நடேசன்
”நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இதற்கு உதயத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்”” என தொலைபேசியில் ஒருவர் கேட்டார்.
எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன வியாபாரம்?”
”கோயில் ஒன்னு புதிதாக சிட்னியில் கட்டவிருக்கிறேன்.”
எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி முடித்தேன்.
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும் போது பேச்சுக்கிடையே ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ”உங்களுக்குத் தெரியுமா”? குறிப்பிட்ட நபர் தான் ஆரம்பித்து வைத்த ஆலயத்தை தன்னாலே அழிக்கவும் ஆக்கவும் முடியும் என குறிப்பிட்டார்.’அவர் மனிதன் அல்ல தான் கடவுள் எனக் கூறுகிறார் ‘என நினைத்துக் கொண்டேன்.
வேறு ஒரு நண்பர் டெலிபோனில் ‘குறிப்பிட்ட நாளில் அம்மன் சிலை காரில் குறிப்பிட்ட இடத்துக்கு எடுத்துவரப்பட்டு அடியார்கள் பலரால் ஆராதிக்கப்பட்டு மீண்டும் காரில் எடுத்துச் செல்லப்படும்” என்றார்.
”இருந்து பாருங்கள் வெகுவிரைவில் நடமாடும் ஆலயம் வரும். கிரடிற் காட்டில் பணம் செலுத்தும் போது எமது வீட்டிற்கு முன்னே நின்று ஹோன் அடிக்கும். அதில் குருக்கள் இறங்கிவந்து எமது நட்சத்திரத்தை விசாரித்து பூஜை செய்வது மட்டுமல்ல. வடை பாயாசமே கொடுத்துவிட்டுப் போவார்.” என்றேன்.
நம் இந்துக்கள் மேலைநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பின், தங்களது வழிபாட்டுமுறைகளை இடத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப மாற்றிவிடுகிறார்கள். சில முறைகள் ஆரம்பத்தில் முகம் சுளித்துப் பார்க்கப்பட்டாலும் நாளடைவில் ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் பெறுவது திண்ணம்.
சமீபகாலத்தில் மெல்பேனில் உள்ள மூன்று ஆலயங்களையும் நிர்வாகம் செய்யும் குழுவினர், தங்கள் இடையே ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், நியாயம் வேண்டியும் இங்குள்ள நீதிமன்றங்களை அணுகினார்கள். நீதிமன்றங்கள் தீர்ப்புக் கொடுத்தாலும் நீதி கேட்டவர்களுக்கு நெஞ்சில் நிம்மதி கிடைக்கவில்லை. காயங்களும், மனவிரிசல்களும் ஆறுவதற்குப் பதிலாக மேலும் ரணமாகியுள்ளன.
இவ்விடயங்களில் யார் சரி, என கூறுவது வீண்வேலை என்றும், அகங்காரத்தினால் பீடிக்கப்பட்டு அலைகிறார்கள் என சம்பந்தப்படாதவர்கள் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பாண்டியன் சபையில் நீதிகேட்ட கண்ணகியின் நிலையில் இருக்கிறார்கள்.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் ”அகங்காரம் கொண்டவனுக்கு தோல்வியின் காயம் கடுமையாக இருக்கும்.” என ஒருவசனம் வருகிறது.
இலங்கை, இந்தியாவில் ஆலய நிர்வாகம் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தான் சூத்திரவர்ணத்தை சேர்ந்தவர்களின் பொறுப்பில் உள்ளது. இதற்கு முன்பு ஷத்திரியர்கள் ஆலயங்களை நிர்மாணிப்பார்கள். குடமுழுக்கு வைப்பார்கள். பின்பு அந்தணரை கொண்டு வந்து பூசைகளையும் திருவிழாக்களையும் நடத்துவார்கள். வைசிய குலத்தவர்கள் பொருளாகவும், பணமாகவும் தானங்கள் செய்து நிர்வாகத்திற்கு உதவுவார்கள்.
ஆலயங்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில், சூத்திரர்கள் மூதாதையர்களின் பெயர்களில் ஊர்களுக்கு வெளியே சிலைகள் வைத்து வணங்குவார்கள். தமிழகத்தில் நாட்டார் வழிபாடு என்று சொல்லுவார்கள்.
இந்து சமயத்தின் சொல்லப்படும் ஆன்மா முக்தி என்ற நிலையடைவதற்கு கூறப்படும் மார்க்கங்கள் நான்கு வகைப்படும். ஞானமும் யோகமும் சமானியர்களின் ஆன்மாக்களுக்கு அப்பாற்பட்ட விடயம். பலகாலம் தவம் இருந்து யோகமார்க்கத்தில் ஆன்மா முத்தியடைகிறது. புத்த பெருமான் போதிமரத்தின் கீழ் ஞான மார்க்கத்தை அடைந்தார் என நான் விளங்கிக் கொண்டேன்.
மொத்தத்தில் ஞானமும் யோகமும் பிசினஸ் கிளாசில் ஆகாய விமானத்தில் பிரயாணம் செய்வது போன்ற விடயம். சமானியர்களுக்கு கிடைப்பது அரிது.
சரியை வழிபாட்டினால் திருநாவுக்கரசர் முத்திபெற்றார் என சிறு வயதில் படித்த ஞாபகம்.
சமானியர்கள் எல்லாரும் கிரிகை வழியால் முத்தியடைய முயற்சிப்பதற்காககத்தான் ஊர்கள் தோறும் ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. அந்தணர்கள் அந்த ஆன்மா முக்திக்கு வழிகாட்டுகிறார்கள். இந்த அடிப்படையில் தான் புலம்பெயர்ந்த நாங்களும் அவுஸ்திரேலியா, கனடா என சென்றாலும் எங்கள் ஆன்மா முக்திக்காக கோயில்கள் அமைத்து அந்தணர்களை வரவழைத்து முயற்சிக்கிறோம். பிழைகள், பிணக்குகள் வராமல் எந்த விடயம் தான் சாத்தியம்? மேலும் ஷத்திரியர்களின் கையில் இருந்த அதிகாரம் தற்பொழுது எல்லாரிடமும் பரவலாக்கப்பட்டதால் மன்னர்கள் செய்த வேலைகளை இப்பொழுது செய்யும் போது அகங்காரம், அதிகாரம் போன்ற உணர்வுகள் வந்துபோவதில் என்ன பிழை?
வாழ்க எம் பணி, வளர்க கிரிகை மார்க்கம்.
மறுமொழியொன்றை இடுங்கள்