எகிப்தில் சில நாட்கள். 2

IMG_4766

“அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு கைத்தறிபோல

எகிப்தில் எந்த குடிவகையும் குடிக்க முடியாது என்பதும் எங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்களில் ஒன்று. அது இஸ்லாமிய நாடு. இதன் காரணத்தால் துபாயில் ஆளுக்கு இரண்டு போத்தல்கள் வாங்கியபோது அதற்கு உபரியாக எடுத்துச் செல்ல தள்ளிக்கொண்டு செல்லும் அழகான பெட்டியையும் தந்திருந்தார்கள். அந்தப் பெட்டியை எப்படியும் எகிப்துக்கு எடுத்துச் செல்வது எமது நோக்கமாக இருந்தது.

எகிப்திய விமான நிலையத்தில் இறங்கியதும் ஐரோப்பியரது நிறத்தில் அழகான இளைஞர் ஒருவர் எங்களுக்கான முகவர் என கூறி தன்னை அகமட் என அறிமுகபபடுத்திவிட்டு எங்களுக்கு விசா எடுத்துத்தருவதற்காக பாஸ்போட்டுகளுடன் சென்று விட்டார்.

மனிதர்களை எப்பொழுதும் கூர்ந்து பார்ப்பது எனது இயல்பு. அவுஸ்திரேலியாவில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். கருப்பு நிறமான அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இருந்த இடத்தில் சகல கண்டங்களையும் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்கள். மனிதர்களின் நிறம் மூக்கு கண்; என்ற பனரோமிக்கான இந்த வித்தியாசங்கள் வெவ்வேறு சீதோசணத்திற்கு ஏற்ப பரிணாமமடைந்தபோது உருவாகியது. ஆனால் இப்பொழுது இந்த வித்தியாசங்கள் ஒரே இடங்களில் வாழும்போது விஞ்ஞானிகளின் பரிணாமக் கருத்தும் கட்டுடைபடுகிற வேளையில் படைப்பு கருத்தாக்கமும் கேள்விக்குள்ளாகிறது. இனிமேல் அவுஸ்திரேலியாவில் ஆண்டவனால் படைக்கப்படுபவர்கள் ஏன் வித்தியாசப்படவேண்டும்? அதேபோல் வெள்ளையர்கள் எல்லோரும் அவுஸ்திரேலிய சீதோசணத்திற்கேற்ப பரிணாம கருத்துப்படி கருமையாவார்களா?
விமான நிலையத்தில் உள்ள எகிப்திய மக்களின் நிறமும் பல தரப்பட்டது. தென் ஆபிரிக்காவின் நிலக்கரி நிறத்தில் தொடங்கி ஐரோப்பியரின் வெளிர் நிறம் வரையில் பலவண்ணமேனியர் வாழ்கிறார்கள். எல்லோருக்கும் மூக்கில் மட்டும் ஒற்றுமை இருந்தது. யாழ்ப்பாணத்தில் அந்தக்காலத்தில் மூக்குப்பேணி வீடுகளில் வைத்திருப்பார்கள். சாதி ரீதியில் குறைந்தவர்கள் அல்லது சாதி தெரியாதவர்கள் வந்தால் மட்டும் மூக்குப்பேணி வெளியே வரும் அந்த மூக்குப் பேணியின் மூக்கை நினைவுபடுத்தினார்கள்.
எகிப்தியர்கள் பாதிரிமாரின் நீண்டஅங்கியைப்போன்ற ஆடைகளை அணிகிறார்கள். அந்த உடைகள் பாலைவன வெப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் பகுதி வேட்டி சேலை போல் உள்ளே சென்ற காற்று வெப்பத்தை வெளியேற்றும் காற்றோட்டத்தை உருவாக்கும் உடுப்பு என நினைத்தேன். பெரும்பாலான பெண்களும் முகத்தை தவிர்த்து மற்ற பகுதிகளை ஆடைகளினால் மூடியிருந்தார்கள.; ஆண்களிலும் பெண்களிலும் பெருந்தொகையினர் ஐரோப்பிய உடை அலங்காரத்தில் காணப்பட்டார்கள.;
அகமது இலகுவாக விசாவையும் எடுத்துக்கொண்டு, எங்கள் பெட்டிகளையும் எடுத்துவர உதவி செய்ததால் விமான நிலையத்தை விட்டுச் செல்வது மிகவும் இலகுவாக இருந்தது. மேலும் விமான நிலையத்தில் ரக்சியில் பேரம் பேசுவது போன்ற விடயங்கள் அவசியப்படவில்லை. ஒரு விதத்தில் இந்த பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்காதது கவலையை அளித்தாலும் அரபிய மொழி தெரியாமல் பேரம் பேசுவது இமயமலை ஏறுவது போல் இருந்திருக்கும்

மாலை நேர போக்குவரத்து நெருக்கடியில் ஹொட்டலுக்கு போவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுக்கும் என்று அகமத் சொல்லி விட்டு எங்களை வானில் ஏற்றினார்.

சிகப்பு கலந்த மண்நிற கட்டிடங்கள் நகரமெங்கும் அடுக்கு மாடியாக இருந்தன. வண்ணக் கலவையில் பச்சைக்கு பஞ்சம் இருந்தது. கண்களுக்கு அதிகமான வித்தியாசங்கள் இல்லை.
எகிப்து 7 கோடி மக்களைக் கொண்ட பெரியதேசமாக இருந்த போதிலும் நைல் நதியை அண்டிய பிரதேசத்தில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்.

உலகவரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் பார்த்த தேசத்தின் தலைநகர் கெய்ரோ. அதன் சரித்திரத்தை மேலோட்டமாகவேனும் பார்க்காவிடில் மக்களையோ நகரத்தையோ புரிந்து கொள்ள முடியாது
இப்போது உள்ள கெய்ரோவை புரிந்து கொள்ள சரித்திரத்தின் சில சுவடிகளைப் கொஞ்சம் பார்ப்போம்
கெய்ரோ
தற்போதைய எகிப்து இஸ்லாம் மதத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் நாம் பார்க்கும் சரித்திரம் இஸ்லாமிய மதத்தின் வருகையில் இருந்து தொடங்குகிறது. AD 640 அரேபியாவில்-அக்கால அரேபியா இக்கால சிரியா, ஜோர்டான், ஈராக் மற்றும் அரேபிய வளைகுடா நாடுகளைக் கொண்டது. இந்தப் பகுதியில் இருந்து இஸ்லாம் எகிப்திற்கு சென்றது. சிரியாவின் ஒரு மாகாணமாக மாறியது. அக்காலத்தில் கெய்ரோ தலைநகராக இருக்கவில்லை. புராதன காலத்தில் இருந்து எகிப்தில் பல தலைநகர்கள் இருந்தன. புராதன எகிப்தின் தலைநகரம் மெம்பிஸ். கிரேக்கர் ஆண்டபோது அலெக்சாண்டிரா. கெய்ரோ பிற்காலத்தில்தான் எகிப்தின் தலைநகராகியது. யுனு 969 எகிப்துக்கு படை எடுத்த ருனிசியர்கள் அதனைக் கைப்பற்றினார்கள். (The Fatimid Caliphate- – பத்திமா முகமது நபியின் மகளாகவும் அலியின் மனைவியாகவும்; இஸ்லாத்தின் முக்கியமான இடத்தை வகிப்பவர். இவரது பெயரில்தான் அக்காலத்தில் உருவாகிய வட ஆபிரிக்காவில் பெரிய பிரதேசத்தை உள்ளடக்கிய இராச்சியம் இருந்தது.) கைப்பற்றியதும் அல்-கயிரோ(AL Qahira) பெயரிட்டு உருவாக்கிய நகரம் திரிபடைந்து பிற்காலத்தில் கெய்ரோவாகியது (Cairo). இந்த பாத்திமா கலிப்பேட் அரசு இஸ்லாத்தின் சியா எனப்படும் பகுதியில் இஸ்மயிலியை ((Ismailism)சேர்ந்தவர்கள். ஆனால் அக்காலத்தில் பெரும்பாலான எகித்திய மக்கள் சுனி இஸ்லாமியர்கள். மற்றவர்கள் கொப்ரிக் கிறிஸ்துவர்கள். இவர்கள் எகிப்தை சிலுவை யுத்தகாலம் வரை ஆண்டார்கள்.
சிலுவை யுத்தம் ஜெருசலேத்தை கைப்பற்ற மேற்கு ஐரோப்பா ரோமன் கத்தோலிக்க அரசுகளால் 1096 தொடங்கிய போது பாலஸதீனம் பத்திமா கலிப்பேட்டின்; சுயாதீனமான ஒருபகுதியாக இருந்தது. இந்த சிலுவை யுத்தம் இரு நூறு வருடங்கள் நடந்தது.
ஜேருசலேத்தை ஐரோப்பியரிடம் இருந்து மீண்டும் கைப்பற்றிய சலாடினால்(Saladin) எகிப்து சிரியாவில் ஒரு மாகாணமாகியது. இதன்பின்பு இதன் இடைப்பட்ட சில காலம் பிரான்சிய மன்னன் லுயிஸ் எகிப்தை(1249-1250) ஆளமுயன்றாலும் விரைவில் மாமலுக்கால்(Mamaluke); தோற்கடிக்கப்பட்டார். மாமலுக்கர்கள் சலாடினோடு போர்வீரர்களாக வந்த கோக்கேசிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள்; எகிப்தை பல நூற்றாண்டுகளாக ஆண்டார்கள்
1798 பிரான்சிய தளபதியாக நெப்போலியன் வந்து மலுக்கை தோற்கடித்தாலும் அவர்கள் அதிக காலம் நிற்கவில்லை. இங்கிலாந்தால் தோற்கடிக்கப்பட்டதால் பிரான்ஸ்; வெளியேற 1801இல் அந்த இடத்தை ஓட்டமான் பேரசு என அக்காலத்தில் சொல்லப்பட்ட துருக்கியர் பிரான்சின் வெற்றிடத்தை நிரப்பவந்தார்கள். அப்படி வந்த துருக்கிய படையணியின் தளபதி ஆர்மேனியாவை பிறப்பிடமாக கொண்ட முகமட் அலி. அவரே தற்போதைய நவீன எகிப்தின் தந்தையாவார். இவர் அன்னியராக இருந்த போதிலும் எகிப்தை ஐரோப்பிய நாடுகள் போன்ற அரசை உவாக்குவதற்கு அரச நிர்வாகிகள் தேவை என நினைத்து மாணவர்களை ஐரோப்பா அனுப்பினார். தொழிற்சாலைகள் பாதைகள் பாதுகாப்பு படைகள் என்று ஒரு நவினமான தேசத்துக்கு தேவையான விடயங்களை கட்டமைப்பதிலும் ஈடுபட்டார்.
எகிப்தின் வரலாறு எகிப்தியல் என புதிய ஒரு கல்விப் பகுதியாக பல பல்கலைக்கழகங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. இது வரலாறு மட்டுமல்ல பொறியியல் தொல்பொருளியல் மற்றும் மொழியியல் என பல துறைகளின் சேர்க்கையாகும்.
உலக வரலாற்றில் எகிப்தின் இடம் எவ்வளவு முக்கியமானது எனப் புரிந்து கொள்ள சிறிய தகவல் போதுமானது. வரலாறு பதிவாகிய காலத்திலிருந்து பேசப்படும் வீரர்களில் முக்கியமானவர்கள் மகா அலக்சாண்டர், ஜுலியஸ் சீசர் என்போர் கிறீஸ்துவிற்கு முன்பாக எகிப்;துக்கு வந்து போனார்கள். சிலுவை யுத்தத்தை வென்ற கேடிஸ் முஸலீம் ஹீரோ சலாடின் பின்பு நெப்போலியன் இருவரும் பிற்காலத்தில் வந்து போனார்கள். இப்படியான வீரர்கள் நடந்த மண்ணில் நாம் காலடி எடுத்து வைக்கிறோம் என்பது பெருமையாக இருந்தது.
இதை விட எகிப்தின் பாதிப்பால் பல விடயங்கள் உலகத்தில் நடந்தன. அதில் ஒரு விடயம் நமக்கு முக்கியமானது.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் நடந்த வாணிபம்; ஆரம்பகாலத்தில் சில்க் ருட் எனப்படும் மத்திய ஆசியா வழியே நடந்தது. பல போரால் அந்தப் பாதை மூடப்பட்டபோது பெரும்பாலான கிழக்கு – மேற்கு- வாணிபம் எகிப்;து வழியே நடந்தது. இந்த வியாபாரத்தை அக்காலத்தில் எகிப்தை ஆண்ட மாம்லுக்கியர் தங்கள் கையில் வைத்திருந்தார்கள்;. இதனால் எகிப்து செல்வச் செழிப்பான நாடாக இருந்தது. இந்த ஒற்றைப்படையான வர்த்தகத்தை உடைக்கவே 1498ல் வாஸ்கொடிகாமா கீழைத் தேசங்களிற்கு புதியவழி தேடி தென் ஆபிரிக்காவை சுற்றி இந்தியா வந்தார். அதனால்;தான் இலங்கைக்கு போர்த்துக்கேயர் வந்தனர். பின்னாட்களில் கோட்டை அரசனையும் சங்கிலி மன்னனையும் தோற்கடித்தனர்.
எமது வரலாற்றில் எகிப்தின் தாக்கம் எப்படி இருக்கிறது?
செங்கடலையும் மத்தியதரைகடலையும் இணைக்கும் கால்வாயை நெப்போலியன் கட்ட நினைத்தது பிற்காலத்தில். அதை முடித்தபின் ஆங்கில –பிரான்ஸ் கொம்பனிகள் தங்கள் வசம் வைத்திருந்தன. அதை கமால் அப்துல் நாசர் தேசிய மயமாக்கியது போன்ற விடயங்கள் உலக சரித்திரத்தில் ஆழமாக பதிவான விடயங்கள்.

எனது நண்பன் பிரயாண ஒழுங்கை செய்திருந்ததால் நான் கடைசிவரையும் எந்த ஹோட்டல் என்று கூட பார்க்கவில்லை. பிரயாண விடயங்களை ஒழுங்காக செய்வதில் அவனில்; எனது நம்பிக்கை பலமானது. ஆனால் கிரடிட் கார்ட் பசிபிக் சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்க வேண்டும.; மற்றும்படி எந்தக் குறையும் இல்லை.
எங்களை சுமந்து கொண்டு வந்த வாகனம் வந்து சேர்ந்த இடம் கெய்ரோ மரியட். நைல் நதிக்கு மிக அருகாமையில் மட்டுமல்ல கெய்ரோவின் பிரதான பகுதியிலும் உள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து பல மணித்தியால பயணம் என்பதால் விரைவாக அறைகளுக்கு போய் இளைப்பாறுவது என்பதுதான் எமது நோக்கமாக இருந்தது.
எமது அறையிலிருந்து நைல் நதியை பார்க்கக் கூடியதாக இருந்தது. நாங்கள் வெளியே பார்க்கிறோமோ இல்லையோ அறையின் ஜன்னல் ஊடாக என்ன தெரிகிறது என்பது முக்கியமானது. ஒரு முறை சென்னையில் ஒரு ஹோட்டலில் நடு இரவில் சென்று தங்கிவிட்டு காலை எழுந்ததும் அருகில் ரயில்வே தண்டவாளங்களை பார்த்துவிட்டு உடனே அந்த ஹோட்டலை காலி செய்தேன். அதேபோல் சைகோனில் எங்களுக்குத் தந்த அறையில் ஜன்னலே இருக்கவில்லை . மூன்று பக்கமும் சுவராக இருந்தது. இவ்வளவிற்கும் அமெரிக்கர்கள் கடைசியாக இருந்துவிட்டு தப்பிப்போன ஹோட்டல் சைகோன். உடனே காலிசெய்தேன். இணையத்தில் பதிவு செய்யும்போது எல்லாவற்றையும் காட்டுவார்கள். ஜன்னலைத்தவிர.
விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு எப்படி வெளியேறும் கதவுகள் முக்கியமோ அதேபோல் ஜன்னலும் முக்கியம். பணத்தை கொடுக்கும் போது நமக்கு விரும்பியதை கேட்பது நீதியானதுதானே?
நைல் நதியின் காட்சியில் லயித்துக்கொண்டிருந்த போது அறைக்கு வந்து அரை மணித்தியாலமாக எமது உடைகளைக் கொண்ட பொதிகள் வரவில்லை.
“என்ன பெரிய ஹோட்டல் என்கிறீர்கள். அரைமணிநேரமாக பேக்குகளைக் காணவில்லை” என்றள் எனது மனைவி.
தொலைபேசியில் கஸ்ரமர் சேர்விஸில் கேட்டபோது அந்தக் குரல் “நீங்கள்தானே அந்த இந்திய பெண்மணியோடு வந்தவர். இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்கள் பொதிகள் வந்து சேரும்.” எனச்சொன்னது.
ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருந்தது. மறுபுறத்தில் கோபமாக வந்தது. ஒரு இந்திய அயிட்டத்தை தள்ளிக்கொண்டு வந்த எகிப்தியன் என்ற அர்த்தமா. இல்லை இஸ்லாமிய நாகரீகத்துக்கு ஏற்ப முடிந்தவரை உடலை மறைத்துப் போடும்படி சொன்னதால் பஞ்சாபி உடையை அணிந்து என் மனைவி வந்ததால்; வந்த குழப்பமா என்பது தெரியவில்லை. அவன் சொன்னதை எனது மனைவிக்கு சொல்லியிருந்தால் என்ன நடக்கும் என நினைத்துவிட்டு அமைதியை வேண்டியதால் சொல்லாமல் “விரைவில் பொதிகள் வரும்” என்றேன்
நாங்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்று உடைகளை அணிந்து கொண்டு பெண்களை மட்டும் நமது கலாச்சாரத்தை சுமக்கும் சுமைதாங்கியாக மாற்றிவிடுகிறோம். அவுஸ்திரேலியால் ஏதாவது விசேடத்திற்கு நான் சூட் போட்டால் எனது மனைவி பட்டுச்சேலை கட்டுவது எனக்கே வியப்பாக இருக்கும். இதேமாதிரியான காட்சிகள் எகிப்தில் மட்டுமல்ல துபாயிலும் கண்டேன். ஏவாளால் தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட காலத்தில் இருந்து இனப்பெருக்கத்தின் சுமையுடன் இந்த கலாசார சுமையையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு ஹாயாக முன்னால் நடக்கிறோம். குறைந்தபட்சம் ஐரோப்பியர் பக்கத்தில் நடக்கிறார்கள். ஆசியர்கள் சில அடி முன்னால் நடக்கிறார்கள்.
(தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: