முருகபூபதி – அவுஸ்திரேலியா
இலங்கையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் இலங்கை வரலாற்றில் இடதுசாரிகளுக்கு படிப்பினையையும் பலத்த அடியையும் கொடுத்தது. அதற்குமுன்னர் 1970 இல் நடந்த தேர்தலின்போது முதலாளித்துவக்கட்சியான யூ.என்.பி.யின் தலைவர் டட்லிசேனாநாயக்கா சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் பேசுகையில் இந்தத்தேர்தலில் இடதுசாரிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆனால் அந்தத்தேர்தலில் இடதுசாரிகள் அவர் சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அமோக வெற்றியை ஈட்டினார்கள்.
ஸ்ரீமா அம்மையாரை விட்டு 1976 இறுதிப்பகுதியில் விலகியதன் பின்னர் இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) மற்றும் லங்கா சமசமாஜக்கட்சியினர் இடதுசாரி ஐக்கியமுன்னணி என்ற அமைப்பைத்தோற்றுவித்து இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக களத்தில் இறங்கியபோதுதான் டட்லி சேனாநாயக்கா சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவிக்கொண்டார்கள்.
அக்காலப்பகுதியில் எனக்குள்ளும் இடதுசாரி சிந்தனைகள் துளிர்விட்டிருந்தது. நானும் தேர்தல் பிரசாரக்களத்தில் இறங்கினேன். எங்கள் நீர்கொழும்பில் நடந்த பிரசாரக்கூட்டங்களில் கலாநிதிகள் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா ஆகியோருடனும் மேடையேறி தமிழில் பிரசாரம் செய்தேன்.
தீபம் எரிந்தாலும் பொங்கல் வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே… என்று ஒரு பாடல் துலாபாரம் படத்தில் வரும். அந்தப்பாடலை மாற்றிப்;பாடி இவ்வாறு பிரசாரத்துக்கு பயன்படுத்தி பாடினேன்.
‘யூ.என்.பி. வந்தாலும் ஸ்ரீலங்கா வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே…இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே….”
இந்த வரிகளை மேடையிலிருந்த தலைவர்களும் ரசித்தனர்.
எங்கள் ஊரில் சமசமாஜக்கட்சி வேட்பாளருக்காக தெருத்தெருவாக அலைந்து சந்திக்கு சந்தி கூட்டம் போட்டோம். தமிழ் பேசும் மீனவர் குடியிருப்பு பகுதிகளில் என்னை பேசவிட்டனர்.
குறிப்பிட்ட வேட்பாளர் தமது பிரசாரப்பணிக்காக ஒரு காரை தினக்கூலி அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தார். அதன் கூரையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக்கும். காரின் சாரதியும் இடதுசாரி ஆதரவாளர் என்பதனால் நன்கு ஒத்துழைத்தார். நாம் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் அவரது கார் எம்மை சுமந்து செல்லும்.
நகரின் மத்தியில் பொதுநூலகத்திற்கு முன்பாகவிருந்த மைதானத்தில், பொருளாதாரத்தில் தங்கமூளை என வருணிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் கலாநிதி என்.எம். பெரேராவுடனும், கொச்சிக்கடை என்னுமிடத்தில் சட்டமேதை கொல்வின். ஆர். டி. சில்வாவுடனும் மேடையில் பேசினேன்.
ஒருநாள் ஏத்துக்கால் என்ற இடத்தில் தெருவோரத்தில் ஒரு சிறிய பிரசாரக்கூட்டத்தை முடித்துவிட்டு கடற்கரையோர வீதி வழியாக திரும்பிக்கொண்டிருக்கின்றோம்.
எதிரே ஒரு வாகனம் எமக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தது. வீதியோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சில சிறுவர்கள் எமது ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட காரைக்கண்டதும் ஏதோ சினிமாப்பட துண்டுப்பிரசுரம் கிடைக்கப்போகிறதாக்கும் என நம்பிக்கொண்டு குறுக்கே வந்துவிட்டார்கள். முன்னால் சென்ற வாகனத்தில் மோதுண்ட ஒரு சிறுவன் அதன் டயரில் சிக்கிக்கொண்டான்.
எமது கார் சாரதி திடீர் பிரேக்போட்டு நிறுத்தினார்.
நாம் இறங்கி ஓடிச்சென்று அந்தச் சிறுவனை காப்பாற்ற முனைந்தோம். பாவம் அவன். அவனது ஒருகால் டயரின் கீழே பல்லி போன்று துடிதுடித்தான். அந்த வாகனத்தில் ஒரு சிங்களக் கனவானும் அவரது மனைவியும். அவர்கள் பதட்டத்தில் இறங்குவதற்குப் பயந்து வாகனத்துக்குள்ளேயே இருந்தனர். தெருவில் சனம் கூடிவிட்டது.
நானும் எமது வேட்பாளரும் சாரதியும் உடன்வந்த தோழர்களும் அந்த வாகனத்தை தூக்கி சிறுவனை வெளியே எடுத்தோம். அவன் மயங்கிவிட்டான். முழங்காலுக்குக்கீழே நைந்துவிட்டிருந்தது.
எங்கே ஊர்மக்கள் திரண்டு தம்மை அடித்து தாக்கிவிடுவார்களோ எனப்பயந்த அந்தக்கனவான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று வாகனத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்து பறந்தார். எமக்கு இது திகைப்பாக இருந்தது. மயங்கிக்கிடந்த சிறுவனையும் தூக்கிப்போட்டுக்கொண்டு அந்த கனவானின் வாகனத்தை விட்டுக்களைத்தோம். எமது வேட்பாளர் திலகம் மைக்கை எடுத்து சிங்களத்தில் உரத்த குரலில் அந்த வாகனத்தை பிடியுங்கள் தடுத்து நிறுத்துங்கள் என்று கத்தினார்.
ஏதோ சினிமாப்படக்காட்சிபோல இருந்தது. வீதியோரங்களில் ஊரே திரண்டு நின்று இந்த வேடிக்கையை பார்த்தது. ஆனால் யாரும் குறுக்கே பாய்ந்து நிறுத்தவில்லை.
கனவான் எங்களைவிட புத்திசாலியாக இருக்கவேண்டும். அந்த வீதியில் நேரே சென்றால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் வரும் என்பது அவருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.
அவரது வாகனம் பொலிஸ் நிலைய முன்றலுக்குள் திரும்பியது.
இனியாவது நாம் புத்திசாலியாக இருக்கவேண்டாமா?
உடன் வந்த தோழர் ஒருவரை அங்கே இறக்கி, நடந்ததை பொலிஸிடம் சொல்லுமாறு கூறிவிட்டு மருத்துவமனைக்கு காரைத்திருப்பினோம்.
விபத்துக்குள்ளான சிறுவனை அரசாங்க மருத்துவமனையில் அனுமதித்தோம். சாரதியும் நானும் அவசர சிகிச்சைப்பிரிவில் நடந்ததை சொல்லிக்கொண்டிருக்கும்போது வெளியே வேடிக்கை பார்க்க வந்தவர்களிடம் எங்கள் வேட்பாளர் திலகம், நடந்ததை விலாவாரியாக தேர்தல் மேடையில் பேசுவதுபோன்றே சொல்லிக்கொண்டிருந்தார். தம்மை தொகுதி வேட்பாளர் என்றும் தவறாமல் அழுத்திச்சொன்னார்.
அந்த மக்களில் எத்தனைபேர் அவருக்கு வாக்களித்தனர் என்பது எனக்குத்தெரியாது.
சாரதியை மெச்சினேன். அவரது கார் ஓட்டம்தான் என்னை அப்படி மெச்சவைத்தது.
சாரதி மீது நான் தொடுத்த புகழாரங்களின் பின்னர் அந்தச்சாரதி சொன்ன தகவல்தான் அவரை மேலும் விழியுயர்த்தி பார்க்க வைத்தது.
அப்படி அவர் என்னதான் சொன்னார்?
“ தோழர்…இந்தக்கார் முன்பு யாருடைய பாவனையில் இருந்தது தெரியுமா? புத்தர கித்த தேரோ என்று ஒரு பிரபல பௌத்த பிக்கு இருந்தாரே…. முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொலைவழக்கில் ஆயுள்சிறைத்தண்டனை அனுபவித்து சிறையிலேயே
செத்துப்போனாரே…அவர் பயன்படுத்திய கார்தான் இந்தக்கார். எப்படி ஓட்டம் பார்த்தீர்களா?”
“ஓட்டம்… எப்படி… எனச்சொன்னபோது கண்களை அவர் சிமிட்டினார். அந்தச்சிமிட்டலுக்கு காரணம் கேட்டேன். பண்டாரநாயக்கா கொலை வழக்கில் எதிரியாகவிருந்த அந்த தேரோவுக்கும் பண்டாரநாயக்கா அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவிருந்த விமலா விஜயவர்தனாவுக்கும் இடையே நீடித்த கிசுகிசு பிரசித்தமானது என்பதனால்தான் தான் கண்சிமிட்டியதாகச்சொன்னார்.
காயப்பட்ட அந்தச்சிறுவன் எப்போது குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினான் என்பதும் எனக்குத்தெரியாது.
பொலிஸில் சரணடைந்த அந்தக்கனவானுக்கு பிறகு என்ன நடந்தது என்பதும் எனக்குத்தெரியாது.
ஆனால், அந்த பொதுத்தேர்தலில் அனைத்து இடதுசாரிகளும் படுதோல்வியைத்தழுவி குத்துக்கரணம் போட்டது மாத்திரம் தெரியும்.
வீட்டிலே, என்னைப்பெற்றவர்கள் “ என்ன, உனது இடது எல்லாம் சரிந்துபோச்சுதே…” எனச்சொன்னார்கள்.
“ இதயம் உள்ளவன் இடதுசாரி.” என்றுசொல்லி இடது பக்கத்தில் இதயம் இருப்பதை தட்டிச்சொன்னேன்.
“ ஆமா… உங்களுக்கு மாத்திரம்தானா இதயம் இடதுபக்கத்தில். எல்லோருக்கும் இதயம் இடப்பக்கம்தான் என்பது கூடத்தெரியாத இடதுசாரி” என்று தங்கை எள்ளிநகையாடினாள்.
இடதுசாரி ஐக்கியமுன்னணி தலைவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொண்டது எனக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. 1977 பொதுத்தேர்தலில் தனித்து நின்றார்கள். பின்னர் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அப்பொழுது கலாநிதி என். எம்.பெரேரா இல்லை. மறைந்துவிட்டார். சமசமாஜக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா நிறுத்தப்பட்டார். தமிழ்க்காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார்.
நான் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளனாக இருந்தேன். ஆனால் அந்தக்கட்சி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுவைத்தமையால் வெறுப்புற்று மக்கள் விடுதலை முன்னணியை ஆதரித்தேன். 1977 இல் ரோஹன விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட ஏராளமான தோழர்கள் சிறையிலிருந்து வெளியானதும் இவர்கள்தான் இனி உண்மையான இடதுசாரிகள் என நம்பி அவர்களுடன் இணைந்துகொண்டேன். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக தோழர் லயனலிடம் தெளிவிருந்ததும் அதற்குக்காரணம்.
அவர்களின் உத்தியோகபூர்வ பத்திரிகையான செஞ்சக்தியின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றினேன். நண்பர் புதுவை ரத்தினதுரையின் சில கவிதைகளையும் செஞ்சக்தியில் பிரசுரித்தேன். சில பிரசுரங்களை மொழிபெயர்த்தேன். ஜனாதிபதித்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் தோழர் ரோகண விஜேவீராவுக்காக மேடை ஏறி பிராசாரம் செய்தேன்.
மீண்டும் அந்தப்பாடலை மேடைகள்தோறும் பாடினேன்.
அந்தத்தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு அநுரா பண்டாரநாயக்கா முன்வரவில்லை. ஆனால் சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணம் வரையும் சென்று பிரசாரம் செய்தார். மச்சானும் மச்சானும் பேசிக்கொள்வதில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது குடியியல் உரிமையை இழந்திருந்தார். அதனால் அவர் மேடையேறவில்லை.
என்னை இலக்கிய எழுத்துலகிற்கு 1972 இல் அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா ( அவர் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்) யாழ்ப்பாணத்தில் விஜயகுமாரணதுங்கவுடன் மேடையேறி ஹெக்டர்கொப்பேகடுவவுக்காக பிரசாரம் செய்தார்.
நான் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் தோழர் ரோஹணவிஜேவீராவுக்காக பிரசாரம் செய்தேன். நானும் மல்லிகை ஜீவாவும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது அரசியல் பேசுவதை முற்றாக தவிர்த்து இலக்கியமே பேசினோம்.
அந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தனா வென்றார். ஹெக்டர் இரண்டாவது இடம். ரோஹண மூன்றாவது இடத்தில் வந்தார். தேர்தலைத்தொடர்ந்து 1983 ஜூலையில் இனக்கலவரம் வெடித்தபோது, தர்மிஸ்டரின் ஆட்சி, அந்தக்கலவரங்களுக்கு இடதுசாரிகள்தான் காரணம் என்று சொல்லி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவற்றை தடைசெய்தது. ஆனால் கொல்வின் ஆர். டி. சில்வாவின் சமசமாஜக்கட்சி தடைசெய்யப்படவில்லை. அவர் ஜே.ஆரின். சட்டகல்லூரி நண்பர். ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் வெளியானதும் கொழும்பு நகர மண்டபத்தில் ஜே. ஆர். நன்றி தெரிவித்துப்பேசிய பின்னர் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தவர் கொல்வின் ஆர். டி. சில்வா. தேர்தல் மேடைகளில்தான் அவர்கள் எதிரிகள். மற்றும்படி அவர்கள் நல்ல நண்பர்கள். அந்த வலதும் இடதும் அப்படித்தான் தொடர்ந்தும் இருந்தார்கள்.
ஜனாதிபதித்தேர்தலில் ஜே.ஆர். அமோக வெற்றியீட்டியதையடுத்து பிரபல கேலிச்சித்திரக்காரர் விஜேசோமா வரைந்த படம் பிரசித்தமானது.
ஜே.ஆர். கராட்டி வீரராக கறுப்புப்பட்டி அணிந்துகொண்டு கைகளையும் கால்களையும் சுழற்றுகிறார். கொப்பேகடுவ, கொல்வின், விஜேவீரா, குமார் பொன்னம்பலம் ஆகியோர் தரையில் விழுந்து கிடப்பர். ஒரு மரத்தின் பின்னால் ஒரு புலி மறைந்துகொண்டு வேடிக்கை பார்க்கும். என்னால் மறக்கவே முடியாத ஒரு கேலிச்சித்திரம்.
பீட்டர்கெனமனின் தலையீட்டால் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை தளர்த்தப்பட்டது. ஆனால் ரோஹண விஜேவீரா உட்பட பல மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களும் தோழர்களும் தலைமறைவானதனால் அந்தக்கட்சியின் மீதான தடை தொடர்ந்து நீடித்தது.
நான் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தேன். அங்கே மல்லிகைஜீவா வரவேற்றார். அப்பொழுதும் நாம் அரசியல் பேசவில்லை.
—-0—-