளையின் காலை பிராண்டியபடி ‘உடனே வா . இது எமேர்ஜன்சி’

‘நான் மயக்கமடைந்த நாயை விட்டு விட்டு வரமுடியாது. உன்னை மாதிரி ஓசியில் சாப்பிடுபவன் அல்ல. வேலை செய்ய வேண்டும்’.

இந்த மாதிரி சுந்தரம்பிள்ளை பூனையுடன் பேசுவதை பாரத்து வியப்புடன் சிரித்தபடி நின்றாள் அந்த லப்பிரடோரின் பெண் உரிமையாளர். லப்பிரடோர் அரைமயக்கத்தில் இன்னும் இருமுறை வைவ் வைவ் என்றது. கோலிங்வுட் விடுவதாக இல்லை. முன் இரண்டு கால்களையும் பாவித்து சுந்தரமூர்த்தியின் பாண்ட்டை இழுத்தது. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்சியாக வேலையை செய்த போது கொலிங்வூட் இப்பொழுது நகத்தால் காலை பிராண்டியதால் நகங்கள் கால்களில் கீறத் தொடங்கியது. என்ன என்றுதான் என சென்று பார்ப்போம் என நினைத்து அந்த உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே வந்த சுந்தரம்பிள்ளை கொலின்வூட்டை பின்பற்றி பல் வைத்திய அறைக்கு சென்றபோது அங்கு கண்ட காட்சி சுந்தரம்பிள்ளையை அதிர வைத்தது.

அந்த சிறிய அறையில் பல் வைத்திய உபகரணங்கள் ,மேசை, காஸ் சிலண்டர் என்பன வைக்கப்பட்டிருப்பதால் அதிக இடம் இல்லை. திறந்த கதவின் உள்மூலையில் மட்டும் இரண்டு பேர் நிற்க இடம் உள்ளது. அந்த மூலைக்குள் கொலிங்வூட் பாய்ந்து சென்றது. அங்கு சுந்தரம்பிள்ளை கண்களைத் திரும்பிய போது சாம் வலது கையின் இரண்டு கைவிரல்கள் ரீவனது இடது காதில் அணிந்துள்ள பெரிய வெள்ளி வளையத்துக்குள் கொக்கியபடி இருந்தன. சாமின் கையை பிடித்தபடி அழாக்குறையாக ரீவன் விடும்படி மன்றாடினான். கோலின்வூட்டுக்கு பின்னால் சென்ற சுந்தரம்பிள்ளையை இருவரும் எதிர்பார்கவில்லை.

‘சாம் தயவு செய்து ரீவனை விட்டு விடு’

‘இந்த பாஸ்ரட்டுக்கு என்ன துணிவு இருந்தால் என்னை காலோஸ்சுக்கு எதிராக கையெழுத்து கேட்பான்.’ என்று விரல்களை எடுக்காமல் கேட்டான்.

நல்லவேளையாக வேறு ஒருவரும் அந்த நிகழ்சியை பார்க்க முடியாத மறைவான மூலையாக இருந்தது.

‘தயவு செய்து விரல்களை எடு சாம்’ என்று மீண்டும் கடுமையான குரலில் கூறிய போது சாம் விரல்களை எடுத்தான்

‘ரீவன் நீங்கள் போகலாம் என்ற சுந்தரம்பிள்ளைக்கு அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனது முகம் இரத்த சிவப்பில் இருந்தது. அது கோவத்தில்லோ அல்லது அவமானத்திலோ அல்லது இரண்டாலும் இருக்கலாம்..

‘ஏன் இப்படி செய்தாய். ரீவன் காது பிய்ந்திருந்தால் வீண் பிரச்சனையாகி இருக்கும்.’

‘பயப்பட வேண்டாம் நான் வெருட்டவே அப்படி செய்தேன். என்னை கொரிடோரில் வைத்து கடிதத்தில் கையெழுத்து வைக்கும்படி கேட்ட போது மெதுவாக உள்ள வர சொல்லி விட்டுத்தான் செய்தேன் ஆனால் இந்த சம்பவம் எப்படி உங்களுக்கு தெரியும்?’

