அசோகனின் வைத்தியசாலை 10

7657-9_comp_SQ2012.inddசுந்தரம்பிள்ளைக்கு தொடர்ச்சியாக இரண்டு பகல் வேலை செய்துவிட்டு அதன் பின் தொடர்ந்து இரவு வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, அதன் பின்பாக இரண்டு நாட்கள் கிடைத்த ஓய்வின் பின்னர் நீங்கியதோடு புத்துணர்வை அளித்தது. வேலை இடத்தில் வேலை செய்பபவர்களை மனத்திற்கு பிடித்துக் கொண்டுவிட்டதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.

காலையில் வழக்கம் போல் வோட் றவுண்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. சாமுடன் தீவிர சிகீச்சை பிரிவுக்கு சென்ற போது அங்கேயுள்ள கூட்டில் பக்கவாட்டில் படுத்தபடியே ஆவுஸ்திரேலியாவில் மாட்டுப் பண்ணைகளில் வேலை செய்யும் ஒரு ஆண் நாய் படுத்து கிடந்தது. அது சுந்தரம்பிள்ளை சாமுடன் உள்ளே வந்ததால் ஏற்பட்ட கதவின் ஓசை கேட்டு தலையைத் திருப்பி பார்த்தது. அதன் கண்களில் வரவேற்பு உணர்வு தெரியாத போதும் வெறுப்பு தெரியவில்லை. பெரிய மருத்துவ ஆஸ்பத்திரிகளில் கான்சர் என்ற குணமடையாத நோய் பீடித்தவர்கள் இருக்கும் வாட்டின் பக்கம் போய் நாம் பார்க்க போனவரை பார்த்து விட்டு மற்றவர்களைப் பார்த்தால், அவர்கள் கண்களில் எதையும் பொருட்படுத்தாத ஏகாந்தமான தன்மை தெரிவதை அவதானிக்க முடியும். நாங்கள் எப்படியும் சில நாட்களில் இறக்கப்போகிறோம். இந்த மனிதனின் அறிமுகம் நமக்கு தேவையற்றது என்ற உணர்வு அவர்கள் கண்களில் தெரியும். அதே மாதிரியான உணர்வைத்தான் சுந்தரம்பிள்ளையால் அந்த நாயின் கண்களில் உணரமுடிந்தது.

வந்தவர்களை அடையாளம் கண்டுகொண்டேன் என நினைத்து விட்டு கூண்டின் உட்பக்கம் மீண்டும் தலையை திருப்பிக் கொண்டது.

புளுகீலர் என சொல்லப்படும் அந்த நாய்கள் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் சிதறியோடும் பண்ணை மாடுகளை கணுக்காலின் கீழ் பகுதியில் கடித்து நிரைப்படுத்தும். அவை கடிக்கும் போது இரத்தம் வடியாது. ஆனால் வலி ஏற்படும். அதிகம் குரைக்காது, அமைதியாக செயலில் ஈடுபடும் இந்த நாயொன்று இரண்டு மனிதர்களின் வேலையை செய்யும். அக்காலத்தில் இருவர் குதிரையிலும் இக்காலத்தில் மோட்டார் சைக்கிளிலும் முன்னே செல்லும் போது இரண்டு நாய்கள் பின்னாலே ஆயிரம் மாடுகளை ஒன்று சேர்த்து நிரைப்படுத்தி பட்டிக்கு கொண்டு செல்லும் காட்சியை வட அவுஸ்திரேலிய மாட்டுப் பண்ணைகளில் காணலாம் . இந்த நாய்கள் உரிமையாளர்களுக்கு மிக்க நன்றி விசுவாசம் உள்ளவையாக இருக்கும். மாடுகளின் பிரசவவேளையில் நரிகள், காட்டு நாய்களிடம் இருந்து கன்றுகளை பாதுகாக்கும். ஆயிரக்கணக்கில் இறைச்சி மாடுகள் உள்ள பண்ணையில் ஒரே நேரத்தில் திறந்த வெளியில் இரவு பகல்லென பல மாடுகள் கன்றுகளை ஈனும் போது மனிதர்களால் காவல் இருக்க முடியாது. இந்த நாய்கள் இன்றியமமையாத துணையாக பண்ணையாளருக்கு இருக்கின்றன. இந்த நாய்கள் மேலும் ஆரோக்கியமானதாக திறந்த வெளிகளில் சிவிப்பதும் பல மைல் தூரம் நடக்கவும் தோதான உடல் வலிமை உள்ளவை. இந்த நாய்கள் நகரப்புறத்தில், வீடுகளின் பின் வளவுகளில் வளர்க்கும் போது பயிற்றப்படாமல் கடிநாய்களாககவும், உடற் பயிற்சியற்ற குண்டு நாய்களாக மாறிவிடுகின்றன.

அந்த புளுகீலரின் நோய் குறிப்பை பார்த்த போது வாகனத்தில் செல்லும் போது வெளியே பாய்ந்ததால் நடந்த விபத்தில் முன்காலும் பின்காலும் முறிந்திருக்கிறது. இடது பின்னங்கால் தொடையில் உருக்கு பிளேட் ஒன்றையும் வலது முன்னங்ககாலில் உருக்கு கம்பியையும் வைத்து ரிமதி பாத்தோலியஸ்சால் சிகீச்சை செய்யப்பட்டிருந்தது.

