நேர்காணல் 6

 

14 )ஆனால் நீங்கள் இப்படிக் கூறினாலும் பொதுத்தளத்தின் உணர்கையும் அதனுடைய செயல்வழியும் வேறாகவே உள்ளது. அதனால் நீங்கள் கூறுவதைப்போல தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் -சுயவிமர்சனம் செய்தல்- தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல் போன்றனவற்றை எப்படிச் சாத்தியப்படுத்துவது? பல்கலைக்கழகங்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இனவாத மயப்பட்டிருக்கும் ஒரு சூழலில் இதற்கெல்லாம் சாத்தியமுண்டா?

ஓவ்வொரு சமூகமும் வழக்கமான சிந்தனையோட்டத்தில் இருந்து நவீனமான சிந்தனைக்கு போவது இலகுவான காரியமல்ல. இதை முன்னெடுத்து செல்ல அறிவுஜீவிகள் தத்துவமேதைகளால்தான் முடியும். நமது மண்ணில் இனவாத நச்சு விதைகள் பலகாலமாக விதைக்கப்பட்டு அவை உயிர்களாகவும் ஊனங்களாகவும் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அந்த நச்சுச் சூழல் நம்மைச்சூழ்ந்து பல நாள் சுத்தப்படுத்தாத பொதுக் கழிப்பிடம் போல் நாறுகிறது. இலக்கியத்தமிழில் சொல்வதென்றால் புலி போனாலும் கவிச்சி வாடை போகாத மலைக் குகைபோல்… இந்த நிலையில் இலங்கைத் தமிழ் சமூகமாகிய நாங்கள் தற்போது விழுந்திருக்கும் குழியைச் சுற்றிக் கொண்டிருக்காமல் நாம் அதற்குள்ளிருந்து எழும்பி வெளியேறமுடியுமா எனப் பார்க்க வேண்டும். அந்தக் குழியை மேலும் ஆழமாக தோண்டக்கூடாது.

வரலாற்றில் பல சமூகங்கள் பல இடர்ப்பாடுகளை யுக்திகளால் கடந்து வந்திருக்கின்றன. இதில் ஆயுதப் போராட்டம் ஒரு பகுதி. அதற்கப்பால் பல வழிமுறைகள் உள்ளன. இவைகள் சாத்தியம் சாத்தியமில்லை என்பதை விட எமது இனத்தை தொடர்ச்சியாக வாழவைக்கக் கூடிய வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம் மாற்று வழிகளின் சாத்தியத்தை சாதாரண மக்கள் சிந்திப்பதற்குத் தூண்டவேண்டும். இதன் பின்பு அரசியல்வாதிகளுக்கு சமூகத் தலைவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அதைக் கையாள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். அரசியல்வாதிகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இல்லை. பதவிக்காக எது இலகுவாக இருக்குமோ அதைச் செய்வது தான் அவர்களது வழக்கம். சிங்கள அரசியல்வாதிகளுக்கு உள்ள வசதி அவர்கள் பெரும்பான்மை மக்கள் மத்தில் இனவாதத்தைப் பேசி இலங்கையில் ஆட்சிக் கட்டிலில் ஏறமுடியும். அதே போல் தமிழ் அரசியல்வாதிகள் இலகுவாக சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார்கள் என ஒரு சூனியவாதத்தை சொல்லி வாக்குகளைப் பெறுகிறார்கள்.

எமக்கு இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதர்களின் வழி முறைகள் தற்போது பாடமாக இருக்கவேண்டும். அவர்கள் மொழியில் வேறுபட்டும் சமய ரீதியில் எங்களைவிட முரண்பாடுகள் அதிகம் கொண்ட போதும் ஆட்சியில் பங்கேற்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகிறது?

கிழக்கு மாகாணத்தில் அமைச்சராக சிலகாலம் மட்டும் இருந்து அஷ்ரப் சாதித்த விடயங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் சேர்ந்து அரை நூற்றாண்டுகளாக சாதித்த விடயங்களை விட பலமடங்கு அதிகம். இது எப்படி என எமது தலைவர்களைத் தமிழ் மக்கள் கேட்டார்களா? இது வேண்டாம். மலையகத் தமிழர்கள் எவ்வளவு கீழ்நிலையில் இருந்தார்கள்? ஒரு காலம் அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. இப்பொழுது அவர்களின் நிலைமை எவ்வளவோ மேல். இதெல்லாம் இறந்த தலைவர் தொண்டமானால் உயர்த்தப்படவில்லையா?

இந்த விடயங்களை மற்றைய சமூகங்கள் சாதித்த போது அங்கு உயிர் இழப்பில்லை. இரத்தம் சிந்தவில்லை. சிறைகள் நிரப்பப்படவில்லை. குண்டுகள் தலையில் விழுந்து பெற்ற பிள்ளைகள் சாக வில்லைத்தானே?

ஒப்பீட்டளவில் இந்த இரு சமூகத்திலும் பார்க்க இலங்கைத்தமிழர் கல்வியில் மேம்பட்டவர்களாக அக்காலத்தில் இருந்தோமல்லவா? எங்கள் கல்வி அறிவு எங்கே கொண்டு போய்விட்டது? அகதி முகாம்களிலும் கடலின் அடியிலும் தானே? இங்கே தவறு யாரில் உள்ளது? நான் கேட்கும் கேள்வியை வெளிநாடுகளில் பாலர் பாடசாலை குழந்தை கூட கேட்கும்.

செம்மறிகள் கூட நல்லாயனை தங்கள் மேய்ப்பனாக இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு பெற்ற போது நமக்கு மட்டும் இருபதாம்; இருபத்தொராம் நூற்றண்டில் ஏன் இந்த தலைவிதி? என இனியாவது சிந்திக்க வேண்டாமா?

15)இலங்கையில் இன ரீதியான அரசியலின் எதிர்காலம் எப்படி அமையும்? இதற்கு முடிவு உண்டா? அல்லது தொடருமா? தொடருமாக இருந்தால் அதன் விளைவுகள் எப்படியாக இருக்கும்?

தமிழ்மக்களின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தங்கி இருக்கிறது. தலைமயிர் வெட்டுவதற்கு யோசித்து சிறப்பானவர்களிடம் தான் போவது எமது வழக்கம். அட மயிர் வெட்டுவதற்கே சரியான ஆளைத்தேடுகிறோம். ஆனால் எம்மைத் தலைமை தாங்கும் பொறுப்பை பொன்னம்பலம்- செல்வநாயகம்- அமிர்தலிங்கம் என சந்தர்ப்பவாத தலைவர்களின் கைகளில் கொடுத்தோம். அதற்குப் பிறகு நடந்தவை விமானத்தில் இருந்து விழுந்தது போன்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. அவற்றை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்த நிலை தொடருமானால் எமக்கு விமோசனமில்லை. அதன் விளைவுகள் இலங்கையில் தமிழினம் இருந்தது என தற்போதைய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பொ. இரகுபதி- பேராசிரியர் சிற்றம்பலம் போன்றவர்களின் எழுத்தில்தான் இருக்கும்.

இந்து சமயப் பழக்கங்கள் மற்றும் தமிழ்ப் பாரம்பரியத்தை சிங்களம் பேசும் மக்கள் பின்பற்றுவார்கள். நம் மக்களில் எஞ்சியவர்களைக் கொண்டு அமையும் தமிழ்ப் பிரதேசங்கள் நீர்கொழும்பு மாதிரியான தோற்றத்தை கொடுக்கும். இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமே தமிழைத் தங்கள் வீட்டு மொழியாக பாவித்துப் பல இஸ்லாமிய சகோதர சகோதரிகளால் தமிழ் கவிதைகள் இணையங்களில் எழுதப்படும். வெளித்தொடர்பு மொழியாக சிங்களத்தை உபயோகிப்பார்கள். இப்படியான அனுமானிப்பை மீறி அதிசயமாக ஏதாவது நடக்கலாம். ஆனால் நிச்சயமாக இந்தத் தலைமுறையில் மாற்றங்கள் நடக்க தற்போதைய தமிழ்த் தலைவர்களும் பத்திரிகைகளும் இடம் கொடுக்காது.

16)இலங்கை அரசியல் முறைமை அல்லது ஆட்சிமுறை என்பது பல நெருக்கடிகளை இலங்கையர் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை விட்டு வெளியேறியோரையும் அது விட்டு வைக்கவில்லை. புறவயத்தில் இல்லையென்றாலும் அக நெருக்கடிகளுடன் வாழ்கின்ற இலங்கையர்களையே அது எங்கும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் எதிர்கால இலங்கை -நிகழ்கால இலங்கை குறித்த உங்கள் சிந்தனை என்ன?

இலங்கை அரசியல் முறைமையின் நெருக்கடி என்பது எல்லோருக்கும் பொதுவானது. இது குறைபாடுகள் அற்றது என நான் சொல்லவில்லை. ஆனால் தென்னாசியாவில் உள்ள நாடுகளோடு ஒப்பிடம் போது சமூக பொருளாதாரம்- சுகாதாரம்- கல்வி போன்ற விடயங்களில் நாம் பல வருடங்கள் முன்னேறி இருக்கிறோம். இவற்றிற்கு எது காரணம்? ஒப்பீட்டளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிக குறைந்த நாடு எமது தாய் நாடு. பொருளாதாரத்தில்- கல்வியில் பெண்களின் பங்கு என பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானது. சாதி சமயம் என்பன எமது நாட்டில் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இல்லை என்ற விடயம் இந்தியாவில் வசித்தபோது புரிந்து கொண்டேன் ஒப்பீட்டளவில். “யன்னல் வழியே பார்த்தால் மனைவியும் அழகியே “என்ற ஒரு கூற்றைப்போல் வெளிநாட்டில் இருந்து பார்க்கும்போது இது எனக்குத் தெளிவாகிறது..

இதற்கு அப்பால் தற்போதைய அரசியல் அமைப்பு விகிதாசாரத்தில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதால் சிறுபான்மை மக்களை அரசு அணைத்துப் போக வேண்டிய கட்டாயத்திலே வைத்திருக்கிறது. தற்போது 21 அரசியல் கட்சிகளை சேர்த்துதான் இலங்கை அரசு அமைந்துள்ளது. இதன் மூலம் பலரது சம்மதத்துடன்தான் அமைச்சரவை முடிவுகள் ஏற்கப்படுகிறது. தமிழராக நாம் 77ம் ஆண்டின் பின்பு வந்த நிலைமையை பயன்படுத்தாதது மிகவும் சோம்பேறித்தனமானது.

மலையகத் தமிழர்களுக்கு தொண்டமானும் இஸ்லாமியர்களுக்கு அஷ்ரப்பும் பின்னால் வந்த தலைவர்களும் இதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஜனநாயகம் என வாய்கிழிய கத்துவதை விட அதில் உள்ள நுட்பங்களை மக்கள் நன்மைக்காகப் பாவிக்கத் தெரிய வேண்டும். எங்கும் அரசியல் அமைப்புகள் கருங்கல்லை- பாறையைப் போன்றவை அல்ல. ஆங்கங்கே பல இடங்களில் மக்களுக்கு பலனளிப்பதை பிரயோசனப்படுத்த வேண்டும். வரிச்சலுகையில் வரும் காரை வாங்கி லாபம் எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் விடயம் என்று வரும்போது ‘இனவாத அரசு’ என்பார்கள்.

இது எப்படி இருக்கென்றால் இந்துக்கல்லூரியில் நான் படித்த காலத்தில் அங்கே ஒரு நகைச்சுவைக் கதை பேசுவோம். ஒரு சோம்பேறி ராணித் தியேட்ருக்கு படம் பார்க்க கலரி எனப்படும் பென்ஞ்சுகளைக் கொண்ட பகுதிக்கு லுங்கி அணிந்தபடி இரண்டாம் ஆட்டத்தை பார்க்க நண்பர்களுடன் சென்றான். அந்தப்படம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர். சோகப்படம். ஆரம்பத்தில் இருந்தே அந்த சோம்பேறி அழுவதைப் பார்த்த நண்பர்கள் இவன் சிவாஜி கணேசனின் சோக நடிப்பில் அழுகிறான் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். படம் முடிந்தும் கூட அவன் அழுதபடிதான் இருந்தான்.

‘ஏண்டா இப்ப அழுகிறாய் அதுதான் படம்; முடிந்து விட்டதே’ என்றான் அவனது நண்பன்.

‘இல்லே என்ரை விதை நீங்கள் இருந்த இரண்டு பென்ஞ்சுகளுக்கு இடையில் சிக்கிவிட்டது. எழுப்ப முடியவில்லை. அந்த நோவில்தான் அழுதேன்’ என்றான் சோம்பேறி.

‘எங்களைத் தட்டி எழுப்பி இருக்கலாமே? மடையா’ என நண்பர்கள் கடிந்து கொண்டார்கள்.

அந்த சோம்பேறியின் படிமத்தை எமது தலைவர்களிடம் பார்க்க முடியும்.

17)அரசியல் ரீதியாக ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் இலங்கை அரசாங்கத்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டுக்கு நீங்கள் வரவேண்டிய காரணமென்ன? இந்த அபிப்பிராயத்துக்கு எதிராகவே பெரும்பான்மையான தமிழர்கள் நிற்கிறார்களே அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அவர்களுடைய நிலைப்பாட்டின் நியாயத்தன்மைகளை நீங்கள் பரிசீலிக்கவில்லையா? ஏனென்றால் அவர்கள் தமிழர்களில் பெரும்பான்மைத் தரப்பினர்களாக உள்ளனர்?

இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் கொள்கை ரீதியில் எனக்குப் பிரச்சினை இல்லை. காரணம் அரசாங்கம் இலங்கையில் வாழும் மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதில் எப்படிக் குறைகாணமுடியும்? எனது பிறந்த பூமி. அத்துடன் எனது கல்வி- நான் இன்று இருக்கும்; நிலை எல்லாவற்றிற்கும் அந்த நாடே பொறுப்பானது. மேலும் அங்குள்ள மக்கள் அரசாங்கத்தைத் தமது விருப்பத்தின் படியாகத் தெரிவு செய்கிறார்கள். அதுவும் ஜனநாயமுறையில். அந்த உரிமையை நான் மதிக்கிறேன். இன்றைய அரசாங்கம் மாறி நாளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வந்தாலும் எனது நிலை மாறாது.

சில விடயத்தை இங்கே குறிப்பிடவிரும்புகிறேன். இலங்கையில் எது செய்தாலும் அரசியலமைப்பை மாற்றுவதற்கு இந்த மூன்றில் இரண்டு பாராளுமன்ற வலிமை அவசியம். அந்த வலிமை ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் பின்பு தற்போதய அரசாங்கத்திடம் உள்ளது. இதன்பின் இலங்கையில் சம்பந்தன் ஜனாதிபதியாக வந்தாலும் அரசியலமைப்பை மீறிச் செய்ய முடியாது.

கடைசியான ஒரு காரணம் அது மனரீதியானது. தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ராஜபக்ஷவிற்கு சிங்கள மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அந்தச் செல்வாக்கு இன்னும் பலவருடங்கள் நீடிக்கும். இந்த நிலையை அவர் உணர்ந்து உள்ளார். அதனால்தான் எந்த வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் போர்க்காலத்தில் இருந்து அவர் தலைபணியவில்லை. இவ்வளவு கால இலங்கைப் பிரச்சினைகள்- குவித்து விட்ட கடந்த கால குப்பைகள் என அவரிடம் தள்ளப்பட்டிருக்கிறது. மெதுவாக சுத்தப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. குறைந்த பட்சம் தமிழர்கள் நிம்மதியாக குழந்தைகளுடன் குடும்பத்துடன் உறங்குவதற்கு யார் காரணம்? ஆனால் ஒரு கை தட்டினால் ஒலி கேட்காது.

18)என்றாலும் உங்கள் கருத்தும் நிலைப்பாடும் தமிழ் மக்களின் புரிதலில் ஏற்படுவதற்கு சாத்தியக் குறைபாடுகள் உண்டே?

இங்கே இது எனக்கு மட்டுமான பிரச்சினையில்லை. காலம் காலமாக வித்தியாசமான விடயத்தை எடுத்துக் கூறும் போது அதை ஏற்காத தன்மை மக்களிடம் உள்ளது. உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவில் இருந்து இன்று புவி உஷ்ணமாகிறது எனக் கூறுபவர்கள் வரையில் இந்த விதியுள்ளது. தமிழ்ச்சமூகம் வீண் பெருமையும் பழமையும் மட்டும் பேசும் சமூகமாகி இருந்தது. தற்பொழுது மற்ற சமூகங்கள் அறிந்த- செய்யாத விடயங்களில் தான் ஒரு ஒட்டுண்ணியாக வாழ்ந்து வருகிறது. அதாவது கல்வி- சுகாதாரம்- மருத்துவம் போன்ற விடயங்கள் மேற்கத்தையரின் கல்வி கற்றவர்களால் சுமக்கப்பட்டு எமது சமூகம் அனுபவிக்கிறது. உதாரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் வேலைசெய்யும் வைத்தியர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

துரதிருஷ்ட்டவசமாக சமூக அறிஞர்கள்- கல்விமான்கள்- மனவியலாளர்கள் போன்றோரை எமது சமூகம் அதிக அளவில் உருவாக்கவில்லை. அறுபதில் காத்திகேசு மாஸ்டர் போன்றவர்களின் பின்பு இலங்கைத் தமிழ்ச் சமூகம் மீண்டும் சூல் கொள்ளவில்லை. அப்படி ஓர்- இருவர் வரும் சாத்தியத்தையும் விடுதலைப்புலிகள் இயக்கம் கருக்கலைப்பு செய்து சமூகத்தை கடந்த முப்பது வருடமாக மலடாக்கி விட்டது. இப்படியான பாலைவனச் சூழ்நிலையில் நான் மட்டுமல்ல யார் எது சொன்னாலும் புரிவது கஸ்டமாக இருக்கும். அதுவும் நம்வர்கள் புரியாத விடயத்தை பலமாக எதிர்ப்பார்கள். அல்லது அதற்குப் புது விளக்கம் கொடுப்பார்கள்.

இங்கும் ஒரு கதை சொல்கிறேன். நான் பேராதனையில் இரண்டாம் வருடம் படித்தபோது அங்கு நடந்த விஞ்ஞானப் பொருட்காட்சியில் என்னை இரத்தம் சம்பந்தமான மாடல்களை மக்களுக்குப் புரியவைக்க பொறுப்பாக விட்டிருந்தார்கள். பெரும்பாலான மக்கள் கண்டியில் இருந்து வந்த சிங்கள மக்களே.அவர்கள் என்னுடைய விளக்கத்தை உடைந்த சிங்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என்னோடு இந்துக்கல்லூரியில் ஒன்றாகப் படித்த யாழ்ப்பாணத்து நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் ஒரு இரட்டையர்கள். பரீட்சையில் மூன்று முறை தோல்வியடைந்து பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் அப்பொழுது கணக்கியலில் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரியல் மற்றும் விலங்கியல் பன்னிரண்டாம் வகுப்பில் படித்தவர்.

‘உனது இரத்தம் என்ற விளக்கத்தில் தவறு உள்ளது’ என்றார்.

‘இந்த விளக்கத்தைதான் பேராசிரியர் சொன்னார்’ என சிரித்தேன்.

அதற்குப் பின்னும் அவர் தவறு என்பதைச் சுட்டிக்காடுவதை நிறுத்தவில்லை. உள்ளுக்குள் நினைத்தேன். இவன் தவறு காணவென்று கொழும்பில் இருந்து வந்திருக்கிறான் என

19)நல்லிணக்கம் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் அரச தரப்பிலிருந்து ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிங்களத்தரப்பிலிருந்துதான் முதற் சமிக்ஞைகள் வரவேண்டும். அங்கிருந்தே நல்லூற்றுத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் காணவில்லையே?

ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்துதான் முதல் சமிக்கை வரவேண்டும் என்பது கேட்பதற்குச் சரியாக இருந்தாலும் இலங்கை அரசின் மேல் போரைத் துவக்கியவர்கள் தமிழர்கள். 70 ஆரம்பத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ‘துரோகிகளுக்கு இயற்கையான இறப்பில்லை’ என கர்ச்சித்து அரசோடு சேர்ந்த தமிழர்களையும் அரச ஊழியர்களையும் கொலை செய்வதில் இருந்து தொடங்கிய போராட்டமல்லவா?

அது மட்டுமா? போர்நிறுத்தங்களை முறித்து போரை தொடக்கியது அத்துடன் போரை அப்பாவிமக்கள் மேல் திணித்தது நாமல்லவா?.

ராஜபக்ஷாவா இல்லை பொன்சேகாவா மக்களை முள்ளிவாய்க்காலுக்கு கட்டாயமாக அழைத்துச் சென்றது?

இதற்கு உண்மையாக எத்தனை பேர் மன்னிப்பு கேட்டோம். இலங்கை அரசாங்கத்தை விடுங்கள். எந்த முக்கியமான தமிழ் அரசியல்வாதி இஸ்லாமிய மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனந்த சங்கரி மட்டும் தமிழ் அரசியலில் தவறுகளை ஒப்புக்கொண்ட ஒரே மனிதர். ஆனால் அவருக்கு எத்தனை தமிழர்கள் வாக்களித்தனர்? இப்படியான நிலையில் அரசாங்கத்திடம் இருந்து முயற்சியை எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். நல்லிணக்கம் எல்லோருக்கும் அவசியம். ஆனால் தமிழர்கள் இதயசுத்தியோடு சாதாரண சிங்கள -இஸ்லாமிய மக்களோடு இணையும் போது அரசாங்கம் அந்த விருந்திற்கு வந்தே தீரவேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்களில் வானவில் என்ற அமைப்பை உருவாக்கி நண்பர்களின் பங்களிப்புடன் பங்களித்து வருகிறீர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய அவசியப்பணியே. இந்த மாதிரிச் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

என்னைப் பொறுத்தவரை நான் இலங்கையை விட்டு விலகிய காலத்தில் இருந்து அரசியல் பேச்சோடு அல்லது எழுத்தோடு மட்டும் இருந்து விடாது கடந்த கால்நூற்றாண்டுகளாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ் நாட்டில் மூன்றுவருடங்கள் மருத்துவ நிலையத்தை தமிழ் அகதிகளுக்காகவும் பின்பு ஏழு வருடங்கள் இலங்கைத்தமிழ் அகதிகள் கழகம் என்ற அகதிகள் அமைப்பிலும் மெல்பேனிலும்; பின்பு 12 வருடங்கள் ‘உதயம்’ பத்திரிகை எனவும் தொடர்ச்சியாக வேலை செய்தேன். அதன்பின் ‘எழுவைதீவு வைத்தியசாலை’ எனது சொந்த முயற்சியினால் உருவாக்கப்பட்டது. அதனது முடிவில்தான் இந்த விதவைகளுக்கு உதவும் திட்டம் ஆரம்பமானது. இவற்றில் உள்ள பொதுவான இயல்பு நான் செய்தவைகளின் பலன்களை கண்ணால் காணமுடிந்தது. இவைகள் சிறிதாக இருந்த போதிலும் மனச்சாந்தி தருபவை. மிருக வைத்தியரான என்னால் நான் செய்த வைத்தியத்தின் விளைவுகளை உடனே பார்ப்பது எனக்கு சந்தோசத்தை கொடுப்பதாகும். அதுபோன்ற விடயம்தான் இவைகளும்.

இலங்கையில் மனித உரிமையை நிலை நாட்டுதல்- அரசாங்கத்தை மாற்றுதல் அல்லது பாட்டாளி சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துதல் போன்ற பெரிய விடயங்களில் ஈடுபட்டு பயனில்லாமல் இருப்பதை விட முடிந்த விடயங்களில் மாற்றத்தை ஏற்றுபடுத்துவது எனக்குப் பிடித்தது. அதாவது புதரில் இருக்கும் பல பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேலானது.

20)போரின் முடிவுக்குப் பிறகு இலங்கைக்குப் பல தடவைகள் பயணித்துள்ளீர்கள். போர் நடந்த வன்னி மற்றும் பிற பகுதிகளுக்கும் போய் வந்துள்ளீர்கள். இங்கெல்லாம் ஒவ்வொருவரின் மனநிலை- வாழ்நிலை,-எதிர்காலம் பற்றிய எண்ணம்- கடந்த கால அனுபவங்களைப் பற்றிய மதிப்பீடு எல்லாம் எப்படியுள்ளன?

மனிதர்களை நான் ஒரு கூட்டமாகவோ இலக்கமாகவோ பார்ப்பது எனது வழக்கமில்லை. ஒவ்வொரு மனிதனும் எதிர்காலத்தைக் கனவு காணும் போது தன்னை மட்டும் அல்லது தனது குடும்பத்தை மட்டுமே கனவு காணுகிறான். அவனது கனவுகள் இந்த பிறவியில் நிறைவேற வேண்டும். ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறைக்காக வித்தாக விதைப்பது எனக்கு உடன்பாடற்ற விடயம். இப்படியான பம்மாத்து வசனங்களே எனக்கு தூக்கத்தை கெடுப்பவை. அவை மற்ற மனிதனை முட்டாளாக்க நினைப்பவர்களது வாயில் இருந்து வருபவை.

மனிதன் அவனது வாழ்க்கை- வசதிகள் குழந்தைகளின் கல்வி- வாழ்வதற்கு வீடு என சாதாரணமான கனவுகள் மட்டுமே காண்கிறான். குண்டு விழும்போது இராணுவத்தை திட்டுகிறான். தனது குழந்தைகளை விடுதலைப்புலிகள் பிடித்து சென்றபோது அவர்களை வெறுக்கிறான். அவனது சிந்தனையில் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பதோ மாநில அதிகாரங்கள் என்ன என்பதோ அவனது சிந்தனையில் இடம் பெறுவது இல்லை. இந்திய அகதி முகாங்கள் தினமும் நான் சென்று வந்த இடங்கள். அதே போல் செட்டிகுளம் அகதிகள் முகாமிற்கு மூன்று தரம் சென்றபோது இதேதான் நான் புரிந்துகொண்ட பாடங்கள்;. அரசியல்வாதிகளைப் பாருங்கள். தங்களின் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்திருக்கிறார்களா? இதே நேரத்தில் அரசியல்வாதிகள் தங்களது நலன்களுக்காக தமது சிந்தனைகளை- தேவைகளை மக்களது விருப்பங்களாகத் திணிக்கிறார்கள்;. இவர்களைவிட வேறு ஒருவரும் இல்லாதபடியால் மக்கள் இவர்களைத் தெரிவு செய்வதும் காலம் காலமாக நடக்கிறது.

அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து சென்று அங்கு கால் ஊன்றுவதற்கு எனக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. இவ்வளவிற்கும் அரசாங்கம் மற்றும் உறவினர்களின் உதவி எனக்கு இருந்தது. இருக்கும் இடம்- உயிர்கள்- உறவுகள் என சகலதையும் இழந்த மக்கள் மீண்டும் உயிர்ப்பது இலகுவான விடயமல்ல. சகல காயங்களும் ஆறுவதற்கு ஒரு தலைமுறை செல்லும். இந்தமாதிரியான விடயங்கள் ஜேர்மன்- வியட்னாம்- கம்போடியா என பல நாடுகளில் நடந்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் மக்கள் பட்ட பெரும் இடர்களைக் கடந்து வந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஒவ்வொருவர் பாதிப்பும் வித்தியாசமானது.

நான் சண்டை நடந்த நாடுகளாகிய வியட்னாம்- கம்போடியா- கியூபா போன்றவற்றுக்குச் சென்றுள்ளேன். அங்கு சண்டையைத் தெரியாத புதிய தலைமுறை உருவாகி எதிர்காலத்தை மட்டும் சிந்திக்கிறது. அதே போல் நமது மக்களும் இடர்களை கடந்து செல்வார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: