பயணியின் பார்வையில் 09

14012013494
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடரும் பணிகள்

முருகபூபதி

எந்தவொரு தேசத்திலும் நீடிக்கும் உள்நாட்டுப்போர்களிலும் அல்லது தேசத்திற்கு தேசம் தொடரும் ஆக்கிரமிப்புப்போர்களிலும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். போரிலே கணவன்மாரை இழக்கும் பெண்கள் விதவைகளாக்கப்படுகிறார்கள். தந்தையரை இழக்கும் குழந்தைகள் சரியான பராமரிப்பின்றி அநாதரவாகிறார்கள்.

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தபோரிலும் இதுதான் நடந்தது. இலங்கையில் ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகளின் ஆயுதப்படைகளுக்கும் இடையில் மூண்ட போர்களிலும் இயக்கமோதல்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான்.
இத்தகைய போர்களில் கணவனை இழந்து தவிக்கும் பெண் தனது குழந்தைகளைப்பராமரிக்க எவ்வளவு சிரமப்படவேண்டும், எத்தகைய சோதனைகளையும் வேதனைகளையும் கடந்துவரவேண்டும் என்பதை எழுத்தில் இலகுவாக வடித்துவிடமுடியாது. காணாமல்போய்விடும் கணவன் அரசஊழியனாக இருக்கும் பட்சத்தில் மரண சான்றிதழ் இல்லாமல் அவனது ஓய்வூதியம் பெறுவது சிரமம். தனியார் துறை ஊழியனாக இருப்பின் சேமலாப நிதியைப்பெறுவதும் சிரமம்.

குறிப்பிட்ட விதவைத்தாயானவள் தனது குழந்தைகளின் அடிப்படைத்தேவையான கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதும் வருவாய் இல்லையாயின் என்ன செய்வாள்? எங்காவது தையல்வேலைக்கோ, நாட்சம்பளத்தில் கூலிவேலைக்கோ அல்லது வீடுவீடாகச்சென்று மாவு இடித்தோ இடியப்பம் பலகாரம் தயாரித்துவிற்றோதான் தனது குழந்தைகளின் தேவைகளை கவனிப்பாள்.
உடன்பிறப்புகள் வசதியாக இருந்தால் அல்லது அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அந்தத்தயவில் சிறிதுகாலம் வாழ்வை நகர்த்த முடியும். அந்த வாய்ப்பும் வசதியுமற்ற விதவைத்தாய்மாரின் அவலம் பற்றி எழுதுவதற்கும் வார்த்தைகளைத்தான் நாம் தேட வேண்டும்.
இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் நீடித்த போர் பற்றிய மற்றும் இயக்கங்களுக்கிடையில் தொடர்ந்த சகோதர படுகொலைகள் பற்றிய ஆயுதப்படைகளின் தேடுதல் வேட்டைகள் தொடர்பான செய்திகளையே எழுதிக்கொண்டிருந்தேன். பலதரப்பட்ட செய்திகள் கதைகளாக வந்து குவிந்தன.

எனக்கு நன்கு தெரிந்த ஒரு குடும்பம் பலாங்கொடையில் 1981 ஆம் ஆண்டு நடந்த வன்செயலினால் பாதிக்கப்பட்டு வவுனியா பூவரசங்குளத்திற்கு இடம்பெயர்ந்து ஒரு சிறியகாணியில் வீடு அமைத்து வாழ்ந்துகொண்டிருந்தது. நான்கு பெண்குழந்தைகள். குடும்பத்தலைவனுக்கு ஒரு அரிசி ஆலையில் லொரி செலுத்தும் சாரதி வேலை கிடைத்தது. அந்த ஆலை மன்னார் வீதியில் வேப்பங்குளத்தில் அமைந்திருந்தது.
வழக்கம்போன்று அவர் அதிகாலையிலேயே மனைவி தந்த மதிய உணவுப்பார்சலுடன் வேலைக்குச்சென்றார். தினமும் வேலை முடிந்து மாலையில் வீடுதிரும்பும் அவர் அன்று வரவில்லை. ஒரு நாள் இரண்டு நாள் என்று நாட்கள் கடந்தன. மன்னார் வீதியில் வேப்பங்குளத்திற்கு அருகில் காலை வேளையில் புலிகள் வைத்த நிலக்கண்ணிவெடியில் ஒரு இராணுவ ட்ரக்வண்டி சிக்குண்டு சில இராணுவத்தினர் பலியாகினார். ஏதிரொலி எப்படி இருக்கும்?

அந்தப்பிரதேசத்தில் படையினரின் சுற்றிவலைப்பில் கொல்லப்பட்டது அப்பாவிகள்தான். அந்த நான்கு பெண்குழந்தைகளின் அப்பாவித்தந்தையும் கொல்லப்பட்டார். இராணுவத்தைக்கண்ட அவர் ஓரு மலகூடத்தில் ஒளிந்துகொள்ள முற்பட்டவேளையில் துப்பாக்கிச்சன்னங்கள் அவரது உடலைத்துளைத்தன.

மூன்று நாட்களுக்குப்பின்னர் மனைவி சடலத்தை வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலையில் அடையாளம் காட்டி எடுத்துவந்தார். நான்கு பெண்குழந்தைகளையும் வளர்க்க அவர் மிகவும் கஷ்டப்பட்டார். கணவரின் சேமலாப நிதியை பெறுவதற்காக பல தடவைகள் கொழும்பில் நாரஹேன்பிட்டியில் அமைந்த தலைமையலுவலகத்திற்கு அலைந்தார். எந்தப்பயனும் இன்றுவரையில் கிடைக்கவில்லை. நானும் அவருக்காக அலைந்தேன். ஒவ்வொரு தடவையும் ஏதாவது புதுப்புது ஆதாரங்கள் கேட்டார்கள்.

இது நடந்தது 1986-1987 காலப்பகுதியில்.

நானும் எதிர்பாராதவிதமாக 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டமையால் அந்த விதவைத்தாயருக்கு எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. ஆனால் அந்தத் தாயினதும் அந்தக்குழந்தைகளினதும் கண்ணீர் என்னை அவஸ்தைப்படுத்திக்கொண்டே இருந்தது.
வீரகேசரியில் தினம் தினம் செய்திகளை எடிட்செய்து தரும்பொழுதும் பிரதேச நிருபர்கள் ஊடாகவும் வேறு மார்க்கங்களிலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை பெறும்பொழுதும் கண்ணீர்கதைகளே என்னை ஆக்கிரமித்திருந்தன.
கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள். அதனால் அவர்களின் பெயர் வயது, தொழில், குடும்ப விபரம் முதலானவற்றை பட்டியலிட்டு செய்தி எழுதினாலும் இறுதிவரிகள் இப்படி அமைந்திருக்கும். …..இதுஇவ்விதமிருக்க அரச தகவல் திணைக்களம் (லங்காபுவத்) வெளியிட்டுள்ள அறிக்கையில் ….இத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வாசிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரிந்துவிடும். இந்த மரபை செய்தி எழுதும்பொழுது நாம் கடைப்பிடித்தோம். காரணம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நாம் நிற்கவேண்டும். அவுஸ்திரேலியா வந்தபின்பும் அந்தக்கதைகள் என்னைத்தொடர்ந்து வந்தன.

ஒரு ஊடகவியலாளனின் பணி செய்தியை எழுதுவதுடன் நின்றுவிடுகிறதா? அல்லது ஒரு இலக்கியப்படைப்பாளியின் வேலை போரில் பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி கவிதை எழுதுவதுடன் கதைபின்னுதலுடன் ஓய்ந்துவிடுகிறதா? போர்க்கால இலக்கியவரிசையில் தனது ஆக்கத்தையும் இணைத்துக்கொண்ட திருப்தி மாத்திரம்தானா அவனது எழுத்தூழிய சத்தியம்.
அதற்கும் அப்பால் எதுவும் இல்லையா?

தனித்து கங்காரு நாட்டுக்குள் பிரவேசித்த ஆரம்பநாட்களில் இந்தக்கேள்விகளுக்கு விடைதேடினேன்.
1987 காலப்பகுதியில் தாம் பெரிய நம்பிக்கைவைத்த விடுதலை இயக்கங்களுக்கு நிதிசேகரித்துக்கொடுத்த தனிநபர்களையும் அவர்கள் இணைந்திருந்த தமிழ் அமைப்புகளையும் அவதானித்தேன்.

சாம் 77 ஏவுகணைக்கு நிதிசேகரித்துக்கொடுத்தால் விரைவில் தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என நம்பியவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டிருந்த காலம். நெடுமாறனை அழைத்து அரசியல் கீதோபதேசம் பெற்ற காலம். புலிகளுக்கு எம்.ஜி.ஆர் நிதியுதவி வழங்கியதனால் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்திய காலம். அகதி அந்தஸ்த்திற்கு விண்ணப்பிப்பவர்கள் நாடும் சட்டத்தரணிகள் ஊடாக இயக்கத்திற்கு நிதி திரட்டிய காலம்.
இவ்வாறு காலம் கடந்துகொண்டிருக்கையில், 1986 இறுதியில் வடமராட்சியில் நடந்த தாக்குதல்கள் பற்றிய செய்திகளை சேகரிக்கச்சென்றவேளையில் கிட்டிய அனுபவம் என்னை வேறு ஒரு திசைநோக்கி செயற்படத்தூண்டியது. அத்துடன் வவுனியாவில் குடும்பத்தின் மூல உழைப்பாளியை பறிகொடுத்த அந்த விதவைத்தாயும் தந்தையை இழந்த குழந்தைகளும் பலநாட்கள் கனவில் வந்தனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆயுதங்களை ஆதரிப்பதில்லை. அறிவாயுதங்களான கல்விசார்ந்த பணிகளையே முன்னெடுக்கவேண்டும் என்று திடசங்கர்ப்பம் பூண்டேன். ஆனால் தனிமரம் தோப்பாகாது என்பதையும் நம்பினேன்.

அந்தப்பணியைப் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தவேளையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவுஸ்திரேலியாவில் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பேர்;த்தில் நடந்த தென்கிழக்காசிய பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு வந்தார். நான் வசிக்கும் மெல்பனிலிருந்த அவரது உறவினர்களையும் பார்க்க வந்தபொழுது சந்திக்கச்சென்றேன்.
அவரை ஏற்கனவே எனக்கு நன்குதெரியும். இறுதியாக அவரை 1983 தொடக்கத்தில் பாரதிநூற்றாண்டு காலத்தில் பல்கலைக்கழகத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சந்தித்தேன்.
மெல்பனில் என்னைக்கண்டதுமே, “ இங்கே…என்ன செய்கிறீர்?” என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. அதன் தொனியை புரிந்துகொள்ளமுடிந்தது.

“ சேர்…ஏதாவது செய்யவிரும்புகிறேன்…எனக்குள் ஒரு திட்டம் கனவாக இருக்கிறது. அதனை நனவாக்கவே உங்களைத்தேடி வந்தேன்…” எனச்சொல்லிவிட்டு, மனதில் உருவாகியிருந்த கல்வி சார்ந்த எண்ணத்தை அவரிடம் சொன்னேன்.

“ வடக்கு, கிழக்கில் உமக்குத்தெரிந்த பல எழுத்தாளர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பணியாற்றும் பாடசாலைகளுடன் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை திரட்டி உமது திட்டத்தை நடைமுறைப்படுத்தும். இதுவிடயமாக நானும் அங்கே சென்றபின்னர் என்னால் முடிந்த விபரங்களை அனுப்புகிறேன்.” என்றார்.
கணினி இல்லாத காலம். அதனால் மின்னஞ்சலும் இல்லை. தினமும் கடிதங்கள் எழுதினேன். வடக்கில் பணியாற்றிய படைப்பாளிகள் தெணியான், கோகிலா மகேந்திரன் ஆகியோரும் ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்தில் சமூகப்பணியாற்றிக்கொண்டிருந்த நண்பரும் பல்வைத்தியருமான ஞானி முதலானோர் தகவல்கள் அனுப்பினர்.

சில விபரங்கள் சேர்ந்ததும் எனது வாடகை அறைவீட்டுக்கு நண்பர்களை அழைத்து திட்டத்தை சொன்னபோது அவர்கள் முழுமனதுடன் ஒத்துழைப்புத்தர முன்வந்தார்கள். அச்சமயம் பத்துக்கும் குறைவான மாணவர்களின் விபரங்களே கிடைத்திருந்தன.
மாணவரின் தந்தையின் மரணச்சான்றிதழ், கல்வி கற்கும் பாடசாலை, வகுப்பு முதலான விபரங்கள் குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை வருமானம் பற்றிய தகவல்களை திரட்டி தெரிவுசெய்து திட்டத்தை தொடங்கினேன். அப்பொழுது எதிர்பாராதவிதமாக யாழ்ப்பணத்தில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் கே. கந்தசாமி கொல்லப்பட்டார்.

எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலுக்கு மெல்பனில்வெளியீட்டு விழாவை அமரர் கந்தசாமி அவர்களை நினைவுகூருமுகமாக நடத்தி வெளியீட்டில் கிடைத்த நிதியை இந்தத் திட்டத்திற்கு வழங்கி அந்நிகழ்வில் கல்வி நிதியத்தை அறிமுகப்படுத்தினேன்.
அவுஸ்திரேலியாவில் நடந்த முதலாவது இலக்கிய விழா. புpரபல எழுத்தாளர் எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் முதல்முதல் மேடையேறிய விழா. தலைமை பேராதரனப்பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் காலநிதி காசிநாதன். மெல்பனில் இயங்கிய அனைத்து தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்களும் எனது நோக்கத்தை ஆதரித்து உரையாற்றினர்.

ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்

என்ற மகாகவி பாரதியின் கூற்றே தாரகமந்திரமாகியது.

இந்நிதியத்திற்கு முதல் கட்டமாக உதவமுன்வந்தவர்கள் கொர்னேலியஸ், உதயகுமார்,சாம்பசிவம், சிவநாதன், தருமகுலராஜா, பல்மருத்துவர் ரவீந்திர ராஜா, மருத்துவர் பொன்னம்பலம், சட்டத்தாணி ரவீந்திரன்….இப்படிச்சிலர். அக்காலப்பகுதியில் எனக்கு இங்கே குடும்பம் இல்லை. நிரந்தர வதிவிட உரிமையும் இல்லை. இந்தத்திட்டத்தில் என்னோடு கைகோர்த்தவர்கள்தான் குடும்ப நண்பர்கள். அந்த வட்டம் மெதுமெதுவாக விரிந்தது. அதற்குக்காரணம் உருவாக்கிய இந்த அமைப்புத்தான்.

சட்டத்தரணி ரவீந்திரன் நிதியத்திற்கென அமைப்புவிதிகளை தயாரித்துத் தந்தார். அவரது தந்தை ஓவியர் செல்லத்துரை நிதியத்திற்கான இலச்சினையை வரைந்;தார். ஒரு கங்காரு புத்தகம் ஏந்தியவாறு நிற்கும் காட்சி. சிட்னியில் கணக்காளராக இருந்த துரைசிங்கமும் மற்றும் மருத்துவர் இராசநாயகமும் நிதியத்திற்கு உதவமுன்வந்தனர். அவர்களின் மனித உரிமை அமைப்பு இலங்கை அகதிகளுக்காக திரட்டிச்சேகரித்து வைத்திருந்த 25 ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகளையும் நன்கொடையாக தந்து உதவினர். ஒரு நிபந்தனையும் விதித்தனர். நிரந்தர வைப்புநிதியில் குறிப்பிட்ட நன்கொடையை வைத்திருந்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டியையே கல்வி நிதியத்திற்கு பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
எமது கல்வி நிதியமும் தன்வசம் வைத்திருந்த ஐந்து ஆயிரம் வெள்ளிகளையும் சேர்த்து மொத்தம் முப்பதினாயிரம் வெள்ளிகள் இப்பொழுதும் நிரந்தர வைப்பிலேயே இருக்கின்றது. கடந்த 25 வருடகாலமாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் சுருக்கமான வரலாறு இதுதான். 2000 ஆம் ஆண்டில் வெளியான எனது இலக்கிய மடல் நூலில் கனவுமெய்ப்படல்வேண்டும் என்ற கட்டுரையில் நிதியம்பற்றி பதிவுசெய்துள்ளேன்.

1987 இற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடையில் இலங்கையில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்துவிட்டன. அதிபர்களும் மாறிவிட்டார்கள். எமது நிதியத்தின் உதவிபெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று தொழில் வாய்ப்புகளும் பெற்றுவிட்டனர். சிலர் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர். எனினும் நிதியம் தன் பணிதொடருகிறது.
இந்தத்தொடரின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட, இந்த நிதியத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த அந்த வவுனியா குடும்பத்தில் மூத்த பெண்ணின் கல்விச்செலவை நிதியம் ஊடாக நான் பொறுப்பேற்றேன். இன்று அந்த மாணவி பட்டப்படிப்பும் நிறைவுசெய்து வவுனியாவில் ஒரு பாடசாலையில் அதிபராக பணியிலிருக்கிறார். இரண்டு குழந்தைகளின் தாய். அவருக்குப்பின்னர் பிறந்த மூன்று பெண்களும் தற்பொழுது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் பாடசாலைகள் கல்லூரிகளில் ஆசிரியைகளாக பணியாற்றுகிறார்கள்.
2009 வரையில் யுத்தம் தொடர்ந்தமையால் எனக்கோ, எமது கல்விநிதியத்தில் இணைந்தவர்களுக்கோ வடக்கு, கிழக்கிற்கு சென்று தாம் உதவிய மாணவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு இருக்கவில்லை.
ஆனால் கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் வரும் காத்திருப்போம் என்ற வாக்கினை நம்பினோம். 2010 தொடக்கம் முதல், எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பங்களை, தகவல் அமர்வுகளாக, நிதிக்கொடுப்பனவு நிகழ்வுகளாக மாணவர்களின் சுயஆற்றலை தெரிந்துகொள்ளும் ஒன்றுகூடல்களாக வருடாந்தம் நடத்திவருகிறோம்.
இதுவரையில் நூற்றுக்கணக்கான போரில் பெற்றவர்களை இழந்த மாணவர்களின் கலங்கரைவிளக்கமாக தொழிற்படும் நிதியம் தனது பணிகளை அமைதியாகவே தொடருகிறது. சுமார் இருபத்தியைந்து ஆண்டு காலத்துள் நிதியத்தின் தலைவர்களாக பணியாற்றியவர்களை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

சட்டத்தரணி ரவீந்திரன், கணக்காளர் ஆ. வே. முருகையா, டொக்டர் நடேசன், திருமதி புவனா ராஜரட்ணம், மகேந்திரன், சட்டத்தரணி நிவேதனா அச்சுதன், சிவநாதன், டொக்டர் சந்திரானந்த், சண்முகம் சந்திரன், டொக்டர் மதிவதனி சந்திரானந்த், எழுத்தாளர் அருண். விஜயராணி,
நிதியத்தில் அங்கம் வகிக்கும் மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள் மாதாந்தம் தரும் 20 அவுஸ்திரேலியன் வெள்ளிகளுடன் தனது பணிகளைத்தொடரும் இந்த அமைப்பு அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட (Incorporation) ) இயங்குகிறது. சில நடனப்பள்ளிகள் மற்றும் தனிநபர்கள், அமைப்புகள் கடந்த காலங்களில் வழங்கிய நன்கொடைகளும் நிதியத்திற்கு வரவாகியது.
எனினும் நிதியம் இதுவரைகாலத்தில் நிதியத்திற்கென பிரத்தியேகமாக பொது நிகழ்ச்சிகளை நடத்தி நிதி சேகரிக்கும் பணிகளில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிதிய உறுப்பினர்களின் தொடர்ச்சியான நிதிப்பங்களிப்பே நிதியத்தின் மூலதனம். அதுவே அதனது நிரந்தர பலம்.
கடந்த 25 ஆண்டு காலப்பகுதிக்குள் தனது விதிமுறைகளையும் கவனத்தில் எடுத்தவாறே வேறும் சில பணிகளையும் நிதியம் முன்னெடுத்தது.
2004 இறுதியில் சுனாமி கடற்கோள் அனர்த்தம் நேர்ந்தபொழுது இரண்டு கொள்கலன்களில் உலர் உணவுப்பொருட்கள் மற்றும் உடைகளை சேகரித்து வன்னிக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பியது.

சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தம் பட்டப்படிப்பை நிறைவுசெய்யும் வரையில் நிதியம் அவர்களுக்கு உதவியது.

போர் 2009 மே மாதம் முடிவுற்றபொழுது அகதிமுகாமலிருந்த மக்களின் தேவைகளுக்கு சக்திக்குட்பட்ட வழியில் உதவியது.
அகதிமுகாம்களிலிருந்து கல்வியைத்தொடர்ந்து வவுனியா பல்கலைக்கழக வளாகம் பிரவேசித்த பல மாணவர்களின் போக்குவரத்துக்காக துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்புச்செய்ததுடன் அவர்கள் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்யும் வரையில் தொடர்ந்து உதவுகிறது.
வவுனியாவில் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி (மாணவர்கள்) பிள்ளைகளுக்கு விசேட வகுப்புகளை ஏற்பாடு செய்து (சில தொண்டர் ஆசிரியர்கள் நியமித்து) அவர்கள் பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சை எடுப்பதற்கும் க.பொ.த சாதராண தர மற்றும் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கும் தேவைப்பட்ட செலவுகளை ஈடுசெய்ததுடன் அவர்கள் மீண்டும் பெற்றோர்களுடன் இணைந்துகொள்ள வகைசெய்தது.

போரில் பெற்றவர்களை இழந்த மாணவர்கள் மட்டுமன்றி போரில் தமது கால்களை இழந்த மாணவிகளும் தமது கல்வியை தொடருவதற்கு நிதியுதவி வழங்குகிறது.

கடந்த 2012 டிசம்பரிலும் 2013 ஜனவரியிலும் வடக்கு, கிழக்கில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் கிழக்கு பல்கலைக்கழக்திலும் வவுனியா பல்கலைக்கழகத்திலும் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களை நேருக்கு நேர் சந்தித்தேன்.

அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பயணத்தில் கிட்டிய அனுபவங்களின் ஊடாக வெளியுலகத்திற்கு சொல்லவேண்டிய செய்திகள் நிறையவுள்ளன. அடுத்தடுத்த தொடர்களில் பதிவுசெய்கின்றேன்.

இந்நிதியத்தின் ஊடாக போரில் பாதிக்கப்பட்ட எமது குழந்தைகளுக்கு உதவவிரும்புவோர் பின்வரும் இணயத்தளத்தை பார்க்கலாம்.
http://www.csefund.org E.mail: kalvi.nithiyam@yahoo.com

(பயணங்கள் தொடரும்)

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.