நடேசன்-நேர்காணல்-2

3 அவுஸ்ரேலியாவில் உதயத்தின் ஆரம்பம், அதனோடு இணைந்து செயற்பட்டவர்கள், அதை நீங்கள் வெளியிட்ட அனுபவம், சவால்கள் எல்லாம் எப்படி?

ஆரம்பத்தில் இந்தச் சுமையைத் தூக்கப் பலர் வந்தார்கள். இவர்களிற் பெரும்பாலனவர்கள் இடதுசாரிப் போக்கையும்,  விடுதலைப்புலிகள் சாராத இயக்கத்தை ஆதரிப்பவர்களாகவும் இருந்தர்கள். மெல்பேன் மட்டுமல்ல சிட்னி, பேர்த், கான்பெரா என்று இருந்தார்கள். இவர்களில் முருகபூபதி, மாவை நித்தியனந்தன், சிவநாதன், ரவீந்திரன், முருகையா சிட்னியில் கேதாரநாதன், பேர்த்தில் இராம்குமார் என்பவர்களோடு பெயரைச் சொல்ல விருப்பமில்லாதவர்களும் இருந்தார்கள். சிலரது உழைப்பு இராமர் அணையில் அனுமான் போலவும் மற்றவர்கள் அணிலாகவும் இருந்தார்கள். இங்கே முக்கியம் அணைகட்டி முடித்தது போல் பன்னிரண்டு வருடத்துக்கு மேலாக பத்திரிகையை நடத்தினோம்.

இதில் உள்ளவர்களோடு ஏற்பட்ட அனுபவத்தை கூறாது புற அனுபவத்தை மட்டும் கூறவிரும்புகிறேன். ஒரு பத்திரிகை நடத்துவதற்கு முதல் பிரச்சனை பணப்பிரச்சனையே. அது எங்களுக்கும் இருந்தது. 8000 – 10000 இடையான பத்திரிகையை அடித்து இலவசமாக முழு அவுஸ்திரேலிய தமிழர்களுக்கும் கொடுப்பதற்கு மாதம் 2500 டாலர் தேவை. போட்ட முதலே 4000 மட்டும் தான். இதன் பின் துவங்கியது நமது நண்பர்கள் பிரச்சனை. பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்கும் வியாபாரிகளை பயமுறுத்துவது, அவர்கள் கடைகளில் இருந்து பத்திரிகைகளை தூக்கி எறிவது, இவை ஒவ்வொரு மாதமும் நடந்தது. அதை நடத்தும் போது வன்னியில் இருந்து கட்டளை வந்ததாகச் சொல்லி நடத்துவார்கள். இதைச் செய்தவர்கள் சாதாரணமான படியாதவர்கள் அல்ல. இங்கிலாந்தில் பொறியில் படித்துவிட்டு பொறியலாளரக வேலை செய்த ஒருவர் சிட்னியில் செய்தார். இதை ஒரு அக்கவுண்டன்ட் நியாயப்படுத்துவார். விடுதலைப்புலி ஆதரவாளரான புழுக்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவரிடம் கேட்டேன். ‘இதுமாதிரி உங்கள் ஆட்கள் செய்கிறார்களே சரியா?’ என்றபோது அவர் சொன்ன பதில் என்னை திடுக்கிடவைத்தது.

‘இப்படி எழுதினால் அப்படித்தான செய்வார்கள்’

மெல்பேன், லண்டன் அளவு விஸ்தாரமான நகரம். மற்ற மாதிரிச் சொன்னால் மத்தியில் இருந்து மூன்று திசைகளில் 35 – 40 கிலோமீட்டர் விரிந்த பிரதேசம். இந்தப் பகுதிகளில் இந்தியர்களின் கடைகள் அந்தகாலத்தில் 77 இருக்கும். பத்திரிகை தூக்கும் கள்ளர்களில் இருந்து பாதுகாக்க இந்தியர்கள், சிங்களவர்களின் கடைகளைத் தேடி நான் மட்டும் 50 கடைகளுக்கும் முருகபூபதி 25 கடைகளுக்கும் வினியோகிப்போம். இதைச் செய்ய 2 – 3 நாட்களாகும். விடுதலைப்புலிப் பொறுப்பாளரை இந்த திருட்டை நிறுத்தாவிடில் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 225 பேருக்கும் இதைக் கடித மூலம் தெருவிப்பேன் என கடித மூலம் பயமுறுத்தினேன். தனிப்பட்ட முறையில் என்மேல் அவதூறு எழுதியவர்களுக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பினேன். இப்படி இயக்கம் சார்ந்தவர்கள் செய்யும் அநியாயத்தோடு மட்டுமல்ல சில தனிப்பட்டவர்களும் பத்திரிகையைத் துக்கி வீசுவார்கள்.

இதில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. ‘டண்டினோங்கில் சன் அன்ட் வீனஸ்’ எனப்படும் ஒரு கடையில் பத்திரிகையை வைத்துவிட்டு எனது காரில் சிறிது நேரம் இருந்து பார்த்தேன். ஒரு அறுபது வயதான மனிதர் ஒரு பத்திரிகைய எடுத்து வெளியே கொண்டு வந்து கடையின் முன்னே உள்ள குப்பைக் கூடையில் போட்டார். அதைக் கண்டதும் நான் இறங்கி அவரிடம் நெருங்கிப் போய் ‘ஏன் ஏறிந்தீர்?’ என்றேன்;.

‘பழைய பத்திகை’ என்றார்.

நான் ‘இப்பத்திரிகையை இப்பொழுதுதான் வைத்துவிட்டு வந்தனான். என்ன பேக்கதை கதைக்கிறீர்?’ என நெருங்கியபோது மனிதர் நடுங்கிவிட்டார்.

மனைவி வந்து ‘என்ன?’ என்று கேட்போது நான் திரும்பி விட்டேன்.

மொத்தத்தில் புலிவாலைப் பிடித்திருந்த கோழைகளால் பத்து வருடங்கள் மிகவும் கஸ்டமாக இருந்தது. கடைசி இரண்டு வருடங்கள் விடுதலைப்புலிகளில் முக்கியமாக பத்திரிகை தூக்கியவர்கள் பணம் சேகரித்தது விடயத்தில் கைது செய்யப்பட்டதாலும் இலங்கையில் போர் துவங்கியதாலும் பத்திரிகை சுமுகமாகவும் கையை கடிக்காதும் நடந்தது. தமிழ் பத்திரிகை நடத்துவதில் இப்படி ஒரு முரண்நகை.

4 உதயத்தின் பங்கு, விளைவு, வாசகர்கள், ஆதரவாளர்கள் என்ற வகையில் ஒரு மதிப்பீட்டை இப்பொழுது செய்யும்போது உங்களுடைய உணர்வு எப்படியிருக்கிறது?

‘உதயம்’ அரசியல் பத்திரிகை மாத்திரமல்ல, இலக்கியம் மற்றும் சமூக விடயங்களைப் பேசியது. சிறுவியாபாரிகளை ஆதரித்தது. முக்கியமாக அவுஸ்திரேலியாவில் தென்னாசிய சமூகத்தின் பத்திரிகையாகவும் சமூக கண்ணாடியாகவும் இருந்தது மட்டுமல்ல. சமூகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சிந்தித்தது.

‘உதயம்’ அவுஸ்திரேலிய மைய நீரோட்டத்திற்கும் தென்னாசிய மக்களுக்கும் ஒரு பாலமாக இருந்தது. அவுஸ்திரேலியாவின் பல முக்கிய நூல்நிலையங்களுக்கு செல்லும் போது தென்னாசிய மக்களின் பிரதிநிதியாகச் உதயன்சென்றது. எந்த ஒரு அடக்குமுறைக்கோ அல்லது அதிகாரத்திற்கோ கட்டுப்படாமல் இருந்ததன் மூலம் பலர் தங்கள் பிரச்சனைக்கு உதவியாக உதயத்தைத் தேடினார்கள். உலகம் முழுவதும் பயங்கரவாத சூழல் இருந்த காலத்தில் மிதவாதப்பத்திரிகையாகவும் பலரால் பார்க்கப்பட்டது. சமூகத்தில் பலமுறை பலவீனமானவர்களுக்கு ஆதரவாக நின்றது. இந்தியாவில் இருந்து சிற்பாச்சாரியார்களுக்கு அவுஸ்திரேலிய வேதன வசதிகளை சிட்னி கோயிலை நடத்தியவர்கள் செய்யாத போது,  அதை எடுத்து விவாதித்து, அவுஸ்திரேலிய தொழிற்சங்கத்தைத் தலையிடவைத்தது. பிள்ளையார் கோவில் அர்ச்சகரான பிராமணர் ஒருவரை பொய்க் கேசில் மாட்டியபோது, அவரது விடயத்தை வெளிகொண்டுவந்து கடைசியில் பலர் அவருக்கு உதவ முன்வந்தது. இலக்கியரீதியல் தமிழநாட்டு முக்கிய இலக்கிய கர்ததாக்களான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பாவண்ணன் போன்றவர்களை சாதாரண தமிழர்களுக்கு பத்தி எழுத்து மூலம் அறிமுகப்படுத்தியது. 12 ஆவது வருட உதயத்தின் வெளியீட்டையிட்டு ஜெயமோகனை அவஸ்திரேலியாவுக்கு அழைத்தது. அவர் ‘புல்வெளிதேசம்’ என அவுஸ்திரேலியப் பயணத்தை எழுதியதற்கும் உதயத்திற்குப் பங்குண்டு.
தற்பொழுது உதயம் வெளிவராது விட்டாலும் அதனது அளவு கோல் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் எந்த தென்னாசிய பத்திரிகையும் தொடாத நிலையே இன்னமும் உள்ளது.விடுதலைப் புலிகளின் யுத்தம் மற்றும் தமிழ் இனவாதத்திற்காக எதிராக பலகாலமாக குரல் கொடுத்தது மட்டுமல்ல அதற்கு மாற்று செயல்பாடுகளாக சிங்கள இஸ்லாமிய அறிவாளிகளை மேடையேற்றியது. டாக்டர் அமிர் அலி, லயனல் போபகே போன்றவர்களை வருடாந்த நிகழ்ச்சிகளில் பேசவைத்து இன நல்லெண்ணம், ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது என செயலில் காட்டினோம்.

உதயம் பல வாசகர்களைக் கொண்டிருந்த போதும், ஆதரவாளர்களைச் சேர்க்க எத்தனிக்கவில்லை. ஊடகமும் ஊடகவியலாளர்களும் சமூகத்திற்கு பிடிக்காவிட்டாலும் கசந்தாலும் உண்மையை சொல்வோம் என்ற கர்வத்தோடு இந்தப் பத்திரிகையை நடத்தியதால் ஆதரவாளர்களையோ அபிமானிகளையோ சேர்க்கவில்லை.உதயத்தின் மதிப்பை நான் சந்திப்பவர்களெல்லம் மீண்டும் நடத்தும்படி கேட்பதின் மூலம் புரிந்து கொள்ளமுடியும். நான் உட்பட சில எழுத்தாளர்களை உதயம் அவுஸ்திரேலியாவில் உருவாக்கியது.

என்னைப்பொறுத்தவரை இணையம் இல்லாத அல்லது குறைந்தவர்களே இணையத்தைப் பார்க்கும் வசதியுள்ள காலத்தில் முக்கியமாக இலங்கைத்தமிழர்கள் சிந்திக்க மறுத்து பயங்கரவாதத்தையும் வன்செயலையும் உணர்சிகளின் அடிப்படையில்தங்களது இலட்சியத்தை பெறும் வழிமுறைகள் என நினைத்திருந்த காலத்தில் உதயம் தேர்ந்த வழிகாட்டியாக நிற்க முனைந்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பலவிடயத்தில் நல்ல போக்கு இருந்தது. நாங்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்த போதும் முற்றும் ஜனநாயகமாகவும் தனிப்பட்ட குரோத உணர்வில்லாமல் நாகரீகமாகவும் பழகினோம். தொடர்ச்சியாக பேசிப் பல விடயங்களைத் தீர்த்தோம். இப்படியான விடயங்கள் கனடாவிலோ ஐரோப்பாவிலோ நடந்தாகத் தெரியவில்லை.

இதற்கும் ‘உதயம்’ காரணமென்பேன். வன்முறையை ஆதரித்தும் அதை புலம் பெயர்ந்த சமூகத்தில் பிரயோகிக்கவும் விரும்பிய தமிழர்களை எழுத்தால் எதிர்த்து நின்று எம்மை மட்டுமல்ல முழு சமூகத்தையும் காப்பாற்ற முனைந்தோம். அதே நேரத்தில் தற்போது உதயத்தின் தேவை பெரிய அளவில் இல்லை என்பதால் அதை விட்டு முன்னகர்ந்தோம்.

5 பெரும்பாலானவர்கள் எதிர்த்திசையில் நிற்கும்போது நீங்கள் அதற்கு எதிரான திசையில் நின்று செயற்படுவதையிட்டு உங்களுக்கு ஏற்பட்ட மனநிலை எப்படியானது? இன்றைய மனநிலை என்ன?

இதில் இரண்டு விடயங்கள் உண்டு. நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை புரிந்து கொள்ளும் அறிவு மற்றது அதையிட்டு ஒரு செயல்பாட்டாளராக நின்று செய்வது.
முதலாவது எனது பேராதனை பல்கலைப்படிப்பு. பின்பு நாலுவருடம் சிங்கள மக்களுடன் வேலை செய்தது. பின்பு இந்தியாவில் சகல விடுதலை இயக்கத்தலைவர்கள், தொண்டர்கள் என பழகியது எல்லாம் என் அறிவை விருத்தி செய்ய உதவியது. என்னைவிட எமது சமூகத்தில புரிதல் உள்ளவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் நான் பழகி இருக்கிறேன். ஆனால் அவர்களில் பாதிப்பேர் ஏன் பிரச்சனை என மவுனமாக இருந்து விட்டார்கள். அடுத்த பாதிப் பேர் சுயலாபம் தேடி தங்கள் புரிதலை ஒதுக்கி வைத்துவிட்டு அநியாயத்தின் சேவகனாகி விட்டார்கள். மற்றச் சமுகத்தில அரசியல்வாதிகள் மட்டும்தான் சந்தர்ப்பங்களைப் பார்த்து செயல்படுவது வழக்கம். ஆனால் நமது தமிழ்ச்சமூகத்தில் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசியர்கள், பத்திரிகையாளர் எல்லோரும் அரசியல்வாதிகளாகிவிட்டார்கள். இதனாலே சாதாரண மக்களுக்கு கஸ்டம் வந்தது.

யோசித்துப் பாருங்கள். சண்டியன் ஒருவனுக்கு எயிட்ஸ் நோய் வந்தது. ஆனால் வைத்தியர் அவனுக்கு பயந்து நோயை மறைத்து பொய் சொன்னால் எப்படி இருக்கும்? ஊருக்கே நோய் வந்து விடாதா?

இரண்டாவது விடயம், நான் பெரிய அளவில் செயற்பாட்டாளராக வேண்டுமென்று நினைத்தவன் அல்ல. எனது கல்வி, உத்தியோகம், சமுக அந்தஸ்த்து என்பவை மிக எளிதாகக் கிடைத்தவை. வாழ்க்கையில் ஒரு நாளாவது நான் பசியை அனுபவித்தவனல்ல. சகல விடயங்களும் அதிக கஸ்டப்படாமல் கிடைத்தது. சிறுவயதில் எங்கள் ஊரில் நாங்கள் வசதியாக இருந்ததால் பலருக்கு பல உதவிகளை செய்வது என்பது என்னோடு வந்த பழக்கம். இதனாலே இந்தியாவில் அகதிகளுக்கும் ,பின்பு அவுஸ்திரேலியவிலும் உதவுவதில் ஈடுபட்டேன். இந்தியாவில் ஐந்து இயக்கங்களையும் ஒருங்கிணத்து உருவாக்கிய அமைப்புக்கு செயலாளராக இருந்து தமிழர் நல மருத்துவ நிலயத்தை நடத்தும்போது இயக்க வன்முறைகள், குத்துவெட்டுகள், கொலைகள் என்பவற்றைப் புரிந்து கொண்டேன்.

இலங்கையில் மட்டுமல்ல, இந்திய மண்ணிலும் தமது இயக்கம், சகோதர இயக்கம் என்று கொலைகள் நடந்தது. இப்படிப் பட்ட இயக்கத்தினர் மக்களுக்காக போராடுவார்கள் என நம்புவற்கு என்னால் முடியவில்லை. அடிப்படையில் வன்முறையாளர்களை கொண்டு எல்லா இயக்கங்களும் இருந்தன. அதே நேரத்தில் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள், மேன்மையான குணவான்களையும் இயக்கங்களில் சந்தித்தேன்.

மற்ற இயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டபோது இவர்கள் ஊர் போய் சேராதவர்கள் என்பதை உணர்ந்ததாலும்,  இலங்கை அரசாங்கத்தின் வன்முறையால் இவர்களை வெளிப்படையாக எதிர்க்க முடியாத பலரில் நானும் ஒருவன் ஆனேன். அவுஸ்திரேலியாவில் வந்தும் அகதிக் கழகமும் மற்றைய தாய் தந்தை இழந்த குழந்தைகளின் உதவி திட்டத்தோடும் இருந்த என்னை எதிர்ப்பு நிலைக்கு தள்ளியது இங்குள்ள தமிழ் ஒருங்கிணைப்பு குழுவை சேர்நதவர்களே. மேலும் இவர்களோடு போராட நான் தேடிய ஆயுதம் இவர்களால் கையாள முடியாதது. மட்டுமல்ல பாரிய வீச்சுக்கொண்டது. இந்தப் போராட்டத்தால் தனிப்பட்ட ரீதியல் பாதிப்பு அதிகம். புத்திரிகையைத் தொடங்கிய அடுத்த மாதம் எனது சொந்த ‘கிளினிக்’கையும் தொடங்கினேன். ஆனால் எனது கவனம் பத்திரிகையில் இருந்ததால் தொழில் முறையில் முன்னேற்றம் பலமடங்காக தடைப்பட்டது. இதை பணத்தில் கணக்கு பண்ணினால் பன்னிரண்டு வருடத்தில் மில்லியன் டாலருக்கு மேல் இருக்கும். பாடசாலை நண்பர்கள் உறவினர்களோடு பிரிவு ஏற்பட்டது. என்னை, எனது மனைவியை, எனது தொழிலை இழிவாகப் பேசுவதில் இன்னும் சிலர் இன்பமடைகிறார்கள். ஒரு வைத்தியரே சிலரிடம் மருத்துவரான எனது மனைவியிடம் வைத்தியத்திற்கு போகவேண்டாம் என கூறியதை அவர்களே வந்து கூறினார்கள். பொதுவான சமூகவிடயங்கள் பலவற்றில் புறக்கணிக்கப்படுவது ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தாலும் பின்பு பழகிவிட்டது.நானும் எனது அரசியல் அறிவு என்ற கர்வத்தால் எனக்கு பாதுகாப்புப் தேடிக்கொண்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: