உயிர்ப்பிச்சை

முருகபூபதி – அவுஸ்திரேலியா

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து தமிழின விடுதலைப்போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் எங்காவது குண்டுவெடித்தால் அல்லது யாராவது அரசியல் தலைவர் தற்கொiலைக்குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டால் பாதுகாப்பு படையினர் நிலக்கண்ணி வெடியில் தாக்குதலுக்குள்ளானால் உடனடியாக அரச படைகளும் பொலிஸாரும் தேடுதல் வேட்டையில்தான் ஈடுபடுவார்கள்.
இச்சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் அப்பாவித்தமிழர்கள்தான் சந்தேகத்தின் பேரில் கைதாகி காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்.
பாவம்செய்தவர்கள்தான் தமிழராகப்பிறக்கிறார்கள் என்ற பொதுவான பேச்சுத்தான் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து இத்தேடுதல் வேட்டைகளின்போது உதிர்க்கப்படும் வார்த்தைகளாக இருக்கும்.
தேடுதலின்போது கைதான பலர் காணாமல் போகின்ற காலம் 1983 இனவாத வன்செயல்களின் பின்னர்தான் உருவானது என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் ஜனதா விமுக்தி பெரமுன என்ற பெயரில் இயங்கிய மக்கள் விடுதலை முன்னணியினர் இலங்கையில் சிங்களப் பிரதேசங்களில் இயங்கிய சில பொலிஸ் நிலையங்களை தாக்கிய பின்னர் குறிப்பிட்ட கெரில்ல இயக்கம் செகுவேரா இயக்கம் என்றுதான் பத்திரிகைகளிலும் பொதுமக்கள் மத்தியிலும் எழுதும்-பேசும் பொருளாகியது.
பொலிவியாவில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஏர்ணஸ்ட் சேகுவேரா பற்றிய போதிய வரலாற்று தகவல்கள் தெரியாமலேயே சாதாரண பாமர தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி பெரிய அரசியல் வாதிகளிடத்திலும் பாதுகாப்புத்துறையினரிடமும் அரசபீடத்திலும் செகுவேரா இயக்கம் என்றுதான் 1971 ஜே.வி.பி.யின் கிளர்ச்சி பற்றி வர்ணிக்கப்பட்டது.
தென்னிலங்கையில் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் தேடுதல் வேட்டைகள் மேற்கொள்ளப்பட்டன. பல தலைவர்கள் கைதாகியதனாலும் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு ரயர்கள்போட்டு எரிக்கப்பட்டதனாலும் சடலங்கள் ஓடும் நதிகளில் வீசப்பட்டதனாலும் இந்தக் கிளர்ச்சி குறுகிய காலத்தில் முடக்கப்பட்டது.
எனினும் தேடுதல் முற்றுப்பெறவில்லை.
1971 ஏப்ரிலில் இக்கிளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட, பிரேமாவதி மனம்பேரி என்ற அழகிய சிங்கள யுவதி ஒரு இராணுவ சிப்பாயினால் மானபங்கப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டாள். இந்தப்பெண் புதுவருட அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்று பரிசைத்தட்டிக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் புனித நகரமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட கதிர்காமத்தில்; இக்கொடூரம் நடந்தபோது பிரதமராக பதவியிலிருந்தவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா என்ற உலகின் முதல் பெண்பிரதமர்தான்.
இங்குதான் முருகக்கடவுள் வள்ளியை சந்தித்து கடிமணம் புரிந்தார் என்பது ஐதீகம். மாணிக்க கங்கை ஓடும் இந்த பிரசித்திபெற்ற கதிர்காம திருத்தலத்திற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்து மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் யாத்திரிகர்கள் வருவார்கள்.
எனது கங்கைமகள் சிறுகதை இந்த பெண்போராளியை பற்றியதுதான். அவளைப்பற்றிய சில அற்புதமான சிங்களப்பாடல்களும் பிரசித்தமானவை. கதிர்காமத்தில் அவள் கொல்லப்பட்ட இடத்தில் நினைவுத்தூபியும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜே.வி.பி. தலைவர்கள் 1977 ஆம் ஆண்டு பொது மன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டதும் அவர்கள் கதிர்காமம் சென்று பிரேமாவதி மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கதிர்காமத்தில் சங்கர் இயக்கிய (சிவாஜி,எந்திரன் இயக்கிய சங்கர் அல்ல) வருவான் வடிவேலன் என்ற தமிழக திரைப்படமும் எடுக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை அழிப்பதற்காக அரச படைகள் தேடுதல் வேட்டையாடியபோது ஆயிரக்கணக்கான அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டார்கள்.
ஆனால் 1971 ஜே.வி.பி. தடை செய்யப்பட்டபோது சந்தேகத்தின்பேரில் சிங்கள இளைஞர்கள் மாத்திரமே தேடித்தேடி அழிக்கப்பட்டார்கள். அந்த எண்ணிக்கை சுமார் ஐம்பதினாயிரத்தையும் தாண்டியது என்றும் தகவல் உண்டு.
பெரும்பாலும் கைதானவர்கள் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். அல்லது காணாமல் போனார்கள்.
அவர்கள் சிங்கள இளைஞர்களாகத்தான் இருந்தார்கள்.
அதனால் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் தைரியமாக வெளியே நடமாட முடிந்தது.
நான் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருந்த அதேசமயம் வேலைதேடும் படலத்திலும் ஈடுபட்டிருந்தேன்.
எமது உறவினர் ஒருவர் தெரணியகலை என்ற சிங்களப்பிரதேசத்தில் Times, Daily Mirror  மற்றும் வீரகேசரி பத்திரிகைகளின் பிரதேச நிருபராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு தொகுதி எம்.பி.யுடன் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருக்கமான நட்பும் இருந்தது.
அவரைப்பிடித்தால் ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது என்னை பெற்றவர்களின் நம்பிக்கை. அவர்களின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் என்னிடமிருந்த சில சான்றிதழ்களுடன் தெரணியகலைக்கு பயணமானேன்.
அந்த ஊரில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் கணிசமாக இயற்கை எழிலை சுமந்துகொண்டிருந்தன. சுற்றிலும் மலைக்காடுகள். குளிர்மையான பிரதேசம்.
நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு ஒன்றரை மணிநேரம் பஸ்ஸில் பயணித்து அங்கிருந்து அவிசாவளை என்ற மற்றுமொரு மலையக ஊருக்குச்சென்று அங்கிருந்து தெரணியகலை பஸ்ஸில் ஏறி, அந்த சிற்றூரில் இறங்கி பத்திரிகையாளரான உறவினர் வீடு தேடிச்சென்றபோது ஏமாற்றமடைந்தேன்.
அவர் எட்டியாந்தோட்டை என்ற மற்றுமொரு அயலூருக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.
வீட்டிலிருந்த மற்றுமொரு உறவினர் எனது ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக உதவ முன்வந்தார்.
“ தம்பி. கவலைப்படவேண்டாம். தொலைவிலிருந்து அவரைத்தேடி வந்திருக்கிறீர். மதியம் சாப்பிட்டுவிட்டு எட்டியாந்தோட்டைக்கு புறப்படுவோம். நானே உங்களை அவரிடம் அழைத்துச்செல்கிறேன். அவர் எமது சகோதரி வீட்டுக்குத்தான் போயிருக்கிறார்.”- என்றார்.
அவரது வார்த்தைகள் எனக்கு தெம்பூட்டியது.
அவர்குறிப்பிட்டவாறு அங்கே எமது அத்தை முறையானவர் அன்போடு உபசரித்தார். எனக்கு ஏதும் வேலைகிடைத்தால் அங்கே எனக்காக திருமணசம்பந்தம் பேசுவதும் எனது அப்பாவின் எண்ணமாக இருந்திருக்கவேண்டும். அத்தைக்கு அழகான பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.
அத்தைக்கும் மாமாவுக்கும் அங்கே ஒரு தேநீர்,கோப்பி.சாப்பாட்டுக்கடையும் இருந்தது. பெரும்பாலும் அந்த ஊர் சிங்கள மக்கள் இட்லி, தோசை, வடை, சாம்பார், சட்னி சாப்பிட அங்குதான் வருவார்கள். சிங்கள மக்களினால் தயாரிக்கத்தெரியாத அவர்களால் விரும்பி சுவைத்து உண்ணப்படும் பதார்த்தம்தான் அவை.
பண்டாரநாயக்காவும் தமிழரசுக்கட்சித்தலைவர் தந்தை செல்வாவும் தமிழர்களுக்கு நலன்தரும் பண்டா-செல்வா ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டபோது சிங்கள பேரினவாதிகள் குறிப்பாக ஐக்கியதேசியக்கட்சியினர் அதனைக்கண்டித்து ஊர்வலம் சென்றார்கள்.
அந்த ஊர்வலத்தில் கொச்சைத்தமிழில் எழுப்பப்பட்ட கோஷம் இதுதான்:
பண்டாரநாயகம் செல்வநாயகம்….
என்ன செய்தார்கள்….?
ஐயா தோசே…மசால வடே…
இனவாதத்திற்;கும் இந்தத் தமிழரின் உணவுதான் அன்று அவர்களுக்குக்கிடைத்த ஆதாரம்.
அத்தை வடை பாயாசத்துடன் எனக்கு விருந்தளித்து அவரது மகனுடன் என்னை எட்டியாந்தோட்டைக்கு அனுப்பிவைத்தார்கள்.
தெரணியகலை பஸ்நிலையத்துக்குச் சென்று எட்டியாந்தோட்டை பஸ்ஸ_க்காக காத்து நின்றோம். அத்தையின் வீட்டுக்கு சமீபமாகத்தான் பஸ் நிலையம் கூப்பிடு தொலைவில் இருந்தது. தெரணியகலை ஒரு சிற்றூர் என்று முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
அத்தை மகன் மச்சானுக்கு திடீரென வயிற்றில் கலக்கம்.
“ மச்சான் வயிற்றை கலக்குது. வீட்டுக்குப் போயிட்டு வாரன். அடுத்த பஸ் வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமாகலாம். இதில நின்றுகொள்ளுங்க…” எனச்சொல்லிவிட்டு சிரமபரிகாரத்துக்காக அவர் போய்விட்டார்.
ஊருக்குப்புதுசான நான், அந்த பஸ்நிலையத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
எட்டியாந்தோட்டைக்குச் சென்ற பத்திரிகையாளரான உறவினர் தெரணியகலையிலிருந்திருந்தால் வேலைதேடி வந்த காரணத்தையும் சொல்லியிருக்கலாம். தொகுதி எம்.பி.யிடம் அழைத்துச்செல்வதற்காக சிலவேளை என்னை அன்று அங்கு தரித்து நிற்கவும் சொல்லியிருக்கலாம். அச்சந்தர்ப்பத்தில் அத்தை வீட்டு மயில்களையும் பார்த்து பேசியிருக்கலாம்.
ம்ஹ_ம்… ஒன்றும் நடக்கவில்லையே என்ற கவலையை முகத்தில் தேக்கிவைத்துக்கொண்டு நிற்கையில் திடீரென எனக்கு முன்னால் ஒரு பொலிஸ் ஜீப்பில் வந்திறங்கிய சில பொலிஸார் நீட்டிய துப்பாக்கியுடன் என்னைச்சுற்றி வளைத்தனர்.
வேடிக்கை பார்க்க சனம் கூடிவிட்டது. புறப்படவிருந்த சில பஸ்களின் சாரதிகளும் நடத்துனர்களும் தமது கடமைகளை மறந்து பொலிஸார் அந்த ஊரில் பிடிக்க வந்துள்ள சேகுவேராவை பார்க்க வந்துவிட்டனர்.
திகிலுடன் சிங்களத்தில் “ என்ன?” என்று கேட்டேன். (எனக்கு சிங்களம் பேச-எழுதத் தெரியும்)
அந்த தேடுதல் பொலிஸ் குழுவை தலைமை தாங்கி அழைத்துவந்த இன்ஸ்பெக்டர்,
விசாரணையைத் தொடங்கினார்.
“ எங்கே இருந்து வருகிறாய்? எந்த மலையில் மறைந்திருந்தாய்?”
“ மலையா… நான் நீர்கொழும்பிலிருந்து வந்தேன்.”
“ இப்போது எங்கே போவதற்காக இங்கே நிற்கிறாய்?”
“ எட்டியாந்தோட்டைக்கு”
“ எட்டியாந்தோட்டைக்கு போவதற்கு ஏன் தெரணியகலையில் இறங்கினாய்.?”
“ இங்கே உறவினர்கள் இருக்கிறார்கள்.”
சுவையான சாப்பாட்டுக்கடையை அந்த ஊரில் நடத்திக்கொண்டிருக்கும் அத்தை-மாமாவைப்பற்றியும், நான் தேடி வந்த அரசியல்வாதிகளுக்கு பரிச்சயமான உறவினரின் (பத்திரிகையாளரின்) பெயரையும் சொன்னேன்.
“ ஓ…நீ தமிழனா…? நன்றாக சிங்களம் பேசுகிறாயே…எப்படி?”
– இதுதான் பொலிஸ் புத்தி.
“ சிங்களம் படித்திருக்கிறேன்.”
(அட நீங்களும் தமிழ் படிச்சிருந்தால் எங்கட நாடு இப்படி சீரழியுமா?- என்று இப்போது கேட்கத்தோன்றுகிறது.)
எனது நல்லகாலம் அந்த பத்திரிகையாளரை அந்த பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கும் சேகுவேராவை வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
தெரணியகலை பஸ் நிலையத்தில் ஒரு சேகுவேராவை பிடித்துவிட்டார்களாம் என்ற தகவல் காட்டுத்தீ போன்று அத்தை வீட்டுக்கும் அதனோடிருந்த சாப்பாட்டுக்கடை சமயைலறை அடுப்புத்தீயையும் கடந்து மச்சானிருந்த மலகூடத்துக்கும் பரவி விட்டது.
வயிற்றுக்கலக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சென்ற மச்சான் பாதியிலேயே கால் கழுவியும் கழுவாமலும் ஓடிவந்திருக்கவேண்டும்.
அந்தகாலகட்டத்தில் ஜே.வி.பி. போராளிகள் மலைக்காடுகளில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு புலனாய்வு தகவல்கள் தெரிவித்திருந்தன. மறைந்திருப்பவர்கள் நகரங்களுக்கு வந்து தமக்குத்தேவையான உணவை எடுத்துச்செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைப்பதனால் பொலிஸ் தரப்பு உஷாரக இருந்திருக்கவேண்டும். எனவே ஊரில் புதிய நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் பொலிஸ_க்கு தகவல் கொடுக்கவேண்டும் என்பது அரசின் உத்தரவு. நானும் அன்று அந்த ஊருக்கு புதுசு. ஆனால் தகவல் கொடுத்தபேர்வழிக்கு நான் ஒரு தமிழன் என்பது தெரிய நியாயம் இல்லை.
என்மீதான பொலிஸின் சந்தேகம் தீர்ந்ததற்கு காரணம் நான் தமிழனாகப்பிறந்ததுதான்.
அத்தை- மாமாவின் சாப்பாட்டுக் கடையில் பல தடவைகள் அந்த மச்சானின் பரிமாறலில் தோசை, இட்லி, வடை, சாம்பார், சட்னி வயிறாற உண்டவர்கள்தான் அந்த பொலிஸார், மச்சான், நான் அந்த ஊருக்கு வந்த காரணத்தை சொன்னதும் விட்டுவிட்டார்கள்.
வேடிக்கை பார்க்க வந்த சனக்கூட்டம், உண்மையான சேகுவேராவை பாரக்கமுடியாமல் போய்விட்டதே என்ற எமாற்றத்துடன் திரும்பியது. பொலிஸாருக்கும் ஏமாற்றம்தான்.
எட்டியாந்தோட்டைக்கு செல்லும் பஸ் வந்தது.
நானும் மச்சானுடன் ஏமாற்றத்துடன்தான் அந்த பஸ்ஸில் ஏறினேன்.
எனக்கு வந்த ஏமாற்றம் என்ன என்று வாசகர்களுக்கு தெரியும்தானே?

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

3 Responses to உயிர்ப்பிச்சை

 1. premraj சொல்கிறார்:

  i am from Hatton and Talawakelle, I am bit surprised when u call deraniyagala as cool plce, for me its a warm place, i have been to Yatiyantota and Deraniyagala several times, I dont agree with ur opnion re UNP, beacuse I was and million of Indian tamils were made citizens of sri lanka by Jr and Premadasa, SLFP voted against that in Parliament, dont pretend that u dont know about that, premrajsweden hotmail.com

  • noelnadesan சொல்கிறார்:

   பிரேம்ராஜ் அவர்களின் கருத்துக்கு நன்றி.
   தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளிலும் அடக்குமுறைகளிலும்
   இரண்டு பெரிய கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.
   பட்டியல் நீளமானது.இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும்
   அரசுகளினாலும் இயக்கங்களினாலும் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
   படைப்பாளி ,பத்திரிகையாளன் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்பார்கள்.
   முருகபூபதி

 2. SHAN NALLIAH GANDHIYIST சொல்கிறார்:

  I WAS THERE IN DERENIYAGALA …AT MY UNCLE RASALINGAM’S HOME AT.UDABAGE ESTATE,DEHIOVITE IN 1969..NICE PLACE…NICE BATH AT RIVER..!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.