நடேசன் -நேர்காணல்1

DSCN5270

துவரை மற்றும் தேனியில் வந்தது(சிறு திருத்தங்களுடன் இங்கு சிறுக சிறுக பிரசுரிக்கப்படும்

1. உங்களுக்கு இலக்கிய ஆர்வம், எழுத்து மீதான ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

எனது ஊரான எழுவதீவில் எங்கள் வீட்டுக்கு மாத்திரம் வீரகேசரியும் கல்கியும் வரவழைக்கப்படும்.தமிழ் வாசிக்கத் தெரிந்த காலத்தில் இருந்து பார்வை மங்கிய எனது பாட்னாருக்கு வீரகேசரி செய்திகளையும் கல்கியில் வரும் தொடர்கதைகளையும் சத்தமாக வாசிப்பேன் இதற்காக தலைமை ஆசிரிராக இருந்து இளைப்பாறிய எனது பாட்டன் காசு தருவார். இந்தக்காலம் எட்டுவயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப்பட்டகாலம். எனது அம்மவும் கல்கியின் தீவிர வாசகி எனது தம்பிக்கு சபேசன் என பெயர் வைத்த போது அக்காலத்தில் வந்த கல்கியில் வந்த ஒரு தொடர்கதையின கதாபாத்திரத்தின் பெயர் என நினைக்கிறேன். இதன் பின்பு நயினாதீவிற்கு படிக்க சென்றபோது அங்கு எனது மச்சாள் ஜெயகாந்தனின் இரசிகை. இப்படியானவர்களால் விதைக்கப்பட்டு முளையாகியது எனது வாசிப்பு ஆர்வம்

யாழ்பாணம் இந்துக்கல்லுரி லைபிரரி அதன்பின் யாழ் பொது நூல்நிலயம் என்பன வாசிப்பு ஆர்வம் செடியாக வளர உரமிட்டன.. யாழ்நூல் நிலயத்தில தமிழில் உள்ள கதைப்புத்தகங்கள் பெரும்பாலானவற்றையும் அந்த நூல்நிலயம் எரிய முன்பு வாசித்து முடிந்துவிட்டு ஆங்கிலத்தை வாசித்துகொண்டிருந்த காலத்தில் அந்த துன்பகரமான நிகழ்சி நடந்தது. நான் விளையாட்டுகளில் பங்கு பற்றாத ஒரு நோஞ்சனான உடம்பை கொண்டு இருந்ததால் வாசிப்பு எனது முக்கிய பொழுதுபோக்கு. அதன் பின்பு இரண்டாவதாக சினிமா வந்து சேர்ந்தது. சிறுவயதில் நடந்தபடி வாசிக்கும் பழக்கம் கொண்டவன். இரவு தொடங்கி தூங்காமல் விடியும்வரை வாசித்த நாட்களும் உண்டு. நான் வாசிக்காத காலம் பேராதனையில் படித்தகாலம் மட்டுமே. இலக்கிய ஆர்வம் என்று புதுப்பெயர் பெற்றாலும் என்னைப் பொறுத்தவரையில் மனமகிழ்வை தந்த விடயம் இந்த வாசிப்பு.அத்துடன் இந்த வாசிப்பால் எனக்கு பிடித்தமான கற்பனை உலகத்தை சிறுவயதில் இருந்தே என்னால் சிருஸ்டிக்க முடிந்தது. இந்த கற்பனை உலகம் சிறுவயதிலே எனக்கு பித்தியேகமானது. கண்டிப்பாகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் தந்தையோ மற்ற நணபர்களோ ஊடுருவ முடியாத உலகம் .சிறுவயதில் கதைப்பாத்திரங்கள் மட்டும் இருந்தகாலம் போய் பின் பாலியல் பருவத்தில் அழகிய பெண்கள் நிரம்பிய உலகமாக மாறியது. இந்த உலகத்தை மேன்மைபடுத்தி உருவாக்க எனது வாசிப்பு உதவியது.

2. நீங்கள் எழுதத் தொடங்கிய சூழல், எழுதவேண்டிய சந்தர்ப்பம் என்ன அல்லது எவ்வாறிருந்தது?

எந்தக்காலத்திலும் எழுதவேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை அதை ஒரு சுமையாக கூட நினைத்தேன். யாழ் இந்துக்கல்லுரியில படிக்க்கும்போது ஹாஸடலில் இருந்து கடிதம் எழுதுவதில்லை ஆனால் தபால் அதிபராகிய அமமா ஒரு தபால் அட்டையில் ‘நலமாக வந்து சேர்நதேன்’ என எழுதி விவாசம் இட்டு தரும் போது அதை இந்துகல்லுரி உள்ளே உள்ள தபால்பெட்டில் போடுவதுதான் எனது வேலை. அப்படி கடிதம் எழுதுவதை சுமையாக நினைத்தனான் பின்பு எனது காதலிக்கு கடிதம் எழுதினேன். இதற்கப்பால் எனக்கு எழுத விருப்மில்லை. பிற்காலத்தில் எழுத முயலாததற்கு வேலையும் காரணம். மிருக வைத்தியம் .உடலும் மூளையும் சம்பந்தப்பட்டது. எனக்கு மிக குறைந்த அளவுதான் எழுத வேண்டியிருந்தது

விஞ்ஞானம் படித்து நல்ல தமிழ் எழுதும் ஆற்றலை இழந்தேன். தமிழ்மொழில் விஞ்ஞானம் படித்ததால் நல்ல ஆங்கில அறிவைப்பெறவும் தவறினேன். இது எமது காலத்து பலருக்கு உரிதான பிரச்சனை. அவுஸ்திரேலியாவுக்கு வந்தபோது இந்தியாவில் இருந்து விடுதலைப்புலி எதிர்பாளராக வந்து சேர்ந்தேன். இங்கு வந்ததும் மெல்பேனில் நண்பர் முருகபூபதியும் மற்றவர்களும் மக்கள் குரல் என்ற அரசியல் கையெழுத்து பத்திரிகையை நடத்தினார்கள். ஆரம்பத்தில் நான் இதில் பங்கு பற்றினாலும் சிட்னிக்கு சென்றுவிட்டதால் அங்கிருந்து மலையகத்தமிழ் பற்றியதும் இந்திய அரசின் தன்மை பற்றிய இரண்டு கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினேன். இவையே எனது முதல் பத்திரிகையில் வெளிவந்த எழுத்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: