பெரியம்மா

சொல்ல மறந்த கதைகள் -20

முருகபூபதி – அவுஸ்திரேலியா

ஈழத்தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வழக்கமாகச்சொல்லப்படும் ஒரு வார்தைப்பிரயோகம் இருக்கிறது.
“சும்மா பேக்கதை கதையாதை…”
இந்தப்பேச்சுவழக்கு தமிழகத்திலிருக்கிறதா என்பது தெரியவில்லை.
அதென்ன பேக்கதை?
பேய்க்கதைதான் காலப்போக்கில் பேக்கதையாக மருவியதா? “பேயன்” என்ற சொல்லும் எம்மவரிடம் வழக்கத்திலிருக்கிறது. சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானை ‘பித்தா’ என விளித்து தேவாரம் பாடினார்.
பித்தன் – பேயன் இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக்கொண்டவையா? என்பதை தமிழ்கற்றுத்தேர்ந்த பண்டிதர்கள்தான் சொல்லவேண்டும்.
பேய்க்கதைகள் தமிழர்களிடம் மட்டுமல்ல மேற்கு நாட்டினரிடமும் ஏராளம் இருக்கின்றன. ஊடகங்கள் திரைப்படங்களும் பேய்க்கதைகளுக்கு நல்ல களம் கொடுத்துள்ளன. இரவில் தொலைக்காட்சிகளில் பேய்க்கதைகளை ஆவியுலகக்கதைகளைப்பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதன்பின்பு சில நாட்களுக்கு இரவில் தனியே உறங்குவதற்கும் பயப்படுவார்கள். பேய்கதைகளைக்கொண்ட திரைப்படங்களை கண்டுகளிப்பதும் ஒருவகையில் திகில் அனுபவம்தான். திரில்லர் படங்கள் அத்தகைய அனுபவங்களை தரவல்லவை.
பேய்க்கதைகள் சொல்லும் நாவல்கள், சிறுகதைகளும் அப்படியே.
தமிழில் நான் அறிந்தவரையில் சுஜாதா, ஜெயமோகன், செங்கை ஆழியான் முதலானோர் பேய்க்கதைகள் எழுதியிருக்கிறார்கள்.
ஜெயமோகனின் நிழல்வெளிக்கதைகள், செங்கை ஆழியானின் இரவுநேரப்பயணிகள் தொகுப்புகளில் அத்தகைய கதைகளை காணலாம். ஆங்கில வாசகர்களுக்கும் பேய்க்கதைகள் நல்ல பரிச்சியமானவை. ட்ரகுலா வகையறா திரைப்படங்களை சிறுவயதில் வீட்டுக்குத்தெரியாமல் நண்பர்களுடன் மெட்னிஷோவில் பார்த்திருக்கின்றேன்.
எனது வாழ்வில் நடந்த பல உண்மைச்சம்பவங்கள் இன்றுவரையில் அவிழ்க்கமுடியாத முடிச்சுகளாக மர்மக்கதைபோன்று நினைவிலிருக்கின்றன. நம்பினால் நம்புங்கள். இது நடந்த கதைதான்.
கணினி, மின்னஞ்சல், செல்போன் இல்லாத காலத்தில் நடந்தது..
கடிதங்களையும் இலக்கியப்படைப்புகளையும் கையால் எழுதி தபாலில் அனுப்பிக்கொண்டும், பதில்களையும் படைப்புகள் பிரசுரமான இதழ்களையும் தபாலில் எதிர்பார்த்துக்கொண்டுமிருந்த காலத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் பற்றி, நண்பர்கள், உறவினர்களுடனான கதையளப்பின்போதும், ஆவிகள், பூர்வஜன்மம், மறுபிறவி பற்றியெல்லாம் ஆய்வுசெய்யும் தருணங்களிலும் எப்படியோ எங்கள் பெரியம்மாவின் கதையையும் மறக்காமல் சொல்லிவிடுவேன்.
இந்தக்கதை நான் சென்ற நாடுகளில் சந்தித்த நண்பர்கள் உறவினர்களிடமெல்லாம் பொழுதுபோக்குக்காக சொல்லப்பட்ட கதைதான்.
ஆனால் அந்தப்புரியாத புதிரின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை. கதையை கேட்பவர்கள் ஒன்றில் அந்த முடிச்சை அவிழ்ப்பதாக பாவலா காட்டுவார்கள். அல்லது முடிச்சை மேலும் இறுக்கிவிட்டுச்செல்வார்கள்.
