மரணதண்டனை தீர்ப்பு ?

சொல்லமறந்த கதைகள் – 17

முருகபூபதி – அவுஸ்திரேலியா

இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன.
ஆனால் இந்தப்படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், அவசரகால சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டபோதிலும் பத்திரிகைகளில் பத்தோடு பதினொன்றாகத்தான் வாசகர்களின் கவனத்திற்குள் வந்தன.
சேர். பொன். இராமநாதனின் பேரனும் கிரிக்கட் ஆட்டக்காரருமான சதாசிவம் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட கொலை வழக்கு, கிளிநொச்சி உருத்திரபுரம் கோகிலாம்பாள் சம்பந்தப்பட்ட அவளது கணவன் ஐயரின் கொலை வழக்கு, காலி பத்மினி குலரத்தினா கொலை வழக்கு , வில்பத்து காட்டில் இடம்பெற்ற நான்கு இலட்சம் ரூபா கொள்ளை தொடர்பான கொலை வழக்கு ( இக்கொலைச்சம்பவம் ஹாரலக்ஷ என்ற சிங்களத்திரைப்படமாகவும் வெளியானது) மங்கள எலிய என்ற இடத்தில் ஒரு அழகிய இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு அவளது சடலம் கற்களினால் கட்டப்பட்டு ஒரு காட்டுப்புரத்தில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, பர்மிய தூதுவரின் மனைவி திருமதி; பூண்வாட்டின் கொலை, தெஹிவளை பொலின் டீ குரூஸ் என்ற இளம் யுவதி சம்பந்தப்பட்ட ஒரு சிறுவனின் கொலை, வணபிதா மத்தியூ பீரிஸ் சம்பந்தப்பட்ட அவரது மனைவி மற்றும் இங்ராம் என்பவர் தொடர்பான கொலைகள், பொலிகண்டி கமலம் இராமச்சந்திரன் கொலை முதலானவை தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவை.

கோகிலாம்பாளுக்காக ஆஜராகிய அமிர்தலிங்கம் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது எதிரணியினரான தமிழ்க்காங்கிரஸ் சட்டத்தரணிகள் அவரை கோகிலாம்பள் அமிர்தலிங்கம் என்றுதான் மேடைகளில் விளித்து எள்ளிநகையாடினார்கள்.

மேலே குறிப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளை பாடசாலையில் படிக்கும் காலத்திலும் வீரகேசரியில் பணியேற்ற காலத்திலும் படித்திருக்கின்றேன். சில கொலை வழக்குகள் சம்பந்தமாக அலுவலக நிருபர்கள் எடுத்துவரும் நீதிமன்ற விசாரணைக்குறிப்புகளை அச்சுக்குப்போகுமுன்னர் எடிட் செய்துமிருக்கின்றேன். நீதிமன்ற செய்திகளில் எங்கள் ஆசிரிய பீடம் மிகுந்த கவனமாக இருக்கும்.

எனது பத்திரிகை உலக அனுபவத்தில் நேரடியாக சந்தித்த ஒரு இரட்டைக்கொலை வழக்கு இன்றும் என்னால் மறக்க முடியாதது. அதனால் அதில் சம்பந்தப்பட்ட எதிரிகள் உட்பட வழக்கினை விசாரித்த நீதியரசர், அரச தரப்பிலும் எதிர்தரப்பிலும் வாதாடிய பிரபல வழக்கறிஞர்கள், சில சாட்சிகளின் பெயர்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.

இந்த சொல்ல மறந்த கதைக்கு ‘துரோகம் துரத்தும்’ என்றுதான் பெயர் சூட்டவிருந்தேன். இந்தத்தலைப்பில் ஏற்கனவே சுஜாதா ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார். இந்தத்தலைப்பும் இந்த ஆக்கத்திற்கு பொருத்தமாகத்தான் இருக்கும் என்பதை இதனை படிக்கும் வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழ்த்திரைப்படங்களில் நீதிமன்ற விசாரணைகளை பார்த்திருக்கின்றேன். கலைஞர் கருணாநிதியின் பராசக்தி வசனம் இன்றும் பலருக்கும் நினைவிலிருக்கும். அவர் சிவாஜிகணேசனுக்காக “ கல்யாணி ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே

ஓடினாள்…” என்று எழுதியிருப்பார்.
ஆனால் உண்மையிலேயே நீதிமன்றங்களில் அப்படி கனல்தெறிக்கும் வசனங்களை நாம் பார்க்க முடியாது. அதற்கு தமிழ்த்திரைப்படங்களைத்தான் பார்க்கவேண்டும்.
இலங்கையில் தென்னிலங்கையில் ஹக்மண என்று ஒரு ஊர். அங்கே ஒரு நிலச்சுவாந்தார். தனவந்தர். ஊர் மக்களுக்கு அவர் ஒரு பரோபகாரி. சரத் ஹாமு என்றுதான் அழைப்பார்கள். ஹாமு என்றால் ஊருக்கே பெரியவர். மதிப்பிற்குரியவர். அவரது மனைவி ஒரு பாடசாலை ஆசிரியை. அந்த ஊர் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றலாகி வருகிறார் கே.டி. சமரநாயக்க என்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. அவருக்குச்சொந்தமாக ஒரு பேஜோ காரும் இருக்கிறது. அவரது மனைவியும் ஒரு ஆசிரியை. இரண்டு ஆசிரியைகளும் அந்தப்பாடசாலையில் சிநேகிதிகளாகிவிட்டனர். அதனால் சில நாட்கள் தனது மனைவியை பாடசாலை விட்டதும் அழைத்துவரச்செல்லும் பொலிஸ் நிலைய பொறுப்திகாரியான கணவர், அந்த தனவந்தர் சரத் ஹாமுவின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்கத்தொடங்கினார். இந்த உறவினால் பொலிஸ் பொறுப்பதிகாரி சமரநாயக்கா, சரத் ஹாமுவின் குடும்ப நண்பராகிவிடுகிறார்.
அடிக்கடி ஹாமுவின் வீட்டில் விருந்துகளிலும் கலந்துகொள்கிறார். சமரநாயக்காவுக்கு, தனவந்தரின் இரண்டு சொத்துக்களில் ஆசை வந்துவிடுகிறது. ஒன்று அசையும் சொத்து, மற்றது அசையாத சொத்துக்கள்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் மிடுக்கும், ஆங்கிலப்புலமையும், அதிகாரமும் அந்த கிராமத்து ஹாமுவின் மனைவியை கவர்ந்துவிட்டதனால். இருவருக்கும் இடையில் கள்ளக்காதல் அரும்பிவிடுகிறது.

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே… என்று ஒரு பாடல் இருக்கிறது. தற்காலத்தில் சில சாமியார்கள் கெட்டுப்போவதும் பெண்களினால்தான் என்று திருத்திப்பாடத்தோன்றுகிறது.
இந்த காதல்களியாட்டம் வெளியூர் ஓய்வு விடுதிகள் (Rest House) வரையில் தொடர்ந்துவிட்டன. ஒரு பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி, குடும்ப நண்பர், ஒரு ஆசிரியையின் கணவர் ஆகிய பிம்பங்கள் சமரநாயக்காவுக்கு இருந்தமையால் சரத்ஹாமுவுக்கு எந்தச்சந்தேகமும் வரவில்லை.
ஆனால் ஹாமுவின் வீட்டு வேலைக்காரன் சூரசேனவுக்கு வந்துவிட்டது. அவன் அருகில் உள்ள கிராமத்தில் தனது வீட்டிலிருந்து ஹாமு வீட்டுக்கு காலையில் வந்து வீட்டில் சமையல் வேலை தொடக்கம் தோட்டவேலைகள் மற்றும் அங்கு வளர்க்கப்பட்ட மயில்களுக்கு இரைபோடுவது வரையில் செய்துவிட்டு மாலையானதும் வீடு திரும்பிவிடுபவன்.
ஒரு நாள் ஹாமு வெளியூருக்கு சென்றுவிட்டார். அன்று இரவு அவர் வரமாட்டார் என்பது அறிந்து பொலிஸ் பொறுப்பதிகாரி, தனது வீட்டில் தனது மனைவியிடம், பொலிஸ் நிலையத்தில் கடமை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு தனது தனிப்பட்ட ‘கடமைக்காக’ ஹாமுவின் வீட்டுக்கு வந்து இரவு தங்கிவிட்டார். மறுநாள் காலையில்தான் அவருக்கு கஷ்டகாலம் தொடங்கியிருக்கிறது. வேலைக்காரன் சூரசேன காலையில் வேளைக்கே வந்துவிடுகிறான். சமரநாயக்கா குளித்து முழுகிவிட்டு ஹாமுவின் டவலை அணிந்துகொண்டிருக்கிறார்.
வேலைக்காரனுக்கு சந்தேகம் பிடிபடத்தொடங்கிவிட்டது. ஆனால் பெரியகுடும்பத்துச்சமாச்சாரம் எனக்கருதி மௌனமாக இருந்துவிட்டான்.
ஹாமுவை இல்லாமல் செய்துவிட்டால் அனைத்து சொத்துகளும் அவரது மனைவிக்கு வந்துவிடும். தனது மனைவியை கைவிட்டுவிட்டு, ஹாமுவின் மனைவியுடன் வெளிநாடு ஒன்றுக்கு ஓடிவிடுவதுதான் சமரநாயக்காவின் திட்டம். அதற்கான சதித்திட்டத்தை உருவாக்குவதற்கு நீண்ட நாட்களாக யோசித்தார் அந்த பொறுப்பதிகாரி.
1970-1971 காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடங்கியது. தென்னிலங்கையில் வெள்ளவாய பொலிஸ் நிலையத்தாக்குதலுடன் அந்தக்கிளர்ச்சி ஆரம்பமானது. அந்தக்கிளர்ச்சியை தனக்கு சாதகமாக்கிக்கொள்வதற்கு திட்டம் தீட்டினார் சமரநாயக்கா.
சரத்ஹாமு ஒரு தனவந்தர். அவரை கொன்றுவிட்டு அந்தப்பழியை ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்காரர்கள் மீது போடுவதுதான் அவரது திட்டம். அதற்காக ஒரு தடவை ஒரு ஊர் ரவுடி அல்பர்ட் என்பவனிடம் பணமும் துப்பாக்கியும் கொடுத்து இரவு வேளையில் அனுப்பினார். அந்த ரவுடியும் சென்றான். ஆனால் அவனது அரவத்தைக் கேட்ட தோட்டத்திலிருந்த மயில்கள் (அகவத்தொடங்கிட்டன.) கத்தத்தொடங்கிவிட்டன. அந்த முயற்சி பலி;க்காமல் அவன் திரும்பிவிட்டான்.
எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் மயில்களின் அகவல்சத்தம் கேட்ட சரத் ஹாமு, ஏதோ திருடர்களின் நடமாட்டமாக இருக்கலாம் என நம்பி குடும்ப நண்பரான பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிட்டிருக்கிறார்.
உடனே சமரநாயக்காவும் , “ அந்தத் திருடர்களை பிடித்துத் தருகிறேன்.” எனச்சொன்னதுடன் தனக்குத்தெரிந்த மற்றுமொரு ஊர் ரவுடி களுபியதாஸ என்பவனை இரவு நேரக்காவல் கடமைக்காக அங்கு அனுப்பிவைத்தார். அவனுக்கு ஒரு வாளும் கொடுக்கப்ட்டது. அவன் மிகவும் நம்பிக்கையானவன் என்ற பிம்பத்தையும் அந்த அப்பாவி தனவந்தருக்கு தெரிவித்தார்.
இதனால் நீண்ட காலம் அங்கு வீட்டுவேலைக்காரனாக பணியிலிருந்த சூரசேன உஷாரடைந்தான். பொலிஸ் பொறுப்பதிகாரி வெளியே மௌனமாக மேற்கொள்ளும் சதித்திட்டம் அவரது கள்ளக்காதலி திருமதி சரத்ஹாமுவுக்குத் தெரியாது. தனது கணவரை கொலைசெய்யும் அளவுக்கு அந்த கள்ளக்காதலன் துணிவான் என்றும் கடைசிவரை நம்பவே இல்லை.
சில வாரங்களுக்குப்பின்னர், மீண்டும் ஒரு சதித்திட்டத்தை, முதலில் அனுப்பிய ஊர்ரவுடி அல்பர்ட் மற்றும் தன்னால் நியமிக்கப்ட்ட இரவுநேரக்காவல்காரன் களுபியதாஸ ஆகியோருடன் சேர்ந்து தீட்டினார். களுபியதாஸ வழக்கம்போன்று காவல் கடமையில் இருப்பான். அவன் மயில்களை கவனிப்பான். அந்த ஊர்ரவுடி மீண்டும் துப்பாக்கியுடன் சென்று ஹாமுவை முடிப்பது, இந்த விடயங்கள் எதுவுமே தெரியாதவிதமாக தான் பொலிஸ் நிலையத்தில் அவ்வேளையில் கடமையில் இருப்பது. இதுதான் திட்டம்.
சுஜாதாவின் மர்மக்கதைகளில் குற்றவாளிகள் எங்காவது ஓரிடத்தில் சொதப்பிவிடுவார்கள். அந்தச்சொதப்பலே கதையின் உச்சமாகவும் இருக்கும். அதுபோன்று இரண்டு பேரை அந்த சதித்திட்டத்திற்கு பயன்படுத்திய சமரநாயக்காவுக்கு, அன்றைய தினம் இரவு சரத்ஹாமுவின் வீட்டில் அவரது தம்பி இருப்பதோ, வேலைக்காரன் சூரசேனா தனது வீடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பதோ தெரியாது.
அப்பொழுது அந்த இரவு வேளையில் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்ற தகவலை பொலிஸ் நிலையத்திலிருக்கும் சமரநாயக்காவுக்கு தெரிவிப்பதற்கு, அவரால் நியமிக்கப்ட்ட அந்த இரவுநேர காவல்காரன் களுபியதாஸவிடம் இக்காலம்போன்று கைத்தொலைபேசி இருக்கவில்லை.
துப்பாக்கியுடன் வந்த அந்த ரவுடிக்கும் ஏதோ போதாத காலம். தனியே வராமல் தனது உறவினன் ஆர்.கே. பியசேன என்பவனையும் மேலும் மூன்று நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கின்றான்.
ஒரு விட்டில் கொள்ளையடிக்கப்போகிறோம் என்றுதான் பியசேனவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் அவன் அதற்கு மறுத்துள்ளான். ஓன்றும் செய்யவேண்டாம் பேசாமல் வா. கிடைப்பதில் பங்கு தரப்படும் எனச்சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வீட்டிலே அந்தக்கொலையை தலைமை ஏற்று செய்யவிருப்பவன் இப்படி மேலும் மூவருடன் வருவான் என்பது தெரியாமல் காவல் கடமைக்கான வாளுடன் காத்திருந்தான் களுபியதாஸ.
அல்பர்ட் என்ற அந்த ரவுடி தனது சகாக்களுடன் நடுநிசி வேளையில் சரத்ஹாமுவின் வீட்டுக்காணிக்குள் பிரவேசித்தபோது, ஏற்கனவே அங்கு காவல் கடமையில் இருக்கும் களுபியதாஸ, மயில்கள் அகவினால் அவற்றை வெட்டிச்சாய்ப்பதற்கும் தயாராக இருந்துள்ளான்.
ஆனால் எல்லாம் தலைகீழாக நடந்தது. ரவுடி அல்பர்ட் முதலில் வளவின் கேட்டருகே இருந்த மின்விளக்கை துப்பாக்கியால் சுட்டு அணைத்துவிட்டான். கொள்ளைக்காரர்கள் வந்துவிட்டனர் என தெரிந்துகொண்ட வேலைக்காரன் வாசல் கதவைத்திறந்து பார்த்துமூடிய பின்பு கதவை நீண்ட தடியினால் அழுத்திக்கொண்டு நின்றான். அடுத்த சூடு அவனது தோள்ப்பட்டையில் விழுந்தது. வந்தவர்களினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து சூடுகள். சரத்ஹாமுவும் அவரது தம்பியும் கொல்லப்பட்டனர். இந்த அமளியினால் ஹாமுவின் மனைவி தனது குழந்தையுடன் ஒரு அறைக்குள் புகுந்து மறைந்துகொண்டாள்.
அந்தக்கூட்டத்தில் வந்தவர்களில் இரண்டுபேர், தலைவனின் கட்டளைக்கு மாறாக ஒரு காரியத்தில் ஈடுபட்டார்கள். சரத்ஹாமுவின் மனைவியும் பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆசைநாயகியுமான அந்த ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு ஆளானாள். இந்தக்கொடுமைகளை செய்வதில் அந்த ஆசைநாயகன்தான் பின்னணியிலிருந்து இயங்கியிருக்கிறான் என்பது அவளுக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வரும்வரையில் தெரியாது.
அந்த நடுநிசியில் இந்த எதிர்பாராத சம்பவங்களினால் கலக்கமுற்ற ஆர்.கே. பியசேன தலைதெறிக்க வெளியே ஓடியிருக்கிறான். ஓடியவன் ஒரு பெட்டிக்கடையருகே சென்று கதறி அழுதிருக்கிறான்.
இதனால் அந்த ஊர் களேபரமடைந்தது. ஜே.வி.பி. கிளர்ச்சிக்காரர்கள்தான் கொலைகளையும் கொள்ளைகளையும் செய்துவிட்டு தப்பிவிட்டனர் என்ற வதந்தி ஊரெங்கும் பரவத்தொடங்கியது.
சரத் ஹாமு வீட்டில் அசம்பாவிதமாம் எனக்கேள்விப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தனது கடமை உணர்வுடன் ஜீப்பை எடுத்துக்கொண்டு அவ்விடத்திற்கு விரைகிறார். இரண்டு கொலைகள். வேலைக்காரன் சூரசேன காயத்துடன் போராடிக்கொண்டிருக்கிறான். ஹாமுவின் மனைவி அதிர்ச்சியில் உறைந்து குழந்தையை அணைத்தவாறு நிற்கிறாள்.
ஊர்மக்கள் வேடிக்கை பார்க்கவும் தேறுதல் சொல்லவும் திரண்டுவிடுகின்றனர். ‘ஒருவனையும் விடமாட்டேன்’- சூளுரைத்தவாறு காயப்பட்டிருந்த சூரசேனவை ஜீப்பில் ஏற்றி ஹக்மணை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார் சமரநாயக்க. திரும்பிவரும் வழியில் ஒரு பெட்டிக்கடையருகே நிற்கும் கூட்டத்தைப்பார்த்து சமரநாயக்கா தனது ஜீப்பை நிறுத்துகிறார்.
அந்தச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவனை தாங்கள் பிடித்து கட்டிவைத்திருப்பதாக ஊர்மக்கள் சொல்கிறார்கள். சமரநாயக்கா உஷாரடைகிறார். கட்டிவைக்கப்பட்டிருக்கும் ஆர்.கே. பியசேனா, தான் இயக்கித்தயாரித்த நாடகத்தில் ஒரு பாத்திரம் அல்ல. இவன் எப்படி இந்த நாடகத்தினுள் நுழைந்தான். அவன் அழுது புலம்புகிறான். தனது உறவினன் அல்பர்ட்தான் தன்னை சரத்ஹாமுவின் வீட்டுக்கு அழைத்துச்சென்றதாகவும், தனக்குத்தெரியாக மேலும் நான்குபேர் அந்தச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அவன் சொன்னதும் சமரநாயக்காவுக்கு அதிர்ச்சி அதிகரித்தது. தான் தயாரித்து இயக்கிய அந்த நாடகத்தில் மேலும் சிலரா? அவர்களில் இரண்டுபேர் தனது ஆசைநாயகியை வல்லுறவுக்குட்படுத்திவிட்டார்களா?
நாடகமே முற்றிலும் தவறாக அரங்கேறிவிட்டது. அதில் பங்கேற்று நடித்தவர்களைவிட மிகச்சிறந்த நடிகர்தான் அந்த தயாரிப்பு இயக்குநர். அந்த ஊர்பொதுமக்கள் முன்னிலையில் தனக்கு முன்பின் தெரியாத அந்த பியசேனாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டுவிட்டு அவனை ஏற்றிக்கொண்டு பொலிஸ் நிலையம் வருகிறார்.
ஊர்மக்களுக்கு சம்பவங்களை நேரில் கண்ட ஒரு சாட்சியம் கிடைத்துவிட்டது. இந்த சாட்சியத்தை அழிக்கவேண்டும். அவர் யோசிக்கத்தொடங்கினார். பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கொலமுனே என்பவரிடம் சொல்லி ஒரு விலங்கை எடுத்து மாட்டி யன்னலருகே அவனை நிறுத்திவிடுகிறார்.
கொலைகள் நடந்த இடத்துக்கு மரணவிசாரணை அதிகாரி வந்து கொலை என்று சொல்லிவிட்டு பொலிசாரை விசாரிக்கச்சொல்கிறார்.
இந்தச்சம்பவத்தினால் அதிர்ச்சியுற்ற காலி மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் மேலதிக தகவல் அறிவதற்கு ஹக்மணை பொலிஸ் நிலையத்துக்கு வரவிருப்பதை அறிந்த சமரநாயக்கா, தடுத்துவைக்கப்ட்டிருக்கும் பியசேனாவை பொலிஸ்நிலையத்திற்கு பின்புறமுள்ள கராஜில் மறைத்துவைக்கிறார்.

“ ஏன் அந்த சாட்சியை மறைக்கிறீர்கள்?” என்று கான்ஸ்டபிள் கேட்டதற்கு, “வரும் பொலிஸ் அத்தியட்சர் சாட்சியை விசாரித்து குழப்பிவிட்டுவிடுவார். அவன் முக்கிய சாட்சி. எனவே இந்த விசாரணை முடியும் வரையில் அவனை மறைத்துத்தான் வைக்கவேண்டும்.” என்கிறார் சமரநாயக்கா.

அந்தக்கான்ஸ்டபிளுக்கும் சந்தேகம் துளிர்க்கிறது. எனினும் மேலதிகாரிக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை.
காலி பொலிஸ் அத்தியட்சர் ஹக்மணை பொலிஸ் நிலையம் வந்து, சம்பவத்தை தீவிரமாக விசாரிக்குமாறு பணிப்புரை விடுக்கிறார். அதற்கு முக்கிய காரணம் கொல்லப்பட்ட சரத்ஹாமுவும் அவரது தம்பியும் கம்புறுப்பிட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஏலியன் நாணயக்காரவின் நெருங்கிய உறவினர். அவர் சமசமாஜக்கட்சியைச் சேர்ந்தவர். ஜே.வி.பி.யின் கிளர்ச்சிதான் இந்தக்கொலைகளின் பின்னணி என்று அவரும் நம்பிவிடுகிறார்.

ஹக்மனை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேலைக்காரன் சூரசேனாவை மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள். அந்தச்சம்பவங்களை நேரில் பார்த்த மற்றுமொரு முக்கிய சாட்சி அந்த வேலைக்காரன் சூரசேன.
சமரநாயக்கா உஷாரடைகிறார். பல ஆங்கில மர்ம நாவல்கள் அவர் படித்திருக்கவேண்டும்.
பொலிஸ் நிலைய கராஜில் அடைபட்டிருக்கும் அந்த பியசேனாவை தனது பேஜோ காரில் ஏற்றிக்கொண்டு மாத்தறை ஆஸ்பத்திரிக்கு வருகிறார்.
வார்டில் அனுமதிக்கப்ட்டிருக்கும் சூரசேனவுக்கு அருகில் சென்று அந்தக்கட்டிலிலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் பியசேனாவை நிறுத்தியவாறு, “ அவனைத்தெரிகிறதா?” என்று கேட்கிறார்.
“நடுநிசியில், வந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்தமையால் வீட்டில் இருள்கவிந்திருந்தது. அதானல் எவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. அத்துடன் தோள்பட்டையில் எனக்கு சூடு விழுந்து, நான் தவழ்ந்துசென்று ஒரு கட்டிலின் கீழே மறை;ந்து மயங்கிவிட்டேன்.” என்று சூரசேன சொல்கிறான். அந்த நாடக தயாரிப்பு இயக்குநருக்கு அந்த வாக்குமூலம் சற்று ஆறுதலைத்தருகிறது.
அப்படியானால் வேலைக்காரன், இந்த பியசேனாவை பார்க்கவில்லை. எனவே இவனை இனியும் வைத்துக்கொண்டு காரிலும் ஜீப்பிலும் ஊர்காட்ட அழைத்துச்செல்ல வேண்டியதில்லை.
அவனை மாத்தறை பஸ் நிலையத்திற்கு கொண்டுவருகிறார். அவனிடம் ஒரு பத்துரூபா நோட்டை கொடுத்து,” இனி இந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்காதே… எங்காவது கண்காணாமல் ஓடிவிடு” என்கிறார். அவனும் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என நினைத்துக்கொண்டு ஒரு பஸ்ஸில் ஏறி மாயமாகிவிடுகின்றான்.
சரத் ஹாமுவினதும் அவரது தம்பியினதும் இறுதிச்சடங்குகள் நடக்கின்றன. சமரநாயக்காவும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அனுதாபம் தெரிவிக்கின்றார். சரத் ஹாமுவின் வயோதிப தந்தையாருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் வார்த்தைகளை அள்ளித்தெளிக்கிறார்.

ஜே.வி. பி. கிளர்ச்சி தணிந்துவிடுகிறது. சரத் ஹாமுவின் குடும்பத்தினரும் கவலையில் தோய்ந்து அமைதியடைகின்றனர். ஆனால் பெரிய குடும்பத்தின் மானத்தைக்காப்பதற்காக பல அந்தரங்கங்களை மூடி மறைத்த வேலைக்காரன் சூரசேனவுக்கு குற்ற உணர்வு தலைதூக்கியது.
அன்று ஒரு நாள் காலையில் அந்த பொலிஸ் அதிகாரி ஹாமு இல்லாதிருந்த சமயம் அங்கு தங்கியிருந்துவிட்டு மறுநாள் காலையில் ஹாமுவின் டவலை உடுத்தியவாறு நின்ற காட்சி அவனது கனவில் வரத்தொடங்கிவிட்டது. அவன் முதலில் தனது வீட்டில் இதுபற்றி பேசத்தொடங்கிவிட்டான். அந்தக்கிராமத்தில் அவனது சந்தேகம் நுளம்புகள் போன்று பரவத்தொடங்கின.
ஹாமுவின் வயோதிபத்தந்தையாரும் உறவினர்களும் உஷாரடைந்தனர். ஹக்மணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமரநாயக்கா அந்த கொலைச்சம்பவங்களின் விசாரணைகளை சரியாகத்தொடரவில்லை என்ற புகார்கள் பொதுமக்களிடமிருந்து காலி பொலிஸ் அத்தியட்சருக்கு வரத்தொடங்கியது.
வருடங்கள் நகர்ந்தன. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜே.வி.பி. தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றவியல் ஆணைக்குழுவின் விசாரணை கொழும்பில் தொடர்ந்தமையால் ஹக்மணை கிராமத்துச்சம்பவம் கிணற்றில் விழுந்த கல்லாகவே பலமாதங்கள் கிடந்தது.

சரத்ஹாமு ஊருக்கு நல்ல மனிதர். அவர் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டார். அவருடன் அவரது தம்பியும் கொல்லப்பட்டார். நிச்சயமாக ஜே.வி.பி.யினர் இந்த இழிசெயலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். என்று ஊர்மக்கள் நம்பினார்கள். அவர்களின் அழுத்தம் நீடித்தது.
இறுதியில் காலி பொலிஸ் அத்தியட்சர் அந்த விசாரணையை புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைத்தார். சமரநாயக்கா தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டும் மீளப்பெறப்பட்டது. இரவு பகலாக புலனாய்வுப்பிரிவினர் தென்னிலங்கை முழுவதும் அலைந்து திரிந்து நுர்றுக்கும் மேற்பட்ட சாட்சியங்களை ஒழுங்கு செய்துவிட்டு காலி நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் அந்த நாடகத்தின் முதல் பாத்திரமாக அனுப்பப்பட்ட அல்பர்ட் என்ற ரவுடி வேறு ஒரு சம்பவத்தில் கொல்லப்பட்டுவிட்டான். அவனது உறவினன் பியசேனா முதலில் கைதாகி பின்னர் அப்ரூவராகிவிட்டான். முதலாம் எதிரி ஹக்மணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. சமரநாயக்கா, இரண்டாம் எதிரி இரவுக்காவல் வேலைக்கு அவரால் அனுப்பப்பட்ட கழு பியதாஸ. மற்றும் மூவர் மூன்றாம், நான்காம், ஐந்தாம் எதிரிகள்.
விசாரணை காலி நிதிமன்றத்திற்கு வந்ததும் ஹக்மணை மக்கள் அங்கே திரளத்தொடங்கினார். தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்று முதலாம் எதிரி நீதியரசரிடம் முறையிட்டார். அவரது முறையீட்டை ஏற்றுக்கொண்டபின்னர் அந்த வழக்கு காலியிலிருந்து சற்று தொலைதூரத்திலிருந்த நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வந்தது.
நீதியரசர் ஓ.எஸ்.எம். செனவிரத்தின. அரசதரப்பு வழக்கறிஞர் கென்னத்செனவிரத்தின. எதிரிகளுக்காக ஆஜரானவர்கள் ‘பண்டி’ சொய்ஸா என அழைக்கப்பட்ட ஏ.ஸி.டி. செய்ஸா. எஸ். எல்..குணசேகரா.
வீரகேசரியின் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் ஒரு சட்டத்தரணி. இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து வீரகேசரியிலும் மித்திரனிலும் பிரசுரிக்க விரும்பினார்.
ஏற்கனவே பல கொலை வழக்குகளின் விசாரணைகளினால் இந்த இரண்டு பத்திரிகைகளினதும் விற்பனை அதிகரித்ததை நன்கு அறிந்தவர்.
அப்பொழுது நான் நீர்கொழும்பு பிரதேச நிருபராக பணியிலிருந்தேன். செய்தி ஆசிரியர் ஊடாக எனக்கு கடிதம் அனுப்பி என்னை அலுவலகத்திற்கு அழைத்து, ஹக்மணை இரட்டைக்கொலைவழக்கு விசாரணையை தொடர்ந்து எழுதுமாறு பணித்தார். விடுமுறை நாட்கள் தவிர்ந்து அனைத்து நாட்களும் அந்த விசாரணை காலை முதல் மாலை வரை தொடரவிருப்பதனால் நீதிமன்றத்திற்கு தவறாது சமுகமளித்து உடனுக்குடன் செய்திகளைத்தரவேண்டும் என்றும் பணித்தார். தினமும் அந்த விசாரணைச்செய்திகளுக்காக போதிய இடம் இரண்டு பத்திரிகைகளிலும் ஒதுக்கப்பட்டிருக்கும் என்றும் சொன்னார்.
அத்தருணம், எனக்கு கொழும்பில் காலி முகத்தில் வீதி அகலமாக்கும் வேலையில் தொழிலாளர்களை கவனிக்கும் ஓவர்ஸீயர் பணி கிடைத்தது. எனது நிலைமையை ஆசிரியரிடம் விளக்கினேன்.
“ ஒரு நிருபர் வேண்டும்.. கொழும்பிலிருந்து இதற்காக ஒருவரை தினமும் அனுப்ப முடியாது. நீரே நீர்கொழும்பில் ஒரு நிருபரை தெரிவுசெய்து தந்துவிட்டு, கொழும்பு காலி முக வேலையை ஏற்றுக்கொள்ளும்,” என்று சொன்னார்.
நீர்கொழும்பு திரும்பியதும். அப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள நிருபரை தேடினேன். எனது மனக்கண்ணில் வந்தார் நண்பர் செல்லையா செல்வரத்தினம். அவர் அவ்வப்போது கவிதை எழுதுபவர். மல்லிகையிலும் எழுதியிருக்கிறார். எமது ஊரில் என்னுடைய மாணவப்பராயத்து தோழன். அவர் படித்துவிட்டு மேலதிக கல்விக்காக கொழும்பில் ஒரு தனியார்கல்லூரிக்கு விண்ணப்பித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவரைச்சந்தித்து நிலைமையை சொன்னேன். அவர் சம்மதித்தார் உடனே சைக்கிளில் அழைத்துக்கொண்டு எமது குடும்ப நண்பர் டொக்டர் பாலசுப்பிரமணியம் அவர்கள் நடத்திய கிளினிக்குக்கு வந்தேன். அவரிடம் அனுமதி பெற்று அங்கிருந்த தொலைபேசியை பாவித்து கொழும்பில் வீரகேசரி, மித்திரன் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களுக்கு செல்வரத்தினத்தை அறிமுகப்படுத்தினேன்.
அவரும் மறுநாள் கொழும்பு சென்று நீர்கொழும்பு நிருபருக்கான நியமனக்கடிதம் பெற்றார். நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது. நான் காலி முகத்தில் வேலையை பொறுப்பேற்றேன்.
முதல்நாள் விசாரணையில் அரசதரப்பு வழக்குரைஞர் கென்னத் செனவிரத்தின எதிரிகளின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியவாறு, நீண்டதொரு தொகுப்புரையை நிகழ்த்தினார். மறுநாள் வீரகேசரியில் கடைசிப்பக்கம் முழுவதும் அந்த தொகுப்புரையே வெளியாகியிருந்தது.
‘இன்ஸ்பெக்டர், ஹாமுவின் டவலை இடுப்பில் கட்டியிருந்தார்’ என்று தலைப்பு. மேலும் சில சலசலப்பூட்டும் உப தலைப்புகள். இனி கேட்கவா வேண்டும் அபிமான வாசகர்கள் காலைகடனுக்கு முன்பே பத்திரிகைகளை வாங்கிப்படிக்கத்தொடங்கினர். ஹக்மணை இரட்டைக்கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்தது.
எனது கொழும்பு வேலை தற்காலிக அடிப்படையிலானது என்பதை அதில் இணைந்தபின்பே அறிந்தேன். காலி முகத்தின் புதிய வீதி வேகவேகமாக நீண்டதுபோன்று நீர்கொழும்பில் அந்த வழக்கு விசாரணையும் நீண்டது.
ஒரு கட்டத்தில் காலி முக வீதி புனரமைப்பு நிறைவு பெற்றது, நண்பர் செல்வரத்தினத்திற்கு கொழும்பு தனியார் கல்லூரி படிப்பு ஆரம்பமானது. எனக்கு இனி கொழும்பில் வேலை இல்லை. அவருக்கு கொழும்பில் படிப்பு ஆரம்பம்.
இருவரும் யோசித்து ஓரு முடிவுக்கு வந்தோம். குறைந்த ஊதியம் கிடைத்தாலும் பத்திரிகைப்பணியை கைவிட முடியாது என்ற தீர்மானத்துக்கு வந்தோம். அவருக்கு கல்லூரி நாட்கள் இருக்கும்போது நான் நீதிமன்றம் சென்று செய்திகளை குறிப்புகளாக எழுதுவது என்றும். அவர் மாலை வந்ததும் சந்தித்து எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் செய்தி எழுதி கொழும்புக்கு சேர்ப்பிப்பது. தொடர்ந்து துரிதமாக இயங்கினோம்.
எனது வாழ்நாளில் முதலும் கடைசியுமாக நான் நேரில் பார்த்த விசாரணைதான் அந்த ஹக்மணை இரட்டைக்கொலைவழக்கு.
சில ஜூரிமார்கள் தினமும் வருவார்கள். விசாரணை தொடரும். எதிர்தரப்பும் அரச தரப்பும் சில நாட்கள் சட்டப்பிரச்சினைகளை கிளப்பும். அப்பொழுது அந்த ஜூரிமாரை நீதியரசர் உள்ளே வேறு அறைக்கு அனுப்பிவிடுவார்.
கொலைச்சம்பவம் எப்படி நடந்தது என்பது மாத்திரம்தான் ஜூரிமாருக்கு தெரியவேண்டும். சட்டப்பிரச்சினைகள் அல்ல என்பது நீதிமன்ற விதிமுறைகள் என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
சரத்ஹாமுவின் மனைவியும் முதலாம் எதிரியின் ஆசைநாயகியுமான அந்த ஆசிரியை தனது பெண்குழந்தையுடன் வந்து நீதிமன்ற பிரதம லிகிதரின் அறையில் இருப்பார். பல நாட்கள் கண்டிருக்கின்றோம்.
நீதிமன்ற குற்றவாளிக்கூண்டிலே முதலாம் எதிரி வெள்ளை நீளக்காற்சட்டையும் வெள்ளை சேர்ட்டும் டையும் அணிந்து காட்சி தருவார். மற்றவர்கள் சாரம் சேர்ட்டுடன் காட்சியளிப்பர்.
முதலாம் எதிரியின் கையில் ஒரு புத்தகம் எப்பொழுதும் இருக்கும். அதனுள்ளே ஒரு அரசமர இலை பழுப்பு நிறத்திலிருக்கும். அவ்வப்போது அதனை எடுத்து முகத்தில் முகர்ந்துகொள்ளுவார். அப்படித்தான் அவர் பாவ சங்கீர்த்தனம் செய்கிறார் எனப்புரிந்துகொள்வோம்.
அந்தக்குகூண்டுக்கு அருகில்தான் நிருபர்களுக்கான நீளமான மேசையும் ஆசனங்களும் இருந்தன. எதிரிகள் சிங்களத்தில் கூண்டுக்குள்ளிருந்து மெதுவாக பேசுவது சன்னமாகக்கேட்கும்.
தினமும் வழக்குவிசாரணை தொடங்கு முன்பே நாம் அங்கே பிரசன்னமாகிவிடுவோம்.
நீர்கொழும்பு சிறையிலிருந்து அந்த எதிரிகள் கைவிலங்குகளுடன் அழைத்துவரப்படுவார்கள். கூண்டுக்குள் வந்ததும் சிறை அதிகாரிகள் அந்த விலங்குகளை கழற்றிவிடுவார்கள்.
நான் அந்த எதிரிகளுக்கு ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் காலை வணக்கம் சொல்வேன்.
நானும் செல்வரத்தினமும் இணைந்து தமிழில் எழுதிய செய்திகளை தங்களினால் வாசிக்க முடியவில்லை என்பார்கள் அந்த எதிரிகள். ஆனால் ஆங்கில, சிங்கள நாளேடுகளில் வெளியானவற்றை அந்தந்த நிருபர்களிடம் வாங்கிப்படிப்பார்கள். தங்கள் பெயர் பத்திரிகைகளில் வெளிவரும் பெருமிதம் அவர்களின் முகத்தில் படிந்திருந்தது.
அவர்களுக்காக வாதாடும் சொய்ஸா பிரபலமான வழக்கறிஞர். இலங்கையில் முன்பொரு சந்தர்ப்பத்தில் நடந்த அரசைக்கவிழ்க்கும் புரட்சிச்சதி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பரம்பரையில் வந்தவர். அந்த வழக்கு தள்ளுபடியானது. அதனால் இந்த வழக்கிலும் தாங்கள் அனைவரும் வீடுதலையாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
அரச தரப்பு வழக்கறிஞர் கென்னத் செனவிரத்தின, புலனாய்வுப்பிரிவினரின் ஆதாரங்களை வைத்துக்கொண்டு வாதாடினார்.
நாளுக்கு நாள் நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் அதிகரித்தனர். அனைவரும் அந்த ஆசைநாயகியை அரசதரப்பு வழக்கறிஞர் எப்போது ஆஜராக்கப்போகிறார்? என்ற ஆவலில் பல நாட்கள் காத்திருந்தனர். ஆனால் நிருபர்கள் உட்பட அனைத்துப்பொதுமக்களையும் சிறை அதிகாரிகளையும், உள்ளே அனுமதிக்காமலேயே அந்தப்பெண் சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகளையும் நீதியரசர் நடத்திவிட்டார்.
இது எல்லோருக்கும் பெரிய ஏமாற்றம்.
ஒருநாள் மதியபோசன இடைவேளையில், ஹக்மணையில் கொலைசெய்யப்பட்ட சரத்ஹாமுவின் வயோதிபத்தந்தையார் நீதிமன்றத்துக்கு வெளியே முன்றலில் என்னுடன் உரையாடினார்.

“ முடிவு எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

“ சாட்சியங்கள் உறுதியாக இருப்பதுபோலத்தெரிகிறது. அதனால் எதிரிகள் தண்டனையை சந்திக்கக்கூடும்” என்றேன்.

“ என்ன தண்டனை அவர்களுக்கு கிடைத்தாலும் எனது அருமை மக்கள் இருவரும் திரும்பியா வரப்போகிறார்கள்.” என்று கண்ணீர் மல்க அவர் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன்.

நான் அவருக்கு ஆறுதல் சொன்னபொது அவரிடமிருந்து வந்த வார்த்தைகள்தான் அவரை ஏறிட்டுப்பார்க்கவைத்தது.

“ பத்திரிகைக்காரங்களுக்கு நல்ல வருமானம். வருங்காலத்தில் இந்தக்கதையை நாவலாக அல்லது திரைப்படமாக எடுத்துவிடுவார்கள். ஆனால் எனது பிள்ளைகள் திரும்பி வரமாட்டார்கள்.”

அந்த வார்த்தைகள் சாட்டையாக விழுந்தன.
சில மாதங்கள் தொடர்ந்த அந்த விசாரணை ஒரு நாள்

மாலைப்பொழுதில் முடிவுக்கு வந்தது.
அன்றையதினத்தை வீரகேசரி ஆசிரியபீடம் எதிர்பார்த்து காத்திருந்தது. அன்று நண்பர் செல்வரத்தினமும் நீதிமன்றில் இருந்தார். நீதியரசர் தனது தீர்ப்பை வழங்கினார்.அந்த மன்றில் அவரைத்தவிர அனைவரும் எழுந்துநின்றோம்.

மேடையில் அவரது மேசைக்கருகில் அமர்ந்து அதுநாள்வரையில் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த நீதிமன்ற சுருக்கெழுத்து – தட்டெழுத்து பணியாளரான இளம் யுவதியும் அன்று எழுந்து நின்றே அந்தத்தீர்ப்பை எழுதினார். அவரது ஒரு கரம் கைக்குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டிருந்தது. தனது கரத்தினால் அப்படியொரு தீர்ப்பை எழுதநேர்ந்த துயரத்தில் அவர் விம்மினார். பார்க்கப்பாவமாக இருந்தது.
கூண்டுக்குள் நின்ற எதிரிகளின் முகம் உறைந்துவிட்டது. கூண்டுக்குள்ளிருந்து சன்னமான ஒரு குரல். “ மாத்தயா… இப்ப என்ன சொல்கிறீர்கள்? வெளியே நிற்கும் மரத்திலேயே எங்களை தொங்கவிடச்சொல்லுங்கள்” என்று முதலாம் எதிரி முன்னாள் பொலிஸ்பொறுப்பதிகாரி கே.டி.சமரநாயக்காவின் அருகிலிருந்த இரண்டாம் எதிரி கழுபியதாஸ சொல்கிறான்.
“ அமைதியாக இரு. அமைதியாக இரு” என்று சமரநாயக்கா சொல்கிறார்.
“எதிரிகள் அனைவருக்கும் மரணதண்டனை. அவர்களின் உயிர் அவர்களின் உடலில் இருந்து பிரியும் வரையில் அவர்கள் தூக்குக்கயிறில் இருக்கவேண்டும்” எனச்சொல்லி தீர்ப்பை வாசித்துவிட்டு நீதியரசர் எழுந்து பின்புறமுள்ள தனது அறைக்குள் பிரவேசிக்கின்றார்.
முதலாம் எதிரி தன்வசம் இருக்கும் புத்தகத்திலிருந்து அரசமர இலையை எடுத்து முகர்ந்துகொள்கிறார்.
இவர்களுக்காக அதுநாள்வரையில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் சொய்ஸா தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றைய தினம் நீதிமன்றுக்கு வரவில்லை. “தீர்ப்பு இப்படித்தான் அமையும் என்று அவருக்கு ஏற்கனவே தெரியும்” என்று சக நிருபர்கள் பேசிக்கொண்டார்கள்.
தீர்ப்பு வழங்கப்பட்டதும் கூண்டுக்கு அருகே ஓடிவந்தார் எதிரிகளின் மற்றுமொரு முக்கிய வழக்கறிஞர். அவர் எஸ். எல். குணசேகரா. அவர் தனது பொக்கட்டுக்குள்ளிருந்து இரண்டு சிகரட் பெட்டிகளை எடுத்து எதிரிகளிடம் நீட்டிவிட்டு ஏற்கனவேதட்டச்சில் தயாரிக்கப்பட்ட சில காகிதங்களில் எதிரிகளிடம் கையொப்பம் வாங்கினார்.
நிருபர்களைப்பார்த்து, “இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போகிறோம்” என்றார்.

“ எங்கே உங்களின் முதன்மை வழக்கறிஞர் சொய்ஸா?” என்று ஏக குரலில் கேட்டோம்.

“ அவர் அன்று காலை ஒரு அவசர வேலையாக லண்டனுக்கு பயணமாகிவிட்டார்”. என்ற பதில் வந்தது.

எதிரிகள் அனைவரும் பெரிய சிறைச்சாலை வாகனத்தில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். நண்பர் செல்வரத்தினம் செய்தியுடன் கொழும்புக்கு பஸ் ஏறினார். மறுநாள் வீரகேசரியில் முன்பக்கத்தில் ‘ஹக்மணை இரட்டைக்கொலை வழக்கில் எதிரிகள் அனைவருக்கும் மரணதண்டனை’ என்ற பெரிய எழுத்து தலைப்புடன் விரிவான செய்தி வெளியானது.
……………
இத்துடன் இந்தச் சொல்ல மறந்த கதை முடிந்துவிட்டதா? என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும்.
எதிரிகள் கொழும்பில் மரணதண்டனைக்கைதிகளுடன் வைக்கப்பட்டார்கள். மேன்முறையீட்டு விசாரணை தாமதடைந்தது. 1977 இல் பொதுத்தேர்தல் நடந்தது. சரத்ஹாமுவின் உறவினர் என்று சொல்லப்பட்ட இடதுசாரி வேட்பாளர் ஏலியன் நாணயக்கார உட்பட அனைத்து இடதுசாரிகளும் அந்தத்தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். ஜே.ஆர். ஜயவர்தனா தலைமையிலான யூ.என்.பி. அந்தத்தேர்தலில் அமோக வெற்றியீட்டியது.
அதன்பின்னர் அந்த வழக்கு மேன்முறையீட்டுக்கு வந்தது. நீர்கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசரின் திர்ப்பில் சில சட்டப்பிரச்சினைகள் சார்ந்த தவறுகள் இருப்பதானல் அனைத்து எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டனர் என்ற செய்தி வெளியானது.
…….
இத்துடன் இந்தக்கதை முடிந்ததா?
இல்லை.
குறிப்பிட்ட முதலாம் எதிரிக்கு பொலிஸ் சேவையில் நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளுடனும் மீண்டும் பொலிஸ் அதிகாரி பதவி நியமனம் கிடைத்தது.
……
இத்துடன் இந்தக்கதை முடிந்ததா?
இல்லை.
1977 இல் பதவிக்கு வந்த ஜே. ஆர். குற்றவியல் நீதி ஆணைக்குழுவை இரத்துச்செய்தார். அதனால் ஜே.வி. பி. தலைவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்புடன் விடுதலை கிடைத்தது. அவர்கள் தாம் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்கப்போவதாகச்சொல்லிக்கொண்டு அடுத்து வந்த உள்ளுராட்சி மன்ற, மாவட்ட சபைத் தேர்தல்களிலும் ஜனாதிபதித்தேர்தலிலும் ஈடுபட்டார்கள்.
1983 இனக்கலவரத்தின் பழியை ஜே.வி.பி. யின் மீது சுமத்தி அதனை தடைசெய்தார் ஜே. ஆர். ஜெயவர்த்தனா. ஜே.வி. பி. தலைவர்கள் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார்கள்.
1987 இல் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஜே.ஆரும். ராஜீவ் காந்தியும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அதனை தலைமறைவு இயக்கம் ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து மீண்டும் தென்னிலங்கையில் கிளர்ச்சியில் ஈடுபட்டது. பலர் கொல்லப்பட்டார்கள்.
1971 காலப்பகுதியில் தனது சொந்த இச்சைக்காக எந்த இயக்கத்திற்கு களங்கம் கற்பித்துவிட்டு, இரண்டு படுகொலைகளின் சூத்திரதாரியாகியிருந்த அந்த பொலிஸ் அதிகாரி சமரநாயக்கா, சுமார் பதினாறு ஆண்டுகளின் பின்னர் அந்த இயக்கத்தினரால் எதிர்பாராதவிதமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச்செய்தி வெளியாவதற்கு முன்னர் நான் அவுஸ்திரேலியாவிலும் நண்பர் செல்வரத்தினம் பிரான்ஸ_க்கும் எங்கள் பிரதம ஆசிரியர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்துவிட்டோம்.
சரத்ஹாமுவின் வயோதிப தந்தையாருக்கும் அந்தப்பெண்ணுக்கும் அவளின் குழந்தைக்கும் என்ன நடந்தது என்பது தெரியாது.
இந்த ஆக்கத்திற்கு “துரோகம் துரத்தும்.” என்றும் தலைப்பிடலாமா?
—00—

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.