
9) இன்றைய நுண்ணாய்வு முறைகளில் பிராந்திய அடையாளங்கள் சமூக அடையாளங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இதைக் குறித்த கல்வி கூட முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர உலகமயமாக்கலின் வழியாக அடையாள அழிப்புகள் தாராளமாக நடக்கின்றன. இந்த நிலையில் இலக்கியத்தில் மேற்கொள்ளப்படும் இந்த அடையாளப் பதிவுகளும் தனித்துவக் கவனமும் முக்கியமானது என்ற நிலைப்பாடு தவிர்க்க முடியாது. இதைத் தவிர்த்து நீங்கள் சொல்வது ஒரு வகையில் இன்னொரு அடையாளத் தவிர்ப்பாக அமையுமல்லவா?
பிராந்திய அடையாளங்கள் என்பது மாற்றமடைந்து வரும் சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் நிலையாகும். அதாவது சிறுகுழந்தையின் மழலைப்பருவம். நடக்கும் பருவத்தில் அந்த குழந்தைக்கு விளயாட தேவைiயான பொருட்களை கொடுப்பது, பிறகு பருவத்திற்கு ஏற்ற கல்விகளையும் ஊட்டுகிறோம். இதைப்போல, அந்தப்பிள்ளை சுவரில் கிறுக்குவதை அன்புடன் சிறந்த ஓவியக்கலையின் முதற்படி எனப் பெருமைப்படுகிறோம். விளையாட்டில் பங்கெடுத்து வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு கேடயங்கள் கொடுக்கிறோம். இவைகள் தேவையானது,அவசியமானது என்பதில் இரண்டாவது கருத்தில்லை.
ஆனால் இவைகளை நாம் உச்சமாக கருதுவதில்லைத்தானே? ஒலிம்பிக் வீரரையும் முத்தையா முரளீதரனையும் வான்ஹொக்கையும் நாம் கொண்டாடுகிறேம். காரணம் அவர்கள் உச்சங்களை தொட்டதால்.
இதற்கப்பால் மனிதர்கள் வாழ்வின் வசதிகளுக்காகவும், பொருளாதாரத்தின் விருத்திக்காகாகவும் உயிர் வாழ்வதை நீடிப்பதற்கும் பல விடயங்களை மற்ற சமூகங்களிடம் எடுத்து வருகிறார்கள். இது தேவையானது. ரோமர்களிடம் இருந்து சட்டங்களையும் சிவில் பொறியியல் முறைகளையும் பிரித்தானியர்கள் பெற்றார்கள். அதேபோல் இந்தியர்களிடம் இருந்து கணிதத்தையும் கிரீசில் இருந்து தத்துவத்தையும் பெற்றார்கள். இவ்வாறே சீனர்களிடம் இருந்து வெடிமருந்து, அச்சுக்கலை என்பன வந்தன. அரேபியர்களிடம் இருந்த மனித நாகரிகத்தை கடன் வாங்கினோம். இவைகள் உலகமயமாக்கலின் நன்மைகள் அல்லவா! கீழைத்தேசத்தவர் நோய்களைக் குணப்படுத்த மேற்கு நாட்டு வைத்தியத்தைத் தேடுவதும் பஞ்சத்தைப் போக்க வீரியமான விதைகளைத்த் தேடுவதும் இப்படியானதே.மெக்சிக்கோவில் இருந்து வந்த மிளகாயையும் சீனாவில் இருந்து வந்த அரிசியையும் நமது பொருட்களாக்கினோம்.
இலங்கையில் தமிழர்கள் சண்டை செய்ய ஆயுதங்களை எங்கே வேண்டினார்கள்? வெளிநாட்டு இறக்குமதிதானே? இந்திய மேற்கு மாகாணங்களில் ஆதிவாசிகள் தாங்கள் வாழும் வன உரிமைகளை பாதுகாக்க எடுத்த ஆயுதங்கள் வில்லம்புகளா? நவீன ரக துப்பாக்கிகள் தானே?
பொருள் சார்ந்த வர்த்தகம், பணம், மனித உரிமைகள் என்பனவற்றை தனது உரிமையாக்க நினைத்த மேற்கத்தைய அரசுகளின் கைகளில் இருந்து அவை இப்பொழுது வெளிப்பரவி விட்டன. அமெரிக்க, ஐரோப்பிய கம்பனிகள் 4000 பில்லியன் டொலர் பணத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவிலோ ஐரோப்பவிலோ முதலிடாமல் சீனா, இந்தியா, லத்தீன் அமெரிக்காவில் முதலிட விரும்புகிறார்கள். காரணம் அங்குதான் லாபம் பெறமுடியும். இது எதைக்காட்டுகிறது? அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உருவாகிய பொருள் முதல் (Capital) இப்பொழுது ஆசியாவுக்கும் லத்தீன் அமரிக்காவுக்கும் சென்றுவிட்டதால் வேலை இல்லாத தொழிலாளர் மேற்கில் உள்ளனர். இதுதான் தற்போது அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்களின் பிரதான தலைபோகும் பிரச்சனையாகும்.
அதே போல் நாம் பேசும் மனித உரிமை, சட்டம் எல்லாம் எங்கிருந்து வந்தது? எமது புலம் பெயர்ந்தவர் பயனடைந்த அகதிகள் கருத்தியல் யாரால் உருவாக்கப்பட்டது? இவை எல்லாம் உலகளாவிய கருத்தியலின் வடிவங்களே.
முந்திய காலத்தின் பின்பு கத்தோலிக்க மதபீடத்தின் செல்வாக்கு ஐரோப்பாவில் உடைந்ததால் அங்கு சிந்தனையில் மறுமலர்ச்சி உருவாகியது. கைத்தொழில் புரட்சி நடந்தது. அக்காலத்தில் வலிமையான அரசுகள் உருவாக முடிந்தது. அதனால் பெரும்பாலான விடயங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து வருவதால் குண்டுச்சட்டியில் குதிரையோட்ட விரும்பும் சிலர் உலகமயமாக்கம் என்று எதிர்க்கிறார்கள். மேற்கு நாடுகளிலும் சிலர் இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.
நாம் உலகமயமாக்கலுக்குப் பயப்படாமல் நல்லனவற்றை எம் வயப்படுத்தவேண்டும். எமது மேன்மையான விடயங்கள் காலத்தால் நிற்கும். சட்டங்கள், ஒழுங்குகள் இல்லாத காலத்தில், தனி மனித ஒழுக்கம் முக்கியமாக இருக்கவேண்டிய நிலையில், ஆசியாவில் மதங்கள் உருவாகி உலகெங்கும் சென்றன. புத்தரின் சிந்தனை உலக மக்களில் பெரிய தொகையினரை நாகரீகப்படுத்தியது. புத்த மதத்தின் சிந்தனைக்கு மேலாக சிறந்த தனி மனித, சமூக, ஒழுக்க கோட்பாடு உலகத்தில் உருவாகவில்லை என்பது எனது கருத்து. இதே போல் மாகாபாரதம் போன்ற இலக்கிய வடிவமும் திருக்குறள் போன்ற ஒழுக்க நூலும் காலத்தைக் கடந்து எக்காலத்திலும் நிலைத்து நிற்பவை. இப்படியான உச்சங்களை உருவாக்கிய சமூகத்தின் வழிவந்த நாங்கள் பிராந்திய அடையாளங்கள் என்ற காரணத்தால் மட்டும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. அதற்காகத்தான் தொல்பொருள் காப்பகங்களை வைத்திருக்கிறோம். நான் தென் கொரியாவில் ஜேஜு தீவுக்கு சென்றபோது அவர்களது குடிசைகள், மீன்பிடிப்படகுகள் எல்லாம் அருங்காட்சியகத்தில் மட்டும்தான் இருந்தன.
10) நீங்கள் குறிப்பிடுவதைப்போல அல்லது எதிர்பார்ப்பதைப்போல இனவாதத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து விடமுடியுமா? அதற்கான சாத்தியங்கள் ஏதேனும் உண்டா? அல்லது இந்தக் கருத்து நிலை எப்போதையும் போல சிறிய தரப்பொன்றின் அபிப்பிராயமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்தானா?
பல்லினங்கள் மதங்கள் சாதிகள் செறிந்து வாழும் நாட்டில் இன முரண்பாடு இருப்பது இயற்கையானது. அதற்கு எந்த நாடுகளும் விதிவிலக்கு இல்லை. தமிழ்நாட்டில் சாதிகளுக்கிடையில் போராட்டம் வெடிக்கிறது. இது எதைக்காட்டுகிறது? இனத்துக்குள்ளும் மோதல் வரும் என்பதையே.
கற்கால மனிதன் வேட்டையாடுவதற்கு பத்து அல்லது பதினைந்திற்கு உட்பட்டவர்களை மட்டும்தான் அழைத்து செல்வான். காரணம் அவ்வளவு பேரில் மட்டும்தான் ஆழமான நம்பிக்கை வைக்கமுடியும். ஒரு மனிதன் பத்து அல்லது பதினைந்து மனிதரோடு மட்டுமே ஒன்றாக இருக்கலாம். அதற்கு மேற்பட்டவர்களிடம் ஒரு அன்னியத்தன்மை உருவாகிவிடும். இதற்கு இனம், மதம், ஊர், சாதி, வர்க்கம், நிறம் என காரணம் தேடுவது வழக்கம்.
இனவாதம் இலங்கையில் சிங்கள மக்களுக்கு மட்டும் தான் உள்ளது. மற்றவர்கள் இனவாதமற்றவர்கள் என எந்த முட்டாளும் வாதிட முடியாது. விடுதலைப்புலிகளின் இனவாதம் தெரிந்ததுதானே. இதில் வல்வெட்டித்துறையினருக்கும் யாழ்பாணத்தவர்கள் என்போருக்கும் பாகுபாடு விசேசமாக இருந்ததை நாம் அறிவோம்.
இதுபோல் நாங்கள் வாழும் மேல்நாடுகளிலும் இனவாதம் உள்ளது. சமத்துவம், சகோதரத்துவம் என புரட்சி செய்த பிரான்சில் இனவாதம், யூத எதிர்ப்பு எல்லாம் உள்ளதே?சகோதரத்துவம் பேசும் இஸ்லாமியர்கள் ஆட்சி புரியும் வளைகுடா நாடுகளில் மற்றைய நாட்டு முஸ்லீம்கள் மட்டுமல்ல சியா முஸ்லீம் மக்களை பிரிவினைப் படுத்துகிறார்களே?
மேற்குநாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் இனத்திற்கு அப்பால் நின்று நாட்டையும் மக்களையும் பற்றிப் பேசுவார்கள். நாட்டில் சகலருக்கும் சட்டம் கல்வி வசதி வாய்புகள் வேண்டுமென வாதிடுவார்கள். இந்த மாதிரியான அரசியல்வாதிகைளை நாம் உருவாக்கும்போது இலங்கையில் பிரச்சினை சுமுகமாகும். அப்படி யாராவது ஒரு அரசியல்வாதியை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்பது கேள்விக்குறி.
தமிழர்கள் ஆரம்பகாலத்திலே இனவாதம் பேசியதன் விளைவாகத்தான் சாதாரண சிங்கள மக்களிடம் இனவாதம் ஏற்பட்டது என்பது எனது கருத்து.இலங்கையின் சரித்திரத்தைப் பார்த்தால் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் மன்னர்கள் அரசாண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குச் சிங்களப் பிரதானிகள், மந்திரிகள் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.
அதேவேளையில் தென் இந்திய அரசர்களால் இலங்கை ஐம்பது முறைக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இதை விட எட்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் புத்துயிர் பெற்ற சைவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து புத்த சமயத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க அவர்கள் மிகவும் போராடி இருக்கிறார்கள்.இப்படியான சரித்திர நிகழ்சிகளால் சிங்கள மக்கள் தங்களது மொழி சமய கலாச்சாரத்தை பாதுகாக்க இன உணர்வை கூராக்க வேண்டியதாக உள்ளது. இந்தியா போன்ற பெரிய தேசத்தின் அருகில் இருந்து தனித்தன்மையாக வாழ்வது இலேசான விடயம் அல்ல.
இப்படியான கட்டாயம் உலகத்தில் வேறு எந்த நாட்டிற்கும் இத்தனை ஆயிரம் வருடங்கள் இருக்கவில்லை. இப்படியான கட்டாயத்தில் இருக்கும் சிங்கள மக்கள் 18ம் நூற்றாண்டில் அவர்களது இடத்தில், மலையகத்தில் அவர்களது காணிகளில் பலவந்தமாக ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான இந்திய தமிழர்களை வரவேற்காது விட்டாலும் பெருமளவில் பொறுத்துக் கொள்ளகிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் போத்துக்கேயரால் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியர்களை உள்நாட்டிலும் கிழக்கு கரையோரத்திலும் குடியேற வைத்தது போன்ற சம்பவங்கள் பெரும்பலான சிங்கள மக்கள் பெருந்தன்மையானவர்கள் என்பதை ஆதாரத்துடன் காட்டுகிறது. மேலும் பல சம்பவங்களை நான் எடுத்துக் கூற முடியும். குறைந்த பட்சம் எந்த இனத்திலும் பார்க்க சிங்களவர் அதிக இனவாதிகள் இல்லை.
அதேவேளையில் இனவாதம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இயல்பானது. அளவுகளில் வித்தியாசப்படலாம். அது கடலின் அலை போல் எப்போதும் அடித்துக்கொண்டுதான் இருக்கும். இரண்டு சிறுபான்மை இனங்கள் சிங்களவர்கள் மத்தியில் வாழும்போது வடகிழக்கில் வாழும் பத்துவீதத்திற்கும் குறைவான தமிழர்கள் வாழ முடியாது என்பது எமது தலைவர்களின் தராதரத்தைக்காட்டுகிறது. நாட்டை பிரிக்கவேண்டும் என்று கேட்டு அவர்களை நாம் கொலை செய்ய அவர்கள் எங்களை பயங்கரவாதிகள் என கொல்லுவதற்கு முப்பது வருடங்கள் நடத்திய வன்முறை முடிவுக்கு வந்தாலும் அந்த வன்முறையின் பக்கவிளைவுகள் முதலாலாவதாக தீர்க்கப்படவேண்டும். மக்கள் அமைதியாக வாழ்வதற்கு விடவேண்டும். இதன் பின்பே அரசியல் கோரிக்கைளுக்கு இடமளிக்கவேண்டும்.
அதாவது சாதாரணமாக வன்னியில் பாதிக்கப்பட்ட தமிழரின் தேவைகளைத்தான் இன்று அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். இதை உதாரணமாகப் புரிய வைக்கமுடியும். சமூகத்தில் கல்வியை ஆரம்ப பாடசாலையில் இருந்து தொடங்குதற்கு பதிலாக எமது அரசில்வாதிகள் பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறார்கள்.
இன முரண்பாடுகள் ஒவ்வொன்றாக களையப்படவேண்டும். மற்ற இனங்களையும் அவர்களது காலாச்சார வரலாற்று விடயங்களை புரிந்து கொண்டதாக நமது கோரிக்கைகளும் போராட்டங்களும் இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் இனவாதத்தை வளர்ப்பதாக இருக்கக் கூடாது. தருமர் பாஞ்சாலியை பணயம் வைத்து பகடை விளையாடியது போல் அப்பாவி ஏழைமக்களின் உயிரை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்தக் கூடாது.
பேச்சுவார்த்தை என்ற மிகவும் பொருத்தமற்ற தமிழ்ச் சொல் தற்பொழுது நெகொசியேசன் ( Negotiation) என்பதற்கு ஈடாக பாவிக்கப்படுகிறது. இந்த நெகொசியேசன் இரண்டு பக்கமும் வெற்றி பெறும்படியாக நடத்தப்பட வேண்டும். இலங்கைச் சரித்திரத்திலே இந்த அர்த்தத்தில் பேச்சுகள் எக்காலத்திலும் நடந்ததில்லை. சில பாராளுமன்ற ஆசனங்களை வைத்திருப்பதற்காக இனவாதப் புகையை ஊதி நெருப்பாக்கும் நோக்கத்தில் அரசியல் நடத்தும், சொந்த நாட்டுக்கு எதிராக வெளிநாட்டில் குறை சொல்லியபடி திரியும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நமது பிரச்சனை தீராது. புதிய சிந்தனை உருவாகினால் நல்லெண்ணத்தோடு தமிழர் சரிசமமாக வாழ்வதற்கு முடியும்.
இலங்கையில் நல்லிணைப்பு ஆணைக்குழுவுக்கு நான் வைத்த பதிலின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்தது. அதன் ஒரு பகுதி
“எல்லா மக்களும் சமம் என்ற சம உரிமைப் பிரகடனம் (bill of Right)அது கீழ்வருவனவற்றை அடக்கி இருக்கவேண்டும்
1)இலங்கையின் சகலபகுதியிலும் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம்;
2)கல்வி தொழில் சம்பந்தமானவற்றில் சம உரிமை
3)தமது மொழி(சிங்களம் தமிழ் ஆங்கிலம); மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழும் உரிமை
4) சட்டத்தில் அரசியலில் அரசாங்க நிர்வாகத்தில் அனைவரும் சம பங்குபெற உரிமை
5)எந்த பாகுபாடற்ற படி மொழி மதம் நம்பிக்கை அரசியல் சார்பு மற்றும் குடி இருக்கும் இடத்தை தேர்ந்து எடுக்கும் உரிமை அவசியமாகிறது
6) தமக்குரிய அடையாளங்களை தேர்ந்தெடுக்க அவற்றோடு சேர்ந்திருக்கம் உரிமை
7) அரசாங்கத்துடன் தாம் விரும்பும் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற ஏதாவது ஒரு மொழியில் தொடர்பு கொள்ள முடிதல்’.
மறுமொழியொன்றை இடுங்கள்