வாழும் சுவடுகள் [மிருகங்களைப்பற்றிய அனுபவக் குறிப்புகள் ] டாக்டர் என் எஸ் நடேசன், மித்ர வெளியீடு சென்னை.
இருவகையான உலகப்பார்வைகள் உண்டு. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் இதற்கு உதாரணமாக கூறலாம். தல்ஸ்தோய் படைப்புகளில் புற உலகம் அதன் அழகுடனும் முழுமையுடனும் விரிகிறது. அவ்வுலகின் ஒரு பகுதியாக தன் ஆளுமையை பொருத்தி தன்னை அறிய அவர் முயல்கிறார். தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளில் புற உலகமே இல்லை. அவர் கண்களுக்கு தெரியும் புற உலகம் கூட அக உலகின் குறியீடுகளாகவே பொருள்படுகிறது. மனம் மட்டுமே அனைத்துமாக மாறி விரிந்திருக்கும் ஓர் உலகம் அது. முந்தைய உலகமே எனக்கு நெருக்கமானது. மனதை அல்லது தன் சுயத்தை பிரபஞ்சமாக விரித்துக் கொள்ளும் பார்வையுடன் ஒத்துப்போக என்னால் முடிவதில்லை .
புற உலகை சித்தரிக்கும் தல்ஸ்தோயின் பார்வையில் மனிதர்களுக்கு சமானமாகவே மிருகங்களும் இடம்பெறுகின்றன. போரும் அமைதியும் நாவலில் போர்க்களத்தின் சித்தரிப்பை அளிக்கும் தல்ஸ்தோய் அங்கு நெப்போலியனை சித்தரிக்கும் அதே துல்லியத்துடன் ஒரு நாயையும் சித்தரிக்கிறார் .அவரது கலைப்பார்வை இரண்டிலும் வேறுபாடு காணவுமில்லை . மனிதர்களைப்பற்றி எழுதும்போது எப்படி நுட்பங்கள் சாத்தியமாகின்றன? எழுதப்படும் மனிதர்களுடன் எழுத்தாளன் உணரும் இரண்டறக்கலந்த நிலை மூலமே. கெஜக்கோல் போன்ற கதைகளிலும் அன்னா கரீனினாவின் குதிரைசவாரிபகுதியிலும் குதிரைகளைப்பற்றி தல்ஸ்தோய் சித்தரிக்கும் இடம் அவரது மனம் விலங்குகளுடன் இரண்டறக்கலந்த நிலையை உணர்ந்திருக்கிறது என்பதற்குச் சான்றாகும். அவ்வாறன்றி அவற்றை வேடிக்கை பார்க்கும் நிலையில் எழுதப்படும் எழுத்துக்கு அதற்குரிய பலவீனங்கள் உண்டு. ஆகவேதான் தஸ்தயேவ்ஸ்கி மேதை என்னும் போது தல்ஸ்தோய் யை ஞானி என்கிறேன்.
மிருகங்களுடனான ஈர்ப்பு என்பது இயற்கை மீதான் ஈர்ப்பின் ஒரு பகுதியே.நான் செல்லப்பிராணி வளர்ப்பைபற்றி சொல்லவில்லை. அதில் பல தளங்கள் உள்ளன. பலவகையான குறைகளை ஈடுகட்ட , பல விதமான உளவியல் தேவைகளுக்காக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. கொஞ்ச, தனக்கே தனக்கு என்று வைத்துக் கொள்ள, சுதந்திரமாக அடித்து சித்திரவதை செய்ய…எல்லா மிருகங்களையும் எந்நிலையும் ரசிக்கும் ஆழ்ந்த ஈர்ப்பை ப்பற்றி சொன்னேன். சலிம் அலி, இந்து சூடன் முதலியோர் பறவைகளைப்பற்றி எழுதிய நூல்கள் எனக்கு மிக பிடித்தமானவை. அந்த ஈர்ப்பு உடையவர்களுக்கு பிடித்தமான நூல்களில் ஒன்றாக இருக்கும் இந்த நூல்.
தனித்தனி அனுபவங்கள் வழியாக இ¢ந்நூல் காட்டும் மிருகங்களின் பொதுப் பண்பு அவை எந்த அளவுக்கு கண்ணியமானவையாக களங்கமற்றவையாக உள்ளன என்பதே. அவற்றில் நாய்கள் அதிகம் என்பது இயல்பே. நாம் நாயின் பொருட்டு கடவுளுக்கு மிக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நாயும் காகமும் இல்லாவிட்டால் நமது இளமைப்பருவம் மிக வரண்டதாக இருந்திருக்கும். மிருகங்களின் சித்தரிப்புகளை நுட்பமாகவும் இயல்பாகவும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் . பெரும்பாலான அனுபவங்கள் அழகிய சிறுகதை அனுபவத்தை கற்பனையில் விரிய வைத்தன. குறிப்பாக ‘அலர்ஜி புதிய விளக்கம்’ , ‘பிரசவ வேளையில் அந்தநாள் ஞாபகம்’ ஆகிய இரண்டும் என்னை மிகவும் பாதித்தன. சிறந்த கதைகள் போல அவற்றிலும் வாசக ஊகத்துக்கான மௌன இடைவெளிகள் உள்ளன. பல கதைகளை மீண்டும் சிறுகதைகளாக விரித்தெழுதலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ‘அலர்ஜி புதிய விளக்கம்’ அனுபவத்தில் அந்த நாய் அப்பெண்ணின் அகத்தின் அல்லது மிக நுட்பமான ஒரு புலனின் குறியீடாக கொள்ளமுடியும் என்று பட்டது. காரணம் இல்லாமலே ஒரு மனிதன் நம் ஆத்மாவுக்குகொருவிதமான கூச்சத்தை அளித்துக் கொண்டே இருத்தைப்போல.
இம்மாதிரி நூல்கள் தமிழில் மிக அபூர்வம். முக்கியமான காரணம் தமிழ்நாட்டில் இம்மாதிரி துறைகளில் தேர்ச்சி கொண்டவர்கள் தமிழ் தெரியாதவர்களாக இருப்பதே வழக்கம். தமிழில் தொடர்ந்து பேசக்கூட அவர்களால் முடிவதில்லை என தொலைக்காட்சி பேட்டிகளைக் காணும் போது தெரிகிறது. ஒரு மொழியில் பலவிதமான எழுத்துப்பதிவுகள் ஏராளமாக உருவாகும்போது அவற்றுக்கிடையேயான ஊடாட்டமாகவே மேலான இலக்கியங்களும் உருவாகும். அவ்வகையில் இந்த நூல் முக்கியமான ஒன்று.
********
மறுமொழியொன்றை இடுங்கள்