
6 பொதுவாகத் தமிழ் ஊடகங்களின் பொதுப்போக்குப் பற்றிய உங்களுடைய அவதானம்?
தமிழ் ஊடகங்கள் என்று சொல்லும் போது அது பாரிய வெளி. இலங்கை வானொலியில் இருந்து தற்போதைய இணையங்கள்வரை அடங்கும். பொதுவாகப் பேசினால் தமிழ் ஊடகங்கள் இந்த நாட்டுக்கோ இந்த மண்ணில் உள்ள மக்களுக்கோ விசுவாசமாக இருந்தவர்களில்லை. பிரதேசம் மொழி என்று வித்தியாசமாக இருந்தாலும் ஊடகத்தின் உண்மையான விசுவாசம் மக்களின் மேல் இருக்க வேண்டும். இலங்கையில் தமிழ் ஊடகங்களுக்குக் காலம் காலமாக இந்தச் சிந்தனை இருக்கவில்லை. வெவ்வேறு சக்திகளுக்கே விசுவாசமாக இருந்தார்கள். கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரை தலையில் தூக்கி வைக்காத ஊடகம் உள்ளதா? இந்த நிலைமை இலங்கையில் சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு இல்லை. இப்பொழுது வெளிநாட்டு தமிழருக்கு விசுவாசமாக இருக்க முயற்சி நடக்கிறது. இதற்கு மேல் இவ்வளவு காலத்தில் இலங்கையில் ஆளுமையான பத்திரிகை ஆசிரியர் என பேராசிரியர் கைலாசபதிக்கு பின்பு யாராவது உருவாகியதாக தெரியவில்லை. இதைவிட முக்கிய குறைபாடு தமிழ் பேசும் மக்களை இலங்கைத் தமிழர், மலயகத்தமிழர், இஸ்லாமியர் என பிரித்து பத்திரிகையில் போடுவது. அரசியல்வாதிகள் செய்த அதே பிழையை செய்து சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஒருவர் மீது ஒருவரின் கசப்புணர்வை வளர்த்ததும் இந்த ஊடகங்களே.
இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு இந்த ஊடகங்கள் பொறுப்பு எனக் கூறவில்லை. ஆனால் அந்தப் பிரச்சனைகளில் இவர்கள் சீவிக்கிறார்கள். அரசியல்வாதிகள் தெருவில் மலங்கழித்தால் இவர்கள் அதைக்கிழறி உண்ணும் கோழிகளாக அறுபது வருடங்கள் சீவித்திருக்கிறார்கள். ஒரு நாட்டில் போர் மற்றும் பகைமை இருந்தால் அதைத்தூண்டுவது சரியானதா என்ற கேள்வியை இந்த ஊடகங்கள் இனியாவது கேட்க வேண்டும்.
வெளிநாட்டிலோ அல்லது இலங்கையின் ஆங்கில பத்திரிகைகளோ செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பல பக்கங்களிலும் பிரசுரித்தபின் ஆசிரியர் கருத்துடன் முக்கியமாகச் சிலரது கருத்தை இரண்டு பக்கத்துக்கு பிரசுரிப்பார்கள். கருத்துகளை எழுதும் போது வித்தயாசமான கருத்துள்ளவர்களை அழைத்து எழுதச் சொல்வார்கள். ஆனால் தமிழில் இது இல்லை. முதல் பக்கத்திலே கருத்துகளை போடுவதும் பிறகு பல பக்கத்தில் அதேபோல ஒரேவிதமான கருத்துகளைப் போட்டு நிரப்பி அந்தகாலத்துச் ‘சுதந்திரன்’போல் இந்தக் காலத்து தினசரிகள் செயல்படும்போது மக்களுக்கு வித்தியாசமான சிந்தனை ஏற்படாது.
சில பத்திரிகைகளில் வார இறுதியில் நாலு வெளிநாட்டவர் அரசியல் கருத்து எழுதுவார்கள். இதன்மூலம் பத்திரிகை யார் மீது விசுவாசம் காட்டுகிறது என்பது தெரியும். அரசாங்கத்தால் நடத்தப்படும் ‘லேக்கவுஸ்’ பத்திரிகைகளை முன்னுதாரணமாக கொண்டால் இதற்கு மேல் போகமுடியாது.பத்திகை சுதந்திரம் என்பது பத்திரிகையாளர் நினைத்ததை எழுதுவது மட்டும் என்பது தவறு. பல விதமான கருத்துக்கள் சிந்தனைகள் மக்களை சென்று அடைவதும் ஊடக சுதந்திரமே. அதைத் தடைசெய்வது எப்படிச் சரியாகும்? இதற்கு மேலாக மக்கள், நாடு, உயிர் என்பன கருத்தில் கொண்டு பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.
7 மாற்று ஊடகங்கள், மாற்று எழுத்துகள், மறுகருத்தாளர்கள் தொடர்பாக?
மாற்று ஊடகங்கள் தமிழ்நாட்டில் சிறிய குழுவாகவாவது இயங்க முடியும். ஆனால் நமது சமூகத்தில் இவ்வளவு காலமும் அது கடினமானதாக இருந்தது. ஆனால் தற்போது இணையங்கள் இருப்பதால் அதற்கான வாய்ப்பு உள்ளது. இத்துடன் சமூக ஊடகங்கள் வந்ததால் முகநூல், வலைப்பூ, யூரியுப் என்பதன் மூலம் கருத்துகளை வெளி கொணர முடிகிறது. ‘டீஜிரல் ரெக்னோலஜி’ மூலம் சமூக ரேடியோக்கள் மேல் நாடுகளில் உள்ளன. இவையும் கருத்துகளை மக்கள் மத்தியில் சேர்ப்பதற்கு துணைபுரியும்.
8 உங்களுடைய எழுத்துகளில் பெரும்பாலும் சொந்த அனுபவங்களையும் அரசியல் வரலாற்றையும் சாராம்சப்படுத்தி எழுதும் உத்தியைக் காணலாம். இதை இலக்கியமாகவும் பதிவாகவும் பார்க்கக்கூடிய நிலையே தெரிகிறது. இத்தகைய ஒரு வகை அல்லது போக்கு இயல்பாகவே உருவானதா அல்லது இதை நீங்கள் தீர்மானித்தே உருவாக்கினீங்களா?
இலக்கியம் என்பது தனிமனிதனின் அனுபவவத்தை, கற்பனையை பொதுவாக்குவது தானே. எனது எழுத்து, சிந்தனை, நான் கடந்துவந்த பாதை என்பன நான் நிற்கும் தளத்தில் நிற்கும். இலங்கை அரசியல், மிருகவைத்தியம் இரண்டும் நான் அறிந்த துறைகள். இதைப்பற்றி பேச எழுத முடிகிறது. இதில் இலங்கை அரசியலில் பலதரப்பில் நிற்கும் பலபேரை சந்தித்து அவர்களுடன் பேசக்கூடிய வாய்ப்பு இந்தியாவில், இலங்கையில், அவுஸ்திரேலியாவில் கிடைத்தது. ‘உதயம்’ இதற்கு மிகவும் உதவியது. சாதாரண சிங்கள விவசாயி, இந்திய முகாம் அகதி, சிறிசபாரட்னம், பத்மநாபா, ராஜபக்ச சகோதர்கள் இதை விட அவுஸ்திரேலிய தொழிற் கட்சியில் பதினைந்து வருடம் இருந்த பலரை சந்தித்தேன். இப்படியான சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்காது.
இதே போல் மிருக வைத்தியம் சாதாரணமானதல்ல. மிருகங்களுடனான மனித உறவு 15000 வருடங்களானது. மனிதர்கள் இறைவன் என்ற பொருளைத்தேடி 5000 வருடங்களே ஆகின்றன. ஆனால் தனக்கு தோழமை உதவிக்காக நாய்களை 15000 ஆண்டுகளாகத் தேடியுள்ளான்.இந்த மிருக – மனித உறவுகள் மனிதர்களின் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்தவை. அவர்களது காலச்சாரத் தன்மையை உணராமல் நான் வைத்தியம் செய்யமுடியாது. 1980 ஆம் வருடத்தில் இருந்து இந்த மிருக வைத்திய பயணம் மிகவும் நீண்டது. நாடுகள், பிதேசங்கள், நகரங்கள் என கடந்து வந்துள்ளேன். என்னை பதவியாவில் வசிக்கும் சிங்கள விவசாயி, செங்கல்பட்டில் மாடு வளர்க்கும் கோனார்கள், தென்அவுஸ்திரேலியாவின் இறைச்சி மாடு வளர்க்கும் விவசாயி, மெல்பேனில் நாய் பூனை வைத்திருக்கும் சகல மட்டத்தவர்களுடன் எல்லாம் பேசும் போது அவர்களது நிலையைப் புரியவேண்டும்.
இலங்கையில் றாகலையில் மலைநாட்டு தொழிலாளியிடம் ஒரு கறவை மாடு அவனது சீவனத்திற்கு மட்டும் போதுமானதாக இருக்கும். அதே வேளையில் தென் அவுஸ்திரேலியாவில் ஆயிரம் மாடுகள் உள்ள பண்ணை விவசாயியையும் பார்த்துள்ளேன். பலவகையான சமூக கலாச்சார தனிமனித உறவுகளை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள இந்த வைத்தியத்துறை உதவுகிறது. நான் எழுதிய ‘வாழும்சுவடுகள்’ என்ற இரண்டு புத்தகமும் பல புத்தகமாகாத கதைகளும் நான் கண்ட தனிமனிதர்கள், தங்களது மிருகங்களுடன் வைத்துள்ள உறவுகளின் குறுக்கு வெட்டுப்பரிமாணமாகும்.
அரசியலிலும் மிருகவைத்தியத்திலும் நான் அறிந்தவை, புரிந்தவையை எழுதவே எனக்கு வாழ்நாள் காணாது. இவைகளுக்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் உள்ளது என்பது எனக்குத் தெரியாது. தமிழ் இலக்கியத்திலும் ஒரு விடயத்தைச் சொல்லவேண்டும். கவிதை சார்ந்துதான் எமது ஆரம்ப இலக்கியம். அதனால் இங்கே சொல்லப்படும் மொழிக்கு கொடுக்கப்படும் மரியாதையில் பத்திலொன்று கூட உட்பொருளுக்கு கொடுப்பதில்லை. இதனால்தான் தமிழ் இலக்கியங்கள் பல மொழிமாற்றம் செய்தால் யானை உண்ட விளாம்பழங்களாகி விடுகின்றன.
தமிழ்நாட்டில் சமூக உறவுகள் சாதி என்ற வட்டத்திற்குள்ளும் இலங்கையில் பிரதேச வட்டத்திலும் நின்று விடுவதாலும் இலக்கிய வெளிப்பாடுகள் நில அமைப்பு கலாச்சாரத்திற்கு அப்பால் போகவில்லை. அத்துடன் காதல், காமம் என்பன புனிதமாகத் தொட்டுப் பார்க்கும் தன்மைதான் இலக்கியப் பரப்பில் இன்னமும் இருக்கிறது. கலாச்சார அதிர்வுகளை உருவாக்கும் படைப்புகள் வருவதை தமிழ் சமுகம் வரவேற்காதது மடடுமல்ல அவற்றை புறக்கணித்து விடவும் முயலும்.
* பெரும்போக்கொன்றிலிருந்து விலகியிருக்கும்போது குடும்பம், உறவினர், சூழல் என்ற வளையங்களுடனான உறவில் பாதிப்பும் தாக்கமும் ஏற்படுமே. இதை எவ்வாறு எதிர்கொண்டு வருகிறீங்கள்?
அவுஸ்திரேயாவில் ஒரு லூசுப்பயல் நடத்தும் வானெலியில் என்னையும் எனது குடும்பத்தையும் இனங்கண்டு பகிஸ்கரிக்க சொல்லி ஒரு அறிவழகன் பிரகிருதி வெள்ளிக்கிழமையும் சொல்லி வந்தான். இப்பொழுது கொஞ்சம் ஓய்ந்து விட்டார்கள். நான் இந்த நாட்டில் இவர்களிடம் வாக்கு கேட்பதில்லை.அவுஸ்திரேலியாவில் தொழில் இல்லாமல் அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்பவனும் மற்றவர் தயவின்றி வாழலாம். என்னிடம் வைத்தியத்திற்காக நாய், பூனையை கொண்டு வருபவர்கள் சாதாரண அவுஸ்திரேலிய மக்கள். அந்தப்பணத்தில்தான் எனது ஜீவிதம் ஓடுகிறது. இதைவிட எனது நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். பொது விடயத்தில் கருத்தை வைக்கும் போது தேவையற்ற வசை மொழி… அதுவும் அடிப்படையில் அறிவோ அல்லது திறமையோ இல்லாத இரண்டும் கெட்டான்கள் கேட்கும் போது சில நேரம் கஸ்டமாக இருந்தாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொண்டேன்.
8 ‘வண்ணாத்திகுளம்’ நாவலை எழுதிய நோக்கம்?
‘வண்ணாத்திக்குளம்’ நாவல் 80 – 83 காலப்பகுதில் நடந்தவைகளையும் நினைவிலும் குறித்தும் வைத்திருந்ததைக் கொண்டு எழுதியது. இந்தப் போராட்டத்திற்கான ஆரம்பகாலம் அது. அந்தக் காலத்தில் சாதரண சிங்கள மக்களிடம் தமிழர்கள் மேல் எந்த இன வெறுப்பும் அற்ற மனநிலையை பார்த்தேன். அதே நேரத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் இளைஞர்கள் வன்செயலுடன் யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில் இனத் துவேசத்துடன் கொலைகள் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள்.
அதேகாலத்தில் சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் குட்டையை ஒருவருக்கொருவர் போட்டியாக குழப்பினாலும் அதன் பிரதிபலிப்பாக பின்னால் வரும் பயங்கரமான போரை எதிர்பார்க்கவில்லை. குடித்துவிட்டு தெருவில் வாய்த்தர்க்கம் செய்யும் சாதாரண குடிகாரனின் நிலையில் இருந்தார்கள். இந்தக்காலத்தில் நடந்தது எல்லாவற்றிற்கும் சிகரமாக 83 இல் கலவர நிகழ்ச்சி. இந்தக் குடிகாரர்களிடம் இருந்த அரசியல் வன்முறைச் சண்டித்தனம் செய்த இளைஞர்கள் கைகளில் கொண்டுவந்தது. இந்த விடயங்கள் வண்ணாத்திக்குளத்தில் வந்துள்ளன.
83 கவவரத்தின் பின்பு தமிழர்கள் சிங்களவர்கள் ஒன்றாக இருப்பது என்பது வெளிநாட்டில்தான் முடியும் என்பதே எனது சிந்தனையாக இருந்தது. இதேவேளையில இரண்டு இனங்களிலும் பரஸ்பரமான நல்லுறவு வளர்வதற்கு சாத்தியம் உண்டு என்பதை உணர்த்துவதற்காக வீட்டில் பாதுகாப்பாக அடைக்கலத்தோடு துப்பாக்கியை கொடுத்தது உண்மை என்ற சம்பவத்தை எழுதினேன். இது கலவரநாட்களின் மத்தியில் எனக்கு நடந்தது. அதே போல் வவுனியா சந்தையை விமானப்படையினர் எரித்து மக்களை துன்புறுத்தும்போது சிங்களப் பெண்ணான சித்திரா தமிழனை காப்பாற்றியது கற்பனையான சம்பவம். ஆனால் இதேபோல் பல சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கிறது. பேசும் மொழி மதத்துக்கு என்ற வேற்றுமையின் வெளியே வந்து அந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் என்னால் சகவாழ்வு சாத்தியம் என்பதற்காக என்னால் முடிந்தவரை எழுதியது இந்த நாவல். இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்தவர்கள் பலராலும் பாராட்டைப் பெற்றது. மட்டுமல்ல ‘தெற்காசிய இலக்கியம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் ‘வண்ணாத்திகுளம்’ வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் எனது பங்கு எவ்வளவு என்று தெரியாத போதிலும் சமூக நல்லெண்ணத்தை உருவாக்குவதில் இந்த நாவலுக்குப் பங்கு உள்ளது என்பதை எனக்கு ஆயிரம் டாலரை தந்து நூறு பத்தகங்களை வாங்கி ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவுப் பெண்மணி தனது நண்பர்களுக்கும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பினார். வண்ணாத்திக்குளம் சிங்களத்தில் தொடர்சியாக அவுஸ்திரேலிய சிங்கள பத்திரிகையான ‘பகன’வில் வருவதுடன் வெகுவிரைவில சிங்களத்திலும் நூல் வடிவாக வரவுள்ளது.
இன வெறுப்பாக பேசுவதோ இலக்கியம் படைப்பதோ இலகுவானது. மனித இயற்கையானது மட்டுமல்ல மிருகங்களுக்கு கூட அடிப்படையானது இந்த விரோத உணர்வு. என்னைப்போல் புலம் பெயர்ந்தவனால் நான் பிறந்த வளர்ந்து கல்விகற்று மனிதனாகிய நாட்டில், நிலவும் இனப்பகை எனது புத்தகத்தால் ஒரு சிலரையாவது மாற்றுமென்றால் அதைவிட எழுதியவனுக்கு என்ன பரிசு வேண்டி இருக்கிறது?
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்