முருகபூபதி – அவுஸ்திரேலியா
இலங்கையில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் என்றவுடன், எவருக்கும் நினைவுக்கு வருவது கொழும்பு கோட்டையில் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள லேக்ஹவுஸ் கட்டிடம்தான்.
இலங்கையில் போர்த்துக்கீஸரின் வருகைக்குப்பின்னர் பல பிரதேசங்களில் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. இன்றும் அவை கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கற்பிட்டி, திருகோணமலையில் மட்டுமன்றி நீர்கொழும்பிலும் அவற்றை எம்மால் பார்க்கமுடியும்.
நீர்கொழும்பு- புத்தளம் பாதையில் மகா ஓயா நதி ஓடுகிறது. அதிலிருந்து ஒரு கால்வாயை டச்சுக்காரர்கள் அமைத்து நீர்கொழும்பு கடலுடன் இணைத்தனர். அந்த இடத்திற்கு கலப்பு என்று பெயர். தமிழ்ப்;பேசும் கடற்றொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசம்.
டச்சுக்காரர்கள் தங்களின் ஏற்றுமதி வர்த்தகத்திற்காக குறிப்பிட்ட புத்தளவெட்டு வாய்க்காலை பயன்படுத்தினார்கள். மகாஓயா நதி கிளை நதியாகி தொடங்கும் இடத்திற்கு வாய்க்கால் என்றும் கடலுடன் சங்கமிக்கும் இடத்திற்கு கலப்பு என்றும் சுத்தத்தமிழ்ப்பெயர் இன்றும் அங்கு வழங்கிவருகிறது. நீர்கொழும்பையும் அதனைச்; சூழவுள்ள பகுதிகளிலும் முன்னக்கரை, குட்டித்தீவு, காமாட்சி ஓடை, நஞ்சுண்டான் கரை, ஏத்துக்கால், பெரியமுல்லை, மாங்குழி. மணல்சேனை, பள்ளஞ்சேனை, பலகத்துறை, கம்மல்துறை, தோப்பு, கொச்சிக்கடை நயினாமடம், ஆண்டி அம்பலம், முதலான பல தமிழ்ப்பெயர்களைக்கொண்ட பிரதேசங்கள் இருக்கின்றன.
மகா ஓயா கிளை நதியும் கடலும் சங்கமிக்கும் கலப்பு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும்.
அங்கிருக்கும் டச்சுக்கோட்டைதான் பின்னாளில் நீர்கொழும்பு சிறைச்சாலையாக மாறியது. அதன் அருகே, இடதுபுறம் டச்சுக்காரர்கள் அமைத்த ஒரு கிறீஸ்தவ தேவாலயம் மேட்டுப்பகுதியில் இன்றும் காட்சிதருகிறது. வலது புறமுள்ள மேட்டுப்பகுதியில் நீர்கொழும்பு நீதிமன்றம் இயங்குகின்றது. அருகிலிருந்த மீபுர தியேட்டரில்தான் முன்பொருகாலத்தில் ஏராளமான தமிழ், சிங்கள, ஆங்கில, ஹிந்தி படங்களை நீர்கொழும்பு மக்கள் பார்த்து ரசித்தார்கள். தற்போது அந்தத் தியேட்டர் இருந்தமைக்கான சுவடே இல்லை. அந்த இடத்தில் மீனவர்கள் கருவாடு காயப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நேர்வகிடெத்து ஏத்துக்கால் நோக்கி செல்லும் வீதிக்குப்பெயர் கடற்கரைத்தெரு. எங்கள் தாத்தா, பாட்டி காலத்தில் அதற்கு கன்னாரத்தெரு என்று பெயர் இருந்ததாம். பல தமிழ்வணிகர்கள் அந்தப்பிரதேசத்தில் செக்குகள் வைத்து நல்லெண்ணை வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சில காணிகளில் வீடுகள் கட்டப்பட்டபோது செக்குகளையும் பார்த்;திருக்கின்றேன்.
அந்தக்கடற்கரைவீதியில் முத்துமாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில், காளி அம்மன் கோயில் என்பன அடுத்தடுத்து எழுந்தருளியுள்ளன. கடற்கரை வீதியின் மத்தியில் பிள்ளையார் கோயிலும் இன்று கம்பஹா மாவட்டத்திலேயே ஒரே ஒரு இந்துதமிழ்ப்பாடசாலையாக விளங்கும் விஜயரத்தினம் இந்துக்கல்லூரியும் ஒன்றையொன்று பார்த்தவண்ணம் இருக்கின்றன.
பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக நீண்டகாலம் வாழ்ந்த அரசமரத்தை வீதி அகலமாக்கும்போது பெயர்த்து எடுத்துவிட்டார்கள். அதனால் அந்த அரசமரநிழலில் அருள்பாலித்த நாகதம்பிரான் சிலையும் எங்கள் மக்களைப்போன்று இடம்பெயர்ந்து கோயிலுக்குள் தஞ்சமடைந்துவிட்டார். அந்த அரசமரம் பற்றியும் ஒரு சிறுகதையை ஏற்கனவே எழுதியுள்ளேன்.
எங்களுக்கெல்லாம் ஏடு துவக்கி அரிச்சுவடி கற்பித்த 80 ஆண்டு கால இந்து வாலிபர் சங்கமும் கோயிலுக்கு முன்புறமிருந்து இடம்பெயர்ந்து கோயிலுக்கு அருகில் இந்து இளைஞர் கலாசார மண்டபமாக மாறிவிட்டது.
இந்த அமைப்பில் 1970 களில் உறுப்பினராகவும் செயலாளராகவும், நிதிச்செயலாளராகவும் பணியாற்றியிருக்கின்றேன். 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்பு அந்த அமைப்பின் அயுள் அங்கத்தவராகிவிட்டேன்.
இந்து இளைஞர் மன்றம் நீர்கொழும்பு பிரதேசத்தில் சைவத்தையும் தமிழையும் மட்டும் வளர்க்கவில்லை. அதற்கு அப்பாலும் நகர்ந்து, கலை, இலக்கிய சமூகப்பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது.
1965 இல் யூ.என்.பி. பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி டட்லிசேனாநாயக்கா பிரதமரானதும் தமிழ் காங்கிரஸ_ம் தமிழரசுக்கட்சியும் அந்த அரசுக்கு ஆதரவு அளித்தன. அதனால் திருச்செல்வம் நியமன அங்கத்தவராகி உள்ளுராட்சி அமைச்சரானார். நீர்கொழும்பிலும் யூ. என். பி. அமோக வெற்றியீட்டியது. இதனைக்கொண்டாடுமுகமாக இந்து இளைஞர் மன்றம் தமிழ் எம். பிக்களுக்கும் அமைச்சர் திருசெல்வத்திற்கும் ஊர்வலத்துடன் பெரிய வரவேற்பையே வழங்கியது. அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பிலிருந்தேன். அன்றுதான் முதல் தடவையாக தந்தை செல்வநாயகம், நாகநாதன், தருமலிங்கம், மு.சிவசிதம்பரம், திருச்செல்வம் உட்பட பல தமிழ்த்தலைவர்களை நேரில் பார்த்தேன்.
அக்காலப்பகுதியில் மன்றத்தின் செயற்குழுவில் தெரிவாகின்றவர்கள் பெரும்பாலும் இந்தத் தமிழ்க்கட்சிகளினதும் யூ.என்.பி.யினதும் தீவிர ஆதரவாளர்களாகத்தான் இருந்தார்கள். எனினும் இந்து இளைஞர் மன்றத்தில் ஈழத்தின் பல முன்னணி எழுத்தாளர்கள் இலக்கிய பேராசிரியர்கள் மட்டுமன்றி தமிழக அறிஞர்கள் எழுத்தாளர்களும் வந்து உரையாற்றியிருக்கிறார்கள். அவர்களின் பெயர்ப்பட்டியல் நீளமானது. ஏராளமான இலக்கிய விழாக்கள், மாநாடுகள், கண்காட்சிகள், அரங்கேற்றங்கள், அத்துடன் மருத்துவ முகாம்களும் நடைபெற்றுள்ளன. நீர்கொழும்பு வர்த்தக உதவியாளர்களின் அனுசரணையுடன் அகில இலங்கை ரீதியில் பேச்சுப்போட்டிகளையும் நடத்தியிருக்கின்றோம். இந்த மன்றம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் அதாவது சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் சாமிசாஸ்திரிகள் என்பவர் இங்குள்ள சிறார்களுக்கு தேவாரம் திருவாசகம் சொல்லிக்கொடுத்து இந்து சமய வகுப்புகளை நடத்தியிருக்கிறார். அத்துடன் நீர்கொழும்பு டச்சுக்கோட்டைக்குள் அமைந்திருக்கும் சிறைச்சாலைக்கும் சென்று அங்கிருந்த கைதிகளுக்கும் சமயம்போதித்தார். அக்காலப்பகுதியில் அந்த சிறைச்சாலையில் கைதிகளினால் அமைக்கப்பட்ட கிருஷ்ணன் கோயில் இன்றும் அங்கே இருக்கிறது.
தமிழர் திருநாட்களான தைப்பொங்கல், சித்திரைப்புதுவருடம், மற்றும் தீபாவளி தினங்களில் எமது இந்து இளைஞர் மன்றம் இந்த சிறைச்சாலையிலும் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யும். அங்குள்ள கைதிகளுக்காக மன்ற மண்டபத்தில் பொங்கல்வைத்து பிரசாதம், வடை, மோதகம் முதலான பலகாரபட்சணங்களுடன் பிள்ளையார் கோயில் ஐயரையும் அழைத்துக்கொண்டு சிறைச்சாலைக்குச் செல்வோம்.
சிறை அதிகாரிகள் குறிப்பிட்ட பண்டிகை நாட்கள் வருவதற்கு ஒருவாரகலத்திற்கு முன்பே வந்து நினைவுபடுத்திவிட்டுச்செல்வார்கள். அப்படி வரும்பொழுது அங்கு எத்தனை இந்து தமிழ் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரத்தையும் தெரிவிப்பார்கள். அதற்கு ஏற்ப நாம் பலகார பட்சணங்களை தயாரிப்போம்.
நீர்கொழும்பு- சிலாபம் வீதியில் தலுப்பொத்தை என்ற இடத்தில் இருக்கும் திறந்தவெளிசிறைச்சாலைக்கும் செல்வோம். அங்கு குறைந்த தண்டனை பெற்றவர்களும் விடுதலைக்கு தயாராகியிருப்பவர்களும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். முதலில் நீர்கொழும்பு பிரதான சிறைச்சாலைக்கு அதாவது ஏரிக்கரை டச்சுக்கோட்டைக்கு செல்வோம்.
1970-1973 காலப்பகுதியில் இங்கு தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் அந்நியசெலாவணி மோசடியில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகி தண்டனை அனுபவித்த பிரபல வர்த்தக பெரும்புள்ளி பகவன்தாஸ் ஹைதராமணியும் இருந்தார். பல குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட பிரபல கேடி இரும்புமனிதன் (யக்கடயா) என்று அழைக்கப்பட்ட ஒரு சிங்களவரும் இருந்தார். அவர் தன்னை எங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது தன்னை யக்கடயா என்றே சொல்லிக்கொண்டார். ஆள் ஒன்றும் திடகாத்திரமான பேர்வழி அல்ல. ஊதிவிட்டால் விழுந்துவிடும் தோற்றம். ஆனால் பொலிசாருக்கு அடிக்கடி தண்ணிகாட்டிக்கொண்டு இருந்தவர். இவரைப்பற்றி ஒரு சிங்களத்திரைப்படமும் வந்துள்ளது.
இந்த சிறைச்சாலை சில சிங்களப்படங்களிலும் இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலைகள் என்றாலே அங்கே ஏராளமான கதைகள் இருக்கும். அந்தமான்கைதிகள் பற்றிய தமிழில் சிறைச்சாலை என்ற பெயரிலேயே ஒரு படம் வந்திருக்கிறது. மோகன்லால், பிரபு, தபு நடித்து கவிஞர் அறிவுமதியின் வசனத்தில் வெளியான நல்லதொரு படம் சிறைச்சாலை.
ஜெயகாந்தனின் கல்கியில் வெளியான குறுநாவல் கைவிலங்கு பின்னர் ராணிமுத்து பிரசுரமாகி மலிவுப்பதிப்பில் வந்திருக்கிறது. கைவிலங்கு, காவல்தெய்வம் என்றபெயரிலேயே எஸ்.வி. சுப்பையாவின் தயாரிப்பில் திரைப்படமாகியது. சிவாஜி அதில் சாமுண்டி என்ற கள்ளிறக்கும் தொழிலாளியின் பாத்திரத்தில் திறம்பட நடித்திருக்கிறார்.
அந்த நாவலை எழுதுவதற்காகவே சிறைக்குச்செல்ல விரும்பியவர் ஜெயகாந்தன். அவரது நண்பர் சி.ஏ. பாலனின் தூக்குமரநிழலில் நாவலும் பிரபலமானது. பாலனை 1990 இல் ஜெயகாந்தனை சந்திக்கச்சென்றபோது பார்த்துப்பேசியிருக்கின்றேன். அவர் மரணதண்டனை கைதியாக பல ஆண்டுகள் சிறையில் வாடி, கருணை மனுவின் அடிப்படையில் விடுதலைபெற்றவர். பின்னாட்களில் சிறைச்சாலை அனுபவங்களை வைத்தே அவர் எடுத்த திரைப்படம்தான், இன்று நீ நாளை நான். சிவகுமார், லட்சுமி நடித்த அந்தப்படமும் குறிப்பிடத்தகுந்தது.
இலங்கையில் 1983 இல் வெலிக்கடை படுகொலையின் பின்னணியுடன் மட்டக்களப்பு சிறை உடைப்பை சித்திரிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு மட்டக்களப்பை பூர்வீகமாகக்கொண்ட பாலுமகேந்திரா முயற்சித்தார் என்றும் ஆனால் அதுகைகூடவில்லை என்றும் ஒரு தகவல் இருக்கிறது.
சிறைக்குச்சென்ற பலரின் படைப்புகள் நூல்கள் தமிழிலும் ஏனையமொழிகளிலும் பிரசித்தமானவை. ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்தபோது மகள் இந்திராவுக்கு தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களே உலகச்சரித்திரம் என்ற சர்வதேச புகழ்பெற்ற நூல் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. சிறைக்குச்சென்று மீளும் செம்மல்களின் கதைகள் ஏராளம்.
நீர்கொழும்பு சிறையில் எமது தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டபொழுது அவர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்குவதற்காக மாத்திரம் நான் அங்கு செல்லவில்லை. மாவைசோனதிராஜா, முத்துக்குமாரசாமி, மகேந்திரன் உட்பட பலர் அன்றைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் அரசியல்கைதிகளாக சிறைவைக்கப்பட்டிருந்தனர். சிலரது பெயர்கள் தற்பொழுது ஞாபகத்தில் இல்லை.
அவுஸ்திரேலியாவிலிருக்கும் எனது நண்பர் இராஜரட்ணம் சிவநாதனின் தந்தையாரும் அக்காலப்பகுதியில் நீர்கொழும்பில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் எமது மன்றத்தின் துணைத்தலைவர். மன்ற மண்டபத்தில் பொங்குவோம். சிறை அதிகாரிகள் வாசலில் வாகனத்துடன் நிற்பார்கள்.
ஒரு பொங்கல் தினத்தன்று நாம் பொங்கிக்கொண்டிருக்கும்பொழுது, துணைத்தலைவர் இராஜரட்ணம் ஐயா, “ தம்பி… கஜூ நட்ஸ்களை நெய்யில் பொறித்து, பயறும் கலந்து பொங்கினால் பொங்கல் நல்லசுவையாக இருக்கும்.” என்று சொன்னார். உடனே தலைவர் சண்முகநாதன், ( இவர் தமிழர் விடுதலைக்கூட்டணி செயல் அதிபர் அமிர்தலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்) அப்படி பொங்கிக்கொடுத்தால் சிறையிலிருப்பவர்கள் வெளியே வரவிரும்பமாட்டார்கள்.” என்றார்.
அந்தச்சம்பவத்தை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.
சிறைச்சாலை வாகனத்தில் பெரிய பாத்திரங்களில் பொங்கல், பலகார பட்சணங்கள் எடுத்துச்செல்வோம். அங்கே தமிழ் அரசியல்கைதிகளும் இதர கைதிகளும் அந்த நாளுக்காக காத்திருந்து எங்களை வரவேற்பார்கள்.
சுற்றிலும் சிறைக்காவலர்கள் கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். ஐயர் கிருஷ்ணர் சிலைக்கு பூசை செய்வார். மன்றத்தின் உறுப்பினர்கள் தேவாரம் பாடுவார்கள். நானும் பயபக்தியுடன் கையெடுத்துக்கும்பிடாமல் கைகளை மார்போடு அணைத்து கைகட்டியவாறு பின்புறம் நிற்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரல்களை அசைப்பேன்.
எனது கைகளுக்குள் அவர்களின் சிறிய கடிதங்கள் வந்துசேரும். மிகபக்குவமாக பொக்கட்டுக்குள் திணித்துக்கொள்வேன். அக்கடிதங்கள் அவர்களின் பெற்றோருக்கு எழுதப்பட்டவையாக இருக்கும். வெளியே வந்து அவற்றை உரியவாறு தபாலில் சேர்ப்பிப்பேன்.
நான் அந்த ஏரிக்கரை சிறைச்சாலைக்கு செல்ல விரும்பியதே இந்தத்தொண்டுக்காகத்தான்.
“தைப்பொங்கல், சித்திரைப்புதுவருடம், தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டுமல்ல நவராத்திரி, சிவராத்திரி தினங்களின்போதும் அங்கே செல்வோமே…”என்று மன்ற நிருவாகத்திடம் கோரிக்கை விடுத்துப்பார்த்தேன்.
“ நீ என்ன பெரிய பக்திமானா?” என்று கேட்டார்கள்.
“ இல்லை… பிரசாதம் வழங்கும் சாக்கில் அரசியல் கைதிகளையும் பார்க்கலாம்… அதுதான்” என்றேன்.
“ உன்னை எப்படி நம்புவது, அரசியல் வகுப்பும் நடத்தப்பார்ப்பாய். தண்ணீருக்கு அடியில் தீப்பந்தம் எடுத்துச்செல்லக்கூடியவன்” என்று எனது கோரிக்கை தட்டிக்கழிக்கப்பட்டது. வருடத்தில் இந்து தமிழ் கைதிகளுக்கு அந்த மூன்று சந்தர்ப்பங்கள்தான் கிடைத்தன. பௌத்த சிங்கள கைதிகளுக்கு வெசாக், பொசன், மற்றும் சிங்களப்புதுவருடம். கத்தோலிக்கர்களுக்கு கிறிஸ்மஸ், பெரியவெள்ளி. அதுபோன்று முஸ்லிம்களுக்கு நோன்புபெருநாள்.
சிறிமாவின் காலத்தில் சிறிதுகாலம் அந்த ஏரிக்கரை சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளுக்கு தபால் சேவகனாக தொண்டாற்றியிருக்கிறேன்.
2011 ஜனவரியில் நாம் கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் இறுதிநாளன்று இராமகிருஷ்ண மண்டபத்தில் நடந்த நிறைவு நிகழ்வில் கலந்துகொண்ட தற்போதைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜாவிடம் அந்தச் சம்பவங்களை நினைவுகூர்ந்தபொழுது, சிரித்துக்கொண்டு, “ மீண்டும் பொங்கல் சாப்பிடுவோம்.” என்றார்.
அன்றும் அதற்குப்பின்னரும் சிறையில் வாடிய அரசியல்கைதிகளும், சிறைகளை உடைத்து தப்பியவர்களும் இன்று பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அதேசமயம் மேலும் பலர் சிறைகளில் வாடிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெளியே வந்து எப்பொழுது தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் சாப்பிடுவார்கள்….?
அந்த சூரியபகவானுக்கே வெளிச்சம்.
well you have brought back my old memories, sea street, mee pura theatre, dutch canal, Kudapadu, Munnakkarai, where i and my friend did fishing, Please write about tamils who live in Negombo
“முன்னக்கரை, குட்டித்தீவு, காமாட்சி ஓடை, நஞ்சுண்டான் கரை, ஏத்துக்கால், பெரியமுல்லை, மாங்குழி. மணல்சேனை, பள்ளஞ்சேனை, பலகத்துறை, கம்மல்துறை, தோப்பு, கொச்சிக்கடை நயினாமடம், ஆண்டி அம்பலம்” போன்ற தமிழ் பெயர்களைக் கொண்ட இடங்கள் இருப்பது கிணற்று தவளையான எனக்கு இப்போது தான் தெரியும். இப்படியான பெறுமதியான கட்டுரைகள் ஆர்வத்துகுரியவைகள்.