தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை.

IMG_5392jeevapooமுருகபூபதி

படைப்பிலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்களினதும் கலைஞர்களினதும் பிரதான கடமை குறித்து தீவிரமாக சிந்தித்து செயலாற்றவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் அரசியல்வாதிகளும், பேரினவாதிகளும் எவ்விதம் செயற்பட்டபோதிலும், மேலே குறிப்பிட்ட மூன்றுபிரிவினரும் இனநல்லுறவு, மதநல்லிணக்கம், இனமதமொழிவேறுபாடற்ற மனிதநேயம் என்பனபற்றி அக்கறையுடன் கலந்துரையாடவேண்டியது அவசியம்.
குறுகிய சிந்தனைகள்தான் மக்களை பிரிக்கும் அல்லது பிளவுபடுத்தும் சாத்தான். அந்த சாத்தானை ஓட ஓட கலைத்துவிடவேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு மூலகாரணமாக இருப்பது மொழி மற்றும் இனம்சார்ந்த விவகாரங்கள்தான். ஆனால் மனிதநேயம் அனைவருக்கும் பொதுவானது.
நீரிழிவு, புற்றுநோய், எயிட்ஸ் உட்பட பல உலகப்பிரசித்திபெற்ற நோய்கள் அல்லது உடல் உபாதைகள் எவருக்கும் வரலாம். ஒரு நோய் ஒருவரைத்தொற்றிக்கொள்ளும்பொழுது அவரது இனம் ,மதம், மொழி, பிரதேசம் பார்ப்பதில்லை. அதுபோன்று நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர் (டொக்டர்) தன்னிடம் வரும் நோயாளியை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால்தான் கருணையுடன் சிகிச்சைக்கு உட்படுத்தி குணமடைவதற்கு பணியாற்றுகிறார்.
அந்த வகையில் படைப்பாளிகளும் (writers) ஊடகவியலாளர்களும் (journalists) கலைஞர்களும் (Artists) மக்களிடம் உருவாகும் இனமுறுகல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தொண்டர்களாகவேண்டும். அவர்கள தமது படைப்புகளின் ஊடாக நஞ்சை விதைத்தால் அந்த நஞ்சு இறுதியில் அவர்களையே அழித்துவிடும்.

ஒரு இனத்தின் தனித்துவம், அடையாளம், மொழி, மற்றும் கலாசாரம் என்பன பிற இனத்திற்கு கலை, இலக்கியம் ஊடாகவே தெரியவரும். உதாரணமாக ஐரோப்பிய மொழி இலக்கியங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆங்கில மொழி இலக்கியங்கள் மற்றும் ஆபிரிக்க இலக்கியங்கள் ஊடாக அந்தந்த நாட்டின் இனங்களின் அடையாளம், பண்பாடு, சிந்தனை என்பவற்றை எமது தாய்மொழியில் தெரிந்துகொள்வதற்கு மொழிபெயர்ப்புகள் பெரிதும் உதவியிருக்கின்றன.

நாம் ஷேக்ஸ்பியரையும், லியோ டோல்ஸ்ரோயையும், தாஸ்தாயெவெஸ்கியையும், மக்சிம் கோர்க்கியையும் டி.எச். லோரன்ஸையும், மாப்பசானையும், கலீல் ஜிப்ரானையும், நஸ்ருல்இஸ்லாமையும், ஹெமிங்வேயையும் சினுவா ஆச்சுபேயையும் ஆங்கிலமொழி ஊடாகவே தெரிந்துகொண்டமைக்கு முக்கிய காரணம் அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள்தான்.

தமிழ், சிங்கள வாசகர்கள் ஆங்கிலத்திலிருந்து அவர்களின் எழுத்துக்களை தத்தம் தாய்மொழிகளுக்கு மொழிபெயர்த்து தெரிந்துகொண்டோம். அதுபோன்று இலங்கையரான சிங்கள, தமிழ், முஸ்லிம்மக்களும் பரஸ்பரம் மொழிபெயர்ப்புகளின் ஊடாக சகோதர இனங்களின் அடையாளத்தையும் கலாசாரத்தையும் உணர்வுகளையும் தெரிந்துகொள்ளமுடியும்.
ஓர் இனத்தை அடக்குவதன் மூலம் மற்றுமொரு இனம் சுதந்திரமாக வாழமுடியாது என்பது ஒரு சத்தியவாக்கு. ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை அல்லது மனைவியை கணவன் அடக்கி ஆள முயன்றால் அந்தக்குடும்பத்தின் ஆரோக்கியம் சீர்கெட்டுப்போய்விடும் என்பது சாதாரண எளிய உதாரணம். அதனால்தான் நாம் வாழும் அவுஸ்திரேலியா போன்ற முன்னேற்றமடைந்த நாடுகள், மனித உரிமையும் மனிதநேயமும் அவசியம் என்று வலியுறுத்திவருகின்றன.

இலங்கையில் சிங்கள – தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்காகவும் இனநல்லிணக்கத்திற்காகவும். பல இலக்கியவாதிகள் அயராமல் தொண்டாற்றியிருக்கிறார்கள்.

இலங்கையில் முன்னர் சுமார் 30 வருடகாலமாக தமிழ்மக்கள் செறிந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்திலிருந்தும் பின்னர் சுமார் 17 வருடகாலமாக மூவின மக்களும் செறிந்து வாழும் கொழும்பிலிருந்தும் வெளியான மல்லிகை கலை, இலக்கிய மாத இதழ், இனஒற்றுமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவந்தது. அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா ஒரு முற்போக்கு இலக்கியவாதி. இலங்கையில் முதல் முதல் தமிழ் சிறுகதை இலக்கியத்திற்காக (தண்ணீரும் கண்ணீரும்) தேசிய சாகித்திய விருது பெற்றவர். அவரது மல்லிகை இதழ்களில் சிங்கள இலக்கியவாதிகள் மார்டின் விக்கிரமசிங்கா, எதிரிவீர சரச்சந்திரா, குணசேனவிதான, கே. ஜயதிலக்க, ஜி.பி. சேனாநாயக்கா, ஆரியரத்ன விதான, கருணாசேன ஜயலத், குணதாஸ அமரசேகர, மககமசேகர உட்பட பலரதும் படைப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

அத்துடன் இவர்களில் சிலரதும் தமிழ் அபிமானியான வண.ரத்னவன்ஸதேரோ, சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர்ஜேம்ஸ் பீரிஸ், நாடகக்கலைஞரும் இயக்குநருமான ஹென்றி ஜயசேன, நூல் பதிப்புத்துறையைச்சேர்ந்த சுமணசிறிகொடகே ஆகியோரதும் படங்களை மல்லிகையின் முகப்பில் பதிவுசெய்து அவர்தம் நேர்காணல்களையும் அவர்களைப்பற்றிய அறிமுகக்கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறது.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழில் தெனகமசிறிவர்தன, குசும்அறம்பத், பிலேமினா தில்றுக்ஷி, அரவிந்த சந்திரபத்ம, அமரபால கறசிங்ஹ ஆரச்சி, அஜித்பெரகும் ஜயசிங்க, முதலானோரின் பல சிங்களச்சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன. பெரும்பாலான கதைகளை ஆறுமுகம் தங்கவேலாயுதம் தமிழுக்குத்தந்துள்ளார். திக்குவல்லை கமாலும் சில கதைகளை ஞானம் இதழில் தமிழுக்கு வரவாக்கியுள்ளார். இதுவரையில் 150 இற்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிட்டு தொடர்ந்தும் வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி.ஞானசேகரன்.யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழில் ஜயந்த தர்மசிறீ விதான என்பவரின் சிறுகதையை திக்குவல்லை கமால் தமிழில் தந்துள்ளார். ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன்.மட்டக்களப்பிலிருந்து வெளியாகும் மகுடம் என்னும் காலாண்டிதல் மஞ்சுளவெடிவர்தனவின் கவிதைகளை தமிழுக்குத்தந்துள்ளன. அவற்றை மொழிபெயர்த்தவர் ஃபஹீமாஜகான் ஆனால் இந்தத்தகவல்கள் எத்தனை சிங்கள வாசகர்களுக்குத்தெரியும் என்பதுதான் என்போன்றவர்களின் கவலை.
மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, சிங்களப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளை மட்டுமல்ல, பல சிங்கள இலக்கியமேதைகளின் உருவப்படங்களையும் மல்லிகையின் முகப்பில் பதிவுசெய்து, அவர்களுக்கு கௌரவம் வழங்கியிருக்கிறார்.
இந்தப்பணியில் அவர் அயராமல் தொடர்ந்தவர். அதனாலும் அவருக்கு சாகித்தியரத்னா விருதும் கிடைத்தது. அத்துடன் தேசத்தின் கண் என்ற விருதையும் பெற்றவர். இந்த அதியுர் விருதுபெற்ற மற்றவர் விஞ்ஞான எழுத்தாளர் ஆதர் ஸி கிளார்க்.
இலங்கைப்பாரளுமன்றத்தில் அவரது சேவைகுறித்து பாராட்டிப்பேசப்பட்டது. அவரது பல சிறுகதைகளின் தொகுப்பு .பத்ரசூத்தய என்ற பெயரில் சிங்களத்தில் வெளியாகியது. மொழிபெயர்த்தவர் இப்னு அசூமத்.

கடந்த ஆண்டு (2012) இறுதியில் இலங்கைக்கு நான் சென்றிருந்தவேளையில், நான் ஏற்கனவே எழுதியிருந்த சிறுகதைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து சிங்களத்தில் மொழிபெயர்த்;து வெளியிட எனது இனிய இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால் முயற்சிசெய்தார். அவரது நண்பரும் முன்னாள் பாடசாலை அதிபருமான கராமத் என்பவர் சிங்களத்தில் மொழிபெயர்த்த மதகசெவனலி என்ற நூலை ஆனமடுவ தோதன்ன பதிப்பகம் வெளியிட்டது. இந்தப்பதிப்பகத்தை நடத்தும் சிட்னி மார்க்கஸ் டயஸ் என்ற சிங்கள அன்பரும் ஒரு படைப்பிலக்கியவாதி.

அத்துடன் ஏற்கனவே பல தமிழ் சிறுகதைகள் மற்றும் நாவல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள இனநல்லுறவின் அபிமானியான மடுளுகிரியே விஜேரத்தின அவர்கள் அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நொயல் நடேசனின் வண்ணாத்திக்குளம் என்ற நாவலை சமணலவௌ என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்த்தார்.
இந்நாவல் ஏற்கனவே தமிழில் இரண்டு பதிப்புகளை கண்டுவிட்டன. அத்துடன் வண்ணாத்திக்குளம் நாவலை ஆங்கிலத்தில் (Butterfly Lake) என்ற பெயரில் கொழும்பில் பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் விஜித்தயாப்பா வெளியிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் நல்லைக்குமரன் குமாரசாமி.
தற்பொழுது இந்த நாவலை இலங்கையில் தொலைக்காட்சி நாடகமாக தயாரிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்தக்கதையை சிங்களத்திலும் தமிழிலும் தயாரிக்கமுடியும். இனநல்லுறவுடன் அரசியலும் காதலும் பேசும் நாவல் அது.

மற்றுமொரு நடேசனின் தமிழ் நாவல் உனையே மயல்கொண்டு (Lost in you) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியானது. அதனை மொழிபெயர்த்தவர் சென்னையைச்சேர்ந்த பார்வதி வாசுதேவ். குறிப்பிட்ட இந்த மூன்று நூல்களின் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்வில் மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கியவாதிகள், கலைஞர்கள். ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பின்னர் சில நாட்களில் கொழும்பில் இயங்கும் கொடகே பதிப்பகத்தில் பணியாற்றும் சிங்கள இலக்கியவாதி உபாலி லீலாரத்தின என்பவரின் மொழிபெயர்ப்பில் தமிழக எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் சக்கரை லண்டனில் வதியும் வவுனியூர் உதயணனின் பனிநிலவு, மன்னார் உதயணின் லோமியா, சடகோபனின் தேயிலை சாயம் என்பன சிங்களத்தில் வெளியிடப்பட்டன.

கொடகே பதிப்பகத்தின் அதிபர் திரு. சுமணசிறிகொடகே என்ற அன்பர் மூவின இலக்கியவாதிகளினாலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு கனவான். அவர் தமிழ்ப் பதிப்பகங்களை நடத்தும் தமிழர்களுக்கு முன்மாதிரியான பெருமகன் என்று சொன்னாலும் அது மிகையில்லை.
தமது கொடகே பதிப்பகத்தின் ஊடாக தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடுகிறார். அத்துடன் வருடாந்தம் தமிழ்ப்படைப்பாளிகளை தெரிவுசெய்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்குகிறார். ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக அவர்தொடரும் இந்த ஆக்கபூர்வமான பணி விதந்துபோற்றுதலுக்குரியது.

2010 ஆம் ஆண்டு ஜனவரியில் அவரது முன்னிலையில் கொழும்பு பொதுநூலக கேட்போர் மண்டபத்தில் திக்குவல்லை கமால் இலக்கிய சந்திப்பொன்றை நடத்தினார். அதில் டொமினிக்ஜீவா, மேமன்கவி, அந்தனிஜீவா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மாவை நித்தியானந்தன், நடேசன், உபாலி லீலாரத்தின, தெனகம ஸ்ரீவர்த்தன, மடுளுகிரியே விஜேரத்தின உட்படப் பலர் கலந்துகொண்டனர். அன்றைய சந்திப்பின் தொடர்ச்சியாகத்தான் 2011 ஜனவரியில் கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இடம்பெற்ற மொழிபெயர்ப்பு அரங்கு. இந்த அமர்வின் அமைப்பாளராக இயங்கியவர் திக்குவல்லை கமால். நிகழ்வுக்குத்தலைமை தாங்கியவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். குறிப்பிட்ட கருத்தரங்கில் அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள் சிலரின் தமிழ்க்கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் (Being Alive ) வெளியிடப்பட்டது. இலங்கையின் பிரபல திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் குறிப்பிட்ட நூலை விமர்சித்து உரையாற்றியதுடன் ஆங்கில ஊடகங்களில் தாம் எழுதும் பத்திகளிலும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட மாநாட்டு கருத்தரங்கு முடிவுற்று சில நாட்களில் கொழும்பில் இருக்கும் கொடகே நிறுவனத்தில் அதிபர் திரு. சுமணசிறி கொடகே அவர்கள் வெளிநாட்டுப்பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்துபசாரம் நடத்தி உபசரித்தார்.

இலங்கையில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொடர்பாக எழுதநேர்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் மேற்படி தகவல்களையும் பதிவுசெய்துகொள்ள விரும்பினேன்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிந்தளவுக்கு இலங்கையில் இனநல்லிணக்கத்தை கலை, இலக்கியவாதிகள் ஊடாக மேற்கொள்வதற்கு அரும்பாடுபட்டது. மகாகவி பாரதியின் சில கவிதைகளை சிங்களத்தில் பாரதி பத்ய என்ற பெயரில் மொழிபெயர்த்து பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது.

கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியாற்றிய கே.ஜி. அமரதாஸ என்பவரும் திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ரத்னநாணயக்காரவும் பாரதி பத்ய நூலில் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். கே.ஜி. அமரதாஸவும் ஒரு தமிழ் அபிமானி. சரளமாகத்தமிழ் பேசுவார். பேராசிரியர் கைலாசபதி மறைந்தபோது வீரகேசரியில் தமிழில் அஞ்சலிக்கவிதை எழுதியவர்.

ஹனிபா என்ற முஸ்லிம் எழுத்தாளர் மகாகவி பாரதியின் சுருக்கமான வரலாற்றை சிங்களத்தில் வெளியிட்டிருக்கிறார். பாரதி நூற்றாண்டு காலப்பகுதியில் இந்நூல்கள் வெளியாகின்.

அமரதாஸ மறைந்தபொழுது அவரைப்பற்றிய விரிவான கட்டுரையை எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் எழுதியிருக்கின்றேன்.

லேக்ஹவுஸ் வெளியீடான சிலுமின பல தமிழ் இலக்கியப்படைப்புகளை சிங்களத்தில் வெளியிட்டுள்ளது. அண்மைக்காலத்தில் அவுஸ்திரேலியா மெல்பனில் வெளியாகும சிங்கள இதழ்களான பஹன, கடப்பத்த என்பனவும் தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியிட்டுவருகின்றன.

மேற்குறித்த தகவல் பின்னணிகளுடன், நண்பர் திக்குவல்லைகமால் எனக்கு முடிந்தவரையில் திரட்டித்தந்துள்ள சிங்கள – தமிழ் மொழிபெயர்ப்புகளின் பட்டியலை இங்கு பதிவுசெய்யவிரும்புகின்றேன்.

சிங்களப் படைப்பின் பெயர் முதலாவதாகவும் அதன் ஆசிரியரின் பெயர் அடைப்புக்குறிக்குள்ளும், அதனையடுத்து படைப்பின் தமிழ் ஆக்கமும் அடுத்து மொழிபெயர்த்தவர் பெயர் அடைப்புக்குறிக்குள்ளும் இடம்பெறும் விதமாக
இந்தப்பட்டியலை இங்கு தருகின்றேன்
1. கம்பெரலிய (மார்டின் விக்கிரமசிங்க) கிராமப்பிறழ்வு ( எம்.எம். உவைஸ்)
2. கொழுஹதவத்த (கருணாசேனஜயலத்) ஊமைஉள்ளம் (தம்பிஐயா தேவதாஸ்)
3. சரித்த துனக் ( கே.ஜயதிலக்க) மூன்று பாத்திரங்கள் (தம்பிஐயா தேவதாஸ்)
4. விராகய (மார்டின் விக்கிரமசிங்க) பற்றற்ற வாழ்வு ( சுந்தரம் சௌமியன்)
5. மடோல்தூவ (மார்டின் விக்கிரமசிங்க) மடோல்த்தீவு ( சுந்தரம் சௌமியன்)
6 பாலம யட்ட (குலசேன பொன்சேக்கா ) பாலத்தின் அடியில் (சுந்தரம் சௌமியன்)
7 தீர்க்க கமண (குணசேகர குணசோம) நெடும்பயணம் ( மடுளுகிரியே விஜேரத்தின.)
8 அஹஸ்பொலவ லங்வெலா (ரஞ்சித் தர்மகீர்த்தி) சங்கமம் ( எம்.எச்.எம்.யாக்கூத்)
9 குருபண்டுரு ( தெனகம ஸ்ரீவர்தன) குருதட்சனை ( திக்குவல்லை கமால்)
10 பவஸரன ( சிட்னி மார்க்கஸ் டயஸ்) தொடரும் உறவுகள் (திக்குவல்லை கமால்)
11 தயாபேனலாகே ஜயக்கிரான (விமலதாஸ முதலிகே) வெற்றியின் பங்காளிகள் (திக்குவல்லை கமால்)
12 ஆகாஸகுசும் (பிரசன்ன விதானகே)ஆகாயப்பூக்கள் (ரவிரட்ணவேல்)திரைப்படச்சுவடி.
13 பலா (சிங்கள சிறுகதைகள்) வலை (மடுளுகிரியே விஜேரத்தின.)
14 திதஸ (சேபாலி மாயாதுன்னை ) சொர்க்கம் ( மடுளுகிரியே விஜேரத்தின)
15 வப்மகுல (சோமரத்தின பலசூரிய) ஏர்விழா (மடுளுகிரியே விஜேரத்தின)
16 வெடிஹண்ட ( குணசேகர குணசோம ) நெடும்பயணம் (மடுளுகிரியே விஜேரத்தின)
17 சிங்களச்சிறுகதைகள் (சிங்கள எழுத்தாளர்களின் கதைகள்) நாளையும் மற்றும் ஒரு நாள் ( எம்.ஸி. ரஸ்மின்)
18 அம்மா எனதுட்டு ( சிட்னி மாக்கஸ் டயஸ்) அம்மா வரும்வரை (திக்குவல்லை கமால்)
19 பினிவந்தலாவ ( உபாலி லீலாரத்தின) விடைபெற்ற வசந்தம் (திக்குவல்லை கமால்)
மேலும் பல சிங்கள நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. நாவலியூர் சோமசுந்தரப்புலவரின் பேத்தி சரோஜினி அருணாசலம் டி.பி.இலங்கரத்தினாவின் அம்பயஹலுவோ என்ற நாவலையும் வேறும் பல சிங்கள சிறுவர் இலக்கிய நூல்களையும் தமிழுக்குத்தந்துள்ளார்.
அடுத்து தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை பார்ப்போம்
1. சிறுகதைகள் (டொமினிக்ஜீவா) பத்ரபிரசூத்திய (இப்னு அசூமத்)
2. சிறுகதைகள் (ஜெயகாந்தன்) கொடிகஸ்ஹந்திய ( உபாலி லீலாரத்ன)
3. அவர்களுக்கு வயது வந்தவிட்டது(அருள். சுப்பிரமணியன்) எயாலாட்ட வயச எவித் (திக்குவல்லை சபருள்ளா)
4. தெரியாத பக்கங்கள் ( சுதாராஜ்) நொபனென பெதி (மொஹமட் ராசூக்
5. உதயபுரம் (திக்குவல்லை கமால்) உதயபுர (அடஸ் பியதஸ்ஸி)
6. நோன்புக்கஞ்சி ( திக்கவல்லை கமால்) குருபண்டுற ( ஏ.ஸி.எம் கராமத்)
7. தமிழ்ச்சிறுகதைகள் – பதிபிட (மடுளுகிரயே விஜேரத்தின)
8. தமிழ்ச்சிறுகதைகள் – உறுமய ( மடுளுகிரியே விஜேரத்தின)
9. நான் எனும் நீ (கவிதைகள்) மமத ஒபமவெமி ( மடுளுகிரியே விஜேரத்தின)
10. செ.யோகநாதன் (துன்பக்கேணியில்) நிரய மடுளுகிரியே விஜேரத்தின)
11. சுதாராஜ் ( கவிதாவின் பூந்தோட்டம்) கவிதாகே மல்வத்தை மொஹமட்ராசூக்
12. தி.ஞானசேகரன் (குருதிமலை) சுவாமிநாதன் விமல்
13. தமிழ்ச்சிறுகதைகள் – சுளிசுலங்க ஏ.ஸி.எம் கராமத்
14. ஜெயகாந்தன் ( தேவன்வருவாரா – சிறுகதைகள்) – போனிக்கா ஏ.ஸி.எம் கராமத்
15. திக்குவல்லை கமால் ( உதயக்கதிர்கள்) ராழியா – ஏ.ஸி.எம்.கராமத்
16. திக்குவல்லை கமால்(கண்ணீரும் கதைசொல்லும்)கந்துல கதாவ –ஏ.ஸி.எம் கராமத்
17. பத்மாசோமகாந்தன் ( கடவுளின் பூக்கள்) தெய்யன்கே மல – உபாலிலீலாரத்தின.
18. சுதாராஜ் (நகரத்திற்கு வந்த கரடி) நகரயட ஆவ வலஸ் – மொஹமட்ரசூக்
19. நீர்வைபொன்னையன் (சிறுகதைகள்) லென்ஹத்துகம – ஜி.ஜி.சரத் ஆனந்த
தவிர செ.கணேசலிங்கனின் நீண்டபயணம், தமிழக எழுத்தாளரகள் கு.சின்னப்பாரதியின் அரங்கம், புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், டென்மார்க் ஜீவகுமாரனின் சங்கானைச்சண்டியன் ஆகியனவும் சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் மொழிபெயர்ப்புத்துறையை சிறப்பாக வளர்த்தெடுப்பதற்காக விபாஷா என்ற மொழிபெயர்ப்பு இயக்கமும் செயல்படுவதாக அறியமுடிகிறது. இந்த இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.சிவகுருநாதன் இந்தப்பணியில் அர்ப்பணிப்போடு இயங்குகிறார்.
இந்த ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஆங்கில, சிங்கள மொழிகளில் வெளிவந்தால் இனநல்லுறவு குறித்து சிந்திக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிறந்த பயனைத்தரும் என நம்புகின்றேன். அத்துடன் எனக்கு கிடைக்கப்பெற்ற அல்லது அறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஆக்கத்தை எழுதுகின்றேன். தவறவிடப்பட்ட குறிப்புகள் இருப்பின் தெரிந்தவர்கள் எழுதலாம்.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக இலங்கை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக எழுந்திருக்கும் எழுச்சி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் தமிழ்ப்பேரபிமானிகள், தமிழ்இனக்கொழுந்துகள், சிங்களவருடன் இணைந்து வாழத்தூண்டும் இந்திய காங்கிரஸ்காரர்களை செருப்பால் அடிக்கவேண்டும் என்றெல்லாம் சூளுரைக்கின்றார்கள். ஆனால் அங்கிருக்கும் தமிழ்ப்படைப்பாளிகளும் கலைஞர்களும் இதழ் ஆசிரியர்களும் அதற்கெல்லாம் மௌனசாட்சிகளாகியிருப்பதுதான் கவலைக்குரியது.

அவர்கள் ஒரு விடயத்தை தெரியாமல், அறியாமையில் மூழ்கியிருப்பதாகவே தெரிகிறது.
தமிழகம், தமிழ் உலகிற்குத்தந்த திருவள்ளுவரின் திருக்குறளும் பாரதியின் கவிதைகளும் தமிழகத்தின் ஆளுமைமிக்க படைப்பாளிகள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு. சின்னப்பாரதி முதலானோரின் படைப்புகளும் இலங்கையில் சிங்களமொழியில் கிடைக்கின்றன.
கர்நாடகா மாநிலத்துடன் தமிழகத்திற்கு காவிரி நீர்ப்பிரச்சினை இருந்தபோதிலும் கன்னட இலக்கியங்கள் பல தமிழுக்கு வரவாகி தமிழகத்தில் வரவேற்புபெற்றுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் காண்டேகரையும் சிவராம் கரந்தையும், யூ. ஆர் அனந்தமூர்த்தியையும், பைரப்பாவையும் தெரிந்துகொண்டது தமிழில் இருந்துதான்.
அதுபோன்று இலங்கையில் சிங்கள வாசகர்கள் வள்ளுவரையும், பாரதியையும் புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும், சின்னப்பாரதியையும் தெரிந்துகொண்டது சிங்கள மொழி மூலம்தான்.

மீண்டும் இந்த ஆக்கத்தின் தொடக்கத்திற்கு வருகின்றேன்.
படைப்பாளிகளும் (Writers ஊடகவியலாளர்களும் (Journalists) கலைஞர்களும் (Artists) மக்களிடம் உருவாகும் இனமுறுகல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தொண்டர்களாகவேண்டும்.

“தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை.” அதற்கு 3 மறுமொழிகள்

  1. This article may be translate in to Sinhala news paper in SL,
    HK

    1. My friend Murugapoopathy asked Upali Leelaratna to tranlate the article. Noel

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: