மிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களும் மருத்துவர்கள் போல் உணர்வுகளுக்கு அப்பால் தம் தொழிலை செய்யவேண்டும் என்பது விதி. விதிகளை மீறும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுவதுண்டு.
அன்று ஒருநாள். இரவு நேரத்தில் எமது மிருகவைத்தியசாலை பலமாக தட்டப்பட்டது,
ஏதோ ஒருவர் ஏமேர்ஜன்சியாக வந்து நிற்கிறார் என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தேன்.
இரண்டு பொலிஸ்காரர்கள் ஒரு நாயை அழைத்து வந்திருந்தார்கள். இல்லை..இழுத்து வரப்பட்டிருந்தது, சங்கிலியால் கட்டி.
மனோகராப் படத்தில் சிவாஜிகணேசன் அரசசபைக்கு சங்கிலியால் கட்டி இழுத்து வரப்பட்ட காட்சியை நினைவூட்டியது.
வசனம் மட்டும் பேசவில்லை.
அந்த நாயைக் கூர்ந்து பார்த்தேன்.
வெள்ளை நிறமானது, ஆனால் முகத்தில் அதுவும் இடது கண்பகுதி மட்டும் கருமை நிறம். Bull Terrier இனத்தை சேர்ந்த நாய்.
நாயின் வாயிலும் தலையிலும் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
பொலிஸாரிடம், ”என்ன நடந்தது?” என வினவினேன்.
”மூதாட்டி ஒருத்தி தனது நாயுடன் தேகப் பயிற்சிக்காக பூங்காவுக்கு போயிருக்கிறார். அங்கு திடீரென வந்த இந்த நாய் மூதாட்டியின் சிறிய நாயைக் கடித்துவிட்டது. மூதாட்டியின் கூக்குரலுக்கு உதவ வந்த பொலிசாராலும் இந்தநாயின் வாயில் இருந்து மூதாட்டியின் நாயை மீட்கமுடியவில்லை.
பொலிஸார் பொறுமை இழந்து தமது ரிவோல்வரால் இந்த நாயின் தலையில் சுட்டார்கள். சுட்ட சன்னம் மண்டையை துளைக்காமல் (Reflect) தெறித்துச் சென்றுள்ளது. மீண்டும் சுடும் முயற்சியை கைவிட்டு குழாய் தண்ணீரை விசிறி அடித்தபோது நாயின் வாய் திறந்தது எனினும் பலன் இல்லை.”
பொலிஸாரால் இந்த நாய் மரணதண்டனைக்காக என்னிடம் கொண்டுவரப்பட்டுள்ளது,
நாய்களில் இந்த Bull Terrier வலிமையான தாடை தசைகளைக் கொண்டது.
Gladiator of dog race என்பர். இங்கிலாந்தில் காளை மாடுகளுடன் சண்டை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இனம் பின்பு நாய்களுக்கு இடையில் சண்டை போடுவதற்காக வளர்க்கப்பட்டு உபயோகிக்கப்பட்டது. குரூரமான இந்த கேளிக்கை விளையாட்டுகள் தடைசெய்யப்பட்ட பின்பு இவை வீடுகளில் செல்லப்பிராணிகள் போன்று வளர்க்கப்படுகின்றன. இதனது தாடை எலும்புகள் ப+ட்டு போன்ற தன்மை இருப்பதால் நாய் விரும்பினாலும் உடனே திறக்க முடியாது. இந்த நாய்கள் சண்டைக்காக வளர்க்கப்பட்டதால் புத்திக்கூர்மை குறைந்தவை என்பது விலங்கியலாளர் மத்தியில் நிலவும் அபிப்பிராயமாகும்.
பொலிஸாரால் இழுத்த வரப்பட்ட நாய், எனக்கு ரெக்ஸ் என்ற Bull Terrier ஐ மனத்திற்கு கொண்டு வந்தது,.
பல வருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் இன்னமும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
ரெக்ஸ் என்னால் மறக்க முடியாத நாயாகும். இத்தாலியரான ரோஸி ரெக்ஸ்க்கு கழுத்து நோ எனக் கூறி என்னிடம் கொண்டு வந்தார்.
கழுத்துப் பகுதியைx ray யில் பார்த்தபோது இரண்டு disc உ கள் விலகி இருந்ததை அவதானித்தேன்.
முதுகு எலும்புகளை இணைக்கும் இந்த disc வயது செல்லும் போது கடினமடைவதால் இப்படியான விலகல் (Prolapse ) ஏற்படுகிறது.
சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த விரும்பி தலைமை வைத்தியரின் அனுமதியுடன் இரண்டு disc களை அகற்றினேன். இப்படிப்பட்ட சத்திரசிகிச்சை முன்பு செய்யாதபடியால் ரெக்ஸ் குணமாக வேண்டும் என்ற ஆவலில் எனக்கு கடமை இல்லாத நேரங்களிலும் சென்று பராமரித்தேன். உணவவூட்டினேன்.
ஒருவாரம் சென்றும் ரெக்ஸின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை.
மீண்டும் X Ray எடுத்தேன். மற்றும் ஒரு disc விலகி இருந்தது, சத்திரசிகிச்சை செய்வதற்கு ரெக்ஸின் உரிமையாளரான ரோஸியிடம் அனுமதி கேட்டபோது ரோஸி மறுத்ததுடன் ரெக்ஸை கருணை கொலை செய்யும்படி வேண்டிக் கொண்டாள்.
ரெக்சுக்கு முன்னங்காலில் ஊசி ஏற்றும் போது என்கண்ணில் இருந்து இருதுளி கண்ணீர் வந்து தலையில் சிந்தியது.
——
ரெக்ஸை நினைத்தபடி இந்த நாயை பொலிஸாரிடம் இருந்து வாங்கிக் கொண்டு சென்றேன்..