அதனால் அந்த அவிழ்க்கமுடியாத புதிர் என் வாழ்வோடு தொடருகிறது.
அவுஸ்திரேலியாவில் எத்தனையோ இரவுகள் என்னைக்கடந்து சென்றுவிட்டன. தொடர்ந்தும் இரவுகள் கரைந்து பொழுதும் விடிகிறது.
ஆனால் அந்த சுவாரஸ்யமான இரவு மறக்கமுடியாத கனவுபோன்று நினைவில் சஞ்சரிக்கிறது.
மனைவி, பிள்ளைகள் உறக்கத்திற்குச் சென்ற பின்னர்தான் எழுதும், வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கியிருந்த காலம். ஏனையநேரங்களில் எனது 4 வயது மகன் விடைதெரியாத வினாக்களையெல்லாம் கேட்டு ஒரேசமயத்தில் சினத்தையும் சிரிப்பையும் ஊட்டுவான்.
அவனுக்கு நான் உணவூட்;டும்போது, அவன் எனக்கு வினாக்களை விடுத்து விடை கிடைக்கும் வரையில் அவன் ஊட்டிய சுவாரஸ்யங்களையே ஒரு தொகுப்பாக எழுத முடியும்.
உதாரணத்துக்கு ஒன்றைச்சொல்லலாம்.
சீர்காழியில் சிவபதவிருதையருக்கும் அவர் குழந்தை திருஞானசம்பந்தருக்கும் நிகழ்ந்த அதிசய சம்பவத்தை தோடுடைய செவியன் தேவாரம் பிறந்த கதையுடன் அவுனுக்குச்சொன்னபோது, தினமும் தொலைக்காட்சியில் வரும் வேர்ல்ட் விஷன் விளம்பரத்தில் தோன்றும் ஆபிரிக்க நாட்டு குழந்தைகளைப்பார்த்த உணர்வுடன், “ அப்பா அந்த உமா தேவியார் அதாவது சிவபெருமானுடைய றுகைந சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் போகமாட்டார்களா? அங்குள்ள குழந்தைகளுக்கும் பால் கொடுக்கலாமே?”
இப்படி விடை தெரியாத வினாக்கள்.
அவனுக்கும் அக்காமாருக்கும் இடையில் தோன்றும் வாதப்பிரதிவாத சச்சரவுகளையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்து உறங்கவைக்கும் தாய்க்கு அதுவே களைப்பாகி அவளும் பிள்ளைகளுடன் நித்திராதேவியுடன் சங்கமமாகிவிடுவாள்.
அன்றும் அவர்கள் உறங்கும் வரையில் காத்திருந்து, கதிரையை மேசையருகே இழுத்து எடுத்துக்கொண்டு லண்டனிலிருந்து வெளியாகும் ஒரு இதழுக்காக எழுத அமர்ந்தேன்.
இரவு பதினொரு மணியிருக்கும். எழுதிக்கொண்டேயிருந்தேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் அறையில் மாத்திரம் மின்வெளிச்சம். படுக்கை அறை, சமையலறை, குளியலறை யாவற்றிலும் மின்வெளிச்சம் அணைக்கப்பட்டிருந்தது.
சுவர்ப்பக்கமாக மேசை. அதன் முன்பாக நான் அமர்ந்து எழுதும் கதிரை. எனக்குப் பின்னால் யாரோ வந்து சென்றதுபோன்ற அமானுஷ்ய உணர்வு.
எழுதுவதை நிறுத்திவிட்டு திரும்பிப்பார்த்தேன். எவரும் இல்லை. மீண்டும் விட்ட இடத்திலிருந்து எழுத்தைத் தொடர்ந்தேன். ஆனால் எழுத முடியவில்லை. சிந்தனை ஒருகணம் தடைப்பட்டது.
யார் வந்து எட்டிப்பார்த்தது?
கதிரையை விட்டு எழுந்தேன். சமையலறை, குளியலறையெல்லாம் சென்று மின்வெளிச்சத்தைப்போட்டுப்பார்த்தேன். எவரும் இல்லை.
வீட்டின் வாசல் கதவண்டை சென்று பார்த்தேன். கதவு பூட்டியே இருந்தது. படுக்கை அறையிலிருந்து மனைவி முணகும் சத்தம் மென்மையாக வந்தது.
கனவு கண்டு பிதற்றுகிறாளாக்கும்.
அந்த அறைக்குள் சென்று சுவிட்சைப்போடுகிறேன்.
‘லைட்டை அணையுங்கள். யாரோ ஒரு கிழவி என்னை வந்து அழைக்கிறாள். எனக்கு பயமாக இருக்கிறது.’
‘ என்ன கனவு காண்கிறாயா?’- கண்களை இறுக மூடியவாறு உறக்கத்திலிருந்து பிதற்றுபவளை தட்டிக்கேட்கிறேன்.
‘ கனவு இல்லை. நிஜம். எனக்கு தண்ணீர் தாருங்கள்.’
சமையலறைக்குச்சென்று டம்ளரில் தண்ணீர் எடுத்துவந்து கொடுக்கிறேன். குடித்துவிட்டு திரும்பிப்படுத்துவிட்டாள்.
நான் அந்த அறை லைட்டை அணைத்துவிட்டு, மீண்டும் வந்து எழுத்தை விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன். இரண்டு வரிகளுக்கு மேல் எழுத முடியவில்லை.
மீண்டும் எழுந்துசென்று கதவுகள், யன்னல்கள் ஒழுங்காக மூடப்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து உறுதிசெய்துகொள்கின்றேன்.
நானும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துகின்றேன். கதிரையில் அமர்ந்தாலும் எழுத முடியாத தயக்கம். எழுத்தை தொடராமல் பாதியில் நிறுத்திவிட்டு வந்து படுக்கிறேன்.
தூக்கம் வரவில்லை.
அருகில் அவள் எந்தப்பிதற்றலும் இல்லாமல் உறங்குகிறாள். பிள்ளைகளும் ஆழ்ந்த உறக்கம்.
மனைவிதான் ஏதும் கெட்ட கனவுகண்டு பிதற்றியிருந்தாலும், நான் ஏன் அமானுஷ்ய சக்தியினால் எழுதுவதை நிறுத்திவிட்டு எழுந்தேன். மீண்டும் மீண்டும் அந்தக்கணங்கள்தான் நினைவுப்பொறிக்குள் அலைமோதியது. இதற்கு முன்னர் இந்த வாடகை வீட்டில் இப்படி நடக்கவில்லையே. யார் யாரோ வாடகைக்கு இருந்த வீடு. ரியல் எஸ்டேட்காரனிடம் நடந்ததைச்சொன்னால் சிரிப்பான். நானும் ஏதோ கனவு கண்டுவிட்டுத்தான் பிதற்றவந்திருப்பதாகச்சொல்வதுடன், தனது மனதுக்குள் இப்படியும் நினைப்பான்.
“ இந்த ஆள் தன் குடும்பத்துடன் வேறுவீடு பார்த்துக்கொண்டு போகலாம். அந்த வீட்டில் ஏதோ ஆவியிருக்கிறது என்று கதை பரப்பிவிட்டானென்றால் பிறகு வேறு எவரும் வாடகைக்கு வரமாட்டார்கள்.”
அந்தக்கணங்கள், எழுந்து வீட்டை உட்புறமாக இரண்டு தடவை சுற்றியது, யன்னல், கதவுகளைப்பார்த்தது, மனைவியின் பிதற்றல், தண்ணீர் டம்ளர், ரியல் எஸ்டேட்காரன், இனிமேல் தேடவேண்டிய வீடு……நான் உறக்கமின்றி தவித்தேன். நல்லவேளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. வேலைக்குச்செல்வதற்காக வேளைக்கே எழுந்திருக்கவேண்டிய அவசியமில்லை.
எத்தனை மணிக்கு நித்திராதேவி என்னை அணைத்தாள் என்பது தெரியாது.
எனக்கு முன்பே வீடும் குடும்பமும் விழித்துக்கொண்டன. பிள்ளைகளின் வாக்குவாதம் சச்சரவுகளை தீர்;த்து வைக்கும் பிரயத்தனத்துடன், மனைவி சமையலறையில் காலை உணவை தயாரிக்கும் ஓசை கேட்கிறது.
தான் பார்க்கவேண்டிய ரி.வி. சனலை பார்க்கவிடாமல் சின்னக்கா தடுப்பதாக கத்திக்கொண்டுவந்து என்னைத்தட்டி எழுப்பி முறைப்பாடு வைக்கிறான் மகன். அதன் பிறகு எப்படி உறங்க முடியும்.
சமையலறைக்குச்சென்று தேநீர் அருந்தியவாறு முதல் நாள் இரவு நான் எதற்காக கதிரையை விட்டெழுந்தேன் என்பது இன்னமும் புரியவில்லை என்று மனைவிக்குச்சொன்னேன்.
“ யாரோ ஒரு கிழவி வந்து அழைத்ததாகச்சொன்னாயே… அப்படி என்ன கனவு கண்டாய்?” – என்று கேட்டேன்.
“கனவு இல்லையப்பா? ஒரு வயதுபோன அம்மாதான்… கிட்டத்தட்ட உங்கட பெரியம்மாவைப்போல இருக்கும். வா…வா…போவோம். என்றார்கள். எங்கே கூப்பிடுகிறீர்கள். நான் அவுஸ்திரேலியாவிலல்லவா இருக்கிறேன். எப்போது நீங்கள் இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டேன். அது கனவா நனவா என்பதுதான் புரியவில்லை.
“ சரி…பிறகு என்ன நடந்தது?”
“ நான் போகப்போறேன். நீ வராவிட்டால் பரவாயில்லை” எனச்சொல்லிவிட்டு வாயை கோணலாக இழுத்து வழுப்பங்காட்டிவிட்டு மறைந்துவிட்டார்கள். பெரியம்மாவைப்போலத்தான் இருந்தா”
அதற்குமேல் நான் அந்தக்கதையைத்தொடரவில்லை.
சுமார் பத்துநாட்கள் கழித்து எனது அம்மாவிடமிருந்து வந்த கடிதம் அந்தச்சோகச்செய்தியை பதிவுசெய்திருந்தது.
பெரியம்மா இறந்துவிட்டார்கள்.
என்மீதும் என் மனைவி பிள்ளைகள் மீதும் பாசத்தைப்பொழிந்த அந்தப் பெரியம்மா கடின உழைப்பாளி;.
அவர்களின் கணவரான எங்கள் பெரியப்பா பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலங்கைக்கு சுதந்திரத்தை எழுதிக்கொடுத்த பிரிட்டிஷ்காரன் அவருக்கு ஓய்வூதியம் (பென்ஷன்) கிடைக்க வழிசெய்யாமல் மட்டுமல்ல இன்றைய தேசிய இனப்பிரச்சினைக்கும் வழிசொல்லாமல் போய்விட்டான்.
கல்வி அறிவே இல்லாத பெரியம்மா, ஐந்து பெண்களும் ஓரே ஒரு ஆண் மகனும் உள்ள பெரிய குடும்பத்தை தோசை சுட்டும் இடியப்பம் அவித்தும் விற்று வருவாய் தேடி காப்பாற்றியவர். சிறுகச்சிறுக சேமித்து ஒவ்வொரு பெண்ணையும் கரைசேர்த்தவர். அந்தப்பெண்கள் தத்தம் கணவர் பிள்ளைகள் சகிதம் கொழும்பு வாசியானார்கள். மகனோ எந்தப்பொறுப்பும் இன்றி நாளோரு வேலையும் பொழுதொரு வண்ணமுமாக வாழ்ந்தவன். பெரியப்பா இறந்த பின்பும் தனது உழைப்பை நம்பியே வாழ்ந்த பெரியம்மா, முடியாத காலத்தில் எங்களிடமும் தஞ்சமடைந்திருக்கிறார். ஆனால் அதிக நாட்கள் நிற்கமாட்டார். மக்கள் பேரப்பிள்ளைகளைப்பார்க்க கொழும்பு சென்றுவிடுவார்.
எனது குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டபோது கூடுதலாக அழுது கண்ணீர் விட்டது பெரியம்மாதான்.
இனி எப்போது உங்களையேல்லாம் பார்க்கப்போகிறேன் என்று கதறி அழுது மனைவி, பிள்ளைகளை கட்டி அணைத்து விடைகொடுத்தார்.
அந்தப்பெரியம்மா இறந்துவிட்டதாக அம்மாவின் கடிதம் செய்தி சொல்கிறது.
கடிதத்தை ஊன்றிக்கவனிக்கின்றேன்.
பெரியம்மா இறந்த திகதி நேரம் யாவும் எழுதப்பட்ட கடிதம்.
அவுஸ்திரேலியா நேரத்தை இலங்கை நேரத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கின்றேன்.
சரிதான்…. அன்று இரவு பெரியம்மா வந்தது விடைபெற்றுச்செல்லத்தான். பெரியம்மாவின் பெயரும் செல்லம்தான்.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்.
நம்பினால் நம்புங்கள்.
என்னை கதிரையை விட்டு எழுப்பிய அமானுஷ்ய சக்தி செல்லம் பெரியம்மாதான் என்ற முடிவுக்கு வந்தேன்.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பெரியம்மா

  1. Premaraj.t சொல்கிறார்:

    அது உண்மையில் உங்கள் பெரியம்மா தான் , உயிர் பிரியும் போது உங்கள் மீதிருந்த அதீத அன்பினால் உஙகளை நினைத்திருக்கலாம், மனித மநத்தின் சக்திநாம் அறியாததே, என் வாழ்வில் இவ்வாறன் சம்பவம் நடக்காவிட்டாலும் நடந்த சில சம்பவங்கள் விடை தெரியாத கேள்விகளகவே உள்ளன, 82 ம் ஆண்டு நான் கொழும்பு பல்கலை கழகத்தில் சட்டம் கற்ற போது (2ம் ஆண்டு) வததளையில் தங்கி இருந்தேன், 82 ம் ஆண்டு, இரவில் காலையில் இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனலில் எனதும் குடும்பத்தினது பெயர்கள், 07 40 ற்கு ஒலிபரப்பபடுவதாக, காலையில் அதேநேரம் எனது பெயர் வானொலியில் வாசிகபட்டது, ஆச்சரியமே, 82 ம் ஆண்டு தங்குவதற்கு அறை தேடி கொழும்பு கொச்சிக்கடை ,வீவேகானந்த வீதியில் இருந்த எனது உறவினர் வீட்டுக்கு 82 ம் ஆண்டு சென்றிருந்தேன், அடுத்த வீட்டை சேர்ந்த பெண், ஒருவர் அங்கே வந்தார், என்னை பார்த்தார்நானும் பார்தேன், எதொ ஏற்கன்வே சந்தித்தவர் போன்ற எண்ணம்,நான் யார் ஏன் அங்கு வந்தேன் என்ற் விபரங்களை கேட்டார், அப்பொது நான் சட்டபீடத்தின் 2ம் ஆண்டு மாணவன்,நான் திரும்பி வருவேனா என்று கேட்பார் என்று எதிர்பார்த்தேன், அவரும் அதே போல் அதே கேள்வியை கேட்டார், சிறிதுநேரத்தில்நான் அடிக்கடி வருவேனா என்ரு கேட்டார், 10நிமிடம் கழித்து மற்றவர்கள் யாரும் இல்லாத போது எனது காதலை சொன்னேன், பின்பு அவரும் எனனை பார்த்ததும், என்னை முன்பு அறிந்தவர் போல் உணர்ந்த்தாக கூறின்னார், எனக்கு அப்பொது 19 வயது, அவருக்கு 15. 83 ம் ஆண்டு கலவரத்தில் அவர்கள் தமிழகம் சென்று விட்டனர், அது எனக்கு தெரியாது, கலவர்ம் முடிந்துநான் அவரை பார்க்க போனபோது இந்த செய்தி எனக்கு தெரிவிக்கபட்டது,நான் பின்பு தொடந்து கற்று இதொகாவின் சட்ட ஆலொசகராக,நிர்வாக செயலாளராக வேலை செய்த போது அவரை சந்திக்க சென்னை சென்றிருக்கலாம், ஆனால் தயக்க்ம் காரணமாக் செல்லவில்லை, கடந்த 4 -5 வருடமாக அவரதுநினைவு என்னை அதிகமா தொடர்கின்றது, காரணம் தெரியவில்லை, அந்த பெண்ணுக்கு வாழ்வில் ஏதும் பிரச்சினகள் ஏற்பட்டு உன்னை யோசிக்கின்றாள் போலுள்ளது என்று ஒருவர் சொன்னார், அதனால் தான் உனக்கும் அவளை பற்றிய எண்ண்ம், என்றார், உண்மை அவளை சந்த்திதால் தான் தெரியும், மனித மனம், அளவிட முடியாத்து,

  2. Premaraj.t சொல்கிறார்:

    a small correction, இரவில் காலையில் இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனலில் எனதும் குடும்பத்தினது பெயர்கள், 07 40 ற்கு ஒலிபரப்பபடுவதாக,கனவு கண்டேன் காலையில் அதேநேரம் எனது பெயர் வானொலியில் வாசிகபட்டது, ஆச்சரியமே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.