சாமின் சிரிப்பில் ஒரு சாதனையாளன் மற்றும் திருடன் என ஐம்பது வீதம் கலந்து இருந்தது,

‘இதோ இந்த கொலிஙவூட் தான் எமேர்ஜன்சி என என்னைக் கூப்பிட்டது.’

‘பிளடி கொலிங்வூட’

‘நீ கொலிங்வுட்டுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டி இருப்பாய். நான் மயக்கமடைந்த நாயின் புண்ணை சுத்தப்படித்திக் கொண்டிருந்தேன். கொலிங்வுட் நகத்தால் பிராண்டி அழைத்ததால் நான் அரைவாசியில் வந்தேன்.’

—–

நண்பகல் இரண்டு மணிக்கு முன்பாக சகல குழு அங்கத்தினரும் வந்து விட்டனர். செயல் குழு அங்கத்தவர்கள் வந்ததும் சடங்கு சம்பிரதாயம் போல் சில வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆண்கள் பலர் வைத்தியசாலையை சுற்றிப் பார்ப்பார்கள். கூட்டில் அடைக்கப்பட்டு அனாதையாக எத்தனை நாய்கள் பூனைகள் புது உரிமையாளருக்காக காத்திருக்கிறது என்பதை அறிவது அவர்களுக்கு முக்கியமான ஒரு விடயமாக இருக்கும்.

மெல்பேனில் பல காரணங்களால் பராமரிக்க முடியாத மற்றும் வீடுகளில் இருந்து தப்பியோடும் நாய்களும் பூனைகளும் இங்கே கொண்டு வரப்படும். அவை விக்டோரிய மாநில சட்டத்துக்கேற்ப ஒரு கிழமை வைத்து பாராமரிக்கப்படும். இதில் நோய் உற்றவை, வயதானவை, மூர்க்க குணம் உள்ளவை ஏழு நாட்களின் பின் கருணைக்கொலை செய்யப்படும். மற்றவையை சுவீகாரத்துக்காக இங்கே கூடுகளில் இருக்கும். இவைகளின் எண்ணிக்கை காலத்துக்கு காலம் வேறுபடும். மார்கழி, தை போன்ற விடுமுறை மாதங்களில் எண்ணிக்கை கூடிவிடும். அஸ்திரேலியாவில் விடுமுறைகாலத்தில் உரிமையாளர்கள் விடுமுறைக்கு போவதால் இப்படியான வீடுகளை விட்டு தங்களுக்கும் சுதந்திரமான விடுமுறையை நாடி ஓடிய நாய்கள், பூனைகள் தெருக்களில் ஓடும் வாகனங்களுக்கு உயிர் தப்பும் போது இங்கு கொண்டு வரப்படும். ஆண்விலங்குகளும் பெண்விலங்குகளும் மனிதர்களின் எல்லைகளையும் கட்டுப்பாடுகளை மீறும் இனப்பெருக்க காலத்திலும் இந்த வைத்தியசாலையின் அவைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது.

செயற்குழு அங்கத்தினரான திருமதி கிளிபேட் பூனைகளை விரும்புவர். அவர் பூனைகளை வைத்திருக்கும் பகுதிக்கு சென்று சிலவற்றை எடுத்து மார்போடு அணைத்து முத்தம் கொடுத்து அவர்களோடு கலந்துரையாடல் செய்வார். இவரது அன்புத் தொல்லையை பல பூனைகள் விரும்பினாலும் சில விரும்புவது இல்லை. கூட்டில் தங்களது சுதந்திரத்தை தொலைத்து விட்டு சிறையில் இருப்பது போன்ற மனஅழுத்தத்தில் இருப்பவை. இப்படியான அணைப்புகளை விரும்பாததால் சீறுவதும், கீறுவதும் ஆக புரட்சியில் ஈடுபடும். திருமதி கிளிபேட் பல முறை நகங்களாலும் பற்களாலும் கீறப்பட்டு, கடிக்கப்பட்டு இரத்த காயமடைந்துள்ளார். இதற்காக பூனைப்பகுதில் வேலை செய்யும் ஹெதரும், மோரினும் செவ்வாய்க்கிழமை காலையிலே பூனைக் கூட்டில் எச்சரிக்கையாக அணைப்புகளை விரும்பாத பூனைகளை அடையாளம் கண்டு அவைகள் இருக்கும் கூடுகளில் ‘இவைகளை தொடவேண்டாம்’ என எழுதிப் போட்டுவிடுவார்கள். இந்த செய்கையால் திருமதி களிபேட்டின் காயங்கள் குறைந்தாலும் முற்றாக தடை செய்ய முடிவதில்லை.. ஹெதருக்கம் மோரினுக்கு சாதுவாக காட்சியளித்து விட்டு திருமதி கிளிபேட்டை மட்டும் வெறுக்கும் பூனைகள் இந்த மெல்பேனில் இருக்கத்தான் செய்கின்றன.

பூனைகள் நாய்களோடு ஒப்பிடும்போது விசித்திரமான குணம் உடையவை. தங்களுக்கு உணவு தேவைப்பட்தால் மனிதனைத் தேடி வந்து வீட்டு மிருகமானவை. அவைகளின் சரித்திரம் நாய்களில் இருந்து வேறுபடுகிறது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்ப மனிதர்கள் வேட்டையாடுவதிலும், காய்கனிகளை தேடுவதிலும் சலிப்படைந்ததாலோ இல்லை பற்றாக்குறை நிலவியதாலோ விவசாயத்தின் மூலம் உணவைப் பயிரிட்டான். அடுத்த வருடத்திற்கு உபரி தானியங்களை மீண்டும் விதைத்து பயிர் வளர்த்தான்.

மேற்காசியா எனப்படும் தற்போது ஈராக் மற்றும் சிரியா என்ற பகுதிகளில் முதல் முறையாக உணவை பயிரிட்ட நிலப்பண்பாடு கொண்ட மனித குலம் வாழ்ந்தது. உணவு தானிய உற்பத்தியாக கோதுமை அங்கேதான் பயிரிடப்பட்டது.

மனிதர்கள் மிருகங்களை காட்டில் தேடிப் போய் பிடித்து தமது தேவைக்காக வீட்டில் ஆடு, மாடு, குதிரை என வேறு காலகட்டத்தில் வளர்த்தார்கள். ஆனால் பூனைகள் உணவுக்காக மனிதர்களை நாடிவந்து வீட்டு மிருகங்களாகின. இன்றும் தனது உணவு நேரம் வரும்போது மனிதர்களின் கால்களில் உராய்ந்து உணவு கேட்டு அருந்தி விட்டு தன்பாட்டிலே போய்க் கொண்டிருக்க பூனைகளின் சந்தர்ப்பவாதமான குணத்தில் பத்தாயிரம் வருடங்கள் சென்றாலும் சிறிதளவாவது மாற்றமில்லை.

தானியங்களை உற்பத்தி செய்துவிட்டு அதில் தனது குடும்பம் உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உபரியானதை சேமித்து எதிர்காலத்துக்காக வைத்த போது அதை நாடி வந்த எலிகளைத் உணவாக உண்ண தேடி வந்த பூனைகள் அப்படியே வீடுகளில் தங்கிக் கொண்டு வீட்டுப் பெண்களின் செல்லப்பிராணியாகி தங்களையும் வீட்டு மிருகமாக்கி கொண்டன. வயலுக்கு விவசாயத்துக்கு ஆணுடன் போகாத பெண்களுக்கு துணையாக இருந்தன.

திருமதி கிளிபேட் பூனைகளின் மேல் கரிசனையுடன் இருப்பதுபோல் திருமதி ரிச்சாட் நாய்களின் இரசிகை. அவர் குறைந்த பட்சம் செயற்குழுக் கூட்டத்திற்கு அரைமணிக்கு முன்பாக வந்து ஒரு நாயையாவது சங்கிலியில் கட்டி தெருவால் பதினைந்து நிமிடமாவது நடந்த பின்பு தான் அவரது பொச்சம் தீரும். அப்படி ஒன்றை நடத்தி கொண்டு போகும் போது அந்த நாய்க்கு கழுத்தில் ஒரு ஸ்காவ் போன்ற துணியை கட்டி அலங்கரித்தபடிதான் வெளியே தெருவுக்கு கொண்டு செல்லுவது வழக்கம் அவரது இந்த செய்கையை பலருக்க சிரிப்பை உண்டாக்கும். ஆனால் அவர் இதை பற்றி சிறிதும் பொருட்படுத்துவதில்லை.

திருமதி ஓச்சட் டாகடர் காலோஸ் சேரத்திடம் தனது ரொய் ஸ்னுசர் நாயை கொண்டு வந்து ஒவ்வொரு மாதமும் வைத்திய ஆலோசனை கேட்பார் அவரை பொறுத்தவரை டாக்டர் சேரம் மடடும்தான் மிருகவைத்தியம் தெரிந்தவர் அவருக்காக பல நிமிட நேரம் காத்திருந்து ஆலோசனை பெறுவார். வைத்திய சாலையில் உள்ள மற்றவர்கள் எழுபத்தைந்து வயதான திருமதி ஓச்சட்டுக்கும் நாற்பது வயதான டாக்டர் சேகரத்திற்கும் ஆத்மரீதிதான காதல் உள்ளதாக தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

அன்று நடந்த நிர்வாக குழு கூட்த்தில் இளைப்பாறிய அக்கவுண்டன்ட் திரு லோட்டன் தலைமை தாங்கினார். வழக்கமான அன்றாட விடயங்களோடு புதிய விடயமாக வைத்தியசாலைக்கு பக்கத்தில் உள்ள ரயர் கடையிருக்கும் நிலம் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் அதை வாங்கினால் பழய வைத்தியசாலையை இடித்து விட்டு புதிய வைத்தியசாலையை கட்டலாம் என்ற விடயம் எடுத்துக்கொளளப்பட்டது. அறுபது வருடமாக இருந்த பாரம்பரியமான கட்டியத்தை இடிப்பதற்கு பலருக்கு உடன்படு இல்லை. பல செயற்குழு மீட்டிங்கில் இந்த விடயம் பேசப்பட்டு உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. ஆனால் பக்கத்து நிலத்தை வாங்குவதில் ஒருவருக்கும் எதிர் கருத்து இருக்கவில்லை.

ஒரு மணி நேரமாக இந்த விடயம் அலசி ஆராயப்பட்டது. இதன் பின்பு இந்த வைத்தியசாலைக்கு டொனேசன் கொடுப்பவர்களுக்கு வருமானவரி விலக்கு எடுப்பதும் மற்றய அரைமணி நேரம் பேசப்பட்டது. இந்த விடயம் இலகுவானது அல்ல. அவுஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கமே இந்த வரிவிலக்கு விடயத்தை தீர்மானிக்க முடியும். காலம் காலமாக மனிதர்களுக்கு தொண்டாற்றும் நிறுவனங்களுக்கே இந்த வரிவிலக்கு உள்ளது. இந்த வழக்கத்தை மாற்றி சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த பாராளமன்ற அங்த்தவர்கள் பலரிடம் பேசவேண்டும். இதற்கு ஒரு செயற்குழு அமைத்து செயற்படவேண்டும் என முடிவு எடுக்கப்பட்து.

தொடர்ச்சியாக நடந்த மீட்டிங்கில் பலர் களைத்து போய்விட்டார்கள். திருமதி ஒச்சாட்டுக்கு இரண்டு நிமிடம் தொடர்ந்து பேசினால் மூச்சு வாங்கும் . சிலர் மட்டும் கேக்குகளை உண்ணும் போது பலர் அவற்றை தொடவில்லை. அவர்களுக்கு சக்கரை வியாதி இருக்கலாம். தேநீரை அருந்த தொடங்கும் போது ‘இன்னும் ஒரு விடயம் இருக்கிறது. அதை பற்றியும் பேசவேண்டும் என ஆரம்பித்தார். செயலாளர் ரொன் ஜோஸ். அவரது தோல்பையில் இருந்து ஒரு கோப்பு உருவி வெளியே எடுக்கப்பட்டது.

‘என்ன? என விளித்தார் லோட்டன்

‘டாக்டர் சேரத்திற்க்கு எதிராக புகார் வந்திருக்கு’

‘என்ன மாதிரியான புகார்’மீணடும் லோட்டன்

‘பெண்களை இழிவாக நடத்துவதாகவும் பெண்களை துன்புறுத்துவதாகவும் இதில் எழுதப்பட்டிருக்கு.

‘யார் இதை கையெழுத்து இட்டு இருக்கு?’

‘இதில் பெண்கள் சிலர் கையெழுத்திட்ருக்கிறரர்கள்.அத்துடன் ரீவன் ஸ்ரெயின் டாகட்ர் ரிமதி பத்தோலியஸ் கையெழுத்துதுப் போட்டிருக்கிறார்கள்.’

‘இது ஒரு குப்பை. டாக்டர் காலோஸ் சேரத்தை எனக்கு நன்றாக தெரியும். பதினைந்து வருடங்களாக இந்த வைத்தியசாலையில் வேலை செய்கிறார். அவர் இப்படி எதுவும் செய்யப்கூடிய மனிதரில்லை’ எனக் கூறிவிட்டு திருமதி ஓச்சட் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார்..

அவரது வாதத்தை பெரும்பாலான பெண் அங்கத்தினர் ஆமோதித்து தலையாட்டினார்கள் திரு லோட்டன் சிறிது சிந்தித்து விட்டு ‘இதைப்பற்றி காலோஸ்சிடம் கேட்டீர்களா?

‘கேட்டேன். அப்பொழுது அவர் இது ரிமதியும் ரீவனும் தனிப்பட்ட விரோதத்தால் தனக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்றார்.’

‘நாங்களும் காலோஸ்யை அழைத்து கேட்டால் இதே போல்தான் பதில் வரும். மேலும் இந்த குற்றசாட்டுகளில் எதுவும் பிரத்தியேகமாக எவராலும் வைக்கப்படாமல் பொதுவானதாக இருப்பதால் இதை இப்படியே விடுவது தான் நல்லது’ என்று லோட்டன் விளக்கியபோது எல்லோரும் ஆமோதித்தார்கள.;

‘பத்துவருடங்கள் தலைமை வைத்தியராக எந்த பிரச்சனையும் இல்லாது இந்த வைத்தியசாலையை ஒழுங்காக நடத்தும் ஒருவரை நாங்கள் கௌரவிக்க விட்டாலும் அவமானப்படுத்தக் கூடாது’ என்று திருமதி ஓக்சட் சொல்லியபோது அதுவே அந்த நிர்வாக குழுவின் கடைசி வார்தையாக இருந்து.

ரொன் ஜொஸ் முகத்தில் சிறிது ஏமாற்றம் நிழல் ஆடியது. காலோஸ்யை குறைந்த பட்சம் நிர்வாக குழுக்கூட்டத்தில் விசாரித்திருக்கலாம் என்பது அவரது அபிப்பிராயமாக இருந்துது. இதே நேரத்தில் ஓய்வுபெற சில மாதங்களே இருக்கும் போது தனது அபிபிரயத்தை வெளிக்காட்டி அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென்பதால் இது விடயததில் மேலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் அவர் தயாரில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: