
11)ஆனால் திட்டமிடப்பட்ட வகையில் இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் சிறுபான்மையினச் சமூகங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு மற்றும், பௌத்த அடையாளங்களின் மேலாதிக்க நிறுவுகை, சிறுபான்மையினரின் அடையாள அழிப்பு போன்றவை இந்தச் சமூகங்களைப் பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளன. இந்த நிலையில் எளிதாக இணக்கத்துக்கும் அமைதிக்கும் எப்படிச் செல்ல முடியும்?
இது பெரும்பான்மை சிறுபான்மை சமூகங்களின் உளவியல் சார்ந்த கேள்வி. நிலம் சம்பந்தப்படட கேள்வியை உள்ளடக்கி நல்லிணைப்பு ஆணைக்குழுவுக்கு நான் வைத்த பதிலின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்தது. அதன் ஒரு பகுதி
‘எனக்குப் புரிந்தவரை தமிழர் பிரச்சனையை இரண்டாக வகுக்கலாம்
1)உண்மையான பிரச்சனை
2)மனத்தளவில் பரிந்து கொண்ட பிரச்சனை
1)உண்மையான பிரச்சனையாக நான் கருதுவது
1)1956ல் இலங்கையில் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக கொண்டுவரப்பட்டது. பின்னர் தமிழர் எதிர்புகளை எதிர்கொண்டதின் விளைவாக தமிழ் பாவிப்பு மொழியாக திருத்தப்பட்டாலும் இதுவரையில் திருப்திகரமாக தமிழ்மொழி அமூல் நடத்தப்படவில்லை. இதனால் 24 வீதமான தமிழ் மொழிபேசும் மக்கள்(வடகிழக்கு தமிழர் மலையகத் தமிழர் இஸ்லாமியத்தமிழர்கள்) தங்கள் தாய் மொழியில் அரச கருமமாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
2) மொழிவாரியான தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகும்.
2.மனத்தளவில் புரிந்து கொண்ட பிரச்சனைகள்.
1)சிங்களக்குடியேற்றம்
இலங்கை போன்ற சிறிய நாட்டில் மருத்துவ வசதிகள் முன்னேறி மலேரியா போன்ற நோய்கள ஒழிக்கப்படும் போது மக்கள் தொகை பெருகியது.
இந்த நிலையில் எந்த அரசாங்கமும் அரசகாணிகளை மக்கள் குடியேற்றத்துக்கு கொடுப்பது தவிர்க்க முடியாது. வடமாகாணத்தில் பல காணிகள் நிலமற்ற யாழ்ப்பாண மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல் கிழக்கு மகாணத்தில் அரச காணிகள் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது.
2) 1958 1977 1983 என நடந்த கலவர நிகழ்வுகள்.
இந்த நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களுக்கிடையே நடக்கவில்லை. அரசாங்கங்கள் தனது குற்ற ஒழுங்கை தடுக்கும் கடமையை செய்யாத படியால் ஏற்பட்டவை. நான் நேரில் பார்த்த 1983கலவரநிகழ்வு அரசாங்கத்தாலும் ஆயுதப்படையினராலும் நடத்தப்பட்டது.1983ன் பின் கடந்த 27 வருடங்கள் இப்படி ஒரு கலவரம் நிகழாதது அரசாங்கத்தால் இப்படி ஒன்று நடக்க முடியாமல் தடுக்கமுடியும் என்பதை எடுத்து காட்டுகிறது.’
தற்போது நாம் பேசும் வட கிழக்கு மாகாணங்கள் பிரித்தானியரால் நிர்வாகத்துக்காக வரையப்பட்டது. இந்த எல்லைகள் பண்டைக்காலத்தில் இருக்கவில்லை. மக்கள் ஆறுகளையும் குளங்களையும் அண்டியும் கடல்களின் அருகிலும் குடியிருந்தார்கள். நாட்டின் மக்கள் பெருகும்போது காடுகளை அழித்து மக்களை குடியேற்றுவது எல்லா நாட்டிலும் வழமையானது. இதன்பொருட்டே கல்லோயா திட்டம் கிழக்கில் உருவானது. அப்போது கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஆறுமாதங்கள் மற்றவர்கள் வரவழைக்கபடவில்லை என அறிகிறேன். அதன்பின்புதான் மற்றைய மாவட்டங்களில் இருந்த சிங்கள மக்கள் வந்தார்கள். கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லீமக்களுக்கு விவசாயத்திற் தேவையான நிலம் அங்கு இருந்ததே காரணமாகும். இதைப் போல் வடமாகாணத்தில் குடியேற்றங்கள் வந்தபோது தமிழ்மக்களுக்கு தேவையான நிலம் வவனியாவுக்கு வடக்கே இருந்தது. இப்பொழுதும் மாங்குளம் புளியங்குளம் பகுதியில் தேவைக்கு அதிகமான நிலம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நிலம் சம்பந்தமாக பிரச்சனையை பெரிதாக்கியது தமிழ்கட்சிகள். இதற்கு சிங்கள இனத்துவேசமே ஒரே காரணம் என்பதே. தமிழனாக பலகாலமாக வெட்கப்படும் விடயம் மட்டுமல்ல இப்படிப்பட்ட இனத்துவேச கட்சிக்கு எனது குடும்பங்கள் ஆதரவளித்து வாக்களித்தார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது.
அதைவிட இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்வதிலும் இந்தக் கட்சிகள் வெற்றியடைந்து விட்டன. இந்த ரீதியிலே போருக்குப் பின்னால் நில ஆக்கிரமிப்பு என்ற பதம் சுலோகமாகிறது. அரசாங்கம் சில விடங்களை தவறாக கையாளுகிறது. அவை போரால் ஏற்பட்டவை. அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முப்பது வருடமாக செயலிழந்ததால் ஏற்பட்டவை. இவைகள் பற்றிக் கவனமாக நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகள் தீர்வு காணவேண்டியது. தற்போது பல்கலைக்கழகங்கள் போன்றவைகளில் காணும் விடயம் போன்றது. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாட்டில் உருவாகும் எல்லா விடயங்களுக்கும் இனவாத சாயம் பூசுவது மக்களுக்கு பலனைக் கொடுக்காது. வேண்டுமானால் பத்திரிகை எண்ணிக்கையைக் கூட்டவும் பாரளுமன்ற அங்கத்துவத்தை தக்கவைக்கவும் பயன்படலாம்.
இரண்டாவது மத அடையாளங்களின் திணிப்பு.
ஆதிமனிதன் இரண்டு காலை பாவிக்க தொடங்கியது அவன் மற்ற மிருகங்களில் இருந்து தப்பி வேகமாக ஓடுவதற்காக. அப்பொழுது அவனது உடலில் உள்ள மயிர்கள் குறைந்து வேர்வைச் சுரப்பிகள் அதிகமாகி அவனது உடலைக் குளிர வைத்தன. அந்தக்காலத்தில் அவனுக்கு எந்த மதமோ கடவுளோ இருக்கவில்லை. இறப்பை உணரத் தொடங்கிய மனிதன் தன்னை மீறியசக்திகளை கனவுகாணுவதால் ஆன்மா, மனசாட்சி என்ற சிந்தனைகள் உருவாகின்றன. அதனால் ஏற்படும் பிரதிபலிப்புகள் வளர்ந்து தற்காலத்து மதங்களாக பரிணாமிக்கிறது.
இந்த மதங்கள் மனிதர்களின் முக்கியமாக அரசாள்பவர்களின் ஈகோவோடு கலந்து விடுகிறது. இவைகளின் முரண்பாடுகள் போர்களின் சரித்திரம்.
மதத்தில் நம்பிக்கையற்ற நான் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாது கேள்விகள் கேட்கிறேன்
இலங்கையில் காலம் காலமாக மத அடையாளங்கள் மக்கள் மேல் திணிக்கப்படுவது சரித்திரம். ஆரம்பத்தில் புத்தசமயத்தை இலங்கை அரசன் தழுவியதும் அது மக்கள் மீது திணிக்கப்பட்டது. இதன்பின் அன்னிய சமயமாகிய கத்தோலிக்க சமயம் மட்டும் எப்படி இலங்கைக்கு வந்தது? இத்தனை தேவாலங்கள் இலங்கையடங்கிலும் வந்தது எப்படி? இதற்கு அப்பால் எங்கோ இருந்து இஸ்லாமிய மதத்தை இவ்வளவு மக்கள் பின்பற்றும்படி எப்படி சந்தர்ப்பம் உருவாகியது ?
தமிழ்நாட்டில் எப்படி புத்தசமயம் அழிக்கப்பட்டது? ஏன் வைணவர்கள் விரட்டப்பட்டார்கள்?
இலங்கையின் வட பகுதியில் புத்த அடையாளங்கள் முன்பு இருக்க வில்லையா?; இலங்கையில் தெற்கே இந்து மத அடையாள்கள் காலம்காலமாக உள்ளது தானே?
எனது தந்தையின் ஊரான நயினாதீவில் காலம்காலமாக புத்த கோயில்கள் இரண்டு உள்ளன. உங்களுக்கு அந்த ஊரில் புத்தர் வந்தது மட்டுமல்ல மணிமேகலை காப்பியத்தில் சொல்லப்படும் ஊராக கருதப்படுகிறது. இந்த ஊரில் ஒரு குடும்பமாவது புத்தசமயத்தை பின்பற்றவில்லை. இதேபோல் இஸ்லாமிய மசூதி தெற்கே உள்ளது. அந்தகாலத்தில் சங்கு குளிக்க வந்த பரம்பரையில் வந்த ஒருசில இஸ்லாமிய குடும்பங்கள் இருந்தார்கள். இதை விட ஒரு சிறிய சேச்சும் இருந்தது எனது ஞாபகம். இவை எல்லாவற்றையும் மத அடையாளங்களாகவே மதித்தோம். 99.9 வீதமானவர்கள் சைவர்களாக இன்னும் வாழ்கிறார்கள். வடமாணத்தில் தெருவோரம் வைக்கப்பட்ட புத்த சிலை உங்கள் மீது புதிதாக மதத்தை அரசு திணிப்பதாக கோசமெழுப்புவது அரசியலுக்கான விடயங்கள்.
12)ஒரு சிக்கலான உளவியற் பின்னலில் இலங்கைச் சமூகங்கள் சிக்குண்டுள்ளன. இன, மத அடையாளங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட அரசியல் இந்த உளவியலைக் கட்டமைத்துள்ளன. இது பல நூற்றாண்டுகளின் தொடர்ச்சி. இன்றைய நவீனகாலத்தில் இது இன்னும் வலுவாகி ஊடகங்கள், கல்வி மற்றும் சமூக நிறுவனங்கள், இலக்கியம் எனச் சகல துறைகளினூடாகவும் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைதியைக் குறித்தும் சமாதானத்தைக் குறித்தும் எப்படிச் சிந்திக்க முடியும்? இவற்றை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்?
பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது சிங்கள நண்பர்களோடு அநுராதபுரம் சுற்றுலா சென்றோம். அங்குள்ள பல இடிந்த கட்டிடங்களைப் பார்த்ததும் எனது சிங்கள நண்பனது முகம் மாறி ஆத்திரத்தில் தமிழர்களைத் திட்டினான். எனக்குக் காரணம் புரியவில்லை. சிறிது நேரத்தில் அவன் வந்து ‘இலங்கையை அழித்தவர்களைத் திட்டினேன்’ என்றான். அதன் பின்னர் அவனிடம் விவரம் கேட்டபோது ‘நான் இலங்கைத் தமிழரைப்பற்றி சொல்லவில்லை. அந்தக்காலத்தில் தமிழகத்திலிருந்து வந்த படையெடுப்புகளால் அனுராதபுரம், பொலநறுவையில் இருந்த அரசுகளும் அடையாளங்களும் சோழரால் உடைக்கப்பட்டன. இதன் எச்சங்கள் இன்று பல இடங்கள் சிதிலமாக கிடக்கின்றன. அநுராதபரத்தில் உருவாகிய அரசு பின்பு இடம்மாறி பொலநறுவை போனது. அதுவும் சோழரால் மீண்டும் படையெடுப்பில் அழிக்கப்பட அங்கும் இருக்க முடியாது இராசதானி தென்னிலங்கைககு இடம் மாறியது’ என்றான்.
இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள சமுகம் தன்னை ஒரு சிறுபான்மை சமூகமாக பலகாலம் நினைத்தது. இதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தமிழ்நாட்டுத் தமிழரோடு கலாச்சாரம், மதத்தில் மட்டுமல்லாது அரசியல் சிந்தனையிலும் இணைத்து செல்ல விழைந்ததே. இந்த நிலையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிற அவர்களது மனநிலையை நமது தலைவர்கள் வளர்த்து விட்டர்கள். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவோடு சேர்ந்து விடுவார்கள் என்ற பயத்தால் சமஷ்டியை ஏற்கச் சிங்களவர்கள் மறுத்தார்கள். அவர்கள் மறுத்த காரணத்தை நாம் பார்க்காமல் மேலே போய் தனி நாடு கேட்டோம். பலதடவை ஆக்கிரமித்து இலங்கையை சூறையாடிய சோழ அரசின் கொடியை எமது வருங்கால அரச கொடியாக வரித்தோம். இதெல்லாம் இறுக்கமான நிலைமையையே இலங்கையில் உருவாக்கியிருக்கிறது. இது அவர்களது மனநிலை.
நாம் தொடர்சியாக அரசாண்ட இனம் எனச் சொல்லிக் கொண்டு தனித்து வாழவேண்டும் என்பதற்காக கட்சி அரசியலால் போராடி பின்பு ஆயுதம் எடுத்துப் போராடினோம். கலாச்சாரத்தில், மதத்தில் நாம் தமிழ்நாட்டைப் பின்பற்றினோம். தமிழ்நாட்டில் திராவிட நாட்டு கோரிக்கை எழுந்த போது அதன் பிரதிபலப்பாக இலங்கையில் தமிழரசுக் கட்சி உருவாகியது. இருபக்கத்தினரிலும் இனவாதிகள் நடந்திய கைங்கரியங்களால் இரண்டு சமூகமும் மேலும் அன்னியமாக்கியது. இந்த வரலாற்றுக் காரணங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைத்தமிழர் யாவரும் வெளிநாடு போக முடியாது என்ற நிதர்சனத்தையும் அறிந்துகொண்டு நல்ணெண்ணத்தோடு வாழ்வதுதான் ஒரே வழி. இதுதான் எம் முன்னால் உள்ளது.
எமது நடத்தைகளுக்கு நாமே பொறுப்பேற்கவும் எதிர்காலத்தில் இவற்றை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படவும் வேண்டும்.; இலங்கை அரசாங்கத்தையும் இதில் முழுப்பங்கேற்புக்குத் தூண்டவேண்டும்.
*இந்த மாதிரியான வரலாற்றுப் பிணக்கை பிற சமூகங்கள் எப்படிக் கடந்துள்ளன? நீங்கள் வாழ்கின்ற அவுஸ்ரேலியச் சமூகங்களின் நிலை அங்கே எப்படியுள்ளன? அங்குள்ளபூர்வகுடிகளின் நிலை, அவர்களுக்கான அங்கீகாரம், சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் எல்லாம் எவ்வாறுள்ளன?
இனம் மதம் சாதி என்பவற்றால் சமூகங்கள் உருவாகும் போது அங்கு அதைப்பாவித்து பிணக்குகளை உருவாக்குவது பலருக்கு சாதகமானது. உண்மையான, மக்கள் மீது நம்பிக்கையுள்ள அரசு இப்படியான குழுக்களை உடைத்து மொத்தமான தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கவேண்டும். மத கலாச்சார உணர்வுகளுக்கு சட்ட உறுதி அளித்துவிட்டு அரசியல் குழுவாகாமல் தடுப்பதன் மூலம்தான் நாட்டில் அமைதி உருவாகும்.
அவுஸ்திரேலியாவில் பதினைந்து ஆண்டுகளின் முன்பு போலின் ஹான்சன் என்ற பெண்மணி ஆசிய எதிர்ப்புக் கட்சி தொடங்கியபோது பத்து வீதமான மக்கள் அதை ஆதரித்தார்கள். பெரிய இரண்டு கட்சிகளும் ஜனநாயக முறையில் இணைந்து அவரை எதிர்த்து அரசியலில் இருந்து அழித்து விட்டார்கள். காரணம் அந்தப் பெண்ணினால் ஆசிய நாடுளுடனான வியாபாரம் பாதிக்கப்படும் என்பதே. அதன் விளைவாக நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால்.
அவுஸ்திரேலிய பூர்வகுடிகள் சட்டரீதியாக சம உரிமை பெற்று இருந்தாலும் நூற்றாண்டுகளாக நீடிக்கும் புறக்கணிப்பு சாதாரணமானது அல்ல. அவர்கள் நிலைமை நான் வசித்த கால் நூற்றாண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது. அவர்களது நில உரிமைகளை கொடுப்பதற்கு பல அரசியல்வாதிகளும் அறிஞர்களும் முன்னிற்கிறார்கள். அவர்கள் அவுஸ்திரேலியா என்ற நாட்டுக்குள்தான் தங்கள் உரிமையை கேட்கிறார்கள்.
13) இந்த உளவியலைக் கடப்பதற்கான எழுத்தும் சிந்தனையும் எப்படி இருக்க வேண்டும்? அதை எப்படிச் சாத்தியமாக்குவது? ஏனெனில் நீண்டகாலமாக வளர்ச்சி பெற்று நிறுவனமயப்பட்ட கருத்துருவாக்கத்தை அத்தனை எளிதாக நீக்கி விடவோ, கடந்து விடவோ முடியாது. அதேவேளை இந்தப் பின்னோக்கிய சிந்தனைக்கு ஊடகம், அரசியல் மற்றும் பிற அமைப்புகளின் பலமும் உண்டு. எனவே இந்தநிலையில் எத்தகைய வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க முடியும்?
இரண்டு பக்கத்தினரதும் தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படுவது முக்கியம். இது அறிவாளிகளிலும் சிந்தனாவாதிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இருந்து உருவாகவேண்டும். காரணம் இவர்கள்தான் சமூகத்தின் மூளை போன்றவர்கள். இவர்களது மாற்றம் சமூகத்தின் பல பாகத்துக்கு எடுத்து செல்லவேண்டும். இதன்பின் சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கும் வழிமுறைகள் பலரால் ஆராயப்பட்டு நாட்டின் கொள்கைப் பிரகடனமாக வேண்டும். அவுஸ்திரேலியா, கனடா நாடுகளின் பல்கலாச்சாரம் போல் இதை பாடசாலைகளில் குழந்தைப்பருவத்தில் இருந்து படிப்பிக்கவேண்டும். இதன்பின்பு சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட வேண்டும்.
சில விடயங்களை கோடு காட்டுகிறேன். சிலவற்றை உடனடியாகவும் பலவற்றை படிப்படியாகவும் செய்யலாம்.
கலாச்சாரரீதியான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நேரத்தில் பாடசாலைகளிலும் வேலைத்தலங்களிலும் தேசிய ஒருமைப்பாட்டைத் தர்க்கரீதியாக எடுத்துச் செல்லவேண்டும்.
இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு மொழிகளையும் கட்டாயமாக இருபகுதியினரும் கற்க வேண்டும்.
இன மொழி மத ரீதியான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டு பாகுபாடுகளைத் தூண்டுபவர்கள் மீதும் இனவாத ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாடசாலைகள் மத இன வேறுபாடு இல்லாது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேணும்.
ஆரம்ப காலத்தில் சிங்கப்பூரின் சில சட்ட நடைமுறைகளைப்போல இலங்கையிலும் அமுல்படுத்துவது தவிர்க்க முடியாது.
மறுமொழியொன்றை இடுங்கள்