நடேசன்
அவுஸ்திரேலியாவில் நுரையீரல் புற்று நோய்க்கு மருந்து செய்ய 60000 டாலர் தேவை. ஒருவர் இந்த நாட்டு பிரசையாகவோ நிரந்தர வதிவிடம் பெற்றவராக இருந்தால் ஒரு சதம் செலவு செய்யாமல் அரசாங்கம் வைத்தியம் செய்யும்.இது உறவினர் ஒருவருக்கு ஏற்பட்டதால் அனுபவமாக பெற்ற உண்மை. மற்ற நோய்களோடு ஒப்பிடும்போது தொடர்ச்சியாக கீமோ திரப்பி வைத்தியம் செய்யவேண்டியதால் இதன் செலவு அதிகமாகிறது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை. இதுவே இந்த போராட்டத்தின் தோல்வியின் மூலவேர் என்ற எனது கருத்து. இது எனக்கு அரசியல் அறிவு தெரிந்த காலத்திலே ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதை உறுதி செய்தபடி இருந்தது. பணத்தில் ஆசையில்லாதவன் வியாபாரம் செய்ய முடியாது என்பது போல் உயிரில் மதிப்பு வைக்காதவன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவோ தலைமை தங்கவோ தகுதியில்லதவன் என்பது எனது தர்க்கம். இந்த உண்மையைப் புரிவதற்கு ஆராச்சி செய்யவேண்டிது இல்லை. தனது உயிரை மதிக்காத மனிதன் மற்றவர்கள் உயிரை மதிப்பான் என எதிர்பார்க்க முடியாது
என்னைப் பொறுத்தவரை ஆவேசமான பேச்சுக்கள் பாடல்களை எல்லாம் பிரயோசனம் அற்றவை. ஆரம்ப காலத்தில் இளைஞர்களை துண்டிவிட்ட காசிஆனந்தன் பாட்டு கோவை மகேசன் வசனங்கள் மேற்கு நாடுகளில் பிருஷ்டத்தை துடைக்கும் பேப்பரிலும் இடம் பெறத் தகுதியற்றவை.
சுதந்திரன் பத்திரிகை அதை பிரசுரித்ததுதானே என முணுமுணுப்பது கேட்கிறது.?
என்ன செய்வது எமது தலைவிதி அவைகளால் நிர்ணயிக்பட்டுள்ளது,
உயிர்களின் விலையை பேசும் போது ஒரு புதிதாக ஒரு கதை சொல்லுகிறேன்
சமீபத்தில் விடுலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்தில் இருந்த ஒருவரை சந்தித்தேன. அவரோடு பேசும் போது ஆரம்ப காலத்தில் கொலை செய்யப்பட்ட மட்டக்கிளப்பு மைக்கேலைப் பற்றிய பேச்சு வந்தது.
‘ஒவ்வொருவரை கொலை செய்யும் போதும் பிரபாரன் துரோகி என காரணம் சொல்வதும் இல்லாவிடில் மற்றவர்கள் காரணத்தை நெய்து வெளிக் காட்டுவதும் வழக்கம் .இதுவரையும் மைக்கல் கொலைக்கு காரணம் கேள்விப்படவில்லை’எனக் கேட்டேன்
‘அது பெரிய ககை எனக்கு அந்த நேரத்தில் இருந்த மூன்றாவது மனிதர் கூறியது. அவர் இன்னமும் இருக்கிறார்
‘செட்டிகுளம் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த 70 ஆண்டின் பகுதியில் அது நடந்தது. ஒரு நாள் பிரபாகரன் மைக்கல் அத்துடன் இந்த கதை சொன்ன மூன்றாவது மனிதரும் இருந்தார். அன்றய தினம் மைக்கலின் பிறந்த நாள்
‘தம்பி, எனது பிறந்த நாள் இன்று. எனது நண்பர் அழைத்திருக்கிறார். நான் போய்விட்டு ஆறுமணிக்கு முன்பு வந்து விடுவேன்’ என மைக்கேல் பிரபாகரனிடம் சொன்னார்
‘ஆறுமணிக்கு வந்து விடு. உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.’ என பிரபாகரன் விடைகொடுத்தார்
மாலை ஆறுமணியாகிவிட்டது மைக்கலைக் காணவில்லை .
‘அண்ண , இவன் வரவில்லை. இருண்டுவிட்டது’
‘அவன்ர பிறந்த நாள். கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறான். வந்து விடுவான் என்றார் அந்த மூன்றாவது மனிதர்’
எட்டுமணி. பிரபாகரன் நிலை கொள்ளமல் சுற்றியபடி குட்டி போட்ட நாய் திரிந்தார்
ஓன்பது மணியாகியும் மைக்கேலைக் காணவில்லை. காட்டில் இருள் கவிந்து
இப்பொழுது எல்லோரும் கவலைப்படத் தொடங்கினர்கள்
ஓன்பது அரையாகிய போது மைக்கேல் இருட்டை ஊடுறுத்து வந்த போது புதிய சட்டை பாண்டு எல்லாம் போட்டிருந்தார்.
நேரடியாக மூன்றாவது நபரிடம் வந்து ‘அண்ணை எப்படி உடுப்பு இருக்கு’
அந்த நேரத்தில் பிரபாகரன் அங்கு இருக்கவில்லை
‘நல்லா மாப்பிளை போல் இருக்கு’
‘அண்ணை தலைவர் போல இருக்கெண்டு சொல்லுங்கோ’
‘அழகாகதான் இருக்கு’
‘ஏன்னண்ணை தலைவர் போல இருக்கென்று சொல்ல தயங்கிறீர்கள்.’
‘ஓமடா சரி’
அந்தநேரத்தில் வெளியே இருந்த பிரபாகரன் வந்து மைக்கேலிடம் ‘ஏன் தாமதம்?’
முகத்தில் இருந்த கோபம் தெரியவில்லை. இருளாக இருந்தபடியால்
‘அவங்கள் இருந்துவிட்டு போக சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்’
சரி ஒருக்கா பின்னாலே வா
பிரபாகரனை தொடர்ந்து சென்று சிறிது நேரத்தில் இருளில் மூன்று துப்பாக்கி சத்தம் கேட்டது.
மூன்றாவது மனிதர் ஓடி சென்று பார்த்தபோது தலையில் இரத்தம் வடிந்தபடி மைககேல இறந்து கிடந்தார்.
‘ஏன் தம்பி அவனை கொண்டாய் அதுகும் அவனது பிறந்தநாள்—–
‘அவன் சொன்னதை நான் கேட்டேன்.அவன் தலைவனாக ஆசைப்படுகிறன். இதை விட்டு வைத்தால் எனக்கு மடடுமல்ல உங்களுக்கும் பிரச்சனை வரும். இவற்றை ஆரம்பத்திலே கிள்ளி எறிவேண்டும்.’
இந்த கதையை கேட்டதும் மூச்சை இழுத்து என்னை ஆசுவசப்படுத்திக்கொண்டேன். இப்படியான ஒரு மனிதனை தலைவனாக ஏற்று இந்த சமூகம் அவனது புகழ்பாடியதே?. ஏத்தனை படித்தவர்கள் அறிவாளிகள் இந்த மனிதரின் பின் சென்றார்கள்
நிச்சயமாக இந்த சமூகத்திலும் குறை இருக்கவேண்டும்
ஏதாவது தருணத்தில் சகமனிதனின் கொலையை நியாயப்படுத்த முடியுமா?
இந்த விடயத்தை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்திருக்கிறோமா?. மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் நிதர்சனமானது. தவிர்க முடியாது. ஆனால்; அரசாங்கம், தனிமனிதர்களே கொல்லுவதை விரும்பாததால் நாமெல்லாம் மரண தண்டனையை எதிர்கிறோம். இதைவிட நாகரிகமடைந்த சமூகம் படுமாசமான குற்றவாளிக்கு மக்கள் வரிப்பணத்ததில் அவனது பக்க நியாயத்தை சொல்ல வாய்ப்பளிக்கிறது.
இதோ போல் வளர்க்ப்படும மிருகங்கள் முதுமையாலோ மாறாத வியாதியாலோ துன்பமடையும்போது அவற்றை கருணைக்கொலை செய்வதற்காக பல நிமிட நேரம், சில நேரத்தில் மணித்தியாலம் எடுத்து உரிமையாளருக்கு விளக்குவது எனது தொழில் வழக்கம். இதே போல் உணவுக்காக ஆடு மாடுகள் கொலை செய்யப்படும்போது அவை துன்புறுவது தவிர்க்கப்படுகிறது .உயிர்கொலை என்பது எக்காலத்திலும் முற்றாக தடுக்கமுடியாது. அதே நேரத்தில் துன்பத்தை குறைக்க பார்கிறோம்.
இலங்கையில் கடந்த நாப்பது வருடங்களில் மூன்று இனத்திலும் பல உயிர்கள் சகமனிதனால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 71 களில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்றபட்ட மரண அழிவுகளில் அந்தக்காலத்து அரசாங்கததை மட்டும் குற்றம் சாட்டமுடியாது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்த விடயம் 87ல மீண்டும் நடந்தது. அதே போல் தமிழர்கள் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் கொலைகள் நடந்து முடிந்தது.
இலங்கையில் இப்படியான ஆயுதப்போராட்டங்கள் வந்ததற்கு நிட்சயமாக தொடர்ந்து வந்த அரசுகள் பங்குவகிப்பது உண்மை. இதை எல்லோரும் அடித்து சொல்கிறார்கள். தற்பொழுது வெளிநாட்வர்கள், ஐக்கிய நாடுகள் மன்னிப்புசபையும் சொல்கிறது.
இப்படியான கருத்துக்களில் உண்மை இருகிற போதிலும் இதற்கு அப்பாலும் சிலவிடயங்கள் நாங்கள் விருப்பு வெறுப்பு இன்றி பார்கவேண்டும்.
அரசாங்கங்கள் எதுவாக இருந்தாலும் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கி கிளர்சி செய்பவர்களை கொல்லுவதும் தண்டிப்பதும் வழக்கம். அதற்காகவே அரசு படைகளை வைத்திருக்கிறது. அப்படியான அரசுகளை மக்கள் தெரிவு செய்து அதற்கு அதிகாரம் கொடுக்கிறார்கள். காள்மாக்ஸ் சொன்னது மாதிரி அரசு இல்லாமல் போகும் காலம் வராது. இந்தியா சீனா போன்ற பெரிய நாடுகள் பல இனமக்களை ஒன்றிணைத்து உருவாகியவை. அதைப் போல் பல நாடுகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகள். உதாரணமாக பாகிஸ்த்தான் சவுதி அரேபியா நோத் கொரியா போன்றவை. இந்த நாடுகள் இராணுவம் இல்லாமல் பலகாலம் இயங்கது.
இலங்கையில் தமிழர்களும் சரி மக்கள் விடுதலை முன்னணியினரும் ஆயுத கிளர்சியை தொடக்கிய போது ஆரசாங்கத்தில் அதிருப்தி இருந்தாலும் மக்கள் மத்தியில் அரசு அழிக்கப்படவேண்டும் என்ற நிலை இல்லை. அரசாங்கங்கள்71லும் பிற்காலத்திம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள். இலங்கை அரசாங்களுக்கு ஒவ்வொரு கிளர்சியை அடக்குவதற்கு பெரும்பான்மையான மக்கள் ஆணையை கொடுத்திருந்தார்கள். அத்துடன் கள நிலவரம் கூட தென் ஆபிரிக்காவிலோ பலஸ்தீனித்லோ இருப்பது போன்று மக்கள் விரோதமாக இருக்கவில்லை.. தமிழர்களுக்கு எதிரான 83 வரையில் அடக்கு முறை கைதுகள் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அக்காலத்தில் பூரணமான சட்டம் ஒழுங்கு இல்லாதுவிடினும் சட்டத்தின் அடையாளங்கள் இருந்தன. .தமிழ் போராட்ட அமைப்புகளும் அரசியல்வாதிகளும் முற்றான சீர்குலைவுக்கு தேவையான புள்ளி விபரங்களை அதிகரிப்பது தங்களுக்கு பிரசாரத்தை இலகுவாக்கும் என நினைத்தனர். நாட்டைவிட்டு வெளியேறிய அகதிகள் இந்த விடயத்தை மேலும் சீர்குலைத்தனர்.
இலங்கையில் உருவான இரண்டு கிளர்சிக்காரர்களும் பயங்கரவாதத்தை தங்களது பிரதான ஆயுதமாக எடுத்தனர். அரசியல்வாதிகள் அல்லது அரசியலோடு சம்பந்தப்பட்வர்களை எந்த நாட்டலும், விகிதாசாரத்தில் காணாத அளவு கொலை செய்தார்கள். சீன கலாசாரபுரட்சியின் போது நடந்த கொலைகளை, இரஸ்சிய புரட்சியலும், பின்பு ஸ்ராலினது கொலைகளும் பல மடங்குதான். ஆனால் அவர்களது சனத்தொகையோடு ஒப்பிடும் போது பிரபாகரனும் விஜயவிராவும் கொன்ற அரசியல்வாதிகள் அதிகம்.
மற்ற நாடுகளில் நடந்த உள்ளநாட்டு போர்களில் அரச படைகள் பொது மக்களை கொல்வது ,சித்திரவதை செய்வது நாம் அறிந்திருக்கிறோம். எமது நாட்டில் அரசுக்கு எதிரானவர்கள், அரசுக்கு இணையாக சித்திரவதை செய்தும் சிறையில் அடைத்தும் அப்பாவி மக்களை கொலை செய்தும் நடந்தது.
இலங்கையில் இராணுவத்தினர்கள் காலம் காலமாக பல கொடுரமான செயலில்களில் ஈடுபட்டார்கள் அதேபோல் விடுதலைப்புலிகளது வன்முறைகள் வெளிப்படையானது. இவற்றுக்கு மூலவேரான அரசியல்வாதிகள் தார்மிக பொறுப்பை ஏற்கவேண்டியவர்களாக இருக்கும்
ஆனால் இந்த அரசியல்வாதிகள் ,இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் வானத்தில் இருந்து வந்தவர்களல்ல. இந்த மூன்று பகுதியினரும் இலங்கை சமூகத்தில் இருந்து தோன்றியவர்களே. எனவே தமிழர் சிங்களவர் இஸ்லாமியார் என்பதற்கு அப்பால் முழு சமூகத்தினரும் தார்மீகமான பொறுப்பேற்று எதிர்காலத்தில் வன்முறை உருவாகாமல் இருப்பதற்கு ஆவன செய்யவேண்டும்