சுந்தரம்பிள்ளையால் அந்த நாயை அடையாளம் காணமுடிந்தது. இரண்டு நாட்களின் முன்பு ஆபரேசன் தியேட்டரின் இந்த நாயைதான் ஆபரேசன் செய்து கொண்டிருந்தான். அந்த வேளை முள்ளம்தண்டைப்பற்றி கேட்டதும் ஆத்திரப்பட்டு மதுச்சாலைக்கு சென்றதைக் குறிப்பிட்டான். இது திறமையாக செய்ய வேண்டிய கடினமான வேலையானதால் இதை செய்ய பல மணி நேரங்கள் எடுத்திருக்கும்.. இப்படியான வேலைகளால் தலைமை வைத்திய காலோஸ்ககும் ரிமதிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

அந்த பகுதிக்கு பொறுப்பாக இருந்த ஜோனை அழைத்து ஜோன் இந்த நாயின் உடலை அடுத்த பக்கம் திருப்பி விட்டிர்களா என கேட்டபோது ‘ ஆம் ஆனால் அதனது உடல் பகுதி அதிக அசைவில்லை. மேலும் கடிக்க வருகிறது.’ என்றான்.

‘காலும் கையும் உடைந்திருந்தால் நீ கூட அப்படித்தான் இருப்பாய் ஜோன்’ என்றான் சாம்

‘சாம், நாயின் தலையில் பெரிய பெட்சீட்டால் மூடு’ என்றதும் சாம் அருகில் இருந்த பெரிய தடிப்பான பெட்சீட்டால் தலையில் போட்டு அமர்த்தியதும் சுந்தரம்பிள்ளை நாயின் அருகே குனிந்து கையில் இருந்த கத்திரிக்கோலின் பிடியால் ஒன்றன் பின் ஒன்றாக வலது , இடது முழங்கால் சிரட்டையின் சிறிது கீழே மெதுவாக அடித்தான். அந்த இரண்டு பின்னங்கால்களிலும் எந்த அதிர்வும் ஏற்படவில்லை. ஏற்கனவே ஏற்பட்ட சந்தேகத்தை உறுதி செய்ய பின்னங்கால்களின் விரல்களில் பலமாக கிள்ளினான்;. எதிர்பார்த்தது போல் எந்த அதிர்வும் இல்லை. ஆனால் முன்னங்கால்களின் விரல்களில் கிள்ளிய போது உடனே கால்களை உள் இழுத்து வலியின் உணர்வுகளை காட்டியது.

‘இந்த நாயின் முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டதால் பின்னங்காலில் உணர்வு இல்லை என்றான் சுந்தரம்பிள்ளை. அவனது மனத்தில் ஒரு பெருமிதம் நிழலாடியது. ரிமதியின் தவறான செய்கையை இங்கு வெளிவந்துவிட்டது

‘இது ரிமதியின் வேலை. அப்பிடியே அவரிடம் பொறுப்பு கொடுப்போம்.’ என்றான் சாம்

‘இன்று மாலை ஐந்து மணிக்குத்தான் ரிமதி வேலைக்கு வருகிறான். இந்த வாட் இரவுண்டை முடித்து விட்டு எக்ஸ்ரே எடுப்போம்.’

வாட் இரவுண்டை முடித்ததும் அந்த புளு கீலருக்கு மயக்க மருந்தை கொடுத்து தள்ளு வண்டியில் தூக்கி வைத்து தள்ளியபடி இருவரும் வந்தபோது எதிரே வந்த காலோசிடம் ‘இது ரிமதியின் வேலை. முதுகெலும்பு முறிந்த நாய்க்கு கால்களை பொருத்தி இருக்கிறார்’ என்று சாம் கூறியதும் ‘அப்ப இதுவே ரிமதி பாத்தோலியஸசின் பெரிய சாதனையாக இருக்கும்’ என்ற சொன்ன போது காலோசுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனாலும் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு ‘எக்ஸ்ரேயை எனக்கு கொண்டு வரவும்’ என சொல்லி விட்டு போனான்

எக்ஸ்ரேயை எடுத்ததும் தானே அதை டெவலப் பண்ண இருட்டறையுள் சென்றான் சுந்தரம்பிள்ளை. இரண்டு முறை எக்ஸரே எடுத்த போதும் அந்த படம் அதிக துலக்கமாக இருக்கவில்லை . ஒன்று அதிக கறுப்பாகவும் மற்றயது வெள்ளையாகவும் இருந்ததால் அவற்றை எறிந்து விட்டு மூன்றாவது முறையாக டெவலப் பண்ணியதும் முதுகெலும்பில் நெஞ்சுக்கும் இடுப்புக்கும் இடையில் உள்ள ஏழு நாரி எலும்புகளில் மேலிருந்து மூன்றாவதுக்கும் நாலாவது முதுகெலும்புக்கும் இடைப்பகுதி சிறிது விலகி இருந்தது.அந்த இடத்தில் எலும்புக்கிடையில் இருக்கும் டிஸ்க்கெனும் பகுதி வெளித்தள்ளி இருந்தது. இதைப் பார்த்ததும் ரிம்மின் தவறால் அவன் அவமானப்படப் போவது சுந்தரம்பிள்ளைக்கு மனத்துக்கு மகிழ்சியை கொடுத்தது. பழி வாங்கும் மனித உணர்வு மிக அடிப்படையான தொன்று. சாதாரண மனிதர்களில் இருந்து படித்தவர்கள் என இந்த உணர்வில் வேற்றுமையில்லை. கூனியின் பழிவாங்கும் உணர்வு இராமாயணத்தை தந்தது. இதே உணர்வு சுந்தரம்பிள்ளைக்கு தோன்றியதில் வியப்பில்லை. ஆனால் நாகரீகமடைந்த சமூகத்தில் அதற்கு வேறு காரணங்களும் காட்டப்படவேண்டும்.

இவ்வளவு விரைவில் ரிமதி பாத்தோலியஸ்சுடன் ஒரு குத்து சண்டையில் ஈடுபட வேண்டும் என சுந்தரம்பிள்ளை நினைத்திருக்கவில்லை. அறிவுசால் தொழில் செய்பவர்கள் தொடர்ச்சியாக அறிவை விருத்தி செய்வது அவசியம் அதிலும் மருத்துவ சிகீச்சை விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு நினைப்பு. நாம் எப்பொழுதும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டவர்களில்லை. தொடர்ச்சியாக புதியவற்றை அறிந்து கொள்ளளுதல் அவசியம். மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொள்ள எப்பொழுதும் வாய்ப்பு உண்டு. இதைத்தான் இரண்டாவது கருத்தை அறிந்து கொள்ளுதல் என்று மருத்துவத்தில் கூறுவார்கள். பத்துக்கு மேற்பட்ட மிருகவைத்தியர்கள் வேலைசெய்யும் இடத்தில் இரண்டாவது கருத்தை ஒருவரிடம் கேட்டு அறிந்து கொள்ளும் வாயப்ப்பை பயன்படுத்தாத தனது செயலுக்கான விலையை ரிமதி பாத்தோலியஸ் கொடுக்கும் நேரம் வந்தது. அவனது கெட்டகாலம் எனது வடிவில் வந்துள்ளது என சிவா சுந்தரம்பிள்ளை நினைக்க வைத்தது
ஆபிரேசன் செய்து கொண்டிருக்கும் போது முதுகெலும்பு பிரச்சனையை சுந்தரம்பிள்ளை எழுப்பியபோது அதைப் பற்றி பேச ரிம்மினது கர்வம் இடம் கொடுக்கவில்லை. கால்களில் உருக்கு பிளேட்டை வைத்து எலும்பை பொருத்திய பின் அதை எக்ஸ்ரேயில் எடுத்த போது முதுகெலும்பையும் எக்ஸ்ரே எடுத்திருக்கலாம்?

கர்வமா அல்லது அலட்சியமா?.

எதுவாக இருந்தாலும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். தவறுகள் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. விதைத்த பயிர்போல் அவை அறுவடைக்கு வந்தே தீரும். அவற்றை அலட்சியம் செய்வது இந்த தொழிலில் நன்மை பயக்காது.

இந்த நாயின் கால்களில் உணர்வு இல்லை என்ற தகவல் உரிமையாளருக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் ஆபரேசன் செய்ய முன்பு இதை ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்பதற்கு திருப்திகரமான காரணம் உரிமையாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்;. ஆப்பிரேசன் செய்த ரிமதி பாத்தோலியஸசின் தவறாக இருந்தாலும் இறுதியில் வைத்தியசாலையே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த பிரச்சனையை சுந்தரம்பிள்ளை எதிர் நோக்கிய போது அனுபவசாலியான சாமின் கருத்து உதவிக்கு வந்தது. ‘தலைமை வைத்தியரான காலோஸ் சேரத்திடம் விட்டு விடுவோம். காலோஸ்சுக்கு இது அதிர்ஸடவசமாக கிடைத்த ஆயுதம். ஏற்கனவே ஸ்ரிவனும் ரிமதியும் பலரிடம் கையெழுத்து கடிதம் காலோஸ்க்கு எதிராக மறைமுமாக சேகரித்து வருகிறார்கள். எதிர்வரும் செவ்வாய்க்கிழமைகளில் நடக்கவிருக்கும் போட் மீட்டிங்கில் அவற்றை சமர்பிப்பதற்கதற்கு தயாராகிக் கொணடிருக்கிறர்கள் என்ற விடயத்தை எற்கனவே பலர் காலோசின் காதில் போட்டு வைத்திருக்கிறார்கள்.’

‘சாம் இந்த யுத்தத்தில் யார் தோற்றாலும் அதன் விளைவாக பலர் காயமடையப் போகிறார்கள். என்பதுதான் முக்கியமான விடயம்’ என சுந்தரம்பிள்ளை கூறிவிட்டு ,நாயை சாம்முடன் கூட்டுக்கு அனுப்பி விட்டு எக்ஸ்ரேயை கொண்டு காலோசை பார்க்க சென்றான். நான் இங்கு வந்து சில நாட்களில் இந்த யுத்தத்தில் பங்காளியாக இருக்க வேண்டியதாக உள்ளது. இங்கே பாண்டவர்கள் நல்லவர்கள் துரியோதனர்கள் கெட்டவர்கள் என்பது போல் பிரித்து பார்க்க முடியாது. அப்படியான கருப்பு வெள்ளைத் தன்மை இதிகாசத்துக்கு சரியாக இருக்கலாம். இந்த நிகழ்காலத்தில் அப்படியான நிலை இல்லை. இரண்டு பக்கத்திலும் நல்லவர்கள்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பார்கள். கெட்டவர்களில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கிறது. இதேபோல் நல்லவர்கள் என கருதப்படுபவர்கள்; வாழ்க்கையிலும நுளைந்து பார்த்தால் இருள் சூழ்ந்த பகுதி உள்ளது. இதை மேலும் நுட்பமாக அணுகும் போது ஒவ்வொருத்தரிலும் நல்லது கெட்டதும் கலந்து இருக்கும் என்பதே நவீன காலத்தில் பொருத்தமானது. சுந்தரம்பிள்ளையின் குறுகிய வாழநாள் காலத்தில் இலங்கை ,இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பல பாகங்களிலும் வேலை செய்தபோது அறிந்து கொண்ட உண்மை.

தலைமை வைத்தியரான காலோஸ் சேகரத்தைத் தேடிய போது வைத்தியசாலையின் செயலாளரின் அறையில் இருப்பதாக அன்ரு மூலம் அறிந்து அங்கே சென்று கதவைத் தட்டிய சுந்தரம்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அந்த வைத்தியசாலையை கொண்டு நடத்தும் முகாமைத்துவத்தின் செயலாளர் ரொன் ஜொய்ஸ், கணக்காளர் ஜோன் லிஸ்மோரும் இருந்தனர்.

‘நான் பின்பு சந்திக்கிறேன்’ என காலோசை பார்த்து சொல்லிவிட்டு வெளியேற எத்தனித்த போது ‘பிரச்சனையில்லை மிஸ்டர். வந்தவிடயத்தை சொல்லும்’

‘இந்த நாயின் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் விலகி இருக்கிறது. இரண்டு முழங்கால் சில்லில் அதிர்வு இல்லை. உணர்வு இல்லாத விடயத்தை உரிமையாளருக்கு சொல்லவேண்டும். ஆனால் இந்த நாயை தொடர்சியாக பார்த்து, எலும்பு ஒப்பரேசன் செய்தது ரிமதி பாத்தோலியஸ். இந்த விடயத்தை நான் செய்ய விரும்பவில்லை. மேலும் ஒரு வைத்தியர் இதை பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்’.

‘இது ரிமதி செய்த அடுத்த வேலை ரொன்’ என ஒரு அட்காசமான சிரிப்புடன் ஜோசே சொன்ன போது சுந்தரம்பிள்ளைக்கு புரியவில்லை ‘வேறு என்ன வேலை செய்திருக்க முடியும்?’

‘நான் வருட இறுதியில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று பேரப் பிள்ளைகளுடன் செலவிடுவோம் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது வரையில் சிலமாதங்கள் நிம்மதியாக கோப்புக்களை பார்த்து காலத்தை கடத்துவதற்கு நினைத்துக்கொண்டிருந்தேன். ஓன்று மாறி ஒன்று என பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.’ என்றார் அந்த செயலாளராகிய ரொன் ஜொஸ்.

அப்பொழுது மேசையில் இருந்த கோப்பு ஒன்றை கையில் தூக்கி ‘இதுதான் எனக்கெதிராக ரிமதியும் ஸ்ரிவனுமாக சேர்ந்து இந்த வைத்தியசாலையில் உள்ள சிலரிடம் இருந்து தயாரித்த கடிதக் கோவை. இதனால்தான் வேலைக்கு சேர்ந்த அன்று எந்த வேலைத்தல அரசியலிலும் தொடர்பு படவேண்டாம் என எச்சரித்தேன்’.

ஏற்கனவே ரிமதியினால் காலோசின் அணிக்கு தள்ளிவிடப்பட்ட விடயம் இவர்களுக்குத் தெரியாது. இந்த நாயின் கருணைக் கொலையின் பின் ரிமதி என்னை எவ்வளவு வெறுப்பான் என்பது மனத்துக்குள் நினைத்துப் பார்த்த போது சிறுவயதில் சுந்தரம்பிள்ளையின் தாத்தா கூறிய ஒரு பழய பாட்டின் சிறுபகுதி நினைவுக்கு வந்தது. ‘வேதியரும் கோழிகளும் வேசியரும் வைத்தியரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள் என்ற கருத்தில் சொல்லியது. இது இக்காலத்தில் இந்த பண்பாடு நாகரீகம் வளர்ந்த மெல்பேன் நகரில் அந்தப் பாட்டின் பொருள் புரிந்தது. விஞ்ஞானம், நாகரீகம் என மனித குலம் எவ்வளவு முன்னேறினாலும் இருந்தாலும் மனிதர்களின் அடிப்படைக்குணங்களான காம, பேத, குரோதங்கள் மாறுவதில்லை.

‘இதை இரண்டு விதமாக செய்யலாம் ரொன். இதில் உப்பு சப்பில்லை என இந்த பெட்டிசனை தூக்கி குப்பைக் கூடையில் போடலாம். அதற்கு உமக்கு அதிகாரமிருக்கு. அதைத்தான் நான் செய்வேன். அப்படி இல்லையென்றால் முகாமைத்துவ கூட்டத்தில் இதை சமர்பித்து அவர்களது முடிவுககு விடலாம். அவர்கள் தேவையெனில் காலோசை அழைத்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ள முடியும்;’ எனக் கூறிவிட்ட ஜோன் லிஸ்மோர் தனது தடித்த மீசையைத் தடவியபடி கதிரையை விட்டு எழுந்தார்.

இப்பொழுது ஜோன் லிஸ்மோர் எந்தப் பக்கம் என சுந்தரம்பிள்ளைக்கு புரிந்தது. ஆனால் அறுபத்தைந்து வயதான ரொன் ஜொய் என்ன செய்யப் போகிறார் என்பதை அவரது முகமோ உடல் மொழியோ காட்டிக்கொடுக்கவில்லை. அவரது வழுக்கை விழுந்த தலையும் முழுமையாக சவரம் செய்யப்பட்ட முகம் புதிதாக குயவன் ஒருவனால் வனையப்பட்ட பானை போல இருந்தது. அந்த பானை முகத்தில் மூக்கு கண்ணாடி அணிந்து கிறீம் நிற கம்பளி சுவடட்ர் அணிந்திருந்தார். அவரது வயிறு நிறைமாத பெண்ணின் வயிறு போல் இருந்தது மட்டுமல்ல மேலும் கீழும் அசைந்த விதம் அவர் சிரமத்துடன் பிராணவாயுவை தேடுபவராக காட்டியது. இவர் ஓய்வு பெற்றாலும் பலகாலம் பேரக்குழந்தைகளோடு வாழப்போவராக தெரியவில்லை.

‘எனக்கு இன்னும் சிந்திக்க சில நாட்கள் இருக்கின்றன’ எனக் கூறிவிட்டு இப்பொழுதுதான் சுந்தரம்பிள்ளையை பார்த்தார்.

அவரது பார்வை உனக்கு என்ன வேண்டும் என்பது போன்று இருந்தது. இவ்வளவு நேரமும் சுந்தரம்பிள்ளை காலோசிடம் மட்டும் பேசினாலும் அந்த சிறிய அறையில் இருந்தவர்கள் எல்லோருக்கும் பேசிய விடயம் புரிந்திருக்கும். சுந்தரம்பிள்ளை இதை இவருக்கு மீணடும் திரும்ப சொல்லவேண்டுமா என நினைத்துக்கொண்டிருந்த போது ‘இது ரிமதியின் வைத்திய சாகசம். முதுகெலும்பு முறிந்த நாய்க்கு இரண்டு கால்களில் ஐந்து மணி நேரமாக ஆபிரேசன் செய்திருக்கிறார். இதை என்ன செய்வது என இந்த புதிய வைத்தியரான சிவா வந்து என்னிடம் ஆலோசனை கேட்கிறார். இந்த நாயை கருணைக்கொலை செய்வதுதான் ஒரே வழி. ஆனால் இதை நான் செய்யப் போவதில்லை. எனக்கு அடுத்தபடியாக அதிக காலம் இங்கு வேலை செய்யும் மாக்கிரட் ஓடயனிடம் அந்த நாயை மீண்டும் பரிசோதித்து பார்த்து விட்டு மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்ய சொல்லப் போகிறேன்’ என காலோஸ் சேகேரா வெளியேறினார். அவரைத தொடர்ந்து ‘அது நல்லது’ என ஆமோதித்த படி ஜோன் லிஸ்மோர் வெளியேறிய போது அவர்களை பின் தொடர்ந்தான். சுந்தரம்பிள்ளை.

————-

காலோசின் மனத்தில் இன்று பல விடயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இன்று இரவு நண்பன் ஒருவனின் விருந்துக்கு போக வேண்டும் எனவே விரைவாக வேலையில் இருந்து வரும்படி மனைவியின் கட்டளை நீதிமன்றத்தின் பிடியாணை போல் இருந்தது. இதேவேளையில் இன்று இரவு ஒன்பது மணிக்கு மெல்பேன் விமான நிலயத்தில் பழய தோழி மரியா வந்து இறங்குகிறாள். போத்துக்கல்லில் இருந்து படிக்கும் காலத்தில் நண்பியாக இருந்த மரியா சிலமாதங்கள் மெல்போனில் உள்ள உறவினருடன் தங்கிருக்க வருகிறாள். இன்றைக்கு அவளை பார்க்கவேண்டும். அவளது நினைவுகள் காலேசின் உடலில் புது இரத்தத்தை ஏற்றி கதகதப்பை உண்டாக்கியது. மனதில் அவளது நினைவுகள் பட்டாம்பூச்சியாக சிறகடித்தது. புதினைந்து வருடத்துக்கு முன்பு அவளுடன் லிஸ்பன் பல்கலைக்கழகத்தில் சிலகாலம் பழகி தன்னை மறந்து திரிந்தகாலம் வாழ்க்கையின் வசந்தகாலம். எந்த நிபந்தனையில்லாமல் இருந்தது அவளது நட்பு, ஏற்கனவே தீமோரில் காதலியாக இருந்த லுயிசா ஊரில் இருந்து வந்தால் மரியாவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மரியாவின் தொடர்பு ஒரு விதமான காட்டாறு போன்ற உடலெங்கும் பாய்ந்து ஓடிய காம உணர்வு. அது திடீர் என நிறுத்தபட்டது, சிறு குழந்தையிடம் காகம் தட்டிப்பறித்த பட்சணமாக நெஞ்சுக்கு நிறைவாக இல்லை. பிரிந்த சில மாத காலத்தில் மரியா ஒரு காலோசின் நண்பனோடு பழகி அவனைத் திருமணம் செய்து கொண்டாள். காலோசும்; லுயிசாவும் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள்.

பதினைந்து வருடகாலத்தின் பின் மீண்டும் அவளது குரலை தீடீரென தொலைபேசியில் கேட்டபோது இன்ப அதிர்சியாக இருந்தது. ஏதுவும் சொல்லாமல் ‘நான் மெல்பேனுக்கு வருகிறேன் . என்னை சந்திப்பாயா?’ எனக்கேட்டு விட்டு தான் வரும் திகதியையும் விமான நேரத்தையும் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டாள்.

கடந்த சில மாதங்களாக ஸ்ரிவனாலும் ரிமதி பாத்தோலியஸசாலும்; இந்த வைத்தியசாலை நிர்வாகத்துகக்கு ஏற்படும் தொல்லைகள் மிசேலுடன் ஏற்பட்ட விவகாரம் எல்லாவற்றையும் தனது தனியான பிரச்சனையாக எடுத்து ஆத்திரப்பட்டுக்கொண்டிருக்கும் ஜோசேக்கு மரியா வருவது சந்தோசமான மாற்றமாக, மருந்தாக இருந்தது. இந்த மாற்றம் ஓரு வலியால் துடிக்கும் ஒருவனுக்கு வலி நிவாரணமாக இருந்தது. காமத்தை விட கொடிய வியாதி உலகில் இல்லை. ஆனால் காமம் இல்லாத உலகு எவ்வளவு வெறுமையானது என நினைத்த போது, சிறு துணியும் அற்ற நிர்வாணமான தேவதையாக மரியா வந்து பிரித்தானிய நாட்டு விமானத்தில் இறங்குவதாக தெரிந்தது. ஒலிவ் நிறத்தில், இத்தாலிய பளிங்கில் செதுக்கிய உடலுடன், காற்றில் பறக்கும் கரிய கூந்தலுடன் கொஞ்சம் சராசரிக்கு சிறிதான முலைகளை வலது கையாலும் மறைத்தபடி இடது கையால் இடைக்கு கீழ் அம்மணத்தை மறைக்க மறு கையால் போராடி தோற்றபடி வந்து இறந்கி வந்தாள். அவளது யோனியை மறைத்த கரிய கேசங்களை அவளது கைகளால் மறைக்க முடியவில்லை.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு லிஸ்பனினின் அவளோடு நட்பாக இருந்த அந்த சம்மர் காலத்தில் பல தடவை நீச்சலுடை அணிவதற்கு யோனி மயிரொதுக்க சிகையலங்காரத் கடைக்கு அவளை கொண்டு சென்றதும், ஒருநாள் கடற்கரை வீதியில் இருந்த சிறிய மூலைக் கடையில் அவள் பச்சை குத்திக்கொண்ட கொண்ட கருந்தேள், அவளது இடது தொடையில் பளிச்சென்று தெரிந்தது.

‘காலோஸ்’ என சுந்தரம்பிள்ளை தோளில் தட்டினான்;.

‘நல்லதொரு கனவை தொலைக்கப் பண்ணிவிட்டாய். சிலகணத்தில் அவளை அணைத்துக் கொண்டு காற்றிடை நீராவியாக கலந்து கொள்ள தயாராக இருந்தேன். என்ன வேணும்.?’ படபடப்பாக

‘நீ பகல் கனவு காண்கிறாய். அங்கே இந்த முதுகெலும்பு முறிந்த நாயை சாம் றொலியில் வைத்த கொண்டிருக்கிறான். நான் என் செய்ய?’

‘நான் சொன்னதென்று இந்த நாயை பரிசோதிக்க சொல்லி மாரகிரட்டிடம் சொல்லு’

‘அது உமது வேலை. தயவு செய்து மார்கிரட்டிடம் வந்து சொல்லவும்’

‘உன்னோடு பெரிய பிரச்சனை’ என சலித்துக் கொண்டு கூறிக் கொண்டு இருவருமாக அந்த வைத்தியசாலையின் இடது பக்கத்தில் இருந்த பரிசோதனை அறைகளில் முதலாவதாக இருந்த அறைக்கதவை இரண்டு முறை தட்டி விட்டு உள்ளே சென்றனர்.

அந்த அறையின் பரிசோதனை மேசையில் ஒரு ஜேர்மன் செப்பேட் நாய் படுத்திருந்தது. அந்த நாய் மயக்கத்தில் இருந்தது போல் அசைவற்று இருந்தது. இரண்டு கண்களும் அகலமாக திறந்திருந்தது. மேசையின் அருகில் அந்த நாயின் சொந்தக்காரப் பெண் சிரித்தபடி மாக்கிரட், அருகே நின்று கொண்டிருந்தார்

மாரக்கிரட்டை சில முறை எதிர்ப்பட்ட இடங்களில் பார்த்து ஹலோ சொல்லி இருந்தாலும் சுந்தரப்பிள்ளை அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. பேசிய ஒரு சில வார்த்தைகளின் தொனியில் இருந்து அயர்லாந்தில் இருந்து வந்த மிருக வைத்தியர் என நினைக்க வைத்தது. வழக்கமாக பெண்கள் சம்பந்தபட்ட விடயங்களை கேட்காமலே அள்ளி வழங்கும் வள்ளலான சாமும் மார்கிரட்டை பற்றி கூறாததால் தெரிந்து கொள்ளும் வாயப்பு இருக்கவில்லை.
மார்கிரட்டை பார்க்கும் போது அந்த வயது பெண்களுக்குரிய எந்த அலங்காரமில்லாமல் டெனிம் பாண்டடிலும், மேல் உடலில் நீல நிறத்தில்; சாதாரண சுவட்டர் அணிந்திருந்தாள். முப்பத்தைந்து வயதிருக்கும். தலையை ஒட்ட கிராப் பண்ணியிருந்தாள். பல நரைத்த மயிர்கள் தலையில் தெரிந்தன. எந்த ஒரு ஒப்பனையோ அல்லது பாவனையோ அற்று இருந்தது அவளது தோற்றம்.

‘என்ன காலோஸ்?’ என விளித்தாள்.

‘சிவா ஒரு எக்ரேயை வைத்துக் கொண்டு என்னிடம் அவிப்பிராயம் கேட்கிறார். இந்த நாய் ஏற்கனவே எனது நண்பர் டாக்டர் ரிமதி பாத்தோலியஸால் இரண்டு கால்களையும் ஆப்பிரேசன்; செய்யப்பட்டது. தற்போது இங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையில் நான் இதில் தலையிட விரும்பவில்லை. எனக்கு அடுத்தான சீனியர் நீர்தான் மார்கிரட். இந்த பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்’ என சொல்லிவிட்டு வெளியேறினான்

‘நான் பார்த்துக் கொள்ளகிறேன். சிவா, சில நிமிடம் அவகாசம் வேண்டும்’ என்றாள்.
சுந்தரம்பிள்ளையை அந்த அறையில் விட்டு விட்டு காலோஸ் வெளியேறினான்
மேசையில் கிடந்த அந்த சிவப்பும் கருப்புமான செப்பேட் நாய்க்கு கழுத்து, இடுப்பு கால்கள், என பல இடங்களில் சிறிய ஊசிகள் குத்தப்பட்டிருந்து. அந்த நாய்க்கு பக்கத்தில் நின்ற ஏஜமானி நாயின் முகத்தை தடவினார். மாக்கிரட் அந்த ஊசிகளை மெதுவாக விரல்களை உருட்டிக் கொண்டு ‘இனனும் சில நிமிடத்தில் ஊசிகளை எடுத்து விடுவேன்’ என்றாள்.
மாக்கிரட் செய்வது அகியுபங்சர் என்ற சீன மருத்துவ முறை என்று சுந்தரம்பிள்ளைக்கு புரிந்தாலும் ‘என்ன நோய்காக அக்கியுபங்சர் செய்கிறீர்கள்? என்றான்

‘ஷீபாவுக்கு தற்பொழுது பத்து வயது. இப்பொழுது ஆத்திரையிற்ரிஸ் என்ற முடக்கு வாதம் வந்து விட்டது. முடக்கு வாதத்திற்கு அக்கியுப்ஙசர் குணப்படுத்தும் என்பது எனது அனுபவம்.’

‘எத்தனை முறை செய்யவேண்டு;ம்?’

‘வாரத்துக்கு ஒரு தடவையாக மூன்று வாரம் செய்துவிட்டு அதன் பின் தேவைக்கு ஏற்றபடி செய்தால் போதும்’ எனக் கூறிக்கொண்டு நாயின் இடுப்பிலும் முதுகுப்பகுதிலும் இருந்த ஊசிகளை அகற்றினாள்.

ஊசிகளை அகற்றியதும் ஷீபா உறக்கத்தில் இருநது விழித்தது போல் எழுந்ததும் மார்கிரட்டின் உதவியுடன் மெதுவாக தரையில் இறங்கி மிகவும் நாகரீகமாக தனது ஏஜமானியின் அருகே நின்று, தன்னை சுற்றியுள்ளவர்களைப் பார்த்தது. சுந்தரமூர்த்திக்கு வியப்பாக இருந்தது. இந்த ஷீபாவின் நடை பார்வை பாவனை எல்லாம் பார்பதற்கு மேன்மையாக இருந்தது.

வடஆசியாவில் ஒரு காட்டுப்பகுதிகளில் புதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வேட்டையாடும் மனிதன் தனக்கு வேட்டைக்கு உதவியாக ஓநாயை இனத்தில் இருந்து வந்த காட்டு நாயை வளர்த்து தனது தேவைக்கு மட்டுமல்ல, உற்ற தோழமைக்கும் வளர்த்தான். தொடர்ச்சியான வளர்ப்பும் பயிற்சியும் அவைகளது மரபணுவில் மாற்றத்தை உண்டு பண்ணி, காட்டு மிருகத்துக்கு உரிய தன்மையை இழப்பது மட்டுமல்லாது மனிதர்களின் பல தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ப பலவேறு வடிவங்கள், குணங்கள் என புதிய வர்க்கங்கங்களாக உருமாற்றமடைந்துள்ளன. நாய் வர்க்கங்களின் பரிணாம வளர்ச்சி மனிதர்களின் படைப்புத்திறனுக்கு மகத்தான சாட்சியம்.

ஆவலை அடக்கமுடியாமல் ‘ஷீபாவை யார் பயிற்சி கொடுத்தது?’

‘ஷீபா விக்ரோரிய பொலிசில் பல வருடங்கள் சேவை செய்துவிட்டு மூட்டுவாதம் காரணமாக இரண்டு வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றது. அப்பொழுது நான் தத்தெடுத்தேன்’ என்றார் அந்தப் பெண்.

நோய் வந்த நாயை தத்தெடுத்து அதற்கு வைத்தியம செய்யும் அந்த பெண்ணை ‘மிகவும் நல்ல வேலை செய்கிறீர்கள்’’ என பாராட்டியபோது அந்தப் பெண் ‘எனது அதிஸ்டம் ஷீபா கிடைத்தது. இதற்கு முன்பு மூன்று ஜேர்மன் செப்பேட் நாய்களை வளர்த்தேன். ஆனாலும் அவையொன்றும் ஷீபாவுக்கு அருகில் வரமாட்டா’ என கூறிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.

‘சிவா எக்ரேயை பார்போம் ‘என வாங்கி பார்த்து விட்டு உதட்டை பிதுக்கிய படி சிறிது நேரம் யோசித்து விட்டு எதுவும் பேசாது அந்த அறையின் பின் கதவை திறந்து கொண்டு பார்மசி வழியே வெளியே சென்ற மார்கிரட் வெகு வேகமாக சுந்தரம்பிள்ளையிடம்; எதுவும் பேசாமல் பரக்க பரக்க அந்த கொரிடோரால் நடந்தார். நடக்கும் போது ஏதோ சில வார்தைகள் அவரது உதட்டை விட்டு வெளிவந்த போதும் அவை காற்றில் கலந்துவிட்டன. அந்த அயர்லர்து ஆங்கிலம் பின்தொடரும் சுந்தரம்பிள்ளைக்கு புரியவில்லை. நேர் எதிரே நின்று பேசும் போது உதடுகளின் அசைவை வார்ததைகளுடன் இணைத்து புரிந்து கொள்ளமுடியும். பின்னால் தொடரும்போது அது முடியாது.

இருவரும் நாய்க்கூட்டை அடைந்ததும் மார்கிரட் சாமின் உதவியுடன் அந்த நாயின் பின்னங்கால்களை கால்களை தட்டியும் அழுத்தியும் பரிசோதிதது விட்டு ‘இது உண்மையில்; பெரிய முட்டாள்தனம். சாம், உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு தா’ எனக் கூறினாள்.

‘இந்த நாயை அவசரப்பட்டு ஆபரேசன் செய்தது தவறு. நாலு நாட்கள் வீணாக இந்த நாய் வேதனையடைந்திருக்கிறது. உடனடியாக கருணைக்கொலை செய்திருக்க வேண்டும்’ என்ற போது உரிமையாளரின் தொடர்பை சாம் ஏற்படுத்தி கொடுத்தான்

‘மிஸ்டர் தொம்சன் உங்களது நாய்க்கு முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கால்களை ஆபரேசன் செய்தும் பிரயோசனம் இல்லை. எங்களுக்கு கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுக்கவேண்டும் என சொல்லி அந்த அனுமதியை பெற்று விட்டு அந்த நாய்குரிய கோப்பில் அதை எழுதி கையெழுத்து வைத்த விட்டு ‘சிவா நீங்களே அதை செய்யுங்கள்’ என சொல்லிட்டு சென்றாள்.

மார்கிரட் சென்ற அந்த கதவு வழியால் நுழைந்த கொலிவூட் உடலை நீட்டி வில்லாக வளைத்து வாலை கொடிக்கம்பம்போல் நேராக்கி தினவெடுத்து விட்டு ‘தம்பியின் கதை கந்தல். ரிமதி கடித்து குதறப் போகிறான்’ என்றது. அதை பொருட்படுத்தாமல் சுந்தரம்பிள்ளை தனது வேலையில் ஈடுபட்டு அந்த நாயின் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

ஏற்கனவே போர் பிரகடனப்படுத்தப்படடிருப்பதால் தவிர்க்க முடியாது. இந்த விடத்தில் அவமானப்படும் ரிமதியின் ஆத்திரத்துக்கு ஆளாவது நிட்சயமானது. இதை கொலிங்வூட் சொல்லித்தான் புரியவேண்டும் என்பதில்லை.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to அசோகனின் வைத்தியசாலை 10

 1. Hemasiri Kuruppu சொல்கிறார்:

  Dear Dr, Noel,

  Better if we can translate some of your Tamil articles in to Sinhala
  language. For Uthayam and other publications.

  Dr.Kuruppu
  ,

Hemasiri Kuruppu க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.