ரொக்கட் செய்த குற்றம் என்ன?

rocket

2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள்.

இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது.

எப்படி என கேட்கிறீர்களா?

மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது.

இதனால் கண்ணீர் விடுவது, கோபம் கொள்வது போன்ற உணர்வின் வெளிபாடுகள் இலகுவானது. அதே நேரத்தில் விடயங்களை அறிவு பூர்வமாக அணுகுவதற்கான தேவை வரும்போது மூளையின் முன்பகுதி வேலை செய்யவேண்டும். இது சிறிது காலம் கடந்து நடக்கும். அத்துடன் சிலவேளைகளில் பெரும்பாலானவர்கள் நடக்கும் திசைக்கு எதிர்திசையில் தனிமையில் பயணப்பட வேண்டியுள்ளது.
இப்படியான சிக்கலை எப்படி கடந்து போவது ?

எவருக்கும் கடினமானனது. இதனால்தான் சட்டங்கள் நீதிமன்றங்கள் என்பன உருவாக்கப்படுகிறது.

தென் சூடானில் இருந்து அகதியாக வரும் மக்கள் அவுஸ்திரேலியாவுக்கு பல இன்னல்களை கடந்து வருகிறார்கள். கென்யாவில் வந்து பல வருடங்கள் அகதிமுகாங்களில் வாழ்ந்து ஆயுததாரிகளின் வன்முறை, போருக்கு கட்டாய ஆள் சேர்ப்பு மற்றும் குழந்தைகளை கொண்டு செல்லுதல் என பல துன்பங்களில் தவிக்கும் போது ஒரு சிலர் மட்டும் அகதிகளாக அங்கீகாரம் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள்.அவுஸ்திரேலியா ஆசியர்களை ஏற்றுக் கொண்டதளவு ஆபிரிக்க நாட்டவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்பது கடினம்.ஆங்கிலம் புரியாமலும் அவுஸ்திரேலிய கலாச்சாரத்திற்கு அன்னியமான நிலையில் அவர்கள் இருப்பதால் பல விடயங்களில் சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளார்கள். அரசாங்கத்தின் உதவிகளில் பல வருடங்கள் வாழும் தேவை அவர்களில் பலருக்கு ஏற்ப்படுள்ளது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டு அகதியாகிய இவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இந்த துன்பமான சம்பவம் நடந்த போது அவர்கள் தங்களது சொந்த வீட்டில் கூட இருக்கவில்லை. அவர்களது வீடு சில நாட்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்ததால் அவர்களது ஒன்று விட்ட சகோதரியின் வீட்டில் தங்கி இருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
அவுஸ்திரேலியாவில் பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலாக அறிந்த செய்திகளின் அளவை கொண்டு ஒரு குடும்பத்தில் துன்பத்தின் அதிகப்படியான அளவு இதுதான் எனக்குத் தெரிந்தவரையில் என நினைக்கிறேன்.

இந்த பெண் குழந்தையைக் கடித்த நாய் பிற் புல் என்ற நாய் சண்டைக்கு என பிரத்தியேகமாக விருத்தி செய்யப்பட்ட இனத்தை சேர்ந்தது. இந்த நாய் அமரிக்காவில் ஆரம்ப காலத்தில் ஒன்றோடு ஒன்று சண்டையில் ஈடுபடுவதற்காக இனவிருத்தி செய்யப்பட்டது. நாய் சண்டை தற்காலத்தில் இல்லாத போதும் இந்த இன நாய்கள் பலரால் விரும்பி வளர்கப்படுகிறது. நமது ஊரில் லுங்கியை உயர்த்திக் கட்டி தங்களை அடையாளப்படுத்துபவர்களை ஒத்த மனநிலையை உள்ளவர்களது அடையாளமாக இந்த நாய் மாறிவிடுகிறது.

மனிதர்கள், நாய்களைப் பொறுத்தவரை கடவுளைப்போல் பல விதமான நாய்களை தங்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இன விருத்தி செய்திருக்கிறார்கள்.

வேட்டைநாய்களில் முயல், பறவை, உடும்பு, பன்றி, மான் இப்படி ஒவ்வொரு விதமான மிருகங்களை வேட்டையாட பலவித நாய்கள் . அதேபோல் பாதுகாப்புக்கு, பனியில் புதைந்தவர்களை கண்டுபிடிக்க, பெண்களில் மடியில் இருப்பதற்கு என பல விதமான தேவைகளுக்கு விருத்தி செய்தது போல் காளை மாட்டோடு சண்டைக்கு என ஒரு நாய்வர்க்கம் , ஒன்றுடன் ஒன்று சண்டைக்கு விருத்தி செய்யப்பட்து இந்த பிற்புல் இனம். இதனது தாடைத் தசைகள் மிகவும் பலம் வாய்ந்துடன் கடித்ததும் பூட்டுப்போல் மூடிக்கொள்ளும். அந்த நாய் விரும்பினாலும் அந்த வாயால் திறந்து கொள்வது கஸ்டமானது.

இப்படியான நாய் குழந்தையை கடித்த சம்பவம் பத்திரிகை தொலைக்காட்சி என பெரிதாக பரபரப்பாகியது. பொதுமக்களிடம் இந்த நாய்களுக்கு எதிரான அபிப்பிராயம் உருவாகியது. அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற அவசரத்தில் விக்டோரிய மாநிலப் பாராளமன்றம் இந்த நாயினத்தை தடைசெய்ப்பட்டது. இதையே மக்கள், ஊடகங்கள் எதிர்பார்த்தார்கள். இப்படி வேறு சில சம்பவங்கள் இந்த வகையான நாய்களால் முன்பும் நடந்ததால் இந்த சட்டம் அவசரமாக விக்டோரிய பாராளமன்றத்தில நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் வந்த போது ஏற்கனவே உள்ள ‘94ம் ஆண்டு இந்த அபாயமான நாய்கள்  பதிவு செய்யப்படவேண்டும்’ என்ற சட்டத்தை திருத்தி இப்படியான நாய்கள் வைத்திருக்க முடியாது என முடிவாகியது

இங்கே எனது கருத்து நாய்களின் குணத்தை பரம்பரை மட்டுமல்ல அவை வளர்க்கப்படும் சூழ்நிலையும் தீரமானிக்கிறது. அதாவது உரிமையாளர் வளர்க்கும் முறை நாயின் குணத்தை தீரமானிக்கிறது. பல ஜாதி நாய்கள் கடிநாய்களாக மாறி இருப்பதற்கு காரணம் உரிமையாளர்கள என்பது பல மிருக வைத்தியரகளது அனுபவம்.

இப்படியான நிலையில் தூய அமரிக்கன் புல் ரெரியர் தடைசெய்யப்பட்டால் கலப்பு நாய்களின் கதி என்ன என்பதும் கேள்விக் குறியாகிறது. இங்கு மிருக வைத்தியர் அத்தாட்சிப்பத்திரம் தேவையாக இருக்கிறது. கலப்பு நாயாக இருந்தும் உருவத்தில் பிற் புல் போல இருந்த ரொக்கட் கதையை நான் சொல்ல வருகிறேன்;.
ஆதர் ஆறடிக்கு மேலான இளைஞன் இருபத்தைந்து வயது இருக்கும். ஆனால் ரீன் ஏஜ் முகமும் ஒலிவ் நிறமும் கொண்ட இளைஞன். இயற்கையாக நட்புறவு கொள்ள வேண்டும் என்றது போன்ற இனிமையான முகத்தை கொண்டவன். ஒரு நாள் அவசரமாக வந்து ‘எனது நாய் ரொக்கட் கவுன்சில் பிற்புல் ரெரியர் என பிடித்து வைத்திருக்கிறார்கள். அதனது டீ என் ஏ பரிசோதிக்க முடியுமா?’ எனக் கேட்டான் நான் தயங்கினேன். இரண்டு காரணங்கள். இதுவரையிலும் அவன் அறிமுகமற்றவன் .அத்துடன் அவனது நாய்களுக்கு நான் எவ்வித வைத்தியமும் செய்யது இல்லை. இரண்டாவது டீ என் ஏ பரிசோதனையை நான் கேள்விப்பட்டாலும் டீ என் ஏ எடுத்து இதுவரையும் பரிசோதிக்கவில்லை.எனக்கு புதிதான விடயம். ஆங்கில சினிமாப் படங்களில் குற்றவாளிகளின் வாய்க்குள் இருந்து சில எச்சிலோடு உயிர்க் கலங்களை சுரண்டி எடுப்பதை கண்டிருக்கிறேன். பிற்புல்லின் வாய்க்குள் கைவிட்டு சுரண்டுவது சாத்தியமானதா என்ற கேள்வி உடனே என் மனத்தில் ஓடியது.

எனது தயக்கத்தை கண்ட ஆர்தர் தனது நாயின் படத்தை காட்டி ‘இந்த நாய், ஒரு நாள் சிறிய ஜக் ரஸ்சலுடன் வெளியேறி சென்ற போது அதைப் பிடித்து இப்பொழுது ஒரு மாதமாக வைத்திக்கிறாரகள்’. அடுத்த படத்தைக் காட்டி ‘இங்கே பாருங்கள் இந்த நாய் எனது இரண்டு வயதுப் பிள்ளையுடன் விளையாடுகிறது. அது மட்டுமல்ல எனது மனைவி இன்னும் சிலமாதங்களில் இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவிருக்கிறாள். இந்த நாய் அப்படி ஆபத்தானதென்றால் நான் வீட்டில் வைத்திருப்பேனா? என்று பல போட்டோக்களை காட்டினான்.

அந்த இருபத்தைந்து வயதான இளைஞனைப் பார்த்து போது பரிதாபமாக இருந்தது.
அந்த நாயின் மேல் அவன் வைத்திருந்த பாசம் எனக்கு அவனுக்கு உதவ வேண்டும என நினைக்க வைத்தது.

இப்பொழுது அந்த நாய்காக விக்ரோரியன் நிர்வாகக் கவுன்சிலில் மேன்முறையீடு செய்திருக்கிறான். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை ஈடுபடுத்தியுள்தாக கூறினான். ஏற்றகனவே மூவாயிரம் டாலர் இதில் செலவாகிள்ளது என்றான்

சாதாரண தொழிற்சாலை தொழிலாளியாக வேலை செய்யும் அவன் ஏற்கனவே தகுதிக்கு மேல் செலவு செய்வு விட்டான் என எனக்கு மனத்தில் பட்டது. இரண்டு வயதுக் குழந்தை அத்துடன் கற்பிணியான மனைவியுமாக உள்ள அவனை நினைத்த போது பாவமாக இருந்தது. அவன் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறும் சாத்தியம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறி. சூடானிய குழந்தையின் சம்பவத்தின் பின்பு இந்த பிற்புல் பெயரையே பலர் கேட்க விரும்பவில்லை என்பது வானெலிகளில் பேசுபவர்களிலும் பத்திரிகை வாசகர்கள் கடிதத்திலும் பார்க்கக கூடியதாக இருந்தது.

முடிந்த உதவியை செய்ய ஒப்புக்கொண்டதும் அடுத்த கிழமை வந்து என்னை காரில் கூட்டிக் கொண்டு போவதாக சொன்னான். கவன்சிலில் அவனது நாயை சென்று பார்பதற்கு அனுமதி எடுக்க வேண்டும்.

உடனடியாக இரத்தத்தை பரிசோதிக்கும் லபோரட்டரிக்கு போன் செய்து விசாரித்த போது இரத்தத்தை எடுத்து அனுப்பினால் தங்களால் டீ என் ஏ பரிசோதனையை செய்யமுடியும். முடிவுகள் அறிந்து கொள்ள மூன்று கிழமை செல்லும் என்றும் அதற்கான தொகையை சொன்ன போது நான் இரத்தத்தை பரிசோதிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்

அடுத்த கிழமை இரத்தத்தை எடுப்பதற்கு எனது உதவியாளருடன் டோக் பவுண்ட் எனப்படும் நாய்களை வைத்திருக்கும் இடத்திற்கு சென்ற போது ஒரு சிறைச்சாலைக்கு சென்ற அனுபவமாக எனக்கு இருந்தது. வாசலில், வரவேற்பு அறையில் கவுன்சில் உத்தியோகத்தின் யுனிபோம் அணிந்திருந்தார்கள். பலர் எங்களுக்கு முன்பு காத்திருந்தார்கள். நாங்களும் வாசலில் அரைமணிநேரம் காத்திருந்து அனுமதியுடன் அங்கு வேலை செய்பவர்கள் மூவருடன் உன்ளே சென்றோம். நிரை நிரையான சிறைச்சாலை போன்ற இரும்புக் கம்பியாலான கூடுகள் ஒவ்வொரு கூட்டிலும் ஒரு நாயாக அங்கு பல நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. நாய்களுக்கு பிறைவசி தேவை இல்லை என்பதால் நாலுபக்கமும் கம்பியால் பார்க முடியும்.

நாய்களில் பெரும்பலானவை வீட்டை விட்டு ஒடி வந்தவை. விக்டோரிய மாநில சட்டத்தின்படி ஏழுநாட்கள் இங்கு இருக்கும். அக்காலத்தில் சொந்தக்காரர் வந்து தண்டம் செலுத்திவிட்டு வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். அப்படி இல்லாத நாய்கள் வயதானவையானவையானால் கருணைக் கொலை செய்யப்படுவதும் இளம் நாய்கள் சுவிகாரத்துக்கு தயாராக இருக்கும். தற்பொழுது எல்லா நாய்களும் மைக்கிரோ சிப் என்ற கம்பியுட்டர் சிப்பால் அடையாளமிடுவதால் சொந்தக்காரர்களை உடனடியாக அறிந்துகொள்ள முடியும்.

அந்த கூண்டுகளில் இரண்டு நாய்கள் அபாயமான நாய்கள் என்று தடுத்து வைக்கப்பட்டிருந்தது.இதில் ரொக்கட்டும் ஒன்று. செங்கட்டி நிறமும், விரிந்த தலை, கம்பீரமான தோற்றத்தை கொணட மூன்றே வயதான ரொக்கட்டை ஆரம்பத்தில் அவதானமாக அணுகி பின்பு அதனது கண்களில் எந்த அபாய அறிவிப்பு இல்லாததால் தலையில் தட்டிக்கொடுத்தேன். என்னை நக்கத் தொடங்கியதும் சில நிமிட நேரம் அதைத் தடவிட்டு பின்பு ஆசுவாசமாக அதனது முன் காலில் இருந்து இரத்தத்தை எடுத்தேன். அங்கு வேலை செய்பவர்களிடம் விசாரித்த போது ரொக்கட் மிகவும் சினேகமான நாய் என்றார்கள். ரொக்கட்டைப் பார்த்த போது அது கலப்பு நாய் என்பது புரிந்தது.

என்னுடன் வந்த ஆதரை, அங்கு பொறுப்பாக இருந்தவர்கள் நாயைத் தடவவோ அல்லது அந்தக் கூட்டின் உள்ளே செல்லதற்கோ அனுமதியளிக்க மறுத்து விட்டார்கள்.
சிறைக்கைதிகளை உறவினர்கள் தொடமுயல்வது போல் ஆதர் கண்கலங்கிய படி கம்பிகளிடையே கையை விட்டு தடவியது எனக்கும் மனதைக் கரைத்தது.
இப்படியான கட்டுப்பாடு தேவையற்றதாகப் பட்டது.

ஏற்கனவே ஒரு மாத சிறையை அனுபவித்துவிட்டது ரொக்கட். அக்காலத்தில் ரொக்கட் அந்த சிறையில் இருக்கும் காலததிற்கு உணவுக்கும் சிறை செலவுக்கும் ஆதரே பணம் செலுத்தவேண்டும் என அறிந்தேன்.

முடிவுகள் வந்ததும் எனக்கே வியப்புத்தருமளவு பன்னிரண்டு வீதமே அமரிக்கன் பிற் புல்லின் மரபு அணு இருந்தது. மற்றவவை பல்வேறு நாய்களின் மரபு அணு சாதாரண வார்த்தையில் சொல்லும்போது ரொக்கற்றின் பூட்டன் அமரிக்கன் பிற்புல்லாக இருந்திருக்கிறது. இந்த விடயத்தை கடித மூலம் கொடுத்துவிட்டேன். மரபணுப்படி இது கலப்பு நாய்.

ஆனால் கவுன்சிலை சேரந்தவர்கள் இந்த நாயை வேறு ஒரு மிருக வைத்தியரிடம் கொண்டு சென்ற போது அவர் உடல் அங்கங்களைப் பார்த்து இந்த நாய் பிற்புல் வகையை சேர்ந்தது என தனது அறிக்கையில் எழுதிக் கொடுத்தார்.

ஆதருக்கு வேறு வழியில்லை. நாய்கள் ஷோவில் அங்கம் வகிக்கும் ஒருவரை வைத்து அறிக்கையை தயார் பண்ணியபோது அவரது முடிவும் இந்த நாய் கலப்பினம் என்பதாக இருந்தது. அவரது அறிக்கை விபரமாக படங்களுடன் நீள அகலங்களை அளந்து விபரிக்கப்படடிருந்து.
இப்படியான முரண்பட்ட அறிக்கைளால் விக்டோரியா ரைபியுனல் எனப்படும் நீதிமன்றத்துக்கு இணையான ஒரு நடுவத்திற்கு இந்த கேஸ் எடுத்து செல்லப்பட்டது.

இந்த ரைபியுன் நிதிமன்றங்களுக்கு செல்ல தேவையில்லாத வழக்குகளை தீர்பதற்காக உருவாக்கப்பட்வை இங்கு தலைவர் மற்றும் வழக்கறிஞர் இருப்பார்கள் ஆனால் வழக்கறிஞர் இல்லாமலும பேச முடியும். இதனால் அதிக பணம் செலவு ஏற்படாது.

ஆர்தரின் சார்பில் அங்கு சென்றபோது கவுன்சிலுக்காக வழக்கறிஞர் ஒருவரும் வாதாடினார். நாய் ஷோக்களில் அங்கம் வகிக்கும் நீதிபதியும் வந்திருந்தார்.
மிருக வைத்தியர், மற்றும் கவுன்சில் உத்தியோகத்தர் சாட்சி சொன்னாரகள் .
ஆர்தருக்காக ஒரு வழக்கறிஞர் இல்லாத இளம் பெண் வாதாடினார். அவருக்கு சார்பாக இரண்டு சமூகவியலில் டாக்டர் பட்டம் செய்த பெண்கள் உதவியாகவும் இருந்தார்கள். ஆதருக்கு சார்பாக வந்தவர்கள் எவரும் பணம் பெறாமல் தனார்வமாக ரொக்கட்டிற்கு அநியாயம் நடந்தது என நினைத்து உதவி செய்ய வந்தவர்கள்.

ஆரம்பத்திலே உருவ அமைப்பை மட்டும் வைத்தே விக்ட்டோரிய மாநில சட்டம் விபரிக்கப்பட்டிருப்பதால் ரொக்கட்டின் தலைவிதியும் உருவ அமைப்பின் மூலம் கீரமானிக்கபடி வேண்டும இங்கே நீதிமன்றங்கள் எங்கும் சட்டத்தை நிலைநிறுத்துவதேயல்லாமல் நீதியையல்ல என்பது தெளிவாகிறது. சட்டத்தில் டி என் ஏ குறிப்பிடப்படவில்லை என்பதால் எனது சாட்சியம் ஆரம்பத்திலே நிராகரிக்கப்பட்டது. நான் கடைசிவரையும பார்வையாளராகவே இருந்தேன்.

இநத வழக்கில் மற்ற வைத்தியரது அறிக்கை ரொக்கட்டின் உருவ அமைப்பை வைத்து இருந்தாதால் முக்கியமாகியது.அவரது சில அனுமானங்கள தவறாக இருப்பது குறுக்கு விசாரணையில் வெளிவந்தது..

நாய் ஷோக்களில் அங்கம் வகிக்ப்பவர் சாட்சியம் எனது பார்வைக்கு சரியாகவும் இருந்து.

நான்கு மணிநேர வழக்கை கேட்ட பின்பு தீர்ப்பு ஏமாற்றமாக இருந்தது. காரணம் விக்டோரிய சட்டம் நாயின் வெளிதோற்றத்ததை வைத்து இருப்பது. மிருக வைத்தியரின் சாட்சியத்திற்கும் அவரது அறிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரொக்கட் கொலைக்களத்துக்கு போக வேண்டும் என இருந்தது. இந்த தீர்ப்பை மேன்முறையீடு செய்ய ஒருமாத அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த தீரப்பு எனக்கு ஏமாற்றத்தை தந்த போதும் ஒரு நான்கு மணித்தியாலங்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாயின் உயிருக்காக விவாதித்தது என்பது முக்கியமாகத் தோன்றியது.

தற்போது வழக்கு மேல்முறையீட்டில இருப்பதால் இன்னும் ரொக்கட் உயிர் வாழ்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் எனக்கு பல விடயங்களை தெரிந்துகொள்ள ரொக்கட் காரணமாக இருந்தது.
click this link http://www.facebook.com/photo.php?v=10151285638711711&set=vb.323124094447754&type=2&theater

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: